Pages

சனி, ஆகஸ்ட் 09, 2025

32 திபெத்: தோல்வி கண்ட பிரிட்டன் சதிகள்

 

அ.பாக்கியம்

14ஆவது தலாய்லாமா 1959 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி திபெத்திலிருந்து தப்பித்து வந்து இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா என்ற இடத்தில் தஞ்சம் புகுந்தார். ஆன்மீகத் தலைவர் என்ற அடிப்படையில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனைத்து விதமான உதவிகளையும் செய்தார். அவரை பின்தொடர்ந்த சில ஆயிரம் பேர்கள் அவருடன் இந்தியா வந்து சேர்ந்தனர். ஜூன் 20 ஆம் தேதி முதன்முதலாக பத்திரிக்கையாளர் சந்திப்பை தலாய்லாமா நடத்தினார்.

அந்த சந்திப்பில் சீனாவுடன் ஏற்பட்ட 17 பிரிவு ஒப்பந்தம் துப்பாக்கி முனையில் கையெழுத்து வாங்கப்பட்ட ஒப்பந்தம் என குற்றச்சாட்டை முன் வைத்தார். மாநாடு நடத்தி சீனத்துருப்புக்களை வரவேற்றவர் சீனாவின் மக்கள் விடுதலைப்படை படையெடுத்து திபெத்தை ஆக்கிரமித்துக் கொண்டது என அறிவித்தார்.

இந்தியாவிற்கு தப்பி வரும் வரை சீன அரசையும், அதன் திட்டங்களை புகழ்ந்து பேசியவர் இப்போது தலைகீழாக மாற்றி பேசினார். ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது திபெத்திய தூதுக்குழுவை வழிநடத்திய ந்காபோய் ந்காவாங் ஜிக்மே, இதில் எந்த வற்புறுத்தலும் இல்லை என்று கூறினார்.  இந்த ஒப்பந்தம் மட்டுமே திபெத்தின் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். தலாய்லாமா ஏகாதிபத்திய செல்வாக்கின் கீழ் செயல்பட்டதால் மாறுபட்ட நிலையெடுத்தார்.

தலாய் லாமாவின் வன்முறை அரசியல்

இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது தலைமையில் திபெத்திய அரசாங்கம் அமைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்தார். ஆனால் அவரின் அரசின் கீழ் மக்களை பாதுகாப்பதற்காக ராணுவம் அமைக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. மாறாக, மதத்தை பாதுகாக்க ராணுவ அமைப்பும், சிறப்பு எல்லைப் படைகள் போன்றவற்றையும் இந்த அரசு உருவாக்கும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் திபெத்தில் மீண்டும் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை மீட்டெடுக்கும் பணிகளை செய்வதற்காக ஆயுதப்படைகளையும், கொரில்லா குழுக்களையும் உருவாக்கி கலவரங்களை தூண்டி விட்டார். இதன் மூலம் திபெத்தில் புதிய நிலைமை உருவாகியது. பிரிவினைவாதிகள், பிற்போக்கு சக்திகள் ஒருபுறமும், ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான சக்திகள் மறுபுறமும் களத்தில் நிற்க வேண்டிய நிலைமை உருவானது.

இதன் தொடர்ச்சியாக 1963 இல் திபெத்தின் எதிர்கால அரசியல் அமைப்பு முறையை வெளியிட்டார். இதையே 1991 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களின் அரசியல் அமைப்புசட்டமாகமாற்றினார். 1980 ஆம் ஆண்டு தலாய்லாமா தர்மசாலாவில் திபெத்தின் பிரிவினைவாத தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி திபெத்திய சுதந்திரத்தை அடைவதற்காக 5 அம்ச நடவடிக்கைகளை அறிவித்தார். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி அமெரிக்காவிற்கு சென்று அங்கு திபெத் ஒரு சுதந்திர நாடு என்று அறிவித்தார். இதன்முலம் திபத்தின் உரிமையை அமெரிக்காவிடம் அடமானம் வைத்தார்.

