Pages

புதன், மே 11, 2022

ஆக்கிரமிப்பு: ஆளுக்கொரு நீதியா?

 



  தமிழகத்தில் தற்போது நீர்நிலைகளை பாதுகாப்பது என்ற வார்த்தை அடிக்கடி நீதிமன்றத்தில் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், நீராதாரங்களை பெருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நீர்நிலைகளை யார் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்பது தொடர்பான தலையீடுகளில்தான் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் நீதிமன்றத்தில் காணப் படுகிறது.

சென்னையில் பல இடங்களில் குடிசைப்பகுதி அல்லது அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்று சொல்லி நீதிமன்ற உத்தரவு என்ற பெயராலும், நீதிமன்றம் சொல்லியும் அவர்களை அப்புறப்படுத்தவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அரசு அதிகாரிகள் மீது இருப்பதை காரணம் காட்டியும், அங்கு வாழும் மக்களை கொடூரமான முறையில் வெளியேற்றுவதற்காக அரசு அடக்கு முறை கருவிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நீர்நிலைகள் தொடர்பாக நீதிமன்றம், நீதிமான்கள் நியாயமான பார்வையில் செயல்படவில்லையென்று எண்ணத் தோன்றுகிறது. நீர்நிலை தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு அதை அமல்படுத்துவதற்கான நடுநிலையான தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கலாம்.

  அதற்கு மாறாக ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து வழக்கை நடத்தி ஏழை மக்களை காலி செய்ய வேண்டும் என்கிற தீர்ப்புகளை வழங்கி அதை அமல்படுத்தவில்லை என்ற காரணத்திற் காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்புகளை சொல்லி மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சி நடக்கிறது. பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ஒரு குற்றவியல் வழக்கு போல நடத்துவது நீதித்துறைக்கு உகந்ததாக இருக்காது.

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று உண்மையிலேயே நீதிமான்களுக்கு எண்ணம் இருந்தால், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள நன்னீர் சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி (அது யாராக இருந்தாலும்) அற்புதமான இயற்கை வளத்தை பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும். 

இது எப்படிப்பட்ட சதுப்பு நிலம் என்பதை அனைவரும் அறிந்திருக்க முடியும். இந்த சதுப்பு நிலத்தை பாதுகாத்திருந்தால் சென்னை வெள்ளத்தில் மிதப்பது தடுக்கப்பட்டிருக்கும். நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டிருக்கும். சுற்றுச்சூழல் மேம்பட்டு இருக்கும். இன்னும் எத்தனை எத்தனையோ நன்மைகள் நன்னீர் சதுப்பு நிலத்தை பாதுகாத்து இருந்தால் ஏற்பட்டிருக்கும். ஆனால் கண்ணுக்கு முன்னால் யானை போவதை கண்டு கொள்ளாமல் எறும்புகளை வேட்டை யாடுவது எந்தவிதத்தில் நீதியாகும்.

நில ஆக்கிரமிப்பு என்பது பெரும்பகுதி சுமார் 70 சதவிகிதம்  அரசு நிறுவனங்களால், பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களால்தான் நடக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும். நன்னீர் சதுப்பு நிலம்பற்றி நீதிமான்களுக்கு தெரியாதா என்ன? நன்னீர் சதுப்பு நிலம் குறித்து சில தீர்ப்புகள் வழங்கி அதை அமல்படுத்தாதவர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயவில்லை ?

  உலகின் நிலப்பரப்பில் 6 சதவீதம் சதுப்புநிலங்களால் ஆனது. வருடத்தின் பெரும்பாலான நாட்கள் அல்லது வருடம் முழுவதும் நீர் வற்றாமல் இருந்து கொண்டே இருக்கும். பல வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன. அதில் பள்ளிக்கரணை மாறுபட்டது. சதுப்பு தாழ்நிலம், சதுப்புநிலம், கடலேரிகள் அல்லது உப்புநீர்ஏரி, சகதிநிலங்கள், சதுப்பு நிலக்காடுகள்  எனப் பலவகை உண்டு. இந்த வகை நிலங்கள் அனைத்தும் நீரை தேக்கி வைத்து, வெள்ளத்தடுப்பு, கடலோர நிலஅரிப்பு, இயற்கைப் பேரிடரான புயல் மற்றும் கடல் அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பெரும் பணியினை செய்கிறது. 

 பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ‘ஸ்பாஞ்சு’ போல் நீரை உள் வாங்கி வைத்துக் கொள்ளும். அத்துடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டும்தான் "நன்னீர் சதுப்பு நிலமாகும்." இந்திய அரசால் 1985-86-ல் அறிவிக்கப்பட்ட 94 சதுப்பு நிலங்களில் பள்ளிக்கரணை மட்டுமே நன்னீர்சதுப்பு நிலமாகும்.

 வங்கக் கடலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. கடல்நீரை உள்வாங்கும் பகுதியாக இருந்ததால் பருவகாலங்களில் வெள்ளப் பெருக்கினால், சுத்தமான நீரும், கடல் நீரும் கலந்து ஒன்றாக மாறியது. 1876-ல் பக்கிங்காம் கால்வாய் கட்டப்பட்டபிறகு, கடல்நீர் உள்ளே வருவது முழுவதுமாக தடுக்கப் பட்டது.

சதுப்பு நிலத்தின் தண்ணீரில் உப்பு தன்மை குறைந்து சுத்தமான தண்ணீர் நிறைந்த ‘நன்னீர் சதுப்பு நிலமாக’ மாறியது. இந்திய நில அளவை துறையின் கணக்கெடுப் பின்படி 1965-ம் ஆண்டு இந்த நன்னீர் சதுப்பு நிலம் 5,500 ஹெக்டேராக (14,000 ஏக்கர்) இருந்துள்ளது.

  பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலம் “பலவகைப் பட்ட இயற்கை சூழல் அமைப்பு”ஆகும். இது 337 வகையான தாவர மற்றும் உயிரின தொகுதிகளை பாதுகாத்தது. 115 வகையான விதவிதமான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன, 10 வகையான ஆமை, தவளை உட்பட இருவாழ்விகள், 46 வகையான மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள், 7 வகையான பட்டாம்பூச்சிகள், 5 வகையான நீர் பூச்சிகள், 29 வகையான புற்கள் உட்பட 114 வகையான தாவரங்கள் என அற்புதமான இயற்கை உயிரினப் பெட்டகத் தை  கொண்ட இடமாக இருந்தது. 

  பறவைகள் சரணாலயத்தின் பாதுகாப்பாக, வேடந் தாங்கலை விட 4 மடங்கு அதிகமாக இந்த நன்னீர் சதுப்பு நிலம் இருந்தது. இந்த பகுதி அழகான கோரையும், கீரைகளும் நிறைந்த பகுதியாகும். இந்த நிலம் பறவைகள், பூச்சிகள், விலங்குகளின் வீடாகவும், புகலிடமாகவும், இனப் பெருக்க மையமாகவும் இருந்தது. பருவ காலங்களில் 31 ஏரிகளின் உபரி நீரை உள்வாங்கும் பகுதியாக இந்த நன்னீர்சதுப்பு நிலம் இருந்தது. வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் உயரவும், பெருமளவு உதவியது.

கழுதைக்கு வேண்டுமானால் கற்பூர வாசனை தெரியாமல் இருக்கலாம். கவர்மெண்ட்டுக்கு தெரியாமலா இருக்கும்? கண்டிப்பாக தெரியும். கற்பூரத்தின் விலையும் தெரியும். அதன் வாசனையின் விளைவும் தெரியும். 1965-ம் ஆண்டு 5500 ஹெக்டேர் (14,000 ஏக்கர்) சதுப்பு நிலமாக இருந்தது. 1972-ல் இந்திய வனகணக்கெடுப்பின்போதுகூட இது இருந்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பள்ளிக்கரணை நன்னீர்சதுப்பு நிலத்தில் உயிரினங்களின் கணக்கெடுப்பை நடத்திய போதுகூட சுமார் 200 வகையான உயிரினங் கள்வரை இருந்த தகவல்களை பதிவு செய்துள்ளது.

