Pages

புதன், செப்டம்பர் 17, 2025

"நாம்_அறியாத_அலி முகமதலி"



பள்ளிப்பருவத்தில் இருந்தே விளையாட்டு என்றால் எனக்குக் பிடிக்காது; அதற்கான காரணம்... அதெல்லாம் நமக்கு எதற்கு? அதனால் என்ன பயன்? என்ற அறியாத பருவ மனநிலையில் இருந்து உருவானது எனலாம். விளையாட்டுகளைப் பொருத்தவரை இன்றும் அந்த மனநிலை தொடர்வது ஆச்சரியம் தரக்தக்கதாக இருக்கிறது.

அது கிரிக்கெட் முதல் அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும். இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் இந்தியா தோற்றுவிட்டால், எதோ நாட்டை அடமானம் வைத்து தோற்றமாதிரி ஒரு சித்திரம் கட்டப்படும் பாருங்க. அய்யய்யோ அது, இன்னும் விளையாட்டுகள்மீது வெறுப்பைத்தான் என்னுள் உண்டுபண்ணி இருக்கிறது.

சினிமா, டிவி வந்தப்பின் அவற்றை அதில் பார்க்கிறபோது, அது ஏற்படுத்தும் உணர்வு இருக்கிறதே... அது அதைவிட மோசம். அந்த மனநிலையை சிவகார்த்திகேயனின் "கனா" திரைப்படம் என்னுள் இருந்த வெறுப்பை கொஞ்சம் தணித்தது! அதிலும் குத்துச்சண்டையை பார்க்கும்போது முகமெல்லாம் உடைக்கப்பட்டு, ரத்தம் சிந்துவதைப் பார்த்தால், 'ச்சைய்...' என்று தோன்றும்!

அப்படித்தான் தோழர் ஏ.பாக்கியம் அவர்களின் 'நானே மகத்தானவன்' என்கிற நூலையும் "அவரென்ன குத்துச்சண்டை வீரர்; அவ்வளவுதானே. அதிலென்ன நமக்கு இருக்க போகுது; அவரது வாழ்க்கை வரலாறு இருக்கும்" என அசால்ட்டாக படிக்க துவங்கினேன்.

படித்து முடிக்கும்போதுதான் தெரிந்தது... மறைந்த மார்க்சீய நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள், 'நாம் அறியாத அம்பேத்கர்' என்ற நூலை கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அம்பேத்கரைப் பற்றிய மறுவாசிப்புக்கு, இட்டு சென்றாரோ... அதுபோல், "நாம் அறியாத அலியை... ஆம், முகமது அலியை 'நானே மகத்தானவன்' என நூலின் வாயிலாக கம்யூனிஸ்ட்களுக்கு மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக யாரெல்லாம் போராடுகிறார் களோ... அல்லது சமூக சமத்துவ விடுதலைக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ... அவர்களுக் கான மறுவாசிப்பிற்காகவும், அதையும் மார்க்சீய கோணத்தில் அரிய கொடையாக அரும்பாடுபட்டு வழங்கியிருப்பது, இந்த நூல் படித்து முடித்தப் பிறகுதான் தெரிந்தது...

ஆம், விளையாட்டையும் சமூக விடுதலைக்கான 'வெப்பனாக' (ஆயுதமாகப்) பயன்படுத்த முடியும் என்ற யதார்த்தத்தை இந்த நூல் எனக்கு புரிய வைத்தது என்றால்... அதுமிகையல்ல... எனக்கு மட்டுமா? படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை அள்ளித்தர தவறாது இந்நூல். ஆம், தமிழ்கூறும் நல்லுலகுக்கு இந்த நூல் அரிய, அறிய நல்கொடையே.

