Pages

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

35 திபெத்: தடம் புரண்ட இந்தியா

 


அ.பாக்கியம்

இந்திய சீன உறவுகளை சீர்குலைப்பதற்கு இரு நாடுகளையும் எதிர் எதிரே நிறுத்துவதற்கு திபெத்திய பிரச்சனை மட்டும்தான் அடிப்படையாக இருக்கும் என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. நரேந்திர மோடியின் அரசு இந்தியாவில் பதவியேற்று பிறகு அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியது. எனவே பல நேரங்களில் இரட்டை நிலை எடுத்து அம்பலப்பட்டு நிற்கக்கூடிய காட்சிகளையும் காண முடிந்தது. தலாய்லாமாவே நல்ல முடிவை அமைதியான முறையில் நிறைவேற்ற விரும்பினாலும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், இந்தியாவில் உள்ள சீன எதிர்ப்பு சக்திகள் அவற்றை அனுமதிக்காது.

அரசியல் சுழற்சியில் பிறந்தநாள்

ஒருபுறத்தில் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு பிரேசிலில் கூடியது. இந்த அமைப்பு அமெரிக்காவின் ஒற்றை உலகத்திற்கு (சர்வதேச வர்த்தகத்தில் உலக நாடுகள் அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை) சவால் விடக்கூடிய அமைப்பு. இதில் இந்தியாவும் உறுப்பினர். இந்த அமைப்புக்குள் முரண்பாடுகளை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு இந்தியா மட்டும்தான் பொருத்தமானது என அமெரிக்கா முடிவு செய்திருந்தது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுகள். ஏற்கனவே சீனாவிற்கு எதிரான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளடக்கிய ஆசிய நாட்டில் குவாட் ராணுவ கூட்டணியை அமெரிக்க உருவாக்கி இருந்தது. இதே காலத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே இந்த இரண்டு நிகழ்வுகளையும் சீர்குலைப்பதற்கு அமெரிக்கா, மேற்கத்திய, மற்றும் இந்தியாவில் இருந்த சீன எதிர்ப்பு சக்திகளும் தலாய்லாமாவின் பிறந்தநாளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

தலாய்லாமாவின் பிறந்தநாள் மிக சாதாரண ஒன்றுதான். ஆனால் சில மாதங்களாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் இந்தியாவிலிருந்த உளவுத்துறை அமைப்புகளையும் இணைத்து அவற்றை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்திருந்தனர். அந்த முடிவையே மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளையும் சீர்குலைக்க பயன்படுத்தினர். 2025ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தலாய்லாமாவின் பிறந்தநாளை ஒருவார காலம் அமெரிக்கா முழுவதும் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. தலாய்லாமாவின் பிறந்த நாளை அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அந்த அரசு நிதி உதவி செய்து கொண்டாட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சீன எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது தான் அடிப்படை நோக்கம். பிறந்த நாளை முன்னிட்டு தலாய்லாமா தனது மறுபிறவி வாரிசை அறிவித்த நிகழ்வில் சர்வதேச பத்திரிக்கையாளர்களும் கலந்து கொள்ள வைத்துள்ளார்கள் என்றால் அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியலையும் அறிந்து கொள்ள முடியும்.

தலாய்லாமாவின் மறுபிறவி வாரிசு விஷயத்தில் சீனா தலையிடக்கூடாது என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். திபெத்திய பௌத்த மதத்தில் இருக்கக்கூடிய பௌத்தர்கள் 95 சதவீதம் பேர் சீனாவில் இருக்கிறார்கள். அவர்கள் இது பற்றிய முடிவு எடுப்பதற்கு உரிமை இல்லை என்று சொல்வதற்கு இவர்கள் யார் என்று தான் திபெத்திய மக்கள் கேட்கிறார்கள். அதே நேரத்தில் எந்த விதத்திலும் தலாய்லாம பிறந்த நாளில் தொடர்பு இல்லாத அமெரிக்காவும், இந்தியாவில் இருக்கக்கூடிய நிறுவனங்களும், மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களும் இந்த மறுபிறவி வாரிசு பற்றி முடிவு எடுப்பதற்கு என்ன அதிகாரம் அல்லது தொடர்பு இருக்கிறது என்ற கேள்வி உருவாகிறது.

இந்தியா பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தின்படியும், 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் ஏப்ரல் மாதம் ஹுனானில் சந்தித் அடிப்படையில் நாடு கடத்தப்பட்ட தலாய்லாமா அல்லது திபெத் அரசு நடத்தும் நிகழ்வுகளுக்கு அரசு அதிகாரிகள் செல்லக்கூடாது என்ற சுற்றறிக்கைகளும் இந்தியாவால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜு தலாய்லாமாவையும் அவருடைய உரிமைகளையும் பகிரங்கமாக ஆதரித்து பேசினார். தலாய்லாமாவின் மறுபிறவி விஷயத்தில் சீனாவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று பேசினார். சீனாவை இழிவுபடுத்தக்கூடிய முறையில் தலாய்லாமாவிற்கு மட்டுமே தனது வாரிசை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என்று ஜூலை 4 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா தலைப்புச் செய்தியை வெளியிட்டு இருந்தது. சீனாவிற்கு வெளியே வாழக்கூடிய ஐந்து சதவீதத்திற்கும் குறைவான திபெத்திய பௌத்தர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் செய்திகள் வெளியிடப்படுகிறது.

மத்திய அமைச்சர் மட்டுமல்ல, பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எல்லை மாநிலங்களாக இருக்கக்கூடிய சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் முதல்வர்களும் கலந்து கொண்டார்கள். பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 9 இந்திய எம்.பி.க்கள் குழு, திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்தது. இதற்கு மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலாய்லாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இவர்களுக்கு மத்தியில் தான் சீனாவுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும் நான் ஒரு சுதந்திர நாட்டில் மறுபிறவி எடுப்பேன் என்றும் கூறினார். அவர் சுதந்திர நாடு என்று அறிவித்தது வேறு எங்கும் அல்ல. இந்தியாவில்தான் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். இவை அனைத்தும் சீனாவை ஆத்திரமூட்டக்கூடிய செயல்கள் மட்டுமல்ல பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பை குறைப்பதும் ஆகும். இந்திய அரசு திபெத் கொள்கையில், சுயசார்பிலிருந்து விலகி ஏகாதிபத்திய சார்பு கொள்கைக்கு சென்று விட்டது.

மோடி டிரம்ப் சந்திப்பு தலாய்லாமாவின் பாதுகாப்பு

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்பை அமெரிக்காவில் சந்தித்து பேசினார். அதே தேதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள மிகப்பெரிய திபெத்திய குடியிருப்பான பைல குப்பேயில் தங்கி இருந்த தலாய்லாமாவை சந்தித்து பேசினார். முழங்கால் சிகிச்சை பெற்று வந்த தலாய்லாமாவிடம் ஆசி பெறுவதற்காக சென்றதாக கூறினார். சிகிச்சை பெற்ற காலத்தில் ஆசி பெற சென்ற ரகசியம் என்ன? மற்றொரு சம்பவமும் இதே தேதியில் நடந்தது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஒருவர் தலாய்லாமாவை தொடர்பு கொண்டு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார். நாடு தழுவிய அளவில் அவரது பாதுகாப்பை இனிமேல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பிரிவு பொறுப்பேற்கும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது

இதற்கு முன்பு தலாய்லாமாவிற்கு இமாச்சலப்பிரதேச காவல் துறையின் பாதுகாப்பு இருந்தது. டெல்லி அல்லது பிற இடங்களுக்கு செல்லும் பொழுது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு ஒரே ஷிப்டுகளில் பணிபுரியும் சுமார் 30 சிஆர்பிஎப் கமாண்டோக்கள் கொண்ட ஒரு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த கடந்த 65 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்து வந்த தலாய்லாமாவிற்கு இப்போது பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அளவிற்கு என்ன ஆபத்து வந்தது என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், அதனுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள இந்திய நிறுவனங்களும் சீனாவில் இருந்து தலாய்லாமாவிற்கு ஆபத்து இருக்கிறது என்ற ஒரு கட்டுக் கதையை உலக ஊடகத்திலும் இந்திய ஊடகத்திலும் கட்டி எழுப்பினார்கள். இதை பூதாகரமாக மாற்றி இந்திய அரசு இசட் பாதுகாப்பு என்ற முடிவை அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் திபெத் தீர்வு சட்டத்திற்கு இந்தியா வளைந்து கொடுத்துள்ளது என்பதன் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள்.

 

 

பைலேகுப்பே மற்றொரு தர்மசாலா 

பைலேகுப்பே என்பது மைசூரில் இருந்து கூர்க் செல்லும் வழியில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த திபெத்திய குடியிருப்பில் 70,000 திபெத்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் துறவிகள் உட்பட அப்பகுதியில் அமைந்துள்ள ஏழு மடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். திபெத்தியர்களின் மறுவாழ்வுக்காகவும் மீள்குடியேற்றத் திற்காகவும் 1961 ஆம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்வர் நிஜ லிங்கப்பா மைசூர் அரசாங்கத்தின் சார்பில் 3,504 ஏக்கர் மனை நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் திபெத்தியர்கள் பயிரிடவும், வீடுகள் கட்டவும், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிக் கொள்வதற்கான அனுமதிகள் காலப்போக்கில் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இது 15,000 ஏக்கர் பரப்பளவாக மாறியது. இங்கு மட்டும் ஐந்து பகுதிகளில் திபெத்திய அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் பத்து மாநிலங்களிலும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 50 ஆண்டுகளாக திபெத்தியர்கள் வசிக்கிறார்கள்.

பைலேகுப்பேயில் வசிக்கும் உள்ளூர் திபெத்திய பிரதிநிதிகள் மத்தியில் இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தார்கள். 1950 இல் இருந்து வாழும் தங்களுக்கு ஆதார் அட்டை இல்லை என்றும், அதற்காக சிறப்பு ஆதார் மையத்தை நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். சாலை விரிவாக்க திட்டத்தினால் எங்கள் நிலங்கள் பாதிக்கப்பட்டதால் அந்த நிலங்களுக்கு முறையான இழப்பீடு தர வேண்டும் என்றார்கள். உள்ளூர் விவசாயிகளுக்கு கர்நாடக அரசின் நிதிஉதவி நலத்திட்டங்களில் பைலேகுப்பேயில் உள்ள திபெத்திய விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இவை அனைத்தும் 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவுக்கு வந்த பொழுதும், நாடு கடத்தப்பட்ட அரசாங்கம் உருவாக்கப்பட்ட பொழுதும் தடை செய்யப்பட்டிருந்தது. அகதிகளுக்கான சலுகைகளை கல்வி, மருத்துவம் போன்றவற்றை வழங்குவது சட்டத்துக்கு உட்பட்டது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கான அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். சாரண உழைக்கும் திபெத்திய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த மக்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது ஆபத்தாகும.

இந்த பைலேகுப்பேக்குவிற்கு மற்றொரு அம்சம் உள்ளது. நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் இன்றைய தலைவராக இருக்கக்கூடிய சிக்யோங் பென்பா செரிங் 1967 இல் இங்கு தான் பிறந்தார். இவர் இங்கு பிறந்திருந்தாலும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வளர்க்கப்பட்டார். குறிப்பாக அமெரிக்காவில் தலாய்லாமாவின் பிரதிநிதியாக செயல்பட்டார். டெல்லியில் உள்ள திபெத்திய நாடாளுமன்றம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவர் தர்மசாலாவிற்கு பதிலாக பைலேகுப்பேயில் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு தனது நிர்வாகத்தின் சாதனைகளை விளக்கினார். தலாய்லாமாவின் ஊழலை எதிர்க்கும் பிரிவு அதாவது ஷூட்டன் வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கக் கூடியவர்கள் இங்கு தான் பலமாக இருக்கிறார்கள். தலாய்லாமாவின் நிர்வாகம் ஊழல் நிறைந்தது, உறவினர்களுக்கு சலுகை கொடுக்கக்கூடியது என்பதை இவர்கள் வலுவாக முன் வைத்தார்கள். எனவே தான் பென்பா செரிங் தனது அரசின் சாதனைகளை பைலேகுப்பேயில் விளக்கினார்.

முழங்கால் சிகிச்சை அல்ல மூளை சிகிச்சை 

2011 ஆம் ஆண்டு திபெத்திய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியூர் துறையின் ஒருங்கிணைப்பாளர் அதாவது துணைச் செயலாளர் மரியா ஒட்டேரோ உட்பட பல அமெரிக்க அதிகாரிகள் கர்நாடகாவில் உள்ள பைலோகுப்பே பகுதிக்கு வருகை தந்தனர். இவர்கள் அங்கு இருக்கக்கூடிய பலரையும் சந்தித்து பேசினார்கள். இந்திய அரசு அனுமதியுடன் அமெரிக்க அதிகாரிகள் திபெத்திய குடியிருப்பாளர்களை சந்தித்து சீனாவிற்கு எதிரான செயல்களுக்கு திட்டமிட்டனர். இந்த நிகழ்விற்கு சீனாவின் ஊடகவியலாளர்களை தவிர அமெரிக்க சார்பு, அரசு சார்பு பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அனுமதித்தினர்.

ஜூன் 2024 இல் குடியரசுக் கட்சி மெக்கால் தலைமையிலான அமெரிக்காவிலிருந்து வந்த இரு கட்சி பிரதிநிதிகள் குழு இந்தியாவின் தர்மசாலாவுக்குச் சென்று, அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட இரு கட்சி மசோதாவான “தி ரிசால்வ் திபெத் ஆக்ட்” இன் சட்டகப்படுத்தப்பட்ட நகலை தலாய் லாமாவிடம் வழங்கியது. (அரசு ஊடகம், DD அறிக்கை 20 ஜூன் 2024). உண்மையில், தலாய் லாமாவுடன் கலந்தாலோசித்த பிறகு திரும்பிய அமெரிக்க பிரதிநிதிகளை சந்தித்த பிறகு மோடி எழுதினார்: “மிகவும் நல்ல கருத்துப் பரிமாற்றமாக இருந்தது”, மேலும் “இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவதில் வலுவான இருகட்சி ஆதரவை” மதிப்பதாகக் கூறினார். வெளியுறவு அமைச்சரையும் இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான ரா அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த அஜித் தோவாலையும் சந்தித்து பேசினார்கள். பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ரா ஆகியோர் அமெரிக்க விளையாட்டில் வெளிப்படையாக உடந்தையாக இருந்தனர்:

இந்த சந்திப்புகளுக்கு பிறகு தலாய்லாமா உடனடியாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்ற பெயரால் விமானத்தில் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில், டெல்லியில் மற்ற முக்கிய தலைநகரங்களிலும் மிகச்சிறந்த மருத்துவமனைகளால் செய்யப்படுகிறது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இந்தியாவிற்கு வந்து முழங்கால் அறிவை சிகிச்சை செய்கிறார்கள். உண்மையிலேயே இது முழங்கால் அறுவை சிகிச்சை அல்ல தலாய்லாமாவிற்கு மூளை சிகிச்சை கொடுப்பதற்காக அழைத்துச் சென்றார்கள் என்பது உலகறிந்த ரகசியமாகும்.

பிறந்தநாள் முடிந்த பிறகு தலாய்லாமாவை லடாக் பகுதியில் பிரச்சினைகள் உள்ள எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் ஏற்கனவே பதட்டமாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஜம்முவை இந்துக்களுக்கு என்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கை இஸ்லாமியர்களுக்கென்றும் தடாப் பகுதியை புத்த மதம் என்றும் மத ரீதியான பிரிவினைகளை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது தலாய்லாமா அங்கு அழைத்துச் செல்லப்படுவது மேலும் புதிய வகையான மோதல்களை உருவாக்கும். சீனாவிற்கு எதிராக பௌத்த ராஜதந்திரம் என்ற அமெரிக்கா உருவாக்கிய புதிய கொள்கையை நோக்கி இந்தியா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

 

இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி லடாக்கின் கால்ஷேட்ஸ் பகுதியில் நடந்த வரவேற்பு விழாவில் தலாய்லாமா கலந்து கொண்டது மட்டுமல்ல, அங்கு 45 நாட்கள் தங்கி இருந்தார். இவர் செல்வதற்கு முன்பு இந்தியாவின் பல அமைச்சர்கள் அங்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார்கள். இதற்கும் தலாய்லாமா சென்றதற்குமான நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டியது.

நிதியால் மதி இழக்கும் நிலை

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பல அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெறக்கூடாது என்று தடை விதித்தது. அவர்களுக்கு வந்த நிதியை நிறுத்தியது. ஆனால் அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களால் நாடு கடத்தப்பட்ட திபெத்திய நிர்வாகத்திற்கு சட்டவிரோதமாக நிதியளிப்பது தங்கு தடை இன்றி நடந்து வருகிறது. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிதிகளில் ஒரு சில அம்சங்கள் மட்டும் கீழே சுட்டிக்காட்டப்படுகிறது. அமெரிக்கா தலாய்லாமாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அதனுடைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய திபெத்தியர்களுக்கு நிதி உதவி செய்வதை இக்காலத்தில் அமெரிக்கா பல மடங்கு அதிகரித்து உள்ளது

நாடு கடத்தப்பட்ட திபெத் அரசாங்க நிர்வாகத்துடன் தொடர்புள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர்களை வழங்கி உள்ளது. திபெத்திய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரம் மொழியை பாதுகாக்க என்ற பெயரால் 8 மில்லியன் டாலர்களை ஒதுக்கி இருக்கிறது. இந்தியா மற்றும் நேபாளத்தில் இருக்கிற தலைவர்களின் திறன்களை வளர்ப்பதற்காக, ( சீன எதிர்ப்பு திறன்கள் என்பதை குறித்துக் கொள்ள வேண்டி உள்ளது) மூன்று மில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளது. இதற்கும் மேலாக தலாய்லாமா நாடு கடத்தப்பட்ட அரசு அமைத்துள்ள தர்மசாலாவில் நகர மேம்பாட்டுகளை நவீனப்படுத்துவதற்கு 75க்கும் மேற்பட்ட திட்டங்களை அமெரிக்க நிதி உதவியுடன் நடந்து வருகிறது. சென்ற அத்தியாயத்தில் தலாய்லாமா சிஐஏ சம்பள பட்டியலில் இருந்தார் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிருந்தோம். எண்ணற்ற நிதிகளை ஒதுக்கி சீனாவிற்கு எதிரான திபெத்தியர்களை போராட வைப்பதும் தீக்குளிக்கவும் வைக்கிறார்கள். அதனால்தான் டொனால்ட் டிரண்ட் சகாப்தத்தில் மோடி தலைமையிலான இந்தியா அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து அடிபணிந்து வருகிறது.

நியாயத்தின் கேள்விகள் 

பொதுநல வழக்கு கண்காணிப்பு குழுவின் (PIL – public interest litigation) நிறுவனர் டாக்டர் பி எஸ்சாஹ்னி 6.10.2023 வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

தலாய்லாமா 1959 முதல் பல தசாப்தங்களாக சிஐஏ நிதியை பெற்றுள்ளார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவரும் அவரது ஆதரவாளர்களும் சீனாவில் இருந்து திபெத்தின் சுதந்திரத்தை கோரி ஒரு முகாமை அமைக்க விசா இல்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்திய அரசு ஏன் இந்த திபெத்திய பிரிவினைவாதிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்

திபெத்திய போராட்டக்காரர்கள் சில பேர் தீக்குளித்துக் கொள்ளுதல் உட்பட வன்முறை போராட்டங்களில் ஈடுபடுவதை குறித்து இந்திய ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிடுவதை போல் சிஐஏ நிதி உதவி செய்வது குறித்து செய்திகள் ஏன் வெளியிடுவது இல்லை.

காஷ்மீர் இயக்கத் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையை கோரியதற்காக சிறையில் அடைக்கப்பட்டாலும் தலாய்லாமாவின் பிரிவினைவாத நடவடிக்கைகளை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டார்.

