Pages

வியாழன், அக்டோபர் 28, 2021

5.பொய் மட்டுமே உண்மை/ பாக்கியம்

 


இது பிரதமரின் இலவசபொய்

 

                            இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போட்டதின் சாதனையை விளக்கி பிரதமர் மோடி அவர்கள் தேசத்திற்கு உரையாற்றினார். 100 கோடி தடுப்பூசி போட்டது சாதனை அல்ல அவை அனைத்தும் இலவசமாக போடப்பட்டுள்ளது என்பதுதான் சாதனை என்று பேசி உள்ளார், ( (India has not only administered 100 crore vaccine doses to its citizens but has also done that free of cost),"

                           இது போன்ற பேச்சுக்கள் முதல் தடவை அல்ல. இதற்கு முன்பு  ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) மோடி பிறந்தநாள் அன்று அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று அறிவித்தார். செப்டம்பர் 17 அன்று 2.28 கோடி தடுப்பூசி போடப்பட்டதாகவும் அறிவித்தார்.

                               பிரதமரின் கூற்று தவறானது. பொது மற்றும் தனியார் துறைகளால் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் முழுமையான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், செப்டம்பர் 23, 2021 அன்று, மே 1 முதல் செப்டம்பர் 22, 2021  வரை 6%  தடுப்பூசிகள் தனியார் மருத்துவனைகளில் செலுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

                   இவர்கள் ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்க தயாராக இல்லை. உற்பத்தியாவதில் ஒன்றிய அரசு 50% தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் என்றும், மீதமுள்ள 50 சதவீதங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே விநியோகிக்கப்படும் என்று கூறினார்கள். பின்னர்,மே 31,2021அன்று, உச்சநீதிமன்றம் 18-44 வயதிற்குட்பட்டவர் களுக்கான தடுப்பூசி கொள்கை "தன்னிச்சையானது மற்றும் பகுத்தறிவற்றது" என்று சாடியது. தடுப்பூசி விலை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று கூறியது.  

                              உச்சநீதிமன்றம் தலையில் கொட்டியது. மாநில அரசுகள் ஒன்றிய அரசின் கார்பொரேட்களுக்கு உதவிசெய்யும் கொள்கையை கடுமையாக விமர்சித்தன. இதன்விளைவாக   ஜூன்7,2021 அன்று தேசமக்களுக்கு உரையாற்றிய பிரதமர், தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து 75% மருந்துகளை மத்திய அரசு வாங்கும், மாநில ஒதுக்கீட்டில் 25% மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும், தனியார்  மருத்துவமனைகள் 25% தடுப்பூசிகளை ஒரு டோஸுக்கு 150 ரூபாய் என்ற விலையில் தொடர்ந்து வாங்கலாம் என்றும் அவர் கூறினார். இப்போது இலவசம் பற்றி மார்தட்டி கொண்டிருக்கிறார்கள்.

                ஜூலை1,2021 அன்று ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், "அனைத்து குடிமக்களும் அவர்களின் வருமான நிலையைப் பொருட்படுத்தாமல் இலவச தடுப்பூசிக்கு போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. மேலும் பணம் செலுத்தும் திறன் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளலாம் என்றும்  தனியார் மருத்துவமனைகள் ஒரு டோஸுக்கு அதிகபட்சமாக ரூ.150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம் என்று அறிவித்தார்கள்.

                 ஒன்றிய அரசு இதுவரை தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எத்தனை என்பதை அதிகாரபூர்வமா அறிவிக்கவில்லை. ஆனால் தடுப்பூசிகளை  செலுத்துவதற்கான அதிகாரபூர்வ வலைதளங்கள் தற்போது, ​​91,055 உள்ளது. இவற்றில் 88,462 அல்லது 97% அரசு சுகாதார மையங்களாகவும், 2,593 அல்லது 2.8% தனியார் சுகாதார மையங்களாகவும் உள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள மூன்று தடுப்பூசிகளுக்கான கட்டணமாக கோவிஷீல்டுக்கு ரூ.780, கோவாக்சின் ரூ.1,410 மற்றும் ஸ்புட்னிக் ரூ.1,145 என விலையும்  நிர்ணயித்துள்ளது.

         எனவே நமது பிரதமர் பேசி இருப்பது 100 சதம் உண்மையல்ல. செப்டம்பர் வரையிலும் 6 சதம் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளன. அதன் பிறகும் தனியார்கள் செலுத்தியுள்ளனர். உச்சநீதிமன்றம்  கடுமையாக ஒன்றிய அரசை கேள்விக்குள்ளாக்கிய பிறகுதான் இதுவரை செலுத்திய இலவசமும் கிடைத்தது. இல்லையேல் கார்பொரேட்களுக்கு கொடுத்திருப்பார்கள்.  100 கோடி இலவசம் என்ற பொய் மட்டுமே உண்மை.


