Pages

திங்கள், அக்டோபர் 13, 2025

வாலிபர் சங்க மாநாடும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த திரிசூல மலையும்

 

அ .பாக்கியம்

    




(தமிழகத்தில் வாலிபர் சங்கம் வேர் வைக்க நீர் வார்த்த ஏராளமான தோழர்களைப் பற்றி… வாலிபர் சங்கத்தின் ஸ்தல, அரசியல் போராட்டங்களைப் பற்றி… ரத்த தான முகாம், விளையாட்டுக் கழகம் நடத்தியதைப் பற்றி வாலிபர் சங்கத்தின் பன்முக கலாச்சார நடவடிக்கைகளைப் பற்றி ‘‘ஞாபகங்கள் தீ மூட்டும்’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தேன். 2022ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வாலிபர் சங்கத்தின் 17வது மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டு அக்டோபர் 12,13,14 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட்டத் ஓசூரில்  நடைபெறும் வாலிபர் சங்கத்தின் 12வது மாநாட்டையொட்டி இந்த பதிவு. ஞாபகங்களும் தீ மூட்டும் இரண்டாம்பதிப்பிற்காக எழுதப்பட்டது)

 

டிசம்பர் 15 1987.  சென்னை திரிசூலம் மலையின் எதிரே இருக்கும் பழைய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிறங்கியது.  அந்த விமானத்தில் ஒரு இளைஞர் வந்திறங்கினார். சென்னை வடபழநியில் உள்ள விஜய சேஷ மஹாலில் (குர்ணாம் சிங் உப்பல் நினைவரங்கம்) நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) 3வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குவதற்காக அந்த இளைஞர் வந்திருந்தார். உலக இளைஞர் ஜனநாயக அமைப்பின் பொதுச்செயலாளரான அவர் அவர் அன்றைய செக்கோஸ்லோவேகியா நாட்டின் பிராக் நகரில் இருந்து வந்திருந்தார்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உலக ஜனநாயக இளைஞர் அமைப்பின் உறுப்பினராகும். மாநாட்டு அரங்கில் வாழ்த்துரை வழங்கிய அவர், ‘‘நான் விமானத்தில் பறக்கிற பொழுதே டி ஒய் எஃப் ஐ என்ற நான்கு எழுத்து விளம்பரத்தை பார்த்து விட்டேன். திரிசூலம் மலையில் DYFI என்ற நான்கு எழுத்தை வானத்தில் இருந்தே தரிசித்தேன்’’ என்றார்.  கர ஒலிகளாலும், குரல் ஒலிகளாலும் மாநாட்டு அரங்கம் சில நிமிடங்கள் அதிர்ந்தது.

 

டிஒய்எப்ஐ அகில இந்திய மாநாடு நடந்த சில மாதங்களுக்குப் பிறகு அதாவது1988ஆம் ஆண்டு மே மாதம்  டெல்லியில் இருந்து ஒரு விமானம் மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த ஒரு காங்கிரஸ் பிரமுகரின் கண்ணிலும் திரிசூலம் மலையில் இருந்த DYFI என்ற 4 எழுத்து கண்ணில் பளிச்செனப்பட்டது. அவருடன் பயணித்த மற்ற விமானப் பயணிகளும் அந்த நான்கு எழுத்தை பார்த்தனர்; மலை உச்சியில் இவ்வாறு எழுதியிருக்கிறார்களே என்று வியந்தனர்; ரசித்தனர். ஆனால், அந்த காங்கிரஸ் பிரமுகரின் கண்களுக்கு மட்டும் அந்த DYFI என்ற 4 எழுத்து உறுத்தலாக இருந்தது. உச்சகட்ட எரிச்சல் அடைந்தார். அந்த பிரமுகர் வேறு யாருமில்லை. ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தான் அவர்.

 

1988 ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி சென்னைக்கு அருகில் காங்கிரஸ் மகாசபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்ட ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து வந்த போதுதான், திரிசூலம் மலையில் எழுதப்பட்டிருந்த DYFI என்ற நான்கு எழுத்து கண்ணில் பட்டுள்ளது. அதனால் மிகுந்த எரிச்சலடைந்தார். காரணம் DYFI என்ற அந்த நான்கு எழுத்து இந்தியா முழுவதும் அறிமுகமாகி இருந்தது. மக்கள் விரோத செயலில் ஈடுபடும் மத்திய, மாநில அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. அன்றைய ஆட்சியாளர் களை அச்சப்பட வைத்த போராட்ட களத்தின் பொன் எழுத்துக்களாக DYFI என்ற நான்கெழுத்து இருந்தது.  ராஜீவே ராஜினாமா செய் என்ற கோஷம் மாநாட்டு பேரணிகளில் எதிரொலித்தது.

 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) 3வது அகில இந்திய மாநாடு முடிந்தவுடன் அதன் முக்கிய தீர்மானங்களில் ஒன்றான  18 வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும்  இயக்கங்களை நடத்தியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இந்தப் போராட்ட அலை வீசியது. 18 வயதானோருக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையை வைத்தபோது, அன்று தமிழகத்தில் இருந்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 18 வயது இளைஞனுக்கு என்ன பக்குவம் இருக்கும் என்று கேள்வி எழுப்பினர்; கேலி பேசினர்; கிண்டல் செய்தனர். இது வயதால் முதிர்ச்சி அடைந்து, அறிவால் முதிர்ச்சியடையாதவர்களின் அலப்பறையாகும். ஆனால், வாலிபர் சங்கத்தின் போராட்ட அலை கேலி பேசியவர்களின் வாயை அடைத்தது; கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது.   

 

இது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து சென்னக்கு வரும் போது, திரிசூலம் மலையில் இருந்து DYFI என்ற நான்கு எழுத்தைப் பார்த்து எரிச்சல்பட்டார். காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி உள்பட டெல்லிவாலாக்கள் விமானத்தில் சென்னைக்கு வருகிற பொழுது அவர்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலொழிய DYFI என்ற இந்த நான்கு எழுத்துக்களை தரிசிக்காமல் இருக்கமுடியாது என்பதை சிதம்பரம் அறிந்து கொண்டார். விமானத்தில் இருந்து பார்த்தால் தெரியும் அளவிற்கு DYFI விளம்பரமா? என்று கடுப்பானார்.  எனவே அந்த எழுத்துக்களை அழிப்பதற்கு சிதம்பரம் உத்தரவிட்டார். வாலிபர் சங்கத் தோழர்களின் விலை மதிப்பில்லாத உழைப்பால்,  சுமார் ரூ.2000 செலவு செய்து எழுதிய DYFIயின் இரண்டு விளம்பரங்களில் ஒன்றை அழிப்பதற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள்.  சிதம்பரம் அந்த எழுத்துக்களை அழித்தது மட்டுமல்ல... திரிசூலம் மலையை சுற்றி ராணுவ பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்று வேலியை அமைக்க உத்தரவு பெற்று வேலியும் போடப்பட்டது.

 

திரிசூலம் மலையின் மேலே இருந்த ஒரு விளம்பரத்தை - DYFI என்ற எழுத்துக்களை அவர்களால்  அழிக்க முடிந்ததே தவிர பக்கவாட்டில் எழுதிய பிரம்மாண்டமான DYFI மாநாடு என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத்தை அவர்களால் அழிக்க முடியவில்லை. அது விமானத்தில் பறப்பவர்களின் கண்களில் படாது என்பதால் விட்டுவிட்டார்கள் போலும்.  ஆனால், அதுதான் மிக முக்கியமான விளம்பரமாகும். ரயிலிலும் சாலைகளிலும் போவோர் வருவோர் கண்களில் எல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த பிரம்மாண்டமான விளம்பரம் கண்ணில்  பட்டுக்கொண்டே தான் இருந்தது.  திரிசூலம் மலையின் பக்கவாட்டில் செதுக்கப்பட்டிருந்த மிக உயரமான இடத்தில் இந்த எழுத்துக்கள் அமைந்து இருந்தது. 

 

DYFI மூன்றாவது அகில இந்திய மாநாட்டின் வீச்சு சென்னையிலும், தமிழகத்திலும், நாடு முழுவதும் பரவலாக இருந்தது. ஒன்றிய காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்ட அறைகூவல் நாடு முழுவதும் எதிரொலித்தது. இதையொட்டி ராஜீவ் காந்தி சென்னைக்கு வருகிற பொழுது வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெறலாம் என்று ஊகம் செய்து வாலிபர் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பலர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.  அத்துடன், மயிலாப்பூரில் இருந்த வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகியான தோழர் மாதவ் மத்திய ரிசர்வ் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை  பெரிய மேட்டில் மறைந்த வாலிபர் சங்கத் தோழர் ராமமூர்த்தியை கைது செய்ய போலீஸ் கும்பலாக வந்த பொழுது , அங்கு கூடிய மக்கள் கூட்டம், போலீசாரை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தினர். இதனால் தோழர் ராமமூர்த்தியை கைது செய்ய முடியாமல் போலீசார் வெறும் விலங்குடன் சென்றனர்.

 

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் என் வீடு இருக்கும் பகுதியில் இரண்டு தெருக்கைளயும் போலீசார் முற்றுகையிட்டனர்.  என் குடிசைவீட்டுக்குள்ளும் நுழைந்து வலைவீசி தேடினர். வீட்டில் இரவு கட்டியிருந்த கொசுவலைகளை அறுத்துப்போட்டனர். அப்போது  மதுரை கம்பத்தில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஒருநாள் காலதாமதமாக சென்னைக்கு வந்தேன்.  அதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினேன்.  ஜனநாயக ரீதியாக போராடக்கூடிய ஒரு இயக்கத்தை  ஒடுக்குவது என்பது அன்றைய கால கட்டங்களில் இருந்து இன்றைய கால கட்டத்திலும் ஒடுக்குவது என்பது ஒன்றிய, மாநில  அரசு இயந்திரங்களுக்கு புதிதல்ல. அதை தொடர்ந்து சந்தித்து வரும் வாலிபர் சங்கத்திற்கும் இந்த அடக்குமுறை புதிது அல்ல.

