Pages

வியாழன், ஜனவரி 01, 2026

53 சிறிய இனக்குழு மோதலின் புள்ளி அழிக்கப்பட்டது


அ. பாக்கியம்

சீனாவின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இனப் பாகுபாடும், இன ஒடுக்கு முறையும் முற்றிலும் தடை செய்யப்பட்டது. சீன மக்கள் குடியரசின் மிக முக்கியமான நோக்கம் சிறுபான்மை இன மக்களை ஒட்டுமொத்த சீனத்தின் வளர்ச்சியோடு இணைப்பது, அவர்களின் கடந்தகால பின்தங்கிய நிலைமைகளை அடியோடு மாற்றுவது தான். அதே நேரத்தில் சிறுபான்மை இன மக்களில் சிறிய இனக்குழுக்களின் வளர்ச்சி சமமான முறையில் ஏற்பட வேண்டும் என்ற கோட்பாட்டையும் மையஅரசின் அடிப்படை கோட்பாடாக மாற்றியது. எனவே அனைத்து மக்களுக்கும் சமமான அளவில் மிதமான செழிப்பான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் பாதையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இன உறவுகளும் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இதனால்தான் வளர்ச்சியுடன் கூடவே இனங்களுக்கு இடையிலான உறவையும், ஒற்றுமையும் மேம்படுத்துவதற்கான கூட்டங்கள் கலாச்சார நடவடிக்கைகள் விழாக்கள் போன்றவற்றை நடத்துகிறார்கள்.

இந்த முயற்சிகளையும் மீறி சில இடங்களில் இன மோதல்கள் உருவாவதற்கான புள்ளி எது என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். குறிப்பாக பெரும்பாலான இன தன்னாட்சிப் பகுதிகள் பொருளாதார மேம்பாட்டு மையங்களிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. சிறுபான்மை இன மக்களின் வாழ்க்கையும், தன்னாட்சிப் பகுதியும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே ஒப்பீட்டு அளவில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குறைந்த மட்டத்தில் இருந்தது. ஒருபுறம் நாட்டின் எல்லையில் வசிக்க கூடியவர்கள அண்டை நாட்டுடன் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், அதே நேரத்தில் இரண்டு இனங்கள் வாழக்கூடிய மாகாணங்களின் சந்திப்புகளில் வாழக்கூடிய இனங்களுக்கு இடையிலான உறவுகளும் சில நேரங்களில் மோதலுக்கு உள்ளாகிறது.

இந்த இன சிறுபான்மை பகுதிகள் சிக்கலான இயற்கை, புவியியல் நிலைமைகள் காரணமான தனித்துவமான சவால்களை சந்திக்கிறார்கள். இந்தப் பகுதியில் அரசாங்கம் தனது பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு விதமான இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகிறது. வழக்கமான நிர்வாக முறைகளில் தலையிடுவது போல் மட்டும் தலையிட்டால் இன உறவுகளை மேம்படுத்துவது சாத்தியப்படாது. இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் உன்னிப்பாக கவனித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தன்னாட்சி பகுதிகளில் சமூக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது சீனாவின் உள்ளூர் மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும், அதே நேரத்தில் கடமையாகவும் மாறுகிறது.

2019 ஆம் ஆண்டு உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் ஒரு தொழிற்சாலை வளாகத்தில் ஒரு வாகனம் வெடித்து தீ பிடித்ததில் 22 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இணையத்தின் மூலமாக உடனடியாக 10 கோடி மக்கள் வரை சென்றடைந்தது. மக்கள் இது தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களையும், சோகத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்வு இந்தப் பகுதியில் சமூக ஸ்திரத்தன்மைக்கு சவாலாக மாறியது.

மற்றொரு சம்பவம் 2022 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்திய தன்னாட்சி பகுதியில் நடந்தது. அங்கு இருக்கிற நீர்மின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் மீட்பு முயற்சிகள் காலதாமதமானது. இதனால் பதட்டம் அதிகமானது. வெறுப்புணர்வுகள் விதைக்கப்பட்டன. உள்ளூர் அரசின் திறன் சம்பந்தமான விவாதங்கள் முன்னுக்கு வந்தது.

2008ஆம் ஆண்டில் கியானான் தன்னாட்சி மாகாணத்தில் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்தான். உள்ளூர் அரசு உடனடியாக இதை கவனிக்க தவறியது. இதன் காரணமாக வன்முறை, கொள்ளை, தீ வைப்பு, நாச வேலைகளும் நடந்தது.