தலாய்லாமாவும், அமெரிக்காவும் எடுத்த கலவர முயற்சியால் 1987 முதல் 1989 வரை திபெத்தின் தலைநகர் லாசாவில் கலவரங்கள் நடைபெற்றது. பொதுமக்களையும், அரசு அலுவலகங்களையும் கலவரக்காரர்கள் தாக்கினார்கள். மார்ச் 2008 இல், நூற்றுக்கணக்கான திபெத்திய துறவிகள் லாசாவில் கூடி, தொடர் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையும் அதிகரித்தன. இந்த வன்முறையில் 22 பேர் இறந்தனர். 2008 ஆம் ஆண்டு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை சீர்குலைப்பதற்காக அமெரிக்காவும் மேற்கத்திய ஊடகங்களும் வெளிநாடுகளில் வசிக்கும திபெத்தியர்களை தூண்டி விட்டார்கள். சில இடங்களில் தாக்குதலை நடத்தினார்கள். ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வந்த ஒரு ஊனமுற்ற பெண்ணை பாரிஸ் நகரில் வழிமறித்து ஜோதியை வலுக்கட்டாயமாக பறிப்பதற்கான முயற்சியில் திபெத்திய கலவரக்காரர்கள் இறங்கினார்கள். அந்தப் பெண் அவற்றை முறியடித்து உயிரை பணயம் வைத்து ஜோதியை கொண்டு வந்து சேர்த்தார். இதுபோன்ற இன்னும் சில கலவரங்களை தலாய்லாமா-அமெரிக்கா கூட்டணி  நடத்தினாலும் அவை திபெத்திய மக்களாலும், சீன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஊனமுற்ற பெண்ணை தாக்கியது சீன மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் கடும் கோபத்தை உருவாக்கியது.

பிரிட்டனின் சதிகள்

1840 ஆம் ஆண்டு பிரிட்டன் சீனாவின் மீது அபினி யுத்தத்தை தொடுத்தது. அன்று முதல் சீன சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் சீனாவை அரை-காலனித்துவ, அரை-நிலப்பிரபுத்துவ நாடாக மாற்றியது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டன் உட்பட பல ஏகாதிபத்திய நாடுகள் சீனாவை துண்டு துண்டாக பிரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். சீனாவில் உயிகுர் இன மக்கள் வாழும் பகுதியில் தனிநாடு அமைப்பதற்கான முயற்சி எடுத்து தோல்வி அடைந்தனர்.

1888 ஆம் ஆண்டும், 1903 ஆம் ஆண்டும் இரண்டு முறைகள் பிரிட்டிஷ் படைகள் திபெத்திற்குள் ஊடுருவியது. 1888 ஆம் ஆண்டு திபெத்தின் மீது இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசு தலையிட்டது. தங்களது ஊடுருவல் மூலம் தீபத்தில் செல்வாக்கை நிலை நாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. 19 ஆம் நூற்றாண்டில் சிக்கிம், பர்மாவையும் பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னுடன் இணைத்துக் கொண்டதன் தொடர்ச்சியாக திபெத்தை பிடித்துக் கொள்வதற்கான  முயற்சியில் ஈடுபட்டார்கள். பூட்டான் மற்றும் நேபாளத்தின் உடன் ஆங்கிலேய அரசு உறவுகளை பலப்படுத்தியதாலும் திபெத் அவர்களின் ஏகாதிபத்திய ஆளுமைக்கு தேவைப்பட்டது. இந்தப்பகுதியில் தங்களது நலன்களை பாதுகாக்கவும், குறிப்பாக பிரிட்டனின் வர்த்தகப்  பாதையை விரிவுபடுத்தவும் திபெத்தின் மீது படையெடுக்க ஆரம்பித்தனர். இதற்கு சிக்கிம் பயணம் என்று பெயர்சூட்டி சிக்கிமை பாதுகாப்பதாக அறிவித்து இந்தப் படையெடுப்பு நடந்தது. சீன அரசாங்கத்தின் எதிர்ப்பினால் பிரிட்டிஷ் அரசாங்கம் பின்வாங்க நேர்ந்தது. 1890 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சீன மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி பிரிட்டிஷ் அரசு சிக்கிமுடன் தனது எல்லையை வரையறுத்து முடித்துக் கொண்டது.

