காலம்
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடந்து போய்விட்டது. இணையர் டி.ஏ.லதாவுடனான நிறைவான
திருமண வாழ்வு 36 ஆண்டுகளை 36
மாதங்கள் போல் கடந்து 37 ஆம் ஆண்டில் குதூகலத்துடன்
அடி எடுத்து வைத்துள்ளது. 1989ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி எங்கள் இருவரின் திருமணம் நடந்தது. சொர்க்கத்திலோ, சர்ச்சிலோ
நிச்சயிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியால் நிச்சயிக்கப்பட்டது. கட்சிக்குள்
நான் காலடி எடுத்து வைத்து 46 ஆண்டுகள் ஆகின்றன. 36 ஆண்டுகள் கட்சி
வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் இணைந்தே நாங்கள் நடத்தி இருக்கிறோம்.
1978ல்
நான் மார்க்சிஸ்ட் கட்சியில் பரீட்சார்த்த உறுப்பினரானேன் (Candidate Member).
அப்போது ஆதரவாளர் குழு என்றெல்லாம் இல்லை.
1979இல் கட்சி உறுப்பினராகி 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போது செய்து வந்த அரசுப் பணியை விடுத்து
மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக ஆனேன். தற்போது ஆறு தொகுதி குழுக்களாக
இருக்கக்கூடிய மேற்கு சென்னை பகுதி குழுவிற்கு தோழர் கே. கிருஷ்ணன் செயலாளராக
இருந்தார். நான் அந்த பகுதிக் குழுவிற்கான முழுநேர ஊழியனாக சென்னை பெரம்பூர்
குக்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றத் தொடங்கினேன். மார்க்சிஸ்ட்
கட்சியின் ஒன்றுபட்ட சென்னை மாவட்டக்குழு
அலுவலகமும் (ஏ.பி.நினைவகம்) அதுதான்.
1985 ஆம் ஆண்டு எனது இணையர் டி.ஏ. லதா அதே அலுவலகத்தில் இருந்த சிஐடியு மாவட்ட குழுவிற்கு அலுவலகப்
பணிக்காக வந்தார். தோழர் வி.பி. சிந்தன்தான் லதாவை அலுவலகப் பணிக்காக அழைத்து
வந்தார். மார்க்சிஸ்ட் கட்சியில் எனக்கு
பிடித்த தலைவர்களில் தோழர் வி.பி.சிந்தனும் ஒருவர். அவரே எனக்கு பிடித்தமான
பெண்ணையும் அழைத்து வந்திருக்கிறார் என்று லதாவுடன் காதல் வயப்பட்ட பொழுதில் நான்
நினைத்திருக்கிறேன்.
பொதுவாகவே
காதல் வயப்பட்டால் எந்த அறிவுரையும் காதில் ஏறாது. தடைகளை தாண்டுவதும்,
முட்டுக்கட்டைகளை முட்டித் தள்ளுவதும் காதலில்தான் காரிய சாத்தியம். எதிர்ப்புகளை தகர்க்கும் சக்தி காதலுக்கு
மட்டுமே உண்டு. இதற்கு செல்வ செழிப்போ, உடல் பலமோ, படை பலமோ தேவை இல்லை. உண்மைக்
காதல் என்ற சக்தி ஒன்றே போதும். எங்கள்
காதலிலும் அதுதான் நடந்தது. மதம் வேறு, சாதி வேறு, உணவு முறைகள் வேறு, வாழ்விடம் அமைந்த
சூழல் வேறு என்று வேறு வேறாக இருந்தாலும் எங்கள் மனம் ஒன்றாக இருந்தது. காதலை வாழ
வைப்போம் என்ற உன்னதமான உணர்வு இதற்கெல்லாம் வேராக இருந்தது. இனிப்புக் கடலையுடன்
எங்கள் மாலைப் பொழுதுகள் இனிதே கழிந்தது.
இந்திய
ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) மாநில செயலாளராக அப்போது தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் இருந்தார்.
நான் ஒன்றுபட்ட சென்னை மாவட்டக்குழு வாலிபர் சங்க மாவட்ட தலைவராக செயல்பட்டேன். பொதுவாக
திருமணமாகாத முழுநேர ஊழியர்களுக்கு மூத்த தோழர்கள் ‘அலயன்ஸ்’ பார்ப்பது வழக்கம்.