மேற்கண்ட சம்பவங்களைத் தொடர்ந்து உருவாக்கப்படக்கூடிய வெறுப்புணர்ச்சிகள் உள்ளூர் அரசாங்கத்தை குறை சொல்வதுடன் முடிந்து விடுவதில்லை. உரிய நேரத்தில் ஈடுபடாத அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பது மட்டும் நிரந்தர தீர்வாகாது என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் உணர்ந்தது. எனவே இதேபோன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் இருந்தன. இந்த வழக்குகளில் 272 வழக்குகளை எடுத்துக்கொண்டு இதற்கான காரணங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சியும், மத்திய அரசும் ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த ஆய்வின் முடிவாக இன தன்னாட்சி பிராந்தியங்களில் உள்ள அரசு நிர்வாகத்திற்கும், அதற்கு தலைமை தாங்க கூடியவர்களுக்கும் அவசரகால நிலைகளை எதிர்கொள்வதற்கான பயிற்சியும், திறனும் அதிகமாக தேவைப்படுகிறது என்று முடிவுக்கு வந்தார்கள். அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டது.

வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக இருக்கக்கூடிய உள்ளூர் பாதுகாப்பு, அரசியல் போட்டி, தார்மீக முன்னுதாரணம், அலட்சியமான அணுகுமுறைகள் போன்றவற்றை ஆய்வு செய்து முடிவுகளுக்கு வந்தார்கள். இன ரீதியான வேறுபாடு உள்ள அமைப்புகளில் சிக்கலான பிரச்சனைகளை தீர்ப்பது மிக மிக அவசியமானது என்பதை வலியுறுத்தினார்கள். எனவே அவசர நிலை மேலாண்மை நடைமுறைகள் மக்களை சிறப்பாக பாதுகாக்கவும், இனங்களுக்கு இடையேயும், இனங்களுக்குள்ளும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கவும், நெருக்கடி காலங்களில் உடனடியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதும், செழிப்பை உறுதி செய்வதும் அவசியமானது. இன தன்னாட்சி பகுதிகளில் குறிப்பாக சிறிய இனக்குழுக்கள் வரை ஏற்படக்கூடிய இனம் சம்பந்தப்பட்ட வெறுப்புணர்வை தணிப்பதற்கு மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் இனக்கோட்பாடுகளை அமலாக்குகின்றார்கள். இந்தக் கொள்கையில் விளிம்பு நிலை மக்கள் வரை கண்காணித்து செயல்படுத்துவது என்பது சோசலிச சமூகத்தை நோக்கிய பயணத்தில் மட்டும்தான் சாத்தியமானது.

பரந்த நிலப்பரப்பை கொண்ட நாட்டில், அதிக மக்கள் தொகை கொண்ட தேசத்தில் சிறுபான்மை இன மக்களுக்கான பொதுவான செயல் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமானது. ஆனால் அந்த சிறுபான்மை மக்களுக்குள் இருக்கக்கூடிய குறைந்த மக்கள் தொகை கொண்ட சிறிய இனக்குழுக்கள்மீது கவனம் செலுத்துவது சோசலிச கொள்கை சார்ந்தது மட்டுமல்ல, திறன் சார்ந்த செயலும் ஆகும். ஐந்தாண்டு திட்டங்களும், சிறப்பு திட்டங்களையும் அறிவித்து அமல்படுத்தியது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் என்ன இலக்கு என்பதை 21 ஆம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகள் சீன மக்கள் குடியரசு சிறிய இனக்குழு தொடர்பான திட்டத்தில் அமலாக்கி உள்ளது கவனிக்கத்தக்கது.

2001 ஆம் ஆண்டு சிறிய இனக்குழு மக்கள் தொகை ஆய்வுகளும் திட்டங்கள் உருவாக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அமலாக்குவதற்கான குழு உருவாக்கப்பட்டது, 2003 ஆம் ஆண்டு 22 இன குழுக்கள் இடையே எழுத்தறிவு திட்டங்களும், 2005 ஆம் ஆண்டு இனக்குழு மக்கள் மத்தியில் தொழிலாளர்களின் திறனை வளர்ப்பதற்கான பயிற்சி திட்டங்களும், 2006 ஆம் ஆண்டு 146 நிர்வாக கிராமங்களுக்கு சாலை பணிகளை நிவர்த்தி செய்ததும், 2007 ஆம் ஆண்டு சிறிய இனக்குழுவில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு நிதி உதவி திட்டத்தை அமலாக்கியதும், 2009 ஆம் ஆண்டு குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கான திட்டங்களும், பாரம்பரியம் கலாச்சாரம் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் என ஒவ்வொரு ஆண்டும் திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டுக்கான இலக்கு தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இவை 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. இந்த கண்காணிப்பில் கூட குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு அம்சம் 2011 ஆம் ஆண்டு மிக மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட எவென்கி, ஓரோகென், டவுர் மற்றும் ரஷ்யன் நான்கு இன குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் மக்கள் தொகையை அதிகரிக்கும் திட்டத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார்கள். சிறிய இனக்குழுக்களின் வளர்ச்சியும் மேம்பாடும் ஒட்டுமொத்த சீனாவுடன் இணைக்கப்பட்டது. சோசலிச சமூகத்தின் முன்னேறு தலுக்கு படியாக அமைந்தது. இந்த மாற்றங்களை தற்போதைய சீன ஜனாதிபதி ஜி ஷின் பிங் “இன சிறுபான்மையினர், இன சிறுபான்மை பகுதிகள், இன உறவுகள் மற்றும் சீன தேசம் ஆகியவை ஆழமான மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளன”(2019) என்று தெரிவித்தார்.

