
(பின்னூட்டங்கள் இணைத்து மேம்படுத்தப்பட்டபதிவு)
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் மாதம் 30,31, மற்றும் ஏப்ரல் 1 மூன்று நாட்கள் நடை பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டேன். மாநாடு நடை பெற்ற ராஜா முத்தையா மன்றத்தில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு தினசரி காலை மாலை சென்று வந்து கொண்டிருந்தோம்.
மதுரை கோரிப்பாளையத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஒரு முறை சென்ற பொழுது சில நினைவுகள் வந்தது. மீண்டும் மீண்டும் அந்த இடத்தை கடந்து செல்கிறது பொழுதெல்லாம் பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்தது. கோரிப்பாளையத்தில் ஒவ்வொரு கோணத்திலும் அன்று நடைபெற்ற அந்த மிகப்பெரும் போராட்டம் எனது எண்ணத்தில் நிழலாடியது.
1995-மே மாதம் 31-ம் தேதி மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கி மருத்துவ சேவையை விரிவுபடுத்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக் குழு பெரும் திரள் ஊர்வலத்தை அறிவித்தது.
மதுரை நகரில் உள்ள இந்த மருத்துவமனைதான் தென்மாவட்டங்கள் அனைத்திற்கும் எளிய மக்கள் சிகிச்சை பெறவேண்டிய மருத்துவமனையாக இருந்தது. ஆனால் அந்த மருத்துவமனை மிக மிக மோசமான நிலையில், மருத்துவர்கள் குறைவு, மருந்துகள் குறைவு, இட வசதி இன்மை, போதிய அளவு மருத்துவ கருவிகள் இல்லை, சுகாதாரமற்ற நிலைமை, என்று எண்ணற்ற குறைபாடுகளோடு காட்சியளித்தது. இருந்தாலும் ஏழை மக்களின் ஒரே ஆதாரமாக இந்த மருத்துவமனைதான் வந்தது. நீண்ட நாட்கள் மனு கொடுத்து, கையெழுத்து இயக்கம் நடத்தி, சுவரொட்டி இயக்கம் நடத்தி அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
காவல்துறை இந்த இயக்கத்திற்கு அனுமதி மறுத்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர்வலம் தொடங்கும் இடமான கோரிப்பாளையத்தில் குவிந்தனர். கோரிப்பாளைய சதுக்கம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. இந்த இயக்கத்திற்கு அப்போதைய மாவட்ட நிர்வாகிகள் விக்கிரமன், அண்ணாதுரை, மா.கணேசன் விஜயராஜன், இரா.லெனின் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமை ஏற்றனர். மாநிலத் தலைவராக செயல்பட்ட நான் (பாக்கியம்) ஊர்வலத்தை துவக்கிவைத்திருந்தேன். தோழர் நன்மாறன் அவர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
மே-31 அக்னி வெயில் சுட்டெரித்தது. தார் சாலைகள் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த வெப்பத்தை விட இளைஞர்கள் எழுப்பிய கோஷங்களின் வெப்பம் உயர்ந்து நின்றது. பொறுக்கமா காவல்துறை? அனுமதி மறுத்தும் நடத்துவதா? நடத்தினால் ஜனநாயகம் அல்லவா வென்றுவிடும்? என்ற கேள்வி அரசின் அடக்குமுறை கருவியான காவல்துறைக்கு எழுந்தது. கண்மூடித்தனமாக ஆளுயர இரும்புபூண் அணிந்த தடிகளால் வெறிகொண்டு தாக்கினார்கள்.
காவல்துறை தடியால் அடித்ததை விட அந்தப் பகுதியில் கடைகள் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து வீசினர். தடியால் அடிப்பதையும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி தாக்குதலை மட்டுப்படுத்திய பொழுது காவல்துறை கற்களை பயன்படுத்தியது. நிராயுதபாணியாக இருந்த இளைஞர்கள் அதையும் எதிர்கொண்டார்கள். பலதோழர்களே கல்லடியில் இருந்து காப்பதற்காக முயற்சிகளை எடுத்தார்கள்.
நானும், நன்மாறன் மற்றும் தியாகி லீலாவதி உட்பட கல்லெறிகளுக்கும் தடியடிகளுக்கும் நடுவில் அதிகாரிகளோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இந்த தாக்குதல் சம்பவம் கேள்விப்பட்டு அப்போது மதுரை மாநகர மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த தோழர் பி.மோகன் அவர்கள் சம்பவ இடத்திற்கு சைக்கிளில் வந்து சேர்ந்தார்.
தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கிற பொழுது சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே வந்து என்னிடம் சாவியை கொடுத்து சைக்கிளை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் நிறுத்திவிட்டு மாநில தலைமைக்கு தகவல் சொல்லிவிட்டு நீங்கள் சென்னைக்கு புறப்படுங்கள் என்று சாவியை என்னிடம் கொடுத்தார். நான் வாங்க மறுத்து விட்டேன் இந்த போராட்டத்தில் நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி மறுத்துவிட்டதால் தோழர் நன்மாறன் அவர்களிடம் சைக்கிள் சாவியை ஒப்படைத்து மாவட்ட குழு அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவிக்க அனுப்பி வைத்தார்.
தோழர் வன்னியன் என்ற வாலிபர் சங்க தோழரை பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்து கொண்டு அரண் அமைத்து தார் சாலையில் போட்டு அடித்துக் கொண்டிருந்தனர். நானும் மோகனும் தடுப்பதற்கு முயற்சி செய்த பொழுது, தோழர் லீலாவதி உட்பட பல பெண்கள் காவல்துறையின் அரணை உடைத்து உள்ளே புகுந்து வன்னியனை அடித்ததடிகளை தடுத்திட அவர்மேலே படுத்து முறியடித்தனர்.
வன்னியனின் சட்டையை கழட்டிப் பார்த்தால் கழுத்தில் இருந்து உள்ளங்கால் வரை வரியாக இரத்தக் கலரில் காயங்கள் இருந்தன. அந்தக் காட்சி என் கண் முன் இன்று வரை அகலவில்லை அவர் மேலே படுத்த பெண்கள் மீதும் தடியடிகள் விழுந்தது. மோகனுக்கும் எனக்கும் கால்களில் தடியடி விழுந்தது.
தோழர் விக்ரமன் மண்டை உடைந்து தையல் போடப்பட்டது. சிம்மக்கல் வீரமுத்துவிற்கு மண்டை அடிபட்டது, அண்ணா தோப்பு முத்து கைஉடைந்து ஆறு மாத காலம் அவருக்கான வைத்தியத்தை அந்த கிளை பார்த்துக் கொண்டது. தோழர்கள் அண்ணாதுரை முருகேசன், செல்வகுமார், சிவகுமார் உட்பட 25 தோழர்களுக்கு பலத்த ரத்தகாயம் ஏற்பட்டது. 28 பெண்கள் உட்பட 72 தோழர்கள் கைது செய்யப்பட்ட பெண்கள் தவிர பாக்கியம், மோகன் உட்பட 44 தோழர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 9 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டு செல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போடப்பட்டது.
சிறைச்சாலையில் 9 நாட்களும் மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. தோழர் மோகன் மதுரை சிறையில் இருந்து நமது தலைவர்கள் அனுபவித்த கொடுமைகளை விரிவாக எடுத்துப் பேசினார். அப்போது சிறைச்சாலையில் இருந்து ஒருவரை விடுதலை செய்தால் சிறைச்சாலையின் பிரதான வாயில் வரை இரு பக்கமும் காண்விக்ட் வார்டர்களும், காவலர்களும் தடியை வைத்து அடித்து துரத்துவார்கள். இனிமேல் இங்கு வரக்கூடாது என்று சொல்லி அடிப்பார்கள். அடி குறைவாக விழுவதற்காக பலரும் வேகமாக ஓடி வருவார்கள். நமது தலைவர்கள் அதை எதிர்த்து நடத்திய போராட்டத்தை மோகன் விளக்கினார். சிறைச்சாலையின் கொடுமைகளை உள்ளே இருக்கும் நிலைமைகளை பலரிடம் நான் உட்பட பேசிய போது இது எல்லாம் வெளியே பேச வேண்டாம் என்று சிறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
சிறையில் இருந்து எங்களுக்கு பிணையில் வெளி வருவதற்கான முயற்சிகளை மாநில செயலாளர் டி.ரவீந்திரன் அவர்களும் தோழர் இரா.லெனின் அவர்களும் மேற்கொண்டனர்.
இந்த தடியடி காவல்துறை தாக்குதல்கள் அனைத்து பத்திரிகைகளின் பேனர் செய்திகளாக மாறியது. தடியடி நடந்த உடனேயே நெல்லை, ஓசூர் மற்றும் பல தாலுகாக்களில் மறியலும் ஆர்ப்பாட்டமும் தன்னெழுச்சியாக நடைபெற்றது. பெரும்பாலான இடைக்கமிட்டிகளில் கையெழுத்து போஸ்டர்கள் பேருந்துகளில் நிரம்பி வழிந்தது.
மாநில குழு அறைகூவலுக்கு இணங்க ஜூன் 5-ம்தேதி 153 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 15000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு மதுரை மண்ணில் வாலிபர் சங்கம் நடத்திய மாபெரும் போராட்டம் முத்திரை பதித்த போராட்டமாக அமைந்தது. அந்த போராட்டம் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனையின் சீர்கேடுகளை கண்டித்து இயக்கம் நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது. போராட்டத்திற்குப் பிறகு ராஜாஜி மருத்துவமனைக்கு அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி மேம்படுத்தப்பட்டது. மதுரை மக்களின் மறக்க முடியாத நினைவாக இது மாறியது.
தோழர் மோகன் அவர்கள் கட்சியின் மாநில குழு உறுப்பினராக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக, இருந்து பணியாற்றியவர். மாநில வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர், நிர்வாகியாக செயல்பட்டவர். அவரது பணிகள் எத்தனை முகநூல் பக்கத்தில் எழுதினாலும் அது நிறைவடையாது. காரணம் மோகன் அவர்கள் முகநூல் வழியாக கட்டமைக்கப்படாத, மக்களின் நேரடி தொடர்புகளால் கட்டமைக்கப்பட்ட தலைவராக செயல்பட்டார்.
கோரிப்பாளையத்தை கடந்து செல்கிறது அந்த சதுக்கத்தில் இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்த போராட்ட களத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஓடிக்கொண்டே இருந்தது.இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த மாத இளைஞர் முழக்கத்தில் வசந்த கோகிலன் எழுதிய கவிதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அ. பாக்கியம்.
"அது" களுக்கு தெரியாது
நம் தோழர்கள் சிந்திய ரத்தம்
எத்தனை உயிர்களை
எமனிடமிருந்து மீட்டிருக்கும் என்று.
முறிந்த எம் தோழர்களின்
முழங்கைகள்
வெள்ள நிவாரணப் பணிகளில்
எத்தனை குடும்பத்தை
கரை சேர்த்து இருக்குமென்று.
போக்குவரத்து நெரிசலில்
நசுங்கி செத்தால் என்ன
எங்கள் முதல்வர்
ஹெலிகாப்டரில் அல்லவா
தோழியோடு பயணிக்கிறார்.
அரசு ஆஸ்பத்திரியில்
மருந்து இல்லாவிட்டால் என்ன
எங்கள் முதல்வர்
மருத்துவம் பார்க்க
அமெரிக்கா செல்வார்
போக்குவரத்து நெரிசலில்
அரசு ஆஸ்பத்திரிகளில்
பாதிக்கப்படுவது போலீசும் தான்
"அது"களுக்கு தெரியாதா என்ன?
ஏசி கக்கூசை
காவல் காப்பவர்களுக்கு
ரத்தவாடை
ரசிக்கும்படி இருந்திருக்கிறது
மாதர்களின் உடல்
லட்டியால் உரித்து எடுக்கப்பட்டது
உள்ளமோ
வார்த்தைகளால்
மானபங்கப் படுத்தப் பட்டது
பன்றியின் மலக்குடலில்
ஜனித்த ஜென்மங்களுக்கு
தாய்மையின் மகத்துவம்
தெரிந்திருக்க நியாயமில்லை
சட்டமும் ஒழுங்கும்
கெடவே கூடாது
டான்சி நிலத்தை
சுருட்டிய சட்டமும்
ஜெ சசி உறவின்
ஒழுங்கும்
கெடாமல் இருக்க
தொடர்ந்து பாதுகாப்பு கொடுங்கள்.
ஒன்று மட்டும் உறுதி
இந்த ஆட்சியின்
இறுதி யாத்திரைக்கு
மே 31 மதுரையில்
மரண ஓலை வாசிக்கப்பட்டு விட்டது.
வசந்தகோகிலன்
நிரூபன் கணேசன்
உறுதிமிக்க போராட்ட வரலாறை படிக்கும்போது புரட்சிகரமான உணர்வால் எழுப்பபட்ட நமது இயக்கத்தின் பாரம்பரியத்தை புரிந்துகொள்ள முடிகிறது. நெகிழ்ச்சியான அனுபவ பகிர்வு. மகத்தான போராளிகள் மோகன், நன்மாறன் போன்றோரின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட வரலாற்றை தொடர்ந்து முன்னெடுப்போம். சிறை அனுபவத்தையும் எழுதுங்கள் தோழர்..
சிம்மக்கல் வீரமுத்து சிம்மக்கல் வீரமுத்து
அந்த மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுடன் நானும் ஒருவன் என்றுமே மறக்க முடியாத போராட்டக் களம் அதுஏனென்றால மே மாதம் 31ந்தேதி எனது பிறந்த நாளில் நடந்த போராட்டம்எனது உடலிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய கட்சி அலுவலகம் வந்து சேர்ந்தேன் தோழர்களின் உதவியோடு இந்த பதிவு செய்த உங்களுக்கு
வாழ்த்துக்கள் தோழர்
ஆண்டனி பால்
பாடப்படாத ஹீரோக்கள். மோகன், நன்மாறன் போன்ற அண்மைக்காலத் துணிச்சலான தலைவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும். அவசியம் பதிவு.
தினேஷ் குமார் எஸ்
இப்படிப்பட்ட வரலாற்று போராட்டங்களை இன்று நாங்கள் முகநூல் பதிவு மூலம் அறிய முடிகிறது தோழர்.... அடுத்து வரும் புதிய தோழர்களை அறியச் செய்வோம்
எம் பாரதி
அன்றைக்கு சிறையிலிருந்து 45தோழர்களில் எத்தனை பேர் தற்போது கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர்? தோழர் விக்ரமனிற்க்கு அடி பட்டது உண்மை. தையல் போடும் அளவிற்கு கிடையாது.மேலும் பல தோழர்கள் போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி கைதாகாமல் வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருந்தனர்
எம் சுந்தரம் தரம்
௮து சரி
. கட்சியின்23 வது மாநில மாநாடுமதுரையில் ௭ந்த இடத்தில் நடைபெற்றது விளம்பரத்திலும் பதிவிலும் இடம் பெறவில்லையே ஏன் ?
தனராஜ்
நீங்கள் எழுதுகிற எழுத்துகள் நாளைய
தலைமுறைக்கு அனுபவத்தையும் போராட்ட குணம் ஏற்படும் எனவே நாளைய தலைவர்களை உருவாக்க உங்கள் பதிவுகள் முக்கியமாக பார்க்கிறோம் தோழர் ...
கார்த்தி ரெட்கார்த்தி
விளம்பர யுக்தி மற்றும் சினிமா நடிகர்களால் தான் திராவிட கட்சிகள் ஆட்சி யை பிடித்தன
கம்யூனிஸ்டுகள் நடிகர்கள் அல்ல என்பதை 1995 ஆம் ஆண்டு மதுரை மக்கள் அறிந்து தான் வெற்றி தான் மறைந்த எம்.பி மோகன் அவர்களை மக்கள் மக்களவைத் தலைவராக/
Vasudevan
Arimuthu அப்போதய ஆட்சி யாளர்பற்றியும் கூறுக
Kandasamy Kumaravel
இந்த போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடந்தது . போராட்டத்தினால் தலைவர்கள் உருவானார்கள்.
ராமச்சந்திரன் எஸ்
போன்ற பதிவுகள் தொடரட்டும் தோழர்.
சுவாமிநாதன் ராமன்
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு தோழர். வரலாற்று அனுபவங்களை விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும். நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
ரமேஷ் பாபு
தொடர்ந்து உங்கள் அனுபவங்கள் எழுத்துக்கள் தோழர்
Narasimhan
Sankariah தமிழகத்தில் நடந்த வாலிபர் இயக்கத்தின் போராட்டங்களில் ஓருமழை கல் இந்த போராட்டம்.போராட்ட களத்தில் நின்றவர்கள் பின் சிறந்த மக்கள் ஊழியர்களாக உருவாகினர்
Thangaraj Woodwork வரலாறு படைத்த தோழர்களை வாழ்த்துவோம்
B R முரளி
சிறப்பான பதிவு தோழர்
சு போ அகத்தியலிங்கம்
மிக நல்ல பதிவு
ராஜா கலைஞர்
இந்திராய தெய்வானை பதிவு !
அருள்ராஜ் இளங்கோவன்
அந்த போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளான தோழரை மாநில மாநாட்டு அரங்கத்தில் பார்த்தேன் அப்போது இந்த போராட்டம் நினைவுக்கு வந்தது. நீ அந்த போராட்டத்தை நினைவுபடுத்திவிட்டாய், இந்த போராட்டத்தின் போது நானும் ரவீந்திரனும் dyfi cec கூட்டத்திற்கு சென்றிருந்தோம்.நீ விமானம் மூலம் கூட்டத்திற்கு வந்தாய் போராட்ட களத்தில் இருந்து வருகிறார் என சலீம் cec கூட்டத்தில் கூறினார்
மோகன்ராஜ் மாணிக்கம்
வரலாற்றின் அடிச்சுவடுகள் பின்னோக்கி பார்க்கும் போது மனதிற்கு மகிழ்வை அளிக்கிறது. களம் பல கண்டுகளப் போராளியாகத் திகழ்வது மட்டற்ற மகிழ்ச்சியே,தங்கள் பணி இன்னும் இச் சமூகத்திற்கு தேவைபடுகிறது. அவ்வகையில் தாங்கள் மார்க்ஸ் லெனின் காட்டிய பாதையில் புதிய பாரதம் படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் பலம் வயந்த கட்சியாக திகழ்ந்த சபதம் ஏற்று லட்சிய பாதையில் பணியாற்றி வாழ்கிறோம்.
நெல்சன் பாபு ஆண்டனி
கண்காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டிய நிகழ்வு
கருமலையான்
தொடர்ந்து இந்த மாதிரியான போராட்டத்தை பற்றி எழுத வேண்டும் தோழரே
தங்கமணி.மு. போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது!
கந்தசாமி குமரவேல்
இளைஞர் முழக்கம் A8 சைசுக்கு மாற்றி கலர் அட்டையில் கொண்டு வருவது என முடிவு எடுக்கப்பட்டது பழனியில் 1991 ஜனவரியில் நடந்த பிராக்ஷன் கூட்டத்தில் அன்றுதான்.நான் மறைந்த சக்தி கணபதியும் பாண்டியும் தொண்டராக வர சொன்னார்கள். ஈராக் போர் துவங்கியது இந்த கூட்டத்தில் அகத்தியலிங்கம் ரவி நீங்கள் பாண்டி ராஜகோபால் கருமலையன் ஜீஆர் தஞ்சை மார்க்ஸ் கலந்து கொண்டனர்
மீனாட்சி சுந்தரம்
அருமையான அந்த பதிவு இளைஞர்களை திரட்டும் கருவியாக இளைஞர் முழக்கம் இருந்தது. அதுபற்றியும் குறிப்பிடவும்
ராஜமாணிக்கம் வரதராஜன் நேரடி தொடர்புகளால் கட்டமைக்கப்பட்ட மக்கள் தலைவர் மோகன். அருமையானபதிவு தோழர்.
ஆனந்தன் நந்தன்
பணியைத் துவக்கிவிட்டீர்கள் தோழர் ஈபி. மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் களப்போராட்டத்தாலும் அர்ப்பணிப்பு மிக்க தோழர்க ளின் தியாகத்தினாலும் கட்டமைக்கப் பட்டது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற வரலாற்றுத் தரவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள் தோழர். நன்றி.
லெனின் சகாப்தம்
தோழரே! தேதி மாறவேண்டும். நடந்தது மே - 31-ம் தேதி
Hari Krishnan
இளம் தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும். காலத்தின் தேவை அறிந்து உணர்வு பெற்ற போராளிகளாக களம் காண தொடர்ந்து எழுதுங்கள் தோழர் எங்களை அர்ப்பணித்துக் கொள்வோம்.
புஷ்பராஜ்
வாலிபர் சங்கம் 80, 90 ஆண்டு வளர்ச்சியில் தோழர் நன்மாறன் K.CK தோழர் SP தோழர் பாக்கியம் தோழர் திராவிடன் மேலும் பல என் போன்ற குட்டி தலைவர்களுக்கு பங்குண்டு என்று நினைக்கும்போது தோழர் V.MSஉந்துசக்தியாக செயல்பட்டார் என்பதை மறக்கமுடியாது தோழர் SP நீங்கள் தொடர்நது DYFI ன் வரலாற்றை எழுதினால் இப்போது உள்ள இளம் தோழர்களுக்கு இது பயன்படும்.
தாரைப்பிதா சிறப்பு... எங்கும் நோக்கினும், எதிலும் அர்ப்பணிப்புமிக்க பணிகளால் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது தங்களைப்போன்றோரின் வாழ்க்கை. வீரமிகு நினைவலையிது.
மணிவண்ணன் மணி
நீங்கள் தமிழ் மாநில செயலாளராக இருந்தபோது 1991-ல் புதுச்சேரி அமைச்சர்களுக்கு எதிராக வாலிபர் சங்கம் கறுப்பு கொடிப்போராட்டம் .. அப்போது தோழர். புவனேசன் புதுச்சேரி செயலாளர்.தடியடி ...சிறை... தேசிய அளவில் செய்தி பரவியது...
கோபால்சாமி அப்பாசாமி
தோழர் நன்மாறன் அவர்கள்சொற்போரில் எறினா ரெயில் இறங்கின ஜெயில் என்பார் பெருமையில்லா தோழர்
ராஜன்குமார்
இரு பெரும் தலைவர்களும் மக்கள் மனதை வென்றவர்கள்
KG Baskaran வரலாறுகளை பதிவு செய்வது முக்கியம். தொடர்ந்து எழுதுங்கள்
ரமேஷ்பட் பேசுவோம் வாங்க
போராட்டத்தழும்பேறிய தியாகிகளுக்கு நெஞ்சார்ந்த வீரவணக்கம்
RTMuthu லால்சலாம்.இந்த சம்பவம் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்ததா? காவல்துறையின் அரணை உடைத்த லீலாவதி, சிறைவாசத்தில் கனல் மூட்டிய தோழர் மோகன், தோழர் நன்மாறன் போன்ற தோழர்களுக்கு வீரவணக்கம்.நீங்கள் இதை தெளிவாக பின்னணி சொல்லி, செய்தி நறுக்குகள் படங்கள் இருந்தால் பயன்படுத்தி சிறு நூல் ஒன்றை எழுதுங்கள்
Mevai Raja
அருமை, தோழர்...இது போன்ற ஏராளமான வரலாறு சம்பவங்கள் மறைந்து போய் விடும். எழுதுங்கள், புதியதலைமுறைக்கு தெரியாமலே போய் விடும்.
Balasupramaniyan Vnr
மறக்க முடியாத தோழர்கள் எத்தனையோ நினைவுகள் வீரவணக்கம் தோழர்களே Rama Moorthy தியாகத்தால் வளர்ந்த தியாகிகள்
எம் துரைப்பாண்டியன் முத்துசாமி போராட்டமே வாழ்க்கையாக வாழ்க்கையே போராட்டமாக புதிய புதிய இலக்குகளும் புதிய புதிய போராட்டங்களுமாக வாழ்க்கை நீண்டு கொண்டே போகிறது. வீரஞ்செரிந்த அனுபவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.
Vijayakumar.M "களப்போராட்டங்கள்" எனும் தலைப்பில் புத்தகமாக் குங்கள்
வாசுதேவன்
தோழர் பாக்கியம் அவர்கள் பதிவுக்கு நன்றி!
1ம் தேதி மாநாடு முடிந்து தோழர்கள் இரவு ரயில் நிலையம் போக காத்திருந்தனர். பல தோழர்கள் மாநாட்டு நுழைவாயில் படிகளில் அமர்ந்து இருந்தனர். , என்னோடு வெள்ளை வேஸ்டிகட்டிய, தடித்த தேகமுடைய இடதுகாலை ஊன்ற முடியாமல் ஊன்றி நடந்துவந்தார் |மாநாட்டு கொடிமரத்தை கழட்டி வேனில் ஏற்றி போக்குவரத்து TNSTC அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்ட அந்த இரவு நேரத்திலும் உதவி செய்துகொண்டிருந்தார்.
அந்த தோழர். அங்கே அமர்ந்து இருந்த வெளிமாவட்ட தோழர்களை தோழரே எழுந்திருங்க |கொடி மரம் சாய்ந்து மேலே விழுந்துவிட்டால் ஆபத்து என்று செல்லிக்கொண்டே உட்காரவே முடியாமல் உட்கார்ந்து கீழே கட்டப்பட்ட கட்டை அவிழ்த்துகொண்டே நான்தான் நேற்றும் கட்ட வெண்புறாவுக்கு உதவினேன் என கூறி, அந்த கொடிமரத்தை ஓரமாக தூக்கி வைக்க.உதவினார். நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் நான் வேனில் அனுப்பிவிட்டு போகிறேன் என சொன்னார். என் மனம் கேட்கவில்லை. 9 மணிதானே ஆகிறது. டீ சாப்பிடலாம் என சாப்பிட்டுவிட்டு விடைபெற்றேன்.அந்த நபர்தான் வன்னியன். முதுகெல்லாம் வார், வாராய் காவலர்களால் தாக்கப்பட்டவன்னியன். வன்னி என்று எங்களால் அழைக்கப்படும் நரிமேடு பகுதியை சேர்ந்த வன்னியன்.
தனராஜ்
நீங்கள் எழுதுகிற எழுத்துகள் நாளையதலைமுறைக்கு அனுபவத்தையும் போராட்ட குணமும் ஏற்படும் எனவே நாளைய தலைவர்களை உருவாக்க உங்கள் பதிவுகளை முக்கியமாகப் பார்க்கிறோம் தோழர் ...