Pages

செவ்வாய், ஜனவரி 06, 2015

பாசிசம் அன்றும் - இன்றும்-3 -

அ.பாக்கியம்-
கார்பொரேட்டிசம் :
           முதலாளித்தும் தனது நெருக்கடியிலிருந்து மீள, தனது மேலாண்மையை தக்கவைத்துக் கொள்ள அது புதிய புதிய அவதாரங்களை எடுத்துக் கொண்டே இருக்கும். அது கலப்பு பொருளாதாரம், கூட்டுப் பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் என கவர்ச்சி உடைகளை தரித்துவிடும்.  முசோலினியும், ஹிட்லரும், தொழில் நிறுவனங் களின்    கார்பொரேட்டிசத்தை அதாவது அப்பட்டமான      முதலாளி ஆதரவு பொருளாதாரத்தை சோசலிச, முதலாளித்துவ பொருளா தாரத்திற்கு மாற்று என்றனர். 

இதன்படி, தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமாக்கப்பட்டது. வேலை நிறுத்தம் கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டது. இத்தாலியில் “கருங்சட்டை படைகளும்” ஜெர்மனியில் “பழுப்பு நிறசட்டை படைகளும்” தொழிலாளர் பகுதியில் புகுந்து கலவரத்தை உருவாக்கி தொழிற்சங்கத்தை கலைத்தனர். கைப்பற்றிக் கொண்டனர். தொழில்நிறுவனங்களின் சுரண்டலுக்கு தங்குதடையற்ற பாதையை அமைத்தனர்.

பெண்கள் போற்றி ! போற்றி !
     பெண்களை பாசிசம் தெய்வமாக, மிக உயரத்தில் வைத்திருக்கிறது என்று முசோலினி, ஹிட்லர் பேசினர். இதை மைய்யமாக வைத்தே மக்கள் தொகை கொள்கைகளை அறிவித்தனர். வேலையின்மை பிரச்சினைகளை தீர்க்க, பெண்களை தொழிற்சாலைகளிலிருந்து வீட்டிற்கு அனுப்பினர். “ஆண்களுக்கு யுத்தகளம், பெண்களுக்கு பிரசவ அறை” என்று முசோலினி அறிவித்தார். “பெண்களே தேசத்தின் மறு உற்பத்தியாளர்கள்” (Reproduction of Nation) என்று போற்றினார். 1933 -ம் ஆண்டு முசோலினி 93 பெண்களை நேரடியாக சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

          காரணம் அவர்கள் 1300 ஆரிய குழந்தைகளை பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தார். ஹிட்லர் ஜெர்மனியில் பெண்கள் தங்களது வயிற்றில் ஆரிய குழந்தைகளை சுமக்க வேண்டும் என உத்தரவிட்டார். மிகச்சிறந்த ஜெர்மன் சமூகத்தை ((Ideal German Community)  அமைக்க வேண்டும் என்று பேசினார். 1935 -ம் ஆண்டு தூயஆரிய இனவிருத்தி மையத்தை (LEBONSBORN)) மையத்தை உருவாக்கினான் ஹிட்லர். இதில் ஆரிய இன பெண்கள், ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தனது பாதுகாப்பு தொண்டர்கள் (SS)) கட்டாயம் 4 குழந்தைகள் பெற வேண்டும் என உத்தரவிட்டான். ஆரிய தாய்மார்களின் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டது. அப்படி செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. 

      ஆரியர், ஆரியர் அல்லாதார் திருமணம் தடை செய்யப்பட்டது. நாசிக்கட்சியின் பெண்கள் பிரிவு, மனைவி மற்றும் தாயாக இருப்பதன் பெருமைகளை, முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்தது. பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகளுக்கு, அடக்கமான மனைவி, சிறந்த தாய் பற்றி போதிக்கப்பட்டது. முதலாளித்துவ தாராளவாதம் பெண்கள் உரிமை சமத்துவம் பற்றி சட்டப்படி அதிகம் பேசும். ஆனால் பாசிசம் இதை பகிரங்கமாக மறுத்து, பெண்களை “பிள்ளைபெறும்” இயந்திரமாக மட்டுமே மாற்றியது.