 

சீன குணாம்சங்களுடன் சிறிய இனக்குழு திட்டங்கள்

சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்களின் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி மூன்று அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டது. இன சமத்துவம், இன ஒற்றுமை மற்றும் அனைத்து குழுக்களின் பகிரப்பட்ட செழிப்பு ஆகியவையாகும். மேற்கண்ட கோட்பாடுகளை அமலாக்குவதற்கு சீன சூழ்நிலைக்கு ஏற்ப நிறுவன வழிமுறைகளை உருவாக்கியது. அவை முறையே

தலைமைத்துவ வழிமுறை

செயல்படுத்தும் வழிமுறை

திட்ட மேலாண்மை வழிமுறை

நிதி செயல்பாட்டு வழிமுறை

விளம்பர வழிமுறை

மதிப்பீட்டு வழிமுறை

போன்ற ஆறு வழிமுறைகளில் இவற்றை அமலாக்கினார்கள்.

முதலாவதாக, சிறிய இனக்குழுக்கள் இடையே வளர்ச்சி ஏற்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. இவை கூட்டுக் கூட்டம் நடத்துவது, சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதை வழி நடத்துவது போன்றவற்றை கண்காணிக்க வேண்டும்.

இரண்டாவது, மத்திய அரசு நிதி ஆதரவை வழங்குவது, மாகாண அரசுகள் அதற்கான பொறுப்புக்களை ஏற்பது, உள்ளூர் அரசாங்கங்கள் இந்த கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.

மூன்றாவதாக, ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு உறுதி செய்வதற்காக சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்களின் திட்ட மேலாண்மை குழு அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டது.

நான்காவது, சிறிய இனக்குழுக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி சிறப்பு நிதி செயல்படுத்துவதற்கும் உள்ளூர் அரசாங்க நிதிகளை பயன்படுத்துவதற்குமான தனியான அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஐந்தாவதாக, சிறிய இனக்குழுக்களின் மத்தியில் ஏற்படக்கூடிய வளர்ச்சியையும், கொள்கைகையும் விரிவான முறையில் விளம்பரம் செய்ய, விளம்பர பொறிமுறை உருவாக்கப்பட்டது. இந்த குழு இனக்குழு வளர்ச்சியை அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல செயல்படுத்துகிற பொழுது கிடைக்கின்ற முன்மாதிரியான அனுபவங்களை முன்வைத்து சாதனைகளை ஊக்கப்படுத்த கூடிய வேலைகளையும் செய்ய வேண்டும்.

ஆறாவது, மேற்பார்வையிடுவது, அமலாக்கத்தினை ஆய்வு செய்வது, தணிக்கை மேற்கொள்வது, கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை வலுப்படுத்துவதற்காக புதிய மதிப்பீட்டு வழிமுறையை ஏற்படுத்துவது ஆகியவற்றிற்கான குழுக்கள் உருவாக்கப்பட்டது. இந்த குழுக்கள் திட்டங்கள் செயல்படுத்துவதை கண்காணித்து மதிப்பீடு செய்வது திட்டங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்யும் பணிகளை செய்ய வேண்டும்.

மேற்கண்ட முயற்சிகள் சிறிய இனக்குழுக்களின் வளர்ச்சிக்கு நிறுவன உத்தரவாதங்களை செயல்படுத்தி முன்னேறியது. சிறிய இனக்குழுக்களுக்கு வெளியில் இருக்கக்கூடிய அரசு, மற்ற அமைப்புகளின் உதவியின் மூலமாக வளர்ச்சி ஏற்படுவது மட்டும் போதாது. சிறிய இனக்குழுக்களின் உள் இயக்கங்களை இணைத்து வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. வளர்ச்சியின் தாத்பரியம் பற்றி ஏங்கல்ஸ் வார்த்தைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். “ஒரு தேசத்திற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள உறவு மட்டுமல்ல நாட்டின் முழு உள்கட்டமைப்பும் அதன் உற்பத்தி மற்றும் அதன் உள் மற்றும் வெளிப்புற தொடர்புகளால் அடையப்படும் வளர்ச்சியின் கட்டத்தை பொறுத்தது” (மார்க்ஸ் ஏங்கல்ஸ் 1846)