ஆனால், பல பத்தாண்டுகளாக திபெத்திய “நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தை” இந்தியா நடத்தி வருவதையும், அதன் புதுப்பிக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளையும், இப்போதும் நடத்துவதைஅனைவரும் காணலாம். இது சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிகளுக்கும் ஐ.நா. சாசனத்திற்கும் எதிரானது,

திபெத்திய வாழ்க்கை பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. தலாய்லாமா காலத்தில் மிகவும் பின்தங்கிய அடிமைத்தனம் இருந்தது. தற்போது நம்ப முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. சீனாவிற்கு எதிராக முணுமுணுக்கும் திபெத்திய புலம்பெயர்ந்தோர் சுமார் 1.5 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இவர்களில் 75% பேர் இந்தியாவில் உள்ளனர். மேலும் 10 சதவீதம் பேர் தெற்காசியாவிற்குள் இருக்கிறார்கள். திபெத்திய தன்னாட்சி பகுதியை ஒப்பிடுகிற பொழுது மிக மிக சிறு பகுதி மட்டுமே வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திபெத் என்ற மாநிலம் தொடர்ந்து 25 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சியை அடைகிறது. திபெத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9,315 டாலர் ஆகும். இந்தியா 2500 டாலர் ஆகும். திபெத்தின் வளர்ச்சி தெற்கு ஆசியாவிலேயே மிக அதிகம். வறுமை 2013 ஆம் ஆண்டிலேயே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது 2019 ஆம் ஆண்டு திபெத் முழுவதும் வறுமை ஒழிக்கப்பட்டது.

எனவே இந்தியாவின் திபெத் தொடர்பான கொள்கைகள் ஆரம்பத்தில் சுயசார்பு தன்மையுடன் இருந்தது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவின் மேலாதிக்க புவிசார் அரசியலுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதைப் பற்றி தலாய்லாமாவின் மூத்த சகோதரர் கியாலோ தோண்டப் பிப்ரவரி 8, 2025 அன்று அவர் இறப்பதற்கு முன் அளித்த கடைசி நேர்காணலில் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார்

சிஐஏவின் இலக்கு ஒருபோதும் திபெத்திற்கு சுதந்திரம் அளிப்பது அல்ல. அமெரிக்கர்கள் உண்மையில் உதவ விரும்பியதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் திபெத்தியர்களைப் பயன்படுத்தி சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தவறான புரிதல்களையும் கருத்து வேறுபாட்டையும் உருவாக்க பிரச்சனையை கிளப்ப விரும்பினர். இறுதியில் அவர்கள் அதில் வெற்றி பெற்றனர்”: தலாய் லாமாவின் மூத்த சகோதரர் கியாலோ தோண்டப் (ஜிடி), 1959 இல் சிஐஏவின் திபெத் திட்டத்தில் அதன் தொடக்கத்திலிருந்து பணியாற்றியவர், மேலும் நீண்ட காலமாக ஒரு உயர் CTA தலைவராக இருந்தார். ( ஜிடியின் சுயசரிதையான தி நூடுல்மேக்கர் ஆஃப் கலிம்போங்கிலிருந்து (2016) அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் புகழ்பெற்ற சக ஊழியரான மனோஜ் ஜோஷி மேற்கோள் காட்டினார் ).

வியாழன், ஆகஸ்ட் 21, 2025

34 திபெத்: இந்தியாவின் சுயசார்பு கொள்கை

 

அ.பாக்கியம்

சீனாவில் இருக்கக்கூடிய 31 மாநிலங்களில் தன்னாட்சி உரிமை பெற்ற மாநிலமாக திபெத் தன்னாட்சி பிரதேசம் உள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேச மாநிலத்தின் அண்டை நாடுகளாக இந்தியா, நேபாளம், பூட்டான், மியான்மர் ஆகிய நான்கு நாடுகள் உள்ளன. இந்த நான்கு நாடுகளும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல திபெத் மாநில எல்லைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியா மற்ற நாடுகளை விட திபெத்துடன் அதிக எல்லைகளை கொண்டுள்ளது.

இந்தியா சீனாவுடன் 3488 கிலோ மீட்டர் உள்ள எல்லைகளில் திபெத் மாநில எல்லை மட்டும் 890 கிலோமீட்டர் அடங்கும். மேற்கண்ட நான்கு நாடுகளும்  திபெத்தில் அரசியல் நிகழ்ச்சி போக்குகளை உற்று நோக்குவதும், அங்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்வதும் அது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை செய்து கொள்வதும் நியாயமானதாக இருக்கும். ஆனால் வடக்கு உலகில் இருக்கக்கூடிய அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் திபெத் தில் தலையிடுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் மேலாதிக்க கொள்கைதான் இந்த  தலையீடுக்கு அடிப்படை காரணம்.

பஞ்சசீல பாதையில்

இந்தியா 1947 ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது. சீனா 1949 ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசை நிறுவியது. இந்த இரண்டு நாடுகளும் அண்டை நாடுகள் என்ற அம்சங்களை கடந்து நீண்ட பாரம்பரியங்களையும், வரலாறுகளையும், நாகரீகத் தொட்டில்களையும் உள்ளடக்கிய நாடுகளாகும். எல்லைப் பகுதி மிக நீளமானது. அதே நேரத்தில் காலனி ஆதிக்க நாடுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றனர். இந்தப் போராட்டத்தின் மூலமாக கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இரு நாடுகளும் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த எண்ணங்களின் செயலாக 1954 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சீனாவிற்கு பயணம் செய்தார். இந்தப் பயணம் உருவாகியிருந்த, நல்லெண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இரு நாடுகளும் பஞ்சசீலக் கொள்கை என்ற ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி கையெழுத்திட்டார்கள். பஞ்சசீலக் கொள்கை ஐந்து முக்கிய அம்சங்களை முடிவு செய்து இருந்தது

§  இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமை ப்பாட்டுக்கான பரஸ்பரம் மரியாதை கடைப்பிடிப்பது அதாவது ஒவ்வொரு நாடும் மற்றவரின் சுதந்திரத்தையும் எல்லைகளையும் மதித்து அங்கீகரிப்பது.

§  பரஸ்பரம் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு நாடும் மற்றொன்றுக்கு எதிராக பலத்தையோ அல்லது ஆக்கிரமிப்பையோ செய்யக்கூடாது.

§  பரஸ்பரம் குறுக்கீடு செய்யாமல் ஒவ்வொரு நாடும் மற்றொன்றின் உள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்

§  சமத்துவம் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் பரஸ்பர நன்மையை நோக்கமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

§  இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவதன் வழியாக அமைதியான சகவாழ்வு மேற்கொள்வது.

மேற்கண்ட பஞ்சசீலக் கொள்கை  சீன பிரதமர் சௌ என்  லாய் மற்றும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இடையே ஏற்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளுக்கு அடித்தளமாக அமைந்தது. அது மட்டுமல்ல இரு பெரும் நாடுகள் காலனித்துவ விடுதலைக்குப் பிறகு  ஏற்படுத்திய இந்த ஒப்பந்தம் சர்வதேச உறவுகளுக்கும் உந்து சக்தியாக அமைந்தது.  மேற்கண்ட ஒப்பந்தங்கள், ஜவஹர்லால் நேருவின் சீனப் பயணமும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய சக்திகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் சகவாழ்வு நமது ஆதிக்கத்திற்கு சாவு மணி அடித்து விடும் என்று அஞ்சினார்கள். இரு நாடுகளுக்கும் எவ்வாறு மோதல்களை உருவாக்குவது என்ற விரிவான திட்டங்களை உருவாக்க ஆரம்பித்தார்கள். இதுதான் சிஐஏவின் திபெத்திய திட்டம் என்பதை 33 வது அத்தியாயத்தில் பார்த்தோம்.

தலாய்லாமாவின் இந்திய வருகையும் ஊசலாட்டமும்:

புத்தரின் 2500 ஆவது பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வரவேண்டும் என்று தலாய்லாமாவும் பஞ்சன்லாமாவும் இந்திய அரசிடம் அனுமதி கேட்டனர். இந்திய அரசும் அனுமதி கொடுத்தது. 1956 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர். இருவரும் தரை மார்க்கமாகசிக்கிம் வந்து அங்கிருந்து விமானத்தின் மூலம் டெல்லி சென்றடைந்தார்கள். டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு புத்தகயா விற்கு பயணம் மேற்கொண்டனர்.

தலாய்லாமா டெல்லியில் தங்கி இருந்த பொழுது சீனாவின் பிரதமர் சௌ என் லாய் ஆசிய நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாவில் அவர் ஜவஹர்லால் நேரு அவர்களை சந்தித்து, இரு நாடுகளின் உறவுகள் மேம்படுத்துவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் சில இந்திய தலைவர்களை சந்தித்துள்ளார். இதன் பிறகு டெல்லியில் உள்ள தலாய்லாமாவை சீன பிரதமர் சந்தித்தார். இக்காலத்தில் திபெத்தில் தலாய்லாமாவும் சீனாவும் ஏற்படுத்திக் கொண்ட 17பிரிவு  ஒப்பந்தத்தின் அடிப்படையில் திட்டங்கள் அமலாகி கொண்டு இருந்தது. இவற்றை சீர்குலைப்பதற்காக சிஐஏ உதவியுடன் திபெத்திலிருந்த நிலப்பரப்புகளும் அடிமையுடைமையாளர்களும் ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் சதி வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர். தலாய்லாமா வின் மூத்த சகோதரர் கியாலோதோண்டப்நீண்ட காலமாக சிஐஏ உடன் இணைந்துசெயல்பட்டவர்இந்தக்கலவரங்களுக்குஉறுதுணையாகஇருந்தார்.

இந்தியாவில் இருந்த பொழுது தலாய்லாமா நாட்டின் பல பகுதிகளில் இருந்த புத்த ஸ்தலங்களுக்கு சென்று வந்தார். டெல்லியில் நடைபெற்ற  வரவேற்பு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இக்காலத்தில் தலாய்லாமாவின் இரண்டு சகோதரர்கள் கியாலோ தோண்டப், ஜிக் மே நோர்போ இருவரும் தலாய்லாமா வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தால் நல்லது என்று வலியுறுத்தினார்கள். தலாய்லாமாவிற்கு ஆரம்பத்தில் தஞ்சம் அடைவது தொடர்பான எண்ணங்கள் இல்லை. சிஐஏ திட்டத்தின்படி திபெத்தில் கலவரத்தை தீவிரப் படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த தஞ்சமடையும் முயற்சியாகும்.

