Pages

திங்கள், மார்ச் 07, 2016

கண்ணாமூச்சி ஏனடா? கருப்புப் பணம் எங்கடா?

ஏ.பாக்கியம்
நம்ம புள்ள நம்ம தொழிலை கத்துக் கலையே என்று பெத்த அப்பனுக்கு பெரும் கவலை...!

அரட்டியும், அடித்தும் சொல்லிக் கொடுத்துப் பார்த்தான். பையனுக்கு ஏறிய பாடில்லை.,,,

கெஞ்சியும் பார்த்தான் கேட்கவில்லை.,,,

வேறு வழியில்லை பையனை ஆத்துல அமுக்கிவிடலாம் என கருதி தோளில் சுமந்து சென்றான்.,,

கழுத்தளவு தண்ணீரில் நின்று புள்ளையை மூழ்கடிக்க நினைத்த போது,,,,

பையன் இரு கைகளையும் தண்ணீரில் அடித்து, யப்பா என்று கத்தினான்,,,

என்னடா மகனே ?

ஒரு மீனை புடிச்சிட்டேன் !

எங்கே காட்டு !

சுட்டு சாப்பிட்டேன்.

ஆஹா நீதான்டா அருமை மகன். எங்கே... பொய்த் தொழிலை நீ தொ லைத்துவிடுவாயோ என்று பயந்தேன் என்றான். அப்பனுக்கு அளவற்ற மகிழ்ச்சி! நம் புள்ள இனிமே பெரிய ஆளுதான் என கரையில் இறக்கிவிட்டான்.அப்படிப்பட்ட புள்ளதான் வளர்ந்து இப்ப நம் நாட்டு நிதி அமைச்சராகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

                    அந்தளவிற்கு பொய்த் தொழிலை கூச்சநாச்சமின்றி செய்துகொண்டிருக்கிறார் அருண் ஜெட்லி. கருப்பு பண விவகாரத்தில் மத்தியநிதி அமைச்சர் ஜெட்லி தொடர்ந்து கண்ணாமூச்சி விளையாடிக் கொண் டிருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது 13 முறை கருப்புப் பணம் என்ற வார்த்தையை பயன் படுத்தினார். இந்திய பொருளாதாரத் தை நசுக்கி சீர்குலைக்கும் பணியை இந்த கருப்புப் பணம் செய்கின்றது எனஅருண்ஜெட்லி அங்கலாய்த்தார். கருப்புப்பணத்தை மீட்டெடுப்போம், பதுக்கிய வர்களை தண்டிப்போம் என்று சூளுரைத் தார். இதற்காக தனிச்சட்டம் இயற்ற வேண் டும் என்ற அறிவார்ந்த ஆலோசனை யையும் முன்வைத்தார்.ஆனால் இந்த பட்ஜெட்டில் அதைப் பற்றி மூச்சு விடவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச் சாரத்தின்போது பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் திருவாளர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை திருப்பிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் முதல்ரூ.20 லட்சம் வரை கொடுக்கலாம் (2013, நவம்பர் 7) என்று பேசினார். அந்த வாய்ச்சொல் வீரரின், நடிப்புச் சுதேசி யின் சொல்லாடலை பலரும் சிலாகித்த னர். வெற்றிபெற்று நாடாளுமன்ற படிக் கட்டை முத்தமிடும் வரை மோடியின் இந்தகருப்புப் பண பேச்சு தொடர்ந்தது. நாடாளு மன்றத்தை அவர் முத்தமிட்ட போதே கருப்புப் பண பேச்சை ஆழக் குழிதோண்டி புதைத்துவிட்டார்.

                  கருப்புப் பண விவ காரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய பிறகு, கள்ள மவுனத்தைக் கலைத்த பாஜக தலைவர் அமித்ஷா, அது வெறும் அரசியலின் வழக்கமான உணர்ச்சி வெளிப்பாடுதான், உண்மையல்ல (2015 பிப்ரவரி 5) என்றுவெட்கமில்லாமல் அறிக்கை விட்டார்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... என்று கவுண்டமணி காமெடி செய்ததற் கும், அமித்ஷா அறிக்கைவிட்டதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலி யுறுத்தியதால், வேறுவழியின்றி அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் கருப்புப் பணச் சட்டம் (க்ஷடடிஉம அடிநேல ரனேளைஉடடிளநன கடிசநபைn inஉடிஅந யனே யளளநவள - யனே iஅயீடிளவைiடிn டிக வயஒ யஉவ - 2015) கொண்டு வந்தார். கருப்புப் பணச் சட்ட விதியின்படி ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம்.

கத்தி வந்தது... வால் போனது... டும்! டும்! டும்!

               சட்டம் வந்தது. ஆனால் கருப்புப்பணம் வந்ததா..? என்றால் இல்லை. இருந்த பணத்தை எடுத்துச் சென்ற லலித் மோடிக்கு சுஷ்மா உதவி(?) புரிந்தார். வசுந்தரராஜே தனது மகன் மூலம் வர்த்த கம் செய்தார். இவர்கள் கருப்புப் பணத் திற்கு காவலாக நின்றனர்.. பாதுகாப்பு கொடுத்தனர்.கருப்புப் பணச் சட்டம் கொண்டு வந்த தற்காக 644 பேரின் பட்டியலை வெளியிட்டனர். இந்த பட்டியலில் உள்ள வர்கள் மூலம் ரூ.4,164 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதிப் படுத்தினர். இவற்றிற்கு 30 சதவீதம் வரி, 30 சதவீதம் அபராதம் என ரூ. 2428 கோடி வரவாகி உள்ளது. மோடி சொன்னது போல், தலைக்கு 15 லட்சம் ரூபாய் அல்ல..20 ரூபாய்கூட தேறவில்லை.

         இதுவும்கூட ஐமுகூ அரசு காலத்தில் ரூ.6,500 கோடி கருப்புப்பணம் இருக்கும் என்ற அனு மானத்தின் தொடர்ச்சியாகத்தான் நடந்தது. தலைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கிடைக்கும் என பேசியதுஏமாற்று வேலை என்பதற்கு அமித்ஷா ஏற் கனவே ஒப்புதல் அறிக்கை கொடுத்து விட்டார். இதில் இன்னும் ஒரு கேலிக்கூத்து, ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் பட்டியலில் உள்ள 644 பேர்களும் உண்மையான கருப்புப் பண பேர்வழிகள் அல்ல. சிறு வியாபாரிகள், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள். டாக்டர்கள் என்ற அள வில் உள்ளவர்கள்.

கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

                   நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி, அத்வானி பேசிய அள விற்கு, வெளிநாட்டில் கருப்புப்பணம் இல்லை என்று பாஜகவினர் அந்தர் பல்டி அடித்தனர். இருந்தாலும் நிதி அமைச்சர் ஜெட்லி 500 பில்லியன் டாலர் இருக்கும் என மதிப்பீடு செய்தார். இந்த பணம் நம்நாட்டிற்கு வந்துவிட்டது என்று இப்போது பலர் கருத்து தெரி வித்துள்ளனர். இனிமேல் கருப்புப் பணத்தை கொண்டுவர முடியாது என்ற னர். 2ஜி மற்றும் நிலக்கரி சுரங்க ஊழல் பணம்தான் வெளியேறிய அதிக தொகை என்று மதிப்பீடு செய்தனர். இந்த ஊழல்பணம், நேரடி அந்நிய முதலீடு (குனுஐ) மூல மும், அந்நிய நிதிநிறுவன முதலீடு (குஐஐள) மூலமும் மற்றும் போலி ஏற்றுமதி மூலமும், இதர வழிகளிலும் இந்தியாவிற்கு வந்துவிட்டது. இதில் குறிப்பாக நேரடி அந்நிய முதலீடு வரவில் மிகப்பெரும் சந்தேகம் உள்ளது என மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய (ஊநவேசயட க்ஷடியசன டிக னுசைநஉவ கூயஒநள) முன்னாள் சேர்மன் ஆர்.பிரசாத் தெரிவித்துள்ளார். கடந்த 19 மாதங்களில் இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு 48 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இது குறைந்த போது நம் நாட் டிற்கு வந்தது இந்த கருப்புப் பணம் தான்.மேலும், நேரடி அந்நிய முதலீடு செய்த நாடுகள் பெரும் தொழில்வள நாடுகள் அல்ல.

                                மாறாக சிறிய நாடுகள் ஆகும். ஏப்ரல் 15 முதல் செப் 15, 2015 வரை, 16.6 பில்லியன் டாலர் (ரூ. 1.06 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. இதில் 62 சதம் மிகச்சிறிய நாடான சிங்கப்பூர், மொரீஷியஸ் நாடு களிலிருந்து வந்துள்ளது. மற்றொரு நாடு சைப்ரஸ் ஆகும். இந்த நாடு களிலிருந்து வந்த முதலீடு நமது நாட் டிலிருந்து சென்ற கருப்புப் பணம் என அனுமானிக்கப்படுகிறது.மத்திய குற்றப்பிரிவு கமிஷனர் கே.வி. சவுத்ரி சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு சென்று வரி ஏய்ப்பு பற்றி விசாரணை நடத்தினார். அவர்,மேற்கண்ட நாடுகளிலிருந்து கருப்புப்பணம் இந்தியாவிற்கு வந்துள்ளதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
    
              இந்த கருப்புப்பணம் வருவதற்கு இந்தியச்சட்டம் இடம் தருகிறது என்ற கருத்தையும் சேர்த்தே அவர் சொல்லியுள்ளார்.கொல்கத்தாவைச் சேர்ந்த முன்னாள் வருமான வரித்துறை தலைமை அதிகாரி தேவதயாள், இன்னும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் அந்நிய நாட்டில் உள்ளது. அவர்கள் மீது அரசு கைவைக்காது. சுமார் 80 நாடுகளில் கருப்புப் பணம் இருக் கிறது. இதில் சில நாடுகள் மட்டுமே இந்தியா வுடன் தகவல் பரிமாற்றத்தில் ஒப்பந்தம் செய்து தகவல் தந்துள்ளன. மற்ற நாடு களிலிருந்து தகவல் பெற முடியாது என்று கூறியுள்ளார்.

                          கருப்புப் பணத்தில் லட்டு தின்ன ஆசையா என்பது போல் இந்திய செல் வம் கொள்ளை போக ஐ.மு.கூட்டணி அரசு வழிவிட்டது. பாஜக அரசோ இரண்டு லட்டு தின்ன ஆசையா என்பதுபோல், வெளியேறிய பணத்தை கொண்டு வரவில்லை. கொல்லைப்புறமாக கருப்புப் பணம் வந்திட வரிச்சலுகை கொடுத்து உள்ளது. வரி 30 சதவீதம், அபராதம் 30சதவீதம் என்பதும், 10 ஆண்டு தண்டனை என்பதும் அமலாகாமல் கருப்பாக சென்று, கருப்பாக (விடாது கருப்பு?) உள்ளே நுழைகிறது. அதற்கு ராஜமரியாதை அளித்து வெள்ளையாக மாற்றும் அருண் ஜெட்லி வகையறாக்கள் இந்தியாவில் வெறும் 2 லட்சம் ரூபாய் பணத்தை செலவுசெய்ய பான்கார்டு தேவை என்று உத்தரவு போடுகின்றனர்.

என்னே கொடுமை!
தீக்கதிர் 7.3.2016

செவ்வாய், மார்ச் 01, 2016

போராடினோம்.. வென்றோம்.. தொடர்ந்து போராடுவோம்

ஏ.பாக்கியம்
சிபிஐ (எம்) மாநிலக்குழு உறுப்பினர்

             அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன அந்த மரணத்தை... வணிக மய மருத்துவத்தின் மரண சாட்சியாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கும் அந்த துயரத்தை... அமுதா.. சென்னைவாசிகளின், தீக்கதிர் வாசகர்களின் நெஞ்சை சுட்ட பெயர்... உடல் மெலிய மருத்துவம் பார்க்கச் சென்றவரை லட்சக்கணக்கில் பணத்தை பறித்துக் கொண்டு, உருக்குலைத்து அனுப்பினார்கள். உடல் மெலிய வழி கேட்டவருக்கு, சுடுகாட்டுக்கு வழி சொன்னார்கள். அமுதாவின் மரணத்திற்கு காரணமான டாக்டர் மாறன் என்பவருக்கு டாக்டர் தொழில் செய்ய தடை விதித்திருக்கிறது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்.

அமுதா ஒரு பிளாஷ் பேக்

    சென்னை தி.நகரில் உள்ளது பாரதிராஜா மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் டாக்டர்கள் நடேசன், மாறன். இவர்கள், பணம் காய்க்கும் மரமாகத்தான் மனிதர்களை பார்க்கும் மனோபாவம் கொண்டவர்கள். சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியை சேர்ந்த கௌரி சங்கரின் மனைவி அமுதா(35), தெரியாத்தனமாக இவர்களிடம் போய் சிக்கி கொண்டார். உடல் மெலிய சிகிச்சை பெறுவதற்காக 01.08.2014 அன்று அமுதா, பாரதிராஜா மருத்துவனைக்கு செல்கிறார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறிய டாக்டர்கள் நடேசன் மற்றும் மாறன், இதற்காக ரூ.5 லட்சம் செலவாகும். ரூ.3 லட்சம் அட்வான்ஸ் தர வேண்டும் என்றனர். வியாபாரம் பேசி முடிக்கப்பட்டது. 11.08.2014ல் அறுவை சிகிச்சை, 14.08.2014ல் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமானதாக தெரியவில்லை. ஆனாலும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்கு சென்றதில் இருந்து அமுதாவிற்கு தொடர்ந்து வயிற்று வலி, மார்பு வலி நீடிக்கவே மீண்டும் 26.08.2014 ல் மருத்துவர்கள் நடேசன், மாறனிடம் அழைத்து சென்றனர். 

