Pages

சனி, நவம்பர் 30, 2024

மார்க்சின் மறுவார்ப்பு எலினார்:

 அ.பாக்கியம்.

     காரல் மார்க்ஸ் ஜென்னி இருவருக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் ஆறாவதாக பிறந்தவர் எலினார். ஏழு குழந்தைகளில் நான்கு பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். மூன்று பெண் குழந்தைகள் ஜென்னி கரோலின், ஜென்னிலாரா, ஜென்னி ஜூலியா எழினார் ஆகிய மூன்று பெண் குழந்தைகள் முறையே 38, 66, 43 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். இந்த மூன்று பெண்களும் அவர்களது இணையர்களும்  காரல் மார்க்ஸின் கருத்துக்கள் அடிப்படையில் அரசியல் போராட்டங்களில் புரட்சிகளில் கலந்து கொண்டவர்கள் 


குறிப்பாக இளைய மகள் எலினார் பற்றி இந்த புத்தகம் விரிவாக பேசுகிறது. காரல் மார்க்ஸ் லாரா என்னைப் போன்றவள் என்றாலும் எலினார் நானே தான் என்று குறிப்பிடும் அளவிற்கு எலினாவின் பொது வாழ்க்கை இருந்தது.



இந்தப் புத்தகத்தில் மார்க்ஸ் இருந்த காலத்திலும் அதன் பிறகும் மார்க்சியத்திற்கு எலினா ஆற்றிய பங்கு விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


எலினாவின் வாசிப்பு களப்போராட்டம் காதல் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட வேதனைகள் என அனைத்தும் சுருக்கமான முறையில் தேவையான விறுவிறுப்புடன் எழுதப்பட்டுள்ளது. எடுத்து படித்தால் உடனே முடித்து விடலாம். அந்த அளவிற்கு எழுத்து நடை உள்ளது. 


எழுத்து ஆய்வு கற்பித்தல் மொழிபெயர்ப்பு தொழிற்சங்க பணி என தனது செயல்பாட்டில் பன்முக ஆற்றலை கொண்டவராக எழினார் செயல்பட்டு உள்ளதை என்னுள் வாசிப்பின் வலி உணர முடிகிறது என்று வாழ்த்துரை வழங்கியுள்ள மூத்த தலைவர் டி கே ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார். எலினாவின் களப்போராட்டங்கள் பெரும் அனுபவங்களை இயக்கத்திற்கு கொடுத்தது.


72 பக்கங்கள் உள்ள சிறு புத்தகம் 12 துணை தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் வ. பொன்னுராஜ் அவர்கள் மிகச் சிறந்த முறையில் எழினார் வாழ்வின் சாரத்தை பிழிந்து கொடுத்துள்ளார். 


நேற்றைய தினம் (2.9.24) பல்லவன் ரயிலில் அரியலூர் செல்கிற பொழுது இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். சுற்றி நடந்த எந்த நிகழ்வும் இந்த புத்தகத்தின் வாசிப்பிலிருந்து என்னை வெளி கொனரவில்லை. அதன் உள்ளே மூழ்கி முடித்தேன்.


இந்தப் புத்தகத்தை பாரதி புத்தக ஆலயம் மே மாதம் வெளியிட்டு உள்ளது விலை ரூபாய் 80/

தோழர் அரிகரன்: களப்பணிக்கான வழிகாட்டி :

 



25 9 2024 அன்று அதிகாலை 3:30 மணியளவில் தோழர் ஹரி அவர்கள் தனது 74 வது வயதில் மரணம் அடைந்தார். 


முன்னாள் விமானப்படை வீரர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எழும்பூர் பகுதி செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பூங்கா நகர் பகுதியில் முதல் பகுதி செயலாளர் வங்கி ஊழியர் சங்கத்தின் செயல்பாட்டாளர் என  பல களம் கண்டவர் தோழர் அரி.


