Pages

சனி, மே 07, 2022

மக்களை சேர்த்த மகராசன்

 

மக்களை சேர்த்த மகராசன்

-.பாக்கியம்



                ஏதோ நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. பாட்டாளி வர்க்க படைத்தளபதி தோழர் விபிசி இறந்து இன்றோடு 35 ஆண்டுகள் ஓடி விட்டது. கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களிலேயே யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 1987-ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி சோவியத் ஒன்றியம் எனும் சோஷலிச சொர்க்கத்தில் அவர் இயற்கை எய்தினார்.

                  அவருடைய மரணத்திற்குப் பிறகு என்னைப் போன்றோரும், பல தலைவர்களும், தோழர் விபிசியைப் பற்றி நினைவு கூர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அவர் ஆற்றிய பணிகள்; வேலை செய்த விதம்; தோழர்களோடும் மக்களோடும் அவருக்கிருந்த தொடர்பு; பொது மக்களிடம் அவருடைய அணுகுமுறை என்று அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் வெளிவந்து கட்சித் தோழர்களை மட்டுமல்லாமல், கட்சிக்கு அப்பாற்பட்டவர்களையும் உத்வேகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

              நான் பல காலம் அவருடைய பணிகளை பார்த்திருக்கிறேன். சில காலம் அவருடன் இணைந்து, அவரின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். 35வது ஆண்டு நினைவு நாளில் என் ஆதர்ச புருஷர்களில் ஒருவரான தோழர் வி.பி.சி.யின் நினைவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

                    தோழர் வி.பி.சி. தமிழகம் முழுவதும் அறிந்த தலைவர்; சென்னை தொழிற்சங்க போராட்ட வரலாற்றின் தவிர்க்க முடியாத அடையாளம். தொழிலாளர்கள், மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள், குடிசைப்பகுதி மக்கள், அறிவுஜீவிகள் என அனைத்து தரப்பினரின் அன்பிற்குரிய அப்பழுக்கற்ற தலைவர். பொதுமக்களோடு அவருடைய அணுகுமுறை அலாதியானது.

                      வெளிநாடுகளுக்கே போகாத கம்யூனிஸ்ட் தலைவர்களுள் தோழர் வி.பி.சி.யும் ஒருவர். அவர், சோஷலிச சோவியத் நாட்டுக்கு சென்றிருக்கிறார் என்பதே என்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. சோவியத்தில் இருந்து திரும்பி வந்து, அவர் பாணியில் சில விஷயங்களை சுவைபடச் சொல்வார் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பு என்னை போன்ற பலருக்கு ஏமாற்றத்தைதான் அளித்தது. அவர் உடல் மட்டுமே சோவியத்தில் இருந்து தாயகம் திரும்பி வந்தது.

                     சென்னை பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் வி.பி.சி.யின் உடல் வைக்கப் பட்டிருந்தது. அப்போது சென்னை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவராக இருந்த நானும், செயலாளராக இருந்த கருணாநிதியும் செந்தொண்டர் பொறுப்பில் இருந்தோம். வி.பி.சி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.

               தொழிலாளர்கள், வாலிபர்கள், மாணவர்கள், குடிசைப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள், வில்லிவாக்கம் தொகுதி மக்கள் என பெருங்கூட்டம் சாரை, சாரையாக வந்து அஞ்சலி செலுத்திய வண்ணமிரு ந்தனர். குக்ஸ்ரோட்டில் ஆரம்பித்து பெரம்பூர் சர்ச் வரை நீண்ட வரிசையில் மக்கள் தங்கள் நேசத்துக்குரிய தலைவனுக்கு அஞ்சலி செலுத்த கண்ணீரும் கம்பலையுமாக நின்றார்கள்.

