தோழர்.வி.எம்.எஸ்
என்றும் நினைவில் நிற்கும் நல்லசிவனைப்பற்றி மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சியின் கடந்தகால வரலாறு இன்றைய இளம் மார்க்சிஸ்ட்டுகளின் மனதைத் தைக்கிற அளவிற்கு எழுதப்படவில்லை. நல்வாய்ப்பாக தோழர்.என்.ராமகிருஷ்ணனும் தோழர் ஜி.ராமகிருஷ்ணனனும். கம்யூனிசஇயக்கக் களப்பணியாளர்கள் குறித்த தகவல்களை திரட்டி வரலாற்றை எழுத உதவி வருகின்றனர். இவைகளிலும் 1964க்குமுன் உள்ள பங்களிப்புகள் அவ்வளவாக இடம் பெறவில்லை.
ஒன்றுபட்ட
கட்சியின் வரலாற்று தகவல்களையும் இணைப்பது அவசியமானது. பல சிற்றோடைகளாக பிரிந்து கிடக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் கடந்துவந்த
பாதையைப் பற்றி சரியான
புரிதல் இன்று கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இல்லையானால் வெற்றியை
எட்ட இயலாது. வரலாறு தெரியவில்லையானால்
அந்த இயக்கம் பாதைதவறி வறண்டுவிடும். எதிரிகளின் பிரச்சாரத்தினால் தவறுகளின் தொகுப்பாகவே
கட்சியின் வரலாற்றை
புரிந்து கொள்வர்.,
வாய்ச் சொல்வீர்ர்களும், அரைவேக்காடுகளும், கரடுதட்டிகளும் .சந்தர்ப்பவாதிகளும், கொண்ட குட்டைகளாக தேங்கிவிடும்.
இந்தக் கட்டுரையில் களப்பணியாளரான தோழர்
நல்லசிவனைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றை பதிவு செய்கிறேன். நல்லதொரு
தமிழக வர்க்கபோராட்ட அரசியல் வரலாறு எழுத இது உதவும் என கருதுகிறேன்.
கம்யூனிச நெறியோடுவாழ தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்ட தோழர் நல்லசிவனோடு நெருக்கமாக அறிந்தவர்களில் நானும் ஒருவன். எனது பள்ளி பருவத்தில் பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன், ஏ.நல்லசிவன் .பிராமமூர்த்தி இவர்களைப்பற்றிகேள்விபட்டிருக்கிறேன். 1952 சட்ட மன்ற தேர்தலில் அம்பை தொகுதியில் எனது தந்தையின் நெருங்கிய நண்பர் தியாகி பாப்பான்குளம் சொக்கலிங்கம் பிள்னை சுயேச்சை வேட்பாளராக கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு நின்றார். அப்பொழுது எங்களது குடும்பம் அம்பை தொகுதிக்கு உட்பட்ட சிலகாலம் பாரதி நடமாடிய கடையத்தில் இருந்தது. நான் அன்று 9ம்வகுப்பு பள்ளி மாணவன்.
கல்லூரி மாணவனாக இருந்த அறம்வளர்த்த நாதன் என்பவர் கடையம் வாக்குச் சாவடிக்கு பொறுப்பாகச் செயல்பட அம்பையிலிருந்து வந்திருந்தார். இவர் நெல்லைசதி வழக்கில்சேர்க்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் நீக்கியதால் கல்லூரியில் சேரமுடிந்தது என்பதை அறிந்தேன். வேட்பாளர் தியாகி சொக்கலிங்கம் பிள்ளையும் எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கடையத்திலும் சுற்றுவட்டாரத்திலும் பிரச்சாரம் செய்ய வந்தபோது எங்கள் வீட்டிலே தங்கினார். அவரோடு கல்லூரி மாணவன் அறமும் வந்ததால் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. வாக்குச் சீட்டுக்களை எழுத என்னையும் எனது நண்பர்களையும் அறம் பயன்படுத்திக்கொண்டார்.
வேட்பாளரும் அறமும் சிறந்த மேடை பேச்சாளர்கள் என்பதால் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றனர். அறத்தோடு கலந்துறையாடும் பொழுது தொழிற்சங்க தலைவர் ஏ.நல்லசிவனைப்பற்றி அவரது அறிவாற்றலைப்பற்றி அடிக்கடி கூறுவார். தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ் சோசலிஸ்ட்டாக இருந்து வெளியேறிய சொக்கலிங்கம்பிள்ளை தோற்கடித்தார். இதற்கு முக்கிய காரணம் அம்பை தொகுதியில் குத்தகை விவசாயிகளின் உரிமைக்காக கம்யூனிஸ்ட்கட்சி விவசாய சங்கத்தை கட்டி போராடியது என்பதை பின்னர்தான் புரிந்து கொண்டேன்.
காங்கிரஸ்கட்சி நில உடமையாளர்களாக இருந்த மடங்களுக்கும் பெருநில உடமையாளர்களுக்கும் துணையாக இருந்தது.
காவல்துறையை ஏவி கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடியது .விவசாயிகள் மீது பொய்வழக்குகள் பாய்ந்த்தது. பாப்பான்குளம் சொக்கலிங்கம்பிள்ளை
காங்கிரஸ் தியாகியாக பிரபலமாகி இருந்தாலும் குத்தகை விவசாயிகள் போரட்டத்தை
ஆதரித்து களப்பணி செய்தவர் என்பதால் வெற்றி பெற்றார். தொழிற்சங்க
இயக்கத்தின் முன்னோடியாக இருந்த ஏ.நல்லசிவனின் கம்யூனிஸ்ட்பாணி செயல்பாட்டினால்
தொழிலாளர்-விவசாயிகள் சங்கங்களின் உறுப்பினர்கள் சொந்தச் செலவில் வாக்கு சேகரித்தனர்.
தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது என்பதை எனக்கு அன்று உணர வாய்ப்பில்லை..
1953ல்நான் இந்து
கல்லூரி மாணவனாகச் சேர்ந்தபோது எதிர்பாராத விதமாக அதே கல்லூரியில் சீனியர்மாணவனாக அறத்தை
சந்திக்க நேர்ந்தது. சந்திக்க நேர்ந்ததுமட்டுமல்ல மாணவர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த
மூஸ்லீம் லாட்ஜில் (அப்போது அதன் பெயர்) இருவரும் தங்கி
படிக்க நேரிட்டது. அங்குதான் முதன் முறையாக ஏ.நல்லசிவனை
சந்திக்கநேர்ந்தது. அறத்தை சந்திக்க அவர் அடிக்கடி வருவார், அந்த சந்திப்பின்போது இருவரும்
படித்த புத்தகங்களைப்
பற்றிய சர்ச்சை, உலக
அரசியல்களை விடிய விடியப் பேசுவர். அவர்கள் இருவரும், ஸ்டூடன்ட் டுடோரியல் காலேஜ் நடத்திய
என். வானவாமலை வீட்டிற்குச் சென்று
கலந்துரையாடுவர்.
தாமிரபரணி
ஆற்றின் சுலோசனாபாலத்தருகே இக்கரையில் முஸ்லீம் லாட்ஜ் என்றால் பாலத்தை தாண்டி அவர்
வீடு இருந்தது (கொக்கிரகுளம்
பகுதி).என்.வானமாமலையை நான் முன்பே அறிவேன். அவர் எனது சித்தப்பாவின் கல்லூரி நண்பர். நான்
கல்லூரியில் சேரும்பொழுதே எனது சித்தப்பா என்னை வானமாமமலைக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்
அவர் என்னிடம் ”மீனாட்சி
உனது அறிவுச் சொத்து
பாடப்புத்தகத்தில்இல்லை அது உனது கல்லூரியின் நூலகத்தில் இருக்கிறது. அங்கு படிக்க எதை தேர்வு
செய்கிறாயோ அதைப்
பொறுத்து அது வளரும்” என்று சொன்னார். “படிக்க தவறுபவர்களை படிக்கவைக்கிற வேலையில்
ஈடுபடுபவன் நான்” என்று தன்னைப் பற்றிக் கூறினார் அப்பொழுது அவரது டுடோரியல் கலேஜ் ஒரு கம்யூனிசப் பள்ளி என்பதை நான் அறியேன் எனக்கு படிக்கிற பழக்கமுண்டு ஆனால் எதை
எப்படிப் படிக்க வேண்டுமென்ற
அறிவு கிடையாது.