எனக்கும் அப்படி பெண் பார்க்கும் படலத்தை தோழர் அகத்தியலிங்கம் நடத்திக் கொண்டே
இருந்தார். நான் பிடிகொடுக்காமல் மறுத்துக் கொண்டே இருந்தேன். நானும் லதாவும்
காதல் வயப்பட்டதால், அவர் திருமணம் பற்றிய பேச்சை எடுக்கும்போதெல்லாம் கழுவிய
மீனில் நழுவிய மீனாக இருந்தேன். அவரே விடாக்கண்டனாக இருந்தார். நானோ கொடாக்கண்டனாக
இருந்தேன். ஒரு கட்டத்தில் அவரிடம் எங்கள் காதலை போட்டுடைத்து விட்டேன். நீயா
என்று வியப்பாக பார்த்தவருக்கு என் காதல் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. என் திருமணத்திற்கு சம்மதம் பெற லதாகுடும்பத்தில் பேசுவதற்கு உதவினார்.
லதா
மடிப்பாக்கத்தில் குடியிருந்தார். நான் வியாசர்பாடி சாஸ்திரி நகரில் குடிசைப்
பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தேன். எனது குடும்பம் மிக மிகப் பெரியது. தலைக்கட்டு
என்று உட்கார வேண்டும் என்றால் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடிக்க வேண்டும். நான்
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை கடைபிடிக்க கூடிய குடும்பத்தை சேர்ந்தவன்.
எங்கள் குடும்பம் குடியிருந்த சாஸ்திரி நகரில் 90 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 75 சதவீதத்தினர் எனது உறவினர்களாக இருந்தார்கள். இதில், உறவினர்கள் பலர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் இருந்தார்கள்.
கிறிஸ்தவ
மதத்தின் கடிவாளம், பிடிமானம் அனைவருக்கும் தெரிந்ததுதான். கருவில் இருந்து கல்லறை
வரை மத சடங்குகளையும் வாழ்க்கை முறைகளையும் இணைத்து இருப்பார்கள். குழந்தைக்கு
பெயர் வைத்து ஞானஸ்நானம் கொடுப்பது, பைபிள் அடிப்படை
போதனைகள் கற்றப்பிறகு புது நன்மை கொடுத்து முழு கிறிஸ்துவனாக
மாற்றுவது, திருமணம், இறப்பு, கல்லறை என தொடக்கத்தில்
இருந்து இறுதி வரை எல்லாவற்றிலும் ஒரு இணைப்பு இருக்கும். சர்ச் வரி, கல்லறைக்கான
வரி என வசூலிப்பார்கள். இந்த சங்கிலி பிணைப்பை அந்த சபையில் இருக்கும்
கிறிஸ்தவர்கள் யாரும் மீறமுடியாது. அதாவது ஒப்புதலுடன் கூடிய கட்டுப்பாடுகள். இதில் என் குடும்பத்தை சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்ல.
கட்சி
சார்பில்தான் காதல் திருமணம். சர்ச் சார்பில் இல்லை என்பதில் நான் உறுதியாக
இருந்தேன். அதிலும் என் இரண்டு தங்கைகளுக்கு திருமணம் செய்துவிட்டு அதன்பிறகுதான்
நான் திருமணம் செய்து கொள்வது என்று இருந்தேன். காரணம் நான் சர்ச்சை விட்டு
வெளியில் திருமணம் செய்தால் கண்டிப்பாக எனது தங்கைகளுக்கு சர்ச்சில் திருமணம்
செய்ய மறுத்து விடுவார்கள். அது அன்றைக்கு இருந்த எழுதப்படாத சட்டம். இன்று நிலைமை
மாறி இருக்கிறது.