                 வி.பி.சி.யின் உடலுக்கு அருகில் வந்த பலரும், அவர் செய்த உதவிகளைப் பற்றி அங்கலாய்த்தார்கள். சிலர் மார்பில் அடித்துக் கொண்டு அழுதார்கள். வெவ்வேறு பிரிவினர், வெவ்வேறு தரப்பினர், வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த அவர்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போல் சொந்த சோகம் அனுசரித்தனர். அவர்களின் சோகம் என்னைப் போன்றவர்களையும் தொற்றிக் கொண்டது. அழக்கூடாது என்று கட்டுப்படுத்தியபோதும், கண்கள் அடங்க மறுத்தது. தாரை தாரையாக வழிந்த கண்ணீர் நெஞ்சை நனைத்தது.

              தொழிலாளர் வர்க்கம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அப்படி சோகப்பட்டதற்கு என்ன காரணம்? தோழர் விபிசியின் அணுகுமுறைதான் காரணம்; அவர் ஆற்றிய பணிகள்தான் காரணம்; மக்களோடு மக்களாக அவர் இருந்ததுதான் காரணம்.

              வி.பி.சி. எங்காவது ஒரு இடத்திற்கு செல்கிறார் என்றால், அங்கு யாரையாவது பார்த்தால் அவரை மட்டுமல்லஅவர் குடும்பத்தையே நலம் விசாரிப்பார். ‘‘ உன் பையன் என்ன பண்றான்படிச்சுட்டு சும்மாத்தான் இருக்கானா? என்னை வந்து பாக்கச் சொல்லுநான் ஒரு இடத்துக்கு கடிதம் தரேன். அங்கே போய் பாக்கச் சொல்லுவேலை கொடுப்பாங்க…’’

      ‘‘உன் மகளுக்கு உடம்பு சரியில்லையாநான், ஒரு டாக்டருக்கு கடிதம் தரேன். உன் மகளைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பாரு. பணம் ஒண்ணும் வாங்க மாட்டாரு. வேறு ஏதாவது ஒரு உதவியென்றால் என்னை தயங்காமல் வந்து பாரு’’

                 இப்படி ஒவ்வொருவரிடமும் அவருடைய அணுகுமுறை.. மக்களோடு அவருக்கிருந்த நேரடியான தொடர்புஇதை நானே நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்.வி.பி.சி. இப்படி சேர்த்த கூட்டம்தான்அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சாரை சாரையாக வந்தது. தாரை தாரையாக கண்ணீர் சிந்தியது.

                       தொழிற்சங்கப் பணிகள்; போராட்டங்கள்; அரசு அதிகாரிகளைப் பார்த்தல்; கட்சி, அரசியல் பணிகள் போன்ற பணிகளில் ஈடுபடுவோர் மக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது அரிதான ஒன்றாகும். சில நேரங்களில் மக்கள் தொடர்பு அறுந்துகூட போய்விடும். ஆனால், வி.பி.சி. எல்லாப் பணிகளோடும் மக்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் பணியையும் சேர்த்தே செய்து வந்தார். அதிலும் குடிசைப் பகுதி மக்களின் பிரச்னைகளில் அவர்களோடு நேரடியாக நின்று களமாடினார்.

                இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆரம்ப கால எழுச்சி, மக்கள் பிரச்னைக்கான போராட்டங்களை மையப்படுத்தியே இருந்தது. அதிலும் குடிசைப் பகுதி மக்களின் பிரச்னைகளுக்கான போராட்டங்கள்; சமூக விரோத சக்திகளுக்கு எதிரான சண்டைகள்; காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்; குடிநீர், கழிவு நீர், சாலை வசதி பிரச்னை என மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்தே போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் எல்லாம் வி.பி.சி. எங்கள் கூடவே இருந்தார். போராட்டங்களில் நேரடியாக வந்து தலையிடுவார். பொதுக்கூட்டங்களில் பேசுவார்; போலீசாரோடு பிரச்னை ஏற்பட்டால், இன்ஸ்பெக்டரோடு பேசுவார்; தேவைப்பட்டால் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து நிற்பார்.