தலாய்லாமா ஜவஹர்லால் நேருவை சந்தித்து பேசிய பொழுது தனது எண்ணமான தஞ்சம் அடைவது பற்றி ஜவஹர்லால் நேருவிடம் தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு சீனாவுடன் இந்தியாவின் உறவுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது என்று உறுதியாக தனது நிலையை தெளிவுபடுத்தி விட்டார். இருந்தாலும் தலாய்லாமா கூடுதல் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். சீனா உடன் உறவை செயல்படுத்த தனது சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் ஆனால் இப்போது திபெத்திற்கு திரும்புவதை விட இந்தியாவில் இருப்பது நல்லது என்று கருதுவதாக நேருவிடம் தெரிவித்தார். நேரு இதை புரிந்து கொண்டு தலாய்லாமாவிடம் நீங்கள் ஒன்றை உணர வேண்டும், இந்தியா உங்களை ஆதரிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததுடன் 17 பிரிவு ஒப்பந்தத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு திபெத்தில் அமலாக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பொழுது தலாய்லாமா திபெத்தில் இருந்து அதற்காக பாடுபட வேண்டும் என்று பதில் உரைத்தார்.

ஜவஹர்லால் நேரு சந்திப்பிற்கு பிறகு தலாய்லாமாசீனப் பிரதமர் சௌ என் லாய்அவர்களைசந்தித்தார். அவரிடம் அரசியல் தஞ்சம் கோருவது தொடர்பான எந்த ஒரு அறிகுறியையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் சீன பிரதமர் தலாய்லாமாவும் அவருடைய சகோதரர்களும் அரசியல் தஞ்சம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை தெளிவாக அறிந்து கொண்டார். திபெத் என்பது சீன மக்கள் குடியரசின் தன்னாட்சி உரிமை பெற்ற மாநிலம் என்பதை அழுத்தம் திருத்தமாக தலாய்லாமாவிடம் தெரிவித்துச் சென்றார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சிஐஏ உதவியுடன் சீனாவிற்கு எதிரான கலவரத்தை திபத்தில் உருவாக்கினார்கள். இந்த கிளர்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தலாய்லாமா திபெத்தின் நிலைமைகள் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்டார். அமெரிக்க தேவையில் இருந்து சிஐஏ உதவியுடன் 1959 ஆம் ஆண்டு இந்தியாவில் வந்து தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே தஞ்சம் அடைவதை விரும்பாத ஜவஹர்லால்நேரு திபெத்தில் இருந்த நிலைமைகளை கணக்கில் எடுத்து ஒரு ஆன்மீக தலைவர் என்ற முறையில் இந்தியாவிற்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டார். இக்காலத்தில் தலாய்லாமாவுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான அவருடைய சீடர்களும் வந்தார்கள். இந்தியாவில் 10 மாநிலங்களில் 45க்கும் மேற்பட்ட இடங்களில் திபெத்தியர்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர். இந்த அகதிகளுக்கு கல்வி மற்றும் பிற சமூக சேவைகளை இந்திய அரசு வழங்கியது. அதே நேரத்தில் இந்தியாவிற்கு வந்த திபெத்திய அகதிகளுக்கு குடிஉரிமை, சொத்துரிமை மீதான கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியா விதித்தது.தலாய்லாமா ஒரு ஆன்மீக தலைவர் என்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.திபெத்தியர்கள் இந்தியாவில் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவது இல்லை என்று இந்தியா தனது அதிகாரப்பூர்வமான கொள்கையை அறிவித்தது. ஆனாலும் நடைமுறைகள் வேறு விதமாக படிப்படியாக உருவெடுத்தது

 

பதட்டம்– அவநம்பிக்கை-யுத்தம்:

1962 ஆம் ஆண்டு சீன இந்திய யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்திற்கு முதன்மையான காரணம் நீண்ட காலமாக இருக்கக்கூடிய எல்லை பிரச்சினையாகும். இந்தியா லடாக்கின் ஒரு பகுதியாக அக்சாய்சின் பகுதியை உரிமை கோரியது. சீனா ஜின் ஜியாங் மாநிலத்தின் ஒரு பகுதியாக அக்சாய்சின் பகுதியை கோரியது. சீனா திபெத்தின் ஒரு பகுதியாக தவாங்கு பகுதியை கோரியது. இந்தியா இதை அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதி என்று வாதாடியது. இந்த எல்லை பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களையும் அவ நம்பிக்கைகளையும் உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக தலாய்லாமா கிளர்ச்சி செய்து தோல்வியடைந்து இந்தியாவில் இருந்துகொண்டு ஒரு போட்டி அரசாங்கத்தை உருவாக்கியதும் நிலைமைகளை மேலும் மோசமாக்கியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் நடைபெற்றது. இரு நாடுகளும் விடுதலை அடைந்த பிறகு இந்த ஒரு யுத்தத்தை தவிர வேறு யுத்தங்கள் நடைபெறவில்லை. 1967 ஆம் ஆண்டு சிக்கிமின் சோலா மற்றும் நாதுலா இடத்தில் சிறிய மோதல் ஏற்பட்டது. இதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் (2020 கல்வான் பிரச்சனை தவிர) இந்திய சீன மோதல்கள் நடைபெறவில்லை. ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடந்தது இல்லை என்று நிபுணர்கள்எழுதுகிறார்கள். தொடர்ந்து எல்லை பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்ததுகொண்டிருந்தது.

இதே காலத்தில் அமெரிக்கா திபெத்தை முன்வைத்து இந்தியாவையும், நேபாளத்தையும், பூட்டானையும் சீனாவிற்கு எதிராக நிறுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்களுக்கிடையில் மோதல்கள் நடைபெற்றது. நீண்ட எல்லைகளைக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சினைகள் இருந்த பொழுதும் தொடர்ச்சியாக பெரும் மோதல்களும், யுத்தங்களும் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்தியாவில் ஆட்சிகள் மாறிய பொழுது அமெரிக்கா தனது மேலாதிக்க கொள்கைகளை அமலாக்குவதற்கான அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்து வந்தது.

பிரதமர்களின் பயணங்களில் ஏற்பட்ட உறவுகளும்  உரசல்களும்:

1988 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவிற்கு பயணமானார். 1954 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்திய பிரதமரின் முதல் சீனப் பயணம் என்பதில் இந்த பயணம் முக்கியத்துவத்தை பெற்றது. இந்தப் பயணத்தின் போது சீனாவுடன் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் திபெத் சீனாவின் தன்னாட்சி பகுதி என்ற இந்திய அரசாங்கத்தின் நீண்ட கால மற்றும் நிலையான கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது என்று அறிவித்தார். 2003 ஆம் ஆண்டு பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சீனாவிற்கு சென்ற பொழுது திபெத் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதி என்பதை இந்தியா அங்கீகரித்து ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்தும் போடப்பட்டது. இந்தியா முதல் முறையாக திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போட்டு அங்கீகரித்துள்ளது என்பதை இந்தப் பயணம் வெளிப்படுத்தியது. பதிலுக்கு சீனா ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சிக்கிம் மீதான இந்தியாவின் இறையாண்மையை ஒப்புக்கொள்ள படிப்படியாக நடவடிக்கை எடுத்தது.

மேற்கண்டநிகழ்வுகள்உறவுகளை பலப்படுத்தியது. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலாய்லாமா உடன் சந்திப்பை நடத்தினார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் அழைப்பின் பேரில் தலாய்லாமா ராஷ்டிரபதி பவனுக்கு சென்றார். 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அருணாசலப் பிரதேசத்தின்எல்லை பிரச்சினைகள் உள்ள பகுதிக்கு தலாய்லாமாவை பார்வையிட அனுமதித்தா. இந்த மூன்று நிகழ்வுகளும் உறவில் உரசல்களை ஏற்படுத்தியது. சீனா இந்த நிகழ்வுகளை கடுமையாக கண்டனத்துக்கு உள்ளாக்கியது.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவிற்கு நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் தலைவரான லோப் சாங் சங்கையை அழைத்து இருந்தார். அதன் பிறகு இந்திய பிரதமருக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு 2018 ஏப்ரல் மாதம் ஹுனானில் நடைபெற்றது. இது உறவுகளை மேம்படுத்தியது.எனவே 2019 ஆம் ஆண்டில் பிரதமர்நரேந்திரமோடிதனது பதியேற்பு விழாவிற்குஅவரை அழைக்க வில்லை. இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் புரிதல்படி நாடு கடத்தப்பட்ட தலாய்லாமா அல்லது திபெத் அரசாங்கம் நடத்தும் நிகழ்வுகளுக்கு அரசு அதிகாரிகள் செல்வதை தடுக்க வெளியுறவு அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இதேகாலத்தில் நாடு கடத்தப்பட்ட திபெத் அரசாங்கத்தின் 60ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தர்மசாலாவிற்கு மாற்றப்பட்டன.

 உறவின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா:

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜிஜின் பிங் இருவரும் சந்தித்து பேசினர். இதன் முன்னேற்றமாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆம் ஆண்டு முழுவதும் இரு நாடுகளிலும் கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளையும் பரஸ்பர நம்பிக்கை உருவாக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் ராஜதந்திர முயற்சிகளை மேலும் அதிகப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று முடிவாகியது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீனாவிற்கு பயணம் சென்றார். அங்கு பாதுகாப்பு அமைச்சர் வெளியுறவு அமைச்சர்களை வழக்கமாக சந்திப்பதையும் கடந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து வந்தார்.

மேற்கண்ட சந்திப்பின் விளைவாக உறவுகளை பலப்படுத்துவதற்கும், இடையில் ஏற்பட்ட சில பிளவுகளைஒழுங்கு படுத்துவதற்குமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான நீர் நிலைகள் குறித்தும் ஒத்துழைப்புகளை தொடங்குவது என்று முடிவுகள் எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் நின்று போன நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஊடகத்துறையிலும் அறிவுத்துறையிலும் பரிமாற்றங்களை மேம்படுத்திக் கொள்ள பொருத்தமான நடவடிக்கையில் எடுக்க வேண்டும் போன்ற நல்ல அறிகுறிகள் தென்பட்டன. இதன் தொடர்ச்சியாக சீனாவின் வெளியுறவு த்துறை துணை அமைச்சர் சன் வெய்டோங் இந்தியாவிற்கு பயணம் செய்து மக்களை மையமாகக் கொண்ட நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டமிட வேண்டும். அதன் மூலமாக உறவுகளை மேம்படுத்துவதற்கான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் அமெரிக்க சார்பு தன்மைகள் அதிகமாய் கொண்டிருக்கக் கூடிய சூழலில், அமெரிக்காவும் சீன இந்திய உறவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நிலைமை தொடர்ந்து எடுத்து வருவதால் இந்த முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைத்த்தா என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

அ.பாக்கியம்

புதன், ஆகஸ்ட் 13, 2025

33 வெள்ளை பொய்களின் வரலாறு

 

அ.பாக்கியம்

திபெத் தீர்வுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024 ஆகஸ்ட் 21 அன்று கைழுத்து போட்டார் என்ற செய்தியை அமெரிக்காவில் இருந்த 90 வயது தலாய்லாமாவிடம் தெரிவிக்கப்பட்டது என்ற செய்தி ஏகாதிபத்திய ஊடங்கங்களால் உலகம் முழுவதும் வெளிடப்பட்டது. சீனாவின் உள்நாட்டு பகுதியான திபெத்தில் அமெரிக்கா தலையிடுவது புதிய செய்தி அல்ல. 1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி வெற்றி பெற்று விடும் என்ற சூழல் வந்த உடனேயே அமெரிக்க முதலாளிகளை சிவப்பு பூதம் பயமுறுத்தியது. இதனால் கம்யூனிஸ்டுகளை சிவப்பு பயம் என்று பெயரால் அமெரிக்கா முழுவதும் 1948 முதல் 1958 ஆம் ஆண்டு வரை வேட்டையாடினார்கள்.

