Pages

வியாழன், ஏப்ரல் 02, 2026

சடங்குத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட படத்திறப்பு கூடுகை:





சடங்குகளாகவும் சம்பந்தப்படாதவர்களின் உரைகளாகவும் படத்திறப்பு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சடங்குத்தனத்தை முறியடித்த  படத்துக்காக இது அமைந்தது.

 மறைந்த தோழரின் சமகாலத்தில் களத்தில் பணியாற்றிய தோழர்களாலும், அவர்களால் உருவாக்கப்பட்ட தோழர்களின் பங்கேற்பாலும் , மறைந்த தோழர்களின் உறவுகளாலும் அரங்கம் நிரம்பி வழிந்த நிகழ்வாக தோழர். S.M. லூர்து அவர்களின்  படத்திறப்பும், அவரோடு பணிபுரிந்தவர்களும், அதற்குப் பிறகு இயக்கத்தில் பயணித்து மறைந்து போன 35 தோழர்களின் பட திறப்பும், 28.03.26 அன்று மாலை 5:30 மணி அளவில் வியாசர்பாடி சர்மா நகரில் என் பி மகாலில் நடைபெற்றது. 

நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நிறைவுறுகிற வரை இறுக்கமும், நெகிழ்ச்சியும், சில பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தோழர்களின் உணர்வுகளும் அரங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் திட்டமிட்ட முறையில் துவங்கி குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டது.

தோழர். லூர்து அவர்களின் குடும்பம் முழுமையாக நிகழ்வில் பங்கு பெற்றனர். 120 தோழர்களின் பெயர் பட்டியலை எடுத்து அழைப்பு கொடுத்திருந்தாலும் 180 இருக்கையில் போடக்கூடிய அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் 240 தோழர்கள் கலந்து கொண்டது மறைந்த தோழர்களின் மகத்தான பணிகளை வெளிப்படுத்தியது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை தோழர்கள். அ. பாக்கியம்-மு. துரைப்பாண்டியன் இருவரும் முன்னெடுத்திருந்தாலும், தோழர்கள். எஸ் ஏ. வெற்றி ராஜன், திருவேட்டை, ஜபருல்லா, விஜயன், சந்தியாகு, மோகன், போன்றவர்கள் களத்தில் நின்று எங்களுடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்புற அமைத்துக் கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கான நிதி உதவியை தானே முன்வந்து பல தோழர்கள் உதவி செய்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய செயலாகும்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ்.ஏ வெற்றி ராஜன் முதலில் பேச, தோழர் எம்.துரை பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 1980 ஆம் ஆண்டுகளில் துவங்கி பல தோழர்களின் பணிகளை குறிப்பிட்டு முடித்தார். தோழர் அ .பாக்கியம், லூர்து அவர்களின் பணியும் அப்பகுதியில் இயக்கம் எதிர்கொண்ட சவால்களையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். Repco வங்கியின் தலைவர் E .சந்தானம் அவர்கள் தனது இந்த உயர்வுக்கு லூர்து போன்றவர்களின் செயல்கள் காரணம் என்பதையும் நினைவு கூர்ந்தார். தோழர்கள் கலைச்செல்வன், திருவேட்டை, டி கே சண்முகம் போன்ற தோழர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

தோழர். எஸ் எம் லூர்து அவர்களுடன் இணைந்து பயணித்த தோழர், சிறுவயதிலிருந்தே நண்பர்களாகவும், வாழ்விடத்திலும் பணியிடத்திலும், இயக்கத்திலும் இணைந்தே பயணித்த தோழர்.A. ராமு அவர்கள் மறைந்த தோழர் லூர்து அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார்.