                    வடசென்னை பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தவர் வி.பி.சி. ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மக்களோடு தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று பலர் பேசுவார்கள். ஆனால், அவர்கள் வெகுஜனங்களுக்கு வெகுதூரம் இருப்பார்கள். வி.பி.சி. மக்களோடு தொடர்பு வைத்தார்; மக்களோடு மக்களாக இருந்தார். அவரைப் போன்ற இடதுசாரி தலைவர்கள் ஓயாமல் ஓடோடிச் சென்று செய்த பணிகள் காரணமாகத்தான் இன்னமும் இடதுசாரிகள் மீது மக்கள் ஈர்ப்புடன் இருக்கிறார்கள். என்னைப் போன்ற பலருக்கும் அவரின் பணி இன்னமும் உந்து சக்தியாக இருக்கிறது.

              கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கி கட்டு என்பதில் கறாராக இருப்பார் வி.பி.சி. மற்ற தோழர்களிடமும் அதை வலியுறுத்துவார். தோழர்கள் யாராவது ஷேவ் செய்யாமல் வந்தால் ரூ.2 ரூபாய் கொடுத்து முதலில் போய் ஷேவ் பண்ணிக் கொண்டு வா என்பார். அப்போ ஷேவிங் 2 ரூபாய்தான். அதற்காக தாடி வைத்தவர்களை எல்லாம் அவருக்கு பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. நான் வாலிப பருவத்தில் இருந்தே தாடி வைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை தாடி என்றுதான் வி.பி.சி. அழைப்பார்.  அவரைப் பொறுத்தவரை தோழர் என்றால், மடிப்பு கலையாத சட்டையுடன், மழுங்க ஷேவ் செய்து கொண்டு கம்பீரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அதை வலியுறுத்தவும் செய்தார்.

                 சென்னையில் அவர் இருந்த காலகட்டம் வரை, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, காவல் நிலைய மரணங்கள், குடிசைப்பகுதி மக்கள் பிரச்னைகள், அரசியல் போராட்டங்கள், தொழிற்சங்க போராட்டங்கள் என எல்லாவற்றிலும் அவருடைய நேரடி தலையீடு இருந்தது. காவல்துறையைக் கண்டித்து அவருடைய பேச்சுக்கள், சிங்கத்தின் பிடறியைப் பிடித்து உலுக்குவதுபோல் இருக்கும். அவர் ஒன்றும் மேடை ஆவேசி அல்ல. மென்மையான குரல்; அழுத்தந்திருத்தமான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளிப்படும்போது தீக்குச்சியைக் கொளுத்தி காய்ந்த வைக்கோல்போரில் போட்டதுபோல் இருக்கும்.

                சென்னை மெரினாவில், மீனவர்களை போலீசார் கொன்று குவித்தபோது, உடனே சம்பவ இடத்துக்கு சென்ற வி.பி.சி., குடிசைப் பகுதி மாற்று வாரிய தலைமை அலுவலகம் அருகே சாலை மறியல் செய்தார். ‘‘வலைகளை உலர்த்தவும், மீன்களை காயவைக்கவும், கடலோடு வாழ்கின்ற மீனவர்களுக்கா உரிமையில்லை. கட்டுமரத்தில் சென்று இப்போதே கப்பல்களை முற்றுகையிடுவோம். மிஸ்டர் தேவாரம்கமிஷனராக இருக்கிறீர்கள்ஜாக்கிரதை…’’ என்று வி.பி.சி.யின் சின்னக் குரலில் இருந்து சிம்மத்தின் சீற்றம் வெளிப்படும். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் அப்போதே சென்று ஏதாவது செய்யத் தோன்றும்.

