Pages

வியாழன், டிசம்பர் 04, 2025

49 திபெத்: கலாச்சார பாதுகாப்பும் வளர்ச்சியும்


அ.பாக்கியம்

திபெத்திய மக்களின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சீன கம்யூனிஸ்ட் அரசு அழித்து வருகிறது என்றும், சீனாவின் ஹான் இன கலாச்சாரத்தை புகுத்தி வருகிறது என்றும், திபெத்திய அடையாளங்களை ஒட்டுமொத்தமாக சூறையாடி வருவதாக சீன எதிர்ப்பு சக்திகளும், ஏகாதிபத்திய நாடுகளும் இடைவிடாது ஊளையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சீன மக்கள் தொகையில் சிறுபான்மை தேசிய இனங்கள் மிகச்சிறிய அளவே இருந்தாலும் அவர்களை சீனாவின் மக்கள் குடியரசு தனித்தன்மையுடன், அவர்களின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை, பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது. சீன பண்புகளுடன் கூடிய சோஷலிச சமூகத்தை உருவாக்குவதில் திபெத்தின் பங்களிப்பை உள்ளடக்கி வளர்க்கிறது. இந்தக் கொள்கையின் வெளிப்பாடு தான் திபெத்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அதன் பாரம்பரியங்களையும் அழிந்து விடாமல் பாதுகாப்பதுடன் தேவையான வளர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 ஆவது காங்கிரஸில் அனைத்து இனக்குழுக்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்க ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அமுலாக்கி வருகின்றனர். திபெத்திய பிராந்தியத்தில் சீன பண்புகளுடன் கூடிய சோஷலிசத்தின் மதிப்புகளை தீவிரமாக உயர்த்துவதற்கும், அதே நேரத்தில் திபெத்திய பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாத்து கலாச்சார அமைப்புகளின் சேவைகளை வளர்த்தெடுக்கவும் செய்கிறார்கள். இதன் காரணமாக திபெத்திய கலாச்சார நிறுவனங்களும், கலாச்சாரம் தொடர்பான தொழில்களும் மேம்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கைகள் திபெத்திய மக்களின் இதயங்களில் சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

வளரும் மொழியும் எழுத்தும்

திபெத்திய மொழியையும் எழுத்து முறைகளையும் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், அஞ்சல் சேவைகள், தகவல் தொடர்புகள், போக்குவரத்து துறைகள், நிதித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பரவலாக திபெத்திய மொழிகள்தான் பயன்படுத்தப்படுகிறது. பொது இடங்களில் அறிவிப்பு பலகைகளில் திபெத்திய மொழியையும் சீன மொழியையும் பயன்படுத்துகின்றார்கள். இரு மொழிக் கொள்கை கல்வி நிலையங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டில் திபெத்திய மொழியில் சொற்களஞ்சியமும், தேசிய தர நிலை தகவல் தொழில்நுட்பமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்திய மொழி வளர்ச்சிக்காக குறிப்பான சில திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்த ஆரம்பித்தது. மொழி வளர்கிறது என்று சொல்லுகிற பொழுது இக்காலத்தில் 1500 புதிய சொற்களை கண்டுபிடித்து திபெத்திய மொழிகளை வளர்த்தார்கள். 2020 ஆம் ஆண்டு திபெத்திய மொழிகளில் 2200 புதிய சொற்களை சேர்த்து திபெத்திய மொழியின் பயன்பாட்டு தளத்தை விரிவு படுத்தினார்கள். மொழி வளர்ச்சியிலும் எழுத்து சீர்திருத்தத்திலும் திபெத்திய அடையாளத்தை அழிக்காமல் வளர்த்தெடுக்கும் பணியினை இந்த செயல்கள் பறைசாற்றுகின்றன.

மற்றொரு முக்கியமான அம்சம் திபெத்திய மொழியில் வெளிவரக்கூடிய பத்திரிக்கைகள், புத்தகங்கள் ஆகியவையாகும். இவை அனைத்தும் திபெத்திய மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளும் கிடைத்தாலும் திபெத்திய மொழிகளில் வெளிவருவது என்பது எளிய மக்களையும் சென்றடைவதற்கான ஒரு வடிவமாக உள்ளது.

திபேத்தில் 40 அரசு வெளியீட்டு நிறுவனங்களும், பல்வேறு வகையான வெளியீடுகளை வெளியிடக்கூடிய 219 வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன. இக்காலத்தில் இந்த வெளியீட்டு நிறுவனங்கள் 2.71 மில்லியன் புத்தகங்களை அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதேபோன்று 2.32 மில்லியன் பருவ இதழ்களை (வார மாத இரு மாத) வெளியிட்டு உள்ளார்கள். 2015 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு திபெத்தில் புத்தகம் மற்றும் பருவ இதழ்களின் விற்பனை 1.29 பில்லியன் யுவானை கடந்துள்ளது. திபெத்திய மொழியில் 17 பருவ இதழ்களும் 11 தினசரி செய்தித்தாள்களும் வெளிவந்து கொண்டிருக் கிறது.

 

மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு முன்னேற்றம் புரட்சிக்கு முந்திய காலத்தில் கிடைக்காத முக்கிய கட்டமைப்பாக நூலகங்கள் மாறி உள்ளது. நிர்வாக கிராமங்களில் 5,400க்கும் மேற்பட்ட நூலகங்கள் செயல்படுகிறது. திபெத்தில் மடாலயங்கள் எண்ணிக்கை அதிகம். மடாலயங்களில் 1700 க்கு மேற்பட்ட நூலகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவை மதம் சார்ந்த நூலகங்கள் என்பதை கடந்து பொது அறிவுக்கான நூலகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு நூலக கட்டமைப்புகள் மூலம் திபெத்திய கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளும் மேய்ப்பர்களும் அறிவியல் மற்றும் கலாச்சார அறிவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்கள். இந்த பிராந்தியத்தில் பத்திரிக்கை மற்றும் வெளியீட்டு நிறுவனங்களின் வணிகமும் செழிப்படைந்து வருகின்றன.

திபெத்திய பாரம்பரிய மருத்துவத்தின் மகிமை

புரட்சிக்குப் பிறகு சீனா முழுவதும் பாரம்பரியமான மருந்துகள் சிகிச்சை முறையில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த மருத்துவ முறைகள் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு விதமான சிகிச்சை முறைகளையும் கொண்டுள்ளது. இதேபோன்று திபெத்திய பிராந்தியத்தில் பாரம்பரிய மருத்துவமும் சிறப்பு வாய்ந்தது. திபெத்தில் ஏற்கனவே திபெத்திய மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கிறது. இவற்றில் புதிய வளாகங்களை உருவாக்குவதற்கு ஒரு பில்லியன் யுவான்களை அரசு முதலீடு செய்து, திபெத்திய பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திபெத்தில் 49 திபெத்திய மருத்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டன.

திபெத்தில் இருக்கக்கூடிய கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் 42.4 சதவீதம் திபெத்திய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய மருந்துகளுக்கு நவீன காலத்தில் மகத்துவம் இருக்காது. மதிப்பு குறைவாக இருக்கும் என்ற பொதுவான கருத்து மாற்றப்பட்டு சீன மக்கள் குடியரசு திபெத்திய மருந்துகளை தரப்படுத்தி முறையாக அளவீடு செய்து மேம்படுத்தி உள்ளது. இந்த மருந்துகள் வணிக அடிப்படையில் தயாரித்து வழங்கப்படுகிறது. வணிக தரத்தை வருகிற பொழுது அது பல்வேறு பகுதிகளுக்கு பயன்படக்கூடிய மருந்தாக மாறுகிறது.

 

மற்றொரு முன்னெடுப்பு திபெத்திய மருத்துவம் குறித்த 300க்கும் மேற்பட்ட பழங்கால ஆவணங்களை பல ஆண்டுகளாக தொகுத்து அவற்றை வெளியிட்டு உள்ளார்கள். திபெத்திய மருத்துவம் குறித்த பண்டைய புத்தகங்கள் 600க்கும் மேற்பட்டவை சேகரிக்கப்பட்டு பயன்படுத்தக்கூடிய முறையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க செயல் திபெத்திய மருத்துவத்தின் தலைசிறந்த படைப்பான நான்கு மருத்துவ க்ளாசிக் என்ற புத்தகம் உலக ஆசிய பசிபிக் பிராந்திய பதிவேட்டு துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நினைவுச் சின்னங்கள் வழியே கலாச்சார பயணம்

பாரம்பரிய கலாச்சாரத்தை உயிர்ப்பிக்க கூடிய முறையில் அவற்றை பயனுள்ள பாதுகாப்பில் வைத்துள்ளார்கள். திபெத்திய பிராந்தியத்தில் தற்போது மாநில அளவிலான மூன்று கலாச்சார மையங்களும், மாவட்ட அளவில் ஐந்து முக்கிய கலாச்சார நகரங்களும், 80க்கும் மேற்பட்ட கிராமங்கள், பாரம்பரியமான சீன கிராமங்கள் என்று திபெத்திய கிராமங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இன சிறுபான்மை கிராமங்கள் என்ற பட்டத்தை 29 கிராமங்கள் பெற்றுள்ளன.

பொதுவாக கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை தாங்கி நிற்கக்கூடிய பல இடங்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கும். அவற்றை பல நாடுகள் பாதுகாப்பார்கள் பல நாடுகள் பராமரிப்பற்று கைவிட்டு விடுவார்கள். அமெரிக்காவின் படையெடுப்பால் ஈராக், லிபியா, சிரியா போன்ற பல நாகரிகத் தொட்டில்கள் சிதைக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் சுடுகாடாக மாற்றி வருகிறது. திபெத்தில் இப்படிப்பட்ட இடங்களை உள்ளூர் அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து கண்டுபிடித்து பதிவு செய்து உள்ளன. திபெத்திய பிராந்தியத்தில் 4468 வரலாற்று தளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 2373 கலாச்சார நினைவுச் சின்னங்கள் அரசாங்க அமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 70 கலாச்சார சின்னங்கள் மத்திய அரசின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. திபெத்தில் இருக்கக்கூடிய எந்த விதமான கலாச்சார வரலாற்றுச் சின்னங்களும் இதுவரை அழிக்கப்படவில்லை. இதற்கு மேலாக பொட்டலா அரண்மனை வரலாற்று குழுமம் அமைக்கப்பட்டது. இந்த அரண்மனை குழுமம் பட்டியலிடப்பட்டுள்ள அரண்மனைகளை உலக பாரம்பரிய பட்டியலில் பதிவு செய்து உள்ளனர். எண்ணற்ற மடாலயங்கள் கட்டிடக்கலையிலும் ஓவியங்களிலும் சிறந்து விளங்குகிறது வரலாற்றை காட்சிப்படுத்துகிறது. அவற்றை சீரமைத்து புதுப்பித்து பாதுகாக்கும் வேலைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு செய்து வருகிறது.

இந்தப் பணியின் தொடர்ச்சியாக நவீன வசதிகளை பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டு முதல் 1,00,000க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற கலாச்சார நினைவு சின்னங்களை டிஜிட்டல் காப்பகத்தின் மூலம் பாதுகாத்து வருகின்றனர். மேலும் மிக முக்கிய கண்டுபிடிப்பாக விளங்குகிற தேயிலை இலைகளில் எழுதப்பட்ட மார்கிஸ் எழுத்து முறைகளையும், அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 1800 ஆண்டுகளுக்கு முந்தைய பறவை, சில விலங்குகள் திபெத் பிராந்தியம் பட்டு சாலைகள் மூலமாக சீனாவின் இதரப் பகுதிகளுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி இருந்தது என்ற வரலாற்றையும் பாதுகாத்து வருகிறார்கள். திபெத்தில் இருக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பில் ஒரு இடத்தை சீனாவின் பத்து முக்கிய அகழ்வாராய்ச்சி இடங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. சீன நாகரிகத்தின் சிறப்பின் ஒரு பகுதியாக பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை வரலாற்றின் சின்னமாக போற்றி வருகிறார்கள்.

திபெத்தில் மில்லியன் கணக்கான அடிமைகளை விடுதலை செய்யப்பட்டதின் நினைவாக பெரும் நினைவு மண்டபத்தை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உள்ளனர். வரலாற்றின் நினைவுகள் அழிந்து போகாமல் நினைவு கூறுவதாக அவை உள்ளது. திபெத் பிராந்தியத்தின் இரண்டு பீடபூமிகளை இணைக்கும் பெரும் சாலைகளை அமைப்பதில் இறந்தவர்களுக்காக நினைவு மண்டபத்தையும், திபெத் வரலாறு பற்றிய கண்காட்சி மண்டபத்தையும், பொட்டலா அரண்மனையின் கண்காட்சி, அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதற்கான நினைவுச் சின்னமாக சியான்சியில் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து மடிந்த திபெத்தியர்களின் நினைவுச் சின்னங்களையும், புரட்சிகர போராளிகளின் தியாக சின்னத்தை லின்ஸோவிலும் அமைத்து உள்ளார்கள். திபெத்திய விடுதலையிலும் வளர்ச்சியிலும் சீன விடுதலை ராணுவத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் நினைவு கூறக்கூடிய பல்வேறு விதமான நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் கூடவே சீனபண்புகளுடன் கூடிய சோஷலிசத்தை முன்னெடுத்த செல்லக்கூடிய முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, சீன மக்கள் குடியரசின் வரலாறு, 1978ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட சீர்திருத்தம் மற்றும் திறப்பு கொள்கையின் வரலாறு, சோஷலிச வளர்ச்சியின் வரலாறு என அனைத்தும் கல்வி கலாச்சார நடவடிக்கையில் மூலமாக திபெத்திய மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. திபெத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களின் அதிகாரிகளும், மக்களும் நமது தேசம், நமது நாடு, நமது வரலாறு, கலாச்சாரம் ,நமது மதம், பற்றிய புரிதலை சரியான முறையில் வளர்த்துக் கொள்ள மேற்கண்ட கலாச்சார நடவடிக்கைகள் பெரும் உதவி செய்துள்ளது.

திபெத்திய மக்கள் பயன்படுத்திய பொருட்கள், கலாச்சார பொருட்கள், பாரம்பரியமாக பயன்படுத்திய கருவிகள், அனைத்தையும் பாதுகாப்பதற் காக சீன மக்கள் குடியரசு 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 325 மில்லியன் யுவான்களை ஒதுக்கீடு செய்து பாதுகாக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி அளித்து பாதுகாத்து வருகிறது. சீனாவின் நூலகங்களில் திபெத்திய வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் என அனைத்தும் அடங்கிய தொகுதிகள் முழுமையாக வைக்கப்பட்டுள்ளது. திபெத்தை 618 ஆம் ஆண்டுகளிலிருந்து ஆட்சி செய்தவர்கள் முதல் செம்படைகளால் விடுதலை செய்யப்பட்ட காலம் வரையிலான பிரம்மாண்டமான வரலாறும் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெரும் நகரங்கள் அருங்காட்சியங்கள் மண்டபங்களைக் கடந்து, திபெத்தில் ஐந்து அடுக்கு பொது கலாச்சார சேவை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக திபெத்திய பிராந்தியத்தின் அனைத்து நகரங்களிலும். மாவட்டங்களிலும் நூலகங்கள். மக்கள் கலை அரங்குகள். அருங்காட்சியங்கள். கலாச்சார மையங்கள். கலாச்சார செயல்பாட்டு நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திவ்ய பிராந்தியத்தில் பத்துக்கு மேற்பட்ட தொழில் முறை நிகழ்த்து கலை குழுக்கள் இருக்கிறது. மாவட்ட அளவில் 76 கலை குழுக்களும், பகுதி நேர அளவில் செயல்படக்கூடிய திபெத்திய ஒபேரா நாடகக் குழுக்களும் செயல்படுகிறது. இதற்கு அடுத்து டவுன்ஷிப்களில் 395 கலைக் குழுக்கள் உள்ளது. நிர்வாக கிராமங்களில் 5492 மக்கள் கலை குழுக்கள் செயல்படுகிறது. கலைகுழுக்கள் மூலமாக கலாச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. இந்த குழுக்களில் மொத்தம் ஒரு லட்சம் தொழில் முறை மற்றும் அமெச்சூர் கலைஞர்கள் உள்ளனர்.

வானொலி தொலைக்காட்சி திரைப்படம்

திபெத்திய பிராந்தியத்தில் திரைப்படங்கள் வெளியிடுவதும், தொலைக்காட்சி பயன்படுத்தக்கூடியவர்களும், வானொலி பயன்படுத்தக் கூடியவர்களும் வேகமாக அதிகரித்து வருகிறார்கள். திபெத்திய மக்கள் தொகையில் 99 சதவீதம் மக்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பயன்படுத்துகிறார்கள். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் திபெத்தில் 191 திரையரங்குகள் இருக்கிறது. இவை தவிர 478க்கு மேற்பட்ட டிஜிட்டல் திரைப்பட வசதிகள் செயல்படுகிறது. திபெத்திய சிறுபான்மை மொழியிலிருந்து 80க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பிரதான மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்லது டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. வானொலி தொலைக்காட்சி திரைப்படங்களின் மூலமாக திபெத்திய மக்களின் வருமானம் அதிகமாகி உள்ளது

கலாச்சார துறைகளில் வேலை வாய்ப்பு

கலாச்சார துறைகளின் செயல்பாட்டால் அவை நிறுவனப் படுத்தப்படுகிற பொழுது வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. தனித்துவமான பண்புகளைக் கொண்ட கலாச்சார துறையின் வளர்ச்சியை விரிவு படுத்துவதற்காக கலாச்சார மற்றும் சுற்றுலாவை ஆழமான முறையில் ஒருங்கிணைத்து உள்ளார்கள். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 8,000 மேற்பட்ட கலாச்சார நிறுவனங்களை பதிவு செய்து உள்ளார்கள். இந்த நிறுவனங்கள் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது. கலாச்சாரம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் இந்தக் காலத்தில் மட்டும் 6.3 பில்லியன் யுவான் வருமானம் பெறப்பட்டுள்ளது. திபெத்திய பிராந்தியத்தில் நான்கடுக்கு முறைகளில் 344 கலாச்சார மாதிரி பூங்காக்களும், தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 13 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் 91 கலாச்சார திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். இவற்றின் மொத்த முதலீடு 50 பில்லியன் யுவான் ஆகும். திபெத்திய கலாச்சாரத்தை அனைத்து வகைகளிலும் மேம்படுத்தி பாதுகாத்து வளர்ச்சி அடையக்கூடிய செயலை சீன மக்கள் குடியரசு சீன பண்புகளுடன் கூடிய சோஷலிச அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது.

விளையாட்டில் வீரர்களின் வருகை

திபெத்திற்கென்று பாரம்பரிய விளையாட்டுக்கள் இருக்கிறது. இந்த விளையாட்டுகளை மேம்படுத்தி வருகிறார்கள். மலை விளையாட்டுக்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இவற்றுக்கான அனைத்து விதமான வசதிகளையும் திட்டமிடலில் கொண்டு வந்து செயல்படுத்துகிறார்கள். இதர விளையாட்டுப் போட்டிகளிலும் திபெத்திய விளையாட்டு வீரர்கள் படிப்படியாக தங்களது செயல் திறனை அதிகப்படுத்தி வருகின்றனர்.

 

சர்வதேச விளையாட்டுக்கள் மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளில் திபெத்திய பிராந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டங்களின் மூலம் திபெத்திய இளைஞர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளில் 241 பதக்கங்களை பெற்றனர். 2018 ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீரர் டோப்ஜி ஆண்கள் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்றார். சீனா இதுவரை அடைந்த வெற்றிகளில் இதுவும் முக்கியமானதாகும். இவர் திபெத்திய விளையாட்டு வீரர். இதேபோன்று பனி சறுக்கு, மலை ஏறுதல், ஓட்டப்பந்தயம் போன்றவற்றிலும் திபெத்திய வீரர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். 2021 ஆண்டு நடைபெற்ற 14 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் திபெத்திய பிராந்திய விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்றனர். திபெத் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் அவர்கள் திபெத்திற்கு வெளியில் நடைபெறக்கூடிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற ஆரம்பித்து விட்டனர். புரட்சிக்கு முந்தைய திபெத்தில் இவையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

திபெத்திய வளர்ச்சிகளில் உள்கட்டமைப்பு. வேலைவாய்ப்பு. பொருளாதார வளர்ச்சி. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன். திபெத்தின் கலாச்சார வளர்ச்சி மிக முக்கியமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. பாரம்பரிய கலாச்சார மதிப்புகளை முதலாளித்துவ அரசுகள் அழித்தும் வருகிற பொழுது அதை பாதுகாக்க கூடிய பணியை சீன மக்கள் குடியரசு செய்து வருவதுடன் திபெத்தை சீன சோஷலிசத்தின் ஒரு பகுதியாக சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறது.

அ.பாக்கியம்

 

49 திபெத்: கலாச்சார பாதுகாப்பும் வளர்ச்சியும்

அ.பாக்கியம் திபெத்திய மக்களின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சீன கம்யூனிஸ்ட் அரசு அழித்து வருகிறது என்றும் , சீனாவின் ஹான் இன கலாச்சாரத்...