பாக்கியம்


India spend

 https://www.factchecker.in/fact-check/no-all-100-crore-covid-19-vaccine-doses-werent-given-for-free-in-india-782799

 

செவ்வாய், அக்டோபர் 26, 2021

4. பொய் மட்டுமே உண்மை! /பாக்கியம்.

 


4. பொய் மட்டுமே உண்மை!


                           மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் மாதம் லக்னோவில் பேசுகிற பொழுது சட்டம் மற்றும் ஒழுங்கின் பாதுகாப்பதில் உத்தரபிரதேசத்தை "முதல் இடத்திற்கு" கொண்டுசென்ற ஆதித்யநாத் நிர்வாகத்தை பாராட்டினார். இவர் பேசிய அடுத்த ஒரு மாதத்தில் தேசிய குற்றவியல் ஆவண கழகம் இந்தியாவில் குற்றசம்பவங்கள் பற்றிய 2020-ம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.

               அந்த அறிக்கை உள்துறை அமைச்சர் பொய் மட்டுமே சொல்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்வதற்கு ஆதாரமாக அமைகிறது.

                உத்தரபிரதேசத்தில், இந்திய குற்றவியல் சட்டப்படி 2018-ம் ஆண்டு 3,42,355,  குற்றப்பதிவுகள், 2019-ம் ஆண்டு 3,53,131 குற்றப்பதிவுகள் 2020-ம் ஆண்டு 3,55,110குற்றச்செயல்கள் படிப்படியாக அதிகரித்திருப் பதை  தேசிய குற்றவியல் ஆவண கழக அறிக்கை வெளிச்சம் போட்டுகாட்கிறது.

                இவைத்தவிர சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டப்படி(SLL) நடைபெற்ற குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் இந்தகாலத்தில் உத்தரபிர தேசத்தில் அதிகமாகி உள்ளது. இந்தச் சட்டத்தின்படி 2018-ல் 24,280  குற்றங்கள், 2019-ம் ஆண்டு 27,547 குற்றங்கள், 2020-ம் ஆண்டு 32,815  குற்றங்கள் என அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்ககூடிய என்.சி.ஆர்.பி. அறிக்கைக்கு மாறாகவே அதனுடைய உள்துறை அமைச்சர் பொய் பேசுகிறார்.


                  உத்தரபிரதேசத்தில் தேசிய சராசரியை விட அதிகமான அளவிற்கு கொலைகள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 3779 கொலைகள் நடந்துள்ளது. இதேபோன்று கடத்தல் 12,913 நடைபெற்றுள்ளது. சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருந்தாலும் சிறார்களின் குற்றச்செயல்கள் 23% உத்தரப்பிரதேசத்தில் அதிகமாகியிருக் கிறது இதற்கு காரணம் பொதுமுடக்கம் காலத்தில் கல்வி, வேலைவாய்ப் பின்மைதான்  காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.


                   இவை தவிர "மாநிலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்ற தலைப்பில் அதிகமான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் பதிவுசெய்யப் பட்டுள்ளது. போராட்டம் நடத்தக் கூடிய மக்களுக்கு எதிராக தேசத்துரோக குற்றங்களை சுமத்தி, பொதுச்சொத்துசேதம் விளைவித்த சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கைகளும் வழக்குகளையும் கண்மூடித்தனமாக உத்தரபிரதேச அரசு கொடுத்து வந்தது.


                   2020-ம் ஆண்டு நாடு முழுவதும் 5613 வழக்குகள் "மாநில அரசுக்கு எதிராக"
( offences against the state ) என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 80.6 சதவிகிதம் அதாவது 4524 வழக்குகள் பொது சொத்தை சேதப்படுத்திய சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து 14.2 சதவிகிதம் 796 வழக்குகள் உபா(UAPA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

                ஆனால் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 95 சதமான வழக்குகள் பொதுச்சொத்து சேதப்படுத்துதல் என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும்   குடியுரிமைச்திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்காகும். அதேபோன்று 72 வழக்குகள் உபா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பிரிவினை கிளர்ச்சிகள் நடைபெறாத ஒரு மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத அளவு அதிகமாக உபா சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்கள் போராட்டம் உட்பட மாநில அரசுக்கு எதிராக தேசவிரோத குற்றமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