           
அவர்கள் ஒன்றுமில்லை, 10 நாள்கள் பிசியோதெரபி செய்தால் சரியாகிவிடும் என ஆலோசனை வழங்கி சிகிச்சையளித்தனர். அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து சீழும், நீரும் வெளியேறியது. 31.08.2014ல் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதன் முடிவில் மீண்டும் இரண்டாவது தடவையாக அமுதாவிற்கு அதே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 10.09.2014ல் எல்லாம் சரியாகிவிட்டது.. போங்க என்று அனுப்பினர். ஆனால், இம்முறை உணவை வாயால் உட்கொள்ளும் நிலையில் அமுதா இல்லை. அதனால், வயிற்றில் உணவு செல்வதற்காக துளை போட்டு, உணவை குழாய் மூலமாக செலுத்த வேண்டிய கருவிகளுடன் வீட்டிற்கு அனுப்பினர். அடுத்த 10 நாட்களில் மீண்டும் அமுதாவுக்கு வலியும், இதர உபாதைகளும் ஏற்பட்டன. 

         அமுதா துடிப்பதை தாங்க முடியாமல், அவரை அழைத்து சென்று விஆர்ஆர் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். இந்த பரிசோதனை முடிவோ அடுத்த அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்தது. நடேசனும், மாறனும் அமுதாவின் கணவரை அழைத்து, எங்களுக்கு கட்ட வேண்டிய பாக்கி ரூ.1.75 லட்சத்தை கட்டினால், அமுதாவை அப்போலோவில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்போம். அந்த அறுவை சிகிச்சைக்கு தனியாக ரூ.10 லட்சம் செலவாகும் என்றனர். ஒவ்வொரு முறையும் பல லட்சங்களை முன்வைத்தே அமுதவின் உயிர் விலை பேசப்பட்டது. நடேசன், மாறன் முடிவின்படி அப்போலோவில் சேர்த்து ரூ. 9 லட்சம் பணம் கட்டி அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சையின் முடிவில் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. நடேசன் மற்றும் மாறன் தலைமையில் நடந்த முதல்அறுவை சிகிச்சையிலேயே அமுதாவின் வயிற்றுக்குள் காட்டன் துணியை வைத்து தைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை ஆபத்தான நிலைக்கும் அதுதான் காரணம் என்று தெரியவந்தது.

         மீண்டும் அமுதாவின் உயிரை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. உயிர் காக்க மறு அறுவை சிகிச்சை செய்ய ரூ.70 லட்சம் செலவாகும் என்றார்கள். அமுதாவின் குடும்பம் நடேசனையும், மாறனையும் அணுகியது. நடந்த தவறுக்கு நாங்கள் செய்த அறுவை சிகிச்சைதான் காரணம் என்றது. அப்போது ஒரு நாடகத்தை நடேசன் அரங்கேற்றினார். ரூ.5 கோடிக்கு காசோலை கொடுத்தனர். நாங்கள் சொல்லும் தேதியில் காசோலையை வங்கியில் செலுத்துங்கள் என்று கட்டளையும் இட்டனர்.

         வலி தாங்காமல் துடித்த அமுதாவை உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்காக மீண்டும் மருத்துமனையில் சேர்த்தனர். அந்த மருத்துவமனைக்கு பணம் கட்ட வேண்டும் என்பதால், காசோலையை வங்கியில் போடலாமா என்று கேட்பதற்கு பாரதிராஜா மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினர். ஒரு மாதம் கழித்து போடுங்கள் என்று பதில் வந்தது. மீண்டும் அணுகியபோது இன்னும் ஒரு மாதம் கழித்து போடு என்றனர். காசோலை காலாவதி ஆகும் தேதி வரை காத்திருக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். காலம் கடந்தது. அமுதாவின் உயிர் ஊசலாடியது. இனியும் பொறுக்க முடியாது என்ற எண்ணத்தில், பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தபோது, 5 கோடி ரூபாய்க்கு ஆசையா..? உனக்கு 5 ஆயிரம் கூட தர முடியாது. இத்தனை மாசம் முடிஞ்சிடுச்சி.. இனி உன்னால் என்ன செய்ய முடியும்? என்று அடித்து விரட்டாத குறையாக குரைத்து விரட்டினர். 

           அமுதாவின் கணவர் கௌரி சங்கர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் அணுகினார். முறைப்படி, சட்டப்படி மாதர் சங்கம் மனு கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி அமுதாவின் உயிரை காக்க வேண்டுகோள் விடுத்தது. மருத்துவமனை நிர்வாகம் தடாலடியாக மறுத்தது. அரசு நிர்வாகமோ, நடேசன், மாறன்களுக்கு ஆதரவாக இருந்தது. போராடுவதை தவிர வேறு வழில்லை என முடிவெடுத்த மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம், அமுதாவுக்கு நியாயம் கேட்டு 11.3.15 அன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. போராட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று காவல்துறைக்கு, அரசியலில் செல்வாக்கு உள்ள சில  கொள்கை வியாபாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அமுதாவின் உயிரை காக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்கள் உயிருக்கு விலைபேச பணக்கொள்ளைக்கு துணை நின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் அமுதாவுக்கு துணையாக நின்றன.

              இறுதியாக  தடைகளை கடந்து போராட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுத்தது. நியாயவாதிகளை கைது செய்து காவலில் வைத்தது. இறுதியாக அந்த துயரம் நிகழ்ந்தே விட்டது. இதயமற்றவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் அமுதா 19.5.15 அன்று இறந்து விட்டார். 10 மாத மரண பயணத்துக்கு அன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமுதாவின் கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் கதறி துடித்தனர். கண்ணீர் விட்டனர். அமுதாவின் வீடு இருந்த தெருவே சோகத்தில் மூழ்கியது.

               வலுவான போராட்டம் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் அமுதா இறந்தார் என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவரது கணவர் கௌரி சங்கர் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆளுங்கட்சி ஆதரவு, அதிகார பலம், பண பலத்தை கொண்டு கௌரி சங்கரை மருத்துவமனை நிர்வாகம் மிரட்டியது. மார்க்சிஸ்ட் கட்சி வலுவான போராட்டம் நடத்தியது. பின்னர் நீதி மன்ற உத்தரவின்பேரில் டாக்டர் மாறன், டாக்டர் நடேசன், டாக்டர் புஷ்பராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் புகார் அனுப்பப்பட்டது. 
        
         தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர், டாகடர் மாறன் மீதான புகாரை விசாரித்து அவர் தவறான சிகிச்சை அளித்ததை உறுதி செய்தனர். இதையடுத்து டாகடர் மாறன் ஓராண்டு டாகடர் பணி செய்வதற்கு தடை விதித்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பதிவேட்டிலிருந்தும் அவர் பெயர் நீக்கப்பட்டது. இது மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர்ந்த போராட்டத்திற்கு கிடைத்த ஓரளவு வெற்றியாகும். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அமுதாவின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் துணை நிற்கும். இந்த போராட்டம் அமுதாவிற்கு மட்டுமல்ல.. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும்தான். யாரும் வணிகமய மருத்துவத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும்தான்.


பெட்டி செய்தி

எல்லாமே மார்க்சிஸ்ட் கட்சிதான்

       அமுதாவைப் பற்றி பேச்செடுத்தாலே கணவர் கௌரிசங்கர் நொறுங்கிப் போய் விடுகிறார். பாக்கெட்டில் வைத்திருக்கும் அமுதாவின் போட்டோவை எடுத்துப் பார்த்து, அழத் தொடங்கி விடுகிறார். அமுதாவின் மரணத் துயரம் மனதைவிட்டு நீங்காத நிலையில் இருந்த அவர் நம்மிடம் கூறியதாவது:

         மருத்துவமனை நிர்வாகம் என்னை பல வழியிலும் மிரட்டியது. நான் எங்கெங்கோ போய் முட்டி மோதிப் பார்த்தேன். எனக்கு யாருமே உதவி செய்யல. இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க முன் வரல. மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், டிஒய்எப்ஐதான் எனக்காக, என் குடும்பத்திற்காக, என் குழந்தைகளுக்காக போராடினாங்க.. அவங்கல்லாம் யாருன்னே எனக்கு தெரியாது.

          பாரதிராஜா ஆஸ்பத்திரி முன்னாலே முற்றுகைப் போராட்டம் நடந்தப்ப, ஒருத்தங்க கைக்குழந்தையோட வந்து கலந்துகிட்டு அரெஸ்ட் ஆனாங்க.. அவங்க என் சொந்தக்காரங்க இல்ல. அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது.. (இதைச் சொல்லும்போது கவுரிசங்கரின் குரல் கம்முகிறது. விட்டால் அழுதுவிடுவார் போல் இருந்தது. அவர் குறிப்பிட்ட.. கைக்குழந்தையுடன் கைதான தோழரின் பெயர் ஐஸ்வர்யா. இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஆயிரம்விளக்கு பொருளாளர். புஷ்பா நகர் சிபிஐ(எம்) பெண்கள் கிளை செயலாளர்.)

           போலீஸ்ல புகாரை வாங்க மறுத்தப்ப.. போஸ்ட் மார்ட்டம் பண்ண மறுத்தப்ப மட்டுமல்ல, எல்லா சூழ்நிலையிலும் மார்க்சிஸ்ட் கட்சிதான் எனக்கு பக்க பலமா இருந்துச்சு.. இத்தனைக்கும் நானோ, என் குடும்பத்த சேர்ந்த யாருமே மார்க்சிஸ்ட் கட்சியோட உறுப்பினரோ, ஆதரவாளரோ கூட இல்ல.. அவங்க எல்லாம் எனக்கு ஆறுதலா இருந்தாங்க.. என்னை சரியான முறையில் வழி நடத்துனாங்க..

            டாக்டர்கள் நடேசன், மாறன், புஷ்பராஜ் மேல நான் புகார் கொடுத்தேன். மருத்துவ கவுன்சில் டாக்டர் மாறன் மேலதான் நடவடிக்கை எடுத்திருக்குது. இது எனக்கு ஓரளவுக்கு திருப்திதான். இவங்க 3 பேர் மேலேயும் போலீஸ் சாதாரண பிரிவுல வழக்கு பதிஞ்சப்ப.. மருத்துவ கவுன்சில் நடவடிக்கைக்கு பிறகு கிரிமினல் வழக்கு பதிவு செய்வோம்னு சொன்னாங்க. இப்ப கேட்டா, வழக்கு கோர்ட்ல இருக்கு. கோர்ட் டைரக்ஷன்படிதான் நாங்க நடவடிக்கை எடுப்போம்னு சொல்றாங்க.. என் மனைவியை அநியாயமா கொன்னுட்டாங்க.. அவங்க மரணத்துக்கு கோர்ட் மூலம் எனக்கு நீதி கிடைக்கும்னு நம்பறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

தீக்கதிர் 1.3.2016

திங்கள், பிப்ரவரி 15, 2016

இதுதான் தேசபக்தியா... ?

தேசவிரோதிகள் தங்களை தேசபக்தர்கள் என நாமகரணம் சூட்டிக்கொண்டு, தேச பக்தர்களை வேட்டையாடும் அசிங்கங்களை அரங்கேற்றுகின்றனர்.

தச்சார்பற்ற சக்திகள் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் ...

ஹிட்லரை பகிரங்கமாக புகழ்ந்தவர்கள். சிறுபான்மையினரை அழிக்க ஹிட்லரின் வழிதான் இந்தியாவிற்கு பொருந்தும் என்று மார்தட்டியவர்கள்...

ங்களது முக்கிய எதிரிகள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் என பகிரங்கமாக அறிவித்தவர்கள்...

ந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக வாழமுடியாது என அறிவித்து, இரு நாடு கொள்கையை பிரச்சாரம் செய்து, முஸ்லீம் லீக்கின் கண்ணாடி பிம்பாக செயல்பட்டவர்கள்.

1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, முஸ்லீம் லீக் போலவே இவர்களும் வெள்ளையனை ஆதரித்தவர்கள்.

1947 - இந்தியா விடுதலை பெற்றபோது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக்கொடியை ஏற்றியவர்கள்.

தேசத்தந்தையை படுகொலை செய்ததுடன், இனிப்பு வழங்கி கொண்டாடியவர்கள்.

1950களில் இந்திய அரசமைப்பு சட்டத்தை எதிர்த்து விஷம் கக்கினர். மனுஸ்மிருதியை புகழ்ந்து எழுதினர்.

ந்து ஆண்களுக்குரிய உரிமை பெண்களுக்கும் பொருந்தும் என சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து செயல்பட்டவர்கள்.

1956-ல் அம்பேத்கர் சாதிய அடக்குமுறைக்கு எதிராக புத்தமதத்தை தழுவியபோது கடுமையாக எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்கள்.

தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் அரணாக இருக்கின்ற அரசியல் சட்டபிரிவு 370 ஐ எதிர்த்து வருகிறவர்கள்.

ணவன் பிணத்துடன் மனைவியை உயிருடன் வைத்து எரித்து கொள்ளும் சதி எனும் படுபாதக செயலை 1987-ல் இராஜஸ்தானில் ஆதரித்து புகழ்ந்து பேசியவர்கள்.

லித் மற்றும் இதர பிற்படுத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசி வருபவர்கள். ஒழித்துக்கட்ட உறங்காது உழைப்பவர்கள்.

1992-ல் பாபர் மசூதியை இடித்தவர்கள். இந்து முஸ்லீம் பகைமை தீயை நாடு முழுவதும் எரியவிட்டவர்கள்.

பூர்வகுடி மக்களின் கல்வி, மருத்துவ தேவைகளுக்கு உதவி செய்த கிறிஸ்தவர்களை உயிருடன் கொளுத்தியவர்கள்

ணுகுண்டுக்கு கோவில் கட்டி, அதை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவோம் என போதனை செய்து வருபவர்கள்.

தேர்தல் ஆதாயத்திற்காக குஜராத் துவங்கி முசாபர் நகர் வரை வகுப்புக் கலவரங்களை எரியவிட்டு எண்ணற்ற உயிர்பலி கொடுத்தவர்கள். வகுப்புக் கலவரங்கள் காளான்கள் போல் வளர வழிவகுத்தவர்கள்.

கோவா, தானே, மாலேகான், சம்ஜிதா ரயில், மெக்கா மஸ்ஜித் என பல இடங்களில் காவித் தீவிரவாதம் மூலமாக குண்டு வெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர் மீது பழிபோட நினைத்தவர்கள். இதை அம்பலப்படுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே படுகொலைக்கு பக்கபலமாக இருந்தவர்கள்.

2013-ல் கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, நரேந்திர தபோல்கர் என புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர்களை படுகொலை செய்தவர்கள்.

மாட்டுக்கறி பெயரால் மனித படுகொலை செய்பவர்கள்.

ங்களது காவி பயங்கரவாத செயல்களை தற்போது சென்னை ஐஐடி துவங்கி, ஹைதராபாத், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் செயல்படும் மாணவ அமைப்புகளுக்கு எதிராக இறக்கி உள்ளனர்.

தசார்பற்ற சிந்தனையாளர்கள், ஜனநாயகவாதிகள், காந்தியவாதிகள், இடதுசாரிகள், தலித் அமைப்புகள், அம்பேத்கர் பெயரால் இயங்கும் அமைப்புகள் என அனைத்துக்கும் தேசவிரோத முத்திரை குத்தி வேட்டையாடத் தொடங்கிவிட்டனர்.

சுதந்திர சந்தை மூலமாக இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகுவைத்துவிட்டு, இயற்கை வளங்களை கிழக்கிந்திய கம்பெனிகளின் புதிய அவதாரமான பன்னாட்டு கம்பெனிகளிடம் அடகுவைத்துவிட்டு, மத்தியகால சிந்தனையான பிற்போக்குதனத்தை மீட்டெடுக்க நினைக்கும் இவர்கள் தேசபக்த வேடம் பூண்டு வருகின்றனர்.

கூலி கேட்டால், குடிநீர் கேட்டால், குடியிருப்பு கேட்டால், விலை உயர்வுக்கு எதிராக போராடினால், ஜனநாயக உரிமை கேட்டால் இனிமேல் தேசவிரோத முத்திரை குத்தப்படும். இதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் நியதி.

மீண்டும் சாதிய வர்ணாசிரம கட்டமைப்புக்குள் இந்திய சமூகத்தை கட்டமைக்க துடிக்கும் இந்த மக்கள் விரோதிகள், எல்லா மக்களுக்கும், எல்லா தேசத்திற்கும் எதிரானவர்கள். அவர்களின் போலி தேச பக்த பதாகை பறிக்கப்படும் நாட்கள் எண்ணப்பட வேண்டும்.

- ஏ.பாக்கியம்.

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

கழக ஆட்சிகளால் களவாடப்பட்ட பள்ளிக்கரணை நன்னீர் சதுப்புநிலம்


ஏ.பாக்கியம் 

               நூற்றாண்டு காணாத பெருமழையாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்புக்காக எவருடைய உத்தரவுக்காகவோ கடைசி வரை காத்திருந்து, கடைசி நேரத்தில் அதிகப்படியான நீரை திறந்துவிட்டதால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தாலும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். (அரசு கணக்கின்படி நானூற்று சொச்சம்தான்) பல லட்சம் பேர் உடமைகளை இழந்தனர். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சென்னையையே தலைகீழாக புரட்டி போட்டது வெள்ளம். விடியாத இரவுகள்; வடியாத வெள்ளம்; முடியாத துயரம் என்று அந்த வெள்ள நாட்களை சென்னைவாசிகளால் மறக்கவே முடியாது.2004 சுனாமி - இயற்கை பேரிடர் 2015 சென்னை பெருவெள்ளம் - செயற்கை பேரிடர்இப்போதும் முதல்வர் ஜெயலலிதாதான்.
                    
                    இந்த செயற்கை பேரிடருக்கு காரணம் என்ன? ஏரி, குளங்களை, நீரை உறிஞ்சும் சதுப்பு நிலங்களை தற்போது ஆளும், ஏற்கனவே ஆண்ட ஆட்சியாளர்கள் விழுங்கி ஏப்பம் விட்டதுதான்.இவர்கள் ஏப்பம் விடாமல் இருந்திருந்தால் வெள்ள நீர் ஏரி, குளங்களில் தேங்கி இருக்கும். சதுப்பு நிலங்களால் உறிஞ்சப்பட்டிருக்கும்.கடந்த 40 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளின் ‘கபளீகர கொள்கைதான்’செயற்கை பேரிடருக்கு காரணம். நிலத்தையும், நீர்நிலைகளையும், அதற்கான நிதியையும் நீண்ட காலமாக கொள்ளையடித்துதமதாக்கிக் கொண்ட இரு கட்சிகளின் (திமுக, அதிமுக) கொள்கையும், தலைமையும்தான் இந்த பேரழிவுக்கு காரணம் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இதோ உள்ளங்கை நெல்லிக்கனிபோல் மேலும் ஒரு ஆதாரம்தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாழாக்கியது.