                  வடசென்னையில் காவல் நிலையத்தில் ஒரு பெண் மரணம் அடைந்த சம்பவத்தை கண்டித்த பொதுக்கூட்டத்தில் தோழர் வி.பி.சி. பேசினார்; ‘‘மக்களுக்காகத்தான் காவல் நிலையம்; மக்களை கொல்ல அல்ல; அது தேவையா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.’’ அவர் சாதாரணமாகத்தான் பேசுவார். கேட்டுக் கொண்டிருக்கும் நம் நாடிநரம்புகள் எல்லாம் முறுக்கேறும். காவல் நிலையமே தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோம். கிராமப் புறங்களில் பேச்சில் பொடி வைத்துப் பேசுவார்கள். தோழர் வி.பி.சி. பேச்சில் வெடி வைத்துப் பேசுவார்.

              வடசென்னை பகுதி தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதி. அம்பத்தூர் தொழிற்பேட்டை, பெரம்பூரில் பின்னிமில், மணலி எம்.ஆர்.எல் தொழிற்சாலை, பேசின் பிரிட்ஜ் அனல் மின்நிலையம் இப்படி பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். வியாசர்பாடி பகுதியில் வாலிபர் சங்கம் அமைத்து கட்சிகட்டிய நாங்கள், தொழிற்பேட்டைகளில் தொழிலாளர் களுக்கு ஆதரவான போராட்டங்களில் திரளாக கலந்து கொள்வோம்.  கருங்காலி வேலை செய்பவர்களை தனியாக சந்தித்துப் பேசி தனிமைப்படுத்துவோம். இதற்கெல்லாம் எங்களுக்கு வழிகாட்டியவர் தோழர் வி.பி.சி.    

           வியாசர்பாடியில் ரவுடியிசம், கள்ளச்சாராயத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்துவோம். உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம். தட்டி (டயர் தட்டிதான்) வைப்போம். அதிகாரிகளை சந்தித்து மனு கூட கொடுக்க மாட்டோம். போராடுவதோடு எங்கள் கடமை முடிந்தது என்று நினைப்போம். அப்படியிருந்த எங்களுக்கு வழிகாட்டியவர் வி.பி.சி. மனு கொடுக்கச் சொல்வார்; அதன்பிறகு அதிகாரியை சந்தித்து பேசச் சொல்வார். அதன்பிறகு மக்களைத் திரட்டி போராடச் சொல்வார். அந்தப் போராட்டத்தில் வி.பி.சி.யும் பங்கு பெறுவார்.

                 அரசியல் விஷயம் எது? அரசியலற்ற விஷயம் எது? (Political & Non Political) என்ற அரிச்சுவடியை என்னைப் போன்றவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசான் வி.பி.சி. வாலிபப் பருவத்தில் என்னைப் போன்றவர்கள் அரசியலற்ற விஷயங்களுக்காக சண்டை போட்டபோது, எங்களோடு களமாடியவர் வி.பி.சி. அதன்பிறகு அந்த விஷயத்தைப் பற்றி விளக்கி செல்லமாக கோபிப்பார். தோழர்களின் தவறை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஒருபோதும் தோழர்களின் தலையில் அவர் குட்டியதில்லை.  மற்றவர்கள் முன்பு தோழர்களை விட்டுக் கொடுத்தது மில்லை. தோழர் வி.பி.சி. என்னைப் போன்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்போது, அவர் மீது எங்களுக்கு கோபம் வராது. ஏனென்றால் அவர் ஆலோசனை மட்டும் சொல்பவரல்லகளத்தில் எப்போதும் எங்கள் கூடவே இருப்பவர்.

             வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, நாடாளுமன்ற தொகுதியை விட பெரிய தொகுதி அப்போது. அங்கு போட்டியிடும் வேட்பாளர் தொகுதி முழுவதும் சென்று பிரச்சாரம் செய்வதே பெரிய விஷயம். வெற்றி பெற்ற பிறகு தொகுதி முழுக்கச் சென்று நன்றி சொல்வதே பெரிய விஷயம். இப்படி பல பெரிய விஷயங்களை கொண்ட தொகுதி அது. போட்டியிடுபவர்கள் தொகுதி முழுக்க பிரசாரம் செய்ய முடியாதுப்பா என்ற மனநிலையிலும், தொகுதி முழுக்க வேட்பாளர் எப்படிப்பா வரமுடியும் என்ற மனநிலையில் வாக்காளர்களும் இருப்பார்கள். இது திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கே இதுதான் நிலைமை என்றால் தொகுதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஸ்தாபனம் இருந்த நம் கட்சியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

                 வில்லிவாக்கம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக 1984ம் நடந்த தேர்தலில் போட்டியிட்டார் வி.பி.சி. அவரை எதிர்த்து அதிமுக இளைஞர் அணி மாநில அமைப்பாளராக இருந்த ஜே.சி.டி. பிரபாகரன் போட்டியிட்டார்.  வி.பி.சி. போட்டியிடுகிறார் என்பதால் தமிழகம் முழுவதும் அந்த தொகுதி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. வி.பி.சி. வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் தோழர்கள் மத்தியில் பரவலாக காணப்பட்டது. தொகுதியில் நம் கட்சிக்கு பலமில்லை. அம்பத்தூரில் மட்டும் தொழிற்சங்க அமைப்பு வலுவாக இருந்தது. கட்சியின் சின்னத்தையே பரவலாக அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அந்த தேர்தலில் வி.பி.சி.யுடன் இணைந்து பணியாற்றும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    65 மற்றும் 66 என இரண்டு வட்டங்கள் எனக்கு ஒதுக்கப்பட்டது. அது கொளத்தூரில் இருந்து திருமங்கலம் வரை நீண்டது. அங்கு நம் கட்சித் தோழர்கள் இரண்டு மூன்றுபேர்தான் இருந்தார்கள். கூட்டணி கட்சியான திமுகதான் அங்கு பலமாக இருந்தது. திமுகவினருக்கு வி.பி.சி. மீது மிகுந்த மரியாதை இருந்தது. காரணம், கத்திக்குத்து சம்பவத்துக்கு பிறகு, ‘‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’’ என வி.பி.சி. காட்டிய கருணை. சட்டப்படிகூட தண்டனை பெற்றுத் தராத தயாள குணம்.

                 திமுகவின் ஆதரவு, வி.பி.சி.யின் ஆளுமையுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம். அப்போதெல்லாம் பிரசாரத்துக்கு நேரக் கட்டுப்பாடு கிடையாது. வி.பி.சி. பிரசார ஜீப்பில் மற்றக் கட்சிக்காரர்களை கூட ஏற்றிக் கொண்டு வாக்கு சேகரிப்பார். அதேநேரம் பிரசாரத்தில் ஈடுபடும் நம் தோழர்களிடம், மக்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்து, பிரசுரத்தை கொடுக்கச் சொல்வார். பிரசுரத்தை வீசி எறிந்துவிட்டு வரக்கூடாது என்பார். தேர்தல் பிரசார அரிச்சுவடியையும் என்னைப் போன்றவர்களுக்கு அவர்தான் கற்றுத் தந்தார்.

              பிரசாரத்தின்போது, வீதியில் இருப்பவர்களிடம் ஜீப்பை நிறுத்தி இறங்கிப் போய் பேசுவார். நமக்கோ அடுத்த பகுதிக்கு செல்ல நேரம் ஆகிறதே எனத் தோன்றும். ஆனால், வி.பி.சி. அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு வருவார். இந்த விஷயம் அடுத்த பகுதிக்கு நாங்கள் பிரசாரத்துக்கு செல்லும் முன்பே சென்றுவிடும். ‘‘வி.பி.சி. பெரிய தலைவராக இருந்தாலும், எளிமையானவரு. அவரை எதுக்காகவும் எளிதாக அணுகலாம்’’ என்று மக்கள் பேசிக் கொள்வார்கள்.