வானமாமலைக்கு தெரிந்தவன் என்பதால் ஏ.என்னும், அறமும் அவரை சந்திக்க போகிற நேரத்தில் எல்லாம் என்னையும் கூட்டிச் செல்வர்.. அறம், ஏ.என்,என்.வானமாமலை இவர்களது தொடர்பால் அறிவியல், தத்துவம், சோசலிச இலக்கியம் இவைகளை பற்றிய நூல்களை படிக்க தொடங்கினேன். எனது கல்லூரி நூலகத்தில் இவர்கள் குறிப்பிடுகிற எந்த புத்தகமும் கிடையாது .எனது கல்லூரிக்கு நேர்எதிரே இருந்த நெல்லை பப்ளிஷிங்ஹவுஸ் என்ற புத்தக விற்பனை நிலையத்தில் கிடைத்தன.அதை நடத்திய சன்முகம் பிள்ளைஅண்ணாச்சி அங்கிருக்கிற சோவியத் புத்தகங்களை எதைத்தொட்டாலும் அதில் என்ன இருக்கிறது என்பதை சுருக்கமாக சொல்லிவிடுவார். படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுவார்.
காங்கிரஸ் சோசலிஸ்டாக இருந்த அவர் கம்யூனிஸ்டுகளை
நேசித்தார். அன்று
சோசலிசத்தில் பல வகை உண்டு ஒவ்வொரு வர்க்கமும் அதன் நலனை மையமாக வைத்து
சோசலிசம் பேசும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல அன்றைய
கம்யூனிஸ்டுகளில் பெரும்பாலோருக்கும் தெளிவான பார்வை இல்லை என்றே சொல்ல வேண்டும்.இந்த
வேறுபாடுகளை கம்யூனிஸ்ட் இலக்கியங்களை படித்து தெரிந்து கொண்ட ஏ.என் காந்தியவாதியாக
இருந்தவர் கம்யூனிஸ்டானார். இவர்மட்டுமல்ல அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டிய
பலர் முன்னாள் காந்தியவாதிகளே.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை நேசித்த பலர் நேருவின் சோசலிசம் ஒரு காகிதப்பூ என்பதை
உணரவில்லை.
ஏ.என், அறம் இவர்களது தொடர்பால் அன்று நான் கம்யூனிஸ்ட் ஆகவில்லை. புத்தகப்பிரியனானேன். அத்தோடு தூயசைவ உணவு சாப்பிடும் குடும்பத்தைச் சார்ந்த நான் நெல்லை சுல்தானியா ஹோட்டல் பிரியாணியின் ரசிகனானேன். அன்று கம்யூனிஸ்ட் இயக்கதினர் மீது காந்தி சுமத்திய முதல் குற்றச்சாட்டு இந்து சைவஉணவுப் பாரம்பரியத்தை அவமதிக்கும் அசைவ உணவு பண்பாட்டைப் பரப்பியது என்பதாகும். முதலில் காந்தியவாதியாக இருந்து கம்யூனிஸ்ட்டான நல்லசிவனும், அறமும் சைவஉணவுக் குடும்பப் பாரம்பரியத்தை உதறியவர்கள் என்பதை பின்னர் அறிந்தேன்.
தோழர் ஏ.என்
குடும்ப சூழல் விவரங்கள் தெரிந்தபோது
கம்யூனிஸ்ட்கட்சியின் முழுநேர ஊழியன் ஆவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தேன். முற்றும்
துறந்த முனிவர்களைபற்றி பெரிதாக கூறுவார்கள் அவர்கள் ஆசைகளோடு கடமைகளையும் துறந்தவர்கள்.
அவர்களால் சமூகத்திற்கு எந்தவித பயனுமில்லை. ஆனால் ஆசைகளை துறந்து சமூகக் கடமைகளை மறவாத ஒருவனே
கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியனாகமுடியும் என்பதை உணர்ந்தேன். அப்போது எனக்குத் தோழர் ஏ.என்
மீது தனிமரியாதை ஏற்பட்டது. பின்நாளில்
அவரோடு இணைந்து பணி
செய்வேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. சென்னை வாழ்க்கைதான் என்னை
மாற்றியது. அவரோடு சிஐடியு மாநில மையத்திலும் பின்னர் மாநில செயற்குழுவிலும் பணிசெய்தேன்.
