Pages

வெள்ளி, ஜூலை 01, 2022

குறும்பனை : DYFI எழுச்சி - வீழ்ச்சி - மீட்சி. அ.பாக்கியம்

 


கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு பெரிய மீனவர் கிராமம் குறும்பனை . 1991- ஆம் ஆண்டுகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடற்கரை ஓரங்களில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் கடற்கரை மீனவர் கிராமங்களில் வேகமாக வளர ஆரம்பித்தது . மீனவர் கிராமங்களில் இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், ஆதிக்க சக்திகளின் அடக்குமுறையை எதிர்த்து முற்போக்கான இயக்கங்கள் உருவாகுவது கடினமான காரியம்.   மீனவமக்களின் தொழில்சார்ந்த வாழ்க்கையே செல்வந்தர்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். செல்வந்தர்கள் சமூகத்தில் மதம் , சாதி போன்ற பிரிவினைகளை பயன்படுத்தி, ஊர் கட்டுப்பாடு போன்றவற்றை பயன்படுத்தி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

தமிழ்நாட்டின் வாலிபர் சங்கத்தின்   வளர்ச்சியில் குமரி மாவட்டம் முக்கிய   பங்காக இருந்தது. மேலும் கேரளமாநில வாலிபர்சங்க   போராட்டங்கள் குமரி மாவட்ட வாலிபர்சங்க வளர்ச்சிக்கு உதவிசெய்தது. நீண்ட நாட்களாக கடற்கரையோரத்தில் வாலிபர் அமைப்புகள் பலமாக இல்லாத ஒரு சூழலை மாற்றி, குமரிமாவட்டத்தில் பலகடற்கரை கிராமங்களில் அமைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்கள் .

மாநில நிர்வாகிகளில் நானும் (பாக்கியம்) ரவீந்திரனும் கூடுதலாக அந்த மாவட்டங்களின் இயக்கங்களுக்கு சென்று வருவோம் . மாநில தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் என்ற முறையில் நான் சென்று வந்தேன் . கேரளாவின் காக்கம் , அரசியல் தரம், தேசிய அரசியலில் முக்கியத்துவம் ஆகியவை குமரி மாவட்டத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் . வாலிபர் சங்கத்தின் இயக்கங்களில் இளைஞர்கள் அதிகமாக கலந்து கொள்வார்கள். மாவட்ட மாநாடு ஊர்வலம் போன்றவற்றில் சுமார் 8000 இளைஞர்களை திரட்டும் சக்தி உடைய மாவட்டமாக இருந்தது . _

கடற்கரை ஓரங்களில் வாலிபர் சங்கத்தின் வளர்ச்சி ஏற்பட்ட பொழுது பல கிராமங்களில் அதற்கு எதிரான தடைகளும் வந்தது . வகுப்புவாத அரசியல் முன்னுக்கு வந்த காலகட்டம். சென்னையில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சிறந்த தலைவர்களில் ஒருவரான தோழர்.இ.ஆர்.ரைமண்ட் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர். குமரி மாவட்டத்தில் திருமணத்தையொட்டி சில தேவாலயத்திற்கு சென்ற பொழுது அந்த தேவாலயத்தில் கடற்கரை ஓரங்களில் வாலிபர் சங்கத்தின் வளர்ச்சி   கவலைக்குரியது என்ற முறையில் பிரசங்கம் செய்தார்கள் என்று பலஇடங்களில் இதுநடக்கிறது என்று என்னை சந்தித்தபோது அதற்கான விபரங்களை தெரிவித்தார். நான்கு வேறு சில சமூக ஆதிக்க அமைப்புகளும் வாலிபர் சங்கத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர் .

 1992 ஆம் ஆண்டு குறும்பனை மீனவர் கிராமம் வாலிபர் சங்கம் செயல்பாட்டின் மையமாக திகழ்ந்தது. இந்த ஆண்டுகளில் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை குறும்பனையில் மட்டும் 1850 வரை இருந்தது . இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மக்களின் அடிப்படையான வாழ்விட பிரச்சனைகளை வாலிபர் சங்கம் முன்வைத்து பலபோராட்டங்களை நடத்தியதுதான். 

குழித்துறை கூட்டுக் குடிநீர் திட்டத்தை குறும்பனை கிராமத்திற்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற போராட்டத்தை நடத்தியது. கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுத்தது. சாலைகள் அமைப்பதற்கான போராட்டங்களை நடத்தி சாதித்தது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை வலுவான முறையில் தலையிட்டு சாதித்துக் காட்டினார்கள். எனவே வாலிபர் சங்கத்தின் பின்னால் வாலிபர்களும் மக்களும் அணிதிரண்டனர். பொதுவெளியில் பன்றிகளை வளர்ப்பது மக்களின் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக இருந்தது. இதை   தடைசெய்ய வேண்டும் என்ற இயக்கம் பெரும் வரவேற்பை பெற்றது .

