Pages

புதன், நவம்பர் 12, 2025

ஞாபகங்களின் தீ…..

 

ராஜாராம்

(தோழர் ராஜாராம் மாணவர் சங்கம் வாலிபர் சங்க மாவட்ட தலைவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றியவர். பணியில் சேர்ந்தவுடன் தொழிற்சங்க தலைவராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத்தை படித்து தனது கருத்தை பதிவு செய்து உள்ளார்- அ.பாக்கியம்)

தோழர் அ.பாக்கியம் அவர்கள் எழுதிய "ஞாபகங்கள் தீ மூட்டும் DYFI போராட்டங்கள் சில துளிகள்"  என்ற தனது புத்தகத்தை எனது பணி நிறைவு விழாவிற்கு வந்திருந்து வாழ்த்தி வழங்கினார். இது ஒரு பொருத்தமான நினைவு பரிசு என்று நினைத்து நெகிழ்கிறேன்.

45 வருடங்களுக்கு எனது வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்தி என்றென்றும் எனது நினைவில் கனன்று  கொண்டிருக்கிற DYFI போராட்ட நினைவுகளை உண்மையிலேயே தீயாக மூட்டிவிட்டது இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் கட்டுரை "பூணூலும் அரைஞாண் கயிறும் DYFI கொடி கயிறாக மாறியது" வீரஞ்செறிந்த மறியல் போராட்ட நிகழ்விலும், கடைசி கட்டுரையான DYFI SPORTS CLUB  டி.ஒய்.எப்.ஐ விளையாட்டு கழகம் நடத்திய வண்ணமயமான திருவிழாவில் பங்கேற்ற பாக்கியம் பெற்றவன் நான். 

DYFI துவக்கப்பட்ட 1980 இல் உறுப்பினராக சேர்ந்து வாலிபர் சங்கத்தில் 2000 வரை 20 வருடங்கள் பணியாற்றியவன். புத்தகத்தின் இரண்டாவது கட்டுரை துவக்க வரிகளில் .... காதலும், வீரமும், சாதனைகளும், சாகசங்களும் மாற்றங்களும், தியாகங்களும் இணைந்தது தான் இளமை என்ற வரிகளுக்கு ஏற்ப எனது அன்றைய இளமை வயதில் சாதனைகளையும் சாகசங்களையும் செய்ய வைத்தது SFI- DYFI அமைப்புகள் தான். 1991 அக்டோபர் 23ஆம் தேதி அந்த வீரஞ்செறிந்த மறியல் போராட்டத்தில் வடசென்னை மாவட்ட குழு, ஆவடி பகுதி செயலாளராக நானும் குறளகம் எதிரில் கைது செய்யப்பட்டேன்.

அன்று மாலை ரிமாண்ட் செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் செல்லும்போது  நான் ... பணியில் சேர்ந்து சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது என்னுடைய பணிக்கான அடையாள அட்டை எனது பேண்ட் பாக்கெட்டில் உள்ளது. அடையாள அட்டையும் பர்சும் போலீஸிடம் மாட்டப் போகிறது வேலை பறிபோகும் நெருக்கடி எதிர்கொள்ளப் போகிறேன் என்கிற ஒரு வித பதட்டமும் அப்படியே ஆனால் என்ன தோழர் பாக்கியம், தோழர் அ.சௌந்தர்ராஜன், தோழர் வி. மீனாட்சி சுந்தரம், தோழர் சி. சுந்தர்ராஜ் போன்ற எண்ணற்ற தோழர்களைப்போல முழு நேர புரட்சி காரனாக மாறும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று ஆறுதல் மறு பக்கம் என மனம் அலை பாய்ந்த நேரத்தில்...

"அதற்கு வாய்ப்பில்ல ராஜா" என்று சொல்லும் பாணியில் சென்னை மத்திய சிறைச்சாலை வாசலில் நின்றிருந்தார் நூலாசிரியர் DYFI மாநிலத் தலைவர் தோழர் அ.பாக்கியம். சிறை செல்லும் தோழர்களின் பணம், மோதிரம், வாட்ச் போன்ற மதிப்புமிக்க உடைமைகளை வாங்கி சிறை மீண்ட பிறகு பத்திரமாக திருப்பித் தர வேண்டும் என்ற அக்கறையுடன் சிறை வாசலில் காத்திருந்த காட்சி இப்போதும் என் நினைவில் தீ மூட்டுகிறது. இந்த மறியல் போராட்டத்தில் சிலிர்க்க வைக்கும் பெருமைமிகு நிகழ்வு ஒன்று நடந்தது. அன்று சென்னை மத்திய சிறைக்கு சென்ற 2800 பேரில் ஒரே ஒரு துணிச்சல் மிக்க டிஓய்எஃப்ஐ வீராங்கனை ஒருவர் இருந்தார்.

 சென்னை வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த பெண் தோழர்( இன்றைய சிபிஐஎம் வில்லிவாக்கம் பகுதி குழு உறுப்பினர் தோழர் அன்பழகன் அவர்களின் மனைவி). தன்னந்தனியாக துணிச்சலாக சகத் தோழர்கள் வேண்டாம் வீட்டுக்கு சென்று விடுங்கள் என்று தோழர்கள் மற்றும் போலீஸ்சே கூறிய போதும் சிரித்த முகத்துடன் இல்லை நான் சிறைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன் என்று தன்னந்தனியாக சிறைக்குள் சென்றதைப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் சிலிர்த்துப் போய் உறைந்து நின்றோம். இந்த DYFI பெண் வீராங்கனை பற்றி அடுத்த புத்தகப் பதிவில் குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

       தோழர் பாக்கியம் எழுதியதில் ஒவ்வொரு தலைப்பில் ஆன போராட்டமும் ஒவ்வொரு காவியம் என்று படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது நானும் அன்றைய DYFI தோழன் என்று.

       குறும்பனை : டி ஒய் எப் ஐ எழுச்சி- அடக்குமுறை- மீட்சி. வீடுகள் தரைமட்ட பார்க்கப்பட்டு குடும்ப்பத்தோடு ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு அதன்பிறகு உறுதிமிக்க தொடர் போராட்டத்தால் மீண்டும் கடல் மார்க்கமாக ஊருக்குள் கம்பீரமாக நுழையும் காட்சி ஒரு புரட்சிகர திரைப்படமாக மனத்திரையில் ஓடுகிறது. படிக்கும் தோழர்களின் நெஞ்சமெல்லாம் பெருமை பூரிக்கும்.. இப்படி எல்லா கட்டுரையும் DYFI இன் பெருமைமிகு வரலாறுதான்.

      கடைசி கட்டுரை பற்றி டி இ ஒய் எஃப் ஐ விளையாட்டு கழகத்தில் நான் மாநில பொருளாளராக பொறுப்பேற்று என் தனிப்பட்ட பொறுப்பில் சில குறிப்பிடத் தகுந்த பங்கை ஆற்றியுள்ளேன். அதுவும் சுவாரஸ்யம் கலந்த மதிப்புமிக்க நிகழ்வாகும். அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.... அதுவரை தோழர் பாக்கியம் அவர்களுக்கு எனது ரெட் சல்யூட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

52 தேசிய இனங்கள் : சிறிய இனக்குழுக்களும் சோசலிச திட்டமிடலும்

  அ.பாக்கியம் ஒரு தனி நபரால் மற்றொருவர் சுரண்டப்படுவது முடிவுக்கு வரும் விகிதத்தில் ஒரு தேசம் மற்றொரு நாட்டை சுரண்டுவதும் முடிவுக்கு வரு...