Pages

புதன், பிப்ரவரி 19, 2025

5.சீன தேசம் ஒற்றுமையின் இரகசியம்

 



சீனாவில் மன்னர்களின் மகுடங்கள் வீழ்வதும், புதிய மன்னர்களின் சிரம் கிரீடங்களை ஏற்பதும் தொடர்கதையாக இருந்தது. உள்நாட்டு போர்களாலும், கலகங்களாலும் அரசுகள் சிதறிப் போனாலும் மீண்டும் ஒன்று கூடி பேரரசாக உருவானது. சீன தேசத்தில் நிரந்தர உடைப்பு ஏற்படவே இல்லை. கோடிக்கணக்கில் மக்கள் தொகையும், பல்வேறு இனக் குழுக்களும், எல்லை ஓரங்களில் இருந்து நாடோடிக் கூட்டங்கள் கலகம் செய்து தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டு இருந்தாலும், அவை எதுவும், ஒரே குடையின் கீழ் ஆட்சி நடைபெறுவதை நிரந்தரமாக வீழ்த்த முடியவில்லை.

எண்ணூறு ஆண்டுகள் ஆட்சி செய்த பேரரசும், இரண்டு ஆண்டுகளில் வீழ்ந்து போன பேரரசும் சீன வரலாற்றில் உண்டு. பல காலங்கள் சீன தேசம் மூன்று ராஜியங்களாக ஆளப்பட்டுள்ளது. ஐந்து ராஜியங்களை பத்து வம்சத்தை சேர்ந்தவர்களும்  ஆட்சி செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் பதினாறுக்கும் மேற்பட்ட சிற்றரசுகள் செயல்பட்டும் இருக்கின்றன. இரண்டரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கொந்தளிப்புகளும், கிளர்ச்சிகளுமாக சீனா பயணப்பட்ட பிறகுதான் ஹான் அரச வம்சம் ஆட்சியைக் கைப்பற்றி பேரரசாக உருவானது. இந்தப் பேரரசு உருவாவதற்கு முன்பும் (பொதுக்காலத்திற்கு முன்பு 206- கி.மு.) பேரரசு வீழ்ச்சி அடைந்த (பொது காலமான 221-கி.பி.)  பிறகும் சீனாவில் சில நூற்றாண்டு வரலாறைப் பார்த்தால், மோதல்களால் இரத்தக்களறியாகவே காட்சியளித்திருக்கிறது.

இந்த மோதல்களைப் பற்றி பிற்காலத்தில் மாசேதுங் (மாவோ) குறிப்பிடுகிற பொழுது, ‘‘5.5 கோடியாக இருந்த மக்கள் தொகை ஒரு கோடி அளவிற்கு குறைந்தது மட்டுமல்ல... வரலாற்றில் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்த ஒரு காலமாக இக்காலம் இருந்தது’’ என்று கூறியுள்ளார். சீன வரலாற்றில் மட்டுமல்ல... உலக வரலாற்றில் கூட அதுவரை ஏற்பட்ட பேரிழப்பு என்பது சீனாவில் ஏற்பட்ட பேரிழப்புதான் என்பதை மாசேதுங்கின் பதிவு மூலம் அறிய முடிகிறது. ஆனாலும் மீண்டும் சீனாவை ஒன்றுபடுத்தி ஜின் வம்சம் பேரரசாக உருவானது. அதன் பிறகு பொதுக்காலம் (கிபி) 618 முதல் 907 வரை ஆட்சி செய்த டாங் வம்சம் சீனாவை கலாச்சாரம், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் மிகப்பெரும் அளவு மேம்படுத்தியது. இவர்களின் ஆட்சி காலத்தில் பௌத்த நெறி சாதாரண மக்களின் பிரதான வாழ்க்கை நெறியாக அல்லது மதமாக மாறியது. பேரழிவுக்குப் பிறகு மீண்டும் பேரரசாக எழுந்து நின்ற வரலாறு உலகில் சீனாவுக்கு உள்ளது. இந்த நீண்ட வரலாற்றில் சீனா ஒன்றுபட்டு இருத்தலுக்கான பொது அம்சம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி சீனா ஒன்றுபட்டிருந்த போது, உலகின் மறுபுறத்தில் வேறு விதமான நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருந்தன. கால ஓட்டத்தில், ஐரோப்பிய துணைக்கண்டம் பல நாடுகளாக பிரிந்து போனது. அப்படி பிரிந்த ஐரோப்பிய நாடுகளுக்கிடையே தொடர்ந்து போர்கள் நடைபெற்று அடிக்கடி எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு கொண்டே இருந்தன. போர் என்பது அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் சுமார் 30 ஆண்டுகள் நடைபெற்ற போர்களில் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பலியாயினர். இப்படி சண்டைப்போட்டு செத்துக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று அன்று இருந்த அரசுகள்  ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் பாலியா என்ற இடத்தில் ஒன்று கூடி அமைதிக்கான வெஸ்ட் பாலியா ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். எந்த நாட்டின் இறையாண்மையிலும் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது, ஆக்கிரமிக்க கூடாது என்பது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமாகும்.

ஐரோப்பாவில் 80க்கும் மேற்பட்ட இனக்குழு வேறுபாடுகள்  இருந்தாலும் பரப்பளவில் மிக மிகச் சிறிய பிரதேசங்களாக இருப்பவை அவை. அதனால், எந்த வகையிலும் ஒன்றுபட்ட ஒரு ஐரோப்பாவாக உருவாக்க முடியாத நிலை இருந்தது. அதே நேரத்தில் சீனாவில் அதன் தனித்தன்மை காரணமாக எத்தனை பேரழிவுகள் நிகழ்ந்தாலும் ஒன்றுபட்ட சீனாவாக அது உருவாகி எழுந்தது என்பதை அமெரிக்க ராஜ தந்திரியான ஹென்றி கிஷிங்கர் தனது நூலில் வியந்து எழுதியிருக்கிறார். அவர் மட்டுமல்ல பலரும் இதே விஷயத்தை ஒப்பிட்டு வியப்படைந்து இருக்கிறார்கள். மேலும், ஒரே தேசிய இனமாக இருக்கிற அரேபிய தேசிய இனங்கள் பல நாடுகளாக பிரிந்து போனது போல் சீனா பிரியவில்லை என்பதையும் மற்றொரு உதாரணமாக வரலாற்றாசிரியர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

சீனாவில் பிரிந்து போவதற்கான கூறுகள் இல்லாமல் இல்லை. ஒரே மொழி, ஒரே தேசிய இனம் என்பது மட்டும் பிரிந்து போகாமல் இருப்பதற்கு காரணியாக இருக்க முடியாது. வரலாற்றில் ஒரு மொழி பேசக்கூடிய பல நாடுகளும் ஒரு இனத்தை கொண்டிருக்கக் கூடிய பல நாடுகளும் உள்ளன. சீனாவிலும் இந்த வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

முதலாவதாக, வடக்குபகுதி சீனாவிற்கும், தெற்குபகுதி சீனாவிற்கும் இடையிலான வேற்றுமை என்பது நீண்ட காலமாக இருக்கக்கூடியது. அரசியல் அதிகாரத்தின் மையமாக வடக்கு பகுதி சீனா திகழ்ந்தது என்றால், தென்பகுதி சீனா வர்த்தக செயல்பாட்டின் மையமாக விளங்கியது. இது நீண்ட காலமாக இருக்கக்கூடிய குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தீவிர வேறுபாடு ஆகும்.

இரண்டாவதாக தேசிய இனம் என்ற அடிப்படையில் சீனாவில் ஹான் தேசிய இனம் மிகப்பெரியது என்பதை அறிவோம். வடபகுதி முழுவதும் இந்த தேசிய இனம் இருக்கிறது. தென்பகுதி சீனாவில் வூ, ஹக்கா, யூ, வே, மின் என்று பல கிளை மொழிகளை பேசக்கூடிய தேசிய இனங்களும், வேறு பல தேசிய இனக்குழுக்களும் அதிகம் வாழ்கிறார்கள். இந்த வேற்றுமையும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது.

மூன்றாவதாக, வடபகுதியில் கோதுமை பிரதான உணவாகும். தென் பகுதியில் அரிசி பிரதான உணவாகவும் இருக்கிறது. உடல் தோற்றங்களில் கூட சில மாறுபாடுகள் இருக்கிறது என்பதை மானுடவியலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வேற்றுமைகளுடன் தான் சீனம் ஒற்றை அரசியல் குடையின் கீழ் இருக்கிறது. இதற்கு காரணம் ஆட்சி முறைகள், மொழியின் தன்மை, புவியியல் அமைப்பு என பல காரணங்கள் இருக்கின்றன.

சீனாவின் ஆட்சி அதிகார நிர்வாக முறை இந்த ஒற்றுமைக்கு ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது. பேரரசுகள் ஆட்சி செய்கிற காலத்தில் அதிகாரங்கள் மாநில, மாவட்ட, வட்டம் என்ற அளவில் சிறு சிறு பிரதேசங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. மற்ற நாடுகளை விட இந்த அதிகார பகிர்வு சீனாவில் தொடர்ந்து இருந்தது மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தியது. பேரரசர் என்ற முறையில் முழு நாட்டையும் தன் வசம் கொண்டிருந்தாலும் அதிகாரத்தின் அனைத்து பிரிவுகளையும் தன்னைச்சுற்றி அமைத்துக் கொள்ளவில்லை. மாகாண, மாவட்ட, வட்ட என்ற வகையில் பிரிக்கப்பட்டு இருந்த அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் உள்ளூர் ராஜாக்களை போன்று செயல்பட்டார்கள். அதே நேரத்தில் பேரரசுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். சாதாரண மக்கள் பேரரசரை தெய்வத்துக்கு சமமாக பாவித்தனர். அவரை தெய்வீக சக்தியாக கருதி காண முடியாத இடத்தில் எளிய மக்கள் வைத்திருந்தனர். உள்ளூர் அதிகாரிகளுக்கும் பேரரசுக்கும் வளமான உறவுகள் கட்டமைக்கப்பட்டிருந்தது.

