Pages

வெள்ளி, ஜூலை 22, 2022

அண்ணா சாலை..அமெரிக்க தூதரகம்…வாலிபர் சங்கம்…. அ. பாக்கியம்



யுத்த எதிர்ப்பு யுத்தகளமானது.

அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால்நிலையத்தையும்,. அமெரிக்க தூதரகத்தையும், வாலிபர் சங்க போராட்ட களத்திலிருந்து பிரிக்க முடியாது.

 அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 90-ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் யுத்த எதிர்ப்பு பேரணிகள் நடந்த வண்ணம் இருந்தன. தூதரகம் இருக்குமிடமெல்லாம் இயக்கம் நடந்துகொண்டே இருக்கும் என்று நாம் அமெரிக்காவின் யுத்தவெறியை உணர்ந்து கொள்ள முடியும். 

இந்தியாவில் சென்னையில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து அதிகமான அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சமாதானத்தை நேசித்த இடதுசாரிகள் மட்டுமே.

1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்மிது ஆக்கிரமிப்பு தாக்குதலை நடத்தியது. ஈராக் நாட்டிற்கும் குவைத் நாட்டிற்கும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பிரச்சனைகள் இருந்தன.

 நிச்சயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமான முறையில் உற்பத்தி செய்து ஈராக் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கிய பொழுது ஈராக் குவைத் மீது 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தாக்குதலை நடத்தியது.

ஈராக் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை ஈராக் அதிபர் சதாம் உசேன் ஏற்கவில்லை. 

எனவே குவைத் முலமாக அடிபணிய வைத்திட அமெரிக்கா திட்டம் தீட்டி அமுலாக்கியது. 

குவைத்தை மீட்கிறேன் என்ற பெயரில் குவையிலிருந்து ஈராக் படைகள் வெளியேறிய பிறகு, அமெரிக்கா ஈராக் நாட்டை தாக்கியது. 

இது தன்னை எதிர்க்கும் ஈராக் மட்டுமலல ஒட்டுமொத்த அரபுநாடுகளையும் கபளீகரம் செய்ய திட்டமிட்டது. 35 நாடுகளை ஒன்றிணைத்து சவுதி அரேபியாவில் படைகளை குவித்து ஈராக் மீது தாக்குதலை கொடுத்தது. 

யுத்தசெலவு மொத்தம் 60 பில்லியன் டாலரில் 32 பில்லியன் டாலர்களை குவைத் மற்றும் சவுதி அரேபியாவிடம் இருந்து அமெரிக்கா பறித்துக் கொண்டது.

ஒரு கட்டம் வரை குவைத்தை விடுவிப்பதற்கான தாக்குதல் என்று அறிவித்த அமெரிக்கா தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளது ஈராக்கின் மீது கொடூரமான படையெடுப்பை துவங்கியது.

அமெரிக்காவின் இந்த அடாவடி படையெடுப்பை கண்டித்து 29.1.1991 அன்று சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சென்னை மாவட்ட குழு முன்முயற்சியால் தொழிற்சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் இணைந்து உடனடியாக அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

யுத்த எதிர்ப்பு பேரணி அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

 அமெரிக்கத் தாக்குதல் கொடூரமானது என்று உணர்ந்த வாலிபர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், மாதர்கள் என ஆயிரக்கணக்கில் ஒன்று கூட ஆரம்பித்து விட்டனர் 3500 பேர் வரை அங்கு திரண்டு விட்டனர்.

கைகளில் கொடிகள் இருந்ததை விட அமெரிக்காவின் கொடுமைகளை விளக்கிய கையெட்டைகள், பல்வேறு வகையான உருவபொம்மைகள், ஜார்ஜ் புஷ்ஷின் உருவ பொம்மைகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் பேரழிவு ஆயுதங்கள் போன்ற அட்டைகளில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள், குண்டுகள் போன்றவற்றையும், நாய்களுக்கு அமெரிக்க கொடியையும் போர்த்தியும் என விதவிதமான எதிர்ப்புணர்வோடு அந்த கூட்டம் காட்சியளித்தது.

கூட்டம் வந்தது முதல் அமைதியாக இருக்கவில்லை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். யுத்தத்தை எதிர்த்து அமெரிக்காவின் அட்டூழியங் களை அம்பலப்படுத்தியும், சமாதானத்தை வலியுறுத்தியும், விண்ணதிர கோஷங்கள் இடைவிடாது எழும்பி கொண்டே இருந்தது. 

அவ்வளவு உணர்ச்சிகரமான எழுச்சிகரமான ஒரு கூட்டத்தை அதுவரை கண்டதில்லை. ஊர்வலத்தை நடத்தவிடக்கூடாது என்று திட்டமிட்டிருந்த காவல்துறை இந்த கூட்டத்தை கண்டவுடன் மேலும் அச்சிடப்பட்டது.

