Pages

செவ்வாய், மே 24, 2022

எம்.ஜி.ஆரின் உண்டியல் தடையைதகர்த்து களம் கண்டவர். அ.பாக்கியம் . .

 அஞ்சலி∶ கே.என்.வெங்கடேசன்


       தாம்பரம் தோழர். கே.என். வெங்கடேசன் அவர்களின் மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல தாம்பரம் பகுதி கட்சிக்கும் பேரிழப்பாகும். இவரது மகன் தோழர் கே.வி.ராதாகிருஷ்ணன் தாம்பரம் பகுதி செயலாளர்,மாவட்டக்குழு உறுப்பினர், பீர்க்கங்கரளை பேருராட்சி துணைத்தலைவர் போன்ற பொறுப்புகளிலிருந்து பணியாற்றியவர். இவர் கடந்த ஆண்டு கொரோனாவில் இறந்தபொழுது பேரதிர்ச்சி ஏற்பட்டது. தற்போது தோழர்.வெங்கடேசன் அவரது மரணமும் தாம்பரம் பகுதி தோழர்களையும் மாவட்ட தோழர்களையும் நிலைகுலையச் செய்தது. செங்கை மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா கருகப்பட்டு கிராமத்தில் பிறந்து 7 வயதில் தாய் மரணம், 20 வயதில் தந்தை மரணம். சென்னை தியாகராஜ கல்லூரியில் BSC  படித்து முடித்து  1965 ல் DTCP (Town & Country planing ) பணியில்   சேர்ந்தார்.

        தோழர் வெங்கடேசன் அவர்களின் துணைவியார், இரு மகன்கள், மருமகள், பேரப்பிள்ளைகள் அனைவரும் கட்சியின் உறுப்பினராக மட்டுமல்ல, தாம்பரம் பகுதி கட்சியோடு இரண்டற கலந்து விட்ட குடும்பம். அவர்களது இல்லமே கட்சியில் அடையாளமாக மாறியது.

     தோழர் வெங்கடேசன் அரசு ஊழியராக இருந்தாலும் அதற்கான வரைமுறை களை எல்லாம் மீறி அடித்தட்டு மக்களோடு இணைந்து செயல்பட்டு இயக்கத் தை வளர்த்தவர்.அவர் அரசு ஊழியராக சேர்ந்த பிறகு  சென்னை தண்டையார் பேட்டையில் குடியிருந்தார். அரசு ஊழியராக இருந்தாலும் அதற்கான அகம்பாவம் எதுவும் இல்லாமல் சாலை ஓரத்தில் இருக்கக்கூடிய ரிக்சா ஓட்டக்கூடிய தொழிலாளிகளுடன் அமர்ந்து பழகக்கூடியவராக  இருந்துள் ளார். அவர்களே இவருடைய நெருங்கிய சகாக்கள் இருக்கின்ற அளவிற்கு  தன்னை அவர்களுடன் இணைத்துக் கொண்டவர்.

           அவரின் பணிகளை மூன்று அம்சங்களை ஒட்டி நினைவு கூறலாம். பணியில் நேர்மை, சங்கத்தின் துணிச்சலான செயல்பாடு, அரசு ஊழியர் என்ற எல்லையை கடந்து பொதுமக்களுக்காக் தான் வாழக்கூடிய பகுதியில் செயல்பட்டது.

           தோழர்.வெங்கடேசன் தனது சர்வேயர்பணியில் நேர்மையானவராக இருந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் கோலோட்சிய தொழில்அதிபர் உடையார் மின்உற்பத்தி நிலையம் ஆரம்பிப்பதற்காக பக்கிங்காம் கெனால் ஆக்கிரமித்து power project approval கேட்டார்.. 

       இதற்கு தோழர்.வெங்கடேசன் இணங்க மறுத்தார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. வீட்டிற்கு வந்து குடும்பத்தை அழித்துவிடுவோம் என்று மிரட்டிச் சென்றார்கள். உடையாரின் ஆட்களை பார்த்து அச்சப்படாமல் அவர் பொது நிலத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார். இன்றுவரை அந்த நிலம் பொது நிலமாகவே உள்ளது என்று அறியமுடிகிறது. ஆனால் அவருடைய நிர்ப்பந்தத்துக்கு இணங்க மறுத்ததால் அடுத்த நாள்காலை சேலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

          அரசு ஊழியர் என்ற முறையில் அரசு ஊழியர் சங்கத்தில் இருந்த பொழுது அன்றையதினம் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்து அரசு ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அரசு ஊழியர் சங்கம் தோழர் எம் ஆர் அப்பன் தலைமையில் வீறு கொண்டு எழுந்தது. முதலமைச்சர் எம்ஜிஆர் இதைக்கண்டு அச்சப்பட்டார். கோபப்பட்டார்.

              அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் உண்டியல் வசூல் செய்வது வழக்கம். அலுவலகங்களுக்கு உள்ளேயே உண்டியல் வசூல் செய்வார்கள். இது தான் இவர்கள் வளர்ச்சிக்கு காரணம் என்று கருதிய எம்ஜிஆர் உண்டியல்வசூல் செய்யக்கூடாது என்றும், உண்டியல் வசூலுக்கு வந்தால் யாரும் பணம் போட கூடாது என்றும்,  அவ்வாறு பணம் போட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வரும் என்று மிரட்டினார்.

            தோழர் வெங்கடேசன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகியாக இருந்த பொழுது இந்த தடையை எதிர்த்து துணிச்சலாக வசூலை நடத்தினார். இது மாவட்டம் முழுவதும் பரவியது எம்ஜிஆரின் தடை தகர்க்கப்பட்டது. தோழர் வெங்கடேசன் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்.