யுத்தம், பொது கட்டமைப்புகள், ராணுவம், அதிகாரிகள் நியமனம், வருவாய், நீதி பரிபாலனம், ஒட்டுமொத்த கண்காணிப்பகம் போன்ற நிர்வாகத்தை பேரரசுகள் தங்கள் வசம் வைத்துக் கொண்டன. அது மட்டுமல்ல, பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால் ராணுவம், பெரும் சுவர்கள் கட்டல் ஆகியவற்றை பேரரசு தன் வசம் வைத்துக் கொண்டது. மேலும், நீர்வழி கால்வாய்களை அமைப்பது, பாசன வசதிகளை பெருக்குவது போன்ற திட்டங்களையும் பேரரசு கவனித்துக் கொண்டது. உள்ளூர் அளவிலான சட்டம், நீதி, நிர்வாகம், கல்வி, உள்ளூர் குடிப்படைகளை பராமரிப்பது போன்றவற்றை உள்ளூர் அதிகாரிகள் கையாண்டனர். உள்ளூர் அதிகாரிகள் ஒரு ஏஜெண்டுகள் போல் செயல்படவில்லை. மாறாக அதிகாரம் படைத்தவர்களாகவே செயல்பட்டார்கள். இந்த அதிகார பகிர்வு ஒன்றுபட்ட பேரரசை பேணுவதற்கு பெரும் உதவியாக அமைந்தது.

சீனாவில் நீண்ட காலம் பேரரசுகளின் ஆட்சி நடைபெற்றதால் நிரந்தரமாக நிர்வாக வர்க்கத்தினர் உருவானார்கள். பேரரசுகள் இந்த நிர்வாக வர்க்கத்தினருக்கு உரிய அனைத்து உரிமைகளையும் கொடுத்து, அவர்களின் பசிக்கு தீனி போட்டு, பேரரசின் ஒற்றுமையை பாதுகாக்கும் பணியை செய்தார்கள். இவர்களின்றி ஒன்றுபட்ட பேரரசை பாதுகாக்க முடியாது என்ற நிலைமை இருந்தது. சீனாவின் ஆட்சி முறை என்பது ஒன்றுபட்ட சீனாவை நிலை நிறுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மஞ்சள் நதிப்படுகையில் உருவான காலத்திலிருந்து சீன நாகரிகத்திற்கு இடைவெளியற்ற ஒரு தொடர்ச்சி இருப்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். இந்தத் தொடர்ச்சியின் முக்கிய ஆதாரமாக சீன மொழியின் எழுத்து வடிவம் முன்வைக்கப்படுகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த சாங் இன அரச வம்சத்தினர் எழுத்து வடிவத்தை கண்டு பிடித்தனர். எழுத்து வடிவம் பண்டைய சாங் வம்ச காலத்தையும் தற்போதைய காலத்தையும் இணைத்து நிற்கிறது. இவர்கள் எலும்புகளில் எழுத்துக்களையும், படங்களையும் பொறித்தனர். சாங் ஆட்சி கால எழுத்துக்களுக்கு "ஆரக்கில் எலும்பு ஸ்கிரிப்ட்" (Oracle bone script) என்று அழைக்கப்படுகிறது. எகிப்தின் ஹைரோகிலிபிக்ஸ் (Hieroglyphics) போன்ற பண்டைய எழுத்துருக்கள் இன்று பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டன. சிந்துவெளி நாகரிக எழுத்தை இன்று நம்மால் படிக்க முடியவில்லை. ஆனால் டிராகன் எலும்புகளின் உள்ள எழுத்துக்களை இன்றைய சீனர்களும் படித்து விட முடிகிறது. எனவே காலத்தையும் இடத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கக்கூடிய சீன எழுத்துக்கள் அதாவது சீன மொழி சீன தேசியத்தின் அடிப்படையான சக்தியாக இருக்கிறது. இது மட்டுமே காரணம் என்று சொல்லி விடமுடியாது. சீன அரசியல் பின்புலங்களும் இதற்கு மற்றொரு காரணமாகும்.

கன்பூசியஸ் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகளை இந்த சாங் காலத்து எழுத்தைக் கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது. சித்திர வடிவத்திலான எழுத்துக்கள், காலந்தோறும் உச்சரிப்புகள் மாறினாலும் இடத்திற்கு இடம் மாறினாலும் எழுத்தின் அர்த்தம் மாறுவதில்லை. இது இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதுதான் நாகரிக தொடர்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாக நீடிக்கிறது. கணினி யுகத்தில் பல மொழி பேசக் கூடியவர்களுக்கு குறியீடுகள் ஒரே மாதிரியாக இருப்பதை தற்போது நாம் அறிந்திருக்கிறோம். இதேபோன்றுதான் சீன மொழி மாறுபட்ட உச்சரிப்புகளில் பேசினாலும் எழுத்தின் அர்த்தம் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எழுத்து வடிவத்தின் வயதை 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கண்டுபிடித்துள்ளனர். சீன மருத்துவர்கள் பலர் தங்களுடைய பாரம்பரிய மருத்துவத் தொழிலுக்காக பூமியில் புதைந்துள்ள விலங்குகளின் எலும்புகளை எடுத்து அவற்றை பயன்படுத்தினார்கள். இதற்கு டிராகன் எலும்புகள் என்று பெயர். இந்த மருத்துவர்கள் பயன்படுத்திய எலும்புகளில் வினோதமாக  ஏதோ கிறுக்கப்பட்டு இருப்பதை தற்செயலாக கண்டுபிடித்தார்கள். இந்த எலும்புகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்று ஆராய்ந்த போது அவை பெரும்பாலும் மஞ்சள் நதிப்படுகையில் அமைந்திருந்த சாங் பேரரசின் தலைநகரான ஆன் யாங் பகுதியில் இருந்துதான் கொண்டு வந்தார்கள் என்று கண்டுபிடித்தார்கள்.

இந்த எலும்பு சித்திரங்களை ஆராய்ந்து போது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாங் வம்சம் எனப்படும் பேரரசு காலத்தில் எழுதப்பட்டது என்று தெரியவந்தது. இவர்களின் ஆட்சி காலத்தில் ஆமை ஓடுகள், எலும்புகள் போன்றவற்றின் மீது எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்தார்கள். அதன் பிறகு நடைபெற்ற ஆய்வில் இந்தப் பகுதியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஓடுகள், எலும்புகளில் எழுதப்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் நாற்பதாயிரம் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் அறுநூறு எழுத்துக்களாக மாற்றப்பட்டு அச்சு வசதி ஏற்பட்ட பிறகு மேலும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

சீன தேசத்தின் ஒற்றுமைக்கு ஹான் தேசிய இனம் ஒரு காரணம் என்று மட்டுமே சொல்லலாம். பெரிய தேசிய இனம் என்பதால் அதுவே ஒற்றுமைக்கு அடிப்படை என்று மதிப்பீடு செய்ய முடியாது. ஹான் தேசிய இனம் சீனாவை ஒன்றுபடுத்தி நானூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது வரலாற்று உண்மை. இன்று உலகில் உள்ள மிகப்பெரிய இனம் இதுதான். உலகில் உள்ள  நூறு பேர்களில் இருபது பேர் ஹான் இனத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சள் இனம் என்று அழைக்கப்படுகிற மங்கோலாய்டு இனப்பிரிவில் ஹான் இனம் மிகப்பெரியது. ஜப்பானியர், கொரியர், மங்கோலியர்கள், எஸ்கிமோக்கள், பசிபிக் தீவு இனத்தவர்கள், இந்தியாவின் வடகிழக்கு இனக்குழுக்களில் பல இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மங்கோலாய்டு இனத்தை சேர்ந்தவர்கள்தான். சீனாவின் மீது படையெடுத்துச் சென்ற எல்லைப்புற இனத்தைச் சேர்ந்த மங்கோலியர், மஞ்சூரியர் போன்றவர்கள் ஹான் இனத்துடன் ஐக்கியமானார்கள்.

ஹான் இனத்தின் ஆட்சி காலத்தில் சீன தேசியம் உருவானது என்ற கருத்து உள்ளது. உண்மையில் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக சீன தேசிய கருத்துக்கள் உருவாகி இருந்தது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். நவீன பாணியிலான தேசியம் என்பது 19வது நூற்றாண்டின் கடைசியிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் உருவானது என்பதுதான் உண்மை.  மஞ்சு வம்சங்கள் குயிங் (சிங் என்றும் அழைப்பார்கள்) வம்ச ஆட்சி காலத்தில் தைப்பிங் விவசாயிகள் கிளர்ச்சி பதினான்கு ஆண்டுகள் நடந்த பொழுது தேசிய உணர்வு மேலோங்கியது. இது அடிப்படையில் விவசாயிகள் கிளர்ச்சி என்றாலும், இதற்கு தலைமை தாங்கி அவர்கள் தேசிய உணர்வுகளையும் பயன்படுத்தினார்கள்.

சீன ஒற்றுமையின் மற்றொரு முக்கிய காரணம் அந்நாட்டின் பேரரசுகள் தங்களைப் பற்றியும், உலகின் பிற பகுதிகளை பற்றியும் வைத்திருந்த மதிப்பீடுகள். பூமியின் நடுநாயகமாக இருக்கக்கூடிய நாம்தான் நாகரிகமானவர்கள், மற்றவர்கள் நாகரிக வளர்ச்சி அடையாதவர்கள் என்று கருத்தை வைத்திருந்தார்கள். அதே நேரத்தில் தங்களுக்கு அப்பால் உள்ளவர்கள் நாடோடிகள் எந்த நேரத்திலும் நமது தெய்வீக தேசத்தை தாக்கலாம் என்ற அச்சத்தோடும் இருந்தார்கள்.

மேலும் இதர நாடுகள் மீது படையெடுக்கும், ஆக்கிரமிக்கும் தேசியமாக சீன தேசியம் இருக்கவில்லை. ரோமானிய பேரரசு மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமித்தது. ஐரோப்பிய நாடுகள் பலவும் காலனிகளை ஆக்கிரமித்து உருவாக்கியது. சீன வரலாற்றில் அவ்வாறு நடக்கவில்லை. சீனாவுக்கு அருகில் இருந்த ரஷ்யா, ஜப்பான், மேற்காசியா, மத்திய ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையில் தங்களுடைய சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற யுத்தம் நடந்ததை பார்க்க முடியாது. கிழக்கு ஆசியாவின் மீது கூட சீனாவின் செல்வாக்கு யுத்தத்தினால் ஏற்பட்டது அல்ல. சீனா, திட்டமிட்ட ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை; கடல் கடந்து சென்று கொடி நாட்டியதும் இல்லை. செங்கிஸ்கான், மகா அலெக்சாண்டர் போன்றவர்களுக்கு சமமான பேரரசர்கள் இருந்தாலும் அவர்கள் நாடு பிடிக்கும் செயலில் ஈடுபடவில்லை. சீனா தொடர்ந்து ஒற்றுமையுடன் ஒன்றுபட்ட சீனாவாக நீடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது

செவ்வாய், பிப்ரவரி 18, 2025

4.சீனா தனக்குள் ஒரு உலகம்

 



சீனா ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நாகரிகத்தின் வரலாற்றுக்கு சொந்தமான தேசம் மட்டுமல்ல, நீண்ட காலம் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றை கொண்ட தேசம் என்ற சிறப்பையும் அது பெற்றிருக்கிறது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இந்த நீண்ட வரலாறு நெடுகிலும் சீனா, தனித்தே பயணப்பட்ட தேசமாக திகழ்கிறது. அதோடு, வரலாற்றில் சீனா, பல துண்டுகளாக நிரந்தரமாக பிரிந்து மாறிவிடாமல் ஒன்றிணைந்த தேசமாகவே இன்று வரை வெற்றி கண்டு வந்துள்ளது. சீனாவின் தனித்துவம் வரலாற்று ஆசிரியர்களுக்கே வியப்பை ஏற்படுத்தி வரலாறு படைத்துள்ளது.

