Pages

செவ்வாய், மே 10, 2022

காரல்மார்க்சின் படிப்பறை.

 



மே.5.மார்க்ஸ் பிறந்தநாள்

சிறிது இடம் கூட இல்லாதபடி  புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரிகள் சுவர்களை மறைத்திருந்தது. சாத்தியமானது என்று எவரும் நினைக்கக்கூடியதைவிட அதிகமான புத்தகங்களும் செய்தி யேடுகளும் அந்த அலமாரிகளை நிறைந்திருந்தன. 

அவருக்கிருந்த அதே சமூக தகுதியை கொண்டிருந்த ஆனால் அவரைவிட செல்வம் மிக்கவர்களான  பூர்சுவா அறிவாளிகளிடம் இருந்த நூல்களைப் போல பிரமிப்பூட்டக்கூடியதாக இருந்தது அல்ல மார்க்ஸின் நூலகம். அவர் மிகுந்த வறுமையில் உழன்றபோது பெரும் பாலும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலுள்ள  மூலநூல்களையும் ஏடுகளையும்தான் படித்துவந்தார். ஆனால் பின்னாளில் அவரால் 2000 நூல்களை திரட்ட முடிந்திருக்கிறது. (730 பக்கங்களைக் கொண்ட ஆய்வு நூலில் காரல் மார்க்ஸ் வாசித்த 830 நூல்களில் உள்ள 40.000 பக்கங்களின்  ஓரங்களில் மார்க்ஸ் எழுதிய கருத்துரைகளை பற்றிய குறிப்புகளும் அந்த நூலில் உள்ளன).

            ஆனால் அவரிடமிருந்த நூல்களில், மிக அதிகமானவை அரசியல் பொருளாதாரம் பற்றிய வையாகும். அரசியல் கோட்பாடு, வரலாற்று ஆய்வுகள், குறிப்பாக பிரெஞ்சுநூல்கள், தத்துவ படைப்புகள், (முதன்மையாக ஜெர்மன் தத்துவ மரபை சேர்ந்தவை) ஆகிய செவ்வியல் நூல்களும் இருந்தன இயற்கை அறிவியல் பற்றிய நூல்களும் நிறைய இருந்தன.

              அவரது நூலகத்தில் இருந்த பல்வேறு துறைகளைப் பற்றிய நூல்களுக்கு இணையாக பல்வேறு மொழிகளை சார்ந்த நூல்களும் இருந்தன. ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் மொத்த நூல்களில் மூன்றிலொருபகுதியாகும். ஆங்கிலநூல்கள் மூன்றிலொரு பகுதியாகும். இன்னும் சற்று குறைந்த எண்ணிக்கையில் பிரஞ்சு நூல்களும் இருந்தன.

                லத்தின் மொழியில் இருந்து தோன்றிய இத்தாலி மொழி போன்ற மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் இருந்தன. ஆனால் ஜார் பேரரசில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை ஆழ்ந்து கற்பதற்காக அவர் ரஷ்ய மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய 1869 ஆண்டில் இருந்த ஸிரில்லிக் எழுத்துக்களில் எழுதப்பட்ட நூல்கள் கணிசமான தனிப் பகுதியாக அமைந்தது.

                ஒரு மனிதரை அவர் படிக்கும் புத்தகங்களை கொண்டு பொதுவாக மதிப்பிட முடியும். எனது மேலோட்டமான பார்வைக்கு ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், தாக்கரே, மோலியே, கெதெ, வேல்தேர், பெயின் ஆகியோரின் நூல்கள் தென்பட்டன. ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு நூல்கள், நீலபுத்தகங்கள்(குறிப்பிட்ட விஷயங்களை பற்றிய புள்ளி விபரங்கள், தகவல்கள் அடங்கியவை) ரஷ்ய, ஜெர்மன், ஸ்பானிய இத்தாலிய இன்னும் பல மொழிகளில் எழுதப்பட்ட அரசியல் தத்துவ நூல்களும் காணப்பட்டன.

                     காரல் மார்க்ஸ் எல்லா ஐரோப்பிய மொழிகளில் இருந்த கவிதை படைப்புகளை மிகுந்த சிரத்தையுடன் படிப்பார். மொழி வல்லுனர்கள் பாராட்டும் வகையில் மார்க்ஸ் எல்லா ஐரோப்பிய மொழிகளையும் படிக்கத் தெரிந்திருந்தார. வாழ்க்கைப் போராட் டத்தில் பயன்படும் ஆயுதமே அந்நிய மொழி என்று திரும்பத் திரும்பச் சொல்வதை விரும்பினார். 50வயதுக்குப் பிறகு ரஷ்ய மொழியை கற்கத் தொடங்கினார். ஆறு மாதங்களில் ரஷ்ய கவிஞர்கள், உரைநடை எழுத்தாளர்கள், ஆகியோரின் படைப்புகளை படித்து மகிழும் அளவிற்கு அவர் அந்த மொழியில் தேர்ச்சி பெற்றார்.

                      புத்தகங்கள் அவர்கள் சிந்தனைக்கான கருவிகளேயன்றி  ஆடம்பர பொருட்கள் அல்ல. "அவை எனது அடிமைகள் நான் விரும்பும் வகையில் அவை எனக்கு சேவை புரிய வேண்டும்". என்று அவர் கூறுவது வழக்கம் அவர் புத்தகத்தை முனைகளை மடித்து வைப்பார்.  ஓரங்களில் பென்சிலால் கோடிட்டு சம்பந்தப்பட்ட வரிகளை குறித்து வைப்பார். சில வரிகள் முழுவதற்கும் அடியில் கோடு போடுவார்.