மீண்டும் 1903 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி 1904 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசு படைகள் திபெத்தின் மீது படையெடுப்பை நடத்தியது. இதற்கான நோக்கம் மீண்டும் சிக்கிம் பகுதியில் திபெத் ஊடுருவல் என்ற காரணத்தை முன்வைத்து, எல்லை பாதுகாப்பு என்ற பெயரால் இந்தபடையெடுப்பு நடந்தது. திபெத்தின் தெற்கு பகுதியை இந்த ஓராண்டுகள் மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. திபெத்திய மற்றும் கிங்வம்ச இராணவத்தால் பிரிட்டிஷ் படை வெளியேற்றப்பட்டது,

பிரிட்டிஷ் திபெத்தின் மீது கவனம் செலுத்தியதற்கு மற்றொரு முக்கிய காரணம், ஜார் மன்னர் தலைமையிலான ரஷ்ய பேரரசின் விரிவாக்கம் யுரேசிய பகுதிகளில் அதிகமாகியது. உலகில் பிரிட்டிஷ், மங்கோலிய பேரரசிற்கு பிறகு முன்றாவது பேரரசாக ஜார் தலைமையிலான  ரஷ்யா திகழ்ந்தது. எனவே திபெத்தின் மீது ரஷ்யாவின் விரிவாக்கம் நடைபெறும் என்று பிரிட்டன் அஞ்சுவதால் திபெத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக 1907 ஆம் ஆண்டுகிரேட் பிரிட்டனும், ஜாரின் ரஷ்யாவும் திபெத் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டார்கள். ரஷ்யாவிற்கு திபெத்தின் மீது எந்த ஆர்வமும் இல்லை என்று தெளிவான ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசு பெற்றிருந்தாலும், கவலைகளை நீடித்தது. எந்த நேரத்திலும் ஜார் ரஷ்யா கைப்பற்றலாம் என்ற கவலை தான் அது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளும் திபெத்தின் மீது மேலாதிக்கும் செலுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகும். தங்களுக்கு தொடர்பில்லாத மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஐரோப்பாவில் இருக்கக்கூடிய இருநாடுகள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். காரணம் கிங் வம்சம் வீழ்ச்சியின் விளிம்பியில் இருந்தது. அரசியல் நிலையற்ற தன்மை நீடித்தது. இதைப்பயன்படுத்தி திபெத்தை கூறுபோட இரு நாடுகளும் திட்டமிட்டன.

பிரிவினைவாதிகளை உருவாக்க உதவி

கிங் வம்ச ஆட்சி காலத்தில் இருந்த ராணுவமும், பொதுமக்களும் இந்த ஊடுருலை மிகக் குறுகிய காலத்தில் முறியடித்தார்கள். படையெடுப்புகள் மூலம் திபெத்தை கைப்பற்ற முடியாது என்று புரிந்துகொண்ட பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்கு ஆதரவான பிரிவினைவாதிகளை திபெத்திற்குள் உருவாக்குவதற்கான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். இதற்கு திபெத் சுதந்திரம் என்ற கோஷத்தை முன்வைத்து பிரிவினைவாதிகளை ஊக்குவித்தார்கள்.

இதுவும் முழுமையாக வெற்றி பெறாத பொழுது 1913 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சிம்லா மாநாடு என்ற ஒரு மாநாட்டை சிம்லாவில்கூட்டியது. இந்த மாநாட்டின் நோக்கம் பிரிட்டன், சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவை மறு வரையறை செய்வதுதான் என்று அறிவித்தது. இந்த மாநாட்டில் திபெத்தை ஒரு சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்மொழிவுகள் வைக்கப்பட்டது. சீனப் பிரதிநிதிகளின் கடுமையான எதிர்ப்பால் தனிநாடு ஆலோசனை கைவிடப்பட்டது. இதற்கு அடுத்ததாக ஒரு சமரசத் திட்டம் என்ற அடிப்படையில் திபெத்சீனாவின் கீழே இருந்தாலும் அது ஒரு சுயாட்சி பகுதி என்று அறிவிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்கள். இந்த முன்மொழிவும் திபெத்தை பிரித்து எடுப்பதற்கான நோக்கமாகும். மேற்கண்ட மாநாட்டில் சீன பிரதிநிதிகள் கையெழுத்து போடாமல் மறுத்துவிட்டனர். இதனால் பிரிட்டனின் நோக்கம் நிறைவேறாமல் முடிவடைந்தது.

