மத
நம்பிக்கைச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற
கொள்கையை கடைபிடிக்கிற ஒரு நாட்டில் மத அமைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று
கேள்விகள் எழுத்தான் செய்யும். சீன மக்கள் குடியரசு மத நம்பிக்கைக்கும் மத
அமைப்புகளுக்குமான வேறுபாடுகளை துல்லியமான முறையில் தெளிவுபடுத்தி உள்ளது. அரசின்
அணுகுமுறையும் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
கம்யூனிஸ்ட்
கட்சியில் இருப்பவர்கள் மதப் பணிகளில் ஈடுபடலாமா என்ற கேள்வியும் மிக முக்கியமானதாகும்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத நிபுணர்களின் குழுக்களை உருவாக்கி உள்ளது. இந்த மத நிபுணர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் சீனாவில் உள்ள மதகுருமார்களின் பணிகளை ஒழுங்கமைக்கின்றனர்.
மதகுருமார்கள் மத்தியில் செயல்படுகின்றனர். மத நிபுணர்களின் மிக முக்கியமான பணி மத
வட்டாரங்களில் உள்ள நபர்களை சீன மதக் கொள்கைக்கு ஏற்ற வகையில் வென்றெடுப்பது,
அவர்களை ஒன்றிணைப்பது அவர்களுக்கு தேவையான கல்விகளை கற்பிப்பது. இந்த எல்லைக்குள்
மத நிபுணர்கள் பணியாற்ற வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் பணியாற்றுகிறார்கள்.
இவர்களின் மிக முக்கியமான பணி தொழில் முறை மதகுருக்களை கையாள்வதாகும்.
மத குருமார்களின் எண்ணிக்கை அன்றும் இன்றும்
1975 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 59000 தொழில்முறை மதகுருமார்கள் இருந்தார்கள். இது ஒரு குறை மதிப்பீடு என்று
கணிக்கப்படுகிறது. காரணம் பௌத்தம் மற்றும் தாவோயிச குருமார்களின் வழிபாட்டு முறைகள் பல்வேறு வடிவங்களில் இருந்ததின் விளைவாக
துல்லியமாக எடுத்த எண்ணிக்கை அல்ல என்பதை தரவுகள் தெரியப்படுத்துகின்றன. இவர்களில்
பௌத்த துறவிகள் மற்றும் லாமாக்கள் சுமார் 27,000 பேர். தாவோயிச குருமார்கள் 2,600
பேர், இஸ்லாமிய குருமார்கள் 20,000
பேர், கத்தோலிக்க மதகுருமார்கள் 3,400 புராட்டஸ்டன்ட் போதகர்கள் 5,900 என்று எண்ணிக்கையில்
இருந்தனர். மத குருமார்களை கையாள்வதற்காக, அவர்களின்
வாழ்வாதாரத்திற்காகவும், செயல்பாட்டுக்காகவும், இந்த தரவுகள் தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த தரவுகளின்
அடிப்படையில் திட்டங்களை அமலாக்கும் பொழுது அதன் எண்ணிக்கைகள் கூடுதலாக இருப்பதை
அறிய முடிந்து. அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள்
செய்யப்பட்டன.
1997 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு மதம் குறித்த ஒரு வெள்ளை
அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஓரளவு இந்த கணக்குகள் சரி செய்யப்பட்டன.
இருப்பினும் 2017 ஆம் ஆண்டு நவீன வசதிகளை பயன்படுத்தி
அனைத்து விதமான வழிபாட்டு தலங்களையும் வீடுகளில் இருக்கக்கூடிய சிறிய வழிபாட்டுத்
தலங்களையும் உள்ளடக்கி விவரங்கள் பெறப்பட்டு 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வெள்ளை
அறிக்கை மதம் குறித்து வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள மத குருமார்களின்
எண்ணிக்கையும் மத வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கையும் மிக துல்லியமாக இறுதி
செய்யப்பட்டது.