                    எத்தனை வீடுகளுக்கு  சென்று வாக்காளர்களை சந்திக்கிறாரோ, அவர்களிடம், அந்த பகுதிக்கு பொறுப்பாக உள்ள நம் கட்சித் தோழரை அறிமுகப்படுத்தி, எந்த விஷயமா இருந்தாலும், இவர்கிட்டச் சொல்லுங்க, சரி செய்து கொடுப்பார் என்று கூறி மக்களோடு நம் கட்சிக்கு தொடர்பை ஏற்படுத்தி தருவார். கூட்டணி கட்சிக்காரர்களிடமும் நம் கட்சித் தோழர்களை நல்ல முறையில் அறிமுகப்படுத்தி நெருக்கத்தை உண்டாக்குவார்.

              பிரசாரத்தின்போது மற்றக் கட்சிக்காரர்களைப் பார்த்தால் அவர்களிடமும் நலம் விசாரிப்பார். இளைஞர்களைப் பார்த்தால் அவர்களிடம் ஜீப்பில் இருந்து இறங்கி வந்து பேசாமல் போகமாட்டார். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விசாரித்து, அப்படித்தான் இருக்க வேண்டும் என்று பாராட்டுவார். தேர்தல் பணியில் ஈடுபடும் கூட்டணிக் கட்சிக்காரர்களை சுட்டிக்காட்டி அவர்களைப் போல் நாம வேலை செய்ய வேண்டும் என்று நம் தோழர்களிடம் கூறுவார். இது கூட்டணிக் கட்சிக்காரர்களை மிகவும் உற்சாகப்படுத்தும். அவர்கள் இன்னும் கூடுதலாக வேலை பார்ப்பார்கள்.

            நம் தோழர்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே தேர்தல் முடிவு அமைந்தது. தோழர் வி.பி.சி. எம்.எல்.. (1984- 87) ஆனார்.  திமுகவின் நகர்ப்புற செல்வாக்கு வெற்றிக்கு காரணமாக இருந்தது. நான் பொறுப்பாளராக இருந்த 65, 66 வார்டுகளில் (முருகைய்யன், வேலாயுதம், ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் உடன் இருந்தனர். கே.கிருஷ்ணன், கே.சின்னையா தொகுதி மையத்தில் இருந்தனர்.) அதிக வாக்குகள் கிடைத்தன. வி.பி.சி.யிடம் தோற்றதில் எனக்கு பெருமைதான் என்று தோற்ற ஜே.சி.டி.பிரபாகரன் கூறினார்.பூஜ்யத்தில் இருந்து ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கினார் வி.பி.சி.

      அவர் மறைவுக்குப் பிறகு தோழர் டபிள்யூ.ஆர்.வரதராஜன் அங்கு வெற்றி பெற அடித்தளம் அமைத்தவர் தோழர் வி.பி.சி.தான் என்றால் அது மிகையாகாது.

      ‘‘மக்கள் ஜனநாயக புரட்சிக்கு தேவையற்றவர்கள் என்று யாரும் கிடையாது; வர்க்க விரோதிகளைத் தவிர’’ என்ற சென்-யுன் கருத்துக் கிணங்க, சட்டமன்ற உறுப்பினர் பணியில் எல்லோரையும் இணைத்தவர் தோழர் வி.பி.சி. கட்சியின் அனைத்து அரங்கத்தை சேர்ந்தவர்களையும் வில்லிவாக்கம் தொகுதி மக்கள் பணியில் அவர் ஈடுபடுத்தினார். வில்லிவாக்கம் தொகுதி ஆறு, ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. நான் 1983ல் கட்சியின் முழுநேர ஊழியனானேன். எனக்கு 65 மற்றும் 66வது வட்டங்கள் சட்டமன்ற பணிக்கு பொறுப்பாக்கப்பட்டது.