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இனக் குழுக்களுக்கு இடையிலான உள் உந்துதலை அடையாளப்படுத்தி வளர்ச்சி நோக்கி கொண்டு வந்தது. சுயவளர்ச்சி திறன்களை மேம்படுத்துவது முன்னுரிமையாக மாற்றியது. உள்இயக்க காரணிகள் அதற்கான உள்ளீடுகளும், தொழில்துறை மேம்பாடு, கலாச்சார உந்துதல், புதுமையான முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இதற்கு உதாரணமாக கீழ்க்கண்டவற்றை சுட்டிக்காட்டலாம். உள்மங்கோலியா தன்னாட்சி பகுதியில் ஏர்குணா நகரில் உள்ள ரஷ்ய கிராமம் தங்களது நாட்டுப்புற கலாச்சாரத்தை சுற்றுலாவுடன் இணைத்தது. இதனால் அவர்களின் கலாச்சாரமும், பொருளாதாரம் வளர்ந்தது. மற்றொரு இன நகரம் ஆலூகுயா சீனாவின் கலைமான் கலாச்சாரத்தை வளர்த்ததன் மூலம் கலைமான் நகராக உருவாகியுள்ளது. டிருங் இனக்குழு சுற்றுச்சூழல் சுற்றுலா, இன கலாச்சார அனுபவங்கள், பல்லுயிர் ஆராய்ச்சி சுற்றுலா ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த சுற்றுலா மாதிரியே உருவாக்கினார்கள். இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே உள் வளர்ச்சி உந்துதல், பொறிமுறையை நிறுவுவதும், சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்கள் வெளிப்புற உதவியை மட்டுமே நம்புவதை குறைக்கவும் உதவுகிறது. இது மிதமான செழிப்பிற்கு வழிவகுக்கிறது.

மேற்கண்ட முயற்சிகளின் மூலமாக சிறிய இனக்குழு மக்கள் கண்ட முதல் முன்னேற்றம் உருமாற்ற வளர்ச்சியாகும். அதாவது அனைத்து குழுக்களும் செழித்து வளர சோஷலிசம் மட்டுமே ஒரே பாதை என்பதை உணரச் செய்துள்ளது. காரல் மார்க்ஸும் ஏங்கல்ஸ் சுட்டிக்காட்டியது போல் ஒரு தனி நபரால் மற்றவர் சுரண்டப்படுவது முடிவுக்கு வரும் விகிதத்தில் ஒரு தேசம் மற்றொரு நாட்டை சுரண்டுவதும் முடிவுக்கு வரும் என்ற வரிகளுக்கு சிறிய இனக்குழுக்களின் மாற்றங்கள் உதாரணமாக அமைகிறது. சோசலிச மாற்றங்களும், ஜனநாயக சீர்திருத்தங்களும் சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்களை சோசலிச வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இங்கு உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகளும், சமூக அளவிலான அமைப்புகளும் புதிய மாற்றத்திற்கு வழி வகுத்தன

இந்த முன்னேற்றங்கள் சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்களின் வளர்ச்சி பொருளாதார அளவு அதன் வேகம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, அதற்கு பதிலாக அவர்கள் அறிவியல் மற்றும் விரிவான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க தொடங்கி உள்ளார்கள். இந்த முயற்சிகள் சீனா அனைத்து வகையிலும் மிதமான செழிப்பு சமூகத்தை கட்டி எழுப்புவதற்கான குறிக்கோளை நிறைவேற்றுவதாக உள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 28 சிறிய இனக்குழுக்களும் முழுமையான வறுமையில் இருந்து விடுபட்டனர். மேற்கண்ட 22 சிறிய இனக்குழுக்கள் அதன் வளர்ச்சி போக்கில் 28 இனக்குழுக்களாக மாறி இந்த 28 இனக்குழுக்களும் பொருளாதாரம் சமூகம் கலாச்சாரம் சூழலியல் மற்றும் பல அம்சங்களில் பாய்ச்சல் வேக வளர்ச்சியை அடைந்தது.

அ.பாக்கியம்

53 சிறிய இனக்குழு மோதலின் புள்ளி அழிக்கப்பட்டது

அ. பாக்கியம் சீனாவின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இனப் பாகுபாடும் , இன ஒடுக்கு முறையும் முற்றிலும் தடை செய்யப்பட்டது. சீன மக்கள் குட...