“இனவெறியே” - ஆட்சி நெறி :
     முசோலினி தனது சாம்ராஜ்யத்தை “கலாச்சாரத்தின் அடையாளம்” என்று பிரகடனப்படுத்தினார். இதன் பிறப்பிடம் டால்மேசியா பிரதேசம் என்றும், குரோசியா, அல்பேனியா, ஸ்லோவேனியா, இஸ்டிரியா ஆகிய பிரதேசங்கள் இத்தாலி கலாச்சாரத்தின் வேர்கள் உள்ள பகுதி என்றும் அவை இத்தாலியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பேசினார். அகண்ட இத்தாலி வடஆப்பிரிக்கா முதல் இந்திய பெருங்கடல் வரை உள்ளது என்றான். “பாசிசம் பிறந்தது. ஆம் இத்தாலிய ஆரிய இனத்தை எல்லையற்ற வகையில் நீண்டகாலம் வாழவைக்க பாசிசம் பிறந்தது என்று பெருமீதத்துடன் முசோலினி முழங்கினான்.
இத்தாலிய எல்லைக்குள் வாழும் ஜெர்மானிய, ஸ்லாவ் இன மக்களை இத்தாலிய மயமாக்கிட உத்தரவிட்டான். ஸ்லாவ் மற்றும் ஜெர்மானிய மொழிகள் தடை செய்யப்பட்டது. இம்மொழி பத்திரிக்கைகள் இழுத்து மூடப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. இம்மொழிகளை தாங்கிய ஊர், பிரதேச, குடும்ப பெயர்களை இத்தாலிய மொழியில் மாற்றி அமைக்க உத்தரவிட்டான். ஆரியர்கள் வெள்ளை நிறத்தவர்கள். கறுப்பர்களையும், மஞ்சள் இனத்தவர்களையும் கட்டுப்படுத்த, அடக்கிட உரிமை படைத்தவர்கள் என்று முசோலினி இனவெறியூட்டினான்.
ஜெர்மானியின் ஹட்லர் ஜெர்மானிய ஆரிய இனம் உயர்ந்த தூய்மையான வெள்ளைநிற இனம் என்றான். இந்த இனம் வடக்கு ஜெர்மனி சமவெளியில் தோன்றியது என்று வரையரை செய்தான். ஜெர்மானிய மக்களை ஹிட்லர் ஐந்து வகையாக பிரித்தான். 1) தூய்மையான வெள்ளைநிற ஆரியர்கள், 2) செம்பட்டை முடி உடையவர்கள், 3) நீலநிற கண்கள் உடையவர்கள், 4) மற்ற ஐரோப்பியர்கள், 5) அடிமைகள் ஆசிய ஆப்பிரிக்க நாட்டைச் செர்ந்தவர்கள் என வகைப்படுத்தி, மக்களை துண்டாடினர்.

பிணம் திண்ணும் சட்டங்கள் :
    