 

ராஜீவ் காந்தி சென்னைக்கு வந்தார்; மாநாட்டில் பங்கேற்றார். அவரும் திரிசூல மலையை கடந்துதான் வந்திருக்க வேண்டும்.  மீண்டும் டெல்லிக்குச் சென்றார். ஆனால், வாலிபர் சங்கத்தின் 18 வயது வந்தோருக்கு வாக்குரிமை கோரிக்கை அவரை ஏதோ ஒரு வகையில் பாதித்து இருந்தது. காரணம், DYFI 3வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  அந்த கோரிக்கை முழக்கம், வாலிபர் சங்கத்தின் குரலாக மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் குரலாக இருந்தது. எனவே அவரால் அந்த கோரிக்கையை புறந்தள்ள முடியவில்லை. எனவே, 18 வயது வந்தோருக்கு வாக்குரிமை என்பதற்கான 61வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை  டிசம்பர் 13, 1988 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  டிசம்பர் 15ஆம் தேதி இந்த மசோதா மக்களவையிலும், டிசம்பர் 20ஆம் தேதி ராஜ்ய சபாவிலும் நிறைவேற்றப்பட்டு 1989 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை கொண்டு வந்தது என்னவோ ராஜீவ்காந்தியாக இருக்கலாம். 18 வயதானோருக்கு வாக்குரிமை என்பதை இந்திய இளைஞர்களின் கோரிக்கையாக மாற்றி அதை வெற்றி பெறச் செய்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) என்பதை யாரும் மறுக்க முடியாது. 

 

DYFI சிகரம் தொட்டது எப்படி 

அரசியல் ஆர்வமும், மாற்றங்களை நோக்கிப் பயணமும், எத்தகைய கடின வேலைகளையும் செய்து முடிக்க முடியும் என்ற நிலையிலிருந்து இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். 1987 டிசம்பர் 15 முதல் 19 வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மூன்றாவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மிகப் பெரும் அளவு பிரதிநிதிகள் மாநாடும், பேரணியும் நடத்துவதற்கான திட்டமிடலில் முதல் வேலையாக மண்டபத்தை நிச்சயிக்கக்கூடிய பணி முடிந்தது. வடபழனியில் உள்ள விஜய சேஷ மகால், அதனுடன் இணைந்த ராணி மகால் இரண்டு மண்டபங்களும் மாநாடு நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டது. 

 

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி, தோழர்கள் மீனாட்சி சுந்தரம், சு.பொ.அகத்தியலிங்கம், பா.கருணாநிதி மற்றும் நான் (பாக்கியம்) ஆகிய நால்வரும் விஜய சேஷ மகாலை மாநாடு நடத்த புக்கிங் செய்வதற்காக சென்றோம். துவக்கமே உணர்ச்சிப் பெருக்காக தான் இருந்தது. தோழர் பி. ஆரைப் பார்த்த மண்டபத்தின் உரிமையாளர் நாகி ரெட்டி கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.   இளமைக் கால ஒன்றிணைந்த போராட்டங்களை இருவரும் நினைவு கூர்ந்து கொண்டார்கள். அதன் பிறகு பி.ஆர். காசோலை மூலமாக மாநாடு நடத்துவதற்காக மண்டபத்தை நிச்சயித்தார்.  பி.ஆர். மற்றும் நாகி ரெட்டி ஆகியோரின் தழுவலில் இருந்த முந்தைய வரலாறுகளை பின்னர் நான் அறிந்து கொண்டேன்.  

 

அதன் பிறகு மாநாட்டுக்கான வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழு தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி. ஆர்.,  பொதுச் செயலாளராக தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், பொருளாளராக தோழர் நம்பிராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் வாலிபர் சங்க மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும்  முக்கிய பிரமுகர்கள் பலரும் வரவேற்பு குழுவில் இடம் பெற்றனர். அத்துடன் மாநாட்டுப் பணிகளுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. 

 

DYFI சென்னை மாவட்ட நிர்வாகிகளாக இருந்த பா. கருணாநிதி, நான் (பாக்கியம்), க.மாதவ்,  ராமச்சந்திரன், வீர அருண், புஷ்பராஜ், ராமையன், , பொன்னுச்சாமி, ராயபுரம் முத்து, சிவக்குமார், தேவபிரகாஷ் இவர்களுடன் DYFI மாநில பொருளாளர் மறைந்த தோழர் சின்னையா, மறைந்த அம்பத்தூர் வேலாயுதம், பாலச்சந்தர் உட்பட இன்னும் பலருக்கு (பெயர் குறிப்பிடாதவர்கள் மன்னிக்கவும்) மாநாட்டு பணி குழுக்களுக்கான பொறுப்பு கொடுக்கப்பட்டது.

எனக்கு விளம்பரக் குழு பணி  ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று நமக்கு குறைவான செலவில் விளம்பரப் படுத்தக்கூடிய இரண்டு வகைப் பிரசாரங்கள் மட்டுமே இருந்தன. ஒன்று சுவரெழுத்து. இன்னொன்று ‘டயர்’ தட்டிகள் வைப்பது. (டயர் தட்டிகள் மூலம் செய்யும் விளம்பரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாம்தான் என்றே கூறலாம்.) மாநாடு நெருக்கத்தில் டயர் தட்டிகள் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு முதலில் சுவரெழுத்து எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக  ஓவியர்களுக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது.  ஆங்காங்கே சுவர் எழுத்துக்கள் எழுதப்பட்டாலும், இதை பிரம்மாண்டமாக மாற்றுவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டது.  சுவர் எழுத்துக்களில் ஓவியர் திருவொற்றியூர் சோலையின் பங்கு மிக மிக முக்கியமானது. அவர்தான், DYFI என்று எங்கெல்லாம் பெரிய அளவில் எழுதலாம் என்று முதலில் சுற்றிப் பார்ப்போம் என்று ஆலோசனை கூறினார். அதன்படியே அவரும், நானும் எங்கெங்கெல்லாம் பெரும் எழுத்துக்களை எழுதலாம் என்று பல இடங்களை சுற்றிப் பார்த்தோம். அவற்றில் ஒன்றுதான் சென்னை மின்சார ரயில் போக்குவரத்தின் பாதைகளின் இரு பக்கமும் எழுதலாம் என்று முடிவு செய்தாம்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை வாசற்படியில் நின்று கொண்டே பக்கவாட்டு சுவர்களை பார்த்துக் கொண்டு பயணித்தோம். திரிசூலம் மலையை கடக்கிற பொழுது பக்கவாட்டில் இருக்கக்கூடிய மலை, குவாரிக்காக உடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்  உயரமான பகுதியில் எழுதலாம் என்று ஆலோசனை சொன்னார். நான் இது சாத்தியமா என்று கேட்ட பொழுது சாத்தியம்தான் என்றார். ‘‘அதிக செலவாகுமா’’ என்று நான் கேட்டபோது,  அவரோ,  ‘‘இல்லை குறைந்த செலவில் முடிப்போம். சுண்ணாம்பில் மிக நேர்த்தியான பசையை கலந்து அதன் மூலம் எழுதலாம்’’ என்றார். அவர் கூறியபடியே அந்த மாபெரும் ‘மலை’ எழுத்துப்பணி சாத்தியமானது. அவர் உள்ளிட்ட தோழர்களின் மகத்தான உழைப்பால் அது சாத்தியமானது.  சென்னை முழுவதும் நடந்து கொண்டிருந்த சுவரெழுத்து பணியின் ஒரு பகுதியாக திரிசூலத்தில் ‘மலைஎழுத்து’பணி துவக்கப்பட்டது.

 

அந்த மலை அடியில் உள்ளடங்கியும் மேலே வர வர வெளித்தள்ளியும் இருந்தது. அதில் சாரம் கட்டுவதே மிகப்பெரிய சவாலான விஷயமாக மாறியது. ஆனாலும், 70 அடி உயரத்திற்கு சாரம் கட்டப்பட்டது. இந்தப் பணிகளில் கிண்டி-தாம்பரம் பகுதியில இருந்த தோழர்கள், பகுதி நிர்வாகிகளாக இருந்தவர்கள் என 75 பேர் ஈடுபட்டார்கள்.  70 அடி சாரத்தை கட்டுகிற பொழுது மலையில் இருந்த விஷப் பூச்சிகளால் கடிக்கப்பட்டு பலரும் பாதிக்கப்பட்டனர். சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தொழில் முறையில் சாரம் கட்டக் கூடியவர்கள் அல்லர். சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்கான சாரம் கட்டியவர்கள்; சாதித்தும் காட்டியவர்கள். 70 அடி சாரம் கட்டிய பிறகு 35 அடிக்கு மேலே 40 அடி உயரத்திற்கு 40 அடி அகலத்திற்கு ஒரு எழுத்து என்ற முறையில் பிரம்மாண்டமான DYFI என்ற எழுத்துக்களும் அதன் கீழே மாநாடு என்ற வார்த்தையும் அமைக்கப்பட்டது. சாரம் கட்டுவதில் துவங்கி ஒரு எழுத்து உருவாக சில நாட்கள் ஆகும். தினசரி, மின்சார ரயிலில் செல்லக்கூடியவர்கள், இதை வியப்பாகவும், வேடிக்கையாகவும் பார்த்து சென்றனர்.  இது என்ன என்று கேள்வி அவர்களின் மனதில் தொக்கி நிற்கும். DYFI மாநாட்டு விளம்பரம் எழுதி முடித்த பிறகுதான் ரயிலில் பயணித்தவர்களுக்கு முழுமையான அர்த்தம் புரிந்தது. ஆனால், என்னதான் எழுதுகிறார்கள் என்று பார்க்கும் ஆர்வம் ஒவ்வொரு நாளும், அவர்கள் மனதில் இருந்தது. பின்னாட்களில் வணிக உலகில் சஸ்பென்ஸ் வைத்து விளம்பரம் வெளியிடும் உத்திக்கு டிஒய்எப்ஐ மலை விளம்பரமே முன்னோடியாக இருந்தது என்று கூறலாம்.

 

இந்தப் பணி நடந்து கொண்டிருக்கும்போதே தோழர் சோலை இன்னொரு கருத்தையும் முன் வைத்தார். திரிசூலம் மலையின் மேல் பகுதி மிகவும் பசுமையாக உள்ளடங்கி இருக்கிறது. அங்கு DYFI என்று எழுதினால், பரங்கிமலையை தாண்டியவுடன் ரயிலில் வரும் அனைவருக்கும் அது தெரியும் என்று கூறினார். அதற்கான எளிய வழி முறையையும் அவர்   கண்டுபிடித்தார். அங்கிருந்த பெரிய பாறைகளையும் சிறிய கற்களையும் இணைத்து DYFI  என்ற முறையில் அடுக்கினார்கள். அவ்வாறு  அடுக்கிய பிறகு சுண்ணாம்பு, பசை இரண்டையும் கலந்து கரைத்து பக்கெட், பக்கெட்டாக ஆக ஊற்றி விட்டார்கள். அப்போது பெரிய அளவிலான கட்டிடங்கள் இல்லாத காலம் என்பதால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதாவது பரங்கிமலை ரயில் நிலையத்தை தாண்டியவுடன், டிஒய்எப்ஐ மாநாடு என்று திரிசூலம் மலையில் எழுதி இருப்பது தெரியும். பக்கவாட்டிலும் பளிச்சென்று தெரிவதற்கு அலுமினிய பெயின்டை வாங்கி பயன்படுத்தி இருந்தனர். அதனால் ‘‘டிஒய்எப்ஐ மாநாடு’’ விளம்பரம், சுதை சிற்பமாகவும், புடைப்பு சிற்பமாகவும் அவரவர் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது. தோழர் சோலை என்கிற மகத்தான கலைஞன் மற்ற தோழர்களுடன் இணைந்து படைத்த பிரம்மாண்டமான, இதுவரை யாரும் செய்யாத, செய்ய முடியாத விளம்பரம் அது.