சீனாவில் புரட்சி வெற்றி பெற்ற பிறகு சீனாவை வீழ்த்துவதற்கு அதன் உள்நாட்டு பிரச்சினைகளில் நேரடியாக தலையிட்டது. 1950 ஆம் ஆண்டுகளில் துவங்கி  1970 ஆம் ஆண்டுகள் வரை அமெரிக்க தலையீடு தீவிரமாக இருந்தது. 1970 ஆம் ஆண்டு முதல் ஹென்றி கிஷிங்கர் அமெரிக்க அதிபர் நிக்சன் ஆகிய இருவரும் சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தி நிலைமைகளை மாற்றினார்கள். 2000 ஆண்டு வரை இவை நீடித்தது. மீண்டும் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை அச்சம் கொள்ள செய்தது

1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி வெற்றி பெற்ற பிறகு திபெத்தில் தலையிடுவதற்காக அமெரிக்க மத்திய உளவுத்துறை திபெத்திய திட்டம் என்ற ரகசிய திட்டத்தை தயார்செய்து அமலாக்கியது. சீனாவை எதிர்த்து வந்த பல்வேறு குழுக்கள் தனிமைப்பட்டு கிடந்தன. இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தி சீனாவுக்கு எதிராக வலுப்படுத்துவதை அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை செய்தது. இதற்கு 14 ஆவது தலாய்லாமாவின் சகோதரர் கியாலோ தோண்டப் அனைத்து உதவிகளையும் செய்தார். இவரை சிஐஏவின் சொத்து என்று அழைப்பார்கள். 1950 ஆம் ஆண்டு சிஐஏ தனது குறிப்பாணை அறிக்கையில் திபெத்தில் சீனா தனது இறையாண்மையை வலுப்படுத்தினால், இந்தியா வழியாக மேற்கத்திய சக்திகளின் சாத்தியமான படைஎடுப்பது தடைபட்டு விடும்  என்று தெரிவித்திருந் தார்கள். 1957ஆம் ஆண்டு சிஐஏ தளவாடப் பிரச்சினைகள் குறித்த அறிக்கைகளை அளித்தது. இந்த அறிக்கையில் திபெத் மக்களிடம் கம்யூனிச செல்வாக்கு அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் கம்யூனிச கருத்துக்கள் பரவுவது அமெரிக்காவிற்கு ஆபத்து. அது மட்டுமல்ல மூன்றாம் உலகப்போர் நடந்தால் சீனாவிற்கு திபெத் மிகப்பெரும் தளமாக இருக்கும் என்பதையும் சிஐஏ தெரிவித்தது. இதனால் திபெத்தை சீனாவிடமிருந்து கபளீகரம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள்.

சர்க்கஸ் கம்பெனி பெயரால் சதித்திட்டம்

சிஐஏ உருவாக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்காவின்  தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக்குழு இத்திட்டத்தை அமலாக்கிட பல்வேறு குறியீட்டுப் பெயர்களைக் கொண்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டது. எஸ்டி சர்க்கஸ் (ST CIRCUS) அமெரிக்காவில் உள்ள சைபன் தீவிலும், கொலராடோவில் உள்ள கேம்ப் ஹேலிலும் திபெத்திய சீன எதிர்ப்பு கொரிலாக்களுக்கு பயிற்சி கொடுக்கக்கூடிய திட்டத்திற்கு இப்பெயர் வைத்தனர். ஆயுதங்களை கையாளுவது, கொரில்லா முறைகள், தகவல் தொடர்பு திறன்கள், உயிர் காத்துக் கொள்வதற்கான நுட்பங்கள் என கடுமையான ராணுவ பயிற்சியை கொடுத்தார்கள். திபெத்திய பீடபூமியின் கரடு முரடான நிலப்பரப்பை கருத்தில் கொண்டு மலைப்பகுதி போர்ப்பயிற்சி கொடுக்கப்பட்டது. திபெத்திய கொரில்லாக் களுக்கு அமெரிக்காவில் உள்ள கேம்ப்ஹல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட காரணம் இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருந்த மலைப்பாங்கான பகுதி. அமெரிக்காவில் பயிற்சி இவர்கள் திபெத்தில் தளம் அமைத்து சீனாவிற்கு எதிராக செயல்படுத்தப்பட்டது. 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவிற்கு தப்பிச் சென்ற பிறகு வடமேற்கு நேபாளத்தில் முஸ்டாங்கில் இந்த சிஐஏ வின் படை  தளம் அமைத்து 1969 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.

எஸ்டி பர்ணம் (ST BARNUM) என்ற பெயரில் ரகசிய படை அமைத்தனர். திபெத்திற்கு சிஐஏ வின் ஏஜெண்டுகள் அனுப்புவது, அவர்கள்  செயல்படுவது. ராணுவப் பொருட்களை அனுப்புவது. ராணுவத்திற்கு துணை உபகரணங்களை விமானத்தின் மூலமாக கொண்டு செல்வதற்கு இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. விமானங்கள் மூலம் திபெத்திற்குள் ஆரம்பத்தில் கொண்டு சென்றார்கள். சீனாவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட பொழுது இந்தியா மற்றும் நேபாளம் வழியாக ரகசியமாக ஆயுதங்களை அமெரிக்கா திபெத் கொரில்லாக்களுக்கு வழங்கியது.

எஸடி பெய்லி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பு  திபெத்த்தில் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கு பிரச்சாரம் செய்ய பயன்படுத்தினார்கள். திபெத்திய சுதந்திரம், சுயாட்சி என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் வானொலி ஒளிபரப்பல்கள் செய்வது, சர்வதேச ஆதரவை திரட்டுவதும், சீன ஆட்சியின் கீழ் திபெத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது என்ற கட்டுக்கதைகளின் உற்பத்தி இடமாக இந்த எஸ்டி பெய்லி நிறுவனம் இருந்தது.

மேற்கண்ட மூன்று குறியீட்டுப் பெயர்களில் முதல் இரண்டும் பிரபலமான சர்க்கஸ் கம்பெனிகளின் பெயர்கள். மூன்றாவதாக உள்ள அமைப்பின் பெயர் அமெரிக்காவில் இருந்த பிரபலமான பிரச்சார கம்பெனியின் பெயராகும் இந்து நிறுவனத்தில் அமெரிக்க சமூகத்தில் மேல்தட்டு வர்க்கம் ஆதிக்கம் செலுத்தியது.

கொட்டப்பட்ட கொரில்லாக்கள்

திபெத்  கொரிலாக்களை சிஐஏ அமைப்பு தேர்வு செய்கிற பொழுது கிடைத்தவர்களை எல்லாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிழக்கு திபெத்தில் உள்ள மத வெறி பிடித்த திபெத்திய வஜ்ராயன பௌத்த பிரிவை சேர்ந்தவர்களை தேர்வு செய்தது. மத அர்ப்பணிப்பு உடையவர்களை எளிதில் பயன்படுத்த முடியும் என்று சிஐஏ கருதியது. இதே போன்று தான் ஆப்கானிஸ்தானத் தில் உள்ளே நுழைவதற்கு தீவிர மத பற்று உள்ளவர்களை தேர்வு செய்து திட்டங்களை அமலாக்கியது.

சிஐஏ உளவுத்துறை அமைப்பால் நடத்தப்படுகிற சிவில் ஏர் டிரான்ஸ்போர்ட் மூலமாக சீனாவின் மீதும், தீபத்தின் மீதும் 200க்கும் மேற்பட்ட விமானங்களை பறக்க விட்டனர். 1959-1960 ஆண்டு மே மாதத்துக்குள் 35 முதல் 40 விமானங்கள் மூலம் சீன எதிர்ப்பு கொரில்லாக்களுக்கு ஆயுதங்களையும் பொருட்களை யும் வழங்கினார்கள். சிஐஏ ஆதரவுடன் திபத்திய கொரில்லாக் களின் தலைவரான கோம்போதாஷி திரிகுதாங்கல் என்ற இடத்தில்  தலைமையகத்தை நிறுவினார்.

பௌத்தத்தை பாதுகாப்பதற்கான தன்னார்வப் படை என்று இதற்குப் பெயர் வைத்தார். சிஐஏ இதற்கான வானொலிகளை அமைத்துக் கொடுத்தது. 1959 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் சிஐஏ பாராசூட் மூலம் சாக்ரா முதல் பல்வேறு இடங்களில் அமெரிக்காவில் பயிற்சிபெற்ற கொரில்லாக்களை இறக்கியது. இதனுடன் ஆயுதங்களையும் அளித்தது. ஒவ்வொரு கொரிலாவிற்கும் வயர்லெஸ் செட்டுகள், சைனட் மாத்திரை கொடுத்தார்கள்.