கட்சியின்
மூத்த தோழர்கள் பலரும் என் திருமணத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்தனர். அப்போது
மாவட்ட செயலாளராக இருந்த தோழர்.வி.எம்.எஸ்.(வி.மீனாட்சி சுந்தரம்),
தோழர்களுடன் கலந்து பேசி கல்யாண தேதி குறித்து ஒரு முடிவு எடுங்கள் என்று என்னிடம்
ஆலோசனை கூறினார். அதன்படி, சென்னை
புரசைவாக்கத்தில் உள்ள ஒரு டீக்கடை-ஓட்டலில் தோழர்கள் டபிள்யூ.ஆர்.வரதராஜன், சு.பொ.அகத்தியலிங்கம், கே.கிருஷ்ணன்,
கேஎன்ஜி என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும் கே. என். கோபாலகிருஷ்ணன், லதாவின்
அண்ணன் டி.ஏ.விஸ்வநாதன் ஆகியோரோடு நானும்
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, தலைவர்கள் கிடைக்கக்கூடிய தேதியில்
எங்கள் திருமணத்தை நடத்துவது, குறிப்பாக தோழர் ஏ.நல்லசிவன் கிடைத்தால் அவர்
தலைமையில் திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம். இப்படியாக தேநீர் கடையில்
திருமணதேதி நிச்சயிக்கப்பட்டது. இந்த தகவலை தோழர் விஎம்எஸ்சிடமும் கூறினேன். அவரும்
ஏ.நல்லசிவனை ஃபிக்ஸ் செய்யும் ஏற்பாட்டை செய்தார். திருமணத்தை பாரிமுனையில் உள்ள
கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான மண்டபத்தில் நடத்துவது என்று பேசி முடித்தோம். அதே
நேரத்தில் 1989ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல்
அறிவிக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் தோழர் டபிள்யூ. ஆர். வரதராஜன் கட்சி வேட்பாளராக
நிறுத்தப்பட்டார். வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு பகுதி (அதாவது இன்றைய வில்லிவாக்கம் தொகுதி)
மேற்கு சென்னையில் வருவதால் நான் முழுமையாக தேர்தல் பணியாற்ற சென்றுவிட்டேன்.
தேர்தல் நடந்தது ஜனவரி 21. எனது திருமணம் நடந்தது ஜனவரி 30.
இதுஒரு
புறமிருக்க எனது திருமணத்திற்காக கட்சியின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு
(போஸ்ட் கார்டு சைஸ்) தோழர்களிடம் கொடுக்கப்பட்டது. அச்சிட்ட பிறகுதான்
அழைப்பிதழையே நான் பார்த்தேன் என்ற தகவல் உங்களுக்கு வியப்பூட்டலாம். கட்சியின் வழக்கமான வினியோக முறையில்
அழைப்பிதழ் வினியோகிக்கப் பட்டது. நான் குடியிருக்கும் சாஸ்திரி
நகரில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரை இருக்கும். எல்லா குடும்பங்களுக்கும்
அழைப்பிதழ் கொடுப்பது என்ற முறையில் என் சகோதரர், மைத்துனர் மற்றும் கட்சித்
தோழர்கள் சிலர் சேர்ந்து திருமண அழைப்பிதழை கொடுத்து முடித்தார்கள். நான், தேர்தல்
பணி செய்த வில்லிவாக்கம் பகுதியில் மட்டும் அழைப்பிதழ்களை கொடுத்தேன்.
சர்ச்சுக்கு
வெளியே எங்கள் ஊரில் திருமணம் நடந்ததே இல்லை.அப்படி நடந்தால்
யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அங்கு நமது இயக்கம் உருவான பிறகு
எங்களைப் போன்றவர்களை இயக்கத்தில் சேர்த்த தோழர் லூர்து அவர்களின் திருமணம் அவரது வீட்டில் பந்தல் போட்டு நடைபெற்றது. அதன் பிறகு எனது
திருமணம்தான் ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து சர்ச்சுக்கு வெளியில் நடைபெற்றது.
என்
திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவுடன்
எங்கள் பங்கு சாமியாருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்து விட்டது. அழைப்பிதழ்
கொடுக்கும் பொழுதே வைதீக கிறிஸ்தவர்கள் பலரும் கேள்விக்கணைகளால்
துளைத்தெடுத்திருக்கிறார்கள். எனது உறவினர்களுக்குகூட இந்த திருமணத்தை சர்ச்சிற்கு வெளியே நடத்துவதில் முழுமையான உடன்பாடு
இல்லை. ஆனாலும் எனது முடிவுக்கு அனைவரும்
ஒத்துழைத்தார்கள். கட்சியிலிருந்த கணிசமான தோழர்கள் உறவினர்களாகவும் இருந்தார்கள்
என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த நேரத்தில் எனது தாயின் முடிவு உறவினர்கள் அனைவரையும்
ஒன்றிணைத்தது. அவர் பெயர் ஜெபமாலை மேரி. கையில் எப்போதும் ஜெபமாலையை உருட்டிக்
கொண்டே இருப்பார். கைகளுக்கு வேறு பணி இருக்கும்போது ஜெபமாலை அவர் கழுத்தில்
தொங்கும். கழுத்தையும் கையையும் தவிர அந்த
ஜெபமாலை எப்பொழுதும் அவரை விட்டு அகன்றதே இல்லை. அவரது பெயரை போலவே இறுதிவரை
அவருடனே இருந்தது. இறைபக்தி மிக்கவர் அவர்.