சென்னையில் நடைபெற்ற DYFI 3வது அகில இந்திய மாநாட்டின்   சுவரெழுத்து பிரச்சாரத்தின் துவக்கமே மிகப் பிரம்மாண்டமாக அமைந்தது.  அனுமன் ‘வால்’ போல் நீண்ட சுவர்களில் நீண்ட அளவில் சுவரெழுத்தை எழுதி அறிமுகப்படுத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும்.  அது மட்டுமல்ல... சென்னையில் இருக்கக்கூடிய முக்கிய பாலங்கள் உட்பட எங்கெல்லாம் நான்கு அங்குலத்துக்கு மேல் சுவர் கிடைத்ததோ அங்கெல்லாம் டி ஒய் எப் ஐ மாநாடு என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தோழர்கள் கையில் ஒரு பெயின்ட் டப்பாவுடனும் ஒரு தூரிகையுடனும் கிடைத்த இடத்தில் எல்லாம் மாநாட்டை விளம்பரப்படுத்தினார்கள். சென்னையின் இண்டு, இடுக்குகளில், சந்து, பொந்துகளில் எல்லாம் வாலிபர் சங்கத்தை அறிமுகப்படுத்தினார்கள்.  இந்த மாநாடுதான் நூற்றுக்கணக்கான ஓவியர்களை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது.

 

வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டையொட்டி இன்னும் பல விளம்பர உத்திகள் கடைபிடிக்கப்பட்டன. மின்சார ரயிலுக்குள் போஸ்டர்கள் ஒட்டுவது கடினமான விஷயமாக இருந்தது. காவல்துறை அவ்வப்போது கெடுபிடி செய்தது. எனவே மாவட்ட நிர்வாகி (ராமச்சந்திரன்) ஒருவரின் ஆலோசனையின் படி பயணிகளின் இருக்கையின் வெளிப்புற ஓரத்தில்  ஆறு அங்குலம் அளவிற்கு இடம் இருந்தது. அந்த இடத்தில் டிஒய்எப்ஐ மாநாடு என்று பெரிய அளவில் ரப்பர் ஸ்டாம்ப் செய்யப்பட்டு வெள்ளை மையினால் ரயில் இருக்கைகளில் அச்சிடப்பட்டு பரபரப்பாக்கப்பட்டது.

 

சென்னையில் முதல்முறையாக ஒரு இயக்கத்தின் மாநாட்டு விளம்பரம் திரையரங்குகளில் ஸ்லைட் ஷோவாக காட்டப்பட்டது. வாலிபர் சங்க மாநாடு விளம்பரம் போடுவதா என்று திரையரங்க உரிமையாளர்கள் தயங்கிய காலகட்டம் அது. இந்த சூழ்நிலையில், சென்னை சூளையில் இருந்த தோழர் ‘ஹால்டா’ குமார் என்பவர் மூலமாக திரு.கிரி என்பவர் அறிமுகமானார். அன்று அவர் பிரபலமான சில திரைக்கலைஞர்களுக்கு மேலாளராக இருந்தார். அவரின் உதவியால் மிகக்குறைந்த கட்டணத்தில் திரையரங்குகளில் சினிமா இடைவேளையின் போது டிஒய்எப்ஐ அகில இந்திய மாநாட்டு விளம்பர ஸ்லைட் ஷோ காட்டப்பட்டது.

 

சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான மிகப்பெரும் சுவர் எழுத்துக்களும், 10,000க்கும் அதிகமான சுவரொட்டிகளும், தெருவெல்லாம் டயர் தட்டிகளும், 100க்கும் அதிகமான இடங்களில் பெரிய தட்டிகளும் வைக்கப்பட்டன. 150 தெருமுனை கூட்டங்களும் 108 பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. 

 

மாநாட்டை விளம்பரப்படுத்த கலை குழுக்களின் பிரசாரங்கள், வீதி நாடகங்கள், இசைக்குழுக்களின் மாலை நேர நிகழ்வுகள் என்று நூற்றுக்கணக்கில் நடைபெற்றது. சென்னையில் கட்சித் தோழர்களிடம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த சென்னை கலைக்குழு தவிர ஒவ்வொரு பகுதியிலும் கலைக்குழுவும், இசைக்குழுக்களும் உருவானது. விபிசி கலைக்குழு, புதுயுக கலைக்குழு, என பத்துக்கும் மேற்பட்ட கலை குழுக்கள் உருவாகின. இவை தவிர இசைக்குழுக்களும் உருவாயின. இவை தவிர, பல மாவட்டங்களில் இருந்த கலை குழுக்களும், ஆந்திராவின் பிரஜா நாட்டிய மண்டலி  கலைக்குழுவும் மாநாடு விளம்பர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. 

 

மாநாட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் நிதி வசூல் பிரச்சாரம் ஆகும். ஆயிரம்தான் இருந்தாலும் நிதி இல்லையென்றால் எதற்குமே கதி இல்லை, இல்லையா? நிதி வசூலிலும் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஈடுபட்டு மாபெரும் சாதனை புரிந்தார்கள். சுவர் எழுத்துக்கள் ஓவியர்களை உருவாக்கியது; கலை குழுக்கள் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கலைஞர்களாக மாற்றியது; அதேபோன்று நிதி வசூல், ஊழியர்களையும் தலைவர்களையும் உருவாக்கியது.

 

சென்னையில் அப்பொழுது 10,094 உறுப்பினர்களும், 140 கிளைகளும், ஏழு இடைக்கமிட்டிகளும் இருந்தன. திருவொற்றியூர் – மணலி, ஆவடி – அம்பத்தூர்,  கிண்டி – தாம்பரம், வடசென்னை, மத்திய சென்னை, மேற்கு சென்னை, தென் சென்னை என்ற ஏழு பகுதி குழுக்கள் செயல்பட்டன. மாநாட்டிற்காக வீடு வீடாக வசூல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு சென்னையில் 100 வசூல் குழுக்கள் பல்வேறு தலைவர்களின் பெயரில் உருவாக்கப்பட்டது. வாலிபர் சங்கத்தில் சேர்ந்த பல இளைஞர்கள், முதல் முறையாக மக்களை சந்திக்க செல்கிறார்கள் என்பதால், மக்களிடம் செல்வது தொடர்பாக, வீடுகளில் இருக்கக்கூடிய பெரியவர்கள், பெண்களிடம் அணுகுவது தொடர்பாக, என்ன பேச வேண்டும் என்பதற்கான கூட்டங்கள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. வணக்கம் சொல்வதில் ஆரம்பித்து, நன்கொடை கொடுக்கவில்லை என்றாலும் கூட மாநாட்டிற்கு அவர்களை இன்முகத்தோடு அழைக்க வேண்டும் என்ற அணுகுமுறை வரை சொல்லித் தரப்பட்டது.

 

தோழர்களும் தீவிர வசூலில் இறங்கினார்கள். 78 நாட்கள் வசூல் நடைபெற்றது. மூன்று நாட்கள் முழு நாள் வசூல்; ஐந்து நாட்கள் அரைநாள் வசூல் என்று பல்வேறு வகைகளாக இந்த 78 நாட்களும் வசூல் நடந்தது. சென்னையில் 1.40 லட்சம் குடும்பங்களை இந்த குழுக்கள் சந்தித்து விதவிதமான அனுபவங்களோடு திரும்பினார்கள். அனுபவப் பகிர்வு என்ற முறையில் நடைபெற்ற கூட்டங்கள் மேலும் உற்சாகத்தை அளித்தது. வசூல் தொகை என்பது பத்து பைசாவில் ஆரம்பித்து ஐந்து ரூபாய் வரை இருந்தது. ஐந்து ரூபாய் என்பது மிக அதிகபட்ச நன்கொடையாக இருந்தது. சராசரியாக 98 சதவீதம் 2 ரூபாய் வசூல் ஆகத்தான் இருந்தது. ஒரு சிலர் நூறு ரூபாய் கொடுத்தது மாவட்டத்தின் பேசு பொருளாக மாறியது. சென்னை மாவட்டத்தில் வீடுகள் வசூல் மூலம் ரூ.3,89,000 கிடைத்தது. மாநிலம் முழுவதும் ரூ.8.5 லட்சம் வசூலிக்கப்பட்டது. 

 

சென்னை தவிர தமிழகம் முழுவதும் பிரசாரமும் விளம்பரமும் அதுவரை இல்லாத அளவிற்கு நடைபெற்றது. 4 லட்சம் குடும்பங்களை 1100 குழுக்கள் சந்தித்தன. மாநிலம் முழுவதும் 13 லட்சம் துண்டு பிரசுரங்கள், 20,000 சுவரொட்டிகள், 8000 இடங்களில் பெரிய சுவர் எழுத்துக்கள் திரும்பிய பக்கம் எல்லாம் டயர் தட்டிகள், 270க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் என்று எண்ணிலடங்கா மாநாட்டு விளம்பர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

 

மாநாட்டின் முத்தாய்ப்பாக பேரணியும் பொதுக்கூட்டமும் சென்னை மெரினா சீரணி அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் பேரணியில் தமிழகத்தில் இருந்து 38 ஆயிரம் இளைஞர்களும் சென்னையிலிருந்து மட்டும் ஏழாயிரம் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இவை தவிர ஆந்திராவிலிருந்து பத்தாயிரம் பேரும் கர்நாடகாவில் இருந்து ஐந்தாயிரம்  பேரும், மகாராஷ்டிராவில் இருந்து ஆயிரம் பேரும் கலந்து கொண்டனர். மொத்தமாக 70 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்ட இளைஞர்களின் எழுச்சிமிகு பேரணி 2.30 மணி நேரம் கட்டுப்பாடுடன் மெரினாவில் நடைபெற்றது. தூறல் மழை பெய்து அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தது.  