அமெரிக்கா என்றாலே... அதொரு ஏகாதிபத்திய நாடு; அதாவது உலகை சுரண்டி கொழுக்கிற நாடு; இப்படித்தான் பொதுப்புத்தியில் இருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால்... அது பணக்கார நாடு; அங்கு கக்கூஸ் கழுவும் வேலை செய்பவர்கள்கூட கோட், சூட் போட்டுக்கொண்டு, டை கட்டிக்கொண்டு, காரில்தான் வந்து இறங்கி, வேலை செய்துவிட்டு, திருப்பி காரில்தான் செல்வார்கள் என்று இந்தியா போன்ற நாடுகளில் பொதுபுத்தியில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

சாதி கிடையாது; மதம் கிடையாது; இன ஒதுக்கல் கிடையாது; பாலினம் பாகுபாடு கிடையாது; இருந்தால் அமெரிக்கா மாதிரி இருக்கணும்; வாழ்ந்தால் அமெரிக்காவில் வாழணும் என்று இன்றும் டமாரம் அடிப்போர் உண்டு. ஆனால், அமெரிக்கா என்பது நிறவெறி, போர்வெறி, மதவெறி, பணவெறி என அத்தனை வெறிகளையும் கொண்ட நாடு என்பதை இந்த நூலில் அட்டகாசமாக முகமதுஅலி வாழ்க்கை ஊடே துள்ளல் நடையில் தூரிகையால் எழுதி உள்ளார் தோழர் பாக்கியம்.

இந்தியாவில் இந்துத்துவா சனாதன கோட்பாட்டை எப்படி தமது அறிவுகூர்மையால் அடித்து நொறுக்கி, அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார்

 அதுபோல் அமெரிக்காவில் அங்கிருந்த அன்றைய ஆளும் வர்க்கத்திற்கு நிறவெறி வாயிலாக உருவாக்கப்பட்ட, இன ஒதுக்கலை ஒழிக்க குத்துச்சண்டையை கேசியஸ் கிளே என்ற இயற்பெயர் கொண்ட முகமது அலி... களமாக கொண்டு களமாடி இஸ்லாத்தை இளமையிலேயே தழுவிட்டார்.

தமது 39 வயதிலேயே குத்துச்சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற உலக நாடுகள் எல்லாம் சென்று, எவ்விதம் தமது வாழ்க்கையை, கருப்பின மக்கள் விடுதலைக்கு அர்ப்பனித்துக் கொண்டார் என்பதை அணுஅணுவாக நுணுகி மிக நுட்பமாக படைத்துள்ளார் இந்நூலை பாக்கியம் அவர்கள். அதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலுக்குள் ஒன்றிரண்டு நுகர்வோமா... "குத்துச்சண்டை அரங்கில், வளையத்தில், வெள்ளை நிறவெறி வீரர்களின் முகத்தின்மீது விழும் ஒவ்வொரு 'பஞ்ச்'சும் (Punch), நிறவெறிக்கு எதிராக கருப்பின மக்கள் வெளிப்படையாக தங்கள் வலிமையும், மேன்மையும் காட்டுவதற்குக் குத்துச்சண்டை ஒரு களமாக அமைந்தது" (76-2).

என்றாலும் முகமதலிக்கு, "குத்துச்சண்டையைவிட இனவெறிக்கு எதிர்வினை ஆற்றக்கூடியது இஸ்லாம் மதம்தான்" (87-3) என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்; அதையே தழுவினார்.

ஆனால், வீட்டுக்கு ஒருவர் சோசலிச வியட்நாம்மீது அமெரிக்க படையெடுப்புக்கு ஆள்களை சேர்த்தபோது அதை ஏற்க மறுத்தார். "வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. ஆனால், நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன்" (104-3) உறுதியாக இருந்தார்.

அதனால் அமெரிக்க அரசால் தரப்பட்ட நெருக்கடிகள் ஏராளம். அதை இன்முகத்துடனே எதிர்கொண்டார். ஒருபோதும் சமரசத்திற்குப் போகவில்லை. மேலும், அதற்கு எவ்விதம் பதிலடி கொடுத்தார் பாருங்கள்... "வியட்நாமியர்களோ, சீனர்களோ, ஜப்பானியர்களோ எனது எதிரிகள் அல்ல; எனது எதிரிகள் வெள்ளைநிற வெறியர்கள். எனது நாட்டில் என்னுடன் நிற்காத நீங்கள், நான் எங்காவது சென்று சண்டையிட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறீர்கள்" (104-4).