இருக்கும் ஆனால் இருக்காது என்பது போல், கணக் கெடுப்பிலும், காகிதங்களிலும் அனைத்தும் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இவை கபளீகரம் செய்யப் பட்டுவிட்டன. 1965-ல்5,500 ஹெக்டேராக கிழக்கில் மகாபலிபுரம் சாலை, மேற்கே தாம்பரம். வேளச்சேரி சாலை, வடக்கில் வேளச்சேரி கிராமம், தெற்கில் மேடவாக்கம் சாலை என்பது இதன் எல்லையாக பரந்து விரிந்து தமிழகத்தின் உயிரின சமநிலை, சுற்றுச் சூழலை பாதுகாத்து வந்தது. 

தற்போது 317 ஹெக்டேர் அதாவது 793 ஏக்கர் மட்மே இருப்பதாக அரசுதெரிவிக்கிறது. இதைத்தான் வனத்துறை யிடம் அளந்து, காப்புக் காடு சட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது. மீதமுள்ள 5,183 ஹெக்டேர் (12,905 ஏக்கர்) எங்கே சென்றது? நிலம் இருக்கிறது. ஆனால் சதுப்பு நிலமாக இல்லை. ஆக்கிரமிப்பு கட்டிடங்களாக, சாக்கடைகளாக, குப்பை மேடுகளாக, வானுயர அடுக்குமாடிகளாக உள்ளது.

  தேசிய கடல்சார் ஆய்வு மையம், காற்றாலை தொழில்நுட்ப ஆய்வு மையம், பறக்கும் ரயிலின் தூண்கள் என முக்கிய நிறுவனங்கள் எந்தவித கூச்சநாச்சமின்றி நன்னீர் சதுப்பு நிலத்தை அழித்துவிட்டு கட்டிடம் கட்டின. இந்த அமைப்புகள் வேறு இடத்தில் இருந்துகூட செயல்பட முடியும். இந்த சதுப்பு நிலத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. உதாரணமாக ‘காக்னிஸான்ட், ‘எச்.சி.எல்.’போன்ற பல்வேறு நிறுவனங்கள் சதுப்பு நிலத்தை அழித்துவிட்டன. 

  ஜேப்பியார் கல்விநிறுவனங்கள், தங்கவேலு கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், முகமது சதக் கல்லூரி என காசுமேலே காசு பார்க்க, நன்னீர் சதுப்பு நிலத்தை புதைத்து அதன்மேல் தங்களது ‘வியாபார’ ஸ்தலங்களை கட்டமைத்துவிட்டனர். குளோபல் மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை, காமாட்சி மருத்துவமனை என மருத்துவமனைகளின் பட்டியல் நீளும். இந்த நிறுவனங் கள் அனைத்தும் ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சியின் பிரமுகர்களுக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர் களுக்கும் சொந்தமானது.

  இவைதவிர, நன்னீர் சதுப்பு நிலத்தை எட்டயபுரம் ஜமீனுக்கு சொந்தம் என்று போலி ஆவணங்கள் தயார் செய்து பலநூறு ஏக்கரை விற்றுவிட்டனர். பூமிபாலா என்ற போலி அறக்கட்டளையை ஆரம்பித்து 66 ஏக்கரை ஏப்பம் விட்டனர். பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நில ஆக்கிரமிப்பு அனைத்தையும் நடுத்தர வர்க்கம் அல்லது அடித்தட்டு மனிதனால் செய்ய முடியாது. அனைத்தும் ஆட்சியாளர்க ளால், ஆட்சியாளர்களுக்கு செய்யப்பட்டுக் கொண்டது.

இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த இந்த இடத்தை காத்திட நீதிமன்றம் சில தீர்ப்புகளை வழங்கி அத்துடன் முடித்துவிட்டது. இங்கே நீமன்ற அவமதிப்பு வழக்கு நீளவில்லை. சென்னையின் பறக்கும் இரயில் திட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புகள் நீர்நிலைகள் ஆக்கிரமிப் பிற்கு ஆதரவாக இருந்தது.

சென்னை நீர்ஆதாரங்களில் முக்கியமானது பக்கிங்காய் கால்வாய். இந்த ஆக்கிரமிப்பைபற்றி நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளது. சென்னையின் மழைநீர் வடிகால்வாயில் இந்த பக்கிங்காம் கால்வாய் வழியாக 29 சதவிகிதம் மழைநீர் வடிந்து செல்லும் என்று 2010-ம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கருத்தரங்க ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2014-ம்ஆண்டு பொதுப்பணித்துறை மதிப்பீட்டின்படி, தற்போது 600 கனஅடி கொள்ளள வை தாங்கும் சக்தியாக உள்ளது. உண்மையில் இதன் முந்தைய கொள்ளளவு 5600 கன அடி ஆகும். இந்தக் கால்வாய் 25 மீட்டர் அகலம் இருந்தது. பறக்கும் ரயில் திட்டத்தால் 10 மீட்டர் அகலமாக சுருங்கிவிட்டது.

இத்திட்டத்தின் பாதிப்புகளை எதிர்த்து பொதுநல வழக்கு எக்ஸ்னோரா அமைப்பால் தொடுக்கப்பட்டு 2006-ல் தீர்ப்பு வெளியானது. அந்த வழக்கில் மூன்று முக்கிய வாதங்கள் முன்வைக்கப் பட்டன. 

  முதலாவதாக, இத்திட்டத்தின் தூண்களாலும், ரயில் நிலையங்களாலும், மழைநீர் ஓட்டம் தடுக்கப்பட்டடு சென்னை வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகிறது. 

  இரண்டாவதாக, வருவாய்துறை நிலையாணை விதிகளையும் (Revenue Board Standing order-BSO) நகர திட்டமிடல் சட்டங்களையும், கடற்கரை பிரதேச விதிமுறைகளையும் மீறி அமைக்கப்பட்டது என்றும்,

  மூன்றாவதாக, இத்திட்டம் பள்ளிக்கரணை நீராதாரத்தை அழித்து விடுகிறது. நீர் செல்லும் வழியை தடுக்கிறது என்றும் வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப் பட்டன.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மூன்றையும் கடுமையாக எதிர்த்து பேசினார். அதிக மழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது என்றும், இத்திட்டத்தால் இல்லை என்றும் வாதிட்டார்.  

இரண்டாவதாக, இத்திட்டம் பொதுமக்கள் நலன் கருதி அமைக்கப்படுவதால், வேகமான போக்குவரத்து வசதி உருவாக்கு வதாலும், நீர்நிலை மற்றும் கால்வாய் விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித் தனர். 

மூன்றாவதாக, பள்ளிக்கரணை பகுதியை இனி பாதுகாக்க முடியாது, காரணம் வேகமான நகர்மயமாதல் நடைபெறுவதால் இது சாத்தியமில்லை என்று வாதிட்டனர். நீர்நிலைகளையும், ஏரிகளையும், குளங்களையும், கால்வாய்களும், சுற்றுச்சூழல் பற்றியும் அரசின் நிலைபாடு இதுவாகவே இருந்தது. 

இன்றும் எதைச்சொல்லி நகர்ப்புற ஏழைகளை வெளியேற்று கிறார்களோ, அதையே அரசு மீறிக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. 