             தோழர் வி.பி.சி.க்கு தொழிற்சங்க பணி, கட்சி மற்றும் அரசியல் பணி உள்பட ஏராளமான பணிகளுடன் எம்எல்ஏ பணிச்சுமையும் சேர்ந்தது. அதை சுமையாக கருதவில்லை; சுகமாகத்தான் கருதினார் வி.பி.சி.  உள்ளூர் பிரச்னைகள் குறித்து வி.பி.சி.யிடம் ஏராளமானோர் மனு கொடுப்பார்கள். தபாலிலும் பலர் அனுப்புவார்கள். அவற்றுக்கு எல்லாம் பதில் போடுவார் வி.பி.சி.

           இதற்கு நம் தோழர்கள் ஏராளமானோரைப் பயன்படுத்தினார் வி.பி.சி. உங்கள் கடிதம் கிடைத்தது. உரிய அதிகாரியிடம் பேசி பிரச்னையை தீர்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று பதில் அனுப்புவார். இதுவரை எம்.எல்..க்களாக இருந்தவர்களிலேயே மிக அதிக எண்ணிக்கை யிலான தபால் அட்டையை பயன்படுத்தியவர் தோழர் வி.பி.சி.தான்.

              மக்கள் பிரச்னை சிலவற்றுக்கு அந்தந்த பகுதி பொறுப்பாளர்களை அனுப்பி நேரடியாக பதில் சொல்லிவிட்டு வரச் சொல்வார். கடிதத்திற்கு பதில் அனுப்பவதோடு நின்றுவிட மாட்டார் வி.பி.சி. சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசுவார். என்னைப் போன்றவர்களை அனுப்பி, அந்தப் பிரச்னை என்னாயிற்று என்று கேட்டுவிட்டு வா என்று கூறி அனுப்புவார்.

             வி.பி.சி. எம்.எல்..வாக இருந்தபோது குடியிருப்போர் நலச் சங்கத்தினரை அவர் கையாண்ட விதம் அலாதியானது. அவர்களின் கூட்டத்துக்கு நேரடியாகச் சென்று பேசுவார். அவர்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும் விளக்குவார். அவர்களில் யாராவது, கோபப்பட்டு பேசினால், அவரை மேடைக்கு அழைத்து உங்கள் கருத்தை எல்லோரும் கேட்கும்படி மைக்கில் பேசுங்கள் என்று கூறி சாந்தப்படுத்துவார். குடியிருப்போர் சங்க கூட்டங்களில் எல்லாம் ‘‘நான் அரசியல் பேச விரும்பவில்லை’’ என்றுகூறி அவர்கள் ஏற்கும்படி அரசியலாகத்தான் பேசுவார்.

                  சில பிரச்னைகளில் மக்களை திரட்டிக் கொண்டுபோய் அதிகாரிகளை சந்திப்பார். சில பிரச்னைகளில் தலைமைச் செயலகத்துக்கு தொகுதி மக்களை வரச்சொல்லி அமைச்சரை பார்த்து நேரடியாக மனு கொடுக்கச் சொல்வார். எனக்குத் தெரிந்து சென்னை நகரில், வில்லிவாக்கம் தொகுதியில் இருந்துதான் அதிக மக்கள் தலைமை செயலகத்துக்கு சென்றிருப்பார்கள். அமைச்சர்களைப் பார்த்து பேசியிருப் பார்கள். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்தான் என்று இல்லை. எந்த அமைச்சராக இருந்தாலும், அவரைப் பார்த்து, பிரச்னையை தீர்க்கச் சொல்லி வி.பி.சி. வலியுறுத்துவார்.

