தேசிய
இனங்கள் குறித்து மார்க்சிய கோட்பாடுகளில் தோழர் ஜோசப் ஸ்டாலின் எழுதிய
கோட்பாடுகள் பொதுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்தக் கோட்பாடுகளுக்கு
சவால் விடக்கூடிய முறையில் தான் சீனாவில் ஹுய் தேசிய இன பிரச்சனை அல்லது இனச்
சிறுபான்மையினரின் பிரச்சினை இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனச் சிறுபான்மை
குறித்த கோட்பாடுகளை பொதுவாக உருவாக்கி இருந்தாலும் தனித்தன்மைகளுக்கு ஏற்ற
வகையில் அவற்றை அமலாக்கியதின் மூலமாக இந்த சவால்களை சந்தித்தது.
இனப் பிரச்சினை குறித்த ஆய்வு
அலுவலகம்
1913 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலின் எழுதிய மார்க்சியமும் தேசிய இன பிரச்சனையும்
என்ற நூலில் தேசிய இனத்தை நான்கு பண்புகளின் அடிப்படையில் வரையறுத்து இருப்பார். பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுவான
கலாச்சாரத்தில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம் என்பதுதான் அந்த வரையறை ஆகும். ஆனால் சீனாவில் ஹுய் இனச் சிறுபான்மையினர் இந்த வரையறைக்குள் முழுமையாக
அடங்கவில்லை.
1935 முதல் 1949 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமாக இருந்த யானான் (வடக்கு
ஷான்சி) பகுதியிலும் அதைச் சுற்றியும் பல மங்கோலியர்களும் சீன மொழி பேசும்
முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்.1940-இல், சீன கம்யூனிஸ்ட் கட்சி 'இனப்
பிரச்சினை குறித்த ஆய்வு அலுவலகத்தை' நிறுவியது; இதன் நோக்கம் இனப் பிரச்சினை குறித்து முறையாக ஆய்வு செய்து, அது தொடர்பான பகுப்பாய்வுகளை வெளியிடுவதாகும். ஹுய் (Hui) மற்றும் மங்கோலியர்கள் (Mongols) தொடர்பான
பிரச்சினைகள் குறித்த இரண்டு முக்கிய கொள்கை வரைவுகளும் 1940-இல் மத்தியக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. யனான் (Yan’an) காலகட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வுகள், கம்யூனிஸ்டுகளின்
இனக் கொள்கைக்கான கருத்தியல் அடிப்படையை உருவாக்கின. லி வெய்ஹான் (Li
Weihan) எழுதிய ஹுய்ஹுய் இனப் பிரச்சினை என்ற சிறுநூல், கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பிறகு சீனாவின் முஸ்லிம் மக்கள் குறித்து சீன
கம்யூனிஸ்ட் கட்சி (CCP) மேற்கொண்ட இனக் கொள்கைக்கான
அடித்தளத்தையும் அமைத்தது. இந்தச் சிறுநூல், சீன மொழி பேசும் முஸ்லிம்களை
ஒரு தனி 'மின்சு'வாக (இனக்குழுவாக) வரையறுத்தது;
இதன் மூலம் அவர்கள் ஹான் (Han) இனத்தவரிடமிருந்தும்,
பிற முஸ்லிம் சமூகங்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டப்பட்டனர்.
மங்கோலிய
சிறுபான்மை மக்கள் பற்றி வரையறை செய்கிற பொழுது ஜோசப் ஸ்டாலின் உருவாக்கிய
கோட்பாடுகள் பொருத்தப்பாடாக இருந்தது. காரணம் மங்கோலியர்கள் தங்களின் சொந்த வரலாறை கொண்டிருந்தார்கள். நன்கு வரையறைக்கப்பட்ட பிரதேசத்தில் கிட்டத்தட்ட பிரத்தியேகமான முறையில்
வாழ்ந்தனர். தங்களது சொந்த மொழியை பயன்படுத்தினார்கள். விவசாயத்திற்கு மாற்றாக நாடோடி மேய்ச்சல் வாழ்க்கையை பின்பற்றினார்கள். உணவு, இசை, குதிரை ஏற்றம்
மற்றும் மல்யுத்தம் போட்டிகள் போன்றவற்றிலும், பொதுவான
தங்கள் நாட்டுப்புற முறைகளால் குறிப்பிட்ட அளவு ஒரே மாதிரியான கலாச்சாரத்தைக்
கொண்டிருந்தார்கள். எனவே அவர்களை ஒரு இனமாக அங்கீகரிப்பதில்
பெரிய சிக்கல்கள் எதுவும் வரவில்லை.