மேற்கத்திய நாடுகளின் கலாச்சார திணிப்பு, அரசியல் வடிவங்கள், முதலாளித்துவ ஜனநாயக முறைகள் போன்றவை சீனத்தின் மீது முழுமையாக செல்வாக்கு செலுத்த முடியவில்லை. பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகள் காலனிகளாக வைத்திருந்த   இந்தியா உட்பட பல நாடுகளில் தங்களின் அரசியல் வடிவங்களை திணித்துச் சென்றன. சீனாவில் இது நடைபெறவில்லை.

உலகின் பிறபகுதிகளில் குறிப்பாக மேற்காசிய பகுதிகளில் பாபிலோனியாவிலும், பாரசீகத்திலும்,  அஸீரியாவிலும், கிரேக்கம், மாசிடோனியா ஆகிய நாடுகளில் போர்கள் நடைபெறுவதும், அவற்றின் மூலமாக வெற்றி கொள்வதும் இயல்பாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வெற்றி பெற்ற நாடுகளின் கலாச்சாரங்களை தோல்வி அடைந்த நாடுகள் மீது திணிப்பதும், இணைப்பதும் நடந்து கொண்டிருந்தன. அதனால் மோதல்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

இதுபோன்ற நிகழ்வுகள் அருகில் இருந்த சீனாவை எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் வியப்புகளில் ஒன்றாகும். உலகை ஈர்த்த ரோமப் பேரரசின் வெற்றிகள்கூட சீனதேசத்தின் எல்லைக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வரலாற்று உண்மை. படையெடுப்புகளில் மிகப் பெரும் அளவு இதர நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய முகமதியர்களின் வெற்றிகள் கூட கங்கை பிரதேசங்களில் இருந்து மத்திய தரைக்கடலில் இருக்கக்கூடிய லேவண்ட் (Levante) தீவுகள் வரை பரவியிருந்தது. அது மட்டுமல்ல இந்த வெற்றிகள் தெற்காசியாவின் முகத்தோற்றத்தை கூட மாற்றி அமைத்தது. இந்தப் படையெடுப்பின் தொடர்ச்சி ஐரோப்பாவை கைப்பற்றும் அளவிற்கு அச்சுறுத்தலாகவே மாறியது. இப்படிப்பட்ட நீண்ட தாக்கத்தை ஏற்படுத்திய படையெடுப்புகள் சீன எல்லைக்குள் ஊடுருவவில்லை என்பதுதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தனித்துவ அம்சமாக வரலாறு பதிவு செய்துள்ளது.

பொதுக் காலத்தின் (கிபி) இருபது நூற்றாண்டுகளில், சீனதேசம் பதினெட்டு நூற்றாண்டுகள் அந்நிய நாடுகளின் படையெடுப்புகள் இல்லாமல் பயணித்தது. மங்கோலிய வம்சத்தைச் சேர்ந்த மன்னன், செங்கிஸ்கானின் பேரன் குப்ளாய் கான் சீனதேசம் முழுவதையும் கைப்பற்றி, யுவான் வம்சம் என்ற பெயரில்  நூறு ஆண்டுகள் (1271-1368) மட்டுமே ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சிக்கு எதிராக சீன மக்களிடம் தேசிய உணர்வுடன் கூடிய எழுச்சி ஏற்பட்டதால் அவர் ஆட்சி வீழ்த்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் துவங்கி, இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பல ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உட்பட சீனாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தன. காலப்போக்கில் பெரும் பகுதி பிரிட்டிஷார் வசம் வந்தது. ஒன்றரை நூற்றாண்டுக்குள் காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

சீனா தனித்துவமும், ஒன்றுபட்டும் இருந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. வரலாற்றின் பெருமைகளை சீன மக்கள் என்றும் கைவிட்டதில்லை. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் அவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்தி வந்தது முக்கிய அம்சமாகும். சீனாவில் ஆதிகாலத்தில் இருந்து சரித்திரங்கள் ஒழுங்கான முறையில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. உலகத்திலேயே மிகப் பழமையான சரித்திர ஏடுகளை சீனாவில் காணலாம். அவ்வப்போது நடைபெறக்கூடிய நிகழ்வுகளை ஆண்டுகள் வாரியாக பதிவுசெய்து இருக்கிறார்கள். சரித்திர ஆசிரியர்களுக்கு அரசின் ஆதரவு இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது காலத்திற்கு முன்பு (B.C.E) 841 ஆம் ஆண்டில் இருந்துதான் வரிசைக்கிரமமாக நிர்ணயித்து சொல்ல முடிகிறது என்றும், அதற்கு முந்தியவற்றை உத்தேசமாகத்தான் சொல்ல முடிகிறது என்றும் சில அறிஞர்கள் கூறுகிறார்கள். வருடங்கள் வித்தியாசங்கள் இருக்கலாமே தவிர நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக எழுதப்பட்டதில் வித்தியாசம் காண முடியாது என பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வரலாற்றின் வேர்களை தன்னகத்தே சீன சமூகம் கொண்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மனித பரிணாம வளர்ச்சியில் பீகிங்மேன் என்று அழைக்கப்படுகிற ஹோமோ எரக்டஸ் சிற்றினத்தைச் சார்ந்த மனித மூதாதையர்களின் காலம் 3,60,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருதப்படுகிறது. இந்த மனித இனத்தின் சுவடுகளை ஆய்வாளர்கள் சீனாவில் கண்டெடுத்துள்ளனர்.

சீனர்கள் ஆரம்பத்தில் தங்கள் நாட்டை சீனா என்று அழைக்கவில்லை. தங்கள் நாட்டு பெயரை சுங்-ஹூவா அல்லது சுங்-குவோ என்று பெருமையோடு அழைத்துக் கொண்டார்கள் இரண்டு பெயர்களையும் சேர்த்து சுங்-ஹூவாமின்-குவோ என்று அழைக்கிறார்கள். சுங் என்றால் மத்திய பகுதி. ஹூவா என்றால் புஷ்பம். குவோ என்றால் நாடு. பூமியின் மத்தியில் உள்ள புஷ்பம் போன்ற அல்லது புகழ் நிறைந்த நாடு என்று பொருள்படும் வகையிலேதான் அழைத்தார்கள்.

சீனாவின் வடமேற்கில் உள்ள கான்ஷூ, சென்ஷி என்ற இரண்டு மாகாணங்களில் சௌ வம்சத்தினர் ஆண்டு வந்தனர். இந்த பிரதேசத்திற்கு அப்பொழுது  சின் என்று பெயர். இவர்கள் சுற்று வட்டாரத்தில் இருந்த  பகுதிகளை தங்களது படை பலத்தால் இணைத்துக் கொண்டு அனைத்து பகுதிகளையும் சேர்த்து சின் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். இந்தப் பெயர் தான் சீனா என்ற பெயராக மருவி, வெகு காலமாக சீனா என்று அழைக்கப்படுகிறது.

சீன மக்களின் தனித்துவமான  சமூக அரசியல் வாழ்க்கைக்கு புவியியலின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சீனா மித தட்பவெட்ப சீதோஷண நிலையை கொண்டிருக்கக் கூடிய நாடு இதனால் வளமான பிரதேசங்கள் அதிகமாக இருக்கும். இந்த மண் வளத்தை பயன்படுத்தி தங்களது விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி கொண்டார்கள். எனவே சீன மக்கள் தங்களது வாழ்க்கை தேவைகளுக்காக எந்த நாட்டையும் சார்ந்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை. இதேபோன்று கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது. இந்த கனிம வளங்களை தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். சீனாவின் கிழக்கும் தெற்கும் கடலால் சூழப்பட்டது. மேற்கே கோபி பாலைவனமும், தென்மேற்குப் பகுதியில் இமயமலையும் அமைந்திருந்தது. இயற்கையிலேயே மூன்று புறங்களிலும் சீனா இயற்கையை தன் அரணாக கொண்டிருந்தது. இதனால் மகாஅலெக்சாண்டர் உட்பட படையெடுப்பாளர்கள் சீனாவிற்குள் வந்து வெற்றிபெற முடியவில்லை. சீனாவின் வடபகுதியில் மட்டும்தான் அந்நியர்கள் படையெடுத்து வர முடிந்தது.

மங்கோலியர்களும், மஞ்சூரியர்களும், பிற நாடோடி இனத்தவர்களும் அடிக்கடி இந்தப் பகுதியிலிருந்து படையெடுத்து வந்தார்கள். இதனால் இவற்றை நிரந்தரமாக தடுப்பதற்கு சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இருந்தும் முழுமையாக படையெடுப்புகளை தடுத்துநிறுத்த முடியவில்லை. எல்லைப் புற தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவை சீன சமூகத்தை பாதிக்கவில்லை. காரணம் படையெடுத்து வந்த மங்கோலிய, மஞ்சூரிய மற்றும் பிற நாடோடி இனத்தவர்கள் சீனாவின் உள்ளே நுழைந்தபிறகு அதன் பிரம்மாண்டத்தை கண்டு அஞ்சினார்கள். தங்களை சீனக் கலாச்சாரத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. படையெடுப்பாளர்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியவில்லை. தங்கள் கலாச்சாரத்தை திணிக்கவும் முடியவில்லை.

சீனாவோடு ஒப்பிடக்கூடிய பெரும் நாடாக இந்தியா மட்டும்தான் அன்று இருந்தது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சமூக கலாச்சார பொருளாதார உறவுகள் மிக மிகக் குறைவு. பட்டுப்பாதையில் மட்டும்தான் பிற்காலத்தில் வணிகம் நடைபெற்றது. இத்தகைய புவிசார் நிலைமைகள் சீனர்களின் அரசியல் சமூக தனித்தன்மைக்கு பெரும் காரணமாக அமைந்தது.  இதர நாடுகளுடன் உறவு கொள்ள முடியாத புவிசார் அமைப்புகளினால் தனிமைப்பட்ட தன்மைகளும் இதற்குள் உள்ளடங்கி இருந்தது. இது பற்றி பிற்காலத்தில் தோழர் மாசேதுங் குறிப்பிடுகிற பொழுது...