1985 ஆம் ஆண்டு ஓட்டேரி அருகில் உள்ள ஸ்ட்ரான்ஸ் ரோடு நியூ பேரன்ஸ் ரோடு இடங்களில் வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. தோழர்கள் நாராயணன், ராதாகிருஷ்ணன், வள்ளுவன், சுப்பிரமணி, சங்கர் மோகன் கொசப்பேட்டை சரவணன், இவர்களுடன் எம்ஆர்எப் சீனிவாசன் இணைந்து இந்த கிளையை உருவாக்கினார்கள். இந்த கிளையின் சார்பில் 1986 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிதண்ணீர் போராட்டம் சென்னை நகரத்தில் மக்கள் எழுச்சி கொண்ட குடிநீர் போராட்டத்தில் துவக்கமாக அமைந்தது. 1987 ஆம் ஆண்டு வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெ ற்ற நேரத்தில் வீடு வீடாக உண்டியல் வசூலை மேற்கண்ட தோழர்கள் கொசப்பேட்டை பகுதியில் நடத்திய பொழுது, தோழர ஹரி  இயக்கத்தில்  ஈர்க்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இந்திய மாநாட்டுப் பள்ளிகளின் பிரச்சாரமும் தயாரிப்புகளும் அவரை இயக்கத்திற்குள் செயல்பாட்டாளராக மாற்றியது. 


1989 ஆம் ஆண்டு எழும்பூர் பூங்கா நகர் வாலிபர் சங்கத்தின் அமைப்புக்குழு உருவாக்கப்பட்டூ தோழர் ராஜன் (தற்போது அண்ணா நகர் பகுதி குழு உறுப்பினர்) அதன் ஒருங்கிணைப்பாளராகவும், பெரியமேடு வின்சென்ட், நியூ பேரன்ட்ஸ் ரோடு வள்ளுவன், ஸ்டிரான்ஸ் ரோடு சங்கர், பெரியமேடு வின்சென்ட் என மேலும் சில தோழர்கள் அமைப்பு குழு உறுப்பினர்களாக இருந்த செயல்பட்டார்கள். அதே ஆண்டு கடைசியில் எழும்பூர் பூங்கா நகர் பகுதி குழு மாநாடு நடத்தி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் ஹரி வாலிபர் சங்கத்தின் முதல் பகுதி செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டு எழும்பூர் பகுதி முழுவதும் வாலிபர் சங்கத்தை விரிவு படுத்தினார். 


1993 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் எழும்பூர் பகுதி குழு மாநாடு நடைபெற்ற பொழுது, பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை பகுதி செயலாளராக செயல்பட்டார். 


இந்தியன் வங்கியில் பணிபுரிந்தாலும் அவர் களப்பணியாற்றுவதில் ஆர்வமாக இருந்து செயல்பட்டார். பல வாலிபர் சங்க தோழர்கள் களப்பணியில் இருந்த பொழுது அரசு வேலை கிடைத்து இணைந்தார்கள். அவர்களும் தங்கள் பணிகளை குறைக்கவில்லை. ஆனால் ஹரி வங்கி பணியில் சேர்ந்த பிறகு களத்திற்கு வந்தார். அதுவே ஒரு துணிச்சலான முடிவும், செயலும் ஆகும். 

ஸ்டாரரன் ரோட்டில், தற்போது செயல்படக்கூடிய பள்ளியை நடத்துவதற்கான பல போராட்டங்களை நடத்தியவர், காவல்துறையின் தாக்குதலை நேருக்கு நேராக எதிர்கொண்டவர், 19 90 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க தூதரகம் முன்பு நடந்த பேரணியில் போலீஸ் நடத்திய கடுமையான தாக்குதலில் இருந்து ஏராளமான பெண்களை பாதுகாத்தது மட்டுமல்ல காவல்துறை பெண்கள் மீதான தாக்குதலை பலவந்தமாகவும் தடுத்து நிறுத்தினார் அவர்கள் வீசிய கண்ணீர் புகை குண்டுகளை எடுத்து பெண்களுக்கு பாதிப்பு வராமல் எறிந்தவர்கள் மீது எறிந்தா. 