அரிதான விஷயம்

                  இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பது மக்களின் பண்பாடு மற்றும் மொழியில் மட்டும் அல்ல, அதன் நிலவியல் அமைப்பையும் சேர்த்துதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வளமை நிறைந்த சமவெளிகளையும், உலகில் உயர்ந்த மலைத்தொடரையும், பரந்த பாலைவனத்தையும், மடிப்புகள் நிறைந்த பீடபூமிகளையும், சதுப்பு நிலங்களையும் வகைவகையான விலங்குகளையும், பறவைகளையும் ஒரே நாட்டில் காண்பது அரிது! அத்தகைய அரிதான பல விஷயங்களை இந்தியா பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் சதுப்பு நிலப்பகுதி.

நன்னீர் சதுப்பு நிலம்;

         உலகின் நிலப்பரப்பில் 6 சதவீதம் சதுப்புநிலங்களால் ஆனது. அதாவது வருடத்தின் பெரும்பாலான நாட்கள் அல்லது வருடம் முழுவதும் நீர் வற்றாமல் இருந்து கொண்டே இருக்கும். பல வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன.அதில் பள்ளிக்கரணை மாறுபட்டது. சதுப்பு தாழ்நிலம், சதுப்புநிலம், கடலேரிகள் அல்லது உப்பு நீர் ஏரி, சகதி நிலங்கள், சதுப்பு நிலக்காடுகள் எனப் பலவகை உண்டு. இந்த வகை நிலங்கள் அனைத்தும் நீரை தேக்கி வைத்து, வெள்ளத்தடுப்பு, கடலோர நிலஅரிப்பு, இயற்கைப் பேரிடரான புயல் மற்றும் கடல் அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பெரும் பணியினை செய்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ‘ஸ்பாஞ்சு’ போல் நீரை உள் வாங்கி வைத்துக் கொள்ளும். அத்துடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டும்தான் ‘நன்னீர் சதுப்பு நிலமாகும்.’இந்திய அரசால் 1985-86 ல் அறிவிக்கப்பட்ட 94 சதுப்பு நிலங்களில் பள்ளிக்கரணை மட்டுமே நன்னீர் சதுப்பு நிலமாகும்.

              வங்கக் கடலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. கடல்நீரை உள்வாங்கும் பகுதியாக இருந்ததால் பருவகாலங்களில் வெள்ளப் பெருக்கினால், சுத்தமான நீரும், கடல் நீரும் கலந்து ஒன்றாக மாறியது. 1876-ல் பக்கிங்காம் கால்வாய் கட்டப்பட்டபிறகு, கடல் நீர் உள்ளே வருவது முழுவதுமாக தடுக்கப்பட்டது. சதுப்பு நிலத்தின் தண்ணீரில் உப்பு தன்மை குறைந்து சுத்தமான தண்ணீர் நிறைந்த ‘நன்னீர் சதுப்பு நிலமாக’மாறியது. இந்திய நில அளவை துறையின் கணக்கெடுப்பின்படி 1965-ம் ஆண்டு இந்த நன்னீர் சதுப்பு நிலம் 5,500 ஹெக்டேராக (14,000 ஏக்கர்) இருந்துள்ளது.

வேடந்தாங்கலைவிட சிறந்தது
                    பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலம் “பலவகைப்பட்ட இயற்கை சூழல் அமைப்பு” ஆகும். இது 337 வகையான தாவர மற்றும் உயிரின தொகுதிகளை பாதுகாத்தது. 115 வகையான விதவிதமான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள்,21 வகையான ஊர்வன,10 வகையான ஆமை, தவளை உட்பட இருவாழ்விகள், 46 வகையான மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள், 7 வகையான பட்டாம்பூச்சிகள், 5 வகையான நீர் பூச்சிகள், 29 வகையான புற்கள் உட்பட 114 வகையான தாவரங்கள் என அற்புதமான இயற்கை உயிரினப் பெட்டகத்தை கொண்ட இடமாக இருந்தது. 

           பறவைகள் சரணாலயத்தின் பாதுகாப்பாக வேடந்தாங்கலைவிட 4 மடங்கு அதிகமாக இந்த நன்னீர் சதுப்பு நிலம் இருந்தது. இந்த பகுதி அழகான கோரையும், கீரைகளும் நிறைந்த பகுதியாகும். இந்த நிலம் பறவைகள், பூச்சிகள், விலங்குகளின் வீடாகவும், புகலிடமாகவும், இனப்பெருக்க மையமாகவும் இருந்தது.பருவ காலங்களில் 31 ஏரிகளின் உபரி நீரை உள்வாங்கும் பகுதியாக இந்த நன்னீர் சதுப்பு நிலம் இருந்தது.வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் உயரவும், பெருமளவு உதவியது.

கழுதைக்குத்தான் தெரியாது; கவர்மெண்ட்டுக்குமா தெரியாது?
                கழுதைக்கு வேண்டுமானால் கற்பூர வாசனை தெரியாமல் இருக்கலாம். கவர்மெண்ட்டுக்கு தெரியாமலா இருக்கும்? கண்டிப்பாக தெரியும். கற்பூரத்தின் விலையும் தெரியும். அதன் வாசனையின் விளைவும் தெரியும். எனவேதான் 40 ஆண்டுகால திமுக-அதிமுக ஆட்சிகள் ‘வாரிச்சுருட்டுவதில்’ வரலாறு படைத்தன.1965-ம் ஆண்டு 5500 ஹெக்டேர் (14,000 ஏக்கர்) சதுப்பு நிலமாக இருந்தது. 1972-ல் இந்திய வன கணக்கெடுப்பின்போதுகூட இது இருந்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலத்தில் உயிரினங்களின் கணக்கெடுப்பை நடத்திய போதுகூட சுமார் 200 வகையான உயிரினங்கள் வரை இருந்த தகவல்களை பதிவு செய்துள்ளது.

இருக்கு, ஆனா இல்லை
          இருக்கும் ஆனால் இருக்காது என்பது போல், கணக்கெடுப்பிலும், காகிதங்களிலும் அனைத்தும் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இவை கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன. கடந்த 25 ஆண்டுகாலம் இரு கழகங்களும் இயற்கை பாதுகாவலனை முறைவைத்து விழுங்கி தீர்த்துவிட்டன. 1965-ல் 5,500 ஹெக்டேராககிழக்கில் மகாபலிபுரம் சாலை, மேற்கே தாம்பரம். வேளச்சேரி சாலை, வடக்கில் வேளச்சேரி கிராமம், தெற்கில் மேடவாக்கம் சாலை என்பது இதன் எல்லையாக பரந்து விரிந்து தமிழகத்தின் உயிரின சமநிலை, சுற்றுச் சூழலை பாதுகாத்து வந்தது. 

        தற்போது 317 ஹெக்டேர் அதாவது 793 ஏக்கர் மட்மே இருப்பதாக அரசுதெரிவிக்கிறது. இதைத்தான் வனத்துறையிடம் அளந்து, காப்புக்காடு சட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது. மீதமுள்ள 5,183 ஹெக்டேர் (12,905 ஏக்கர்) எங்கே சென்றது? நிலம் இருக்கிறது. ஆனால் சதுப்பு நிலமாக இல்லை. ஆக்கிரமிப்பு கட்டிடங்களாக, சாக்கடைகளாக, குப்பை மேடுகளாக, வானுயர அடுக்குமாடிகளாக உள்ளது.

சதுப்பு நிலத்தின் மீது வணிக சாம்ராஜ்யங்கள்
               ‘வேலியே பயிரை மேய்வதுதான்’ திமுக, அதிமுக ஆட்சிகளின் கொள்கையாக கடைப்பிடிக்கப்பட்டது இதற்கு இந்த சதுப்பு நில கபளீகரமே சாட்சியாகும். தேசிய கடல்சார் ஆய்வு மையம், காற்றாலை தொழில்நுட்ப ஆய்வு மையம், பறக்கும் ரயிலின் தூண்கள் என முக்கிய நிறுவனங்கள் எந்தவித கூச்சநாச்சமின்றி நன்னீர் சதுப்பு நிலத்தை அழித்துவிட்டு கட்டிடம் கட்டின. இந்த அமைப்புகள் வேறு இடத்தில் இருந்துகூட செயல்பட முடியும். இந்த சதுப்பு நிலத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. 

          உதாரணமாக ‘காக்னிஸான்ட்’, ‘எச்.சி.எல்.’ போன்ற பல்வேறு நிறுவனங்கள் சதுப்பு நிலத்தை அழித்துவிட்டன. ஜேப்பியார் கல்வி நிறுவனங்கள், தங்கவேலு கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், முகமது சதக் கல்லூரி என காசுமேலே காசு பார்க்க, நன்னீர் சதுப்பு நிலத்தை புதைத்து அதன்மேல் தங்களது ‘வியாபார’ ஸ்தலங்களை கட்டமைத்துவிட்டனர். குளோபல் மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை, காமாட்சி மருத்துவமனை என மருத்துவமனைகளின் பட்டியல் நீளும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சியின் பிரமுகர்களுக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் சொந்தமானது.
         இவைதவிர, நன்னீர் சதுப்பு நிலத்தை எட்டயபுரம் ஜமீனுக்கு சொந்தம் என்று போலி ஆவணங்கள் தயார் செய்து பலநூறு ஏக்கரை விற்றுவிட்டனர். பூமிபாலா என்ற போலி அறக்கட்டளையை ஆரம்பித்து 66 ஏக்கரை ஏப்பம் விட்டனர். பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நில ஆக்கிரமிப்பு அனைத்தையும் நடுத்தர வர்க்கம் அல்லது அடித்தட்டு மனிதனால் செய்ய முடியாது. அனைத்தும் ஆட்சியாளர்களால், ஆட்சியாளர்களுக்கு செய்யப்பட்டுக் கொண்டது.

கழிவுநீர் சதுப்பு நிலம்
                     ’மழைநீர் வடிகால்வாய் கட்ட வேண்டிய பணத்தை கொள்ளையடித்து சாலைகளிலும், வீடுகளிலும் மழைநீரை தேங்கவைத்த இரு கழக அரசுகள், கழிவுநீரைக்கூட வெளியேற்ற வழிவகை செய்ய முடியாததுதான் இவர்களின் சாதனை. நன்னீர் சதுப்பு நிலத்தை கழிவுநீர் சதுப்பு நிலமாக மாற்றிய சாதனை இவர்களுடையது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆலந்தூர் நகராட்சியின் கழிவுநீர் முழுவதும் கொட்டப்படுகிறது. இவை தவிர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் தினசரி 3 கோடியே 20 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்படாமல் இந்த நன்னீர் சதுப்பு நிலத்தில் கொட்டப்படுகிறது. இந்த கழிவுநீர் அனைத்து நீர் ஆதாரங்களையும் அழித்துவிட்டது.

மாநகராட்சியும் விட்டு வைக்கல...
                    பெருங்குடியை மையமாக வைத்து சென்னையில் திடக்கழிவு கொட்டப்படுகிறது. தற்போது சுமார் 136 ஹெக்டேர் வரை (340 ஏக்கர்) சென்னையின் சரிபாதி திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. தினசரி 4500 டன் சென்னை மாநகராட்சியால் கொட்டப்படுகிறது. குப்பைகளைப் பிரித்துக் கையாள்வது, மறுசுழற்சி என்ற எதையும் செய்யாமல் மாநகராட்சி அப்படியே கொட்டுவதால் ஆண்டுக்கு 4 ஹெக்டேர் வீதம் இந்த குப்பைகள் நன்னீர் சதுப்பு நிலத்தை விழுங்கி கொண்டிருக்கின்றன. 

              1970-ம் ஆண்டுகளில் பெருங்குடி சீவரம் கிராமத்தில் 7 ஹெக்டேர் குப்பை கொட்டுவது என்ற வரையறையை மீறி 80-ம் ஆண்டுகளில் மாநகராட்சி நன்னீர் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்தது. 2002-ல் 56 ஹெக்டேர், 2007-ல் 136 ஹெக்டேர் (340 ஏக்கர்) வரை குப்பை கொட்டுவது அதிகமாகி கொண்டே போகிறது. 2005-ம் ஆண்டு வரை 70 லட்சம் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் (சூயவiடியேட ஞசடினரஉவiஎவைல ஊடிரnஉடை) தெரிவித்துள்ளது. 
       
          2005-ம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நன்னீர் சதுப்பு நிலத்தில் மாநகராட்சி திடக்கழிவு கொட்டுவது 74.13 ஹெக்டேரை தாண்டக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கும்போதே அதை மீறுவது என்று தீர்மானித்து இன்று 136 ஹெக்டேர் வரை திடக்கழிவு கொட்டப்பட்டுள்ளது.

34 ஆயிரம் மடங்கு மரண ஆபத்து
               கொட்டப்படும் குப்பைகளில் வீடுகளிலிருந்து வரும் குப்பைகள் மிகமிகக் குறைவு. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவ திடக்கழிவுகள் மிக அதிகமாக கொட்டப்படுவதால் ஆபத்தான நோய்கள் உருவாகிக் கொண்டுள்ளன. இந்த வட்டாரத்தில் உள்ள கிணறுகளில் நீர் மஞ்சள், பச்சை, கருப்பு, சிவப்பு என பல வண்ணத்தில் உள்ளது. நீரும் அதன் குணமும் இந்த கழிவுகளால் சீரழிக்கப்பட்டுவிட்டது. 

             தொழிற்சாலை, மருத்துவக் கழிவுகளால் மெட்டல், காப்பர், மெர்குரி அளவுகள் மிக அதிகமாகி உள்ளன. 27 வகையான இரசாயனக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதாவது சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வரையறுத்துள்ள அளவைத் தாண்டி பல மடங்கு இரசாயனக் குப்பை கொட்டப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோயை உருவாக்கக்கூடிய மூன்று இரசாயனங்களின் அளவு, வரையறுத்த எல்லையை விட 34,000 மடங்கு அதிகமாக இந்த குப்பைகளில் உள்ளது.

தாய்ப்பாலும் நஞ்சானது
                  சமீபத்தில் ஜப்பான் பல்கலைக்கழகம் சென்னை பெருங்குடி மற்றும் கம்போடியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள இடங்களில் தாய்ப்பால் மாதிரிகளை ஆய்வு செய்தது. அதில் பெருங்குடிதான் மிக ஆபத்தான இரசாயன கழிவுகள் உள்ள இடம் என கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடியில் உள்ள சிலரின் தாய்ப்பாலில் டயாக்சின் என்ற ஆபத்தான இரசாயனம் இருந்துள்ளது. இவை அங்குள்ள மருத்துவக் கழிவுகளில் உள்ள இரசாயனமாகும். இதனால்தான் “நீலக்குழந்தை நோய்” (க்ஷடரந யெலெ ளுலனேசடிஅந) இப்பகுதியில் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

              இந்த நோயால் இதய பலவீனம், இதயத்தில் ஓட்டை ஆகிய பாதிப்புகளும், ஆக்சிஜன் பற்றாக்குறையால், ஹீமோகுளோபின் குறைவால் குழந்தை மரணம் ஏற்படுகிறது. இவை அனைத்தும் குப்பைகளில் உள்ள இரசாயனக் கழிவுகள் நீரில் கலந்துள்ளதால் ஏற்படும் நோய்கள்.சென்னை மாநகராட்சி, குப்பையின் அளவை குறைத்துக்காட்ட அவ்வப்போது தீயிட்டு கொளுத்தி விடுகிறது. ஆனால் இந்த பழியை குப்பை சேகரிக்கும் அப்பாவிகள் (சுயபயீiஉமநசள) மீது சுமத்துகிறது. முழுமையாக பயன்படுத்தப்படாத இரசாயனக் கழிவுகளால் (ஞஐஊ - ஞசடினரஉவள டிக inஉடிஅயீடநவந ஊடிஅரௌவiடிn) மிக பெரிய நோய்கள் காற்றில் பரவுகின்றன. 1000 மைல்கள் வரை இது நோய் தாக்கத்தை ஏற்படுத்தும். என்னதான் தமிழக முதல்வர் பெருமாளை பெத்தபெருமாள் என்று பெயர் மாற்றியது போல் சென்னை மாநகராட்சியை சென்னை ‘பெருநகர’ மாநகராட்சி என்று மாற்றினாலும் அது இன்றும் மா‘நரக’hட்சியாகவே உள்ளது.

தீர்ப்பும், திருந்தாத நிர்வாகமும்
                   2002-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது கண்துடைப்பு என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. காரணம் இதற்குபிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. குப்பை கொட்டுவது நிறுத்தப்படவில்லை. கழிவுநீர் தடுக்கப்படவில்லை. பழைய கதையே தொடர்கிறது. ஆனால் 29 இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக நிர்வாகம் வழக்குப் பதிவு செய்து 20 இடங்கள் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

            ஆனால், எப்படி கைப்பற்றினார்கள் என்ற விவரத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை. பொதுவெளியிலும் தெரிவிக்கவில்லை. காரணம் 2004-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி பூமிபாலா என்ற போலி அறக்கட்டளைக்கு 66.70 ஏக்கர் நிலம், ராயபுரம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கும் உள்ளது.

                       இதே போன்று எட்டயபுரம் ஜமீனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் இலவசமாக இந்த சதுப்பு நிலத்தை வழங்கியதாக போலி தஸ்தாவேஜுகள் தயார் செய்து விற்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.இதையெல்லாம் சாதாரண குப்பனும் சுப்பனும் செய்ய முடியாது. சதுப்பு நிலத்தை அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் துணையுடன் கல்வி நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 
                 இந்த ஆக்கிரமிப்பின் போது அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாகவும் கண்டித்துள்ளார்.இந்த தீர்ப்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எத்தனை ஏக்கர்? ஆக்கிரமிக்கப்பட்டது எத்தனை ஏக்கர்? என்பது உள்ளிட்ட வரைபடத்தை 2015 செப்டம்பர் க்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை அப்படி ஒரு வரைபடம் ஒப்படைக்கப்படவில்லை.

மக்கள் எழுச்சியே தீர்வு
                நீதிமன்றம் எத்தனை முறை கேட்டாலும் அரசு நிர்வாகம் அடிபணியாது. காரணம் யாரிடம் நீதிமன்றம் கேட்டதோ அவர்கள்தானே ஆக்கிரமிப்பின் சூத்திரதாரிகள். அவர்கள்தானே ஆட்சியாளர்கள்.இயற்கையாக அமையபெற்றநன்னீர் சதுப்புநிலம் அரசாலும் அதன் நிறுவனங்களாலும், அவர்களின் செல்வாக்குமிக்க தகவல் தொழில்நுட்ப, கல்வி, மருத்துவ முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

                    இதனால் நிலம் கெட்டு, நீர் கெட்டு, காற்றும் கெட்டு, மனித உயிருக்கே உலைவைக்கிறது.லாபம் மட்டுமே கொள்கையாக கொண்ட முதலாளித்துவ சந்தைக்கு வித்திடும் கழக அரசுகள் இதை தடுக்குமா? நீதிமன்றத் தீர்ப்புகள் மட்டும் இதற்கு விடிவுகாண முடியமா? முடியாது!இந்த ஆக்கிரமிப்புக்கு காரணமான, ஆட்சி செய்த, செய்கிற இரு பெரும் கட்சிகளையும் இனி அரியணை ஏற அனுமதிக்கக்கூடாது. சென்னை மற்றும் தமிழக மக்களின் உயிராதாரமான நன்னீர் சதுப்பு நிலம் மீட்கப்பட வேண்டும். இதற்கு மாற்றுக் கொள்கையுடைய மக்கள் எழுச்சியே தீர்வாக அமையும்.
ஏ.பாக்கியம் மாநிலக்குழு உறுப்பினர்
தீக்கதிர் 08.02.2016

82 உய்குர்- கட்டாய கருத்தடை,கட்டாய உழைப்பு,மசூதிகள் இடிப்பு?

  அ.பாக்கியம் சின்ஜியாங் பற்றிய மேற்கத்திய நாடுகளிலும் அதன் ஊடகங்களிலும் சில பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பொய்களு...