2018 ஆம் ஆண்டு மதம் குறித்த வெள்ளை அறிக்கையின் படி சீனாவில் 20 கோடி (200 மில்லியன்) மத விசுவாசிகள்
இருக்கிறார்கள். அனைத்து மதங்களையும் உள்ளடக்கி மொத்தமாக 3,80,000 மத குருமார்கள் உள்ளனர். பாரம்பரிய மதங்கள் என்ற முறையில் பௌத்தம்,
தாவோயிசம் என இரு மதங்களிலும் மத குருக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பௌத்தத்தில் 2,22,000 குருமார்களும், தாவோயிசத்தில் 40,000க்கும் மேற்பட்ட குருமார்களும்
உள்ளனர். சீனாவில் 156 இனக்குழுக்கள் இருந்தாலும் 10 இன குழுக்களில் இஸ்லாம் மதத்தை
நம்புபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் இரண்டு கோடி மத விசுவாசிகளும் 57,000
மதகுருமார்களும் உள்ளன. கத்தோலிக்க மதத்தில் 60 லட்சம் மத
விசுவாசிகளும் 8000 மதகுருமார்களும், புராட்டஸ்டன்ட்
மதத்தில் மூன்று கோடியே 80 லட்சம் விசுவாசிகளும் 57,000 மத போதகர்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர சீனாவில் உள்ளூர்
கலாச்சாரங்களையும், மரபுகளையும், பழக்க
வழக்கங்களுடன் நெருக்கமான தொடர்புடைய பல நாட்டுப்புற நம்பிக்கைகள்
கடைபிடிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து 5500 மத குழுக்கள் மொத்தமாக சீனாவில் இருக்கிறது என்று சீன மக்கள் குடியரசின்
அமைச்சரவை தகவல் அலுவலகம் விபரங்களை வெளியிட்டுள்ளது
மத குருமார்களுக்கான சமூக பாதுகாப்பு
கம்யூனிஸ்ட்
கட்சி ஆட்சியில் மதகுருமார்கள் அடக்கப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், சித்ரவதை
செய்யப்படுகிறார்கள் என்று தினசரி மேற்கத்திய உலக பத்திரிகைகள் ஓலமிட்டுக்
கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்று ஓங்கி ஒலிக்க
வேண்டியுள்ளது. ஒடுக்குமுறை உண்மை என்றால் மத குருமார்களின் எண்ணிக்கை
உயர்ந்திருக்குமா? தொழில்முறை குருமார்களுக்கு அரசு
பொருத்தமான ஊதியத்தை வழங்கி வருகிறது. அது மட்டுமல்ல மத குருமார்களுக்கு எதிராக
எத்தகைய தீங்கு இழைக்கப்பட்டாலும் அதை கவனத்துடன் பரிசீலனை செய்து தீர்த்து
வைக்கக்கூடிய பணி துரிதமாக கையாளப்படுகிறது.
இருந்தாலும்
மதகுருமார்களுக்கு பொருளாதார ரீதியிலான சமூக பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இதற்கு முந்தைய சட்டங்களில் அவை இணைக்கப்படவில்லை. 2010,
2011 ஆம் ஆண்டுகளில் இவர்களுக்கு சமூக பாதுகாப்பு தேவை என்பதற்கான
விவாதங்கள் பரவலாக முன்னுக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக 2013
ஆம் ஆண்டின் இறுதியில் மத குருமார்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம்
முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல அமலாக்கப்பட்டு வருகிறது. இந்தத்
திட்டத்தின் படி 96.5% மதகுருமார்கள் மருத்துவ காப்பீட்டு
திட்டத்திலும், 89.6 சதவீதம் மதகுருமார்கள் முதியோர்
காப்பீட்டு திட்டத்திலும், மற்றும் அனைத்து தகுதி வாய்ந்த
மதப் பணியாளர்களும் வாழ்வாதார உதவித் தொகை மூலமாகவும் சமூகபாதுகாப்பு திட்டத்திற்குள்
கொண்டுவரப்பட்டனர்.