 

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.ஆர்., மாநாட்டிற்கு முதல் நாள் இறந்ததால், மாநாட்டுப் பேரணி ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதனால் பேரணிக்கு வரவிருந்த பலரும், வாகனங்களை கேன்சல் செய்துவிட்டனர்.  அதன் பிறகு மீண்டும் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  அன்றைய தினம் வாகனங்களை ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று என்பதால் மீண்டும் வாகனங்களை ஏற்பாடு செய்து பல மாவட்டங்களில் இருந்து தோழர்கள் வர முடியாமல் போனது. பேரணியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.  குறிப்பாக கேரளாவில் இருந்து  இளைஞர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து வர இயலாமல் போனது. இதனால் மேலும், பல ஆயிரம் இளைஞர்கள் பேரணியில் பங்கு கொள்ள இயலவில்லை. ஆனால், பத்திரிகைகள் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற கட்டுக்கோப்பான பேரணி என்று தலைப்பு செய்திகளாக வெளியிட்டனர்.  21.12.87 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை பதிப்பில் "வெடவெடக்கும் குளிரிலும் அவர்களை உந்தி தள்ளியது டி ஒய் எப் ஐ யின் இலட்சிய முழக்கங்கள் என்றும், அரைத்த மாவையே அறைக்காத புதியவர்கள் என்றெல்லாம் பாராட்டி எழுதியது ஊர்வலம் முடிந்த மறுநாள் ஆங்கில இந்து பத்திரிக்கை தினமணி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அனைத்து மாலை பத்திரிகைகளும், ஆனந்த விகடனும் கொட்டை எழுத்தில் படத்துடன் செய்திகளை வெளியிட்டது மட்டுமல்ல இளைஞர்கள் ஊர்வலம் மிகவும் கட்டுப்பாடாக சில மணி நேரங்கள் நடைபெற்றதையும் மக்கள் கடந்து செல்வதற்கான வழிகளை உருவாக்கி கொடுத்ததையும் பாராட்டி எழுதினார்கள். வழக்கம்போல் துக்ளக் என்ற பத்திரிக்கை குதர்க்கமாக எழுதி இருந்தது. குதர்க்கமாக எழுதுவதற்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி இருந்தது.

 

வரவேற்பு குழு அமைக்கப்பட வேண்டிய காலத்தில் தொழிற்சங்க பிதாமகன், அருமை தோழர் வி. பி சிந்தன் ரஷ்யாவில் காலமானார். மாநாடு நடைபெற்ற அந்த காலகட்டத்தில் பல மாவட்டங்களில் சாதிய மோதல்கள் நடந்ததால்,  ஊரடங்கு உத்தரவுகளும் போடப்பட்டது. அப்போது இடதுசாரி கட்சிகளின் வெகுஜன அமைப்புகளின் பிரசாரப் பயணமும், அகில இந்திய அளவில் விவசாயிகளுடைய மறியலும் நடந்த காலம் அது. மேலும், மாநாட்டை மழைக்காலமான டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய சூழலும் உருவானது. தோழர் வி.பி.சிந்தன் மறைந்த துயரம், மழைக்காலம் என்ற இயற்கை இடர்பாடு ஆகியவற்றை எதிர்கொண்டுதான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையோடுதான் வாலிபர் சங்கம் களம் இறங்கியது. மாநாடு துவங்கிய முதல் நாள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவரும், வரவேற்புக்குழு தலைவருமான தோழர் பி ஆரின் மரணம் தலையில் இடியாய் இறங்கியது.  மாநாட்டு மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து பிள்ளையார் சுழி போட்ட தோழர் பி.ஆரின் மரணம் மிகப்பெரிய சோகத்தை கொடுத்தது.

 

இந்த சோகத்துக்குப் பிறகும் பிரதிநிதி மாநாடும் பேரணி, பொதுக்கூட்டமும் சிறப்பாக நடந்து முடிந்தது. மாநாடு முடிந்த பிரதிநிதிகள் ஊர் திரும்புவதற்குள் அன்றைய முதலமைச்சர் எம். ஜி.ஆரின் மறைவு ஏற்பட்டதால், பலர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி ஊர் திரும்ப முடியவில்லை. அதையும் சந்தித்து, உரிய முறையில் பிரதிநிதிகள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

சென்னையில் நடந்த டிஒய்எப்ஐயின் அகில இந்திய மாநாடு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்கத்திலும் அது எதிரொலித்தது. மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்ட 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட தோழர்கள், முன்னணி ஊழியர்களாகவும், தலைவர்களாகவும் மாறினார்கள். இந்த மாநாடு ஓவியர்களை உருவாக்கியது; கலைஞர்களை உருவாக்கியது; பேச்சாளர்களையும், தலைவர்களையும் உருவாக்கியது. இவை அனைத்தும் சீனத்தை சிவப்பாக்கி, 21ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிற நாடாக மாற்றிய மாவோ சொன்னபடி நடந்தது. மக்களிடம் செல்லுங்கள்; மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்றார் மாவோ. அவருடைய வார்த்தைகளின் படியே மக்களிடம் சென்றோம்; கற்றுக் கொண்டோம். மாநாட்டினை வெற்றிகரமாக்கினோம். 

 

டிஒய்எப்ஐ அகில இந்திய மாநாட்டின் விளைவாக சென்னையில் வாலிபர் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 109 சதவீதம் அதிகமானது. அதாவது சென்னையில் 10,100 இல் இருந்த உறுப்பினர் எண்ணிக்கை  21 ஆயிரத்து நூறாக உயர்ந்தது. தமிழகம் முழுவதும் 39 ஆயிரம் உறுப்பினர்கள் அதிகரித்தனர். இதே போல் கிளைகள் சென்னையில் 218 ஆகவும் தமிழகத்தில் 2600 இல் இருந்து 3500 ஆகவும் அதிகரித்தது.

 

சென்னையில் நடைபெற்ற இந்த மாநாடு, ஸ்தாபன ரீதியாக, அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. இவையெல்லாம் மெல்லக் கனவாய், பழங்கதையாய் போய்விடவில்லை. இன்றும் வாலிபர் சங்கம் மக்கள் பிரச்னைகளில் வீறுகொண்டு போராட்டக் களத்தில் நிற்கிறது. 

-அ .பாக்கியம்

புதன், அக்டோபர் 08, 2025

41 திபெத் பௌத்த நாடுகளால் புறக்கணிக்கப்படும் தலாய்லாமா

 



அ.பாக்கியம்

பௌத்த துறவி தலாய்லாமா உலகளவில் செல்வாக்கு கொண்டவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பிம்பத்தை அமெரிக்க அரசும், அதன் ஊடகங்களும் கட்டமைத்ததாகும். உலகளாவிய பௌத்த செல்வாக்கு படைத்த தலாய்லாமாவை முன்னிலைப்படுத்தி இந்தியா பௌத்த ராஜதந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையும், அழுத்தமும் இந்தியாவின் மீது திணிக்கப்படுகிறது. இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசும், சங் பரிவார அமைப்புகளும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் சிக்கிம், லடாக், அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் திபெத்திய பௌத்தம் அதிகமாக இருப்பதினால் இவற்றை உள்ளடக்கி சீனாவிற்கு எதிரான பௌத்த ராஜதந்திர முறையில் செயல்படுவதுதான் இந்த கருத்தின் அடிப்படையாகும்.

உலகளவில் தலாய்லாமாவை பின் தொடரக்கூடியவர்கள் மிக மிகக் குறைவு என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தம் அதிகமாக கடைபிடிக்கக் கூடிய மக்கள் வாழும் பூட்டான், நேபாளம், மங்கோலியா போன்ற நாடுகளில் கூட அம்மக்கள் தலாய்லாமாவை ஏற்றுக்கொள்வதில்லை. இது குறித்து தலாய்லாமாவே ஆதங்கப்பட்டு பேசியுள்ளார் “உலகில் உள்ள மற்ற அனைவரும் அதாவது கிறிஸ்தவர்கள் இந்துக்கள் முஸ்லிம்கள் உட்பட என்னை நன்றாக நடத்துகிறார்கள் ஆனால் எனது சொந்த புத்த சகோதரத்துவம் என்னை நன்றாக நடத்துவது இல்லை ” என்று (ஏப்ரல் 2,2015 ராய்டர்ஸ்) தெரிவித்தார்.

இதற்கு வரலாறு, அரசியல், கலாச்சார ரீதியான காரணங்கள் இருக்கின்றன. பௌத்தர்களிடையே பிறப்பு முதல் இறப்பு வரையிலான கலாச்சார மற்றும் வழிபாட்டு முறைகளில் இருக்கிற வேறுபாடும் ஒரு காரணமாகும். அதைவிட முக்கியமானது தலாய்லாமா குறைந்தபட்சம் நட்பின் அடிப்படையில் கூட வரவேற்கப்படவில்லை. அதற்கு காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுக்கு மூட்டையை அவர் சுமப்பது தான்.

நேபாளத்தில் கலக முயற்சி

திபெத்தின் அருகில் உள்ள நாடு நேபாளமாகும். இங்கு 81% மக்கள் இந்து மதத்தில் இருந்தாலும், இதற்கு அடுத்தபடியாக 8.2 சதவீதம் பேர் பௌத்த மதத்தில் இருக்கிறார்கள். இந்த பௌத்த மதத்தில் திபெத்திய பௌத்த மதத்தை கடைபிடிக்கக் கூடியவர்கள் தான் பெரும் பகுதி. அப்படி இருந்தும் நேபாள திபெத்திய பௌத்தர்கள் தலாய்லாமாவை விரும்புவது இல்லை. 2019 ஆம் ஆண்டு தலாய் லாமாவின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடுவதற்கு நேபாள அரசு தடை விதித்தது. இங்கு ஆட்சியில்  இருப்பது கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும், நேபாளி காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் தலாய்லாமாவின் அரசியல் குறித்து மிகவும் எச்சரிக்கையாகவே  இருக்கிறார்கள். ஜி.பி கொய்ராலா நேபாளத்தில் பிரதமராக இருந்த பொழுது சீனாவிற்கு எதிராக செயல்படக்கூடிய திபெத்திய பிரிவினைவாதிகளை சீன அரசிடம் ஒப்படைத்தார். 2003 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி மன்னர் ஞானேந்திரா ஆட்சியின் கீழ் நேபாளம் இருந்த பொழுது சீன அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 திபெத்திய பிரிவினைவாதிகளை சீனாவிற்கு நாடு கடத்தினார்.

நேபாளத்தில் தற்போது 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட திபெத்திய அகதிகள் வசிக்கிறார்கள். தொடர்ந்து சீன எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு பிரிவினர் ஈடுபடுவதை நேபாள அரசு எதிர்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் நேபாளத்திற்குள் தொடர்ந்து ஊடுருவ கூடிய அகதிகள் வருகையை 1989 ஆம் ஆண்டு முதல் நேபாளம் தடை செய்து உள்ளது. நேபாளம் ஒரே சீனக் கொள்கையை ஆதரிக்க கூடிய நாடு. அதாவது தைவானும், திபெத்தும் சீன பிரதேசத்தின் பிரிக்க முடியாத பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறது. இதனால் நேபாளத்திற்குள் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை தடை செய்கிறது. இந்தப் பின்னணியில் தலாய்லாமாவின் பிறந்த நாள் விழாவில் அணி சேர்க்கப்படும் பிரார்த்தனைகளையும், அதன் பெயரால் திபெத் கொடியை ஏற்றக்கூடிய செயல்களையும் தடை செய்து வருகிறது.