    அதிகாரிகளை சந்திக்கச் செல்லும்போது, குறைந்தது 20 தொகுதிவாசி கள் அவருடன் செல்வார்கள். அதில் அனைத்துக் கட்சிக்காரர்களும் இருப்பார்கள்.  ‘‘அவங்க எதுக்கு வி.பி.சி., நீங்க மட்டும் வந்தா போதாதா’’ என்று அதிகாரிகள் கேட்டால், அது அவங்க பிரச்னைங்க. நீங்க அவங்ககிட்டதான் பதில் சொல்லணும் என்பார்.

          சாந்த ஷீலா நாயர், மலைச்சாமி சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தபோது, வி.பி.சி.யுடன் நானும் சென்று அவர்களை சந்தித்திருக்கிறேன். நான் என்றால் நான் மட்டுமல்லதொகுதி மக்களோடுதான். ஒருகட்டத்தில், சாந்த ஷீலா நாயர், ‘‘சென்னையிலேயே அதிகமான பிரச்னைகளுக்கு நான் உங்க தொகுதியில தீர்வு கண்டிருக்கிறேன்’’ என்று ஒரு பெரிய ஃபைலையே எடுத்துப்போட்டார். ‘‘இன்னும் பல பிரச்னை இருக்கிறதே நான் என்ன பண்றது’’ என்றார் வி.பி.சி.

               தோழர் வி.பி.சி.க்கு இன்னொரு முகமும் இருந்தது. அது அறிவுஜீவி முகம். அவர்கள் மத்தியில் பேசும்போது, மார்க்சிய தத்துவங்களை அவர் விளக்கும் பாணியே தனித்துவமாக இருக்கும். அதுவே தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது எளிமையாக வேறுவிதமாக இருக்கும்.

          வி.பி.சி. இரண்டரை ஆண்டகாலம்தான் எம்எல்ஏவாக இருந்தார். அதற்குள் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். வில்லிவாக்கம் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தவரே தோழர் வி.பி.சி.தான். மிக மோசமாக இருந்த சாலைகளை சீரமைத்தவர் வி.பி.சி.தான். எம்எல்ஏ பதவியை சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மக்களுக்காக மட்டுமே பயன்படுத்தியவர் வி.பி.சி. கட்சி அமைப்புகள் வேகமாக இத்தொகுதியில் உருவாக்கப்பட்டது.

       எந்த பிரச்னையாக இருந்தாலும் சாமன்யனும் எளிதில் அணுகக் கூடிய எளிய மனிதராக இருந்தார் வி.பி.சி. அவர் எம்எல்ஏவாக இருந்தபோது, தனது அனைத்து தொடர்பையும் அமைப்புக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தார். யாரையும் விலக்கி வைப்பது என்ற எண்ணமே அவருக்கு ஏற்பட்டதில்லை. எல்லோரையும் பயன்படுத்தினார். கூட்டு முடிவு எடுத்தார். கூட்டு முடிவுக்கு கட்டுப்பட்டார். மக்களோடு மக்களாக மக்களுக்காக வாழ்ந்தார். இறுதி மூச்சுவரை அவர்களுக்காகவே உழைத்தார். அவர் அப்படித்தான் மற்றவர்களை ஈர்த்தார்; மக்களை சேர்த்தார்; அவர்கள்தான் இறுதி அஞ்சலி செலுத்த அணிஅணியாய் வந்தார்கள்.

     தோழர் வி.பி.சி. மறைந்து 35 ஆண்டுகளாகிவிட்டன. ஒரு தலைமுறைக்கு அவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பதிவு போடுவதில் என்ன பயனிருக்கப் போகிறது. அது பலபேரை உத்வேகப்படுத்தினால்தான் பலனிருக்கும். தோழர் வி.பி.சி.யை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்போம். அவரோடு, சமூக மாற்றத்திற்கான ஒரே மாற்று மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பதையும் கொண்டு சேர்ப்போம்.  எதையும் மேலிருந்துதான் தொடங்க வேண்டும்.  எழுத்து வடிவில் நான் தொடங்கி விட்டேன். நீங்கள்

 

  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...