பொதுவாக
தொழில் முறை மதகுருமார்கள் மத விசுவாசிகளுடன் மிக நெருக்கமான ஆன்மீக உறவுகளை
வைத்துள்ளார்கள். அது மட்டுமல்ல மக்களின் ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கியமான
செல்வாக்கையும் இந்த மத குருமார்கள் செலுத்துகிறார்கள். மேலும் இந்த தொழில் முறை
குருமார்கள் சில நேரங்களில் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். பௌத்த தாவோயிச குருமார்கள் வரலாற்றுச் சின்னங்களை
பாதுகாப்பதிலும், சில இடங்களில் விவசாயத்தின் வளர்ச்சியிலும், காடுகளை வளர்ப்பதிலும் ஈடுபடுகிறார்கள். இந்த அம்சத்தை சீன கம்யூனிஸ்ட்
கட்சி கவனத்தில் கொண்டு தான் அவர்களை சீன சமூக வளர்ச்சியோடு இணைப்பதற்கான
திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. மார்க்சியம் எந்த இறையியல் உலக
கண்ணோட்டத்துடனும் பொருந்தாது என்பதை மார்க்சிஸ்டுகள்
அறிவார்கள். ஆனால் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்தவரை
மார்க்சிஸ்டுகள் மக்கள் எந்த மத நம்பிக்கையில் இருந்தாலும் அவர்களை
சோசலிசத்தின் நவீனமயமாக்களுக்கான பொதுவான முயற்சிகளை மேற்கொள்வதற்கு
தேச பக்தி கொண்டவர்களை இணைத்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற
இலக்கோடு செயல்படுகிறார்கள். இதன் ஒரு பகுதி தான் மத நிபுணர்களின் மத பணிகள்
ஆகும். இந்த ஐக்கிய முன்னணியில் ஒரு அங்கமாக மதம் சார்ந்த மக்களையும்
வென்றெடுப்பது பிரதான பணியாகும் என்பதை புரிந்து கொண்டு மத விசுவாசிகளை
கையாளுகிறார்கள்.
வழிபாட்டுத் தலங்களும் அரசின்
அரவணைப்பும்
மத
நம்பிக்கை சுதந்திரம், மத குருமார்களின்
செயல்பாட்டு முறைகள் போன்றவற்றை அமலாக்கக்கூடிய சீன மக்கள் குடியரசு, இந்த மத நடவடிக்கைகளுக்கான வழிபாட்டுத் தலங்களையும் முறைப்படுத்தி மக்கள்
பயன்பாட்டிற்கு வழங்குகிறது. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு
வழிபாட்டுத் தலங்களின் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல வழிபாட்டு தலங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதை
சீன அரசாங்கம் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும்
சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் பெரும்பாலும் அமலானாலும்
அவற்றில் இருக்கக்கூடிய குறைகளை நிவர்த்தி செய்து 2018 ஆம்
ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்வதை முழுமைப்படுத்தி உள்ளார்கள். 2018 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் அமைச்சரவை தகவல் அலுவலகம் வெளியிட்ட
வெள்ளை அறிக்கையின்படி சுமார் 1,44,000
வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவற்றில் பௌத்த கோயில்கள் 33,500
ஆகும். (இதற்குள் ஹான் பௌத்த கோயில்கள் 28,000, திபெத்திய
பௌத்த லாமாக்கள் 3,800, தேரவாத பௌத்த கோயில்கள் 1,700
ஆகியவை அடங்கும்.) தாவோயிச கோயில்கள் 9,000,
இஸ்லாமிய மசூதிகள் 35,000, கத்தோலிக்க
தேவாலயங்கள் 98 மறை மாவட்டங்களில் 6000,
புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் மற்றும் ஒன்று கூடும் இடங்கள் 60,000 என்ற அளவில் இருக்கிறது.
அனைத்து
மதங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களை சமமான முறையில் செய்து கொடுப்பதே அரசின் மத
கொள்கையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெரிய நகரங்களில்,
மதநம்பிக்கையாளர்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில், புகழ்பெற்ற கோயில்களும், தேவாலயங்களும், பௌத்த மடாலயங்களும், புதுப்பித்துக்
கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளிலும் தேசிய
மற்றும் சர்வதேச அளவில் மதிப்பைப் பெற்ற புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் கலாச்சார
மையங்களையும் படிப்படியாக சீரமைத்து மேன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதியை
அரசே ஒதுக்கீடு செய்கிறது.