சிஐஏ பயிற்சி மூலமாக நேபாள எல்லையில் 2000கும் மேற்பட்ட துணைப்படையை உருவாக்கியிருந்தார்கள். மற்றொரு துணை ராணுவப் படையை உருவாக்கவும் முயற்சி செய்தார்கள். 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தரவுகளின் படி சிஐஏ திபெத்திற்கு  1.7 மில்லியன் டாலர்களை அதாவது 17 லட்சம் டாலர்களை ஒதுக்கீடு செய்தது. 1960 முதல் 1972 ஆம்  ஆண்டுவரை கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா நேரடியாக பணம் கொடுத்தது என்று மூத்த கொரில்லா போராளியான பால்டன் வாங்காள் கூறினார். எங்கள் வீரர்கள் சீன வாகனங்களை தாக்கி  அரசாங்கத்தின் சில ஆவணங்களை கைப்பற்றி கொடுத்தால் அமெரிக்கர்கள் எங்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுத்தனர்  என்றும் தெரிவித்தார்.

சிஐஏ தலாய்லாமாவுக்கு அளித்த நிதிகள் பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நேபாளத்தில் இயங்கிய கொரில்லாக்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள், நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள திபெத்தியர்களுக்கு 75 ஆயிரம் டாலர், கொரில்லாக்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக 8,55, 000 டாலர்கள், தலாய்லாமாவிற்கு சிஐஏ கொடுத்த மாத சம்பளம் 1,80,000 டாலர்கள் இதர செலவுகள் 1.25 டாலர். எந்த அளவு நிதி உதவி செய்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடியும். தலாய்லாமா சி ஐ ஏ வின் சம்பள பட்டியலில் இருந்தார். இப்பொழுதும் இருக்கலாம். ஆண்டுக்கு 1,80,000 டாலர் அவருக்கு சம்பளம் அளிக்கப்பட்டதை இந்தியாவில் உள்ள நாடுகடத்தப்பட்ட அரசுக்கு பயன்படுத்தினார் என்று அரசு சொல்லுகிறது.  முழுக்க முழுக்க அமெரிக்காவின் சிஐஏ வின் செயல்பாட்டில், நிதி உதவியில் சீனாவிற்கு எதிரான சதிச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டது என்பதை பட்டவர்த் தனமாக அறிய முடிகிறது.

சீனாவுடன் உறவும் ஆயுதபயிற்சி நிறுத்தமும்

1972ஆம் ஆண்டு சீனாவின் தலைவர் மாசேதுங்கிற்கும் அமெரிக்கா ஜனாதிபதி நிக்சனுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்க சீன உறவை இயல்பாகியது. இதனால் அமெரிக்கா திபத்திற்கு சிஐஏ மூலம் வழங்கி வந்த உதவியை நிறுத்தியது. இதன் விளைவாக சிஐஏவில் பயிற்சிபெற்ற 1500 திபெத்திய கொரில்லாக்களுக்கு ஒவ்வொருவரும் இந்தியாவில் நிலம் வாங்க அல்லது ஒரு தொழிலை தொடங்க ரூபாய் 10,000 கூடுதலாக வழங்கப்பட்டது. சீன அமெரிக்க உறவுகளை சேதப்படுத்தும் பயிற்சிகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உத்தரவு போட்டது.

தலாய்லாமா அமெரிக்காவின் முடிவை விமர்சித்தது மட்டுமல்ல, திபெத்திய மக்களுக்கு உதவுவதை தவிர வேறு மறைமுக நோக்கங்கள் இருப்பதை நிரூபிப்பதாக அறிவித்தார். சிஐஏ வின் சொத்து என்று அழைக்கப்பட்ட தலாய்லாமாவின் மூத்த சகோதரர் கியாலோ தோண்டப் சிஐஏ வின் முடிவுகளை கண்டு விரக்தியை வெளிப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் அவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். “நான் ஒருபோதும் சிஐஏ இடம் ராணுவ உதவியை கேட்கவில்லை. நான் அரசியல் உதவி மட்டும்தான் கேட்டேன். திபெத் நிலைமையை விளம்பரப் படுத்தவும், மற்றவர்களிடம் தெரிவிக்கத்தான் நான் விரும்பினேன். அமெரிக்கர்கள் திபெத்தை ஒரு சுதந்திர நாடாக மாற்ற உதவுவதாக உறுதி அளித்தனர்.

அந்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டன என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்கா திபெத்துக்கு உதவ விரும்பவில்லை. அது சீனாவுக்கு பிரச்சனை ஏற்படுத்த விரும்பியது. திபெத்.துக்கு தொலைநோக்கு கொள்கை இல்லை. ரகசிய நடவடிக்கைகளுக்கு நான் பயிற்சி பெறவில்லை. அதிகார அரசியல் பற்றி எங்களுக்கு தெரியாது” என்று தனது கருத்தை கோபத்துடன் வெளிப்படுத்தினார்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் சர்வதேச சூழ்நிலையில் சீனாவின் செல்வாக்கும் பெருகியது. அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்து கொள்கைக்கு எதிராக சீன சோசலிச கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தனது மேலாதிக்கும் கேள்விக்குள்ளாகிற நிலை ஏற்பட்டதால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக திபெத்தை மீண்டும் கையில் எடுத்தது.

மூன்று சட்டங்களும் அத்துமீறல்களும்

2002 ஆம் ஆண்டு அமெரிக்கா திபெத்திய கொள்கை சட்டம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது திபெத்திய மக்களின் அடையாளத்தை பாதுகாப்பது, மனித உரிமைகளை மேம்படுத் துவது, சீனாவிற்கும் தலாய்லாமாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை துவங்குவது என்று இந்த சட்டத்தில் எழுதி இருந்தார்கள். இந்த சட்டத்திலும் திபெத்தை சீனாவில் ஒரு பகுதியாக அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில் தலாய்லாமா திபெத் சுதந்திரம் கேட்கவில்லை மாறாக சுயாட்சி கேட்கிறார் என்று அவர்கள் சட்டத்தில் எழுதுகிறார்கள். இந்த சட்டத்தினை அமுலாக்க அமெரிக்கா வெளியுறவுத்துறையில ஒருவரை பொறுப்பாக்கியது. திபெத்தியர்களுக்கு பொருளாதார மேம்பாடு, கலாச்சார பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, கல்வி அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின்  நிலைத்த தன்மையை அமெரிக்கா ஆதரிக்கும் என்று சட்டத்தில் கூறப்படுகிறது.

அதாவது திபெத் பகுதியில் அமெரிக்கா எல்லா வகையிலும் தலையிடுவோம் என்று தான் இந்த சட்டப் பிரிவுகளின் அர்த்தம். உலகில் வேறு எந்த நாடும் இப்படி ஒரு சட்டத்தை இயற்றாது. மிக தூரத்தில் இருக்கக்கூடிய சீன நாட்டின் உள்நாட்டில் சுகாதாரம், பொருளாதாரம், கல்வி பற்றி அமெரிக்கா சட்டம் இயற்றுகிறது என்றால் எந்த அளவுக்கு நாட்டான்மை தன்மை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஜிசாங் திபெத் தன்னாட்சி மாநில தலைநகர் லாசாவில் ஒரு அமெரிக்க தூதரகத்தை நிறுவ வேண்டும் என்று இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சீனாவிற்கும் திபெத்திற்கும் பேச்சுவார்த்தை நடத்தி உறவுகளை மேம்படுத்த இந்த சட்டம் உதவும் என்று மாறுவேடம் தரித்து பேசியது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி திபெத்திய கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் என்ற சட்டத்தை 2002 ஆம் ஆண்டின் சட்டத்தின் தொடர்ச்சியாக விரிவு படுத்துகிறார்கள். சட்டம் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி திபெத் தீர்வு சட்டம் என்ற ஒரு சட்டத்தை அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றுகிறார்கள் இந்த சட்டம் ஏற்கனவே இருந்த இரு சட்டங்களிலிருந்து மாறுபட்ட தன்மையுடன் அமைந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜோபைடன் ஒப்புதல் கொடுத்து கையெழுத்து போடுகிறார். சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு இயற்றப்பட்ட மூன்றாவது குறிப்பிடத் தக்க சட்டமாகும் இது

திபெத்திய வரலாறு, திபெத்திய மக்கள், தலாய்லாமாதிபெத் நிறுவனங்களை குறித்தும் சீனா தவறான தகவல்களை பரப்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செயல்படு வதற்காக அமெரிக்கா நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்த சட்டம் அங்கீகரிக்கிறது. இதற்கான நிதிஒதுக்கீடு களையும் செய்தனர்.  இதற்குமுந்தைய சட்டங்களில் சீனாவின் ஒரு பகுதி என்று அங்கீகரித்து வந்த அமெரிக்கா, பண்டைய காலங்கலிருந்து சீனாவின் ஒரு பகுதி என்று சொல்வதை ஏற்க முடியாது என்று சட்டத்தில் மாறுபட்ட கருத்தை திணிக்கிறார்கள். இந்த சட்டம் தலாய்லாமாவுடன் நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்து கிறது. அதைவிட அதிகமாக சென்று திபெத்திய தன்னாட்சி பகுதியை மாற்றி சரியான புவியியல் பகுதியை அது மேலும் சில மாநிலங்களை சேர்த்து பெரிதாக்க வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கிறார்கள்.

சீனாவில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும், என்பதை அமெரிக்க சட்டம் தீர்மானிக்கிறது என்றால் அமெரிக்க அத்து மீறல்களின் உச்சத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். 2002 ஆம் ஆண்டு சட்டம் சீனா சுயாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 2020 ஆம் ஆண்டு சட்டம் நாடு கடத்தப்பட்ட தலாய்லாமாவின் அரசு ஜனநாயக அடிப்படை யில்   தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்றும், அதனோடு பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட வேண்டும் என்ற அளவிற்கு சென்றது. 2024 ஆம் ஆண்டு சட்டம் முன்நிபந்தனை இல்லாமல் சீனா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று நிறைவேற்றி இருப்பதுடன் கலாய்லாமாவின் வாரிசு தேர்ந்தெடுப் பதற்கு சீனா தலையிடக்கூடாது என்று சட்டத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சட்டத்தின் மூலம் இரண்டு முக்கியமான பிரச்சனைகளை அமெரிக்கா முன்வைக்கிறது. தலாய்லாமாவும் அமெரிக்காவும் ஒரே புள்ளியில் இணைந்துவிடுகிறார்கள். முதலாவதாக,  2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தர்மசாலாவில் தலாய்லாமா வுடன்  அமெரிக்க உயர்மட்ட குழு சந்திப்பை நடத்தியது. சீனாவுக்கு எதிராக திபெத்யர்களை கலவரத்திற்கு தூண்டி விடுவதற்கான சந்திப்பாக இது அமைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஒருங்கிணைப்பாளராக திபெத் பகுதிக்கு சட்டவிரோத சட்டத்தின் மூலம் நியமிக்கப் பட்டவர், நேபாளத்தில் இருக்கும்  திபெத்தியர்களுக்கான சலுகைகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்று நேபாள அரசை அச்சுறுத்தினார்.

அதாவது சீனாவிற்கு எதிராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். திபெத்தின் தலைநகரான லாசாவில் அமெரிக்க தூதரகம் நிறுவப்பட அனுமதிக்கும் வரை சீன மக்கள் குடியரசின் எந்த ஒரு கூடுதல் தூதரகங்களையும் அமெரிக்காவில் நிறுவுவதற்கு, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என்று தெரிவித்தார். இது அந்த சட்டத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2024 ஜூலை மாதம் அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை அமெரிக்கா மூடியது. சீனா பதிலுக்கு திபெத்தின் முக்கிய நுழைவாயிலாக கருதப்படும் செங்குடுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடியது.

இரண்டாவதாக, திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் அதன் அருகாமையில் உள்ள மாநிலமான கிங்காய், சிச்சுவான், கன்சு, யுன்னான் ஆகிய பகுதிகளையும் இணைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் திபெத் சீன தீர்வு சட்டம் வலியுறுத்துகிறது. கிங்காய் என்பது திபெத்தை போன்று புவியியல் அமைப்பு சார்ந்த மிகப்பெரிய பகுதியாகும். கிங்காய்  உலகின் கூரை என்ற பட்டத்தையும் திபெத்துடன் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உயரமானது. இதை சுற்றியுள்ள வடகிழக்கு பகுதி 7000 முதல் 8000 அடி உயரத்தில் இருந்தாலும் அதன் தெற்குப் பகுதி 13000 அடி உயரத்தில் பெரிய மழை தொடர்கள் மற்றும் உயரமான பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தின் எல்லை 1928ஆம் ஷியாங்காய் ஷேக் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. கிங்காய் மலையில் மட்டும் 10 பெரிய ஆறுகளின் ஆதாரம் உள்ளது.

கிங்காய் மாநிலத்தில் 8 வெவ்வேறு தேசிய இனங்களையும் பண்பாடுகளையும் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். 2022 ஆண்டு தரவுகளின்படி 60 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். இதில் ஹான் இனத்தவர்கள் 54 சதவீதம், திபெத்தியர்கள் 21 சதம், உய் இன முஸ்லிம்கள் 16 சதம் குடியிருக்கிறார்கள். இந்த மாகாணத்தில் மக்கள் தொகை வசிப்பிடங்களுக்கு ஏற்ப ஐந்து மாவட்டங்கள் திபெத்திய மாவட்ட தன்னாட்சி பகுதியாக இருக்கிறது. அதாவது திபெத்திய் மக்கள் அதிகம் வாழும் பகுதிக்கு மாவட்ட சுயாட்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் மேய்ச்சல் நிலங்கள் தெற்கு பகுதியில் இருப்பதால் திபெத்திற்கு தொடர்பு இல்லை. வடக்கில் இருக்கக்கூடிய திபெத்தியர்களுக்கும் தெற்கே உள்ள திபெத்தியர் களும் மாறுபட்ட சூழல் வளர்ந்தவர்கள். கிங்காயில் உள்ள திபெத்தியர்கள் லாசாவில் இருக்கும் மொழியை பேசுவதில்லை. திபெதத்திய பௌத்த மதத்தை கடைபிடிக்கி றார்கள் என்பதை தவிர, பூகோள ரீதியிலும், மொழியிலும் வேறுபட்டவர்கள். சீன வரலாற்றின் எந்த காலகட்டத்திலும் திபெத்திய லாசாவுடன் கிங்காய் மாநிலத்தில் உள்ள திபெத்தியர்கள் இணைந்தது இல்லை. எனவே பரந்த திபெத் என்ற சுதந்திரநாடு வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக் காவும், தலாய்லாமாவும் முன் வைப்பது அரசியல் பின்னணியைக் கொண்டது

திபெத் சுதந்திரம் என்று அழைக்கப்படுவது உண்மையில் பழைய மற்றும் புதிய ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப் பட்டது என்பதையும், சீனப் பிரதேசத்தை பிரித்து எடுக்கும் மேற்கத்திய ஆக்கிரமிப்பாளர்களின் திட்டத்தின் ஒரு பகுதி என்பதையும் வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்து கின்றன.

 

சனி, ஆகஸ்ட் 09, 2025

32 திபெத்: தோல்வி கண்ட பிரிட்டன் சதிகள்

 

அ.பாக்கியம்

14ஆவது தலாய்லாமா 1959 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி திபெத்திலிருந்து தப்பித்து வந்து இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா என்ற இடத்தில் தஞ்சம் புகுந்தார். ஆன்மீகத் தலைவர் என்ற அடிப்படையில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனைத்து விதமான உதவிகளையும் செய்தார். அவரை பின்தொடர்ந்த சில ஆயிரம் பேர்கள் அவருடன் இந்தியா வந்து சேர்ந்தனர். ஜூன் 20 ஆம் தேதி முதன்முதலாக பத்திரிக்கையாளர் சந்திப்பை தலாய்லாமா நடத்தினார்.

அந்த சந்திப்பில் சீனாவுடன் ஏற்பட்ட 17 பிரிவு ஒப்பந்தம் துப்பாக்கி முனையில் கையெழுத்து வாங்கப்பட்ட ஒப்பந்தம் என குற்றச்சாட்டை முன் வைத்தார். மாநாடு நடத்தி சீனத்துருப்புக்களை வரவேற்றவர் சீனாவின் மக்கள் விடுதலைப்படை படையெடுத்து திபெத்தை ஆக்கிரமித்துக் கொண்டது என அறிவித்தார்.

இந்தியாவிற்கு தப்பி வரும் வரை சீன அரசையும், அதன் திட்டங்களை புகழ்ந்து பேசியவர் இப்போது தலைகீழாக மாற்றி பேசினார். ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது திபெத்திய தூதுக்குழுவை வழிநடத்திய ந்காபோய் ந்காவாங் ஜிக்மே, இதில் எந்த வற்புறுத்தலும் இல்லை என்று கூறினார்.  இந்த ஒப்பந்தம் மட்டுமே திபெத்தின் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். தலாய்லாமா ஏகாதிபத்திய செல்வாக்கின் கீழ் செயல்பட்டதால் மாறுபட்ட நிலையெடுத்தார்.

தலாய் லாமாவின் வன்முறை அரசியல்

இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது தலைமையில் திபெத்திய அரசாங்கம் அமைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்தார். ஆனால் அவரின் அரசின் கீழ் மக்களை பாதுகாப்பதற்காக ராணுவம் அமைக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. மாறாக, மதத்தை பாதுகாக்க ராணுவ அமைப்பும், சிறப்பு எல்லைப் படைகள் போன்றவற்றையும் இந்த அரசு உருவாக்கும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் திபெத்தில் மீண்டும் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை மீட்டெடுக்கும் பணிகளை செய்வதற்காக ஆயுதப்படைகளையும், கொரில்லா குழுக்களையும் உருவாக்கி கலவரங்களை தூண்டி விட்டார். இதன் மூலம் திபெத்தில் புதிய நிலைமை உருவாகியது. பிரிவினைவாதிகள், பிற்போக்கு சக்திகள் ஒருபுறமும், ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான சக்திகள் மறுபுறமும் களத்தில் நிற்க வேண்டிய நிலைமை உருவானது.

இதன் தொடர்ச்சியாக 1963 இல் திபெத்தின் எதிர்கால அரசியல் அமைப்பு முறையை வெளியிட்டார். இதையே 1991 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களின் அரசியல் அமைப்புசட்டமாகமாற்றினார். 1980 ஆம் ஆண்டு தலாய்லாமா தர்மசாலாவில் திபெத்தின் பிரிவினைவாத தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி திபெத்திய சுதந்திரத்தை அடைவதற்காக 5 அம்ச நடவடிக்கைகளை அறிவித்தார். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி அமெரிக்காவிற்கு சென்று அங்கு திபெத் ஒரு சுதந்திர நாடு என்று அறிவித்தார். இதன்முலம் திபத்தின் உரிமையை அமெரிக்காவிடம் அடமானம் வைத்தார்.

தலாய்லாமாவும், அமெரிக்காவும் எடுத்த கலவர முயற்சியால் 1987 முதல் 1989 வரை திபெத்தின் தலைநகர் லாசாவில் கலவரங்கள் நடைபெற்றது. பொதுமக்களையும், அரசு அலுவலகங்களையும் கலவரக்காரர்கள் தாக்கினார்கள். மார்ச் 2008 இல், நூற்றுக்கணக்கான திபெத்திய துறவிகள் லாசாவில் கூடி, தொடர் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையும் அதிகரித்தன. இந்த வன்முறையில் 22 பேர் இறந்தனர். 2008 ஆம் ஆண்டு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை சீர்குலைப்பதற்காக அமெரிக்காவும் மேற்கத்திய ஊடகங்களும் வெளிநாடுகளில் வசிக்கும திபெத்தியர்களை தூண்டி விட்டார்கள். சில இடங்களில் தாக்குதலை நடத்தினார்கள். ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வந்த ஒரு ஊனமுற்ற பெண்ணை பாரிஸ் நகரில் வழிமறித்து ஜோதியை வலுக்கட்டாயமாக பறிப்பதற்கான முயற்சியில் திபெத்திய கலவரக்காரர்கள் இறங்கினார்கள். அந்தப் பெண் அவற்றை முறியடித்து உயிரை பணயம் வைத்து ஜோதியை கொண்டு வந்து சேர்த்தார். இதுபோன்ற இன்னும் சில கலவரங்களை தலாய்லாமா-அமெரிக்கா கூட்டணி  நடத்தினாலும் அவை திபெத்திய மக்களாலும், சீன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஊனமுற்ற பெண்ணை தாக்கியது சீன மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் கடும் கோபத்தை உருவாக்கியது.

பிரிட்டனின் சதிகள்

1840 ஆம் ஆண்டு பிரிட்டன் சீனாவின் மீது அபினி யுத்தத்தை தொடுத்தது. அன்று முதல் சீன சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் சீனாவை அரை-காலனித்துவ, அரை-நிலப்பிரபுத்துவ நாடாக மாற்றியது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டன் உட்பட பல ஏகாதிபத்திய நாடுகள் சீனாவை துண்டு துண்டாக பிரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். சீனாவில் உயிகுர் இன மக்கள் வாழும் பகுதியில் தனிநாடு அமைப்பதற்கான முயற்சி எடுத்து தோல்வி அடைந்தனர்.