அன்றைய சூழலை அந்நாட்டின் பிரபல பத்திரிக்கை ஒன்று விவரிக்கிறது... "போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தங்கள் உயிரை நிச்சயம் இழப்போம் என்று தெரியாது; ஆனால், முகமது அலியோ புகழ் பறிப்பு, பண இழப்பு, சிறைக்குச் செல்வது உறுதி என்பன தெரிந்தும், அதை செய்தார் என்றால், அது தியாகத்தின் மற்றொரு நிலை" (111-1).

குத்துச்சண்டையைப்பற்றி பிற்காலத்தில் அவரே சிலாகிப்பதைப்பாருங்கள். என்றாலும் அவர் அடித்தால் அந்த அடி இடிபோல் இறங்குமாம். ஆம், அதைப்பற்றி நூலாசிரியர் கூறுகிறார்...

"தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியப்பிறகு, 1974ஆம் ஆண்டில் அவர், குத்துச்சண்டைக் களத்தில், வேகத்தைக் குறைத்து, ரோப்-ஏ-டோப் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதற்குமுன் முகம்மது அலியின் குத்துக்கள் தோராயமாக 1000 பவுண்டு சக்தி கொண்டது" (118-1).

ஒரு கட்டத்தில் சீனாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது, தமது குத்துச்சண்டை விளையாட்டு பழைய வீடியோ ஒன்றைப் பார்க்க கூறியபோது, அலி சொல்கிறார்..."அந்த நரகத்திற்குள் மீண்டும் நான் செல்ல விரும்பவில்லை" (147-1).

எளியோருக்கு கொடை வழங்குவதில் அவர் வள்ளல்தான். ஆனாலும் அதை எவ்வளவு தன்னடக்கமாக சொல்கிறார்..."ஒரு பிரச்சனை இருப்பதாக என்னிடம் கூறப்பட்டால் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்" (172-2).

முகமது அலி அமெரிக்க கம்யூனிஸ்ட்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார். ஆனாலும், வர்க்க அடிப்படையில் மக்களைத் திரட்டுவதில் கம்யூனிஸ்ட்களோடு இணைந்து செயலாற்றுவதில் அவரின் ரோல் என்ன? என்பது வெற்றிடமாகத்தான் இருக்கிறது. இக்காலத்தில் கம்யூனிஸ்ட்களின் பணிகளைத் தனி அத்தியாயமாக தரப்பட்டிருப்பது சிறப்பு என்றாலும் அது நூலோடு ஒட்டவில்லை!

இங்கே மதம் மாறுவதால் சமூகம் சமநிலை அடையும் என்று அண்ணல் அம்பேத்கர் நினைத்தைப்போல, அங்கே அலியும் நினைத்துவிட்டார் போலும்!

எது எப்படியோ... கறுப்பின மக்களின் விடிவெள்ளியான முகமது அலி... உலக வரலாற்று பக்கங்களில் அழிக்கமுடியாத முத்திரைப் பதித்துள்ளார் என்பதை இந்த நூல் நன்கு படம் பிடித்து காட்டி உள்ளது எனலாம்.

நூலைப்பற்றியும், நூலாசிரியரைப் பற்றியும் அணிந்துரை எழுதிய புலவர் பா.வீரமணி வார்த்தைகளோடு நிறைவு செய்கிறேன்... "இப்படி எல்லோராலும் எழுதிவிட முடியாது. அரசியல் வித்தகம் வாய்ந்தவர்களால்தான் இப்படி எழுத முடியும். அந்த வித்தகம் வாய்ந்தவர்தான் தோழர் பாக்கியம். அந்த வித்தகத்தை நூலில் காணலாம். மொத்தத்தில் இந்த நூல் கருத்து களஞ்சியம்".

நூல் வடிவமைப்பு வாசிப்பைத் தடையின்றி கொண்டு செல்கிறது. அட்டைபடம் முதல் அச்சாக்கம் வரை அனைத்தும் அருமை! வெளியீட்டகத்திற்கு ஆயிரம் நன்றிகள்!

தான் வாழும் சமூகம் சமத்துவமடைய வேண்டுமென களமாடுவோர்கள் மட்டுமல்ல, சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டு அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்தான் "நானே மகத்தானவன்!"

தாரைப்பிதா... 16.09.2025.

'பஞ்ச்'சால் பதில் சொல்லியவன்

 

கடந்த வாரம் தோழர் Bakkiam  அவர்களை நாமக்கல் கட்சி அலுவலகத்தில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.