நிறைகுறைகள்
இல்லாத மானுடன் இருக்க முடியாது. அது, ஏ.என்னுக்கும் பொறுந்தும். அவர் தமிழக மேலவை உறுப்பினராக மற்றும்
மாநிலங்களவை
உறுப்பினராக
இருந்தார். அந்த
சபையில் பி.ராமமூர்த்தி, உமாநாத், போல
மிளிரவில்லை.
ஆனால்
கட்சியைக் கட்டுவதில் கம்யூனிச நெறிகளைப் பின்பற்றுவதில் குழுவின்
கருத்தொற்றுமையை, செயலொற்றுமையை உருவாக்குவதில் ஈடற்றவராக விளங்கினார். இதனைப் புரிந்துகொள்ள
கம்யூனிஸ்ட்
கட்சியின் அமைப்பு மற்றும் கோட்பாடு பற்றிய தெளிவு தேவைப்படுகிறது.
பலரின்கூட்டு முயற்சியால் உருவாவதுதான் கம்யூனிஸ்ட்கட்சி.
வழிபட தலைவர், சேவைசெய்ய
தொண்டர்கள் என்ற சாதி பிரிவினை இங்கு கிடையாது. ஒருவருக்கொருவர்
ஆசிரியராகவும் மாணவனாகவும், தோழனாகவும்
சொல்லாலும் செயலாலும் இணைந்திருப்பதின்
மூலமே கம்யூனிச இயக்கம் இயங்குகிறது. அவ்வாறு இயங்குவதற்காக சிறு குழுக்களை கொண்டு இயங்கும் அமைப்பாகும்.
இந்த உண்மை பலர்
கண்ணில் படாது. கம்யூனிஸ்ட்க் கட்சியை கட்டுபவர்கள் அனைவரும் கடசிப் பணியில் ஈடுபடும் பொழுது கம்யூனிச நெறிகளைப் பினபற்றுபவர்களாக
உயர்கிறார்களே தவிர
கம்யூனிஸ்ட்டுகளாக பிறந்தவர்களல்ல. இதில் தோல்வி அடைபவர்களும் உண்டு.
காந்தியவாதியாக இருந்த ஏ.என் கம்யூனிஸ்டாக உயர அவரது உறுதியையும் சகதோழர்களின் பங்களிப்பையும்
அவ்வளவு எளிதில் எழுதிட
முடியாது. பாலதண்டாயுதம், ஏ.என்
இருவரும், ஒரே குழுவில்
இருந்தவர்கள், கடைசிவரை
பாலதண்டாயுதத்தால் கம்யூனிஸ்டாக இருக்க இயலவில்லை. மோகன் குமாரமங்கலம்
வழியில் காங்கிரசோடு இணையப் போகும்பொழுது
விமானவிபத்தில் உயிர் துறக்கநேரிடுகிறது. ஆனால் நெல்லை பகுதியில் கம்யூனிஸ்ட்
இயக்கம் வளர பாலதண்டாயுதத்தின் பங்களிப்பை நிராகரிக்க முடியுமா? நிச்சயம் முடியாது.
நெல்லை சதி வழக்கின் தீர்ப்பைப் படித்தால் அறிந்துகொள்ளமுடியும். .
ஆசைகளைத் துறந்து
கடமைகளை மறவாத முழுநேர ஊழியனாக மகிழ்ச்சியோடு வாழ்ந்த ஏ.நல்லசிவன்
உயர்ந்து நிற்பதற்குப் பலவற்றைக் கூறமுடியும். என்மனதில்பட்டதை பட்டியலிடுகிறேன் 1)சிறந்த
உரையாடலாளர். உரையாடல் என்பது, மேடைப்பேச்சோ, உபன்யாசமோ, உபதேசமோ அல்ல. சிறு
குழக்களாகவோ, இருவரோ உரையாடுவதாகும். பெரும்பாலும்
இவைகளே மனமாற்றத்தை உருவாக்குகிறது. இது ஒரு கலை, நறுக்குத்தெறித்தால் போல் பேசுவதும், சிந்தனையை தூண்டுகிற
கேள்வி கேட்பதுவும் எளிதானதல்ல.