வழிபாட்டுத்
தலங்களை மேம்படுத்தவோ, புதிய வழிபாட்டுத்
தலங்களை கட்டவோ கூட்டு நிதி ஆதாரங்களை பயன்படுத்துவதற்கு தடை
செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் கண்மூடித்தனமான முறையில் தேவையற்ற
வகையில் கோயில்களை கட்டுவது
தடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின்
அனைத்து மட்டத்திலும் உள்ள அரசாங்கங்கள், மத குழுக்களுக்கு மத
வழிபாட்டு தலங்களுக்கு பொது சேவைகள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று விதி
உருவாக்கப்பட்டது. அதாவது வழிபாட்டுத் தலங்களுக்கு சாலைகள் அமைத்து
தருவது, மின்சாரம், நீர், வானொலி வசதிகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்ற
அனைத்தும் மத வழிபாட்டு தலங்களுக்கு அரசு செய்து கொடுக்க வேண்டும். நகர்புறங்களிலும்
கிராமப்புறங்களிலும் நிலங்களை பயன்படுத்துவது தொடர்பான
மாஸ்டர் பிளான் தயாரிக்கும்பொழுது இதுவரை மத ஸ்தலங்களுக்கான
இடங்கள் சேர்க்கப்படவில்லை. தற்போது புதிய விதிகளின்
அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களுக்கான
கட்டுமான இடமும் சேர்க்கப்படுகிறது. அதாவது மத நம்பிக்கை கொண்டவர்கள் மத
நடவடிக்கைகளுக்கு போதுமான இடத்தை பெற முடியும் என்பதை இந்த திருத்தம்
சாத்தியமாக்கி உள்ளது.
வழிபாட்டு
முறைகள் அல்லது சடங்குகள் வழிபாட்டு தலங்களிலும் வீடுகளிலும் சட்டத்தின்
அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. வேறு யாரும் இதில் தலையீடு செய்வது
தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் துறையின் ஒப்புதலுடன் வழிபாட்டுத் தலங்களில் கலை
படைப்புகள், பூசைக்குரிய பொருட்கள், மேலும் சில பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம். பொதுவாக வீடுகளில் புராட்டஸ்ட்டன்ட் மத போதனை நடைபெறுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது.
சீனாவில் இந்த முறை கொள்கை அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடையை
படிப்படியாக அமலாக்கிட தேசபக்த மத நம்பிக்கையாளர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தி அவற்றை அமலாக்கி வருகிறார்கள்.
வழிபாட்டுத்
தலங்கள் சீன அரசாங்கத்தின் மதவிவகாரத் துறையின்கீழ் செயல்படும். ஒவ்வொரு வழிபாட்டு
தலத்திலும் நிர்வாகம் ஒழுங்காக நடைபெறுவதற்கு அங்கு உள்ள தொழில் முறை குருமார்கள்
பொறுப்பேற்க வேண்டும். மதம் தொடர்பான நிகழ்ச்சிகள், மக்கள் பணிசெய்யக்கூடிய நேரங்களில் நடத்தக்கூடாது. கம்யூனிஸ்ட்
கட்சி ஆட்சியில் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திகத்தை பிரச்சாரம் செய்தாலும், வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று நாத்திகத்தைப் பற்றி பேசுவதோ, கடவுள் இருப்பு குறித்து சர்ச்சைகளை உருவாக்குவதோ கூடாது என்று தடை
செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மிக
முக்கியமான அம்சம் என்னவென்றால் எந்த ஒரு மத அமைப்பும் அல்லது மத விசுவாசியும் மத
சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு வெளியே மதத்தை பரப்புவதோ அல்லது
பிரசங்கம் செய்வதோ, இறையியலை பற்றி பிரச்சாரம் செய்வதோ தடை
செய்யப்பட்டுள்ளது.
மதக் கல்வி, மத இலக்கியம்
சீனாவில்
மதக் கல்வி முறை சட்டத்துக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு தரவுகளின்படி சீனாவில் மொத்தம் 91 மதப் பள்ளிகள் உள்ளன. இந்த கல்வி நிலையங்கள் மாநில மத விவகார
நிர்வாகத்தால் (SARA) அங்கீகரிக்கப்பட்டு செயல்படுகிறது.
இவற்றில் முறையே 41 பௌத்த பள்ளிகளும் 10 தாவோயிஸ்ட், 10 இஸ்லாமிய, 9 கத்தோலிக்க, 21 புராட்டஸ்டன்ட் என்ற எண்ணிக்கையில் இந்த பள்ளிகள்
இருக்கின்றன. இவற்றில் தேசிய அளவில் செயல்படக்கூடிய புகழ்பெற்ற கல்லூரிகளும்
அடங்கும். குறிப்பாக பௌத்த அகடாமி, சீன
உயர்நிலை திபெத்திய பௌத்த மதக் கல்லூரி, சீன தாவோயிஸ்ட் கல்லூரி, சீன இஸ்லாமிய நிறுவனம், கத்தோலிக்க திருச்சபையின் தேசிய செமினரி, நான்சிங் யூனியன்
இறையியல் செமினரி ஆகிய ஆறு தேசிய அளவிலான கல்லூரிகள் உள்ளன. தற்போது 10,000க்கு அதிகமான மாணவர்கள் இந்த மதப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவற்றின் மூலம் பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 47,000 க்கும் அதிகமாகும்.