தோழர் பழகுவதற்கு இனிமையானவர் வேறு என்ன கம்யூனிஸ்ட்களின் பண்புகளை குறித்து சொல்லவா வேண்டும்.

உரையாடலூடனான தோழரின் வார்த்தைகள் இளைஞர்களை அரசியல் படுத்த வேண்டும், வாசிக்க வைக்க வேண்டும் என்ற கனவுகளை தாங்கியே இருந்தன.

முகமது அலியின் வாழ்க்கையை சமூக நடவடிக்கைகளை குறித்தான புத்தகம் மேலும் தோழர் பாக்கியம் அவர்கள் முகமது அலியின் வாழ்க்கை வரலாற்றை எழுதாமல் உலக வரலாற்றில் இருந்து முகமது அலியின் வாழ்க்கையை எழுதிவுள்ளார்.

ஒரு இடதுசாரி தன்னுடைய படைப்புக்கு எப்படி இதுபோன்ற தலைப்பை தேர்வு செய்தார் என்று கூட சிலர் கேட்ககூடும்.

தலைப்பு தோழரின் சிந்தனையில் உதித்தது அல்ல

ஆயிரம் ஆண்டுகளாக நிறத்தை வைத்து சுரண்டப்பட்ட மக்களின்

எல்லாவற்றிலும் புறக்கணிப்பை மட்டுமே பார்த்த சமூகத்தின்

கேவலமானவன் அசிங்கமானவர்கள் பலவீனமானவர்கள் என்பவர் களின் பிரதிநிதியாக

வெள்ளை நிறவெறியர்களுக்கு பாக்ஸிங் ரிங்யில் தனது 'பஞ்ச்'சால் பதில் சொல்லி கர்ஜித்த அலியின் வார்த்தைகளே #நானே_மகத்தானவன்

முகமது அலி அமெரிக்க போர் கைதிகளை மீட்டு வருவது போன்ற அதீத செயல்பாடாக உடையவராக

தன்னை எளிதில் வெல்ல முடியாது என்ற அதீத தன்னம்பிக்கை என அனைத்தும் தானாக உருவானது அல்ல ஒடுக்கப்பட்ட  கறுப்பின மக்களின் ஓராயிரம் ஆண்டு கோபம் தான் அலியின் செயல்பாடு

தன்னுடைய வாழ்க்கை புகழ் எதை இழந்தாலும் கருப்பின மக்களின் விடுதலையில் சமரசம் செய்துகொள்ளாத விளையாட்டு வீரன்

வெள்ளை நிறவெறி எதிர்பாளராக மட்டுமே அறிமுகமான முகமது அலியை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக கட்டமைப்பது தான் புத்தகத்தின் ரகசியம்.

கேசியஸ் கிளே முகமது அலியாக பரிணாமம் அடைந்தது. முகமது அலியின் சோவியத், சீனா, இந்தியா, சோசலிச கியூபா பயணம் ஆகியவை ஆசிரியரின் தேடலை வாசகர்களுக்கு கடத்துக்கிறது.

நிற வெறிக்கு எதிராக அமெரிக்க கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளை குறிப்பாக வெள்ளை நிறைவெறிக்கு எதிராக கறுப்பின மக்களை மட்டும் ஒருங்கிணைக்காமல் வெள்ளைநிற மக்களையும் களத்தில் போராட வைத்தது தான் கம்யூனிஸ்ட்களின் வரலாறு என்ற பதிவு.இந்தியாவில் சாதிய சுரண்டல்களுக்கு எதிராக அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து போராடுகின்ற இந்திய  கம்யூனிஸ்ட்கள் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியும்.

புத்தகத்தில் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு களம் அமைத்தது கம்யூனிஸ்ட்கள் என்று படித்த பொழுது  இந்தியாவில் இயங்ககூடிய தலித் மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராட கூடிய இயக்கங்ளுக்கு களத்தை தயார் செய்தது கம்யூனிஸ்ட்கள் தான் " என்பதை பொருத்திப் பார்க்க முடிந்தது

இறுதியாக, தோழன் #மரடோனா மூலம்

" Football " பிடித்த விளையாட்டாக மாறியது அந்த பட்டியலில் குத்து சண்டையும் இணைந்தது தோழன் #முகமது_அலியால் ....