1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதிநிதியின் ஆதரவுடன் திபெத்த்தில் இருந்த உள்ளூர் அரசாங்கம் திடீரென ஒரு வெளியுறவு விவகார ப் பணியகத்தை அமைப்பதாக அறிவித்து விட்டது திபெத் ஒரு சுதந்திர நாடு என்ற முறையில் உள்ளூர் அரசாங்கம் செயல்பட ஆரம்பித்தது. சீனாவின் எதிர்ப்பினால் அந்த பணியகம்ஆரம்பிப்பது கைவிடப்பட்டது. பிரிட்டன் விடுவதாக இல்லை. நிலையற்ற அரசியல் தன்மைகளை கவனத்தில் கொண்டு எப்படியாவது திபெத்தை பிரித்து விட வேண்டும் என்ற வெறித்தனத்துடன் செயல்பட்டது

திபெத்தை நாடாக அங்கீகரிக்க முயற்சி 

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக மார்ச் 23 முதல் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை ஆசிய உறவுகள் மாநாடு என்ற ஒரு மாநாட்டை பிரிட்டன் அரசு புதுடெல்லியில் கூட்டியது. இந்திய உலக விவகார கவுன்சிலால் இந்த மாநாடு கூட்டப்படுவதாக அறிவித்தது. ஆசிய நாடுகளிடையே கலாச்சார மேம்பாடு, அறிவுசார் பரிமாற்றம், சமூக ரீதியிலான நல்லிணக்கம் போன்றவற்றை வளர்ப்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தார்கள். இந்த மாநாட்டிற்கு இந்தியாவின் சரோஜினி நாயுடு அவர்களை தலைமை ஏற்க வைத்தார்கள். இந்த மாநாட்டிற்கு திபெத் ஒரு சுதந்திர நாடு என்ற முறையில் கலந்து கொள்வதற்கான அழைப்பை கொடுத்தார்கள். அவர்கள் கலந்து கொள்வதற்கான திரை மறைவு சதிகளிலும் ஈடுபட்டார்கள். மாநாட்டில் தேசியக்கொடிகள் அமைக்கப்பட்ட இடத்தில் திபெத்தின் கொடிகளையும் அமைத்தார்கள். சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததின் விளைவாக மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் இந்த முயற்சியை கைவிட்டு விட்டனர்.

பிரிட்டனின்தூண்டுதலால் திபெத்தில் இருந்த உள்ளூர் அரசாங்கம் 1949 ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதி கம்யூனிஸ்டுகள் தங்குவதற்கு தடை செய்வதாக அறிவித்தது. அது மட்டுமல்ல சீன குடியரசின் அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவையும் பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திபெத் ஒரு சுதந்திர நாடு என்ற முறையில் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, நேபாளம் உட்பட பலநாடுகளுக்கு திபெத்தின் உள்ளூர் அரசாங்கம் அழைப்பு கொடுத்தது. தங்கள் நாட்டில் நல்லெண்ணப் பணிகளுக்காக வரவேண்டும் என்று அழைத்தார்கள். இந்த அழைப்புக்கு பின்னால் ராணுவ உதவியும் இதர ஆயுத உதவிகளும் அடங்கி இருக்கிறது என்பது உலகறிந்த ரகசியம். பிரிட்டன் சீனபுரட்சி வெற்றிக்கு பிறகு திபெத்தின் சீனாவின் பகுதி என்று சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் திபெத்திற்கு உண்மையான சுயாட்சி வழங்க வேண்டும் என்றும் மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்றும் தொடர்ந்து பிரிவினை சக்திகளுக்கு உதவி செய்து வருகிறது.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

40 திபெத்∶ நாஜிகளின் நண்பர் தலாய்லாமா

    அ.பாக்கியம் திபெத்திய தலாய்லாமா பௌத்த மத துறவி என்பதை உலகமே அறியும். ஆனாலும் அவரது வரலாறு அவரின் துறவித்தன்மையை மீறிய முறையில் அமை...