துறவி அரசின் கொலைத்திட்டங்கள்

பூட்டான் அவர்களது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பௌத்த நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இந்நாடும் புவியியல், அரசியல் ரீதியாக இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளது. தலாய்லாமாவால் நடத்தப்படும் நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசு இயங்கும் தர்மசாலாவிற்கு அருகில் உள்ள நாடு பூட்டான். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்  பூட்டானில் இருக்கக்கூடிய பௌத்த மதத்தில் 75% வஜ்ராயன பௌத்த மத பிரிவை அதாவது திபெத்திய பௌத்த மத பிரிவை சேர்ந்தவர்கள்.

இத்தனை அணுகூலங்கள் இருந்த பொழுதும் பூட்டான் பல பத்தாண்டுகளாக தலாய்லாமாவை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, அனுமதிக்கவும் இல்லை. பூட்டான் இந்தியாவை பாதுகாவலராக கொண்ட ஒரு நாடாகும். பூட்டானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் எப்பொழுதும் இந்தியாவின் வழிகாட்டுதல் அடிப்படையில் நடத்தப்படுகிறது. பூட்டான் அரசு இதை ரத்து செய்ய விரும்பினாலும் இந்தியா பிரிட்டிஷாரிடம் இருந்து பெற்ற இந்த நடைமுறையை விட்டுக் கொடுக்காமல் இன்று வரை பயன்படுத்தி வருகிறது.

திபெத்திய பௌத்தர்கள் அதிகம் வாழும் பூட்டானிற்கு செல்ல முடியாததற்கு அரசியல் காரணங்கள் அடிப்படையாக இருக்கிறது. பூட்டான் அரசியலில் தலாய்லாமாவின் நாடு கடத்தப்பட்ட அரசு நேரடியாக தலையிடுகிறது. தலாய்லாமாவின் மூத்த சகோதரர் நாடு கடத்தப்பட்ட அரசின் தலைவர் கியாலோ தோண்டப் 1974 ஆம் ஆண்டு பூட்டானின்  இளம் மன்னரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பூட்டான் அரண்மனையில் தலைமை பொறுப்பில் இருந்த திபத்திய பெண்ணுடன் இணைந்து இந்த சதிகளை செய்தார் என்ற (இந்தியா டுடே 30 டிசம்பர் 2014) குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளது. பூட்டானின் மீது செல்வாக்கு செலுத்த தலாய்லாமாவின் ஏகாதிபத்திய சக்திகள் இந்த முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

சீனாவிற்கு எதிரான சதி நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு பூட்டானில் ஒரு வலுவான தளத்தை அமைக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தின் ஒரு நோக்கம்தான் இந்த படுகொலை முயற்சி என்று நியூ யார்க் டைம்ஸ் (ஜூன் 2 1974) செய்தி வெளியிட்டது. பூட்டான் அரசு படுகொலை முயற்சியில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தது. ஒரு விரிவான அறிக்கையும் வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்தியாவில் டார்ஜ்லிங்கில் இருந்த கியாலோ தோண்டப் தலைமையில் பூட்டானின் அரசியல் தலைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒன்று தான் இந்த கொலைச்சதிகளாகும் என்றது.

இதற்கு முன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூட்டானின் பிரதமராக இருந்த ஜிக்மிடோர்ஜி படுகொலை செய்யப்பட்டார். அப்போதும் பூட்டானின் அரண்மனையில் இருந்த திபெத்திய பெண்ணின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. சீனாவிற்கு எதிராக சிஐஏவால் பயிற்சி அளிக்கப்பட்டு, நிதியும் வழங்கப்பட்டு டார்ஜ்லிங்கில் செயல்பட்டு வந்த திபெத்திய தலைமையகம் தான் இந்தச் சதிதிட்டங்கள் தீட்டப்பட்டு, பிரதமர் படுகொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தை வலுவாக முன்வைத்தனர். 1971 ஆம் ஆண்டு சீன அமெரிக்க உறவுகளுக்குப் பிறகு டார்ஜ்லிங்கில் இருந்த தலைமையகம் மூடப்பட்டது. எனினும் தலாய்லாமாவை ஆதரிக்கும் திபெத்தியர்கள் பூட்டானை கைப்பற்றும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டனர்.

பூட்டானில் செல்வாக்கை நிலை நிறுத்த திட்டம்

இந்த செயல்பாட்டிற்கு மற்றொரு புறச்சூழல் காரணமாக இருந்தது. பூட்டான் மக்கள் தொகையில் பெரும் பகுதி திபத்திய வம்சாவளியை கொண்டவர்கள். எனவே இதன் மூலம் பூட்டானில் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்தலாம் என்று தலாய்லாமா நினைத்தார். இந்தியாவில் செயல்படும் நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசு, பூட்டானுக்கு எதிராக அமைதியை சீர்குலைக்க கூடிய முறையில் செயல்படுவதாக பூட்டான் அதிகாரிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைக்கிறார்கள்.

பூட்டானில் இருக்கக்கூடிய திபெத்திய அகதிகள் பூட்டான் குடிமக்களாக மறுக்கிறார்கள். பூட்டான் நாட்டின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் பூட்டான் நாட்டின் அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்கக்கூடிய முறையில் பூட்டானின் குடியுரிமையை பெறவேண்டும் என்று பூட்டான் அரசு வலியுறுத்துவதை திபெத்தியர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.

திபெத்தியர்கள் பூட்டானின் பிரதான வாழ்க்கை நீரோட்டத்தில் இணைந்து விட்டார்கள். பூட்டானில் இருக்கக்கூடிய திபெத்திய அகதிகளுக்கு எதிர்கால தாயகம் பூட்டான் தான் என்பதையும் அறிந்து  உள்ளார்கள். ஆனால் தலாய்லாமாவும், அவரது நாடு கடத்தப்பட்ட அரசும் பூட்டானில் இருக்கக்கூடிய அகதிகள் நாடற்றவர்களாக இருப்பதன் மூலம்தான் தலாய்லாமா என்ற துறவிக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று அவர்கள் குடியுரிமை பெறுவதை தடுத்து வருகின்றனர் என்று பூட்டானின் அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மறுபுறத்தில் பூட்டானில் இருக்கக்கூடிய திபெத்திய அகதிகளைக் கொண்டு பூட்டானில் அதிகாரத்தை கைப்பற்ற தலாய்லாமா ஆதரவாளர்கள் முயற்சிப்பதை தடுப்பதற்காக, பூட்டானில் இருக்கக்கூடிய அகதிகளை சிறு சிறு குழுக்களாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்த முயற்சித்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பூட்டான் அரசியலில் எதிர்காலத்தில் வரும் குழப்பத்தை, ஆபத்தை தடுக்க முடியும் என்று நம்புகின்றனர்.

தலாய்லாமாவின் நாடு கடத்தப்பட்ட அரசு பூட்டானுடன் அரசியல் உறவு வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தலாய்லாமாவுடன் மதரீதியான உறவுகளை பேணுவதற்கு பூட்டான் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. ஆனால் தர்மசாலாவில் இருக்கிற நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசுடன் எந்த அரசியல் உறவும் வைத்துக்கொள்ள முடியாது என்பதை பூட்டான் நிராகரித்துவிட்டது. மேற்கண்ட காரணங்களால் பூட்டானில் 75% திபெத்திய பௌத்தத்தை கடைபிடிக்க கூடியவர்களும், திபெத்திய வம்சாவளிகளும் வாழக்கூடிய நாட்டிற்குள் தலாய்லாமாவால் நுழைய முடியவில்லை. அந்த மக்களும் தலாய்லாமாவின் இந்த அரசியலை விரும்பவில்லை. இந்த நிலையில் தான் திபெத்திய அகதிகளை மட்டும் வைத்துக் கொண்டு தலாய்லாமா அரசியல் சித்து வேலைகளை செய்து வருகிறார்.

கண்டுகொள்ளாத தாய்லாந்து 

தாய்லாந்து 95% பௌத்த மக்களைக் கொண்ட நாடு. பௌத்தத்தின் பிரதான பிரிவான தேரவாத பிரிவை கடைபிடிக்கக் கூடிய மக்கள் தான் இங்கு பெரும்பகுதி உள்ளார்கள். மேலும் இந்நாட்டின் பெரும்பகுதி மக்கள் தலாய்லாமாவை அறிந்திருக்க மாட்டார்கள். தலாய்லாமைவை அறிந்தால் தானே அவர் வழிபாட்டுக்கு உரியவரா? இல்லையா? என்பதை முடிவெடுக்க முடியும். ஆனால் தலாய்லாமாவை ஓரளவுக்கு அறிந்த மக்கள் கூட ஒரு மதத்தின் தலைவராக இருக்கக்கூடிய தலாய்லாமா ஏன் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்றும், ஏன் தாய் நாட்டை பிரிப்பதில் இவ்வளவு விடாப்பிடியாக இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

1993 ஆம் ஆண்டு மியான்மரில் ஆங்க்சான் சூகி கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாய்லாந்தில் ஒரு எதிர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலாய்லாமாவை கலந்து கொள்ள வைப்பதின் மூலம் தாய்லாந்தின் பௌத்த மக்களை தன்பக்கம் ஈர்க்க அமெரிக்கா முயற்சி செய்தது. ஆனால் தாய்லாந்து அரசு தலாய்லாமாவிற்கு விசா கொடுக்க மறுத்து விட்டது. அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்ததின் விளைவாக தலாய்லாமாவிற்கு 24 மணி நேர விசா மட்டும் வழங்கியது. அதே நேரத்தில் அவர் வேறு எங்கும் செல்லக்கூடாது, யாரையும் சந்திக்க கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்தது.