நெருங்கி
ஆராய்ந்தால் கட்சி
பற்றாளர்கள் பலரைக் கேட்டால் அவர்கள் கிளை உறுப்பினர் உரையாடல் மூலமே ஈர்க்கபட்டவர்களாக இருப்பர்.
ஏ.என் மேடைப் பேச்சாளர் இல்லை என்றாலும் உரையாடலில் மிளிர்பவராக இருந்தார். இது கிளர்ச்சிபிரச்சாரத்தின் முக்கியவடிவ மாகும்.
ஏ.என் விக்கிரமசிங்கபுரம் ஹார்விமில் தொழிற்சங்கபணியில் இருந்த போது அந்த தொழிலாளர்களிடமிருந்து மாணவனாக அவர் கற்றது ஏராளம் அந்த தொழில் சம்மந்தமான அனைத்து தொழில் நுட்பப் பிரச்சினைகளையும் கேள்விகளாக கேட்டு அறிந்து கொள்வதில் வல்லவராக இருந்தார். அந்த தொழிற்சங்க முன்னணி ஊழியர்களுக்கு சட்டம், லாபநட்ட கணக்கு பற்றிய பொதுஅறிவு, வேலைப்பழுவை கணக்கிடும் முறை அரசியல் பொருளாதாரம் போதிக்கும் ஆசிரியனாகவும் இருந்தார். மதுரைமில்லில் இவர் போலவே முழுநேர ஊழியராக இருந்த தோழர்.கார்மேகம் இவரைப் போலவே தொழில்பற்றிய ஞானத்தோடு இருந்தார்.
அதுதான் கம்யூனிஸ்ட்பாணி வேலைமுறை என்பதை பின்னர் அறிந்தேன். கற்றலும் கற்பித்தலும் இல்லாமல் ஒருமுழுநேர ஊழியன் கட்சியில் நீடிக்க இயலாது. அதில் குறையுள்ளவர்கள் பின்நாளில் கரடுதட்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள். வாய்ச்சொல் வீரர்கள் கட்சிதாவி விடுகிறார்கள். இந்த இடத்தில் எனது அணுபவத்தையும் பதிவு செய்ய வேண்டும். 1968 நானும் ஏ.என்னும் சி.ஐ.டியுவில் பணிபுரிந்த பொழுது அரைவேக்காடாக இருந்த எனக்கு, வேலை நிறுத்தம் பற்றி கருத்து வேறுபாடு இருந்தது. வர்க்கப் போராட்டத்திற்கும் தொழிற்சங்க போரட்டத்திற்கும் உள்ள நுணுக்கமான வேறுபாட்டை புரியாத எனக்கு நல்லசிவன் வர்க்கசமரசவாதியாகத் தெரிந்தார்.
தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசியல்முனை இல்லையென்றால் அது புலிவாலை பிடித்தவன் கதி ஏற்படும் என்பார். அந்த காலங்களில் சென்னை நகரில் தொழிற்சங்க தலைவர்கள் ஒன்றுபட்டு கூட்டுப்போராட்டங்கள் வீறு கொண்டு எழுந்த நேரம். நல்லசிவன் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்தார் . நான் மாவட்ட செயலாளர். செயற்குழுவில் அடிக்கடி அறிவுறுத்துவார். தொழிற்சங்கத்திற்கு தலைமை தாங்குபவர் ஒற்றுமை கருதி அரசியல் பேசமுடியாது. அந்த வேலையை கட்சி கிளைகள் உரையாடல் மூலம் வர்க்கபோராட்ட அரசியலை கொண்டு செல்ல வேண்டும். அந்த வேலையில் பழுது இருக்குமானால் உழைக்கும் மக்களை புரட்சிகர அரசியலுக்கு வெல்ல முடியாது. உழைக்கும் மக்களில் போராடும் குணமுள்ள ஒரு சிறுபகுதி நம்மோடு நிற்கும் பெரும்பகுதி பூர்சுவாகட்சிகளுக்கு விசவாசமாக இருப்பர் என்பார்.