"இந்தியாவைப் பற்றி சீனர்களுக்கு தெரியும். ஆனால், வரலாற்றின் பெரும்பகுதி இவை இரண்டும் தனி இரண்டு ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டுதான் இருந்தது. இரு நாகரிகங்களும் பட்டுப்பாதையில் பொருட்களையும், பௌத்த செல்வாக்கையும் பரிமாறிக் கொண்டன. ஆனால் மற்ற இடங்களில் கிட்டத்தட்ட பரிமாற்றங்கள் நடைபெற முடியாத அளவிற்கு இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியால் தடுக்கப்பட்டன. மத்திய ஆசியாவின் பெரும் பாலைவனங்கள் சீனாவை பாரசீகம், பாபிலோனியா மற்றும் அதன் அருகில் இருந்த கிழக்கு கலாச்சாரங்களில் இணைய முடியாமலும் ரோமானிய பேரரசிலிருந்து பிரிந்தும் இருக்கும் அளவிற்கு செய்தன" என்று குறிப்பிடுகிறார்.

சீனர்கள் பண்டைய காலத்திலேயே நெல் சாகுபடியில் ஈடுபட்டார்கள்.  பொது காலத்திற்கு முன்பு (கிமு) 2100-ம் ஆண்டுகளில் சியா வம்ச ஆட்சி காலத்தில் நெல் சாகுபடி தழைத்தோங்கி இருந்தது. இது மஞ்சள் நதிப்படுகையில் ஒரு நிலையான நாகரிகம் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. இந்த நதிப்படுகையில்தான் அடுத்தடுத்த மூன்று வம்சங்களின் ஆட்சிகள் தோன்றி நடைபெற்றதற்கான சான்றுகளை கண்டுபிடித்து உள்ளார்கள். எனவே சீன மக்கள் விவசாய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலைத்த இடத்தில் வாழ்ந்தார்கள்.

ஐரோப்பிய, ஆரிய மேய்ச்சல் நில வாழ்க்கை, மங்கோலியர்களின் நாடோடி வாழ்க்கை போன்று இவர்களின் வாழ்க்கை இடப்பெயர்வு வாழ்க்கை இல்லை. விவசாய வாழ்க்கையின் காரணமாக சீனர்கள் உலகின் இதரப் பகுதிகளுக்கு புலம் பெயர வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது. விவசாய சமூக வாழ்க்கையின் பின்னணியில்தான் சீனத்தின் அரசியல் செயல்பாடுகளும் அமைந்திருந்தது. விவசாயிகளிடமிருந்துதான் படை வீரர்கள் சென்றார்கள். பல பேரரசுகளை எதிர்த்து நடத்திய  கலகங்களை விவசாய பகுதியை சேர்ந்தவர்கள் தலைமை தாங்கி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது இந்தப் பின்னணியில்தான் நடந்தது.

சீனாவின் தட்பவெட்ப சீதோஷ்ண நிலை என்பது சீனாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. சீனாவின் தென்கோடி நிலநடுக்கோட்ட பகுதி தட்பவெட்ப நிலையிலும், வடகிழக்குபகுதி வெயில் குறைந்த பகுதியாகவும், சீனாவின் கிழக்குப்பகுதி மூன்று பெரும் ஆறுகள் யாங்த்ஸி, மஞ்சளாறு, பெர்ல் ஆறு ஓடக்கூடிய பகுதியாகவும் அமைந்திருந்தது. சீன நாட்டில் 65 சதவீத இடங்கள் மலைப்பிரதேசங்களாக இருக்கிறது. உலகின் கூரை என்று சொல்லப்படும் திபெத் துவங்கி தென்மேற்கு பீடபூமியாகவும், நீண்ட மலைத்தொடர்களாகவும் செல்கிறது. தாக்ளமான் பாலைவனமும், மங்கோலியாவுடன் இணைந்திருக்க கூடிய கோபி பாலைவனமும், வடக்கு பகுதியில் மிகப் பரந்த புல்வெளியும் நிறைந்து காணப்படுகிறது. உலகில் உள்ள ஒரு சிலவற்றைத் தவிர அனைத்து தட்பவெட்ப நிலைகளும் சீனா என்ற பெரும் பிரதேசத்தில் காணப்படுகிறது. இவை அனைத்தையும் விட தென்சீனக்கடல், கிழக்கு சீனக்கடல், மஞ்சள் கடல், போஹாய்கடல் என 18000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீனாவின் நெய்தல் நிலம் நீண்டு செல்கிறது.

இத்தனை வளங்களைக் கொண்ட பழமையான சீனாவில் மக்கள் புலம்பெயர்ந்து செல்வதற்கு தேவை இல்லாமல் இருந்தது என்பதை அறிய முடியும். புவியியல் ரீதியான வரம்பு எல்லைக்குள் மக்கள் தங்களுக்கு இடையிலான உறவுகளை அமைத்துக் கொண்டார்கள். சீனப் பெருஞ்சுவர் என்ற மனிதபடைப்பு சீன மக்களின் பொது பாதுகாப்பாக அமைந்தது. சீனப் பிரதேசத்துக்குள்ளேயே நீளமான, அதிகமான சாலைகளும், நீர்வழிப் பாதைகளும் சீன மக்களை இணைக்கும் பொருளாதார காரணியாக அமைந்தது.

சீனாவின் தனித்தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய அதே நேரத்தில், சீன சமூகத்துக்குள் இருந்த வர்க்க முரண்பாடுகள் வளர்ந்து கொண்டே இருந்ததையும் தெரிந்து கொள்ள வேண்டும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும், உபரி உற்பத்தியும் மாற்றங்களையும்  வர்க்க மோதல்களையும் உருவாக்கிக் கொண்டு இருந்தது.

3.தெய்வீக சக்கரவர்த்திகளும் சபிக்கப்பட்ட மக்களும்

 



சௌவ் வம்சத்திற்கு பிறகு சீனாவில் 255 ஆண்டுகள் போர்க்காலமாகவே இருந்தது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற கதையாக சீனாவில் பல சிற்றரசர்கள் உருவாகினர். பிரதேசங்கள் இணைவதும் பிரிவதும் தொடர் நிகழ்வானது. எல்லைகள் மாறிக்கொண்டே இருந்தன.  சீனாவில் இருந்த சிற்றரசுகளில் சக்தி வாய்ந்த சிற்றரசாக சின் பிரதேசம் இருந்தது. இதன் அரசன் மற்ற சிற்றரசர்களைக் காட்டிலும் வலிமை மிகுந்தவராக இருந்தார். பிசிஇ 221 ஆம் ஆண்டு சௌவ் வம்சத்திற்கு முடிவு கட்டப்பட்டது. அதன் கடைசி மன்னனை வெற்றிக் கொண்ட அரசன் தன்னை சீன சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார். அவர் பெயர் சின் ஷி ஹூவாங் தீ என்பதாகும். இதற்கு தெய்வீக சக்கரவர்த்தி என்று அர்த்தம்.

கின் வம்ச காலத்தில் சீனா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போனார்கள். பேரரசரின் ஒருங்கிணைப்பு மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு வழி வகுத்தது. அரண்மனைகள், பெரிய கட்டிடங்கள், சாலைகள் பிரம்மாண்டமாக உருவாகின. இந்த வம்சத்தின் மன்னர், தனக்கு முன் யாராலும் செய்ய முடியாததை செய்து காட்டினார். அதாவது சீனாவை ஒன்றிணைத்து ஒரு சக்தி வாய்ந்த அரசாக மாற்றினார். சிதறிக் கிடந்த ராணுவ அமைப்புகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து பலமான ராணுவத்தை கட்டமைத்தார். தேச பாதுகாப்பிற்காக பல இடங்களில் தற்காப்புசுவர்கள் கட்டப்பட்டன. ஒரு பேரரசு தொடர்வதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. கின் வம்ச சக்கரவர்த்தியின் சாதனைகளும், அவரால் மக்களுக்கு ஏற்பட்ட வேதனைகளும் வரலாற்றில் நிலைத்து நின்றது. சிற்றரசுகளாக இருந்தபடி எப்போதும் போரிட்டுக் கொண்டு மக்களின் அமைதியை குலைத்து வந்த பிரதேசங்களை முழுவதுமாக கின் பேரரசர் வெற்றி கொண்டு தன் குடையின் கீழ் கொண்டு வந்தார். சீனாவை 36 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனி அதிகாரியை நியமித்து திறம்பட நிர்வகித்தார். அவர் ஆட்சிக் காலத்தில் அமைதி இருந்தது. ஆனால், மக்களுக்கு உரிமைகள் பறிபோனது. உரிமையை விட அமைதிக்கே அப்போது மக்கள் முன்னுரிமை கொடுத்தனர்.   

ஆனாலும் சீனாவின் வடக்கு பகுதியில் இருந்து தார்தாரியர்கள் என்பவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலை நடத்தி மக்களின் அமைதியை சீர்குலைத்தார்கள். இந்தத் தொடர் தாக்குதலை தடுப்பதற்காக வடக்கு எல்லையில் நீண்ட சுவர் எழுப்ப சக்கரவர்த்தி தீர்மானித்தார்.  2650 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு சுவர் எழுப்பினார். சீனப்பெருஞ்சுவரின் மொத்த நீளம் 21196 கிமீ ஆகும். இதை கட்டி முடிக்க 3 லட்சம் பேர் வேலை செய்தனர். சிறைக் கைதிகளும், அரசுக்கு ஆகாதவர்களும் இந்த வேலையை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். 

சின் ஷி ஹூ வாங் தீ  சக்கரவர்த்தியாக மாறிய பிறகு தன் புகழ்பாடிகளை மட்டும் நல்லபடியாக பார்த்துக் கொண்டார். அவருக்கு முன்னால் இருந்த அரசர்கள், அறிஞர்கள் மற்றும் வரலாறை யாராவது புகழ்ந்து பேசினால் அவர்களை ஒடுக்கி உருத்தெரியாமல் செய்வதை கொள்கையாகவே வைத்துக் கொண்டிருந்தார். தங்கள் (கின் வம்ச) ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட வரலாறு, மத நூல்கள், வைத்திய நூல்கள், விவசாய நூல்கள், மந்திர சாஸ்திர நூல்கள்தான் இருக்க வேண்டும். அதற்கு முந்தைய எதுவும் இருக்கக்கூடாது. அவற்றை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அரச கட்டளை அப்படியே நிறைவேற்றப்பட்டது. தேசம் முழுவதும் இருந்து வரலாற்று நூல் உள்பட பல வகையான நூல்கள் தலைநகருக்கு எடுத்து வரப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான நூல்கள் எரிக்கப்பட்டன. பல தரப்பட்ட அறிவு, அக்னிக்கு இரையாக்கப்பட்டது. தங்களது அரிய அறிவு பொக்கிஷங்களை தர விரும்பாத பலர் தங்களை தாங்களே எரித்துக் கொண்டனர்.