 அரங்கத்தில் இருந்த பலரின் கண்கள் கண்ணீரால் நனைந்தது. உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையிலும் தோழர் ராமு அவர்களும் அவர்களது குடும்பமும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக்காலத்தில் மறைந்த தோழர்கள் 35 பேர்களின் படத்தை தோழர் அ.சௌந்தரராஜன் திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். நான் நிகழ்வுக்கு வருவதற்கு முன்பாக வழக்கமான ஒன்று என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் இங்கு வந்தவுடன் இந்த அரங்க சூழலும், மறைந்த தோழர்களின் படங்களும் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. ஒரு விதமான உணர்வுகளின் நடுக்கம் என்னை ஆட்கொள்கிறது என்று பேசினார். அவசரநிலை காலத்தில் இருந்து தோழர் லூர்து ராமு மற்றும் முக்கிய தோழர்களுடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.

தோழர் வே மீனாட்சி சுந்தரம் இக்காலங்களில் மாவட்டச் செயலாளராக இருந்து வழிகாட்டியவர். வடசென்னை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு வியாசர்பாடி தோழர்களின் பங்கு என்பது மிக முக்கியமானது. தோழர் லூர்து போன்ற மிகத் துணிச்சலான, அர்ப்பணிப்பு மிக்க, அடுத்தவர்களை ஈர்த்து செயல்படக்கூடிய வல்லமை நிறைந்தவரின் பணியை நினைவு கூர்ந்தார். தோழர் லூர்து அவர்களின் மூத்த சகோதரர் மகள் செல்வி கவிதை வாசித்தார்.

நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர். எம் ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் தோழர் L.சுந்தர்ராஜன், முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி பகுதி செயலாளர் எம் விஜயகுமார் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ்குமார் நித்யராஜ், எம். பகவதி போன்ற தோழர்களும் கலந்து கொண்டார்கள். செங்குன்றத்திலிருந்து தோழர் லூர்து அவர்களின் பணியால் ஈர்க்கப்பட்ட எம் வீ நக்கீரன் அவர்களும், பெரியமேட் பகுதியில் இருந்து தோழர்கள் மனோகரன், சரளா, ராஜாமணி, உட்பட பல தோழர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் முதுகுளத்தூர் தாலுகாவின் செயலாளராக பணியாற்றி தற்போது மாவட்ட குழு உறுப்பினராகவும் முழு நேர ஊழியராகவும் செயல்படக்கூடிய தோழர். முருகன் அவர்களும் வருகை தந்து கலந்து கொண்டார்.

தோழர். பாக்கியம் அவர்கள் நிகழ்வு நிறைவடைவதற்கு முன்பாக ஒரு வேண்டுகோளை முன் வைத்தார் தோழர் லூர்து, அமலதாஸ், சூசை மைக்கேல், சந்தியாகு என பல தோழர்கள் ஓட்டுநர் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பொழுது சாஸ்திரி நகர் பக்தவச்சலம் காலனி சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் இருக்கும் கிளைகள் பயன்படுத்தக்கூடிய முறையில் ஒரு நூலகம் கட்ட வேண்டும் என்று நிதி வசூல் செய்து 1986 ஆம் ஆண்டு பணம் அனுப்பி வைத்தார்கள். அந்தப் பணத்தின் மூலம் சாஸ்தி நகர் 3வது தெருவில் தோழர் ராமு அவர்களின் தந்தையார் நடத்தி வந்த கடையை விலை கொடுத்து வாங்கி எனது பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அடுத்தடுத்து வந்த பகுதி குழு தோழர்கள் அந்த இடத்தை விற்பனை செய்து சர்மா நகர் பிரதான சாலையில் பகுதி குழுவிற்கான இடம் வாங்கினார்கள். காலப்போக்கில் அதையும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த அதிக தொகை வைத்து தற்பொழுது புது நகர் எட்டாவது தெருவில் செயல்படக்கூடிய பெரம்பூர் பகுதி குழு அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்துக்கான அடித்தளம் பழைய தோழர்களால் போடப்பட்டது. எனவே அரங்கத்தில் தோழர் ராமு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தோழர் லூர்து அவர்களின் பெரும் படத்தை பகுதி குழு அலுவலகத்திற்கு கொடுப்பது என்றும், அங்கு மறைந்த தோழர்களின் நினைவாக அவர்கள் எந்த நோக்கத்திற்காக நூலகம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார்களோ அதன் ஒரு பகுதியாக நூலகத்தை அமைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

நிறைவாக மறைந்த தோழருக்கான மௌன அஞ்சலியுடன் நிகழ்ச்சி முடிவடையும் முன்பாக, சாஸ்திர நகர் கிளைச் செயலாளர் ஜபருல்லா அவர்கள்  கடந்த கால தோழர்களின் பணியினை முன்னெடுப்போம், தடம் பதித்து வரலாற்றின் வடம் பிடிப்போம் என்று சபதம் ஏற்றார்.