காவல்துறையில் அதிகாரியாக தேர்வு பெற்ற பொழுது நியமனத்திற்கு பணம் கேட்டார்கள் என்ற காரணத்தினால் அந்த உயர் பதவிக்கு செல்லவில்லை என்று பலமுறை தெரிவித்தார். 


அப்போதைய சென்னை நகர கமிஷனர் துரை அவர்கள் இருந்தார். அண்ணாசாலையில் எந்தப் போராட்டமும் நடக்கவும் கூடாது துவங்கவும் கூடாது  என்று முதலில் தடை விதித்த கமிஷனர் அவர்தான். ஒரு பள்ளிக்கூட பிரச்சினைகள் தொடர்பாக அவருடைய அறையில் உள்ளே புகுந்து உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து தான நாங்கள் போராடுகிறோம் என்று அவர் பேசியதும் நடந்து கொண்டதும் மாற்ற அதிகாரிகளை எல்லாம் கலங்க செய்தது. அன்றைய தினம் ஐஎஸ் உதவி ஆணையராக இருந்தவர் என்னிடமும், அகத்தியலிங்கமிடமும் தொடர்பு கொண்டு கமிஷனரிடமே இப்படி பேசுகிறார் கொஞ்சம் சொல்லி வையுங்கள் என்று தெரிவித்தார்கள். கமிஷனர் அவர் எடுத்த பிரச்சனையை நியாயம் என்று உணர்ந்து கொண்டார். 


இது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் சாதாரண மக்களிடம் இரண்டற கலந்து வாழும் கொள்கையை கடைப்பிடித்தார்.

உண்டியல் வசூல் செய்வதில் அன்றைக்கு இருந்த இளைஞர்களிடம் காணப்பட்ட தயக்கத்தை உடைத்து சகஜமான முறையில் வசூலிப்பதற்கான பயிற்சியை கொடுத்தவர். கொசப்பேட்டை சரவணன் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு கையை முறித்த பொழுது காவல்துறையின் மீது வழக்கு போடுவதிலும் போராட்டங்கள் நடத்துவதிலும் காவல்துறை கடைசியில் மன்னிப்பு கேட்டாலும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று  என்று வழக்கை தொடர்ந்து நடத்தியதில் பங்கு கொண்டார். 


போராட்டங்கள் அதிகமாக நடந்த காலத்தில் அவர் இணைந்தார். பெரிய மேட்டுப்பகுதியில் செயல்பட்ட தோழர்கள் மனோகரன் ராமமூர்த்தி சரளா ராஜாமணி ராஜன் வில்சன் விஜயன் நெல்சன் குமார் விஜயகுமார் போன்றவர்கள் முயற்சியால் சூலை, அவதான பாப்பையா ரோடு, கே.பி பார்க், நரசிங்கபுரம் போன்ற இடங்களில் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. மறுபுறத்தில் நம்மாழ்வார் பேட்டையில்  போக்குவரத்து ஓட்டுநர் ரவனையா, சின்னையா, போக்குவரத்து ஓட்டுநர் சங்கர், சம்பத், நாகராஜன், மோகன் குமார், இளங்கோ, தோழர் தேவி, குமரன், மதிவாணன் போன்ற தோழர்களின் செயல்பாட்டால்  நம் ஆழ்வார் பேட்டை போராட்ட களமாக இருந்தது. இந்த இரண்டு பகுதிக்கும் இடையில் உருவான நியூ பார ன்ஸ் ரோடு, ஸ்டார்ன்ஸ ரோடு பகுதிகளில் எழுச்சி கண்டது ஹரியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 