இன்று இந்தியாவை ஆளுகின்றவர்களும் ஒரு தேசம், ஒரு தலைவர், ஒரு மதம், ஒரு மொழி என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர். வரலாற்றை தங்களுக்கு ஏற்றாற்போல் வளைத்துக் கூறி, திரித்து கூறி திரிந்து கொண்டிருக்கின்றனர். அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வரலாறாக கட்டமைத்து, ஒற்றை தலைமையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுகள் நனைகிறதே என்று இந்துத்துவ ஓநாய்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.

எல்லா சிற்றரசர்களையும்  வெற்றிகொண்ட பிறகு ‘தெய்வீக சக்கரவர்த்தி’ செய்த காரியம், அந்த பிரதேசங்களில் இருந்து எல்லா ஆயுதங்களையும் ஆயுத தளவாடங்களையும் தலைநகருக்கு கொண்டு வரச் செய்து அவற்றை உருக்கி விட்டார். அதைக் கொண்டு பல உருவச் சிலைகளை உருவாக்கி விட்டார்.  இதன் மூலம் அந்த பிரதேசங்களில் மக்களை நிராயுதபாணியாக்கி விட்டார். அரண்மனைகளை கட்டுவதில் அலாதி ஆர்வம் கொண்டு, தலைநகரைச் சுற்றி  70 மைல்கள் சுற்றளவில் 270 ஆடம்பர அரண்மனைகளை கைதிகளைக் கொண்டே கட்டி முடித்தார். பி.சி.இ. 210 ஆம் ஆண்டில் தெய்வீக சக்கரவர்த்தி (சின் ஷி ஹூ வாங் தீ) இயற்கை எய்தினார். அத்துடன் கின் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. குறுகிய காலமே (15 ஆண்டுகள்) கின் வம்சம் ஆண்டாலும், ஒரு பேரரசு உருவாக கின் வம்சம்தான் அடித்தளம் அமைத்து கொடுத்தது.

பி.சி.இ. 206ஆம் ஆண்டு ஹான் அரச வம்சம் ஆட்சியை கைப்பற்றியது. ஹான் வம்சத்தை உருவாக்கியவர் லியூ பாங்க் என்ற விவசாயி ஆவார். லியூ பாங்க் தான், விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கி படை அமைத்து கின் வம்சத்தை வீழ்த்தி ஹான் வம்சத்தை ஆட்சிபீடத்தில் ஏற்றினார். உலகத்திலேயே முதல் முதலாக  மக்கள்திரள் பங்குபெற்ற புரட்சி இதுதான் என்று சீன சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  இந்த வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் மொத்தம் 26 பேர். 420 ஆண்டுகள் வரை ஹான் வம்சம் சீனாவை ஆட்சி செய்தது. சீனாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் தங்களை ஹான் வம்சத்தினர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றனர். 

ஹான் வம்ச ஆட்சிக் காலத்தில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிலவரி ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்தின் அநீதியான சட்டங்கள் நீக்கப்பட்டன. மன்னர்களின் ஆடம்பர செலவுகள் குறைக்கப்பட்டன.  புதிய அரண்மனைகள் கட்டப்படவில்லை. கனிமங்கள் அரசுடமையாக்கப்பட்டன. இரும்பு, உப்பு ஆகியவற்றை  அரசே உற்பத்தி செய்தது. வருமான வரி கணக்கிடும் முறை கொண்டு வரப்பட்டது. ஐந்து சதவீத வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது. நாணய புழக்கம் அதிகமானது. பாலங்கள், கால்வாய்கள் ஹான் வம்ச ஆட்சிக் காலத்தில் பல்கிப் பெருகின.

தலைநகரத்தில் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட பொது நூலகம் அமைக்கப்பட்டது. வெளிநாடுகளுடன் அதிக வணிகத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. தபால் முறைகள் கொண்டுவரப்பட்டன. சீனாவில் முதல் நூற்றாண்டிலேயே காகிதம் கண்டுபிடிக்கப்பட்டதால், உலகத்திலேயே முதன்முதலாக காகிதத்தை உற்பத்தி செய்து அதில் எழுத தொடங்கியவர்களும் அதன் மீது அச்சடித்து புத்தகம் உருவாக்கியவர்களும் சீனர்களே ஆவார்கள்.   ஹான் வம்ச காலத்தில் நிறைய நூல்கள் எழுதப்பட்டன; நிறைய நூல்கள் அச்சிடப்பட்டன. சீன சரித்திரத்தின் தொடர்ச்சி எழுத்தில் கொண்டுவரப்பட்டது. ஹான் வம்ச ஆட்சி காலத்தில்தான் சீனாவில் கன்பூசியஸ் மதம், அரச மதமாக அறிவிக்கப்பட்டது. புத்த மதமும் அப்போதுதான் சீனாவில் காலடி எடுத்து வைத்தது. 

சீனாவின் வலிமையான பேரரசுகளில் மிக முக்கியமானதாக ஹான் வம்சப் பேரரசு கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் மக்கள் தொகை எண்ணிக்கையில் 5.5 கோடியை கடந்தது. பேரரசின் எல்லைகள் கொரியா, மங்கோலியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் மத்திய ஆசியாவின் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன.

மக்கள் தொகை வளர்ச்சியால் தேவைகள் அதிகமாகின. அது வேளாண்மை, கைத்தொழில், வணிகம் ஆகியவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தியது. அரசு, நிலங்களை கைப்பற்றி மீண்டும் மறுவிநியோகம் செய்தது. ஏற்கனவே சிறப்பு பெற்றிருந்த சீனப்பட்டு தொழில் மேலும் விரிவடைந்தது. பி.சி.இ190ல் ‘உய்’  அரசனால் தொலைநோக்குப் பார்வையுடன் பட்டுப்பாதை அமைக்கப்பட்டது. இதனால் இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் வணிகத்தில் பெரும் பயனடைந்தன. கல்வி, அரசுடைமை ஆக்கப்பட்டது மட்டுமல்ல நாடு தழுவிய தேர்வு முறையும் கொண்டுவரப்பட்டது. தொழில்நுட்பத்தில் சமகால ரோமானிய பேரரசுக்கு இணையாக வளர்ந்தது. காகிதங்களை அதிகமான முறையில் இக்காலங்களில் உற்பத்தி செய்ததால், அதற்குரிய தொழிற்சாலைகள் அதிகமாகின. தொழிலாளர்களும் அதற்கேற்ப அதிகமானார்கள். எழுதப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. கலை இலக்கியம் செழித்தது. வரலாறு குறித்த பார்வை மேம்பட்டது. நிலத்தை உடமையாக வைத்திருந்த பணக்கார குடும்பங்கள்தான்  ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தின. 

ஹான் பேரரசு பி.சி. 220 ஆம் ஆண்டு வீழ்ச்சி அடைந்தது. ஹான் வம்சப் பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு சுமார் 400 ஆண்டு காலம் சீனாவில் நிலையற்ற அரசுகளால் குழப்பங்களும், அமைதியின்மையும், அதிகரித்தன. வடக்கு சீனா, தெற்கு சீனா, மேற்கு சீனா என்று மூன்று பிரதேசங்களாக மாறி மூன்று ராஜ்ஜியங்களின் ஆட்சி நடைபெற்றது. வடக்கு சீனாவில் மட்டும் 16க்கும் மேற்பட்ட  சிற்றரசுகள் செயல்பட்டு வந்தன. இதனால் தார்த்தாரியர்கள் மீண்டும் படையெடுத்தார்கள். சில பகுதிகளில் வென்றார்கள்; ஆனாலும் அங்கு தொடர்ந்து நீடிக்க முடியாமல் வெளியேறினார்கள். இந்த காலகட்டத்தில் சீனாவில்  புத்த மதம் மிக வேகமாக  பரவியது. ஏராளமான புத்த மடங்கள் உருவாகின. புத்த பிக்குகளும் அதிகரித்தனர். புத்த மதத்தை அறிந்து கொள்ள சீனர்கள் பலர்  இந்தியாவிற்கு பயணப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில்  இந்தியாவிற்கு வந்தவர் தான் பாஹியான் ஆவார்.

மேலும், நிலையற்ற அரசுகள் இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் சீனர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்றிருந்தனர். சக்கரத்திற்கு தேவையான கண்டுபிடிப்புகள், சதுர வடிவிலான வில், நீர் ஆற்றலில் இயங்கும் பொம்மைகள், நீர் பாய்ச்சலுக்கு தேவையான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிபொருட்களும், திசைகாட்டி கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டன. 

நானூறு ஆண்டுகள் குழப்பத்திற்கு பிறகு மக்களின் சலிப்பும் இழப்பும் உச்சத்தை அடைந்த காலகட்டத்தில் 618 ஆம் ஆண்டு தாங் வம்சம் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியது. இந்த ஆட்சி 907 ஆம் ஆண்டு வரை சுமார் 289 ஆண்டு காலம் நிலை பெற்றது. இந்த வம்சத்தில் 23 மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்தார்கள். இந்த வம்சத்தை  சேர்ந்த தை  த்ஷூங் என்ற மன்னன் மகா அலெக்சாண்டருக்கு  சமமான முறையில் பேசப்படுகிறார். அவர், மன்னருக்கான ஆடம்பரங்களைத் துறந்தார். குற்ற செயல்களை குறைக்கக்கூடிய ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தார். சிறைக் கைதிகளை திருத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். மரண தண்டனைகளை குறைப்பது என்று முடிவுடன் செயல்பட்டார்.

இவர் காலத்தில்தான் இந்தியாவிலிருந்து பலர் புத்த மதத்தை பரப்புவதற்கு சீனாவிற்கு சென்றனர்.  பார்ஸி, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களும் அங்கு சென்று மதப்பிரசாரம் செய்துள்ளனர். இவர் காலத்தில் தான் யுவான் சுவாங் இந்தியாவிற்கு பயணப்பட்டார். சீனாவின் பல பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அறிஞர் பெருமக்கள் விவாதம் நடத்துவதற்கான ஏராளமான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 56,000 நூல்களைக் கொண்ட நூலகம் செயல்பட்டு உள்ளது. ஐரோப்பியர்களே சீனாவை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வப்பட்டார்கள்.

அடுத்தடுத்து வந்த மன்னர்களின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளாலும், மன்னராட்சியில் இருக்கின்ற வழக்கமான உள் பூசல்களாலும், தொடர்ந்து மக்களை புறக்கணிக்கிற போதும் மன்னராட்சி மண்ணைக் கவ்வுகிறது.  