வரவேற்காத இலங்கை

இலங்கை நாடும் இதேபோன்று தேரவாத பௌத்த பிரிவை சேர்ந்த நாடாகும். அங்கு எந்த ஆட்சி இருந்தாலும் அவர்கள் தலாய்லாமாவை ஏற்றுக் கொள்வது இல்லை. 2006 ஆம் ஆண்டு புத்தரின் 2005 ஆம் ஆண்டு பிறந்த நாளில் கலந்து கொள்ள வேண்டும் என்று தலாய்லாமா இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இலங்கை அரசு அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இலங்கையில் புத்த மத வரலாற்று தொடர்பான மிக முக்கியமான தலங்கள் இருக்கின்றன. குறிப்பாக புத்தரின் பல் மற்றும் மகா போதி மரத்தின் வழித்தோன்றல்கள் என கூறப்படும் மரம் உள்ளது. இலங்கையில் உள்ள இந்த இரண்டு இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்று தலாய்லாமா சிறு வயதிலிருந்தே ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் இவர் ஒரு அரசியல் துறவி என்பதை கணக்கில் கொண்டு இலங்கை அரசு விசா கொடுக்க மறுத்து விட்டது. இலங்கையில் இருக்கக்கூடிய பௌத்தர்களும் தலாய்லாமாவை வரவேற்க தயாராக இல்லை.

அனுமதி மறுத்த மியான்மர்

அடுத்து பௌத்தம் மதத்தை அதிகம் பின்பற்றும் மக்கள் இருக்கக்கூடிய நாடு மியான்மர் ஆகும். இங்கு தேரவாத பௌத்த பிரிவை சேர்ந்த மதம் அதிகாரப்பூர்வ மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மதப்பிரிவில் ஒன்பது வழிபாட்டு முறைகள்  மியான்மரில் கடைபிடிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு தலாய்லாமா தான் ஒரு மதத் தலைவர் என்ற அடிப்படையில் மியான்மருக்கு செல்வதற்கான வேண்டுகோளை விடுத்தார். மியான்மர் நாடு அவரை அனுமதிக்கவில்லை. தலாய்லாமாவையோ அவரின் திபெத்திய பௌத்தத்தையோ மியான்மர் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மியான்மர் நாடு பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்தை பெற்ற பிறகு 1954 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் 8 பௌத்த நாடுகளைச் சேர்ந்த தேரவாத பிரிவுகளை அழைத்து ஆய்வு மாநாடு நடத்தியது. மிக முக்கிய தேரவாத நூல்களை சரிபார்த்து இறுதிப் படுத்தியது. அவ்வாறு இறுதிப் படுத்திய நூல்களின் அடிப்படையில் பிற்காலங்களில் எழுதப்பட்ட இதர பிரிவுகளை இவர்கள் அங்கீகரிப்பது இல்லை.அதேபோன்று திபெத்திய மதத் தலைவரின் மறுபிறவியை தேடும் பாரம்பரியம் மியான்மரில் மட்டுமல்ல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எங்கும் இது காணப்படவில்லை. எனவே பௌத்த வேறுபாடுகளின் அடிப்படையிலும் கூட மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 1984 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் தலாய்லாமா கீழ்க்கண்ட விஷயத்தை முன் வைத்தார்.

திபெத்திலிருந்து 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறுவதற்கு முன்பு அன்றைய பர்மாவிற்கு செல்வதற்கு விரும்பியதாகவும், அன்றைய தினம் பர்மாவின் பிரிமியராக இருந்த யூநு தலைமையிலான அரசு அவரை வரவேற்கத் தயாராக இல்லை என்று அறிவித்து விட்டதாக கூறினார். இன்று வரை இதுதான் நீடிக்கிறது

இணையும் புள்ளியே ஏற்றுக்கொள்ளவில்லை

சீனாவை தனது முதல் எதிரியாக கருதும் அரசுதான் தைவானில் உள்ளது. இந்த நாட்டில் பௌத்த துறவிகளை வரவேற்பது இயற்கையாக நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கலாம். குறிப்பாக சீன எதிர்ப்பில் தைவானும் தலாய்லாமாவும் ஒரே புள்ளியில் இணைவதால் அவருக்கு அமோக வரவேற்பு இருக்கும் என்று நினைத்தால் அது தவறானதாகும். இந்தியாவில் நாடு கடத்தப்பட்ட அரசை அமைத்து 40 ஆண்டுகள் வரை தலாய்லாமாவை தைவான் நாடு அனுமதிக்கவில்லை.

1997 ஆம் ஆண்டு தான் அவர் முதல் முறையாக தைவானுக்கு சென்றார். 2001 ஆம் ஆண்டு பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்காக என்ற பெயரில் தைவானில் அனுமதிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு தலாய்லாமாவின் கடைசி தைவான் பயணம் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்தது. அப்போது தைவான் நாட்டு அதிபராக இருந்த மாயிங்-ஜியோ அவரை தைவானுக்கு வர அனுமதித்ததோடு நிறுத்திக் கொண்டார். கடைசி வரை தலாய்லாமா முயற்சித்தும் அதிபர் அவரை சந்திக்கவில்லை. மறுத்துவிட்டார்.

2020 ஆம் ஆண்டு மாயிங்-ஜியோ அதிபரின் வாரிசாக திருமதி சாய் இங்-வென் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் தேர்ந்தெடுத்ததை தலாய்லாமா வெகுவாக புகழ்ந்து, வாழ்த்து செய்திகளை அனுப்பினார். அப்படி இருந்தும் தைவானுக்குள் தலாய்லாமாவை அனுமதிக்கவில்லை. இந்தியாவிற்கு வந்து அறுபது ஆண்டுகளில் தலாய்லாமா தைவானுக்கு சென்றது மூன்று முறை மட்டுமே. அதுவும் அமெரிக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க நிர்ப்பந்தத்தால் கட்டுப்பாடுகளுடன் கூடிய விசா மட்டுமே தைவானால் வழங்கப்பட்ட நிலையில் அவர் சென்று வந்தார்.

தலாய்லாமாவின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் இந்தியா உட்பட அந்த பிம்பத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். திபெத்திலிருந்து வெளியேறிய 1.5 லட்சம் பேர் மட்டும் தான். இவர்களில் 75 சதவீதம் வந்தனர். தற்போது 40 சதம் வெறியேறி விட்டனர். நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் உலகம் முழுவதும் உள்ள வாக்காளர்களே 89 ஆயிரம் மட்டுமே. 2011 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசின் தேர்தல் வழியாக இதை அறிய முடிகிறது. இவற்றில் 49,000 பேர் தான் வாக்களித்து உள்ளார்கள். பௌத்த மக்கள் அதிகமான கூடிய எந்த ஒரு நாட்டிலும் தலாய்லாமாவிற்கு ஆதரவும், பின் தொடர்பவர்களும் இல்லை என்பது தான் உண்மை.

 அ.பாக்கியம்

 


வியாழன், அக்டோபர் 02, 2025

40 திபெத்∶ நாஜிகளின் நண்பர் தலாய்லாமா

 

 

அ.பாக்கியம்

திபெத்திய தலாய்லாமா பௌத்த மத துறவி என்பதை உலகமே அறியும். ஆனாலும் அவரது வரலாறு அவரின் துறவித்தன்மையை மீறிய முறையில் அமைந்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனித வேட்டைகளுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக துணை நிற்கிறார் என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். அதற்கு மேலாக அவரைப் பற்றிய மற்றொரு வரலாற்று பதிவு அதிர்ச்சி தரக்கூடியது. உலகமே வெறுக்கும் ஹிட்லரின் நாஜிக்களுடன் அவர் நண்பராக இருந்தார். இது அவரின் துறவித்தன்மையை அடியோடு கேள்விக்கு உள்ளாகிறது.

அவர்களோடு இவர் நண்பர்களாக இருந்த காலத்தில் அந்த நண்பர்கள் நாஜிகள் என்று அறியாமல் கூட இருந்திருக்கலாம். அதே நேரத்தில் இவர்கள் நாஜிகள் என்று பிற்காலத்தில் அறிந்த பிறகும் கூட அந்த நட்பை துண்டிக்காதது மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கவும், சீனாவுக்கு எதிராக பயன்படுத்தவும், நாஜிகளைப் பற்றிய பெருமிதம் கொள்ளக்கூடிய முறையிலும் நடந்து கொண்டதுதான் தலாய்லாமா என்ற துறவியை ஏகாதிபத்தியத்தின் அரசியல் துறவியாக நிலை நிறுத்துகிறது. தலாய்லாமாவுடன் நண்பர்களாக இருந்த மூன்று பேர்களைப் பற்றி இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

நாஜிக்களும் ஆரிய இன ஆய்வும்

ஜெர்மனியில் நாஜி கட்சியின் முன்னணி தலைவரும் லட்சக்கணக்கான மக்களை கொத்துக்கொத்தாக படுகொலை செய்த ஹோலோகாஸ்ட் என்று அறியப்படுகிற கொலைக்களத்தை உருவாக்கியவராக இருந்தவர், ஹிட்லருக்கு நெருக்கமான ஹென்ரிச் ஹிம்லர் ஆவார். இவர் 1938 ஆம் ஆண்டு திபெத்திற்கு 5 பேர் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைத்தார். இந்த குழுவின் பணி ஆரிய இனத்தின் தோற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான். இந்த குழுவினர் இந்தியா வழியாக திபெத்தை சென்றடைந்தனர். இவர்கள் ஆரிய இனத்தின் தோற்றத்தின் மூலத்தை கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆரிய நோர்டிக் இன மக்கள் பழங்காலத்தில் வடக்கிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், ஆரியர்கள் உள்ளூர் மக்களுடன் கலந்து தூய்மை கெட்டு விட்டதாகவும், இதன் மூலம் ஆரியர்கள் இனரீதியான உயர்ந்தவர்கள் என்ற பண்பை இழந்து விட்டதாகவும் அடால்ஃப் ஹிட்லர் முழுமையாக நம்பினார். இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிய மக்கள் தங்களது இனக்கலப்பால் தூய்மை இழந்தவர்கள் என்று ஹிட்லர் கருதினார். எனவே, ஹிட்லர் தனது பேச்சுக்கள், எழுத்துக்கள், விவாதங்களின் மூலமாக, இந்திய மக்கள் மீதும் இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின் மீதும் வெறுப்பை உமிழ்ந்தார். ஹிட்லர் இந்திய சுதந்திரப் போராட்டத்தை இனக்கலப்பு மனிதர்கள் நடத்தனார்கள் என்ற காரணத்தினால் வெறுத்தார். அதேபோன்றுதான் சங் பரிவாரத்தினர் அவர்களின் குருநாதர் ஹிட்லர் வழியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வெறுத்தனர்.