              சிவகங்கையில் இருந்தபொழுது எஸ்.ஏ.பெருமான் அவர்களை சந்தித்து மார்க்சிய அரங்கில் இணைந்தார். தோழர்.கந்தர்வன் இவரை  எஸ்.ஏ.பெருமாளிடம் அறிமுகப்படுத்தி இயக்கத்தில் இணைந்தார்.

         தோழர் கந்தர்வனும் இவரும் மாவட்ட தலைவர் செயலாளராக இருந்த பொழுது இருவர் மீதும் நடவடிக்கை வந்தது.தோழர். ரகந்தர்வன் அவர்கள் 19 மாதங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஊதியமின்றி இருந்தார். அந்த நேரத்தில் தோழர் வெங்கடேசன் அரசு ஊழியரிடம் பணம் வசூலித்தும் தனது சொந்த பணத்திலும்  மாதா மாதம் கந்தர்வன் வீட்டிற்குச் நேரடியாக சென்று அவர்கள் பணத்தை கொடுத்து வந்தார். இந்த நிகழ்வு அவருடைய சொந்த முயற்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட நிகழ்வாகும். 19 மாதங்களும் மாஇது நடைபெற்றுள்ளது.

          சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து கிளை கூட்டங்களில் கலந்து கொண்டு அடுத்தநாள் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தோழர் எஸ் ஏ பெருமாள் அவர்கள் இரவு 7 மணி ஆரம்பித்து காலை 5 மணிவரை நடைபெற்ற 25 வகுப்புகளிலும் தோழர் வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டதை நினைவு கூறினார்.

              தனது பணியில் நேர்மையாக இருப்பதுடன் அரசு ஊழியர் சங்கத்தை கட்டி வளர்த்தது மட்டுமல்ல பொது மக்களுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அரசு ஊழியர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தோழர் வெங்கடேசன் அவர்கள். 2004ல் ஓய்வு பெறும் இரண்டு நாட்கள் முன்பு அரசு ஊழியர் சங்கம் நடத்திய போராட்டதில் பலர்தடுத்தும் கலந்து கொண்டார்.

              மதுராந்தகத்தில் விவசாய சங்கத்தை அமைத்து அவர்களுடைய வாழ்வுக்கு பாடுபட்டிருக்கிறார. அமைப்பையும்  உருவாக்கி இருக்கிறார். 1980 களில் தனது சொந்த ஊரில் கடுகப்பட்டு கிராமத்தில் விவசாயிகளை திரட்டி விவசாய கூலி உயர்வு போராட்டத்தை தலித் மக்களோடு இணைந்து  நடத்தினார். அப்போதைய விவசாய சங்க மாவட்ட செயலாளர் தோழர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டார். தனது சொந்த கிராமத்தில் முதல் செங்கொடி ஊர்வலம் நடத்தினார். பெருமாள்கோவிலில் தலித் மக்களை திரட்டி கோவில் நுழைவு போராட்டம் நடத்தினார் இதனால் ஊரில்ஒதிக்கி வைக்கபட்டார்

            தாம்பரத்தில் குடியேறிய பிறகு தேவநேசன்நகர் அமைப்பதற்கும்  குடியிருப்போர் நல சங்கத்தை உருவாக்கி அந்தப் பகுதியின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கிறார்.

             தேவநேசன் நகர் பகுதியில் பாரதமாதா தெருவில் பொது இடத்தை ஆக்கிரமித்த அரசியல் பிரமுகரை எதிர்த்து போராடினார். அவரையும் அவரது மகன் ரவி நாராயணனையும் அந்த அரசியல் பிரமுகர் பெட்ரோல் நிலையத்தில் வைத்து ஆயுதங்கள் மூலமாக கொலைசெய்யும் அளவில் மிரட்டியபோதும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அந்த நிலத்தை ஆக்கிரமிக்காமல் தடுத்துவிட்டார். தற்பொழுது அந்த நிலம் பொதுப்பயன்பாட்டில் உள்ளது.

      தேவனேசன் பகுதியில் உள்ள கோயிலில் நிர்வாகிகள் முறையாக கணக்குகளை பராமரிக்காமல்  இருந்தபொழுது அவற்றில் தலையிட்டு அதை ஒழுங்கு படுத்துவதில் நல்லவர்களை நிர்வாகிகளாக மாற்றியதில் முக்கிய பங்காற்றி மக்களிடம் பெயர் பெற்றவர்.

தீக்கதிர் போடக்கூடிய தோழருக்கு மாதம்தோறும் தனது சொந்த பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்.இளைஞர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது, மற்ற தோழர்களுக்கு வாய்ப்புள்ள உதவிகளை செய்வது, தங்களது வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளிப்பது, என்று அந்த பகுதியில் கட்சித் தோழர்களின் குடும்பமாகவே தோழர் வெங்கடேசன் அவர்களின் குடும்பம் இருந்துள்ளது, இப்போதும் இருந்து வருகிறது.

              மொத்தத்தில் தோழர் வெங்கடேசன் அவர்கள் பல தோழர்களை அமைப்பாளர்களை உருவாக்கிய ஆசிரியனாக மார்க்சிய சித்தாந்தத்தில் பற்று உள்ளவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.இப்படி எண்ணற்ற தோழர்கள் அர்ப்பணிப்பு நிறைந்த தியாகங்களால் தான் இந்த இயக்கம் இன்னும் வேர்பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

அ.பாக்கியம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...