தாங் வம்ச ஆட்சி 907 ம் ஆண்டு வீழ்ச்சி அடைந்த பிறகு 960 ஆம் ஆண்டு வரை சுமார் 50 ஆண்டுகள் 5 வம்சங்கள் சீனாவை ஆட்சி செய்தன. 960 முதல் சோங் வம்ச ஆட்சி தொடங்கியது. இதிலிருந்து 319 ஆண்டுகள் இந்த வம்சத்தின் பெயரைச் சொல்லி 1271 ஆம் ஆண்டுகள் வரை பல மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

இன்றைய சீன எல்லைகளுக்கு அப்பால் இருந்து முதல் முறையாக சீனாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த செங்கிஸ்கானின் பேரன் குப்ளாய் கான் ஆவார். இவர் தோற்றுவித்த வம்சத்தின் பெயர் யுவான் அரச வம்சமாகும். செங்கிஸ்கான் 1211 ஆம் ஆண்டு சீனாவின் வடபகுதி மீது படையெடுத்தார். சீனாவின் வடபகுதியை வெற்றி கொண்டார். சீனாவின் தெற்கு பகுதியையும் கைப்பற்றி நினைத்த அவர், அதற்குள் 1227 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து மங்கோலியர்கள் சீனாவின் உட்பகுதியில் இருந்த சில ஆட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு 1234 ஆம் ஆண்டு கின் ஆதிக்கத்தை தோற்கடித்து சீனாவின் மற்றொரு பகுதியை கைவசப்படுத்தினர். 1259 ஆம் ஆண்டு மங்கோலிய அரசின் தலைமை பதவிக்கு வந்த செங்கிஸ்கானின் பேரன்  குப்ளாய்கான் 1260 ஆம் ஆண்டு துவங்கி 1271 ஆம் ஆண்டு முழு சீனத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். எனினும் சீனாவின் எதிர்ப்பு பலமாக இருந்தது. தேசப்பற்று என்ற உணர்விலும், மங்கோலியர்களின் அன்னிய ஆட்சி என்ற முறையிலும் மிக வலுவான முறையில் மங்கோலியர்களின் ஆட்சிக்கு எதிர்ப்புகள் உருவாகின.

குப்ளாய் கான், சீனாவில் மிகப்பெரும் கால்வாய்களை வெட்டினார். குறிப்பாக தலைநகரத்திற்கு தானியங்கள் கிடைக்கின்ற வழியில் ஏற்கனவே துவக்கப்பட்டு நின்று போயிருந்த கால்வாயை நான்கு மாநிலங்கள் வழியாக மேலும் ஆழப்படுத்தி நீளமாக வெட்டியெடுத்து தலைநகருடன் இணைத்தார். இந்த கால்வாயின் நீளம் 1800 கிலோமீட்டர் ஆகும். ஆசிய அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும். மக்களுக்கு தேவையான தானியக்கிடங்குகளையும் பெரும் கட்டிடங்களையும்  கட்டினார்.

1271 முதல் 1368 வரை சுமார் 100 ஆண்டுகள் சீனாவை மங்கோலியர்கள் ஆட்சி செய்தார்கள். சீனாவில் ஏற்பட்ட அந்நிய ஆட்சி இதுதான் என்று வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.  குப்ளாய்கான் தலைமையிலான யுவான் வம்சம் சீனா முழுவதும் ஆட்சி செய்தது. முதல் முறையாக சீனா முழுவதும் ஆட்சி செய்த சிறுபான்மை இனம் யுவான் வம்சம்தான். இவர் காலத்தில் தான் 6400 கிலோமீட்டர் தூரம் உள்ள பட்டுப்பாதை அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக இருந்தது. ஐரோப்பிய சாகச பயணியான மார்க்கோ போலோ பல ஆண்டுகள் சீனாவில் பயணம் செய்தார். மங்கோலியர்களின் ஆட்சி காலத்தில் சீனாவில் பாரம்பரிய சமூக அமைப்பு மற்றும் கலாச்சாரம் மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்பட்டது. மங்கோலிய ஆதிக்கத்திற்கு எதிராக மக்களிடையே பொதுவான உணர்வுகள் மேலோங்கியது. இது ஒரு தேசிய உணர்வாக இருந்தது. மங்கோலியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரங்களால், சீனமக்களின் எழுச்சியால் யுவான் வம்சம் வீழ்ச்சி அடைந்தது.

அதன்பிறகு மிங் அரச மரபு ஆட்சியை கைப்பற்றியது. 1368 முதல் 1644 வரை மிங் அரச மரபினர் 276 ஆம் ஆண்டுகள் சீனாவை ஆட்சி செய்தனர். 17 மன்னர்கள் இந்த வம்சத்தின் பெயரால் ஆட்சி செய்தனர். இவர்களும் ஹான் இனத்தை சார்ந்தவர்கள்தான். ஆரம்ப கட்டத்தில் அரசு, கட்டுப்பாடும், ஒழுங்கும் நிறைந்ததாக இருந்தது. அடுத்தடுத்து வந்த அரசர்கள் சுகபோக வாழ்க்கையில் மூழ்கி திளைத்ததோடு, மக்களுக்கு எதிராகவும் செயல்பட ஆரம்பித்தனர். இதனால், ரகசிய இயக்கங்கள் உருவாகி அரசிற்கு எதிராக செயல்பட ஆரம்பித்தன. எதிர்த்தவர்களைப் பிடித்து மிங் அரசு சிறையில் அடைத்தது. தூக்கு மேடையில் ஏற்றியது.  மோசமான அரசாட்சியால் மக்கள் பசி, பட்டினியோடு வாழ்க்கை நடத்தினர். அவர்களிடமிருந்து அரசு கருணையற்ற முறையில் வரி வசூலித்தது. பட்டினி கிடப்பவர்களிடம் வரி வசூலித்து  மன்னர்கள்  ஆடம்பரங்களில் மூழ்கித் திளைத்தனர். இந்த காலகட்டத்தில், ஜப்பானியர்கள் சீனா மீது படையெடுத்தார்கள். மஞ்சூரியாவில் இருந்து மஞ்சூரியர்கள் சீனாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள். 

மிங் வம்ச ஆட்சியைப் பற்றி சிறப்பாக  சொல்வதற்கு வரலாற்றில் ஒன்றுமில்லை. ஆனாலும், சீனாவின் எதிர்கால வாழ்வுக்கு இந்த ஆட்சியின் போது அடித்தளம் போடப்பட்டது. சீனாவின் சரித்திர போக்கை வேறொரு வழியில் திருப்பி விடுவதற்கு இந்த ஆட்சி காரணமாக இருந்தது. சீனாவிற்கும் அந்நிய நாடுகளுக்குமான தொடர்பு இவர்கள் காலத்தில் வலுப்பட்டது. ஐரோப்பிய வியாபாரிகள் சீனாவிற்கு வந்தனர். வியாபாரிகளை பாதுகாக்கப் போர் வீரர்களும் வந்தார்கள். ஐரோப்பிய வல்லரசுகளின் வருகை மிங் ஆட்சி காலத்தில் ஆரம்பமானது.

உள்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி மற்றும் நெருக்கடியால் மிங் ஆட்சி, வீழ்ச்சியை சந்தித்தது. மஞ்சு இனத்தை சேர்ந்த குயிங் அரச மரபு ஆட்சியைக் கைப்பற்றியது. 1644 முதல் 1912 ஆம் ஆண்டு வரை இந்த அரச மரபினர் சீனாவை ஆட்சி செய்தனர். இதுதான் சீனாவின் வம்ச ஆட்சிகளின் கடைசி ஆகும். 1683 ஆம் ஆண்டிலேயே இன்றுள்ள முழு சீனாவையும் இதன் ஆட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. குயிங் வம்சம், ஏற்கனவே இருந்த பிரதேசத்தை இரட்டிப்பாக்கியது. வெளிநாட்டு அழுத்தங்கள், உள்நாட்டு குழப்பங்கள், போர்களில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் குயிங் வம்சம் சரியத் தொடங்கியது. 1911 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சின்ஹாய் புரட்சியை தொடர்ந்து முடியரசு வீழ்ந்தது. முதல் சீன குடியரசு உருவானது.

கடைசி பேரரசின் காலத்தில் ஐரோப்பியர்கள் வழக்கம்போல் வணிகம் என்ற பெயரால் உள்ளே நுழைந்தனர். அதிகாரத்தை கைப்பற்றினர். கடந்த 3000 ஆண்டுகள் சீனாவில் ஏற்படாத பெரும் மாற்றங்கள் ஏற்பட துவங்கின.

சனி, பிப்ரவரி 15, 2025

2. மஞ்சள் நதியின் பிரசவம்


நதிப்படுகையில்தான் நாகரிகங்கள் தோன்றின. ஆனால் சீன நாகரிகத்தை பிரசவித்த மஞ்சள நதி மாறுபட்டது. சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி இது. 5,464 கிலோமீட்டர் தூரம் ஓடி ஒன்பது மாகாணங்கள் வழியாக கடலில் சங்கமிக்கிறது. இதன் ஆற்றுப்படுகை மிகப் பெரியது. அடிக்கடி தனது போக்குகளை மாற்றி வெள்ளத்தை ஏற்படுத்தும்.எந்த திசை நோக்கி வெள்ளம் ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. இதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பேரழிவு உண்டாகும். இதை சீனாவின் துயரம் என்றும் அழைப்பார்கள். வரமும் சாபமும் இணைந்து பயணிக்கும் நதி இது.


1949ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு, 1960,1969,1992,2000 ஆகிய ஆண்டுகளில் சான்மென்சியா, லியுஜியாக்ஸியா, லாங்யாங்சியா, Xiaolangdi   ஆகிய இடங்களில் பெரும் அணைகளைக் கட்டி சீனாவின் துயரத்தை சீனாவின் செழுமையாக மாற்றினார்கள். பாலைவனங்கள் சோலைவனமாகவும், பெரும் நீர் மின்சக்தி உற்பத்தி இடமாகவும் மாற்றினார்கள். இந்த நதிப்படுகையில்தான் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீன நாகரீகம் பிரசவிக்கப்பட்டது.