லூர்து அவர்களின் படத்தையும் 35 மறைந்த தோழர்களின் படத்தையும் உயிர்ப்புடன் உருவாக்கிக் கொடுத்து, அழைப்பிதழ், டிஜிட்டல் பேனர், சுவரொட்டிகள் போன்ற வற்றை கலை நுட்பத்துடன் வடிவமைத்து கொடுத்த ஓவியர் வசந்த் அவர்களுக்கு, வீடியோ பதிவு செய்த தோழர் சரவணன் அவர்களுக்கும், தீக்கதிர் ராம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு படத்திறப்பு அவரின் பணியினை மட்டும் நினைவு படுத்தாமல் அவரோடு இணைந்து இருந்த வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களுடன் பயணித்த தோழர்களின் பணிகளையும், பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த தோழர்களின் இணைப்பையும் ஏற்படுத்தியதாக பன்முகத்தன்மையுடன் அமைந்தது. இந்த நிகழ்வை சிறப்புடன் அமைத்துக் கொடுக்க உழைத்திட்டவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நிதி உதவியை வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர். அ. பாக்கியம்

ஆற்றல்மிகு அடிகளாருடன் சந்திப்பு:

 









நான் எழுதிய சீன சோசியலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும் என்ற புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய அய்யா வைகுண்டர் தலைமை பதி திரு திரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் அவர்களை குமரி மாவட்டம் சுவாமி தோப்பில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தேன்.

எங்களை அன்புடன் வரவேற்று நான் தான் உங்களை கௌரவிக்க வேண்டும் என்று எனக்கு பட்டாடை போர்த்தி மற்றவர்களையும் கவனித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.

எனது புத்தகத்திற்கு சிறந்த அணிந்துரை வழங்கியமைக்காக நான் நன்றி தெரிவித்த பொழுது நீங்கள் எனக்கு அணிந்துரை அளிப்பதற்காக கொடுத்த வாய்ப்பு இருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

அய்யா வைகுண்டரின் வழிகளைப் பற்றியும், தற்போது வகுப்புவாத சனாதன சுயநலமிகள் கொடுக்கக்கூடிய தொல்லைகளை எடுத்துரைத்தார்.

மண்டைக்காடு அம்மனை ஆக்கிரமிக்க நினைத்த வகுப்புவாதிகளிடமிருந்து குன்றக்குடி அடிகளார் உடன் இணைந்து நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.

அவருக்கு வகுப்புவாதிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகளிலிருந்து பாதுகாக்க கூடிய பணியில் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செய்த பெரும் பணிகளையும் நினைவுக்கு கொண்டு வந்தார்..

சட்டப் போராட்டங்களில் கிடைத்த அனுபவங்களும் அரிய தகவல்களையும் எடுத்துச் சொன்னார் அவையெல்லாம் தனியாக எழுத வேண்டும்.

அவரை சந்தித்து விட்டு நான் மண்டைக்காடு சென்று கொண்டிருந்த பொழுது இடையிலையே என்னை தொலைபேசியில் அழைத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைக்காட்சியில் பேசிய விஷயத்தையும் அடிகளார் புத்தகத்தின் அணிந்துரையில் எழுதியுள்ளவற்றையும் தெரிவித்தார்.

அய்யா வைகுண்டரின் சமத்துவ கருத்துக்களைப் பற்றி நீங்கள் உங்கள் நடையில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று தெரிவித்தார். நானும் மனம் மகிழுடன் ஏற்றுக் கொண்டேன். அதற்கான சில விவரங்களையும் தெரிவித்தார் தொடர்ந்து தெரிவிக்கிறேன் என்றார்.

விடைபெறுகிற பொழுது ஒரு வார்த்தை சொன்னார் அதாவது வகுப்புவாதிகளுடன் நடக்கக்கூடிய மோதல்களில் நாங்கள் அய்யா வைகுண்டரை தெய்வமாக்க பார்க்கிறோம் நீங்கள் மனிதனாகவே வைத்திருக்க பார்க்கிறீர்கள் என்று அவர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடிய விஷயத்தையும் சொல்லி முடித்தார்.

என்னுடன் குமரி மாவட்ட மூத்த தோழர் முருகேசன் அவர்களும் (இவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன்) தீக்கதி முருகேசன் அவர்களும், சீனாவின் தொடரை வெளியீட்டையும் புத்தக வெளியிட்டயும் இணைந்து வெளியிட்டுள்ள தமிழ் மார்க்ஸ் இணையதள பவுண்டேஷனின் வழக்கறிஞர் தோழர் ஜோதி அவர்களும், தென்காசி தாலுகா செயலாளர் தோழர் பட்டாபிராமன் அவர்களும் வந்திருந்தார்கள்.

ஏழாம் தேதி கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் திருவனந்தபுரம் இ எம் எஸ் அகாடமியில் நடைபெற்றது. இந்த வகுப்பில் மனித குல வரலாறு என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் முறையில் வகுப்பெடுத்தது நிறைவாக இருந்தது. புதியவர்களை சந்திப்பதும் அவர்களுடன் கலந்துரையாடுவதும் பலன் மிக்கது.

அங்கிருந்து தோழர்கள் ஸ்டீபன் மற்றும் சசியுடன் இணைந்து நாகர்கோவிலுக்கு வந்த பொழுது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  தோழர்.லீமா ரோஸ் அவர்களின் இல்லம் சென்று நலம் விசாரித்து விட்டு நாகர்கோவில் வந்து சேர்ந்தேன். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக அடிகளாரையும் சந்தித்தது நிறைவான ஒன்றாகவும் புதிய பணிகளுக்கான தேவை இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. தோழர் பட்டாபிராமன் உடன் இருந்து ராஜாக்கமங்கலம் மற்றும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். கட்டிட சங்கத்தின் மாநில தலைவர் ராஜா க மண்டலத்தில் குடியிருக்கும் KP பெருமாள் அவர்களையும், சந்திக்கும் வாய்ப்பும், ராஜாக்கமங்கலத்தில் வாலிபர் சங்கத்தின் கட்டி வளர்த்த வரும் இடதுசாரிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய வருமான தோழர் சந்திரன் அவர்களுடன் பேசுவதற்கான தருணமும் அமைந்தது.

அ. பாக்கியம்

தோழர் ஆர். என். கே.அவர்களுக்கு வீரவணக்கம்.

 


101 ஆண்டுகள் பொதுவுடமை வாழ்க்கையின் இலக்கணமாய் வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார். யாரும் வாழ முடியாத வாழ்க்கையை வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.  போராட்டங்களும் சிறை கொட்டடிகளும் அவரின் அன்றாட வாழ்வுகளாக மாறியது. உடல் அனுமதிக்கிற வரை முடங்கி விடாமல் இயங்கிக் கொண்டே இருந்தார்.

எளிமையாய் வாழ்ந்தார் என்று ஒற்றை வரியில் சடங்குபூர்வமான வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. டீக்கடைகளில் டீ குடிப்பதும் தோளில் கை போட்டு பேசுவதும்  பயண நேரங்களில் காத்திருப்பதும் எளிமை என்று எடுத்துக் கொள்ளக்கூடிய காலம் இது. கம்யூனிஸ்டுகள் அவ்வாறு இருப்பது எளிமையல்ல. அது கம்யூனிஸ்டுகளின் அடையாளம். மாக்ஸிம் கார்க்கி அவர்கள எளிமையை பற்றி பேசுகிற பொழுது எளிதில் அணுகக் கூடியவராக லெனின் வாழ்ந்தார் என்பார். அதுபோல் தோழர் ஆர். என். கே. அவர்கள் அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய எளிமையானவராக இருந்தார். எளியவர்களிடம் பாசத்தோடு பேசக்கூடியவராக, தான் தலைவர் என்ற அனைத்து இடைவெளிகளையும்  புறம் தள்ளி அவர்களின் ஒருவராக அணுகக் கூடியவர்.