                 புத்தகங்களில் அவர் எதையும் எழுத மாட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட  நூலின் ஆசிரியர் தான் சொல்ல வந்த விஷயத்தில் மட்டுமீறிபோய்விட்டதைகண்டால் அந்த இடத்தில் கேள்விக்குறி அல்லது ஆச்சரிய குறியையோ இடாமல் அவரால் இருக்க முடியாது. அடிக்கோடிட்டு முறையை அவர் கையாண்டதால் எந்த நூலிலும் தமக்குத் தேவையான பகுதியை அவரால் எளிதாக கண்டறிய முடிந்தது.

                 புத்தகங்களுக்கு அவர் அத்தனை கவனம் செலுத்தியதால் தான் "புத்தகங்களை விழுங்கி பின்னர் மாற்றப்பட்ட வடிவத்தில் அவற்றை வரலாற்றின் குப்பைமேட்டில் தூக்கிஎரிகின்ற இயந்திரமாக இருக்கும்படி நான் விதிக்கப்பட்டுள்ளேன்" என்று தன்னை பற்றிய விளக்கம் ஒன்றை வழங்கினார்.

           மார்க்சின் நூலகத்தில் அவர் எழுதிய நூல்களும் இருந்தன ஆனால் கடைசியாக பார்க்கும் பொழுது அவற்றின் எண்ணிக்கை அவர் எழுதத்திட்டமிட்டிருந்த, ஆனால் முனைப்பான அறிவு செயல்பாடு களில் காரணமாக எழுதிமுடிக்கப்படாமல் போன நூல்களின் எண்ணிக்கையைவிட குறைந்ததாகவே இருந்தது.

                  புனித குடும்பம், தத்துவத்தின் வறுமை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகியவற்றிற்கு பஞ்சமில்லை. லூயி போனபார்ட்டின் 18வது புருமர், பிரஞ்சு வரலாறு பற்றிய நூல்கள், கருத்து போராட்ட அரசியல் வெளியீடான பால்மர்ஸ்டோன்பிரபுவின் வாழ்க்கைகதை, அப்போ தைய கவனத்துக்குரியதாக இருந்த கோலோன் கம்யூனிஸ்ட் விசாரணை தொடர்பான உண்மைகள், பதினெட்டாம் நூற்றாண்டு ரகசிய ராஜதந்திர வரலாறு, அதிகமாக கவனிக்கப்படாத அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனபகுப்பாய்வுக்கான கருத்துரை ஆகியன அந்த படிப்பறையில் இருந்தன.

          அவர் இளைஞராக இருந்தபோது பதிப்பித்து வெளிவந்த ஜெர்மன் பிரஞ்சு வருடாந்திர ஏடு, புதிய ரைன் நாளேடு, அரசியல் பொருளாதார மதிப்புரைஏடு ஆகியவற்றின் பிரதிகள் வேறுஇடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. தாம் படித்த நூல்களில் இருந்து அவர் எடுத்த எழுதிவைத்த பகுதிகள் அடங்கிய டஜன்கணக்கான நோட்டுப் புத்தகங்கள், முழுமை பெறாத கையெழுத்துப் படிகள், ஆகியன அவரது நூலகத்தில் இதர பகுதிகளில் இருந்தன

               புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருந்த மார்க்சின் படிப்பறையில் நடுவில் தோலாலானசோபா ஒன்று கிடந்தது. அதில் அவர் அவ்வப்போது படுத்து ஓய்வெடுப்பது வழக்கம்

                படிப்பதற்கும், எழுதுவதற்கும் அவர் பயன்படுத்திய மேஜைக்கு எதிரே இன்னொரு மேசையும் இருந்தது. எப்போதேனும் அங்கு வருபவர்கள் அந்த மேசையின் மீது இருந்த தால்கள் தாறுமாறாக கிடப்பதை கண்டு குழப்பம் அடைவார்கள். ஆனால் அப்படி அவை ஒழுங்கு படுத்தாமல் கலைந்து கிடந்தது மேற்தோற்றம்தான். என்பதை நன்கு அறிந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்.

             உண்மையில் அவை ஒவ்வொன்றும் எங்கு இருக்க வேண்டுமோ அங்கேதான் இருந்தன. எனவேதான் தேவைப்பட்ட புத்தகத்தையோ நோட்டுப் புத்தகத்தையும் அவரால் எளிதாக எடுக்க முடிந்தது. உரையாடல்களின் போது கூட அடிக்கடி அவர் பேச்சை நிறுத்திக் கொண்டு அப்போதுதான் அவர் குறிப்பிட்டிருந்த மேற்கோள்களையோ,  புள்ளி விவரத்தையோ குறிப்பிட்ட புத்தகத்திலிருந்தும், நோட்டுப் புத்தகத்திலிருந்தும் எடுத்துக் காட்டுவார். அவரும் அவரது படிப்பறையும் ஒன்றுபட்டு இருந்தன. அதில் இருந்த புத்தகங்களும் காகிதங்களும் அவரது கைகால்களை போலவே அவரது கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்தன.

(காரல் மார்க்ஸ்:அறிவுப் பயணத்தில் புதியதிசைகள்.என்ற புத்தகத்தி லிருந்து) மார்செல்லோ முஸ்ட்டோ தமிழாக்கம் எஸ்.வி.ராஜதுரை என்சிபிஎச் வெளியீடு.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...