                         பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் இக்காலத்தில் அதிகமாகியிருக்கிறது. 2019-ம் ஆண்டு 45,935 குற்றங்களி லிருந்து 2020-ம் ஆண்டு 50,291 என்று உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் 9.4சதவிதம் அதிகரித்துள்ளது.  அமித்ஷா பெருமை பீற்றிய  உத்தரபிர தேசத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான  குற்றங்கள் 12,714 என்ற எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிகமாக 25.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

                கொலை, கொள்ளை, சிறார் குற்றங்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல், தேசத்துரோக வழக்குகள், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், என உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப் படாமல் சீர்கெட்டு கிடக்கிறது, ஆனால் நமது நாட்டின் உள்துறை அமைச்சர் உண்மைக்கு மாறாக பொய் பேசுகிறார். பொய் பேசுவது மட்டுமே உண்மையாக இருக்கிறது. 

பாக்கியம்

3. பொய் மட்டுமே உண்மை / பாக்கியம்

 

3. பொய் மட்டுமே உண்மை

                  "ஸ்ரீ நரேந்திரமோடி ஜி தலைமையில் உள்ள அரசு 100 கோடி கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை செலுத்தி உலகின் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. எங்களது முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு எனது நன்றி" என்று ஒன்றிய மின்துறை அமைச்சர் ஸ்ரீ லாட்ஜ் கேசிங் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். இதற்கு தடுப்பூசி சதம் என்று பெயர் வைத்துள்ளார். இது தடுப்பூசி சதம் அல்ல பொய்களின் சதம் என்று பெயர் சூட்டலாம்.

            இது உண்மை அல்ல. எதற்கெடுத்தாலும் மோடியும் அவரது பரிவாரங்களும் உலகிலேயே முதல், உலகிலேயே முதல் என்று பொய் பேசிப் பேசி பழக்கப்பட்டு, அதையே நம்பத் துவங்கியதின் விளைவு இது.

           இந்தியா தனது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜனவரி 16, 2021 அன்று துவங்கியது. அக்டோபர் 21,2021 அன்று மாலை 5.55மணிக்கு (1,00,57,42,472) அதாவது 100 கோடியே 57 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இவற்றில் (71,02,98,755)  71 கோடி முதல் தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு தடவை தடுப்பூசி போட்டவர்கள் (29,45,91,727) 29 கோடி பேர்கள் மட்டுமே.

                        உலகில் முதல் முதலாக 100 கோடி தடுப்பூசியை செலுத்திய நாடு சீனா. ஜூன் 19 2021 சீனா 100 தடுப்பூசியை செலுத்தியது. ஆகஸ்ட் 26,2021சீனா 200 கோடியை கடந்து விட்டது. அக்டோபர் 20,2021 வரை சீனா 223 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. உலகில் கொரோனா தொடர்பான ஆய்வுகளை செய்யும் அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தின் தரவுகள் இதை வெளிப்படுத்தி உள்ளன.

வெள்ளி, அக்டோபர் 22, 2021

ஜே.டி. பெர்னாலின் வரலாற்றில் அறிவியல் ஒரு பின்னணி /அ.பாக்கியம்

 

ஜே.டி. பெர்னாலின்

வரலாற்றில் அறிவியல்

ஒரு பின்னணி

நூல் அறிமுகம்

 

        பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் ஜே.டி பெருனால் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பிரபலமானது  வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகம். நான்கு பாகங்களை கொண்ட மிகப்பெரிய நூலான இந்த புத்தகத்தின் முதல் பாகம் மட்டும் 1400 பக்கங்களைக் கொண்டது. ஆங்கிலத்தில் இருக்கக்கூடிய இந்த புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப் படவில்லை. இந்த புத்தகம் அறிவுலகில் மட்டுமல்ல சமுதாயம் முழுமைக்கும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய புத்தகம். பெர்னால் புத்தகத்தின் முக்கியத்துவம் கருதி தென்சென்னை சோழிங்கநல்லூர் அறிவியல் இயக்கம் ஏற்பாடுசெய்த கூட்டத்தில் குவாண்டம் இயங்கியல் பேராசிரியர்.வி.முருகன்  அவர்கள் தொடர் சொற்பொழிவாற்றினார். அந்த சொற்பொழிவுகளை பாரதிபுத்தகாலயம் புத்தகமாக கொண்டுவந்துள்ளது.

 

ஆங்கில புத்தகத்தை படிப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு  பேராசிரியர் முருகன் அவர்களின் இந்தபுத்தகம் அரிய வாய்ப்பாகும். புததகத்தின் முக்கிய அம்சங்களை எளிய முறையில், புரிந்து கொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பாகும். ஒரு நாடகத்தின் கட்டியங்காரனாக மட்டுமல்ல,  புத்தகத்தின் தாக்கங்களையும் முருகன் அவர்கள் மிகச் சிறப்பான முறையில். வாசிப்பதற்கு எவ்வித தடையுமின்றி கொடுத்திருப்பது மேலும் சிறப்பாகும்.