இந்தப் பணியின் தொடர்ச்சியாக சாலை மாநகர் திடீர் நகர் பகுதிகளிலும் இயக்கங்கள் உருவாகி புகழேந்தி கிருஷ்ணமூர்த்தி போன்ற தோழர்கள் இயக்கத்திற்குள் ஈர்க்கப்பட்டார்கள். ஓட்டேரி பகுதியில் கொசப்பேட்டையிலும் அப்பளத் தொழிலாளர்கள் பிரச்சனைகளிலும்  தோழர் அரி தலையிட்டு உதவினார்


தோழர் ஹரியின் தயக்கமற்ற கள செயல்பாடு அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட காலத்திலும், தொடர் சிகிச்சையில் இருந்த போதும், சாத்தியமான செயல்பாடுகளை செய்து கொண்டே இருந்தார். எழும்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாதாரண மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய உள்ளூர் தலைவராகவே பரிணமித்தார்.


அவருக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு இருக்கலாம் என்று ஆதங்கம் இருந்தாலும், பழைய தோழர்களால் தகவல் கிடைத்த, அவருடன் பணியாற்றிய பழைய தோழர்கள் கலந்து கொண்டது சற்று ஆறுதலாக தான் உள்ளது.

களப்பணியின் வழிகாட்டியாக செயல்பட்ட தோழர் ஹரிகரன் அவர்களுக்கு  வீரவணக்கம்.

பாக்கியம்.

செவ்வணக்கம் தோழா

 


சில மரணங்களை மனம் ஏற்க மறுக்கும், சில மரணங்கள் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும், தோழர் யு.கே. சிவஞானம் அவர்களின் மரணம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அவரின் உடல்நிலை பற்றி தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த எனக்கு இன்று காலை அபாய கட்டம் என்றும், ஒரு மணிக்கு அவருடைய மரண செய்தியும் வந்தடைந்த பொழுது அதிர்ச்சி அடைந்தேன்.

 


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராக, மாவட்ட தலைவராக மாநிலத்தின் பொருளாளராக பல ஆண்டுகள் இணைந்து செயல்பட்டவர். நான் தலைவராகவும் தோழர் ரவீந்திரன் செயலாளராகவும் தோழர் யுகே சிவஞானம் பொருளாளராகவும் வாலிபர் சங்கத்தின் மாநில அமைப்பில் செயல்பட்டோம். அதன் பிறகு கோவை மாவட்ட கட்சி செயற்குழு உறுப்பினராகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் பொறுப்புகள் ஏற்று சுறுசுறுப்பாக செயல்பட்டவர். 


கோவை மாவட்டத்தில் வாலிபர் சங்க இயக்கம் வளர்ந்த பொழுது பன்முக கலாச்சார நடவடிக்கைகளில் வாலிபர் சங்கத்தை ஈடு படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தோழர் சிவஞானம் அவர்கள். குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக முயற்சி எடுத்து ரத்ததான கழகத்தை ஆரம்பித்த பணி தோழர் சிவஞானம் அவர்களுடையது. ரேஷன் அட்டைப் போராட்டம், பஸ் கட்டணம் மறியல்,அதேபோன்று பல உள்ளூர் பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிட்டு வந்தார்.


நான் எழுதி வாலிபர் சங்கத்தின் மாநில குழு வெளியிட்ட ஞாபகங்கள் தீ மூட்டும் என்ற புத்தகத்தைப் பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஸ்டாலின் குணசேகரன் எழுதிய விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற இரண்டு பாகங்களையும் வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். 


தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவு எடுத்து பல கட்டுரைகளை தீக்கதிர் நாளிதழில் எழுதினார். வைக்கம் போராட்டம் பற்றிய சிறு புத்தகத்தையும் வெளியிட்டார். கோவை மாவட்ட வாலிபர் சங்க வரலாறுகளை தொகுத்து எழுத வேண்டும் என்ற முறையில் பல தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டு எழுத ஆரம்பித்தார்.


அன்றாட அரசியல் பணிகளையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பணிகளையும் , எழுத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய இந்த நேரத்தில் அவருடைய மரணம் என்பது பேரிழப்பாகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலதாமதமானாலும் மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது.இன்று காலை அந்த நம்பிக்கை தகர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்தது. 