அரிய-அறிய வேண்டிய வரலாற்று பதிவுகள் இவை.


"நானே  மகத்தானவன்" 🥊


தோழர் அ. பாக்கியத்திற்கு நன்றிகள் வாழ்த்துக்கள் .

மெனக்கெடல் என்று சொல்லுவார்கள் - நிறைய விஷயங்களை தேடி தேடி மெனக்கிட்டு நல்ல முயற்சியை மேற்கொண்டு இந்த புதையலை  எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றிகள்.

ஆரம்பமே அமர்க்களம் .

நானே மகத்தானவன்-  மட்டுமல்ல தனித்துவமான பன்முகம் கொண்ட உயர்ந்த களப்போராளி குத்துச்சண்டையின் நிகரற்ற மாவீரன். நிறவெறிக்கு எதிராக ஆங்காரமாக குரல் எழுப்பியவன் முகமது அலி.

அமெரிக்காவின் முதல் குடிமக்களான செவ்விந்தியர்களை அழித்து ஒழித்திடவும். தங்களை வளப்படுத்திக் கொள்ளவும் கருப்பின மக்களை அடிமைகளாக்கி மிருகங்களிலும் கீழாக நடத்திய அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய வீரன் அவன்.

வீர வியட்நாம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து- எந்த விளைவுகள் ஏற்பட்ட போதிலும்,  குத்துச்சண்டை விளையாட்டிற்கு தடை போட்ட போதிலும் போர்வெறிக்கு அடிபணிய மாட்டேன் என்று சமர்ப்புரிந்த மாவீரன் அவன்.

பல நேரங்களில்  உயிருக்கு ஆபத்தான பயணங்களிலும் அரசியல் பினைக்கைதிகளை  மீட்டெடுப்பது எளிய மக்களுக்கு மருத்துவ உதவி நிதி அளிப்பது என பல நல்ல காரியங்களை செய்த கருணை நிறைந்தவன்.

கியூபா மக்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்த போதும் அமெரிக்காவுக்கு எதிராக கியூபா மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பொருளாதார உதவிகளை செய்த மகத்தானவன்.

நிறவெறி அமெரிக்காவில் இன்றும் தலை விரித்தாடும் சூழ்நிலையில் பல்வேறு படுபாதக கொடுமைகள் நடந்தன   1955 ஆம் ஆண்டு வாக்கில் எம்மெட்  என்ற 14 வயது கருப்பின சிறுவன் கரோலின் என்ற 21 வயது வெள்ளை நிற பெண்ணுடன் பேசுகிறான் இருவரும் சிரித்து பேசி அரட்டை அடிப்பதை பொறுக்க முடியாத நிறவெறியர்கள் அந்த சிறுவனின் வீட்டுக்குள் புகுந்து   அடித்து சித்திரவதை செய்து துப்பாக்கியில் சுட்டு ஆற்றில் வீசி விட்டார்கள்.

 சிறுவனின் தாய் அந்த கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து தொடர்ந்து போராடுகிறாள். விசாரணை முடிவில் அந்த கொடூர குற்றவாளி குற்றமற்றவன் என்று நீதிமன்றம் அநீதியாக அறிவிக்கிறது. மக்கள் தொடர்ந்து கொந்தளித்து போராடுகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டில் அவன் உடல் சிதைக்கப்பட்ட இடத்திலும் மற்ற எட்டு இடங்களிலும்  நினைவுச்சின்னம் உருவாக்கினார்கள். வெள்ளை நிற வெறியர்கள் அந்த நினைவுச் சின்னங்களை உடைத்து நொறுக்கினார்கள். அதற்கு எதிராக கருப்பின மக்கள் மீண்டும் நினைவுச் சின்னத்தை எழுப்பினார்கள் அவர்கள் மீண்டும் உடைத்தார்கள் மீண்டும் மீண்டும் நினைவுச் சின்னங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள்.