வரலாறாக மாற்றப்படும் கட்டுக்கதைகள்

அதே நேரத்தில் ஹிட்லரின் எஸ் எஸ் படையின் தளபதியும், காவல்துறை தலைவருமான ஹென்ரிச் ஹிம்லர் அட்லாண்டிக் பெருங்கடலில் இங்கிலாந்திற்கும் போர்ச்சுகல் நாட்டிற்கும் இடையில் அமைந்திருந்ததாக நம்பப்படும் ஒரு தீவில் (புராணத் தீவு) தூய்மையான ஆரியர்கள் வாழ்ந்தனர் என நம்பப்படுகிறது. அந்த தீவை தெய்வீக இடி தாக்கியதில் மூழ்கியதாவும். பெரும் இயற்கை சீற்றத்தால் வெள்ளம் ஏற்பட்ட பொழுது இந்த ஆரிய இனம் தப்பி பிழைத்து இமயமலை பகுதிக்கு அதாவது திபெத்திற்கு குடி பெயர்ந்திருக்கலாம் என்றும் நம்பினார். இவை அனைத்தும் புராணக் கதைகள் தான். ஆரிய புராணத்தில் நம்பிக்கை கொண்ட ஹிட்லரும், அவரின் தளபதி ஹிம்லரும் இந்தப் புராணக் கதைகளை தங்களின் இனவெறி அரசியலுக்காக பயன்படுத்தினார்கள்.

இன வெறியின் பெயரால் அரசியல் நடத்தக்கூடியவர்கள் அனைவரும் வரலாற்றுப் பொய்களை கட்டமைப்பது அவர்களின் சுயத் தேவையாகும். எனவே புராணங்களையும், கட்டுக்கதைகளையும் வரலாறாக மாற்றுவதற்கான முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள். இன்று இந்தியாவில் சங் பரிவாரத்தினர் இதை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு செய்வதற்கு ஹென்றிச் ஹிம்லர் நாஜிகளின் எஸ் எஸ் படைப்பிரிவுக்குள் மூதாதையர் பாரம்பரிய பணியகம் என்ற ஒரு பிரிவை உருவாக்கினார். அந்த பிரிவு ஆரிய இனம் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக தான் ஐந்து ஜெர்மனியர்களை திபெத்திற்கு அனுப்பி வைத்தார். இந்தக் குழுவினர் முதலில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்தியாவிற்கு வந்த ஆரியர்களை இந்து மதத்தின் கலப்பால் பலவீனப்படுத்தியது போல் திபெத்திற்கு வந்த ஆரியர்களையும் திபெத்திய மதம் பலவீனப்படுத்தியது என்று நம்பினார்கள். எனவே தூய்மையான ஆரிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இதை திபெத்திய மக்கள் அறிந்து கொள்ளவில்லை. விலங்கியல் மற்றும் மானிடவியல் ஆய்வுகள் என்ற போர்வையில் தங்களின் இனத்தூய்மைக்கான ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

கொடூர கொலைகாரன்  புருனோ

மேற்கண்ட 5 பேர்களில் குறிப்பிடத்தக்கவர் புருனோ பெகர் என்பவர். மானிடவியல் ஆய்வாளராக இருந்த இவர் ஹிட்லரின் எஸ் எஸ் படை அதிகாரியாக இருந்தார். 1938-39 ஆம் ஆண்டுகளில் திபெத்தில் இருந்த புருனோ பெகர் இக்காலத்தில் 376 திபெத்தியர்களின் மண்டை ஓடுகளையும், 17 பேரின் தலைகள், முகங்கள், கைகள், மற்றும் காதுகளின் வார்ப்புகளை உருவாக்கி முடித்தார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை தயார் செய்தார். 350 பேரின் விரல், கை ரேகைகளை சேகரித்தார். இத்துடன் கூடவே திபெத்தில் 2000 க்கும் மேற்பட்ட இனவியல் கலைப் பொருட்களை சேகரித்துக் கொண்டார். 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தீவிரமடைந்ததால் மேற்கண்ட 5 பேர்களும் கல்கத்தாவில் இருந்து திரும்புவதற்கான ஏற்பாடுகளை ஹென்றிச் ஹிம்லர் செய்தார். அது மட்டுமல்ல இந்த ஐந்து பேர்களும் மூனிச் வந்து சேர்ந்த பொழுது அவர்களை வரவேற்க அந்தப் படை தளபதி அங்கு வந்தார்.

திபெத் பண்டைய ஆரிய மூதாதையர்களின் பிறப்பிடமாக இருக்கலாம் என்றும், அங்கிருந்துதான் ஜெர்மனியர்கள் வந்திருக்கிறார்கள் என்ற கருத்தை புருனோ பெகர் நிரூபிக்க முயற்சி செய்தார். இவருடைய இந்த முயற்சிக்கு எஸ்.எஸ். படையில் அமைக்கப்பட்ட மூதாதையர் பாரம்பரிய பணியகமும் முழு ஆர்வத்துடன் ஒத்துழைத்தது. எனவே திபெத்தில் சேகரித்து வந்த மண்டை ஓடுகள் எலும்புகள் அனைத்தையும் ஒப்பீடு செய்வதற்காக மிகக் கொடூரமான அடுத்த செயலில் இந்த விஞ்ஞானி ஈடுபட்டார். யூத இனத்தை சேர்ந்த 89 ஆண் பெண் யூதர்களையும், 26 சோவியத் நாட்டைச் சேர்ந்த போர் கைதிகளையும் தேர்வு செய்து பிரான்சில் உள்ள நட்ஸ்வைலர்-ஸ்ட்ரூதோஃப் (Natzweiler-Struthof) என்ற ஹோட்டல் முகாமுக்கு கொண்டு சென்றனர். இந்த 115 பெரும் புருனோ பெகர் தலைமையில் விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டு, அவர்களின் சதைகளை உடலிலிருந்து நீக்கினார்கள். அவர்களின் எலும்பு கூடுகளை மட்டும் எடுத்து புருனோ பெகரின் இனத்தூய்மை ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படைத்தனர்.

இது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் ஹிட்லர் காலத்தில் நடந்திருந்தாலும் அந்த சம்பவங்களைப் போன்று இதுவும் கொடூரமான சம்பவம் ஆகும். இதற்காக நியூரம்பர்க் விசாரணை நீண்ட காலம் இழுத்தடித்து 1976 ஆம் ஆண்டு 86 கொலைகள் செய்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. 86 கொலைக்கு மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அல்ல. சொற்பமான மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தப் பின்னணியை முன்வைக்க காரணம் இப்படிப்பட்டவர் தான் தலாய்லாமாவின் நண்பராக இருந்தார் என்பதுதான்.

கொலைகாரனுடன் தலாய்லாமா சந்திப்பு

1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் படி 1983 ஆம் ஆண்டு முதல் தலாய்லாமாவை புருனோபெகர் மூன்று முறை சந்தித்ததாக எழுதியுள்ளார். முதல் சந்திப்பு 1983 செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் உள்ள பேட் சோடன் ஆம் டானஸ் கலாச்சார மையத்தின் மண்டபத்தில் நடந்தது. இஸ்லாத்திற்கும் நாத்திக சித்தாந்தங்களுக்கும் இடையில் ஏற்படும் பதற்றத்தில் பௌத்தத்தின் சக்தி பற்றிய தலைப்பில் தலாய்லாமா சொற்பொழிவு நிகழ்த்தினார். இதன் பிறகு இந்த சந்திப்பு நடந்ததை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது 1939 ஆம் ஆண்டு தான் லாசாவில் இருந்ததை மிகவும் பெருமையாக தலாய்லாமாவிடம் பரிமாறிக் கொண்டதை நினைவு கூறுகிறார். 1984 ஜூலை மாதம் தொழில் அதிபர் ஃபிரைட் ஹெல்ம் ப்ரூக்னர் நடத்திய வரவேற்பு நிகழ்வில் தலாய்லாமாவுடன் தனது இரண்டாவது சந்திப்பு நடந்ததை குறிப்பிடுகிறார். தனது மூன்றாவது சந்திப்பு 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஃப்ராங்ஃபர்ட் விமான நிலையத்தில் உள்ள சாட்டில் ஹோட்டலில் நடந்துள்ளது. தலாய்லாமா டெல்லியில் இருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள ரிகோனுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது இந்த சந்திப்பு நடந்துள்ளது.

நாஜியிடம் கல்வி

தலாய்லாமாவின் மற்றொரு நாஜி நண்பர் ஹென்ரிச் ஹரார் ஆவார். இவர் ஒரு விளையாட்டு வீரர். மலையேற்ற வீரர். தனது மலையேற்றத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர். 1933 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியைப் பிடித்த உடன் அந்த கட்சியில் இணைந்து ஹிட்லரின் சிறப்புப்படையான எஸ்எஸ் படையில் உறுப்பினராக சேர்ந்தார். ஹிட்லருக்கு மிகவும் நெருக்கமானவர். மலையேற்றத்திற்கு முன்பும் பின்பும் ஹிட்லரை சந்தித்து வாழ்த்து பெறக் கூடியவர். இவரது மலையேற்றத்தை ஹிட்லர் பாராட்டியது மட்டுமல்ல ஆரியதிறன் என்றென்றும் மேன்மையின் சின்னம் என்று அந்த திறனை இனவாதபிரச்சாரமாக செய்தார். இவர் மலை ஏற்றத்திற்காக 1939 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பொழுது அப்போதைய பிரிட்டிஷ் அரசால் ஜெர்மன் உளவாளி என்று கைது செய்யப்பட்டு டேராடூனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்வேறு பெயர்களில் உளவாளிகளை அனுப்புவது உளவு அமைப்புகளின் நடைமுறைகளில் ஒன்றாகும். எனவே இவர் மலையேற்றத்திற்கு வந்தாரா? உளவு பார்க்க வந்தாரா? என்பது விடை காண முடியாத கேள்வியாகும். இவர் மிகவும் சிரமங்களுக்கிடையில் டேராடூன் சிறையில் இருந்து தப்பித்து திபெத்திற்குச் சென்றுவிட்டார். 1944 ஆம் ஆண்டு முதல் திபெத்தில் இருந்தார். ஒரு சில ஆண்டுகளில் திபெத்தில் அரசு பணியில் அமர்ந்தார். அப்போது சிறுவனாக இருந்த தலாய் லாமாவிற்கு மேற்கத்திய உலகை அறிமுகப்படுத்தும் ஆசிரியராக பணியில் நியமிக்கப்பட்டார். அவர் புவியியல், கல்வி, அறிவியல் ஆகியவற்றை தலாய்லாமாவிற்கு போதித்தார். தலாய்லாமா மிக விரைவாக இவற்றை உள்வாங்கிக் கொண்டார் என்றும் தனது புத்தகத்தில் எழுதி உள்ளார்.