இங்குதான் பண்டைய விவசாயிகளின் குடியிருப்புகளும், சிறு நகரங்களும் உருவாகி மக்கள் குழுக்களாக வாழ தொடங்கினார்கள். சீனாவின் கலாச்சார கோளத்தில் புவியியல் மையமாக இந்தப்பகுதி விளங்கியது. சீனாவின் எழுதப்பட்ட வரலாறுகளே 4000 ஆண்டுகளை கடந்து ஊடுருவிச் செல்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் அவர்கள் கடைபிடித்த சில பழக்க வழக்கங்களை இன்றும் கடைபிடிக்கிறார்கள் என்றால் அதன் தொடர்ச்சியை நாம் புரிந்து கொள்ள முடியும். சீன நாகரிகத்தின் அறுபடாத இழைகள் தொடர்வதாக வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்கிறார்கள். ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களில் (Afro-Eurasia) நாகரீக தொட்டில்கள் என்று அழைக்கப்படும் பண்டைய எகிப்து, மெசபடோமியா, இந்தியா போன்றே சீன நாகரிகமும் மிகப் பழமையானது. பண்டைய சீன மக்கள் எகிப்தியர்கள், அசீரியர்கள், யூதர்கள் போன்றவர்களுக்கு ஒப்பான முறையில் வாழ்ந்தார்கள்.

சீனா, நிலபிரப்புத்துவ உற்பத்தி முறையில் நீண்ட காலம் நீடித்தது. ஆசிய கண்டத்தில் இருந்த இதர நாடுகளைப் போலவே ஏன் இந்தியாவைப் போலவே அங்கும் நேரடி அடிமை உற்பத்திமுறை, ஆதிக்கம் செலுத்தவில்லை. அதற்கு மாறாக அடிமைகள் இருந்தார்கள். அதற்கான மாற்று வடிவமாக  பண்ணை அடிமை முறைகளும்,  நிலபிரப்புத்துவ உறபத்திமுறைகளும் ஆதிக்கம் செலுத்தின.  பொதுக்காலத்திற்கு முன்பு (BCE-Before Common Era) 2070 ஆண்டுகள் துவங்கி பொதுக்காலமான (CE-Comman Era) 1912 ஆம் ஆண்டுகள் வரை இந்த உற்பத்தி முறைகள் பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. பி.சி.இ (BCE)  221ஆம் ஆண்டு நிலபிரப்புத்துவத்தின் முழுமையான கூறுகளை உள்ளடக்கிய பேரரசுகள் உருவாகின.

பி.சி.இ 2070 ஆம் ஆண்டு சீனாவில் முதல் ஆட்சி வம்சமாக சியா அரச மரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசி அரச மரபாக  குயிங்(Qing) வம்சம் (சி.இ.1912வரை) பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காலத்தில் சீனப் பிரதேசங்கள் பல காலங்கள் ஒன்றுபட்டதாகவும், பல்வேறு காலத்தில் பிரிக்கப்பட்ட பகுதிகளாகவும், மோதல்களும், சச்சரவுகளும் மாறி மாறி அரங்கேறிக் கொண்டிருந்தது. வம்ச ஆட்சிமுறை என்பது சீனாவில் நிலப்பிரபுத்துவ சமுதாய உற்பத்திக் காலம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் நீடித்த மன்னர் ஆட்சி முறையாகும். பேரரசுகள் பி.சி.இ 221 இல் உருவாவதற்கு முன்பு சுமார் 1850 ஆண்டுகள் மேற்கண்ட போக்குகள் வரலாற்றில் நீடித்தது.

‘யூ தி கிரேட்’ என்கிற ‘யு ஜி இன்ஜினியர்’  என்பவர் பண்டைய சீனாவில் ஒரு புகழ் பெற்ற மன்னர். இவர்தான் சீனாவின் முதல் அரச வம்சமான சியா வம்சத்தின் ஆட்சியை நிறுவினார். மஞ்சள் நதி வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் இவர் திறமையாக செயல்பட்டதால் இவரின் புகழ் புராணக் கதைகளாக கூட பதிவு செய்யப்பட்டுள்ளன. நேர்மையும் தார்மீக உணர்வும் கொண்டவர் என்பதால் இவரின் பெயர் பல இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வம்சத்தின் ஆட்சி காலம் பி.சி.இ. 2070-ல் தொடங்கி பி.சி.இ. 1766 வரை நீடித்தது. மத குருக்கள் ஆட்சியில் செல்வாக்கு செலுத்தினார்கள் என்றும் முறையான அதிகாரங்களை பயன்படுத்தியதாகவும்  பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான குறிப்பு என்னவென்றால், இவர்கள் ஆட்சி காலத்தில்தான் சீன நாட்காட்டிகளை தொகுத்து அளித்தனர். பிற்காலத்தில் உருவான கன்பூசியஸ் உட்பட பல அறிஞர்கள் யூ தி கிரேட் என்ற மன்னரின் அமைதியான நல்லாட்சி என்று பாராட்டியுள்ளனர்.  இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து ஆரம்ப காலத்திற்கான ஆதாரங்கள் மிக குறைவாகவே கிடைத்துள்ளது.

ஒரு அரச மரபின் வீழ்ச்சியை தொடர்ந்து உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்த அரச வம்சத்தை முன்னிலும் வலுவானதாக உருவாக்கியது. பி.சி.இ 1600 முதல் பி.சி.இ 1046 வரை சாங் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். சீனாவில் கிடைத்துள்ள எழுத்து ஆதாரங்கள் அனைத்தும் இக்காலத்தை சேர்ந்தவை. இவர்கள் ஆட்சி காலத்தில் சிறு நகரங்களை கட்டி அமைத்தார்கள். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க நிர்வாகத்தையும் உருவாக்கினார்கள். மக்கள் விவசாயத்தில் தினை வகைகளை பயிரிட்டனர். தங்களது பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காக அடிக்கடி போர்களை நடத்தினார்கள். வெண்கல தொழில்நுட்பம், குதிரை வளர்ப்பது, குதிரை இழுக்கும் தேரை அறிமுகப்படுத்தியது இவர்களின் ஆட்சி காலத்தில்தான். சீனாவில் முழு வளர்ச்சி அடைந்த எழுத்து முறையை கொண்ட முதல் கலாச்சாரம் இவர்கள் காலத்தில் எழுச்சி பெற்றது.

சீன வரலாற்றில் நீண்ட காலங்கள் ஆட்சி செய்த அரசமரபு  சோவ் அரச மரபாகும். பி.சி.இ 1045 முதல் பி.சி.இ 256 வரை சுமார் 789 வருடங்கள் சீனாவை ஆண்டனர். இக்காலத்தில்தான் இரும்பு, சீனாவின் வாழ்க்கையில் பிரவேசித்தது. செப்பு சிற்ப வேலைகள் உச்சங்களை கண்டது. சீன மொழியின் எழுத்து முறை விரிவடைந்தது. இக்காலத்தில் சீனாவில் பெரும் தாக்கங்களை உருவாக்கிய சிந்தனை முறைகள் தோன்றின. கன்பூசியஸ்,  லாவோஸ், மோகி, ஆன்பெய், மென்சியஸ்சூ போன்ற அறிஞர்கள் இக்காலத்தில் உருவானார்கள். இவர்கள் சீன சிந்தனை மரபில் முக்கிய இடம் பெற்றவர்கள் ஆவார்கள். கன்பூசியனிசம், தாவோயிசம், சட்டவாதம் போன்ற பல தத்துவ பள்ளிகள் இக்காலத்தில் உருவானது. அறிவு சாகசத்தின் காலமாக இக்காலம் நினைவு கூரப்படுகிறது. இந்த தத்துவ பள்ளிகளில் மிகவும் பிரபலமானவை கன்பூசியசால் பி.சி.இ 551-479 காலத்தில் நிறுவப்பட்டதாகும்.

மன்னராட்சி முறையில் ஒடுக்கு முறைகள் மக்களை கிளர்ச்சி செய்யும் நிலைக்குத் தள்ளியது. அதிருப்திகள் மேலோங்கி ஆட்சி அதிகாரத்தை அசைத்தது. அதுவரை ஓரளவு பிரதேசங்களை கட்டுப்படுத்தி வந்த அரச வம்சங்கள் சிதைந்தது. பி.சி.இ 476 ஆம் ஆண்டுமுதல் பிசிஇ 221 ஆம் ஆண்டு வரை சீன வரலாற்றை போரிடும் காலங்களின் வரலாறு என்று அழைக்கிறார்கள். ஒன்றுபட்ட அரசு பிரிந்து ஒருவருடன் ஒருவர் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இவற்றில் ஏழு பிரதேசத்தின் அரசுகள் ஓரளவு வலுப்பெற்று இருந்தன. இவர்களுக்கிடையிலான யுத்தங்கள் மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

போரிடும் காலங்கள் பல புதிய கண்டுபிடிப்புகளை தேவைகளிலிருந்து உருவாக்கியது. இக்காலத்தில்தான் இதுவரை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட வெண்கலத்துக்கு பதிலாக இரும்பிலான ஆயுதங்கள் பரவத் தொடங்கியது. கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருந்த சில மாநிலங்கள் இந்த அரசுகளுக்கு கீழ் கொண்டுவரப்பட்டன. சோவ் அரசவம்ச காலத்தில் உருவான தத்துவ பிரிவுகள், யுத்தம் நடக்கிற காலத்தில் வாழ்க்கை தேவையிலிருந்து மேலும் விரிவடைந்தது. தாவோயிசம் என்ற நெறி மேலும் செல்வாக்கு பெறத் தொடங்கியது. கணிதத் துறை வளர்ச்சி அடைந்தது மட்டுமல்ல,  வணிகத்திற்கு பயன்படும் எண் கணிதம் மேலும் பெருமளவு விரிவடைந்தது. இரட்டைஇலக்க பெருக்கல்முறை இக்காலத்தை சேர்ந்தது. உலகின் "தசம பெருக்கல் அட்டவணை" ஆரம்பம் இதுதான் என்பதை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் உட்பட பலரும் அங்கீகரித்து உள்ளன.

மூங்கில் கீற்று இலைகளில் மையால் எழுதப்பட்ட ஏராளமான நூல்கள் இக்காலத்தைச் சேர்ந்தவை. தற்போது சீன பல்கலைக்கழகங்களில் இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மூங்கில்கீற்று எழுத்துக்களால், எழுதப்பட்ட இலக்கியங்கள் வரலாற்றின் தொடர்புகளை இணைக்கிறது.