கிளைச் செயலாளர், இடைக்கம்பட்டி செயலாளர், மாவட்ட பொறுப்புகள், மாநில விவசாய சங்க செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், அகில இந்திய தலைவர்களின் ஒருவராக அமைப்புகளின் அனுபவங்களையும் போராட்டங்களின் அனுபவங்களையும்  பெற்றிருந்த பெரும் தலைவர்.

 தனிநபர் தொடர்புக்கும், தோழமைக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். எனது குடும்பம் பல்லாவரத்தில் குடியிருந்த பொழுது  தோழர் ஆர்.என்.கே அவர்கள் தோழர்கள் டாக்டர் ரவீந்திரநாத் சாந்தி அவர்களின் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் வருகிற பொழுதெல்லாம் எங்களது வீட்டிற்கும் தவறாது வந்து செல்வார். எங்கள் வீட்டை கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் வீட்டிற்கு வந்துவிட்டு அதன் பிறகு ரவீந்திரநாத் அவர்களின் வீட்டிற்கு செல்வார். தோழர் ரவீந்திரநாத் அவர்கள்  எனது மருத்துவ பரிசோதனைக்காக தோழர் ஆர்.என்.கே அவர்களின் மகள் மருத்துவர் ஆண்டாள் அவர்களிடம் அனுப்பி வைத்தார். அதை அறிந்த தோழர் ஆர்.என்.கே அவர்கள் தொடர்ச்சியாக எனது உடல்நிலை பற்றி வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் விசாரித்துக் கொண்டே இருப்பார். எனது எழுத்துக்கள் எதையாவது வாசிக்க வாய்ப்பு இருந்து வாசித்து விட்டால் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். எனக்கு மட்டுமல்ல அவருக்கு அறிமுகம் இல்லாத எழுத்தாளர்கள் எழுதினாலும் சிறப்பாக இருந்தால் தன்னுடைய கருத்துக்களை நேரடியாக பேசி விடுவார். தான் ஒரு உயர்ந்த பொறுப்பில் அல்லது கமிட்டிகளில் இருக்கிறோம் என்ற எண்ணம் என்றுமே வெளிப்பட்டதாக காண முடியாது. பகட்டுகளையும், பந்தா அரசியலையும் வெறுக்கக் கூடியவராக இருந்தார்

தனது முதிர்ந்த வயதுகளிலும் நிகழ்வுகளுக்கு அழைத்தால் மறுக்காமல் இயன்றவரை கலந்து கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தோழர் நக்கீரன் அவர்களின் இளைய மகன் திருமணத்திற்கு வரவேண்டும் என்று நானும் அவரும் சென்று கேட்ட பொழுது, அவர் வர முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும் காணொளி மூலமாக மணமக்களை வாழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுத்தார். தோழர்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு அவர்களின் உள்ளங்களில் உயர்ந்து நின்றார்.

தமிழக பொதுவுடமை இயக்கத்தின் பெரும் அடையாளமாக எண்ணற்ற முன்னுதாரணங்களை தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக வருங்கால தலைமுறைகளுக்கு வழங்கிச் சென்றிருக்கிறார்.

தோழர் ஆர் என் கே அவர்களுக்கு வீரவணக்கம்.

சடங்குத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட படத்திறப்பு கூடுகை:

சடங்குகளாகவும் சம்பந்தப்படாதவர்களின் உரைகளாகவும் படத்திறப்பு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில் , அதிலிருந்து முற்றில...