 எங்கே அமெரிக்க எஜமானர்கள் எரிச்சலைடைவார்கள் என்று கவலை கொண்டனர்.  

இந்தியாவில் நவ தாராளமய அமுலாக்கம் துவங்கியிருந்த காலகட்டம். அமெரிக்காவின் அடிவருடிகளாக ஆட்சியாளர்கள் மாறத்துவங்கிய காலகட்டம். எனவே காவல்துறை அமெரிக்க தூதரகத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க தூதரக சுவர்களில் கூட எதிர்ப்புக் குரல் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்து ஊர்வலத்தை செல்ல விடாமல் தடுக்க ஆரம்பித் தனர். 

முதலில் கொடி எடுத்துச் செல்லக்கூடாது, பிறகு கையடக்கக் கூடாது என்று ஒவ்வொரு ஏற்பாடுகளையும் செல்லக்கூடாது என்று சொல்லி தடுத்து கோபத்தையும் குழப்பத்தையும் உருவாக்க ஆரம்பித்தனர். 

ஒரு கட்டத்தில் காவல்துறையின் இந்த உத்திகளை தெரிந்து கொண்டு ஊர்வலத்தை மீறி நடத்துவது என்று முடிவெடுத்தோம். அகத்தியலிங் கம், பாக்கியம், பி.ஜி.கே.கிருஷ்ணன், டி.நாராயணன், மாணவர் சங்க கோவிந்தராஜன், மாதர்சங்க செயலாளர் தலைமை ஏற்றுச் சென்றோம்.

அமைதியாக ஊர்வலம் செல்ல ஆரம்பித்தவர்கள் மீது, பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலை போலீசார் ஆரம்பித்தார்கள். 

நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மண்டைஉடைந்து. இரத்த காயங்கள் ஏற்பட்டன. இன்னும் பல நூறு பேருக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்படக்கூடிய அளவிற்கு தாக்குதலை நடத்தினார்கள்.

காவல்துறை கூட்டத்தை கலைப்பது என்பது உறுதியானது. எனவே அவ்வளவு பெரிய இடத்தில் நூறு பேர்கள் அல்லது 200 பேர்கள் என்ற வகையில் வட்டத்தை கட்டி உள்ளே இருந்தவர்களை தாக்க ஆரம்பித்தார்கள். 

சாலை ஓரத்தில் ஒதுங்கியவர்கள் எல்லாம் காவல்துறை கூட்டமாக சேர்ந்து தாக்கிய பொழுது அதை தடுக்க வேண்டிய கட்டாயம் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்டது.

 நடைபாதையில் பதிக்கப்பட்ட இரண்டடி கற்களை எந்த ஆயுதமும் இல்லாமல் பெயர்த்து எடுத்து, காவல்துறை தடியடிகளையும் அவர்கள் வீசிய கற்களையும் தடுத்தார்கள்.

பெண்களை காவல்துறை குறிவைத்து தாக்கிய பொழுது அரிஹரன் என்ற வங்கி ஊழியர் பல காவலர்கள் கையில் இருந்த தடிகளை புடுங்கி தூரமாக வீசி பலபெண்ணை பாதுகாத்தார்.

மிக அகலமான நான்கு முனை சந்திப்பில் பிற்பகல் 4 மணிக்கு இந்த தாக்குதல் அரங்கேறிக் கொண்டிருந்தது. வாலிபர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்த அகத்தியலிங்கம், சென்னை மாவட்ட செயலாளராக இருந்த நான், சிஐடி யூ மாவட்ட செயலாளராக இருந்த பிஜிகே கிருஷ்ணன், டி.நாராயணன், மாணவர் சங்க செயலாளர் கோவிந்தராஜன் உட்பட பல பேர் நான்கு முனை சந்திப்பின் மையத்தில் காவல் துறையினர் சுற்றி வளைத்து தாக்கப்பட்டுக்கொண்டிருந்தோம்.

 தோழர் பி.ஜி கே.கிருஷ்ணன் அவர்களின் மண்டையைப் பார்த்து காவல்துறை தடியால் தாக்க முற்பட்டபொழுது நான் எனது கரங்களை குறுக்கே செலுத்தி அந்த அடியை கையிலை தாங்கினேன். 

இது நடந்து கொண்டிருக்கும் பொழுது எனது தலையை குறி வைத்து காவல்துறை தடியை ஓங்கி தாக்கிய பொழுது மாணவர் சங்கத் தோழர் கோவிந்தராஜன் தனது கரத்தை உள்ளே நுழைத்து அதை தடுத்தார். அவர் கைஉடைந்தது, என் மண்டையோ உயிரோ பிழைத்தது. 

மாவட்ட தலைவராக இருந்த தோழர் மாதவ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

காவல்துறை மண்டையை உடைப்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கும். அச்சத்தை உருவாக்குவது அவர்களின் செயல்.

