Pages

ஞாயிறு, மே 22, 2022

மந்தகதியில் மழைநீர்வடிகால்வாய் பணிகள். சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்குமா ? அ. பாக்கியம்


 


        சென்னையில் மழைநீர்வடிகால்வாய் கட்டும் பணிகள் மந்த கதியில் நடைபெறுகிறது. அடுத்த 5 மாதத்தில் வடகிழக்கு பருவ மழை வருகிற பொழுது அவற்றை எதிர்கொள்ளும் முறையில் பணிகள் தீவிரமாக நடை பெறவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

       இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிவடையவில்லை. ஒப்பந்ததாரர்கள் போதிய அளவிற்கு பணியாளர்களை நியமித்து பணிகளை முடிக்காமல் ஏமாற்றி வருகிறார்கள்.

       இவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

      2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் வடிகால்வாய் 11.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு ஏற்படுத்தவும் (Missing Links) , 32 கிலோமீட்டர் தூரத்திற்கு வடிகால்வாய் களை இடித்துவிட்டு புதிதாக கட்டவும் ரூபாய் 120 கோடி ஒதுக்கப்பட்டது.

     அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளில் இந்த 120 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் இணைப்பு இல்லாத பகுதிகளில் (Missing links) இணைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகளில் 30% மட்டுமே பணிகள் முடிந்துள்ளது.

       இவற்றில் சில பகுதிகளில் 10 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. அடுத்த ஐந்து மாதத்தில் இது முடிவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

     சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கே.கே. நகர், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் மழைநீர்வடிகால்வாய் அமைப்ப தற்காக மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டது. பருவ மழைக்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த பணிகளும்  ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.  

      வடசென்னையில் உள்ள எட்டு மாநகராட்சி மண்டலங்களில் கொசஸ்தலை ஆறு வடிகால்வாய் திட்டத்தின் கீழ் பணிகளை முடிக்க 3225 கோடி ஒதுக்கப்பட்டது. இவற்றிலும் 20 சதவீதம் மட்டுமே பணிகள் முடிந்து உள்ளன.

      இந்தத் திட்டத்தில் 1800 கோடி ரூபாய்க்கான பணிகளை 6 ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளனர். இதில் பணமோசடி களுக்கான வழிவகை தெரிகிறது. பல பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் போதுமான தொழிலாளர்களை அமர்த்தாமல் 50 சதவீதத்திற்கு குறைவான தொழிலாளர்களை வைத்து பணிகளை நடத்துகின்றனர்.

        26,33,64,66 ஆகிய வார்டுகளில் 157 தொழிலாளர்கள் இந்த பணிகளை நிறைவேற்ற தேவை. ஆனால் 34 பணியாளர்களை மட்டுமே வைத்து வேலை நடத்தப்படுகிறது.

       24,26,82,83 ஆகிய  வார்டுகளில் 50 சதவிகிதத்திற்கு குறைவான பணியாளர்களை வைத்து பணி செய்யப்படுகிறது. 22 வார்டில் 11 பணியாளர்களுக்கு பதிலாக ஒருவர் கூட பணியமர்த்த படவில்லை.

       ஒப்பந்ததாரர்கள் பணிகளை தொடங்குவதற்கும், இயந்திரங்களைக் கொண்டு வருவதற்கும் தேவையான கட்டணத்தை செலுத்தி விட்டதால் அனைவரையும் ஒரே நேரத்தில் நாங்கள் மாற்ற முடியாது. 

       ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் பணிகளை முடிக்கவில்லை என்றால் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

        குறைந்த ஆட்களை வைத்து பணிகளை செய்தால் மழைநீர்வடிகால் வாய் தரம் படு மோசமாக இருக்கும் என்பதை பலரும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மூன்று மாதத்தில் முடிப்போம் என்று சென்னை மாநகராட்சி வாக்குறுதி கொடுத்துள் ளது.

       சென்னையில் 33 374 உட்புற சாலைகள் உள்ளன இவற்றின் நீளம் 55 25 கிலோ மீட்டர் ஆகும் இவற்றில் 20 58 கிலோ மீட்டர் தூரத்திற்கு தான் மழைநீர்வடிகால்வாய் அமைக்கப் பட்டுள்ளது. 

        சென்னை பெருநகரில் சரி பாதி அளவிற்கு மழைநீர்வடிகால்வாய் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பதை சரி படுத்துவதற்கும் இல்லாத இடங்களில் மழைநீர்வடிகால்வாய் அமைப்பதற்கான திட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சென்னை நீரில் மூழ்காமல் பாதுகாக்க முடியும்.

      எது எப்படியோ? மீண்டும் சென்னை மழை நீரால் சூழப் படும் அபாயம் இருக்கிறது. புயல் வேக செயல்பாடு தேவையில்லை ஆனால் திட்டமிட்ட வேலையை முடிக்கும் வேகத்துடன் சென்னை மாநகராட்சி செயல்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் சென்னை மிதக்கும். மக்கள் வாழ்வு தவிக்கும்.

அ. பாக்கியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...