சென்னையில் 1970-80களில் தொழிற்சங்கங்களின்
கூட்டுப் போராட்டம் சாத்தியமானதுக்குக் காரணம் புதிதாக முளைத்த தேசிய முதலாளிகள்
தொழிலாளர்கள் தங்களது சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை
மறுத்தனர் அந்த பொது அம்சமே கூட்டுப் போராட்டத்தை வெற்றிஅடையச் செய்தது. அந்த
உரிமை கிடைத்த பிறகு இன்று நிலமை என்ன? உழைக்கும்மக்களை அரசியல்சக்தியாக அந்த தொழிற்சங்க போராட்டம்
உயர்த்தவில்லை.
தோழர்.நல்லசிவன் சந்தர்ப்பவாத அரசியலையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புரட்சிகர மாற்றங்களை உருவாக்குவதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தியவர். கூட்டணி அரசியலின் தத்துவார்த்த அடிப்படையை உள்கட்சி விவாதங்களிலுக்குள் உலுக்கி நெறிபிறழா உறவிற்கு போராடியவர். ஏகாதிபத்தியவாதிகளிடையே நிலவிய முரண்பாட்டால் அன்று சோவியத் புரட்சி கரைஏறியது. அதுபோல் சந்தர்ப்பம் கிடைத்தால் பயன்படுத்த தவறக்கூடாது, ஆனால் பூர்சுவாஜனநாயக கட்சிகளோடு உறவு என்பது வர்க்க போராட்ட அரசியலை கைவிட்டு உறவு கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். பாட்டாளிவர்க்க கட்சியின் உறுப்பினர்களைபற்றி கொண்டிருக்கும் அந்நியகருத்துக்களை இடைவிடாத விவாதங்கள் மூலம் சரி செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தார்.
ஒன்றை குறிப்பிட
வேண்டும். மூலதனத்தை மொழி பெயர்த்த தியாகு மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட
கட்சி உறுப்பினராக சேர்ந்தார். தியாகு நக்ஸலைட்டாக இருந்து அந்த பாதை தவறு என்று எழுதியதால் விடுதலை
பெற்றார். அதற்கு உள்ளே இருந்த மார்க்சிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில
செயற்குழுவும் உதவின.
அவர் வெளியே
வந்ததின் நோக்கம் வேறு. மூலதனத்தை மொழிபெயர்த்தவர் என்பதால் கட்சி
உறுப்பினர்களிடையே நன்மதிப்பை பெற்றார். அவரது குட்டி
பூர்சுவாதனத்தை மெச்சுகிறசிலரை வைத்துக் கொண்டு மாவட்டக் குழுமீதும். மார்க்சிஸ்ட் கட்சிமீதும் அவநம்பிக்கையை
விதைத்தார். பகுதிக்குழு மாநாட்டிலும், மாவட்ட மாநாட்டிலும் ஆவேசமாகபேசி
சீர்குலைக்க முயற்சித்தார்.
அந்த கட்டத்தில் தோழர் ஏ.என் கட்சியின் அரசியல் பாதையை வலியுறுத்தி பேசிய
பேச்சுக்களே கட்சியை காப்பாற்றியது. சிறிதுநாளில் தியாகு அவராகவே
வெளியேறினார். பூர்சுவா ஊடகங்கள் மார்க்சிஸட் கட்சியை சீர்குலைக்க இவரைஅவ்வப்போது
பயன்படுத்த தவறியதில்லை.
சுருக்கமாக சொன்னால் தோழர்ஏ.என்.
கற்றல் கற்பித்தல் என்ற கம்யூனிச நடைமுறைக்கு எடுத்துக் காட்டானார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் பாட்டாளிவர்க்க
அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்த்தப்
போராடினார. தொழிற்சங்க பணியில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கினை தெளிவுபடுத்துவதில் சிறந்து
விளங்கினார் கட்சிக்குள் அந்நியக் கருத்துக்களை சேதாரமில்லாமல்அகற்றிடும் செயலுக்கு எடுத்துக் காட்டாக
இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக