Pages

வெள்ளி, ஜூலை 22, 2022

குடிமைப் பணிகளால் குலைந்து போய் கிடக்கும் சென்னை:


பாதுகாப்பான நகரம் என்றால் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறாத அச்சமற்ற வாழ்க்கை இருப்பதற்கு அர்த்தம் தான் பாதுகாப்பான நகரம் என்பது நமது பொது புத்தியில் பதிவாகி இருக்கிறது. 

இவையெல்லாம் சென்னையில் குறைவாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. மழை நீர் வடிகால்வாய் பள்ளத்திலும், மெட்ரோவாட்டர் பள்ளத்திலும், இரு சக்கர வாகனங்கள், கார்கள், மாடுகள், மனிதர்கள், விழுந்து செத்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்வுகளாக மாறிக்கொண்டே இருக்கிறது.

 இதுவும் பாதுகாப்பற்ற நகரம் என்பதற்கான அடையாளங்களே. இதன் முலம் நடைபெறும் விபத்துகளும் அதிகமாக உள்ளன.

தற்போது சென்னையில் குடிமராமத்து பணிகளை அரசு தீவிரமாக நடத்தி வருகிறது வரவேற்கக் கூடியது தான். 

ஆனால் மராமத்து பணிகள் சரியான திட்டமிடல் இல்லாததால் சென்னை சீர்குலைந்து கிடக்கிறது. அதே நேரத்தில், ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள், உள்ளூர்கவுன்சிலர்கள் பணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் இந்த விபத்துகள் தொடர்கின்றன.

ஒரே நேரத்தில் ஆறுக்கும் மேற்பட்ட துறைகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர்வடிகால்வாய் அமைப்பது, பாதாள சாக்கடை, நிலத்தடியில் மின்சார கேபிள்கள் பதிப்பு, சாலைகள் அமைத்தல், பாலம் கட்டுதல், மெட்ரோ ரயில் திட்டங்கள் என பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சென்னை தாம்பரம் ஆவடி மாநகராட்சிகளில் 170 சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது, மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக 644 இடங்களில் பள்ளங்கள் வெட்டப்பட்டு கிடக்கிறது. மெட்ரோ வாட்டர் 250 இடங்களில் குழிகளை வெட்டியுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் 251 சாலைகள், ஆலந்தூரில் 209 பெருங்குடியில் 186 சாலைகள் படுமோசமாக உள்ளன. 

சென்னை மாநகராட்சியில் உள்ள பெரிய நீளமான சாலைகளில் 80 சதவீதம் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

 அதே நேரத்தில் 2000 க்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது. இவற்றில் 1737 உட்புற சாலைகள் அதாவது 257.9 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகளை சீரமைக்க அரசு 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதில் 169.3 கோடி முதல் கட்டமாக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் விதிகளை கடைபிடிக்காமல், வெட்டப்படும் மண் கற்களை சாலையில் போடுவதும் பள்ளங்களை சுற்றி தடுப்பரணங்களை அமைக்காமல் இருப்பதும் அன்றாட நிகழ்வுகளாக உள்ளது. 

விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்தாலும் அது முழுமையாக அமலாவதில்லை. 

அதிகாரிகள் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை.

உதாரணமாக, நெற்குன்றத்தில் தடுப்பணைகளை வைக்காத ஒப்பந்ததாரர்களிடம் தினசரி 500 ரூபாய் என்று நான்கு நாளைக்கு 2000 மட்டும் வசூலித்து அபராதத்தை முடித்துக் கொண்டார்கள். இவையெல்லாம் அதிகாரிகளின் சித்து விளையாட்டுக்கள்.

மின்வாரியம் மின்சார கேபிள்களை புதைப்பதில் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை. மின்னழுத்த கேபிள்களை ஒரு அடி ஆழத்துக்கு கீழே பதிக்க வேண்டும் என்ற விதியை கடைப்பிடிக்காமல் அரை அடி கூட பள்ளம் தோண்டாமல் பதித்து விடுவது, நடைபாதைகளில் மேலே போட்டு செல்வதும் அன்றாட காட்சிகள். 

இதைவிட ஆபத்தானது உயர் மின்னழுத்த கேபிள்களை ஒரு மீட்டர் ஆழத்தில் பதிக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் அதை அடிஆழத்தில் கூட பதிக்காமல் தரையில் மேலேயே போட்டிருக்கக்கூடிய காட்சிகளை நாம் அனைவரும் பல இடங்களில் காணலாம்.

சாலைகளை வெட்டுவதற்கு முன்பாக அதை மீண்டும் சீரமைப்பதற்கு முன் மாநகராட்சிக்கு முன் தொகை செலுத்திய தான் வெட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. பிரதான சாலைகளில் வெட்டுவதற்கு சென்னை மாநகராட்சியும், உட்புற சாலைகளை வெட்டுவதற்கு மண்டல அலுவலகத்திலும் பணம் செலுத்த அனுமதி பெற வேண்டும்.

மழை நீர் வடிகால்வாய் துறை, மெட்ரோ வாட்டர், மின்வாரியம் என யாரும் அனுமதி பெறுவதில்லை என்ற புகார்கள் தான் உள்ளது. சமீபத்தில் மாநகராட்சி பொறியாளர்கள் ஒரு புகாரை மேல் இடத்திற்கு தெரிவித்துள்ளனர்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் அனுமதியின்றி சாலைகளை வெட்டுவதற்கு உதவிசெய்கின்றனர்.

பணிகள் முடிந்த இடத்தில் இருக்கக்கூடிய கழிவுகளை அப்புறப்படுத்தாத நிலைமை உள்ளது. எங்கு பள்ளம் வெட்டப்பட்டது என்பது எங்கு மூடி இருக்கும் அன்றாட விஷயங்களை அறிந்து கொள்ள கூடிய அளவுக்கு மாநகராட்சியின் செயல்பாடுகள் இல்லை.

திட்டங்கள் அமலாவதற்கு முன்பாக துறைகளுக்கிடையிலான கூட்டங்களை நடத்தி அவற்றில் முறையான திட்டமிடலை உருவாக்காதது இந்த நிலைமைக்கு காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒருங்கிணைப்பு குறைபாடுகளால் விபத்துக்கள் அதிகமாகியுள் ளது. 2021-ம் ஆண்டு மாதம் தோறும் 300 சாலை விபத்துகள் நடந்தது. இதில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சிறிய காயங்கள் ஏற்படுத்தக்கூடிய விபத்துகள். 2022 ஆம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் 2400 க்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 

சாலைகளில் அள்ளிப் போடப்பட்டுள்ள மராமத்து பணிகளின் கழிவுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. அத்தனை பணிகளும் ஏக காலத்தில் நடப்பதால் சென்ற ஆண்டைவிட குறைவான வாகனங்கள் சாலைகளில் சென்றாலும் சென்றடையும் நேரம் அதிகமாக உள்ளது உயிர் காக்கும் ஆம்புலன்சுக்கும் இந்த நிலைதான்.



அரசின் முடிவுகளை அமுலாக்குவதற்கான துறைகள் சீர் கெட்டுப்போய் கிடக்கிறது. இவற்றை சரிபடுத்தாமல் மக்கள் திட்டங்கள் முழுமையாக நிறைவேறாது. அத்தனை திட்டங்களும் அறைகுறையாக நடந்து பெண்கள் பணம் கொள்ளையடிக்கப்படும்.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...