மதநூல்களும், இலக்கியங்களும் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி வெளியிடப்படுகின்றன.
இவற்றில் வெவ்வேறு மொழிகளில் வெளியிடுவதும், அச்சிடுவதும், ஆடியோ மற்றும் காணொலி என அனைத்து வகைகளிலும் இந்த வெளியீடுகள்
நடைபெறுகிறது. இது மத விசுவாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளன. பௌத்தம், தாவோயிசம் தொடர்பான நியதிகளை தொகுத்து மிகப்பெரும் தொகுப்பாக
வெளியிடப்பட்டுள்ளன. திபெத்திய புத்த கோயில்கள் பாரம்பரியமான சூத்திரங்களை வெளியிடுவார்கள். இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட
அச்சிடும் இடங்கள் மூலமாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. குர்ஆன் போன்ற
இஸ்லாமிய கிளாசிக் சீன, உய்குர், கசாக்,
கிர்கிஸ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 17 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய உரைகள் அச்சிடப்பட்டு
வெளியிடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும்
வெவ்வேறு மொழிகளில் 160 மில்லியனுக்கும் அதிகமான பைபிள்
பிரதிகள் இக்காலத்தில் சீனாவில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதில் சீன மொழியில் அச்சிடப்பட்ட 80 மில்லியன் பிரதிகளும் 11 இன சிறுபான்மை மொழிகள் மற்றும் தேவாலயங்களுக்கான பிரைலி மொழியிலும்
வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வழிபாட்டு தலங்கள்
வலைதளங்களை தொடங்கியுள்ளன. சீன இஸ்லாமிய சங்கம், சீன மற்றும்
உய்குர் மொழிகளில் ஒரு வலைதளத்தை நீண்ட காலமாக நடத்தி
வருகிறது. சீனாவில் மதங்களின் வெளியீட்டுக்கும், வழிபாட்டிற்கும்
தடை என்று பிரச்சாரம் செய்யப்படும் ஊடகங்களுக்கு இவையெல்லாம் தெரிவதில்லை.
சீன
இஸ்லாமிய சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை செல்ல
ஏற்பாடு செய்கிறது. இதில் 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10,000க்கு
மேற்பட்டவர்கள் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள் கிறார்கள்.
தற்போது
மத வட்டாரங்களில் இருந்து சுமார் 20,000 முக்கிய
நபர்கள் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டிலும், மக்கள்
மாநாடுகளிலும், குழுக்களின் அனைத்து மட்டங்களிலும்
பிரதிநிதிகளாகவும் உறுப்பினராகவும் இருந்து பொது சேவையில் பணியாற்றுகிறார்கள்.
மாநில அளவிலான நடைபெறக்கூடிய விவாதங்களிலும், ஜனநாயக முறைகள்
சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்று மேற்பார்வை செய்வதிலும் பங்கு பெறுகிறார்கள்.
இந்த
நூற்றாண்டின் துவக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நடைபெற்ற உலக மத
மற்றும் ஆன்மீக தலைவர்களின் மில்லினியம் உச்சி மாநாட்டில் சீனாவை சேர்ந்த ஐந்து
தேசிய மதங்களின் சார்பில் ஏழு தேசிய மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக்
குழுவின் தலைவர் பிஷப் பூ வைஷான் உலக அமைதியை பாதுகாப்பதற்கான சீனாவில் உள்ள
மதங்களின் திட்டங்களை தெளிவாக முன் வைத்தார்.
மத
நம்பிக்கை சுதந்திரத்தை மிகவும் சரியான முறையில் அமலாக்கிக்கொண்டு,
மறுபுறத்தில் மதம் அரசியலிலும், கல்வியிலும்
கலந்து விடக்கூடாது என்பதில் சீன மக்கள் குடியரசும், சீன
கம்யூனிஸ்ட் கட்சியும் மிக நுணுக்கமான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.