சீனாவில் இந்த 1850 ஆண்டுகளில், அரசு உருவாக்கமும் ஆட்சியாளர்களின் நிர்வாக முறைகளும், படிப்படியாக வளரத் தொடங்கியது. ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து கிளர்ச்சிகள் தத்துவங்கள் என அரங்கேறியது. இந்த மோதல்கள் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்தியது. புதிய கண்டுபிடிப்புகளும், உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி பெரும் பிரதேசங்களை கட்டுப்படுத்தும் பேரரசுகளை உருவாக்கியது. அடுத்த 2000 ஆண்டுகள் சீனாவின் ஆட்சி முறைகள் பேரரசர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. வளர்ச்சியும் அடக்குமுறைகளும் கிளர்ச்சிகளும் புதிய புதிய தத்துவ போக்குகளும் சீன வரலாற்றில் புயலாக உருவெடுத்தன.

bakkiam

 

 

வியாழன், பிப்ரவரி 13, 2025

1 அறிமுகம்:சீன பூதம்

 

21-ம் நூற்றாண்டில் சீன சோசலிசம் 1


        ஐரோப்பாவை ஒரு பேய் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. கம்யூனிசம் என்னும் பேய். அதை ஓட்டுவதற்காக பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் போப்பும்-ஜாரும், மெட்டர்னிஹும்-கிஸோவும், பிரெஞ்சு தீவிரவாதிகளும்-ஜெர்மன் போலீஸ்காரர்களும் புனித கூட்டணி அமைத்து உள்ளனர்.

போப், கத்தோலிக்க மத தலைவர். ஜார், ஐரோப்பாவின் பிற்போக்கு சக்திகளின் தலைமை பீடமாக இருந்த ரஷ்ய மன்னர். மெட்டர்னிஹும்,   20 ஆண்டு காலத்துக்கு மேலாக ஆஸ்திரியாவின் பிற்போக்குத்தனமான வெளியுறவு அமைச்சர். பிரான்சுவா கிஸோ, பிரான்ஸ் நாட்டு பிரதமராக இருந்தவர். பிரான்ஸ் தீவிரவாதிகள் என்பவர்கள் முடியாட்சியை எதிர்த்து குடியரசு ஆட்சியை நிறுவவேண்டும் என்ற மிதவாதிகள். ஜெர்மன் காவல்துறை உள்ளடக்கிய இந்தக் கூட்டணியை மார்க்சும், எங்கல்சும் புனித கூட்டணி என்று அழைத்தனர். பல்வேறு புவி பரப்பையும் கருத்து நிலைகளையும் கொண்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டினர்

தற்போது அமெரிக்காவையும் மேற்கத்திய நாடுகளையும் ஒரு பேய் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. கம்யூனிச சீனா என்கிற பேய். இதற்கு எதிராக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் புனித கூட்டணியை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்.

சீன மக்கள் குடியரசின் வியக்கத்தக்க வளர்ச்சி உலகத்தை மூக்கின் மேல் விரல்வைத்து பார்க்க வைத்துள்ளது. உள்நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியின் உச்ச அடையாளமாக தீவிர வறுமை ஒழிப்பின் அடையாளமாக சீனா உள்ளது. உலகுக்கே வழிகாட்டும் இந்த வெற்றியின்  ரகசியம் என்ன?

பூமி கோளத்தில் காற்று புகக்கூடிய அனைத்து இடங்களிலும் சீன தயாரிப்புகள் புகுந்து கொண்டே இருக்கின்றன. மக்களின் வாழ்வை எளிதாக்க கூடிய பொருட்களில் கண்டுபிடிப்புகளை, அதாவது, ஆகாயத்தில் உள்ள நிலவில் ஆய்வுக்கூடங்களை அமைப்பது முதல் அடுப்பங்கரை பணிகளை எளிமையாக்கும் இயந்திரங்கள் வரை உலகுக்கு  சீனா அளித்து வருகின்றது. ஒரு பின்தங்கிய நாடாக கருதப்பட்ட சீனாவில் இது எவ்வாறு சாத்தியமானது?

"நீங்கள் பணக்காரர்கள் ஆக வேண்டுமா? சாலைகளை போடுங்கள்" என்று சீன பழமொழி ஒன்று இருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று வரை இந்த பழமொழியை கடைபிடித்து நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பாதைகள் பயணங்களை எளிதாக்குவது மட்டுமல்ல நேரத்தை குறைக்கும். அதே நேரத்தில் பொருட்களை மட்டுமல்ல... மனிதர்களையும் நகர்த்தும். பொருளாதார நடவடிக்கைகளை உயிர்ப்பிக்கும். அது வளர்ச்சியின் அடையாளத்திற்கு அடிப்படையாக அமையும் என்று அறிந்தார்கள். அதையே சாதனையாக மாற்றினார்கள். சீனாவில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டது. இதில் 42 ஆயிரம் கிலோ மீட்டர் புல்லட் ரயில் பாதைகளும், 8000 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதைகளும் அமைத்து உள்ளனர். மற்ற நாடுகளைவிட மிகவும் பின்தங்கி இருந்த சீனா ரயில் பாதையில் மின்னல் வேகத்தில் முன்னேறியது போல் சாலைகளிலும் சாதனைகளை படைத்து வருகிறது. காடுகளுக்கு இடையிலும், மலைமுகடுகளின் மேலேயும், மலைகளைக் குடைந்தும், கடலின் மேலேயும் கடலின் அடியிலும், ஆறுகளின் ஓரங்களிலும், ஆறுகளின் மீது மிதக்கும் சாலைகளையும் அமைத்து உள்ளனர். சாலைகள் என்றால் உலகத் தரம் வாய்ந்த சாலைகள் என்ற இலக்கணத்தையே மாற்றி அமைத்து அதைவிட தரம் வாய்ந்ததாக அமைத்து உள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது?

உலகின் வானுயர்ந்த கட்டிடங்களில் சரிபாதி சீனாவில் உள்ளது. பெரும் நிறுவனங்கள் அனைத்தும் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து உள்ளன. உலகில் உள்ள 500 பார்ச்சூன் நிறுவனங்களில் 129 சீனாவில் இருக்கி்ன்றன. உலகின் அதிக சரக்குகளை கையாளும் பெரும் துறைமுகங்களில் ஏழு துறைமுகங்கள் சீனாவில் உள்ளன.

வளர்ச்சியின் மற்றொரு அடையாளமாக கருதப்படுவது மக்களின் வாழ்நாளை அதிகரிப்பதாகும். அதையும் சீனாவில் சாதித்திருக்கிறார்கள். சீனாவில் 1952ஆம் ஆண்டில் 35 வருடமாக இருந்த சராசரி வாழ்நாள் 2023ஆம் ஆண்டில் 78.F6 வருடமாக உயர்ந்து உள்ளது. 140 கோடி மக்கள் தொகையினை வைத்துக் கொண்டு இதை எவ்வாறு சாத்தியமாக்கினார்கள்?

இந்தியா போன்ற சில நாடுகள் நவதாராளவாத வழியில் சென்று சுதந்திர சந்தையை நம்பியபோது, சீன மக்கள் குடியரசு தொலைத்தொடர்பு, நுகர்வோர் மின்னணுவியல், ஆட்டோ மொபைல்ஸ், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், பசுமை ஆற்றல், குறைகடத்திகள் (semi conductors) போன்ற மிக அடிப்படையான கட்டமைப்பில் உலகின் நம்பர் ஒன்னாக உயர்ந்தது எப்படி?

சீனாவின் வளர்ச்சி உலக நாடுகளின் வளர்ச்சியாக ஏன் பார்க்கப்படுகிறது? பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி(Belt and Road Initiative) திட்டம் ஆசியா ஆப்பிரிக்கா ஐரோப்பிய நாடுகளை தரை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கக்கூடிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 150 நாடுகளும், முப்பதுக்கு மேற்பட்ட சர்வதேச அமைப்புகளும், இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன. 230க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் போடப்பட்டு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உலகளாவிய மேம்பாட்டு முன்முயற்சி (Global Development  Initiative) என்ற திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்து உலகின் நிகழ்ச்சி நிரல், வளர்ச்சியை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் அனைத்து நாடுகளும் மக்களின் நலன்களை அடிப்படையாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சீனா 160 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு வளர்ச்சிக்கான உதவிகளை வழங்கி உள்ளது. இந்தத் திட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. இந்த திட்டத்தை ஐநாவின் பல சர்வதேச அமைப்புகளும் ஆதரித்து வருகின்றன.

உலகளாவிய நாகரீக முன்முயற்சி திட்டம் (GCI-Global Civilization Initiative) என்ற சர்வதேச முன் முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். சில நாகரிகங்களை மேன்மைபடுத்தியும்  மற்ற நாகரிகங்களை சிறுமைப் படுத்தியும் சொல்லி, நாகரீகங்களின் மோதல் என்ற மேற்கத்திய கூற்றுகளுக்கு மாறாக, நாகரிகங்களுக்கிடையில் சமத்துவம், பரஸ்பர கற்றல், உரையாடல் ஆகியவற்றை நிலை நிறுத்த சீனா அறைகூவல் விடுத்துள்ளது.

நவீன மயமாக்கல் முதலாளித்துவத்தால்  மட்டுமே முடியும் என்றும், மேற்கத்திய பாணி ஜனநாயகம்தான் நவீன மயமாக்கலுக்கான அடித்தளம் என்று செய்யப்பட்ட பிரச்சாரங்களுக்கு சவால் விடக்கூடிய முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் நலன் சார்ந்த நவீனமயமாக்கலை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளது. சீனா சவால் விடுவதின் பின்னணி என்ன?

அமெரிக்காவிற்கும் மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும் சீனாவைப் போல் இதுவரை வேறு எந்த நாடுகளும் இந்த அளவிற்கு சவாலாக அமைந்தது இல்லை. சீனாவின் இந்த வளர்ச்சி அதிலும் குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி எவ்வாறு சாத்தியமானது?

யார் தங்களை தயார் செய்து கொள்கிறார்களோ அவர்களுக்கே எதிர்காலம் முழுமையாக சாத்தியமாகும். சீன மக்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்காக தங்களை தயார்படுத்திக் கொண்டார்கள். இல்லை... இல்லை... சீன கம்யூனிஸ்ட் கட்சி அவர்களை தயார்படுத்தியது.

சீனாவில் ஜனநாயகம், இருக்கிறதா இல்லையா? ஒரு கட்சி ஆட்சி முறையா அல்லது பல கட்சி இருக்கிறதா? அங்கு தேர்தல் நடைபெறுகிறதா? நடந்தால் எவ்வாறு நடைபெறுகிறது? சீனாவில் மத சுதந்திரம் அதாவது வழிபாட்டு சுதந்திரம் இருக்கிறதா இல்லையா? சீனாவில் முதலாளிகள் இருக்கிற பொழுது சோசலிசம் எப்படி சாத்தியம்? சீனாவின் வளர்ச்சி கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் ஏற்பட்டதா? போன்ற கேள்விகளை சாதாரண பாமர மக்களுக்கும் புரியக்கூடிய முறையில் இந்தத் தொடரை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். வாசகர்களின் பின்னூட்டங்கள் மேலும் இந்த தொடரை செழுமைப்படுத்தும்.

A. Bakkiam

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...