இதேபோன்று, வரதட்சணை வாங்குவதை தடுக்க விழிப்புணர்வு இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகவே நடத்தப்பட்டது . குறும்பனை கிராமத்தில் நடைபெற்ற இப்படிபட்ட இயக்கத்தின் வெற்றிகள் மீனவர் கிராமங்களில் விரைவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வளர ஆரம்பித்தது இதன் விளைவாக வாலிபர் சங்கத்தின் மீது ஆதிக்க சக்திகள் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தனர் .

ஒன்றாக நிற்கவில்லை. மீனவமக்களின் வாழ்விட பிரச்சனைகளை கடந்து வாழ்வாதார கோரிக்கைகளையும் வாலிபர்சங்கம் கையிலெடுத்தது. கடலோர பகுதியில் இருக்கக்கூடிய மீன்பிடித் தொழிலாளர்களின் தொழிசார்ந்த கோரிக்கைகளுக்காக 1993-ஆம் ஆண்டு ஜூலை 5 - ஆம் தேதி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500 க்கும் மேற்பட்ட மீனவர்களையும் இளைஞர்களையும் திரட்டி குமரிமாவட்டக்குழு போராட்டம் நடத்தியது .  

கடற்கரை கிராமங்களில் ஆதிக்கம்செலுத்திய சக்திகள் வாலிபர் சங்கத்தின் வளர்ச்சிக்கு   எதிராக வகுப்புவாத சக்திகள் மற்றும் ஆட்சியாளர்களின் உதவியுடன் திட்டமிட்டு தாக்குதலை தொடங்கினர். அங்கு நடைபெற்ற கபடி போட்டியில் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கினர். இந்த மோதலில் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் தைதாகி வெளிவந்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவர்களிடம் நடைபெற்ற மோதலை பயன்படுத்தி வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் மீது பழிசுமத்தி , திட்டமிட்டு ஆதிக்க சக்திகள், காவல்துறையும் தாக்குதல் நடத்தினார்கள் . கடற்கரை ஓரத்தில் வாலிபர் சங்க வளர்ச்சியை தடுத்து நிறுத்தியது  நிறுத்த வேண்டும் என்றால் குறும்பனை வாலிபர் சங்கத்தை தகர்க்க வேண்டும் என்றதிட்டத்தை நிறைவேற்றினர் .

வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் . காவல்துறை உதவியுடன் வாலிவபர் சங்க தோழர்களின் குடும்பங்களையும் வீடுகளையும் சூறையாட தொடங்கினார். . வாலிபர் சங்கத்தின் பெரும்பகுதி தோழர்கள் குடும்பத்துடன் கடல் மார்க் கமாக தப்பிச்சென்று தூரத்து கிராமங்களில் தலைமறைவானார்கள் . சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய காவல்துறை ஆதிக்க சக்திகளின், செல்வந்தர்களின் செயல்பாட்டிற்கு துணைநின்றது.

வாலிபர் சங்கத்தில் இருந்து சுமார் 80 க்கும் மேற்பட்ட தோழர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினார்கள் . மீனவர்கள் என்பதால் தொடர்ந்து கடல் தொழில் செய்து வந்தவர்கள் ஓரளவு தரமான வீடுகளையும் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் உழைத்து சம்பாதித்து வைத்திருந் தார்கள் .

              ஒருமோதல் நடந்தால் அந்தமோதலுக்கு காரணம் என்று கருதியவர்களை தாக்குவார்கள். அல்லது சிலநேரங்களில் குடும்பங்களை, உறவினர்களை தாக்குவார்கள். வீடுகளில்   பயப்படும் பொருட்களை சேதப்படுத்துவார்கள். ஆனால் குறும்பனையில் தாக்குதல் வேறுவிதமாக இருந்தது. காரணம் வாலிபர் சங்கத்தை வேருடன், வேரடி மணனுடன் அழித்திட வேண்டும் என்று நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்.

வீட்டிலிருந்த தொலைக்காட்சி, வானொலி பெட்டிகள், பீரோக்கள், நாற்காலிகள், நகைகள், சமையல் பாத்திரங்கள் துணிமணிகள் என அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் . ஒன்றாக நிற்கவில்லை தொழில்செய்யும் கருவிகளை அழித்தார்கள். மீண்டும் இவர்கள் இங்கு வந்து வாழவே கூடாது வாலிபர் சங்கத்தை பற்றி நினைக்கவே கூடாது என்று வீடுகளை இடித்தார்கள் . வீடுகளின் காங்கிரீட் தளத்தை கடப்பாறைகளை வைத்து மேலே இருந்து அனைத்து இடங்களிலும் ஓட்டை போட்டு  தகர்த்தார்கள் . வீடுகளில் இருந்த கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் மரத்தாலானவை. இவற்றையெல்லாம் ஒருவீடுவிடாமல் பெயர்த்து எடுத்தார்கள்.

இவற்றைப் பெயர்த்து எடுத்து அப்படியே தூக்கி எரியவில்லை அதற்கு மாறாக மீண்டும் இந்த மரங்களை பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் சுக்குநூறாக கோடாரிகொண்டு கடலில் விழுந்து விழுந்து விட்டனர் . _ தொடர்ந்து சில நாட்கள் இந்த வன்முறைகளை செய்தார்கள் காவல்துறை மற்றவர்களை உள்ளே அனுமதிக்க தயாராக இல்லை . இப்படிப்ட்ட ஒரு இழப்பை வாலிபர் சங்கம் குமரிமாவட்டத்தின் கடற்கரையில் சந்தித்தது இல்லை.  

உள்ளே செல்வதற்கான தொடர்முயற்சிகளை எடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், குமரிமாவட்ட மக்கள் தலைவர்கள் தோழர். ஜெ. ஹமச்சந்திரன் , ஜி.மணி மற்றும் பி,கோபிதாஸ்  சென்று விவரங்களைத் தொகுத்து புகார் செய்த பிறகு காவல்துறை இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டும் பதிவு செய்தது .

சுமார் ஒரு மாத காலம் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் தூரத்தில் உள்ள கடற்கரை கிராமத்தில் தங்கி உள்ளே நுழைய முடியாமல் இருந்தனர். வெளியில் இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தது. காவல்துறை ஆதித்த சக்திகளின் அரணாய் நின்று கொண்டிருந்தது . எதிரிகள் ஆயுதபாணிகளாக உள்ளே வந்தால் அழித்துவிட வேண்டும் என்ற தயாரிப்பில் இருந்தனர் .

நாட்கள் செல்ல செல்ல நிலைமைகள் மோசமாகி கொண்டிருந்தது வேறு வழி இல்லை. இனியும் காவல்துறையை நம்பி பயனில்லை. அமைதியான வழியில் உள்ளே நுழைவதற்கான வழிகள் அனைத்தும் அடைபட்டுக்கிடந்தது. உரிய தற்காப்பு ஆயுதங்களுடன் உள்ளே நுழைவது என்று முடிவெடுத்து தோழர் மணி தலைமையில் கடல் மார்க்கமாகவே உள்ளே நுழைந்தார்கள் . காவல்துறை தடுத்து நிறுத்தியது .

விட்டுவிடவில்லை மீண்டும் கடற்கரையில் இன்னொரு வழியாக உள்ளே வருவது. காவல்துறை தடுத்தாலும் மீறி அலல எதிர்த்து நுழைவது என்று உள்ளே நுழைந்தார்கள். முதலில் காவல்துறை தடுத்தது. காவல்துறையின் தடியடிகளையும், துப்பாக்கிகளையும் முட்டித்தள்ளி உள்ளே செல்ல முயன்றபோது காவல்துறை மக்களின் ஆதரவைப் பெற இந்த இளைஞர்களுக்கு மேல் தடுமாறி விபரீதங்கள் ஏற்படும் , தமிழகம் முழுவதும் பரவும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆயுதங்களைத் தவிர்த்து செல்ல வேண்டும் கோரிக்கை முன்வைத்தார்கள்.

 ஆயுதங்கள் மீதோ வன்முறை மீதோ எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை ஆனால் ஆதிக்க சக்திகள் உங்கள் பாதுகாப்பு ஆயுதங்களுடன் எங்களை தாக்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் முதலில் அவர்களை நிராயுதபாணிகளாக மாற்றுங்கள் பிறகு நாங்கள் உங்களை நம்புகிறோம் எங்கள் மண்ணுக்கு எத்தனை இழப்புகள் வந்தாலும் சந்திப்போம், நீங்கள் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நிற்காமல் ஒதுங்கி நிற்கிறோம் என்று உறுதியாக தெரிவித்து உள்ளே செல்லும் முயற்சி மேற்கொண்டனர்.  

நிலைமையை புரிந்து கொண்ட காவல்துறை ஆதிக்க சக்திகளை கட்டுப்படுத்தியது. வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறும்பனை கிராமத்திற்கு மீண்டும் எழுச்சியுடன் உள்ளே நுழைந்தார்கள் . _ ஆதிக்க சக்திகள் பலர் ஊரை காலி செய்து கொண்டு சென்று விட்டார்கள் . மீண்டும் கிராமத்தை மீட்டெடுத்த உற்சாகம் ஏற்பட்டது. எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் அனைத்து மக்களையும்   ஒற்றுமைப்படுத்த கூடிய பணியை வாலிபர் சங்கம் செய்தது .

திரும்பிச் சென்ற வாலிபர் சங்கத் தோழர்கள் தங்களுடைய வீட்டில் எதுவும் இல்லாத நிலைமையும், காங்கிரீட் தளமும் கதவுகளும் ஜன்னல்களும் இல்லை துணிகள் , சமையல் பாத்திரங்கள் , படுக்கைகள் என அனைத்தையும் தொடங்கவேண்டி இருந்தது. உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தபோதும் அச்சமில்லை அச்சமில்லை என்பதுபோல் மீண்டும் தங்களுடைய வாழ்க்கையை கட்டமைக்க ஆரம்பித்தார்கள் . நானும் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் உடனடியாக கிராமத்திற்கு சென்று பார்வையிட்டோம். மாவட்டகுழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த பாதிப்புகளையும், மீண்டும் கிராமத்தை மீட்டதைஅறியும் வகையில் அந்தப் பகுதியில் மாவட்டக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட் டோம்.

அப்போது அங்கு கண்ட காட்சிகளை குறிப்பாக ஆதிக்கசக்திகளின் அழித்தொழிப்பு காட்சிகள், அவர்கள் தெரிவித்த விபரங்களையும் எண்ணிகைகளில் பதிவு செய்கிறேன். அங்குநடைபெற்ற மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுவான இயக்கத்திற்கு திட்டமிடப்பட்டது . 

1993 ஆம் ஆண்டு இச்சம்பவம் டிசம்பர் மாதம் நடைபெற்றது . 94 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தாக்குதலை கண்டித்து குளச்சல் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் கிராம வாலிபர்களை வெள்ளை சீருடையுடன் திரட்டி கண்டன பொதுக்கூட்டம் ஊர்வலம் நடத்தப்பட்டது இந்த கூட்டத்தில் நானும் , தோழர் ரவீந்திரனும் , தோழர் குணசேகரனும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினோம் . பொய் வழக்கு போடப்பட்டது 11 பேர் சென்னையில் நிபந்தனை பிணையில் ராயபுரத்தில் தங்க வைக்கப்பட்டு வைக்கப்பட்டனர் பிறகு இந்த வழக்கு பொய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது . _ இந்த வழக்கை எதிர்த்து முதுபெரும் வழக்கறிஞர் ஜி.ஜெலஸ்ட்டின்,பி.பரமதாஸ் மற்றும சில வழக்கறிஞர்கள் திறம்பட நடத்தி விடுதலை பெற்றுக்கொடுத்தனர். குமரி மாவட்டத்தில் எடுத்த முயற்சிகள் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் வாலிபர் சங்க கிளைகள் உருவாவதற்கு உந்து சக்தியாக அமைந்தது .

இந்தப் போராட்டத்தினை வாலிபர் சங்கத்தின் குறும்பனை கிளை செயலாளராக இருந்த சகாய பாபு , மற்றும் முன்னணி தோழர்கள் பெர்லின் , உருமான்ஸ் , துர்க்மான் போன்ற தோழர்கள் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவராக தோழர் . டி.ஜே. _ ஹரிதாஸ் மாவட்ட செயலாளராக ஆர் . செல்ல சுவாமி மற்றும் மாநில நிர்வாகியாக இருந்த தோழர் என்.முருகேசன் போன்ற தோழர்கள் களம் கண்டு வழி நடத்தினார்கள் . வாலிபர் சங்கத்தை புதியபகுதி மக்களிடம் விரிவுபடுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்பைடையில் எடுக்கப்பட்ட பலமுயற்சிகளில் இதுவும் ஒன்று. குமரி மாவட்ட வாலிபர் சங்க வரலாற்றில் அழிய தடம் பதித்த இயக்கமாக குறும்பன இயக்கம் உள்ளது .

இன்றும் குறும்பனை கிராமம் இடதுசாரிகள் தளமாக உள்ளது. மீனவர் சங்கம் துடிப்புடன் செயல்படுகிறது. இந்த ஆண்டு(2022) நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி இந்த வார்டில் வெற்றிபெற்றுள்ளது.

(தோழர்கள் பின்னூட்டத்தின் வழியாக இதை மேப்படுத்திட கேட்கிறேன்,)

அ.பாக்கியம்

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...