 

                 நாம் அறிவியலின் வரலாற்றை படித்திருப்போம் ஆனால் வரலாற்றில் அறிவியலின் பங்குபற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத் திருக்கிறது அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவது தான் இந்த புத்தகத்தில் அடிப்படை.  சமுதாய மாற்றத்தில் அறிவியலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியில் சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. நமது சிந்தனைகளை சமூக கட்டமைப்பு தான் தீர்மானிக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.  வரலாற்றியலின் வளர்ச்சி விதிகளை  அறிவியல் ரீதியில் அறிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் வளமிக்க துணையாகும்.

அறிவியல் என்றால் என்ன?

           அறிவியல் என்பதற்கான  பொருளை நான்கு வரிகளுக்கான விளக்கமாக அளிப்பதை  ஜே.டி. பெர்னால்   ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவியல்என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும்   அந்த விளக்கங்களையும் கடந்து அறிவியலின் வரையறை இருக்கிறது என்பதை அடுக்கடுக்கான விவாதங்களை முன்வைத்துள்ளார். இறுதியாக அறிவியல் பற்றி அவர் முடிக்கிற பொழுது ஐந்து அம்சங்களை குறிப்பிட்டுவிட்டு கீழ்க்கண்ட பகுதியோடு முடிக்கிறானர்."அறிவியல் என்பது  பழங்காலத்திலிருந்தே உள்ளது. அது மாறிக்கொண்டே இருக்கிறது. அறிவியலை சமூகத்திலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் அறிவியலை இன்னதென்று துல்லியமாகவும் சுருக்கமாகவும் வரையறுக்க முடியாது. அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு அவை உள்கட்டமைப்பு, வெளியில் உள்ள சமூகத்தின் தாக்கம், இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்து பார்த்தால் தான் அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.  இந்த நிலை நமக்கு உணர்த்தும் செய்தி∶ சமுதாய மாறிக்கொண்டே இருப்பதால் அறிவியல் என்றால் என்ன என்ற புரிதலும் மாறிக்கொண்டே இருக்கிறது". என்று விடை பகர்கிறார்.

 

உலகையே அழிக்க வல்லது என்று தெரிந்தும் அணுகுண்டுகளை தயாரித்துக் கொண்டு இருக்கிறோம்? புவி வெப்பமயம் பூமிக்கு ஆபத்து என்று தெரிந்தும் நாம் ஏன் அதை அனுமதித்து கொண்டிருக்கிறோம்?

மேற்கண்ட அம்சங்களை புரிந்து கொள்வதற்கு இன்றிருக்கும் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கு உள்ள தொடர்புகளை புரிந்து கொண்டால் மட்டும் போதாது. வரலாற்று ரீதியிலான உறவுகளை புரிந்து கொண்டால் மட்டும் தான் மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகாண முடியும் என்பதை விளக்குகிறார். அப்படி ஏற்படும் புரிதலின் அடிப்படையில்தான் அறிவியலை மக்களுக்காக பயன்படுத்த தேவையான சூழல் நிலைகள் எவை? அவற்றை உருவாக்குவது எப்படி? என்று சிந்திக்க முடியும்.

 

         வரலாற்றில் அறிவியலின் பங்கை ஆய்வு செய்து அறிவியலின் சார்பு நிலைகளையும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற  அல்லது தேக்கத்திற்கு ஏற்றவகையில் அறிவியல்  வளர்ச்சியில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அவர்கள் விளக்கியுள்ளார்கள்.அறிவியல் வளர்ச்சியும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்திற்கு பயன்பட்டது என்பதை அறிவியல் வார்த்தைகளில் விளக்கியுள்ளார்கள்.

 

                 புதிய கண்டுபிடிப்புகள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் முதலில் அதை ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகத்தான் லாபம் ஈட்டும் நோக்கத்தோடுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின்சார பல்பை கண்டுபிடித்த உடன் அது பொது மக்களுடைய வாழ்விடங்களுக்கு செல்வதைவிட இருட்டிய பிறகும் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்குதான் தொழிற்சாலைகளில் பயன் படுத்தப்பட்டது. தற்போது  கொரோனா தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டது அதை இலவசமாக பொதுமக்கள் அனைவரும்  கொண்டு செல்ல வேண்டும் மாறாக புதிய கண்டுபிடிப்புகள் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து சுரண்டப்படுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக செத்தாலும் அதைபற்றி கவலைப்படாமல் அழிவுப்பாதைக்க அழைத்துச்செல்கிறார்கள்.

 

              ஆனால் முதலாளித்துவம் எப்பொழுதுமே நடுநிலை என்ற பதாகையின் பின்னால்தான் ஒளிந்து கொண்டு செயல்படும். மார்க்சிய சித்தாந்தம் வளர்ந்து வரக்கூடிய காலகட்டத்தில் காரல் மார்க்ஸ் சித்தாந்தம் வர்க்க சார்புடையது என்று ஆதாரங்களை முன்வைத்தார் முதலாளித்துவ அறிஞர்கள் சித்தாந்தத்தின் சார்புநிலை ஆபத்தானது  அது அறிவியலை பாதிக்கும் என்று மார்க்சியத்தை தாக்கிக்கொண்டிருந்தனர். தோழர் லெனின் இதற்கான பதிலை ஆணித்தரமாக எடுத்து  கீழ்கண்டவாறு முன்வைத்து

 

                       முதலாளித்துவ வர்க்கம் சார்பு நிலையற்றது எந்த வர்க்கத்தையும் சாராதது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. சிந்தாந்த சார்புநிலை கோட்பாடு விஞ்ஞானத்திற்கு எதிரானது  என்று முதலாளித்துவவாதிகள் முன்வைக் கிறார்கள். இது மக்களை ஏமாற்றவும் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் வலுப்படுத்துவதற்கும் செய்யக்கூடியதாகும். சார்புநிலையை மறைத்து, அதற்கான உண்மையை மறைத்து, விஞ்ஞான நேர்மையற்ற முறையில், அறிவியல் ஆராய்ச்சிகளை தன்னுடைய சுரண்டலுக்கு ஏற்றவகையில் முதலாளித்துவ வர்க்கம் மாற்றி அமைத்துக் கொள்கிறது என்று கடுமையாக சாடுகிறார்.

 

                         பொருளாதாரம் போக்குதான் அறிவியல் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் தேகத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணம் என ஒரு பொதுவான கருத்தை ஜே.டி.பெர்னால் முன்வைக்கிறார். இதற்கான ஆதாரங்களை கிரீஸ், எகிப்து, மெசபடோமியா, ரோம,. இந்தியா.,சீனா, ஐரோப்பாவில் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்குகளையும் அதில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக  முன்வைக்கிறார். பொருளாதார நெருக்கடிகள் அறிவியல் வளர்ச்சிபோக்கில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்று இந்த புத்தகத்தின் வாயிலாக நாம் புரிந்துகொண்டால் தற்போது நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கக் கூடிய போக்குகரளை இணைத்து தெரிந்துகொள்ள முடியும்.

 

         அன்று இருந்த ரோமானியர் பொருளாதாரத்தில் செல்வம் ஒரு சிலரிடம்

குவிந்து இருந்தது. அடிமைகளும் மக்களும் ஏழ்மையில் இருந்தனர் சமூகத்தில் ஒரு நெருக்கடி உருவாகியது. அங்கு நிலவிய ஏழ்மையானது சந்தைப் பொருள்களுக்கான தேவையை குறைக்கிறது. வியாபாரிகள் நிலையியும் கைவினைஞர்கள் நிலையும் மோசமானது. எனவே அறிவியல் செய்வதற்கான ஊக்கம் இல்லை. ஏற்கனவே செய்து வைத்த அறிவியலின் வளர்ச்சியும் அதன் துடிப்பை இழந்துவிட்டது. இறுதியாக அலெக்சாண்டிரியா  நூலகம் எரிந்தது போல் அல்லது குளிப்பதற்கு தண்ணீரை சுட வைப்பதற்கு எரிபொருளாக புத்தகங்களை உபயோகிப்பது போன்ற பல வழிகளில் அழிந்துவிடும்.

 

இந்தியாவைப் பற்றி ஜே.டி.பெர்னால் குறிப்பிடும் பொழுது "ஜாதிய கட்டமைப்புகள் நன்றாக வேரூன்றியதால். இந்துமதம் உறைந்து போனது. அது மிகவும் ஸ்திரமான சமுதாயம். ஆனால் வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை விலையாக கொடுத்துவிட்டு நன்கு ஸ்திரமாக செயல்பட்ட சமுதாயம். வளர்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை சாதிய கட்டமைப்பு மாறாமல் தொடரவேண்டும் என்ற கண்ணோட்டம் தான் இருந்தது."

 

              இன்றைய இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. மோடி ஆட்சியில் கார்ப்பொரேட்களிடம் செலவகுவிப்பும, மறுபக்கம்  வறுமை தாண்டவமாடுகிறது.  வகுப்பு வாதிகள் அறிவியல் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றனர. ஆய்வுகளை தடுக்கின்றனர். மூடப்பழக்க வழக்கங்களை வளர்ப்பது வரலாற்றை திருத்துவது, விஞ்ஞானிகளை, படுகொலை செய்வது, வேதத்தில்  அனைத்தும் இருக்கிறது என்று இதர புத்தகங்களை அழிப்பது நமது நாட்டில் அன்றாட காட்சிகளாக மாறிவிட்டன. இந்திய பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

 

                      ரோமானிய, கிரேக்க நாகரீகத்திற்கும், அதற்குப் பின்வந்த நாகரிகங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அது கிறிஸ்தவ மதமும் இஸ்லாமிய மதமும் ஆகும்.  கடவுள், நம்பிக்கை, மதங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆகியவை எல்லா காலங்களிலும் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமிய மதமும் அவற்றுக்கு முன்பிருந்த மதங்களில் இருந்து மாறுபட்டவை. அவை நிர்வாக அமைப்பில் செயல்பட்டவை. இந்த மதங்களின் நிர்வாக அமைப்புகள் ஒரு அரசியல் நிர்வாக அமைப்பிற்கு இணையானவை. அரசுகளை விட நிலைத்த தன்மை உள்ளவை. மக்களின் சிந்தனைகளில் மிகப்பெரிய அளவிற்கு ஆட்சிபுரிந்தது. அரசியல் தளத்திலும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் அறிவியல் வளர்ச்சியை தடுத்தது என்று பெர்னால் சுட்டிக்காட்டுகிறார். இந்த மதங்களை பெர்னால் கடுமையாக சாடவில்லை. மாறாக இந்த மதங்கள் தோன்றியதற்கான பொருளாதார சூழ்நிலைகளை சுட்டி காண்பிக்கிறார்.

 

இந்த புத்தகத்தை வாசிப்பதன் முலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விளர்ச்சிப்போக்குகளை தெரிந்துகொள்ள முடியும்

கி.பி. 1400 ஆண்டுகளுக்கு முன்பு சீனா, கிரீஸ், இந்தியாவிலும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.  ஆனால் இங்கெல்லாம் ஏன் தொழில் புரட்சி ஏற்பட வில்லை? ஏன் நவீன அறிவியல் வளர்ச்சி ஏற்படவில்லை? ஐரோப்பாவில் மட்டும் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை பல புதிய பரிணாமங்களுடன்  விளக்கியுள்ளார்.

 

               குறிப்பாக கிரீஸ் நாகரீகத்தில் எந்திரஇயலில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அவர்கள் அடைந்திருந்த அந்த வளர்ச்சியை தொழில்  புரட்சியில் பெரும் பங்காற்றிய நீராவி என்ஜின் மற்றும் துணிநெய்வது ஆகிய தொழிலில் ஏற்பட்ட நுணுக்கங்களை அடைவதற்கு போதுமானது ஆனாலும் ஏன் அங்கு தொழில்புரட்சி நடைபெறவில்லை? என்பதற்கான பொருளாதார ரீதியிலான விளக்கங்களை முன்வைத்துள்ளது நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

"தொழில் புரட்சியை நோக்கி போவதற்கான பொருளாதாரத் தேவை அன்று இல்லை. அதனால் தொழில் புரட்சியை நோக்கி போவதற்கான ஊக்கமும் ஆர்வமும் அன்று எழவில்லை. பெருமளவில் பொருட்களை உருவாக்க தேவையான சந்தை இல்லை. செல்வந்தர்களுக்கு கையால் உருவாக்கப்பட்ட பொருட்கள் போதுமான அளவில் கிடைத்தன. ஏழைகளுக்கு பொருட்களை வாங்கும் சக்தி இல்லை. அவை இல்லாமலேயே வாழ்ந்தார்கள். பொருளாதார சூழ்நிலையில் காரணமாகத்தான் தொழில் புரட்சியை நோக்கி செல்லவில்லை.

 

         கிபி 1000 ஆண்டுகளுக்குப் பிற்பாடு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் தொழில் நுட்பங்கள் முக்கிய பங்காற்றின. குறிப்பாக சீனா கண்டுபிடித்திருந்த குதிரையின் கழுத்துப்பட்டை, கேம்பஸ் (கப்பலை இயக்கும் சுக்கான்) வெடிமருந்து, காகிதம், அச்சுஇயந்திரம், ஆகியவை ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவம் கண்டுபிடிக்கவில்லை. அவை கிழக்கு நாடுகளிலிருந்தும், சைனாவிலிருந்தும் கிடைத்தவை. இந்த தொழில்நுட்பங்களும் அவற்றால் ஏற்பட்ட வியாபாரத்தில் வளர்ச்சியாலும் ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவம் உடைந்தது. 

 

       இதேபோன்று கிரேக்க ரோமானிய நாகரீகம் அழிந்தாலும் அவர்களுடைய அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து எடுத்துச் சென்று  செழுமைப்படுத்தியது இஸ்லாமிய நாகரீகத்தின் முக்கியமான பங்காகும். ஐரோப்பாவினர்தான், அரபு நாடுகளில் வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் முழுப் பயன்களை அடைந்தவர்கள் என்று பெர்னால் கூறுகிறார்

 

                        தத்துவார்த்த வளர்ச்சியில் கிரேக்க நாட்டில் அயோனி பள்ளியின் வளர்ச்சியை அதன் சிறப்புகளை குறிப்பிட்டு விவரிக்கிறார் அதே நேரத்தில் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இயற்கை தத்துவம் அறிவியல் வளர்வதற்கு எவ்வாறு தடையாக இருந்தார்கள் முற்போக்கான தத்துவத்தை மடைமாற்றியதில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ம பங்கு பிற்போக்குத்தனமக இருந்தது என்பதை வலுவான முறையில் எடுத்துரைக்கிறார். சாக்ரடீஸ் இயற்கை ஆய்வுகளை மடைமாற்றி வாழ்க்கைக்கான ஆய்வாக கொண்டு சென்றார். இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று போதித்தார். பிளாட்டோ ஜனநாயக அமைப்பை வெறுத்ததுடன் அடிமை முறைகளை ஆதரிக்கவும் செய்தார்

அரிஸ்டாட்டிலின் இயற்பியல் அடுத்த 1800 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தது. அனைத்தும் தவறானவை. அரிஸ்டாட்டில் இயற்பியலை தூக்கி எறிந்ததே கலிலியோ செய்த மாபெரும் சாதனை என்று பெர்னால் கூறுகிறார்.

 

                  நகரங்களில் இருந்துதான் நாகரீகங்கள் வந்தன என்ற கருத்தை மறுத்து நாகரீகங்களின் வளர்ச்சிப்போக்கில் நகரங்கள் உருவாகின என்ற  கருத்தை முன்வைக்கிறார். நகரங்களும் அரசு அமைப்பும் தோன்றியதை அளவு மாற்றத்தில் இருந்து உருவான பண்பு மாற்றமாக பெர்னால் குறிப்பிடுகிறார்

 

                   இந்தப் புத்தகத்தில் வரலாற்றில் அறிவியலின் பங்கு அதன் நாகரீக காலங்களை தனித்தனியாக பிரித்து அதனுடைய வேறுபாடுகளையும் தொடர்புகளையும் ஆய்வு செய்கிறார். வரலாற்றில் அறிவியல் என்ற இந்த புத்தகம் இதுவரை வாசிக்காதவர்களுக்கு புதிய வெளிச்சத்தைகொடுக்கும். முடநம்பிக்கையை மட்டுமல்ல அறிவியல் தொடர்பான முடநம்பிக்கைகளையும் அகற்றும்.

அ.பாக்கியம்

2021 மார்க்சிஸ்ட் மாத இதழில் வெளியானது

 

   

 

 

 

 

வியாழன், அக்டோபர் 21, 2021

2.பொய் மட்டுமே உண்மை /பாக்கியம்

 

2.பொய் மட்டுமே உண்மை


ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா 16.10.2021 கோவா மாநிலத்தில் பாஜகவின் ஊழியர்கள் மத்தியில் பேசுகிறபொழுது, இந்திய நாட்டின் கடவுச்சீட்டுக்கு(பாஸ்போர்ட்) மதிப்பு உயர்ந்திருக்கிறது என்று மார்தட்டியுள்ளார்.

"இப்பொழுதெல்லாம் இந்தியாவின் கடவுச்சீட்டை பார்க்கிற வெளிநாட்டு அதிகாரிகள் முகத்தில் சிரிப்பைக் காணமுடிகிறது. நீங்கள் மோடியின் நாட்டிலிருந்த வருகிறீர்களா? என முகமலர்ச்சியுடன் கேட்கிறார்கள்" என்று கதையளந்துள்ளார். இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால் இல்லை. பொய் சொல்வது மட்டுமே பிழைப்பாக, கொள்கையாக கொண்டுள்ள எவருக்கும் ஆதாரங்கள் தேவையில்லை.
                      "நாம் யாருடைய மனதை மாற்றுவதற்காக பொய்பிரச்சாரங்களை செய்கிறோமோ அவர்களுக்கு நாம் சொல்லித்தான் அனைத்தையும் நம்புகிறார்கள் என்ற நினைப்பே வராமல் தாங்களாகவே சுயமாகவே தான் சிந்திக்கிறார்கள் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பரப்புரை மிகச் சிறப்பாக வேலை செய்யும்" என்று ஹிட்லரின் பிரச்சாரகர் ஜோசப் கோயபல்ஸ் பேசியுள்ளார்.

               பாஜகவின் தலைவர்கள் எதை சொன்னாலும் அவையெல்லாம் உண்மை தான் என்ற நிலைக்கு பாஜகவின்  ஊழியர்களை ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள். ஆகவே தான் இப்படி பொய்களை மட்டுமே சொல்ல முடிகிறது.

 

 உண்மையில் இந்திய கடவுச்சீட்டின் நிலைமை என்ன. கடச்சீட்டு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது.

                கடவுச்சீட்டு மதிப்பீடு செய்வதில் இரண்டு விதமான அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள் . பயணம் செய்யக்கூடிய நாடுகள் எண்ணிக்னை, விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து அளவீடு செய்யகூடிய முறை ஒன்றாகும்.

                      தேசிய வருமானத்தில் மூலதன கட்டணங்கள், ஊதிய செலவுகள் மற்றும் வரிகளில் சமமான பங்கீடு, தனிநபர் வருமானம், வளர்ச்சி விகிதம் மற்றும் உற்பத்தி செயல்பாட்டின் அளவுகள் ஆகியவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

                  ஹென்லி & பார்ட்னர்ஸ், லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனம், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ), உலகின் விமான நிறுவனங்களுக்கான வர்த்தக சங்கத்தால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தரவரிசைகளை தீர்மானிக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆய்வுகள் சுமார் 290 விமான நிறுவனங்கள் அல்லது மொத்த விமான போக்குவரத்தில் 82% பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காலாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்ட இந்த குறியீட்டில் 199 வெவ்வேறு பாஸ்போர்ட்டுகள் மற்றும் 227 பயண இடங்கள்  உள்ளடக்கி தரவரிசை வெளியிடப்படுகிறது.


                இந்திய கடவுச்சீட்டின் மதிப்பு 2020 ஆம் ஆண்டில் 82வது இடத்திலிருந்து 2021-ஆம் ஆண்டு 90-வது இடத்திற்கு சென்றுள்ளது. எட்டு இடங்கள் பின்தங்கி உள்ளது. 2014- ம் ஆண்டு மோடி பதவியேற்ற போது இந்திய கடவுச்சீட்டின் மதிப்பு 76-வதுஇடத்தில் இருந்து தற்போது 90 ஆவது இடத்திற்கு சென்று இருக்கிறது. இந்த வீழ்ச்சியைத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதிப்பு உயர்ந்திருக்கிறது என்று தலைகீழாக பேசியுள்ளார். வீழ்ச்சி அனைத்தையும் வளர்ச்சி என்று கருதும், நம்பும் தலைவர்களாக தான் சங்க்பரிவார தலைவர்கள் இருக்கிறார்கள்.

 

         இந்த மதிப்பீட்டின்படி இந்திய கடவுச்சீட்டு 58 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதாவது 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். மேற்கு ஆப்பிரிக்கா தஜகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்திய கடவுச்சீட்டின் மதிப்பு இருக்கிறது.ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள்தான் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து ஜெர்மனியும் தென்கொரியாவும் 190 நாடுகளுக்கு பயணிக்கலாம்  இரண்டாமிடம் வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் மட்டும்தான் வெறும் 26 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில் 116 வது இடத்தில் உள்ளது.


                          நமது உள்துறை அமைச்சர் பெருமை பீற்றிக் கொள்ளக்கூடிய கடவுச்சீட்டின் மதிப்பு எங்கே உயர்ந்திருக்கிறது என்று இப்போது புரிகிறதா?
எப்படி படுத்து புரண்டாலும் இந்திய கடவுச்சீட்டில் மதிப்பு வீழ்ந்து உள்ள நிலையில் கடவுச்சீட்டு மதிப்பு மோடி ஆட்சியில் உயர்ந்திருக்கிறது என்று உள்துறை அமைச்சர் பேசியிருப்பது பொய் என்பதுதான் உண்மை.

 

 

82 உய்குர்- கட்டாய கருத்தடை,கட்டாய உழைப்பு,மசூதிகள் இடிப்பு?

  அ.பாக்கியம் சின்ஜியாங் பற்றிய மேற்கத்திய நாடுகளிலும் அதன் ஊடகங்களிலும் சில பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பொய்களு...