தோழர் யூ.கே.சிவஞானம் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி செவ்வணக்கம்.

வந்தே விபத்து வராத பாதுகாப்பு.

 



மைசூர் தர்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்கு உள்ளாகியது. 13 பெட்டிகள் தடம் புரண்டு 19 பயணிகள் படுகாயத்துடன் யாரும் உயிரிழக்காமல் தப்பிக்க வைத்ததில் ரயில் ஓட்டுனரின்  பங்கு மிக முக்கியமானது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில்  ஈடுபட்டதால் பெரும் உயிர் பலி தவிர்க்கப்பட்டு இருக்கிறது. 


இந்திய பிரதமர் மோடி அவர்கள் 2019 க்கு பிறகு 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். ஆனால் ரயில் விபத்துகளை தடுத்து பயணிகள் உயிரை பாதுகாப்பதற்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. 


ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 3 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. ஒடிசா, பீகார்,ஆந்திர பிரதேஷ், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் விபத்துக்கள் மோடியின் ஆட்சியில் அதிகமாக்கி உள்ளது. சரக்கு ரயில் பயணிகள் ரயிலுடன் மோதுவது அல்லது பயணிகள் ரயில் சரக்கு ரயில் உடன் மோதுவது என்ற விபத்துக்கள் தொடர்கின்றன.


ஒவ்வொரு ரயில் விபத்துக்கு பிறகும் ரயில்வே பாதுகாப்பு பற்றி அதிகமாக பேசப்படுகிறது ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பெரும் திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால் அவை எதுவும் அமலாவது இல்லை. ரயில் மோதல் தடுப்பு கவாச் சாதனங்களை ரயிலில் நிறுவ வேண்டும் என்ற முடிவுகள் அமலாகவில்லை. மொத்த ரயில் பாதையின் நீளத்தில் ஒரு சதவீதம் மட்டுமே விபத்து தடுப்பு பாதுகாப்பு சாதனமான கவாச் நிறுவப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் வேலை நடைபெற்றால் இப்பொழுது இருக்கிற ரயில் அமைப்புகளில் பொருத்தி முடிப்பதற்கு 50 ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் எத்தனை லட்சம் மக்களை பலி கொடுக்கப் போகிறார்களோ என்று தெரியவில்லை. ரயில்வே வருமானத்தில் இரண்டு சதவீதத்தை ஒதுக்கினால் முழுமையாக அமல்படுத்தி விடலாம் என்று தெரிவித்தும் மோடி அரசு பயணிகளின் பாதுகாப்பை பற்றி அவர்களின் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறது. 


நாங்கள் ஆண்டுக்கு 17,000 கோடி பாதுகாப்பிற்காக ஒதுக்கி இருக்கிறோம் என்று ரயில்வே துறை அமைச்சர் வாய்ச்சவடால் அடித்தாலும் அவை அனைத்தும் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படவில்லை. ரயில்வே பாதுகாப்பு சிறப்பு நிதியானது கால்களுக்கான மசாஜர்கள் , பாத்திரங்கள், மின் சாதனங்கள், மரச்சாமான்கள், குளிர்கால ஜாக்கெட்டுகள் , கணினிகள், எக்ஸ்லேட்டர்கள் வாங்குவதற்கும், தோட்டங்களை உருவாக்குவதற்கும், கழிப்பறைகளை கட்டுவதற்கும் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று  காம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அறிக்கை தெரிவித்துள்ளது. சிக்னல் அமைப்பை நவீன மயமாக்குதல் ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்ததற்காக,  கவாச் சாதனங்களை பொருத்துவதற்காக பயன்படுத்தவில்லை.