  "நமது முக்கிய நோக்கம் தீவிர தொழில்மயமாக்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிரதான நோக்கத்தின் துணை நிகழ்வாக இருக்க முடியுமே தவிர, அதுவே பிரதான நோக்கமாக இருக்க முடியாது" 

என்று தனது தீர்ப்பை வழங்கியது. 2004-ம்ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், பெர்னாண்டஸ் பொதுநல வழக்கிற்கும் இதேபோன்று  ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

  அரசால் தனது திட்டங்களுக்காக செய்த ஆக்கிரமிப்புக்கள், பெரும்நிறுவனங்களின்  சட்டப்பூர்வமாக மாற்றப்பட்ட ஆக்கிர மிப்புகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் அரசின் உதவியுடன் செய்யும் ஆக்கிரமிப்புகள்தான் 90சதத்திற்கும் மேல். வறியவர்கள் வழியின்றி அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியுடன் இருக்கிற பணத்திற்கு கிடைக்கிற வாழ்விடங்களை அமைத்துள்ள ஆக்கிரமிப்புகள் மிகவும் குறைவானது.  இவைதான் பெரும்பகுதி அகற்றப்பட்டுள்ளது.

  சென்னையிலும் சென்னையை சுற்றிலும் 4100 நீர்நிலைகள் இருந்தது. தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய நீர்நிலைகளாக சுருங்கி விட்டது. கீழ்கண்ட பெயர்களை படித்தாலே எந்த அளவிற்கு மாற்று ஏற்பாடு இல்லாமல் அனைத்தும் அழிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்

  நுங்கம்பாக்கம்ஏரி, தேனாம்பேட்டைஏரி, வியாசர்பாடிஏரி, முகப்பேர்ஏரி, திருவேற்காடுஏரி, ஓட்டேரி, மேடவாக்கம், பள்ளிக் கரணை ஏரி, போரூர் ஏரி, அம்பத்தூர், ஆவடி ஏரி, கொரட்டூர் ஏரி, கொளத்தூர் ரெட்டேரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம்ஏரி, பெருங்களத்தூர் ஏரி, கல்லுக்குட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடிய நல்லூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, திருநின்றவூர், பாக்கம் ஏரி, விச்சூர் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப்பட்டு ஏரி, சிட்லபாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, கோடம்பாக்கம் ஏரி, அரசினர் தோட்ட ஏரி, ஆலப்பாக்கம் ஏரி ,வேப்பேரி, விருகம்பாக்கம் ஏரி, கோயம்பேடு ஏரி, அல்லிக்குளம்  என பட்டியல் நீளும். இவை தவிர குளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுள்ளன. நிலத்தின் மதிப்புஉயர்கிற போது குளங்களும் அழிக்கப்படுகிறது.

 தற்போது மிகவும் குறைவான ஏரிகளும் நீர்நிலைகளும் இருக்கிறது. இவையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பெரும் நிறுவனங்களால் ஆக்கிரமிக் கப்படுகிறது.  

 அரசும் நீதின்றமும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், புதிய நீர்நிலைகளை உருவாக்குவதற்கும் உரியமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எளியோரின் இல்லத்தை அபகரிக்க இதை ஒரு கருவியாக மாற்றக் கூடாது.

தமிழகத்தில் இன்றும் மொத்தநீர்பாசனத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாசனவசதிகள்தான் 30 சதவிகிதம் உள்ளது. அண்டைமாநிலத்திடம் நமது உரிமைகளுக்காக போராட வேண்டியதுடன் நிறுத்திவிடக்கூடாது. உள்நாட்டில் நீர்நிலைகளை பாதுகாப்பது, புதிய ஏரிகளை உருவாக்கிட வேண்டும்.

பாதிக்கப்படகூடிய மக்கள் அரசு, நீதிபரிபாலனம் நடுநிலையானது என்ற மாயமயக்கத்தில் இருக்க வேண்டியது இல்லை. வர்க்க சமுதாயத்தில் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் அடங்கி இருக்கிறது என்று காரல்மார்க்ஸ் வார்த்தைகளை நினைவில் வைத்து போராடுவோம்.

அ.பாக்கியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...