 

 

நாஜி ஆசிரியருடன் தொடர்ந்த நட்பு

1952 ஆம் ஆண்டு ஹென்ரிச் ஹரார் ஆஸ்திரியாவிற்கு திரும்பிச் சென்றார். 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவிற்கு வந்த பிறகு ஹரார் அவரை தர்மசாலாவில் சந்தித்து பேசி உள்ளார். அதற்கு மேலும் 1991 ஆம் ஆண்டு வாஷிங்டன் டிசியில் தலாய்லாமா விஜயம் செய்த போது ஹென்ரிச் ஹராரும் அவரது மனைவியும் தலாய்லாமாவை சந்தித்து பேசி உள்ளனர். 1992 ஆம் ஆண்டு தலாய்லாமா ஆஸ்திரியாவுக்கு சென்று திபெத் பற்றிய ஹென்றிச் ஹராரின் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். 2002 ஆம் ஆண்டு திபெத்துக்காக பிரச்சாரம் செய்ததற்கு இந்த நாஜிக் கட்சியின் முன்னாள் அதிகாரிக்கு லைட் ஆப் ட்ரூத் பட்டம் தலாய்லாமாவால் வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஹரார் மரணமடைந்த பொழுது தலாய்லாமா நாஜி கட்சி நண்பனுக்கு மிகப்பெரிய அளவில் அஞ்சலியை செலுத்தினார்.

மூன்றாவதாக குறிப்பிடத்தக்க நபர் மிகுவெல் செரானோ மிகவும் செல்வாக்கு மிக்கவர். ஜெர்மனியின் சார்பில் சிலி நாட்டு தூதராக இருந்தார். இவர் ஒரு ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் தான் ஹிட்லரை கடவுள் என்ற ஸ்தானத்திற்கு உயர்த்தியவர். இதற்கு மறைபொருள் ஹிட்லரியம் என்று பெயர் சூட்டினார். இவரின் கூற்றுப்படி அடால்ஃப் ஹிட்லர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு அவதாரம் ஹைபர்போரியன் உலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட தெய்வ மனிதர் என்றார். நாஜி ஆட்சி என்பது நவீன புறப்பொருள் உலகத்தை எதிர்ப்பதற்காக ஒரு ஆன்மீக சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக நிறுவப்பட்ட ஆட்சியாகும் என்று பேசினார்.

1978 ஆம் ஆண்டு தனது கருத்துக்களை விளக்கும் புத்தகங்களை இவர் வெளியிட்டார். இவரும் தலாய்லாமாவுடன் தனிப்பட்ட நட்பை நெருங்கிய முறையில் கடைபிடித்து வந்தார். 1984 ஆம் ஆண்டு 1992 ஆம் ஆண்டும் அவருடன் தனிப்பட்ட சந்திப்புகளை தலாய்லாமா நடத்தி உள்ளார்.

நாஜி பாசம்

மேற்கண்ட மூன்று நபர்களின் நட்புகளை கவனத்தில் எடுத்தால் ஆரம்பத்திலேயே தலாய்லாமாவிற்கு அவர்கள் நாஜிகள் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு தெரிந்த பிறகும் அவர்களுடன் நட்பை நீடித்திருப்பது என்பதுதான் தலாய்லாமாவின் நாஜி பாசத்தை வெளிப்படுத்துகிறது. புருனோபெகர் விஷவாயு செலுத்தி மனிதர்களைக் கொன்று தண்டனை பெற்ற குற்றவாளி. ஒரு இனப்படுகொலை ஆட்சியின் படை அதிகாரியாக இருந்து, விஞ்ஞான நெறிமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து, அடிப்படை மனித தன்மையற்ற ஒன்றை தனது வாழ்நாளில் அரங்கேற்றியவருடன் தலாய்லாமா தொடர்பை வைத்திருக்கிறார்.

 

பொதுவாக தலாய்லாமாவிற்கு நாஜிகள் மீதும், போரின் மீதும் ஈர்ப்பு இருந்தது என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் அம்பலப்படுத்துகின்றன. திபெத்திய பௌத்தத்தின் ஒரு பிரிவான டோர்ஜோ ஷீக்டன் பிரிவு தலாய்லாமாவின் போர் ஆர்வம் குறித்தும், நாஜிகளின் மீது உள்ள ஈர்ப்புகளைக் குறித்தும் விரிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச ஷீக்ட்டன் சமூகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறது அந்த அமைப்பின் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொலை செய்யலாம் 

அகிம்சை வீரராக தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளும் தலாய்லாமா 1993 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக் கைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ராணுவம் இல்லாமல் முடிந்தவரை மக்களை கொல்வது போன்ற ஓர் போர் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள். அப்படி என்றால் போரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு ஆம் ஒப்பீட்டு அளவில் மேலே கூறிய கருத்தின் படி சரியானது என்று குறிப்பிட்டார். இதிலிருந்தே போர் இந்த அகிம்சாவதியால் வெறுக்கப்படவில்லை என்பதை அறிய முடியும்.

நீங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறீர்கள் என்ற அடுத்த கேள்விக்கு தலாய்லாமாவின் பதில்கள் ஆச்சரியம் அளிப்பதாக இருந்துள்ளது “இரண்டாம் உலகப்போரில் படங்களுடன் கூடிய புத்தகங்களை பார்ப்பதும், படிப்பதும் எனக்கு பிடிக்கும் என்றார். டைம் லைஃப் தயாரித்த சில புத்தகங்களை நான் வைத்திருக்கிறேன். மேலும் ஒரு புதிய தொகுப்பை இப்பொழுது ஆர்டர் செய்துள்ளேன். 30க்கு மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளேன். வன்முறை இயந்திரங்கள், பலவற்றை நான் மிகவும் கவர்ச்சிகரமானதாக காண்கிறேன். விமானங்கள், போர்க்கப்பல்கள், குறிப்பாக விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் ஜெர்மன் யூ படகுகள், நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை பார்ப்பதிலும், படிப்பதிலும் விருப்பம் என “ஓய்வு நேர பணிகள்” (பக்கம் 323) தனது ஓய்வு நேர செயல்பாடுகள் என்று வெளிப்படுத்தி உள்ளார். ஒரு துறவியின் ஓய்வு நேரமானது ஆன்மீகம், அமைதி தொடர்பான வாசிப்புகளை விட போர் குறித்த வாசிப்பில், படங்களின் மீது ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார் என்பதை குறிப்பாக கவனிக்க வேண்டி உள்ளது.

2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரியாவின் ஜோர்க் ஹீடருக்கு திபெத்திய முறைப்படி வெள்ளை தாவணி (கட்டக்) என்று அழைக்க கூடிய பாராட்டு பொருளை வழங்கி தனது ஆசீர்வாதங்களை பகிரங்கமாக தெரிவித்தார். ஹைடர் தீவிர வலதுசாரி. ஆஸ்திரிய சுதந்திர கட்சியின் தலைவராகவும் இருந்தார். ஜெர்மனியின் கொள்கைகளை பாராட்டி பேசியதற்காக ஆஸ்திரியாவில் புகழ்பெற்றிருந்தார். அவரது கட்சி கூட்டணி அரசாங்கத்தை ஆஸ்திரியாவில் அமைத்தது. இது ஒரு நாஜி ஆதரவு கட்சி என்ற முறையில் ஐரோப்பிய ஒன்றியம் ஆஸ்திரியா மீது ராஜதந்திர புறக்கணிப்பை செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கும் ஒரு நாஜி ஆட்சியை தலாய்லாமா பாராட்டுகிறார். அதுவும் 2006 ஆம் ஆண்டுகளில் இதை செய்திருக்கிறார். நாஜிகளின் நண்பர் என்ற அவரது செயல் அறிந்தே தொடர்கிறது.

அகிம்சையை விட அழிவுகளில் அதிக ஆர்வம்

2008 ஆம் ஆண்டு நியூரம்பர்க் நகரில் ஒரு அரங்க கூட்டத்தில் தலாய்லாமா கலந்து கொண்டு பேசினார். இந்த நியூரம்பர்க் நகரம் 1930 ஆம் ஆண்டுகளில் நாஜிக் கட்சிகள் பெரும் பேரணிகளை நடத்திய இடம். இங்கு கலந்து கொண்டு பேசிய பொழுது நான் குழந்தையாக இருந்தபோது நியூரம்பர்க்கை புகைப்படங்களில் பார்த்ததை பெருமிதமாக நினைவு கூர்ந்தார். “ஜெனரல்கள் மற்றும் ஆயுதங்கள்” மற்றும் ” ஹிட்லர், ஹெர்மன் கோரிங்” ஆகியோருடன் நடைபெற்ற நிகழ்வுகள் “மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது என்று குறிப்பிட்டார். அரங்கத்தில் இருந்த கூட்ட பங்கேற்பாளர்கள் இதை அதிர்ச்சி கலந்த வெட்கத்துடன் பார்த்தனர். நியூரம்பெர்க்கின் தலைமை மேயர் உல்ரிச் மாலி இது ஒரு அதிர்ச்சியின் தருணம் என்று அழைத்தார் (பக்கம் 330)

அவர் சிறு குழந்தையாக இருந்த பொழுது நாஜிகளின் பேரணியின் மீது அவர் ஈர்ப்புடன் இருந்ததை அதே இடத்தில் பெருமிதமாக குறிப்பிடக்கூடிய அளவிற்கு அவரின் நாசிசத்தின் மீதான பாசம் இருந்திருக்கிறது. இவை அனைத்தும் ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ஸ்டெர்ன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இறுதியாக அந்த பத்திரிக்கை வெளியிட்ட கடைசி வரி இன்று வரை அந்தப் புனிதர் நாஜிகளுடன் இருந்த இழிவான உறவுகளில் இருந்து தன்னை ஒருபோதும் விலகிக் கொள்ளவில்லை (பக்கம் 331) என்று எழுதி முடித்தது.

தலாய்லாமா நாஜிகள் என்று அறியாத காலத்தில் உறவு வைத்தது என்பது வேறு. அவர்கள் நாஜிகள் என அறிந்து கொண்ட பிறகு அவர்களுடன் நட்பை பேணுவதும், நாஜிகளை பாராட்டுவது என தற்கால அரசியல் அடிப்படையிலிருந்து முடிவுகளை எடுக்கிறார். அமெரிக்கா ஏராளமான நாஜிகளின் படைத்தளபதிகளை, விஞ்ஞானிகளை, மனித படுகொலை செய்த ராணுவ நிபுணர்களை தனது நாட்டிற்குள் வரவழைத்துக் கொண்டது. எனவே அமெரிக்காவில் செயல் தலாய்லாமாவிற்கும் உடன்பாடு உடையதாக, சீன எதிர்ப்பிலிருந்து நாஜிகளின் நண்பனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய நபராக இந்தத் துறவி இருக்கிறார். இவர் ஒட்டுமொத்த திபெத்திய மக்களின் விடுதலைக்காக தனது செயல்பாட்டை அமைத்துக் கொள்ளவில்லை என்பது புலப்படுகிறது.

அ.பாக்கியம்

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...