மோடி அரசை முன்னாள் ரயில்வே தலைமை பொறியாளர் அலோக் குமார் வரமா போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் அரசாங்கத்தின் தவறான முன்னுரிமைகள் தான் ரயில்வே கீழ்நோக்கி செல்வதற்கு காரணம் என்று  குற்றம் சாட்டி உள்ளனர். அதாவது பாதுகாப்பு எளிய மக்களின் பயணம் ஆகியவற்றை தடுத்து மற்ற அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை இவ்வாறு சுட்டிக்காட்டி உள்ளனர். தண்டவாளங்களை புதுப்பிப்பது போன்றவைகளும் புறக்கணிக்கப்படுகிறது. 

வேலைப்பளு அதிகமாக இருப்பது மனித தவறுகளுக்கு காரணமாக அமைகிறது என்று சிஏஜி அறிக்கை தெரிவித்த பொழுதும் மோடியின் அரசாங்கம் மூன்று லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. 


சமீப காலத்தில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மிகப் பெரும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் பொதுவாக ஏழை மக்களால் பயன்படுத்த படக்கூடியது. இந்திய வெகுஜன மக்களின் ஒரே போக்குவரத்து சாதனம் ரயில்வே என்பதை மோடி அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.


வந்தே பாரத் அதிவேக ரயில்கள் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சுதன்சு மணி என்ற நிபுணர், சாமானிய மக்களின் தேவைகளை கவனம் செலுத்தாதது அரசு செய்த தவறு என்று குற்றம் சாட்டினார். ஏழைகளின் பயண தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குளிரூட்டப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார் . வந்தே பாரத் வசதி படைத்த உயர்நிலைப் பயணிகளுக்கானது . ஆனால் சாமானியர்களின் நலன்களை புறக்கணிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


தண்டவாளங்கள் நவீனப்படுத்தப்படாததால் வந்தே பாரத் உட்பட அதிவேக ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு பதிலாக சராசரியாக 83 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது என்பதுதான் உண்மை.


 அதிவேக ரயில்கள் அதாவது வந்தே பாரத் புல்லட் ட்ரெயின் போன்ற பெரும் திட்டங்கள் வேகத்தை விட அழகு படுத்துவதிலும், அதற்கான ஆடம்பர பொருட்களை பொருத்துவதற்கும் தான் கவனம் செலுத்துகிறார்கள் தவிர வேகத்தில் முன்னேற்றம் இல்லை


மக்களின் உயிர்களைப் பற்றி கவலைப்படாத ஒன்றிய அரசு ஒவ்வொரு விபத்துக்குப் பின்பும் சதி இருக்கிறது என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி மக்களின் உயிர் பாதுகாப்பை புறக்கணிக்கிறது.தனது பிம்பத்தை அதிகப்படுத்திக்கொள்ள அதிவேக ரயில் என்ற விளம்பரங்களை அதிவேகமாக செய்து மக்களை சாகடிக்கிறது. வந்தே பாரத் வேகத்தை விட விபத்து வேகமாக வருகிறது ரயில் பாதுகாப்பு வராமலேயே இருக்கிறது.

அ. பாக்கியம்

மார்க்சிஸ்ட் கட்சியின் மனிதாபிமான ஊழியர் மார்ச்சான்:

 



அவர் உயிரோடு இருக்கிறார் என்று தான் எனது என்ன ஓட்டம் இருந்தது. அவர் மறைந்து விட்டார் என்பதை அறிந்திருந்தாலும் அந்த நிகழ்வு என் நினைவுகளில் ஆழ பதியவில்லை. சில நேரங்களில் அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றி இருக்கிறது. ஆனால் இன்று அவரின் ஓராண்டு நினைவஞ்சலி முகநூல் போஸ்டரை பார்த்து மனம் கனத்தது. 


உரத்த குரலில் அவர் என்றுமே பேசி யாருமே கேட்டிருக்க முடியாது. அவருடைய முகத்தோற்றமே இரக்க குணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். அந்தத் தோற்றமே அவருடைய செயலிலும் பிரதிபலித்தது. 