எனவே மண்டை உடைவதை குறைப்பதற்கு சில வழிகளை நாங்களும் கையாளுவோம். அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் இதை உணர்த்தியது. 1985 ஆகஸ்ட் 5-ம் தேதி ராஜா முத்தையா செட்டியார் அவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிப்பதற்கு எம்ஜிஆர் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி அதற்கான விழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சென்னை மாவட்ட குழு சார்பில் விழா நடைபெறுகிற இடத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்து களம் இறங்கினோம். 

அண்ணா சாலையில் தலைமை தபால் நிலையத்தில் ஒன்று கூடி போராட்டத்தை துவங்குவது என்றும் திட்டமிட்டு திடீரென சேர்வது என்றும் பிரிந்து நின்றோம். 

காவல்துறை தலையில் அடிப்பார்கள் என்று அறிந்து கொண்டதால் அனைத்து தோழர்களும் கனமான டர்க்கிடம் தலையில் கட்டிக்கொண்டு போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்து அமுலாக்கினோம். தலையில் அடித்தாலும் காயம் குறைவாகத்தான் இருந்தது.

 மேலும் காவல்துறையினரை தடுப்பதில் பெண்களும் முன்னணியில் இருந்தனர். இது அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தில் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

 யுத்த எதிர்ப்பு பேரணியில் பலருக்கும் தலையில் காயம் பட்டிருப்பதை அறிந்தால் காவல்துறையின் தாக்குதலை புரிந்து கொள்ளமுடியும். பெரும் கூட்டம் சேர்ந்ததால் இந்த டர்கி டவல் உத்தியை அமுலாக்க முடியவில்லை.

மற்றொரு இடத்தில் என்னை அடையாளப்படுத்தி வேறு ஒருவரை இன்சுரன்ஸ் அரங்கத்தில் வேலை செய்த விஜயானந்தன் அவர்களை காவல்துறை கடுமையாக தாக்கியது. 

அவரும் என் அளவு உயரம் என்னைப் போன்றே தாடியும் வைத்திருந்தார் அவரை நான் என்று காவல்துறை தவறாக அடையாளப்படுத்தி கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கி விட்டனர். காவல்துறை செருப்பு இல்லாதவர்களை தேடிப்பிடித்து அடித்தார்கள். 

சாலையின் மையத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த பிஜிகே கிருஷ்ணன் அகத்தியலிங்கம், பாக்கியம், கோவிந்தராஜன் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையத் திற்கும் அழைத்துச் செல்கிற பொழுது கோவிந்தராஜன் வாகனத்திற்குள் கோஷம் போட்டார் ஒரு காவலர் வாகனத்துக்குள்ளேயே அவரைத் தாக்கினார்.மீண்டும் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. 

அன்று இரவு நாங்கள் 32 பேர் சென்னை மத்திய சிறையில் காலதாமதமாக அடைக்கப்பட்டோம். இரவு 6 மணிக்கு மேல் சென்றதால் உணவு இல்லை. எனினும் அங்கு எங்களுக்கு சிறைக்கைதிகள் உணவளித்தனர்.

அண்ணா சாலையின் அந்த இடம் போர்க்களம் பூண்டது .யுத்த எதிர்ப்பே ஒரு யுத்தமாக மாறியது. செருப்புகளை வண்டி வண்டியாக எடுத்துச் சென்றனர். 

ஜார்ஜ் புஷ்ஷின் உருவ பொம்மைகள் சிதைந்து கிடந்தது. காவலர்கள் அவற்றை அள்ளி ஜார்ஜ் புஷ்ஷின் யுத்த வெறிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

 கிளைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பேரழிவு ஏவுகணை பெரிய அளவாக இருந்ததால் அவர்கள் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள காவல்துறை வண்டியை ஏற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 

காவலர்கள் வீசிய கற்களும் பாதுகாப்பிற்காக நடைபாதை கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டதும் சாலைகளில் சிதைந்து கிடந்தது. இவற்றையெல்லாம்

 அப்புறப்படுத்த சில மணி நேரம் தேவைப் பட்டது. போக்குவரத்து தடை பட்டது. அமெரிக்க தூதரகம் அதன் விசுவாசிக ளின் பாதுகாப்பு வளையத்தில் சென்றது.

அன்று இரவு, அடுத்த நாள் காலையில் அனைத்து பத்திரிக்கைகளிலும் இது தலைப்புச் செய்தியாக மாறியது.

 அமெரிக்கா ஈராக் மீது கொடுத்த தாக்குதலை எதிர்த்து நடைபெற்ற யுத்த எதிர்ப்பு பேரணிகளில் உலகில் எங்குமே இப்படிப்பட்ட தாக்குதல் நடைபெறாத காரணத்தினால் இது இந்திய செய்தியாக மட்டுமல்ல, உலகச் செய்தியாகவும் மாறியது. அன்றைய பிபிசி செய்தியில் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது.

நாங்கள் அனைவரும் சிறைச்சாலையில் இருந்தோம். யுத்த எதிர்ப்பு பேரணி நடத்தியவர்கள் மீது காவல்துறையின் கடுமையான தாக்குதலை கண்டித்து அமெரிக்க தூதரத்துக்கு முன்னால் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட குழு முடிவு எடுத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 

அடுத்த நாள் காலை (30.1.1991) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசு ஒன்றிய அரசின் பிரதமராக இருந்த சந்திரசேகர் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைத்தார்.. 

கலைஞர் தலைமையிலான அரசு கலைக்கப்பட்ட பொழுது அன்றைய தினம் காவல்துறையால் அடி வாங்கியவர்கள் அனைவரும் தங்களது இப்படி செய்தால் இப்படித்தான் நடக்கும் என்று சிலர் கோபத்தை வெளிப்படுத்தினர்.

 சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத செயலை எதிர்த்து, திமுக அரசை கலைத்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளானவர்களும் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

மறுபக்கம் இப்படி ஒரு தடியடி நடத்துவதற்கு காவல்துறை காரணமாக இருந்தாலும் நாம் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமா என்ற விவாதம் நடக்கத்தானே செய்யும். 

இந்த நேரத்தில் டெல்லியில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மத்திய கமிட்டி சுதந்திர இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இவ்வளவு பெரிய யுத்த எதிர்ப்பு பேரணியும், எழுச்சியும் இதுவரை ஏற்பட்டதில்லை என்றும் இந்த இயக்கத்தை நடத்திய அமைப்புகளுக்கு பாராட்டும், காவல்துறை தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது நாடுமுழுவதும் எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவது என்பதும் யுத்தம். இந்தத் தகவல் பத்திரிக்கைகளுக்கு வரும் முன்னாள் அன்றைய மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் அவர்கள் கூட்டத்தில் நேரடியாகத் தெரிவித்த பொழுது போராட்டக் களத்தில் நின்றவர்களுக்கு சிறை சென்றவர்களுக்கு மிகுந்த உற்சாகம் இருந்தது. 

இந்தப் போராட்டத்திற்குப் பிறகு கல்கத்தாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரும் மோதல் ஏற்பட்டது. நாடு முழுவதும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் அலைகள் எழுந்தது.

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக அடிக்கடி இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனியாகவும் கூட்டாகவும் நடத்திக் கொண்டே இருக்கும்.

 பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்தும், காஷ்மீரில் அமெரிக்கா தலையிட்டு கண்டித்தும், டைகோ கார்சியாவில் அமெரிக்காவின் கப்பற்படை தளத்தை எதிர்த்தும், அமெரிக்க இந்திய கப்பற்படை பயிற்சிகளை எதிர்த்தும், எண்ணற்ற ஏகாதிபதிக்கு எதிரான போராட்டங்களை வாலிபர்களும் மாணவர்களும் நடத்திக் கொண்டே இருந்தனர்.

சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட துரை என்பவர் அண்ணா சாலையில் ஊர்வலம் எதையும் நடத்தக்கூடாது என்று உத்தரவு போட்டார். அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவை காவல்துறை ஆணையர் வெளியிட்டார்.

இந்த இரண்டையும் எதிர்த்து வாலிபர் சங்கமும் மாணவர் சங்கமும் அண்ணா சாலையிலும் அவதிக்கு தூதரகம் அருகிலும் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்திக் கொண்டே இருந்தோம்.தடியடிகளும் கைதுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன.

 வருடத்திற்கு சக்திமிக்க பலநூறு, இளைஞர்கள் மாணவர்கள் பங்கேற்கும் போராட்டங்கள் நடந்தது.

இதன் உச்சகட்டமாக அண்ணா சாலையில் தலைமை தபால் நிலையம் எதிரில் தோழர்.உமாநாத் தலைமையில் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு எடுத்து பெருந்திரள் உண்ணாவிரதம் தடையை மீறி நடத்தப்பட்டது. 

 ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தினை அண்ணாசாலை இரு பக்கத்தின் இருப்புகளும், அமெரிக்க தூதரகத்தின் சுவர்களும் என்றென்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

அதுவரை அண்ணா சாலையில் நடைபெறக்கூடிய இயக்கங்களுக்கு அனுமதி கொடுப்பது அதை மறுப்பது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது.

 இந்த தடை உத்தரவுக்கு பிறகு அனுமதி கொடுக்காமல் அண்ணா சாலையில் உரிமை குரல் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இருக்கிறது.

(தோழர்களே பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)


அ,பாக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...