இனவெறிக்கு எதிரியை கண்ணுக்கு முன்னே காட்ட வேண்டும். அப்போதுதான் மக்களை துண்டாட முடியும், வெறிகளை தட்டியெழுப்ப முடியும் என கருதி ஐரோப்பிய நாடுகளில் பரவி இருந்த யூதர்களை எதிரிகளாக்கினர். ஆரிய இனத்தூய்மையை யூதர்கள் தங்களது கலப்பால் கெடுத்துவிடுகின்றனர் என்ற கருத்தை கட்டமைத்தனர். இதன் வெளிப்பாடாக இருநாடுகளிலும் இனப்பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினர். பேரரசு குடியுரிமைச் சட்டம் மற்றும் ஜெர்மானிய ரத்தம், கௌரவ பாதுகாப்புச்சட்டம் ஆகிய இரண்டு சட்டங்கள் ஜெர்மனியில் இயற்றப்பட்டது. இவை இரண்டும் நியுரம்பர்க் என்ற இடத்தில் இயற்றப்பட்டதால் நியுரம்பர்க் சட்டம் என அழைக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, யூதர்களுக்கு குடியுரிமை ரத்து, யூதர்கள் பொது இடத்தில் அனுமதி இல்லை. வேலைகள் பறிக்கப்பட்டது. கடைகளை மூடவேண்டும் என உத்திரவிட்டனர்.
ஜெர்மன் பூமி, தூய ஜெர்மன் இன பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டது. எந்த ஜெர்மானியர்களும் யூதர்களை திருமணம் செய்யக்கூடாது. இந்த சட்டத்திற்கு முன் திருமணம் செய்திருந்தாலும் பிரிந்து விட வேண்டும். 45 வயதுக்கு உட்பட்ட ஜெர்மானிய பெண்கள் உள்ள வீட்டில் யூதர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என சட்டம் வரையறுத்தது. இதற்கான காரணத்தை சட்டத்தில் சொல்ல தயங்கவில்லை. பிள்ளைபெறும் வாய்ப்பு 45 வயது வரை உள்ளதால் தவறான உறவால் இனத்தூய்மை கெட வாய்ப்புள்ளது என்று அறிவித்தனர். யூதர்கள் ஜெர்மானிய கொடியை பயன்படுத்த கூடாது என தடைவிதிக்கப்பட்டது.
1942 -ம் ஆண்டு ஜூன் மாதம் 20 -ம் தேதி நாசிக் கட்சி தலைவர்கள் வான்சி என்ற இடத்தில்  மாநாடு (Wansee Conference)) நடத்தி இனத்தூய்மை பாதுகாக்க யூதர்களை கொன்றுவிடுவது என முடிவெடுத்தனர். அதற்கென ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதற்காக பல நகரங்களில் வதை முகாம், உழைப்பு முகாம் நிறுவப்பட்டது.
வாழத்தகுதி அற்ற யூதர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மூளை வளர்ச்சி அற்றவர்கள், ஜிப்சிகள், ஓரின சேர்க்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். யூதர்களை மிகப்பெரிய கட்டிடத்தில் அடைத்து விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டனர். கூட்டமாக கொல்லப்பட்டவர்களை எரிக்க மிகப்பெரும் நெருப்புக்குழி உருவாக்கப்பட்டு அதில் லாரிகள் மூலம் பிணங்களை கொட்டினர்.
1942 -ல் வார்சாவில் 10,000 பேர்கள் இருக்க இடமுள்ள வதைமுகாமில் 5  லட்சம் பேர்களை அடைத்தனர். 1943 -ல் இவர்களில் 73,000 பேர்கள் மட்டுமே உயிரோடு இருந்தனர். 1942 ஜூன் மாதம் ஜெனரல் டிராப் தலைமையில் ஒரு படை பிரிவு போலந்தின் வார்சா நகரில் நுழைந்தது. “யூதர்களற்ற ஐரோப்பா” என்ற நமது தலைவரின் கனவை நிறைவேற்ற, யூத தலைகளை வீழ்த்துங்கள் என்றான். அந்த வீரர்கள் ஒரே நாளில் 1200 பெண்கள், குழந்தைகளை கொன்று குவித்தனர். இரத்தத்திற்கும், தண்ணீருக்கும் வேறுபாடு தெரியாத, குழந்தைகள், பெண்கள் என்ற மனித உருவம் அறியாத இனவெறி காட்டுமிராண்டிகளை உற்பத்தி செய்தனர் பாசிஸ்ட்டுகள்.
ஜெர்மனியில் ஹிட்லரின் இனவெறி செயலுக்கு இணையாக இத்தாலியில் முசோலினி செயல்பட்டார். 1938 -ம் ஆண்டு இனப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றினார். 1919 -ல் யூதர்களுக்கு இத்தாலியில் அளிக்கப்பட்ட குடியிரிமையை ரத்து செய்தார். நகரங்களில் 20,000 லியருக்கு (நாணயம்) மேல் வருமானம் கூடாது. கிராமப்புறத்தில் உள்ள யூதர்கள் 5000 லியருக்கு மேல் வருமானம் தரும் நிலத்தை வைத்திருக்கக் கூடாது. 100 பேருக்கு மேல் உள்ள தொழிலகங்களை யூதர்களை நடத்தக்கூடாது. இராணுவத்தில் சேர, அரசுப்பணி, யூதரல்லாத இத்தாலியரை திருமணம் செய்திட என அனைத்தும் தடைவிதிக்கப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட யூதர்கள், இத்தாலியரை திருமணம் செய்த யூதர்கள் தவிர மற்ற அனைவரும் இத்தாலியை விட்டு நான்கு மாதத்தில் வெளியேற இச்சட்டத்தின் வாயிலாக உத்தரவிட்டான் முசோலினி.
பாசிசத்தின் முதல் விளைவு உள்நாட்டில் அவை ஏற்படுத்திய மனிதப்படுகொலை. மற்றொரு விளைவு உலகை ஆள நினைத்து உருவாக்கிய இரண்டாவது உலகப்போர். உள்நாட்டில் யூதர்களை வேட்டையாடியது ஒரு அடையாளம். யூதர்களை எதிரிகளாக சித்தரித்து ஒட்டுமொத்தமான ஜனநாயக உரிமை, அரசியல் பொருளாதார, தனிமனித உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் என அனைத்தையும் முதலாளித்துவம் தனது சுரண்டலுக்காக அபகரித்துக் கொண்டது. பாசிசத்தின் இரண்டாவது விளைவான உலகப்போரில் ஜெர்மனி, ஐரோப்பா முழுவதும் குறிப்பாக பிரான்ஸ் முதல் டென்மார்க் வரை கைப்பற்றியது. இத்தாலி அண்டை நாடுகளையும், வட ஆப்பிரிக்காவிற்குள் நுழைந்தது. ஸ்பெயின் இழந்த லத்தீன் அமெரிக்காவை மீட்பதற்காக யுத்தத்தில் இறங்கியது. அன்றைய ஐரோப்பாவில் பின்தங்கிய நாடாக கருதப்பட்ட போர்ச்சுகல் பல பகுதிகளை கைபற்றியது. ஹிட்லர் பல நாடுகளை விழ்த்தி பிரான்சையும் தனது காலடிக்கு கீழ் கொண்டுவந்த பிறகு சோவியத் யூனியன் மீது படையெடுத்தான். அங்குதான் பாசிசத்தின் பின்னடைவு துவங்கியது. அதன் தொடர்ச்சியாக  பாசிசம் முகம் தரித்த முதலாளித்துவம் தோல்வியை சந்தித்தது. இதற்காக சோவியத் யூனியன் மனித குலம் சந்தித்திராக இழப்புகளை சந்தித்தது. 2 கோடியே 66 லட்சம் பேர்கள் மரணமடைந்தனர். பல லட்சம் பேர்களுக்கு அங்கஹீனம் ஏற்பட்டது. 1710 நகரங்கள் தரைமட்டமாக்கி அழித்தொழிக்கப்பட்டது. 32,000 தொழிற்சாலைகள் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டன. 98,000 விவசாய கூட்டுப்பண்ணைகள் அழிக்கப்பட்டன. எனவே, மனிதகுலம் சந்தித்திரா பேரழிப்பு மட்டுமல்ல அதுவரை மனிதகுலம் எதிரபாராத மறு கட்டமைப்பையும் சோவியத் யூனியன் உழைக்கும் மக்கள் உதவியால் சாதித்து காட்டியது....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...