தோழர் சத்தியநாதன் பகுதி செயலாளராக இருந்த பொழுது 1998 ல் வியாபாரிகளை அணிதிரட்டுவதற்கான கூட்டத்தை நடத்துகின்ற காலத்தில் அவரும் ஒரு நடைபாதை வியாபாரியாக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் தொடர்ந்து கட்சியின் ஆதரவாளராக, உறுப்பினராக,ஊழியராக மாறிவிட்டார். 


என் எஸ் கே நகர் என்பது உழைப்பாளி மக்கள் நிறைந்த ஒரு இடம். பெரும்பகுதி குடிசை வீடுகள் இருந்தது. திராவிட இயக்கங்கள் பலமாக இருக்கிற இடம். அதே நேரத்தில் உள்ளூர் தாதாக்களும் நிறைந்திருந்த பகுதி. அந்த நகரில் தோழர் மார்ச்சான் மட்டுமே உறுதிமிக்க செயல்பாட்டினால் என் எஸ் கே நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளையை உருவாக்கினார். சாந்தமான குணமும் தோற்றமும் இருந்தாலும் அழுத்தமான முறையில் செயல்களை செய்யக்கூடியவர்.


முதலில் ஆதரவாளர்களை முயற்சி எடுத்து சேர்த்தார் . கடையில் வேலை செய்தவர்களை கட்சியில் இணைத்தார் . இதன் மூலம் அந்தக் கிளையை செயல்படும் கிளையாக மாற்றினார். அது மட்டுமல்ல, நபர் அந்தப் பகுதி பொறுப்பாளராக இருந்தபோது, நடைபாதை உணவு விற்பனையாளர்  சங்கத்தை , சத்தியநாதன், சீனிவாசன், சுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து சிஐடியூ மாவட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் உருவாக்கினார்.


அண்ணாநகர் பகுதியில் அவர் நிதி வசூலில் மிக முக்கியமான பங்கு வகித்தார் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்று வசூல் செய்வது என்.எஸ்.கே நகரில் வசூல் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டாலும் தனிநபராக அனைத்து கட்சியை சேர்ந்தவர்களிடமும் தயக்கம் இன்றி பேசி நிதி வாங்கி விடுவார். தனி நபர்களை சந்தித்து அதிக நபர்களிடம் நிதி வாங்கிய முதல் நபராக அண்ணாநகர் பகுதியில் தோழர் மார்ச்சான் இருந்தார்.


அவரது கடை அண்ணா நகர் சாந்தி காலனியில் தள்ளு வண்டியில் அமைக்கப்பட்ட நடைபாதை கடையாகவும் பிறகு சிறுகடையாகவும் நடத்தப்பட்டது. நடைபாதை கடையாக இருந்த பொழுது ஆளும் கட்சி தாதாக்களின் மாமுல் வசூலுக்கு எதிராக பல இன்னல்களை சந்தித்தாலும் உறுதியுடன் நின்று அவற்றை தடுத்தார். இதேபோன்று மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சட்டப்படி எதிர்கொண்டு தனது கடையை நடத்தினார் இவரின் இந்த முயற்சிகளுக்கு கட்சி முழுமையான துணையாக இருந்தது. 


அவருடைய கடை, பசியுடன் சென்றவர்களுக்கு பசி ஆறுதல் அளிக்கக்கூடிய இடமாக எப்பொழுதுமே இருந்தது. வறியவர்கள் வந்து கையில் காசு இல்லாமல் அவருடைய கடையை வேடிக்கை பார்த்தால் அவர்களை அழைத்து உணவை கொடுத்து விடுவார். வயதானவர்கள் வந்தால் உணவுக்கு வழியில்லை என்றால் உணவையும் கொடுத்து சிறு தொகையும் கொடுத்து அனுப்புவார். 


வெளியில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல நான் அண்ணா நகர் பகுதியில் அமைப்பாளராகவும் செயலாளராகவும் செயல்பட்ட காலத்தில் காலை ஏழு மணி முதல் 11 மணி வரை கிளைகளுக்கும், அலுவலகத்துக்கும் சென்று வருவது வழக்கமாகக் கொண்டிருந்தேன். காலை நேரத்தில் சென்ற பொழுதெல்லாம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து விட்டால் அவருடைய கடை தான் எனக்கு காலை உணவை உண்ணும் இடமாகும். 