 இறுதியில் 230 கிலோ எடை இரும்பை கொண்டு நினைவு சின்னத்தை பலமாக உருவாக்கினார்கள். இது ஒரு நினைவுச் சின்னத்தின் அடையாளம் மட்டுமல்ல நிறவெறியர்களுக்கு எதிராக  கருப்பின மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தினார்கள் இந்த நிகழ்வு நமக்கு பல நினைவுகளையும் கதைகளையும் உணர்த்தும் அடையாள சின்னமாகும்.

குத்துச்சண்டையில் பல சாம்பியன்களையும் மண்டியிட வைத்தவன். போர்வெறிக்கு காரணமான அமெரிக்க  ஏகாதிபத்திய வெறியையும் மண்டியிட வைத்தவன்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்ட் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக எந்த அபாயகரமான காரியங்களையும் சூழ்ச்சிகளையும் செய்யும் அத்தகைய அமெரிக்க நாட்டில்  கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக - எத்தகைய வன்மங்கள் சூழ்ச்சிகள் தடைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வீர நடை போடுகிறது. இந்த வரலாற்றை சுருக்கமாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

"நானே மகத்தானவன்" என்ற  நூல் மூலம் ஒவ்வொரு மனிதனும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் மூலமாக  நாமும் மகத்தானவர்களாக மாற முடியும் என்கிற மனநிலையை ஏற்படுத்துகிறது.

எழுத்தாளரின் எழுத்துக்கள் முகமது அலியுடன் நாமும் சேர்ந்து பயணித்த உணர்வை அளிக்கிறது. உங்களின் எழுத்துக்களின் பயணம் மீண்டும் மீண்டும் பயணப்பட வேண்டும்.

உங்கள் எழுத்துக்களையும் தாண்டி சிறந்த மனிதாபிமானமிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஊழியன் என்பதை நானும் நிறைய நண்பர்களும் தோழர்களும் அறிவார்கள்.

 அனைவரும்  வாங்கி படித்து அறிய வேண்டிய பொக்கிஷத்தின் அனுபவத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

13.09.2025

நிற வெறி,இன வெறி மத வெறி சக்திகளுக்கு எதிராக

 

நிற வெறி,இன வெறி மத வெறி சக்திகளுக்கு எதிராக

நாம் களமாட பல அனுபவங்களை

நிச்சயமாக இந்த நூல் தருகிறது...

                                 


ஏஜி.கண்ணன்

 

தோழர்.AB அவர்களுக்கு வணக்கம்...

நானே மகத்தானவன் என்ற புத்தகம் தோழர்.கோபால் நேற்று முன்தினம் கொடுத்தார்...

வாங்கும் போது குத்து சண்டை வீரர் பற்றி புத்தகம்.. அது பற்றி தான் இருக்கும் என்று நினைத்தேன்..

அணிந்துரை வழங்கிய புலவர் வீரமணி அவர்களும் தமிழக குத்து சண்டை உலகிற்கு அரிய பங்களிப்பு செய்யும் நூல் என்று குறிப்பிட்டார்..

அதே சிந்தனை உடன் படிக்க துவங்கினேன்..

14 வயது சிறுவன் எம்மேட்டில் படுகொலை, இறுதி ஊர்வலம்,வழக்கு, தீர்ப்பு விவரங்கள்...

நகர பேருந்தில் நிற வெறி செயல்,ரோச பார்க்ஸ் கைது,அலபாமா நகர கருப்பு இன மக்கள்-381 நாள்,40,000 மக்கள் பேருந்து புறகணிப்பு போராட்டம் உணர்வு பூர்வமாக படிக்க தூண்டியது..

காசியஸ் கிளே முகமது அலி யாக மாறும் வரலாறு, வியட்நாம் போரில் ஈடுபட மாட்டேன் என்று அறிவிப்பு..சிறை தண்டனை குத்து சண்டை போட்டியில் பங்கேற்க தடை.. பதக்கங்கள் பறிப்பு..

மேல் முறையீடு..

நிற வெறி எதிராக தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகள்... ஏராளமான செய்திகள்...

அதிலும் குறிப்பாக அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலையீடூகள், போராட்டங்கள், வழக்குகள் தண்டனை...

 கம்யூனிஸ்டு கட்சியின் வளர்ச்சி...மலைக்க வைக்கிறது...

தெளிவான உரை நடை.. சோர்வின்றி கோர்வையாக படிக்க தூண்டியது... பக்கங்கள் வேகமாக கடந்தது...

ஆனால் இதற்கான தங்களின் உழைப்பு நிச்சயமாக அதிகம்... கோர்வையாக ஆண்டுகள் பெயர்கள் சம்பவங்கள் வந்தது சிறப்பு...

தங்களின் கடுமையான உழைப்பு வீண் போகவில்லை.. சிறந்த நூல்..நிற வெறி,இன வெறி மத வெறி சக்திகளுக்கு எதிராக நாம் களமாட பல அனுபவங்களை நிச்சயமாக இந்த நூல் தருகிறது... குறிப்பாக இளம் தோழர்கள் இடம் சேர வேண்டிய புத்தகம்... மிகவும் மகிழ்ச்சி

 தோழர்...

தோழமையுடன்..

ஏஜி.கண்ணன்

திருவள்ளூர்..

சிபிஐஎம் டைரி இளம் கம்யூனிஸ்டுகளின் கையேடு


அ .பாக்கியம்.

எழுத்துக்களில் வரலாற்றை பதிவு செய்வதை விட படங்களின் இடையே எழுத்துக்களை பதிவு செய்து வரலாற்றை முன்னிறுத்தி உள்ளது இந்த புத்தகம். 100 பக்கத்தையும் வண்ணத்தில் அச்சடித்திருப்பது படங்களின் மூலம் சொல்ல வந்த கருத்துக்களை கச்சிதமாக வெளிப்படுத்துகிறது. இளம் கம்யூனிஸ்டுகளின் கையேடு என்பதற்கான அடிப்படை இதில் உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்களின் துவக்கம்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்கள்,

பெஷாவர் சதி வழக்கு துவங்கி மீரட் சதி வழக்கு வரை அறிய படங்களை உரிய முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்சிகளை ஆரம்பித்த தலைவர்களின் படமும், கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் பயணம் என்ற தலைப்பில் போராட்டத் தளபதிகளையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடுகளை பம்பாய் டு மதுரை என்று படச்சுருள் போல் பதிப்பித்து இருக்கிறார்கள்.

உலக வரலாற்றில் தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்த கேரளத்தின் முதல் மந்திரி சபை,

தலைவர்களின் சிறை வாழ்க்கையில் வருடங்களை கூட்டினால் ஆயிரம் ஆண்டுகளை கடந்து செல்கிறது.

தமிழக கம்யூனிஸ்டுகளின் தியாகத்தைப் பற்றியும்

கட்சி பத்திரிகையின் அவசியம் பற்றியும்

மார்க் கட்சியை உருவாக்கிய தலைவர்கள் மற்றும் கட்சி கட்டமைப்பு என்று பல தலைப்புகளில் கட்டுரைகளாக எழுதப்பட வேண்டியவைகளை படங்களாக முன்வைத்து சில வரிகளில்  விளக்கப்பட்டுள்ளது.

லியூ சோசியின் உள்கட்சி போராட்டம், ஜோசப் ஸ்டாலின் கருத்துக்கள், கம்யூனிஸ்ட் அகிலம், காரல் மார்க்ஸின் வறுமை நிற சிவப்பு என்ற கட்டுரை, பகசிங்கு பற்றிய கட்டுரை, சார்லஸ் டார்வின் பற்றிய அறிமுகம் என்று சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது. நிறைவாக தோழர். லெனின் செயல்படுத்திய என்ன செய்ய வேண்டும் என்ற புத்தகத்தின் வரிகள் இந்த நூலை நிறைவு செய்கிறது.

நூறு பக்கங்களில் நீண்ட வரலாற்றின் பல பகுதிகளை எளிய முறையில் அறிந்து கொள்வதற்கு அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய நூலாகும். கோவை தோழர்.R.ஹரிஹரனின் ஆக்கமும், தண்டபாணி அவர்களின் வடிவமைப்பிலும் ஓவியா பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான புத்தகங்களில் இருந்து ஒரு மாறுபட்ட முறையில் எடுக்கப்பட்ட முயற்சி சிறப்பாக அமைந்துள்ளது.

புத்தகத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் வருகிற படங்களை தவிர்த்து இருந்தால்  சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.

அ .பாக்கியம்.

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...