கிறிஸ்துவ
மத அடிப்படையில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் தேவாலயத்திற்கு சென்று ஓலை எழுதி
அதாவது ஒப்பந்தம் செய்து அவற்றை மூன்று வாரங்கள் தொடர்ந்து வாசிப்பார்கள். அப்போது
மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். இந்த நடைமுறை இன்றுவரை அமலில் உள்ளது. மேற்கண்ட
சடங்குகள் எதையும் நீ செய்யவேண்டாம்; எவ்வித சடங்குகளும் வேண்டாம்.
நீ சர்ச்சில் நடைபெறும் பூசைக்கு வந்து ஒரு மணி நேரம் அமர்ந்து தாலி கட்டக் கூடிய
வேலையை மட்டும் செய் என்று என் தாய் என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் தாலியே கட்டப் போவதில்லை என்று கூறி அதற்கான காரணத்தை சொன்ன பொழுது
அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல மற்றவர்களையும் திருமணத்திற்கு
வரவேண்டும் என்று கூறி பிரச்சனையை
முடித்து வைத்தார். மதத்தை, கடவுளைவிட தம் மக்களை (குழந்தைகளை)
நேசிப்பவர்களாகத்தான் எல்லா தாயும் இருக்கிறார்கள். இதில் என் தாயும் அடக்கம்
என்பதில் எனக்கு எப்போதும் பெருமைதான்.
எங்கள்
வீட்டில் ஒப்புக் கொண்டாலும், பங்கு சாமியார் விடுவதாக இல்லை. பிரச்னையை
பெரிதாக்கி கொண்டே போனார். என் திருமண
அழைப்புக் கிடைத்தவுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பூசைகளில் பிரசங்கம்
செய்யும்போது, ‘‘இயேசுவிற்கு விரோதமாக ஒரு திருமணம் (என் திருமணம்) நடைபெற உள்ளது.
இதற்கு யாரும் செல்லக்கூடாது’’ என்று கட்டளை பிறப்பிப்பார். மத பிடிமானம் அவர்
கண்ணை மறைத்தது. அந்த பூசையில் கலந்து கொண்டிருக்கும் எனது அம்மா உட்பட சகோதர
சகோதரிகள் மற்றும் உறவினர்களை மற்றவர்கள்
திடுக்கிட்டு திரும்பிப் பார்ப்பார்கள்; திகைத்துப் போவார்கள். திருமணம்
நின்றுவிடும் அல்லது திருமண முறை மாறிவிடும் என்று பலரும் நினைத்தார்கள். பாதிரியாரும்
அவர் ‘பங்கு’க்கு அடுத்தடுத்த வாரங்களில் ஓலை வாசிப்பதற்கு பதிலாக என்
திருமணத்திற்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்தார். அவர் மட்டுமல்ல... தேவாலய
நிர்வாகிகளும் அவரவர் பங்குக்கு திருமணத்திற்கு செல்லக்கூடாது என்ற
பிரசங்கத்தை-பிரச்சாரத்தை தனித்தனியாக செய்து கொண்டிருந்தனர்.
இவை
எல்லாவற்றையும் மீறி இயக்கம் - உறவினர் என்று அது இணைந்த காலமாக இருந்ததால்
திருமணத்திற்கு அனைவரும் கூட்டமாக வந்தனர். அப்பகுதி பொதுமக்களும் வந்து
வாழ்த்தினர். கட்சித் தோழர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். திருமண மண்டபம் நிறைந்து வழிந்து அதே அளவிற்கு
வெளியே கூட்டம் நின்றது. மாலை நேரத்தில் நடைபெற்ற அந்தத் திருமணத்தில் மிக்சர்,
தேநீருடன் விருந்து முடிந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் அதுவும் பலருக்கு கிடைக்கவில்லை. நான் வயிறார விருந்து போடவில்லை என்றாலும் திருமணத்திற்கு வந்தவர்கள்
அனைவரும் எங்களை வாயாற, மனதார வாழ்த்திச் சென்றனர்.
தோழர்
விஎம்எஸ்சின் முன்முயற்சியால் எங்களது திருமணம் இனிதே நடந்தது. தோழர் ஏ. நல்லசிவன்
திடீரென்று டெல்லி சென்று விட்டதால் தோழர் பி. ஆர். பரமேஸ்வரன் தலைமையில் நடந்த
திருமணத்தில் தோழர்கள் விஎம்எஸ், மைதிலி சிவராமன், சவுந்திரராசன், வரதராசன்,
சு.பொ. அகத்தியலிங்கம், கே. கிருஷ்ணன், சா. செந்தில்நாதன், கே. என்.
கோபாலகிருஷ்ணன்,கே,கங்காதரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.
இதில்
மேலும் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் திருமணத்தை பாரிமுனையில் உள்ள
கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடத்துவது என்று
ஆலோசிக்கப்பட்டது அந்த மண்டபத்தை வங்கி ஊழியர்களுக்கு மட்டும் கொடுத்து
வந்தார்கள். குறைவான செலவில் நடத்த வேண்டும் என்பதை தெரிவித்த அடிப்படையில் ஜிடிசி
வங்கியின் தலைவராக இருந்த தோழர் வேணுகோபாலின் குடும்ப நிகழ்வு என்று அனுமதி பெற்று
என் திருமணம் நடைபெற்றது. இதுபோன்ற பல நிகழ்வுகள் அங்கு மட்டுமல்ல... எல்லா
இடங்களிலும் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயங்கள் தான். அந்த வங்கியின் அதிகாரியாக,
ஆடிட்டராக இருந்தவர் இந்த விஷயத்தை போட்டுக் கொடுத்துவிட்டார். அவர்
எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்தவர்தான். ஒருவகையில் தூரத்து உறவும் கூட. சர்ச்சுக்கு
வெளியே திருமணம் நடப்பதில் அவருக்கும் விருப்பமில்லை என்பதால், தோழர் வேணுகோபாலை போட்டுக் கொடுத்துவிட்டார்.
நிர்வாகமும் வேணுகோபாலுக்கு ‘மெமோ’ கொடுத்தது. சங்கம் அதை எதிர்கொண்டு சமாளித்து
தீர்த்தது. திருமணம் நடந்த இடத்தைக்கூட பிரச்னைக்கு உள்ளாக்கப்பட்டது.
திருமணம்
முடிந்து அடுத்த நாள் எங்கள் வீட்டிற்கு நானும் எனது இணையர் லதாவும் இருசக்கர
வாகனத்தில் (அப்பொழுது லேம்பி போலோ என்ற ஸ்கூட்டர். இதை தோழர் டபிள்யூ.
ஆர்.வரதராஜன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். பின்னர் அது வாலிபர் சங்க
வேலைகளுக்காக சென்னை மாவட்டத்திற்கு அளிக்கப்பட்டு இருந்தது) ஊருக்குள் சென்றோம்.
அனைவரும் வேடிக்கை பார்த்தார்கள். பார்வைகள் பலவிதமாக இருந்தது. ஒவ்வொன்றும்
விதவிதமான அர்த்தங்களை கொண்டிருந்தது. மழை விட்டும் தூவானம் விட்டபாடில்லை என்ற
கதையாக எங்கள் திருமணம் நடந்து முடிந்தாலும், ‘பாதிரியார் பிரச்னை’ விடுவதாக
இல்லை. மீண்டும் தேவாலயத்தில் நடைபெற்ற பிரசங்கத்தின்
போது இயேசுவுக்கு விரோதமாக நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டவர்களை கடுமையான
முறையில் சாடினார். இது பாவச்செயல் என்று அவர்களுக்கு சாபமிட்டார்.
நான்
இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் சகஜம் ஆக்குவதற்காக முடிவு செய்தேன். அதற்காக
என்னுடைய மிகப்பெரிய நட்பு வட்டத்தை பயன்படுத்தினேன். அவர்களில்
ஒருவர் தவிர மற்றவர்கள் யாரும் கட்சியில் இல்லை. சர்ச்சின் செயல்பாடுகளில் இருந்தார்கள். இந்த நட்பு வட்டம் இன்றும் தொடர்கிறது. அவர்களுடன் ஆலோசித்தபின், நானும்
லதாவும் இணைந்து நண்பர்கள் வீட்டுக்கு தேநீர் அருந்தச் செல்வது என்று முடிவு
செய்தோம்.
அதன்படி, வெற்றிராஜன், நீலமேகம்,
பங்குராசு, நோவேல்,
முனியாண்டி, மனோகரன், பிலவேந்திரன், அல்போன்ஸ், அந்தோணி,
சில்வஸ்டர், வேதமுத்து, ஆச்சரியம், குழந்தைராஜ், சுந்தர், ராஜன் என நண்பர்கள் புடைசூழ நானும் லதாவும்
ஒவ்வொரு தெருவிலும் உள்ள வீடுகளுக்கு சென்று தேநீர் அருந்தி வந்தோம். வழியில்
எதிர்படுபவர்களை எல்லாம் விசாரித்து சகஜமாகப் பேசி சென்றோம். அந்த அனுபவம்
அலாதியானது. இந்த நண்பர்கள் அனைவரும் இன்றும் என்னுடன் நட்பு பாராட்டுகிறார்கள். இவர்கள்
அனைவரும் அரசு ஊழியராக பணியில் சேர்ந்து தற்போது ஓய்வு பெற்று ஆயிரக்கணக்கில் பென்ஷன் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கட்சி
முழுநேர ஊழியராக இருக்கிற என் பணியைத்தான் அவர்கள் பெருமையாக கருதுகிறார்கள்.
ஊரில்
உள்ளவர்கள் என்னோடு சகஜமாகிவிட்டாலும், பாதிரியார் மட்டும் பாடாய்படுத்திக்
கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் நானும் என் நண்பர்களும் சேர்ந்து முடிவெடுத்து
பாதிரியாருக்கு மட்டுமல்ல... தேவாலய நிர்வாகிகளுக்கும் புரிகிற பாஷையில் சில
விஷயங்களைப் பேசினோம். தொடர்ந்து பேசினால் பொதுக்கூட்டம் நடத்தி
பேசவேண்டிவரும் என்று எச்சரித்த பிறகு அவர்கள் யாரும் வாய்
திறப்பதில்லை. பத்து வேர்க்கடலையை எடுத்து
சாப்பிடும்போது அதில் ஒரு வேர்க்கடலை சொத்தையாக இருந்துவிட்டால் எப்படியோ
அதுபோல்தான் அந்த பாதிரியாரும், என் திருமண நிகழ்வில் அவர் மறக்க முடியாதவராகி
விட்டார்.
எனது
இணையர் லதா வீட்டில் உள்ளவர்களில் அவரது அண்ணன் விஸ்வநாதன் கட்சியில் இருந்ததால்
திருமணத்திற்கான முழு ஒப்புதல் கொடுத்தார். லதாவின் தாயார் ஆரம்பத்தில் தயக்கம்
இருந்தாலும் பிறகு முழுமையாக திருமணத்திற்கான ஒப்புதலுடன் திருமணத்தில் கலந்து
கொண்டார். லதாவின் சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்த கொடுத்த இடத்தில் கடுமையான
எதிர்ப்பு வந்தது திருமணத்துக்கு செல்லக்கூடாது என்ற தடையும் ஏற்பட்டது அதையும்
மீறி அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். காலப்போக்கில் அனைத்தும் சகஜம்
ஆகிவிட்டது.
என் திருமண நாளைக் குறித்துப் பேசும்போது, கட்சி முழுநேர ஊழியராக ஆனபின் நான் எந்தெந்த பகுதியில், யார்,யாருடன் பணியாற்றினேன்; களப்பணியில் எனக்கு கிடைத்த அனுபவங்கள்; தோழர்களுடன் நான் களமாடிய பொழுதுகள், களித்திருந்த பொழுதுகள் எல்லாம் சாரை சாரையாக நினைவுகளாக அணிவகுத்து வருகின்றன. முழுநேர ஊழியராக மாறும் யாரும் மலர்ப்பாதையை எதிர்பார்த்து வருவதில்லை. கரடு முரடான பாதையாகத்தான் இருக்கும் என்பதை எதிர்பார்த்தே வருகிறார்கள். காலில் குத்திய முட்களை நாங்கள் எடுத்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறோம். சிலநேரங்களில் மனதில் குத்தும்போதும் அதையும் கடந்து போய்க் கொண்டே களமாடி வருகிறோம். சாதி,மதத்தை கடந்த காதல் திருமணத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை முறியடித்து சந்தோஷமாக வாழும் சாட்சிகளாக நானும், என் இணையர் லதாவும் இருக்கிறோம்.
1.நேர்படபேசு எதிர்மறை எதிர்கொள்