நான் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு சென்றிருந்தாலும் சென்று இறங்கிய உடனேயே கையில் உணவு தட்டுகளை கொடுத்து விடுவார். மறுத்தாலும் விடமாட்டார். நான் மட்டுமல்ல என்னுடன் வந்தவர்களுக்கும் அவர் உணவளிப்பார். நான் போனால் மட்டுமல்ல கட்சி தோழர்கள் யார் எப்பொழுது அவர் கடைக்கு சென்றாலும் உணவை கண்டிப்பாக கொடுப்பது அவருடைய வழக்கமாக இருக்கும். 


மாநாடுகள் நடைபெறுகிற பொழுது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடையை மற்றவர்களை பார்க்க சொல்லிவிட்டு பஸ்ஸில் வந்து விடுவார். பஸ்ஸில் வரக்கூடிய அனைத்து தோழர்களுக்கும் சமைத்து பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வந்து விடுவார்.


அவர் பெரிய அளவிற்கு வசதியானவர் அல்ல. ஆனாலும் வருமானத்தை செலவு செய்யக் கூடியவராகவே இருந்தார். 

வெள்ளம் அந்த காலத்தில் ஏழைகளுக்கு உணவை சமைத்து இலவசமாக கொடுத்தார். கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி செய்தது மட்டுமல்ல கட்சித் தோழர்கள் அளவிற்கு மிக அத்தியாவசியமான உதவிகளை செய்தார்.


அவருடைய என் எஸ் கே நகர் வீட்டில் தான் கிளை கூட்டத்தை, சில நேரங்களில் பகுதி குழு கூட்டத்தையும் கட்சி வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி இருக்கிறோம். 


ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் இதையெல்லாம் அவர் செய்து கொண்டிருந்தார். அண்ணா நகரின் கட்சி வளர்ச்சிக்கு கிளை செயலாளரை தாண்டி வேற எந்த பொறுப்பில் இல்லாமல் இருந்தாலும் பல தோழர்கள் செயல்படுவதற்கும் பல வழிகளில் உதவி செய்து கட்சி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். 


திருச்சி துறையூரை சேர்ந்த அவர் சென்னைக்கு வந்து இயக்கத்தில் இணைந்து அவர் செய்த பணிகளை மறக்க இயலாது அவரோடு இணைந்து செயல்பட்டுவன் என்ற முறையில் அவருடைய பணி மீது அலாதியான மதிப்பு என்றைக்கும் எனக்கு இருக்கிறது. தோழர் மார்ச்சான் போன்றே டிபி சத்திரம் இந்திரா அவர்களும், அன்று அண்ணா நகருடன் இருந்த ஓசான்குளம் கிருஷ்ணன் அவர்களும் மக்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். 


தோழர் மார்ச்சான் மறைந்து ஓராண்டு ஆனாலும் அவருடைய மறைவை மனம் ஏற்க மறுக்கிறது. முகநூல் போஸ்டரை பார்த்து அவருடன் நெருக்கமாக இருந்து செயல்பட்ட தோழர் எம்.ராஜன் அவர்களிடம் பேசிய பொழுது இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 


அவரது மகன் இன்று இயக்கத்தில் அவரது குடும்பத்தை பகுதி தோழர்கள் கவனித்து வருகிறார்கள்.இது போன்ற பல்வேறு தோழர்களின் பணிகளை உள்வாங்கி, அவர்களை நினைவு கூர்ந்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். அவரைப் போன்ற வேர்கள் இல்லாமல் நம்மை போன்ற விழுதுகள் இல்லை என்பதை என்றென்றும் நினைவில் நிலை நிறுத்துவோம்.(21.10.24 முதல் நினைவுதினம்)


அ.பாக்கியம்

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...