1888 ஆம் ஆண்டும், 1903 ஆம் ஆண்டும் இரண்டு முறைகள் பிரிட்டிஷ் படைகள் திபெத்திற்குள் ஊடுருவியது. 1888 ஆம் ஆண்டு திபெத்தின் மீது இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசு தலையிட்டது. தங்களது ஊடுருவல் மூலம் தீபத்தில் செல்வாக்கை நிலை நாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. 19 ஆம் நூற்றாண்டில் சிக்கிம், பர்மாவையும் பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னுடன் இணைத்துக் கொண்டதன் தொடர்ச்சியாக திபெத்தை பிடித்துக் கொள்வதற்கான  முயற்சியில் ஈடுபட்டார்கள். பூட்டான் மற்றும் நேபாளத்தின் உடன் ஆங்கிலேய அரசு உறவுகளை பலப்படுத்தியதாலும் திபெத் அவர்களின் ஏகாதிபத்திய ஆளுமைக்கு தேவைப்பட்டது. இந்தப்பகுதியில் தங்களது நலன்களை பாதுகாக்கவும், குறிப்பாக பிரிட்டனின் வர்த்தகப்  பாதையை விரிவுபடுத்தவும் திபெத்தின் மீது படையெடுக்க ஆரம்பித்தனர். இதற்கு சிக்கிம் பயணம் என்று பெயர்சூட்டி சிக்கிமை பாதுகாப்பதாக அறிவித்து இந்தப் படையெடுப்பு நடந்தது. சீன அரசாங்கத்தின் எதிர்ப்பினால் பிரிட்டிஷ் அரசாங்கம் பின்வாங்க நேர்ந்தது. 1890 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சீன மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி பிரிட்டிஷ் அரசு சிக்கிமுடன் தனது எல்லையை வரையறுத்து முடித்துக் கொண்டது.

மீண்டும் 1903 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி 1904 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசு படைகள் திபெத்தின் மீது படையெடுப்பை நடத்தியது. இதற்கான நோக்கம் மீண்டும் சிக்கிம் பகுதியில் திபெத் ஊடுருவல் என்ற காரணத்தை முன்வைத்து, எல்லை பாதுகாப்பு என்ற பெயரால் இந்தபடையெடுப்பு நடந்தது. திபெத்தின் தெற்கு பகுதியை இந்த ஓராண்டுகள் மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. திபெத்திய மற்றும் கிங்வம்ச இராணவத்தால் பிரிட்டிஷ் படை வெளியேற்றப்பட்டது,

பிரிட்டிஷ் திபெத்தின் மீது கவனம் செலுத்தியதற்கு மற்றொரு முக்கிய காரணம், ஜார் மன்னர் தலைமையிலான ரஷ்ய பேரரசின் விரிவாக்கம் யுரேசிய பகுதிகளில் அதிகமாகியது. உலகில் பிரிட்டிஷ், மங்கோலிய பேரரசிற்கு பிறகு முன்றாவது பேரரசாக ஜார் தலைமையிலான  ரஷ்யா திகழ்ந்தது. எனவே திபெத்தின் மீது ரஷ்யாவின் விரிவாக்கம் நடைபெறும் என்று பிரிட்டன் அஞ்சுவதால் திபெத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக 1907 ஆம் ஆண்டுகிரேட் பிரிட்டனும், ஜாரின் ரஷ்யாவும் திபெத் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டார்கள். ரஷ்யாவிற்கு திபெத்தின் மீது எந்த ஆர்வமும் இல்லை என்று தெளிவான ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசு பெற்றிருந்தாலும், கவலைகளை நீடித்தது. எந்த நேரத்திலும் ஜார் ரஷ்யா கைப்பற்றலாம் என்ற கவலை தான் அது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளும் திபெத்தின் மீது மேலாதிக்கும் செலுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகும். தங்களுக்கு தொடர்பில்லாத மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஐரோப்பாவில் இருக்கக்கூடிய இருநாடுகள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். காரணம் கிங் வம்சம் வீழ்ச்சியின் விளிம்பியில் இருந்தது. அரசியல் நிலையற்ற தன்மை நீடித்தது. இதைப்பயன்படுத்தி திபெத்தை கூறுபோட இரு நாடுகளும் திட்டமிட்டன.

பிரிவினைவாதிகளை உருவாக்க உதவி

கிங் வம்ச ஆட்சி காலத்தில் இருந்த ராணுவமும், பொதுமக்களும் இந்த ஊடுருலை மிகக் குறுகிய காலத்தில் முறியடித்தார்கள். படையெடுப்புகள் மூலம் திபெத்தை கைப்பற்ற முடியாது என்று புரிந்துகொண்ட பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்கு ஆதரவான பிரிவினைவாதிகளை திபெத்திற்குள் உருவாக்குவதற்கான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். இதற்கு திபெத் சுதந்திரம் என்ற கோஷத்தை முன்வைத்து பிரிவினைவாதிகளை ஊக்குவித்தார்கள்.

இதுவும் முழுமையாக வெற்றி பெறாத பொழுது 1913 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சிம்லா மாநாடு என்ற ஒரு மாநாட்டை சிம்லாவில்கூட்டியது. இந்த மாநாட்டின் நோக்கம் பிரிட்டன், சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவை மறு வரையறை செய்வதுதான் என்று அறிவித்தது. இந்த மாநாட்டில் திபெத்தை ஒரு சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்மொழிவுகள் வைக்கப்பட்டது. சீனப் பிரதிநிதிகளின் கடுமையான எதிர்ப்பால் தனிநாடு ஆலோசனை கைவிடப்பட்டது. இதற்கு அடுத்ததாக ஒரு சமரசத் திட்டம் என்ற அடிப்படையில் திபெத்சீனாவின் கீழே இருந்தாலும் அது ஒரு சுயாட்சி பகுதி என்று அறிவிக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்கள். இந்த முன்மொழிவும் திபெத்தை பிரித்து எடுப்பதற்கான நோக்கமாகும். மேற்கண்ட மாநாட்டில் சீன பிரதிநிதிகள் கையெழுத்து போடாமல் மறுத்துவிட்டனர். இதனால் பிரிட்டனின் நோக்கம் நிறைவேறாமல் முடிவடைந்தது.

1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதிநிதியின் ஆதரவுடன் திபெத்த்தில் இருந்த உள்ளூர் அரசாங்கம் திடீரென ஒரு வெளியுறவு விவகார ப் பணியகத்தை அமைப்பதாக அறிவித்து விட்டது திபெத் ஒரு சுதந்திர நாடு என்ற முறையில் உள்ளூர் அரசாங்கம் செயல்பட ஆரம்பித்தது. சீனாவின் எதிர்ப்பினால் அந்த பணியகம்ஆரம்பிப்பது கைவிடப்பட்டது. பிரிட்டன் விடுவதாக இல்லை. நிலையற்ற அரசியல் தன்மைகளை கவனத்தில் கொண்டு எப்படியாவது திபெத்தை பிரித்து விட வேண்டும் என்ற வெறித்தனத்துடன் செயல்பட்டது

திபெத்தை நாடாக அங்கீகரிக்க முயற்சி 

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக மார்ச் 23 முதல் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை ஆசிய உறவுகள் மாநாடு என்ற ஒரு மாநாட்டை பிரிட்டன் அரசு புதுடெல்லியில் கூட்டியது. இந்திய உலக விவகார கவுன்சிலால் இந்த மாநாடு கூட்டப்படுவதாக அறிவித்தது. ஆசிய நாடுகளிடையே கலாச்சார மேம்பாடு, அறிவுசார் பரிமாற்றம், சமூக ரீதியிலான நல்லிணக்கம் போன்றவற்றை வளர்ப்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தார்கள். இந்த மாநாட்டிற்கு இந்தியாவின் சரோஜினி நாயுடு அவர்களை தலைமை ஏற்க வைத்தார்கள். இந்த மாநாட்டிற்கு திபெத் ஒரு சுதந்திர நாடு என்ற முறையில் கலந்து கொள்வதற்கான அழைப்பை கொடுத்தார்கள். அவர்கள் கலந்து கொள்வதற்கான திரை மறைவு சதிகளிலும் ஈடுபட்டார்கள். மாநாட்டில் தேசியக்கொடிகள் அமைக்கப்பட்ட இடத்தில் திபெத்தின் கொடிகளையும் அமைத்தார்கள். சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததின் விளைவாக மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் இந்த முயற்சியை கைவிட்டு விட்டனர்.

பிரிட்டனின்தூண்டுதலால் திபெத்தில் இருந்த உள்ளூர் அரசாங்கம் 1949 ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதி கம்யூனிஸ்டுகள் தங்குவதற்கு தடை செய்வதாக அறிவித்தது. அது மட்டுமல்ல சீன குடியரசின் அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவையும் பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திபெத் ஒரு சுதந்திர நாடு என்ற முறையில் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, நேபாளம் உட்பட பலநாடுகளுக்கு திபெத்தின் உள்ளூர் அரசாங்கம் அழைப்பு கொடுத்தது. தங்கள் நாட்டில் நல்லெண்ணப் பணிகளுக்காக வரவேண்டும் என்று அழைத்தார்கள். இந்த அழைப்புக்கு பின்னால் ராணுவ உதவியும் இதர ஆயுத உதவிகளும் அடங்கி இருக்கிறது என்பது உலகறிந்த ரகசியம். பிரிட்டன் சீனபுரட்சி வெற்றிக்கு பிறகு திபெத்தின் சீனாவின் பகுதி என்று சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் திபெத்திற்கு உண்மையான சுயாட்சி வழங்க வேண்டும் என்றும் மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்றும் தொடர்ந்து பிரிவினை சக்திகளுக்கு உதவி செய்து வருகிறது.

அ.பாக்கியம்

40 திபெத்∶ நாஜிகளின் நண்பர் தலாய்லாமா

    அ.பாக்கியம் திபெத்திய தலாய்லாமா பௌத்த மத துறவி என்பதை உலகமே அறியும். ஆனாலும் அவரது வரலாறு அவரின் துறவித்தன்மையை மீறிய முறையில் அமை...