ஆனால்
சீன மொழி பேசும் முஸ்லிம்கள் அதாவது ஹுய் என்று அழைக்கப்பட்ட இனத்தினர்
மங்கோலியர்கள் போல் இல்லை. மிங்க் வம்ச ஆட்சி காலத்தில் இருந்து, சீனாவை தளமாகக் கொண்ட ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த ஹுய்
இன முஸ்லிம்கள் மக்கள் வாழ்ந்தார்கள்.
இவ்வாறு வாழக்கூடியவர்களுக்கு மத்தியில் பிரதேசங்களுக்கு ஏற்ற வேறுபாடுகளும்
இருந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் அல்லது ஒவ்வொரு
மாவட்டத்திலும் வசிக்கக்கூடிய மக்கள் அங்குள்ள உள்ளூர் சமூகத்துடன் பழகி
அவற்றையும் உள்வாங்கிக் கொண்டு வாழ ஆரம்பித்தார்கள். உள்ளூரில் இருந்த இதர
மக்களுடன் தொடர்பு கொண்டு உறவாடி தங்கள் பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொண்டனர். கலப்புத் திருமணங்கள் செய்ததன் மூலம் சில இடங்களில் உடல் ரீதியாக மாற்றம்
ஏற்பட்டு எந்தப் பகுதியில் வாழ்ந்தார்களோ அந்தப் பகுதியின் சீனர்களைப் போலவே காட்சியளித்தார்கள். இன்னும்
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீனா முழுவதும் ஹுய் இன மக்கள் முன்மாதிரியாக
செயல்படக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் எதுவும் இல்லை.
ஹுய் இன மக்கள் அப்படிப்பட்ட ஒரு பகுதியை ஆக்கிரமித்தும் குடியேறவில்லை. மேலே சொன்ன மிக முக்கியமான அம்சங்கள் ஒரு தேசிய இனம் என்ற வரையறைக்குள்
முழுமையாக உட்படுத்த முடியாத நிலைமை இருந்ததை சீன கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டது.
இருந்தாலும், இவர்களுக்கான சில பொதுவான அடையாளங்கள் மேலோங்கி
இருந்ததை சீன கம்யூனிஸ்ட் கட்சி கணக்கில் எடுத்துக் கொண்டது.
"ஹுய்" இனக்குழு
தோற்றம் பரவல்
சீனாவின்
அதிக மக்கள்தொகை கொண்ட சிறுபான்மை இனக்குழுக்களில் ஒன்றான ஹுய் இனம், அதன் தனித்துவமான தோற்றம்,
பரந்த பரவல் மற்றும் இஸ்லாமியக் கலாச்சாரம் ஆகியவற்றால் சிறப்புத்தன்மை
அடைகிறது. ஹுய் இனத்தின் உருவாக்கம் பல
நூற்றாண்டுகள் நீடித்த ஒரு சிக்கலான இனக்கலப்பு செயல்முறையின் விளைவாகும்.
இன்றைய
"ஹுய்" இனக்குழு,
பல்வேறு காலகட்டங்களில் சீனாவிற்கு வந்த பல முஸ்லிம் சமூகங்களின்
இணைப்பிலிருந்து உருவானது. சுமார் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில்
(டாங் வம்சம்), அரேபிய மற்றும் பெர்சிய முஸ்லிம் வணிகர்கள்
கடல் மற்றும் பட்டுப் பாதை வழியாக சீனாவிற்கு வந்தனர். அவர்கள் குவாங்சோ, சியான் போன்ற நகரங்களில் குடியேறி, உள்ளூர் சீனர்களை
மணந்தனர். இவர்கள் "ஃபான்கே" (வெளிநாட்டு விருந்தினர்கள்) என்றும்,
அவர்களின் சந்ததியினர் "துஷெங் ஃபான்கே" (உள்நாட்டில்
பிறந்த வெளிநாட்டு விருந்தினர்கள்) என்றும் அழைக்கப்பட்டனர்.
13 ஆம் நூற்றாண்டில் செங்கிஸ்கானின் மேற்கத்திய படையெடுப்புகளின்போது,
மத்திய ஆசியா, பாரசீகம் மற்றும்
அரேபியாவிலிருந்து ஏராளமான முஸ்லிம்களும், படை வீரர்கள், கைவினைஞர்கள்,
அறிஞர்கள் என பலதரப்பட்டவர்கள் குடியேறவோ
அல்லது கட்டாயமாக இடம்பெயர்க்கவோ செய்யப்பட்டனர். இவர்கள் சீனா முழுவதும் பரவி,
குறிப்பாக இராணுவ முகாம்களில் குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டனர். இவர்கள் "ஹுய்" அல்லது
"ஹுய்ஹுய்" என்று அழைக்கப்பட்டனர்.
யுவான்
வம்ச ஆட்சிகாலத்தில் (1271–1368) இந்த இரண்டு பிரிவினரும் இணைந்தனர். இவர்கள்
சீன மொழி மற்றும் கலாச்சாரத்தைத் தழுவியதுடன், இஸ்லாத்தைப் பகிர்ந்து கொண்ட இந்த சமூகமே இன்றைய ஹுய்களின் முக்கிய
மூதாதையர்களானது. யுவான் வம்ச ஆட்சிகாலத்தில் "ஹுய்ஹுய்" என்பது முதன்மையாக ஒரு இனம்
அல்லது புவியியல் அடையாளமாக மாறிவிட்டது. மிங்
வம்ச(1368-1644) ஆட்சி காலத்தில்
மத்திய ஆசியா, அரேபியா, பெர்சியா
ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள், ஹான் சீனர்கள், மங்கோலியர்கள், உய்குர்கள் போன்ற பல்வேறு இனக்குழுக்களுடன்
நீண்டகாலம் கலந்து வாழ்ந்ததன் விளைவாக, மிங் வம்ச காலத்தில் ஹுய்
ஒரு தனி இனக்குழுவாக உருவெடுத்தது. சமீபத்திய மரபணு ஆய்வுகள்,
தற்கால ஹுய் மக்களின் மரபணுப் பங்களிப்பில் கிட்டத்தட்ட 70% கிழக்கு ஆசியப் பகுதிகளிலிருந்தும், ஏறக்குறைய 30%
மேற்கு யூரேசியப் பகுதிகளிலிருந்தும் வந்திருப்பதைக் காட்டுகின்றன. இது
அவர்களின் உருவாக்கத்தில் உள்ளூர் மக்களின் பெரும் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது.
தனித்துவ தன்மையின் வெளிப்பாடு
இந்த
பன்முகத் தோற்றம் கொண்ட சமூகம் எவ்வாறு ஒரு தனித்துவமான "ஹுய்"
இனக்குழுவாக உருவெடுத்தது?
இவர்களை
இணைப்பதற்கு பொதுவான நம்பிக்கை மற்றும் சமூக அமைப்பு இஸ்லாம் மைய
அடையாளமாக இருந்தது. "ஜியாஃபாங்" (பள்ளிவாசல் சமூகம்) என்ற அமைப்பு,
பரவலாக வாழ்ந்த ஹுய் மக்களை ஒன்றிணைக்கும் அடிப்படை அலகாக
செயல்பட்டது. பள்ளிவாசல் மத நடவடிக்கைகளுக்கு
மட்டுமின்றி, சமூகக் கூட்டங்களுக்கும் மையமாக விளங்கியது. காலப்போக்கில், இஸ்லாமிய சூஃபி மாயவாதமும் சீனக் குல முறையும் இணைந்து "மென்ஹுவான்"
(ஆணாதிக்க மத அமைப்பு) எனும் தனித்துவமான முறையும் உருவானது. பள்ளிவாசலைச் சுற்றி
மையம் கொண்ட இந்த சமூகங்கள், மத மற்றும் சமூகப் பணிகளை
மேற்கொண்டன.
ஆரம்பத்தில்
அரபி, பெர்சிய
மற்றும் சீன மொழிகளைப் பேசிய இவர்கள், காலப்போக்கில்
மாண்டரின் சீன மொழியையே முக்கிய மொழியாகத் தழுவினர். இருப்பினும், தங்கள் இஸ்லாமியப் பெயர்கள் மற்றும் பல கலாச்சாரப் பழக்கவழக்கங்களைத் தக்க
வைத்துக் கொண்டனர். இது அவர்களை ஹான் சீனர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.
ஹுய்
இனத்தவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் மூன்று விஷயங்கள் மற்றவர்களிடம்
இருந்து முழுமையாக வேறுபட்டு இருந்தது. இது இவர்களை தனியான இனச்சிபான்மையினராக வகைப்படுத்த
மேலும் வலுசேர்த்தது.
1.மொழி: ஹுய் மக்கள் சீனா முழுவதும் பரந்து வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய மொழி
சீன மொழியின் மாண்டரின் வகையாகும். இது இவர்களை வெவ்வேறு துருக்கிய அல்லது ஈரானிய
மொழிகளைப் பேசும் பிற சீன முஸ்லிம் இனக்குழுக்களிடமிருந்து (உய்குர்கள் போன்றோர்)
வேறுபடுத்துகிறது . பல ஹுய் மக்கள் சீன மொழியுடன் சில அரபு அல்லது பாரசீக
வார்த்தைகளையும் தக்க வைத்துள்ளனர் .
2.இஸ்லாம்: வரலாற்று ரீதியாகவும்
இன்றும், இஸ்லாம் ஹுய் இன அடையாளத்தின் மிக முக்கியமான
மையமாக உள்ளது. இந்தப் பகிரப்பட்ட நம்பிக்கையே இவர்களின் பல கலாச்சார
பழக்கவழக்கங்களுக்கு அடித்தளமாக அமைகிறது. இவர்கள்
இஸ்லாமிய மதத்தை (சுன்னி இஸ்லாம்,
ஹனஃபி பள்ளி) பின்பற்றுகின்றனர். இது அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையிலும்,
பாரம்பரியங்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மரபுகளின் பிரதிபலிப்பாக, ஆண்கள் வெள்ளை அல்லது
கருப்பு நிற தொப்பிகளை அணிவார்கள். பெண்கள் கருப்பு, வெள்ளை அல்லது
பச்சை நிற தலையில் முக்காடு அணிவது வழக்கம்.
3.பொதுவான உணவுப் பழக்கவழக்கங்கள் (ஹலால்): இஸ்லாமிய சட்டங்களைப்
பின்பற்றும் ஹுய் மக்கள், பன்றி இறைச்சி, இரத்தம், மற்றும் சரியான இஸ்லாமிய முறையில்
அறுக்கப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்பதைத் தவிர்க்கின்றனர். பன்றி இறைச்சி சீன
உணவு கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிப்பதால், இந்தத்
தவிர்ப்பே அவர்களை ஹான் சீனர்களிடமிருந்து மிகவும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு
முக்கிய கலாச்சார அடையாளமாகும். மது
அருந்துவதையும் தவிர்க்கின்றனர். இவர்களின் உணவு வகைகளில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி
முக்கிய இடம் வகிக்கிறது.
மொழி அடிப்படையும் கருத்தியல் மோதல்களும்
சீனாவில் இனச்சிறுபான்மை
வளர்ச்சிப்போக்கில் ஹுய் இன
உருவாக்கும் வேறுபட்ட முறையில் அமைந்தது. குயிங் வம்ச(1644-1912)ஆட்சி காலத்தில் இனவியலாளர்கள் அதன் குடிமக்களை மொழியின் அடிப்படையில் பிரித்தனர், இதனால் சீன மொழி பேசும் ஹான் இனத்துடன் ஹீய் இன மக்களையும் இணைத்துவிட்டனர்.
இது பெரும் விவாதப்போக்கை உருவாக்கிவிட்டது. குயிங் வம்சத்தின் கடைசி
ஆண்டுகளிலும், குடியரசுக் காலத்தின் துவக்கத்திலும் முஸ்லிம் அறிவுஜீவிகள் .குழப்பம், அறியாமை மற்றும் மாகாணவாதம் ஆகியவற்றை கடந்து தேசிய ஹுய்
அமைப்புகளை உருவாக்க போராடினர்.
குயில்
வம்ச பேரரசு நெருக்கடிகளில் இருந்தும் சமூகத்தில் டார்வின் இனிய சிந்தனைகளின் வெளிப்பாடுகளில்
இருந்தும் அறிவுசார் சக்திகள் ஃபுல் இன மக்கள் ஒரு தனித்துவமான மரபணு ரீதியாக வரையறுக்கப்பட்ட
மக்களாக அதாவது ஒரு இனமாக பார்க்கத் தொடங்கினார்கள். மறுபுறத்தில் மத குருமார்கள் இமாம்கள்
இஸ்லாம் மட்டும்தான் உயிரினத்தின் அடையாளம் என்று கருத்துக்களை முன் வைத்தார்கள். சில
இடதுசாரி அறிவுஜீபிகள் மரபணு ரீதியான வகைப்படுத்தப்பட்ட இனம் என்பதை ஆதரித்தனர். 1930 ஆம் ஆண்டுகளுக்குப்
பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் சொந்த அறிவு ஜீவிகளின் ஆராய்ச்சியின் அடிப்படையில்
சீன மொழி பேசும் முஸ்லிம்களை ஹய்சு அல்லது
ஹுய் ஹுய் minsu என்று குறிப்பிடத் தொடங்கியது.
புதிய
சீனாவில் சீன மொழி பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் முஸ்லிம்
அறிவு ஜீவிகள் மற்றும் அல்ல இஸ்லாமிய நவீனத்துவத்தால் ஈர்க்கப்பட்ட இமாம்களும் பொய்
மக்களுக்கு பல நிறுவனங்களை உருவாக்கினார்கள். இந்த நிறுவனங்கள் சீன அரபு தொடக்கநிலை
இடைநிலை மற்றும் சாதாரண பள்ளிகள் ஆகியவற்றை நடத்தினார்கள் இந்தப் பள்ளி நிறுவனங்களில்
மதப் பாடங்களிலும் நவீன மதச்சார்பற்ற பாடத்திட்டத்தையும் இணைத்து நடத்தினார்கள். இஸ்லாமிய
கன்பூசிய நீதியை அடிப்படையாகக் கொண்ட அறிஞர்கள் வெளிநாட்டு மொழிகள் கணிதம் அறிவியல்
மற்றும் பிற நவீன பாடங்களை உள்ளடக்கிய கலப்பு இஸ்லாமிய சீன பாடத்திட்டத்தை கற்பிக்க
பள்ளிகளை வடிவமைத்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பெரிய பின்னணியில் சீன
மொழி பேசும் முஸ்லிம்கள் ஒரு புதிய சீனாவிற்குள் சாதகமாக வரையறுக்கப்படுவதற்கு மிக
முக்கிய காரணியாக மாறியது. இந்த வகையில் ஒரு சீன இனக்குழுவாக உயிர் சமூகத்தை அங்கீகரிப்பதற்கு
ஒரு சீன தேசிய அரசு உருவாக்கப்பட்ட பின்னரே சாத்தியம் என்பதை அவர்கள் உணர்ந்து இருந்தார்கள்.
இந்தப் பின்னணியில் தான் 1949
ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் புரட்சி நடைபெற்று சீன மக்கள்
குடியரசு நிறுவப்பட்டது.
புரட்சிக்கு முந்தைய கள அனுபவம்
புரட்சிக்கு
முந்தைய காலங்களிலிருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி இனப்பிரச்சனைகளுக்கான படிப்பினைகளை
களத்திலிருந்து பெற்றிருந்தது. 1935க்குப் பிறகு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்
ஜப்பானிய எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இஸ்லாமிய சமுகத்திலிருந்த
நிலபிரபுக்கள் கோமிண்டாங் கட்சியில் இருந்து கொண்டு மக்களை குறிப்பாக
ஏழை இஸ்லாமியர்களை சுரண்டினர். இந்த பின்னயில் இஸ்லாமிய மக்கள் CCP- யில் இணைந்தனர். ஜப்பான் மற்றும் கோமிண்டாங்கிற்கு எதிரான பரந்த சமூக கூட்டணியில்
உறுதியாக இருந்த CCP , இந்த கட்டத்தில், மதம் அல்லது மதத் தலைமைக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. நீண்ட
பயண காலத்திற்கு பிறகு, எட்டாவது பாதை இராணுவத்தில்
போராடும் வடமேற்கு முஸ்லிம்களிடம் எட்கர் ஸ்னோ கீழ்கண்டவாறு கருத்துக்ளை பகிர்ந்து
கொண்டார். “சீனர்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள்; சீனர்கள்
முஸ்லிம் இரத்த த்தையும் முஸ்லீம்கள் சீன இரத்தத்தைக் கொண்டுள்ளோம்;
நாம் அனைவரும் டாசுங் குவோவைச் சேர்ந்தவர்கள் [டா ஜோங்குவோ, அதாவது சீனா], எனவே நாம் ஏன் ஒருவருக்கொருவர் சண்டையிட
வேண்டும்? நமது பொதுவான எதிரிகள் நில உரிமையாளர்கள், முதலாளிகள், வட்டிக்காரர்கள், நமது
அடக்குமுறை ஆட்சியாளர்கள் மற்றும் ஜப்பானியர்கள். நமது பொதுவான நோக்கம் புரட்சி. ”
சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஏற்கனவே சீனா ஒரு பல்லின நாடாக இருக்க வேண்டும் என்று
முடிவு செய்திருந்தது. ஏனெனில் அவர்களின் நீண்ட பயண காலத்தில் அவர்கள் முஸ்லிம்கள்
மற்றும் மங்கோலியர்களை மட்டுமல்ல, குய்சோ, யுன்னான், சிச்சுவான் மற்றும் கிழக்கு திபெத்தின் கலாச்சார
ரீதியாக வேறுபட்ட (மற்றும் கட்டுப்படுத்த கடினமாக) சீனரல்லாத மக்களையும் சந்தித்தனர்.
இந்த
அனுபவத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு சீன மக்கள் குடியரசு இன சிறுபான்மை மக்களுக்கான
ஐந்து தன்னாட்சி பிரதேசங்களை உருவாக்கியது அவற்றில் ஒன்றுதான் நிங்சியா ஹுய் தன்னாட்சிப்
பகுதி (Ningxia Hui
Autonomous Region) 1958 ஆம் ஆண்டு இந்த தன்னாட்சி பிரதேசம் அமைக்கப்பட்டது. குறிப்பாக இது ஹுய் இன மக்களின் தன்னாட்சிப் பகுதியாகவும், மஞ்சள் ஆற்றின் (Yellow River) நாகரிகத்தின் தொட்டிலாகவும்
விளங்குகிறது.
இதன்
பரப்பளவு தோராயமாக 66,400
சதுர கிலோமீட்டர்கள். 2024 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி,
இங்கு சுமார் 72.9 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இதில் ஹுய் இன மக்களின் எண்ணிக்கை சுமார் 36.69% ஆகும். நிங்சியா சீனாவின் முக்கியமான நிலக்கரி
மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மையமாக விளங்குகிறது. 2024 ஆம் ஆண்டில்,
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் (installed
capacity) மொத்தத்தில் 50% ஐத் தாண்டியுள்ளது.
நவீன நிலக்கரி வேதியியல், புதிய பொருட்கள் மற்றும் தூய்மையான
எரிசக்தி ஆகிய தொழிற்கூட்டுகள் இங்கு முன்னிலையில் உள்ளன.
மஞ்சள்
ஆற்றின் பாசன வசதி காரணமாக,
இப்பகுதி தரமான கோதுமை, நெல் மற்றும் கரும்பு போன்ற
பயிர்களுக்குப் பெயர் பெற்றது. மேலும், கோஜி பெர்ரி (wolfberries)
மற்றும் திராட்சை சாகுபடியிலும் முக்கிய இடம் வகிக்கிறது.
கடந்த
நாற்பது ஆண்டுகளில், ஹெலன் மலை அடிவாரத்தில் பாலைவன நிலம் இப்போது சீனாவின் முதன்மையான திராட்சை
தோட்டப் பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆண்டுக்கு 14 கோடி பாட்டில்கள்
மதுவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளும்
இங்கு உள்ளன.
2024 ஆம் ஆண்டில் நிங்சியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 550.3 பில்லியன் யுவான்களாக (சுமார் $76 பில்லியன்) இருந்தது,
இது முந்தைய ஆண்டை விட 5.4% வளர்ச்சியாகும். மஞ்சள் ஆற்று நாகரிகம், மர்மமான மேற்கு சியா
அரச கல்லறைகள், ஷாஹு ஏரி, மற்றும் பாலைவனக்
காட்சிகள் போன்றவை முக்கிய ஈர்ப்புகளாகும். மேற்கு சியா அரச கல்லறை சமீபத்தில் யுனெஸ்கோ
உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சுற்றுலாவும் வேகமாக வளர்ந்து
வருகிறது; 2024 இல் கிராமப்புறங்களை 13.56 மில்லியன் பயணிகள்
பார்வையிட்டுள்ளனர்.
அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக