Pages

செவ்வாய், ஜூலை 05, 2022

எரியிற வீட்ல புடுங்குனது லாபம்: இல்லை எல்லாமே லாபம்தான். அ.பாக்கியம்

 


பெருந்தொற்று காலத்தில் பெரும் நிறுவனங்களின் பெரும்கொள்ளை இந்த சொலவடையின்  அர்த்தத்தை மாற்றி அமைத்திருக்கிறது. நாடேபொது முடக்கத்தினால் செயலற்று கிடந்த பொழுது, இந்த பெரு நிறுவனங்கள் மட்டும் எப்படி இவ்வளவு லாபத்தை சம்பாதித்தார்கள் என்பது பலருக்கும் புரிபடாத கேள்வியாக இருக்கிறது.

முதலாளித்துவ பொருளாதார சுரண்டலை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த செயல்பாடு இதுதான் என்பதை காரல் மார்க்ஸ் தனது மூலதனத்தில் புட்டு புட்டு வைத்திருப்பார். சென்டர் ஃபார் மானிட்டரின் இந்தியன் எகனாமிக்ஸ் (CMIE) வெளியிட்டுள்ள தரவுகள் இதை அம்பலப்படுத்துகிறது.

முன்பு பம்பாய் பங்கு சந்தை என்று அழைக்கப்பட்ட தற்போது  BSE என்று அழைக்கப்படுகிற அமைப்பின் பட்டியலிடப்பட்ட 4700 பெரும்  நிறுவனங் களில்  3288 நிறுவனங்கள் இரண்டாவது பெரும் தொற்று காலமான 2021-22 ல் ருபாய் 9.3 லட்சம் கோடி லாபத்தை சம்பாதித்து இருக்கிறார்கள். இது பெரும் தொற்றின் முதலாம் ஆண்டு விட 70% அதிகமாகும்.  பெரும் தொற்றின்  முதல் ஆண்டாகிய 2020 -21 ல்  ரு.5.5 லட்சம் கோடி லாபத்தை சம்பாதித்தார் கள்.

பெரும் தொற்று ஏற்படு வதற்கு முந்தைய புத்தாண்டு களில் அதாவது 2010 -11 முதல் 2019-20ம் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டிய சராசரி லாபத்தை விட மூன்று மடங்கு அதிகமாக பெருந்தொற்று  காலத்தில் பெரு முதலாளிகள் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால் முதலாளித் துவத்தின்  கோர முகத்தை புரிந்து கொள்ள முடியும்.

பெரும் தொற்றுக் காலத்தில் இந்தியாவிலுள்ள 84 சதமான குடும்பங்க ளின் வருமானம் குறைந்து போனது என்று ஆக்ஸ்பாமின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை இதேகாலத்தில் 102 லிருந்து 142 ஆக உயர்ந்தது மட்டுமல்ல, அவர்களின் கூட்டு லாபம் 23.14 லட்சம் கோடியிலிருந்து 53.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் 4.6 கோடி இந்திய மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டனர்

எப்படி இந்த லாபத்தை சம்பாதித்தார்கள்?

தொற்று நோய் மற்றும் பொதுமுடக்க காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. புதிய நியமனங்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை அதிகரித்தனர். குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒரே வேலையை செய்ததால் தொழிலாளர்கள் உற்பத்தி திறனை அதிகரித்து உழைப்பை மலிவாக்கி விட்டனர். இது முதலாளிகளின் லாபத்தை அதிகப்படுத்தியது.

இக்காலத்தில் கச்சா பொருள் விலை 40.1% மின்சாரம் மற்றும் எரிபொருள் 47% மற்றும் பொருட்கள் வாங்குவது 30% அதிகரித்தது. இவற்றுக்கான செலவுகளை நிறுவனங்கள் கூடுதலாக செய்தாலும் தொழிலாளர்களின் ஊதியத்தில் 13.3%  மட்டும் தான் உயர்ந்துள்ளது. இதுவும் இக்காலத்தில் ஏற்பட்ட 7.8% பணவீக்கத்தால் அடிபட்டு போகிறது.

பெரும் தொற்றுக்குப் பிறகு பொருட்களின் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற. இக்காலத்தில் பொருட்களை விலையை பல மடங்கு உயர்த்தி பெரு நிறுவனங்கள் கொள்ளையடித்தது இந்த லாபத்திற்கு முக்கிய காரணம்.

இத்துடன் நரேந்திர மோடியின் அரசாங்கம் பெரும் தொற்று நோய்கள் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வரி குறைப்புகள், தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் விலக்குகள் ஆகியவை இந்த லாபத்தை மேலும் தீவிர படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு கார்ப்பரேட் வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 22 சதமா குறைக்கப்பட்டது. சில பொருட்களுக்கு அதிக கட்டணம் இருந்தால் 35 சதம் வரி குறைப்பு செய்யப்பட்டது. இது முதலீட்டை ஊக்குவிக்கும் என்று அரசு சொன்னாலும் அது நடக்கவில்லை. அதற்கு மாறாக  பெருந்தொற்றின் முதல் ஆண்டில் மட்டும்  1.45 லட்சம் கோடி வழங்கப்பட்ட  வரி சலுகையை தங்களுடைய லாபமாக மாற்றிக் கொண்டார்கள்.

2014.15 மற்றும் 2020-21ம் ஆண்டுகளின்  மத்திய பட்ஜெட் ஆவணங்களின் படி கார்ப்பரேட் வரி செலுத்துவோர்களுக்கு 6.15 லட்சம் கோடி மதிப்பில் உள்ள வரிகளை தள்ளுபடி செய்து சலுகைகளை வழங்கியது. மேலும் அரசு பொதுத்துறை வங்கிகளால் இக்காலத்தில கார்பொரேட் முதலாளிகளுக்கு  10.72 லட்சம் கோடி  கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும் தொற்றின் முதல் ஆண்டின் அதாவது 2020-21 ஆம் ஆண்டுகளில் ரூபாய் 2.03 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சட்டரீதியிலான மாற்றங்கள் செய்து மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாக்கி கொடுத்தது.  தொழிலாளர்களுடைய சட்டங்களை மாற்றி பணியமர்த்தல். பணி நீக்கம், குறைந்தபட்ச ஊதியம் போன்றவற்றின் தொழிலாளர்களுக்கு சாதகமான அம்சங்களை நீக்கி முதலாளிகளுக்கு  ஆதரவான சட்ட திருத்தங்களை செய்து கொள்ளை லாபத்தை தூக்கி விட்டது.

இந்தியாவில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள விலைஉயர்விற்கு, வேலையின்மைக்கு, வறுமைக்கு பட்டினி சாவிற்கு  பின்னால் மோடி அரசின் கொடுமையான மக்கள்விரோத, கார்பொரேட் ஆதரவு  கொள்கைதான் காரணம். எரிகிற வீடென்ன எங்கும் லாபம் எதிலும் லாபம் மட்டுதான் முதலாளித்துவத்தின் தாரக மந்திரம்.

அ.பாக்கியம்

https://janataweekly.org/record-profits-boost-indias-corporate-sector/?utm_source=pocket_mylist

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...