Pages

சனி, ஆகஸ்ட் 19, 2023

இன மேலாதிக்கம் -இன சமத்துவம்

 

தொடர்: 18

அ.பாக்கியம்

முகமது அலி நிறவெறியை அவருடைய ஆரம்ப காலத்தில் தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எதிர்த்தார். 1960 ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தான் பெற்ற தங்கப் பதக்கத்தின் மூலம் கருப்பர்களுக்கான மரியாதை உயரும். நிறவெறி ரீதியிலான பார்வைகள் மேம்படும் என்று கருதினார். ஆனால் நடைமுறையோ, அவ்வாறு நடைபெற வாய்ப்பே இல்லை என்று நிரூபித்தது. நிறவெறிக்கு எதிர்வினையாற்றுவதற்காக அவர், பெயர் மாற்றத்துடன் இஸ்லாம் தேசம் என்ற அமைப்பில் மால்கம் எக்ஸ் வழிகாட்டலுடன் இணைந்தார்.

அதன் பிறகு அவரது நிறவெறி அணுகுமுறையில் இஸ்லாம் தேசத்தின் கொள்கைகள் செல்வாக்கு செலுத்தியது. காலப்போக்கில் இதிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. முகமது அலியின் இனக் கொள்கை சம்பந்தமாக சரியான மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் அக்காலத்தில் இஸ்லாம் தேசம் பற்றியும், அதன் தலைவர் எலிஜா முகமது, மால்கம் எக்ஸ் மற்றும் சிவில் உரிமை போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியவர்களுக்கு இடையிலான நுண்ணிய வேறுபாடுகளை மிகச் சுருக்கமாக கோடிட்டு காட்டுவது அவசியம். அப்போதுதான் முகமது அலியின் எதிர்வினைகளின் நியாயத்தை அறிந்து கொள்ள முடியும்.

முகமது அலியை இஸ்லாம் தேசம் என்ற அமைப்பில் இணைத்தவர் மால்கம் எக்ஸ். இருவருமே மிகவும் நட்போடு பழகியது மட்டுமல்ல குடும்ப ரீதியிலான நட்பையும் உறவுகளையும் மேம்படுத்திக் கொண்டனர். இருவருமே எலிஜா முகமதுவை வழிகாட்டியாக கொண்டனர். தன்னை ஒரு போராளியாக செதுக்கியதில் எலிஜா முகமது முக்கிய பங்காற்றினார் என்பதை அழுத்தம் திருத்தமாக தனது சுயசரிதையில் மால்கம் எக்ஸ் பதிவு செய்துள்ளார். முகமது அலியும் இஸ்லாம் தேச அமைப்பின் தலைவர் எலிஜா முகமதுவை தனது வழிகாட்டியாக, ஆலோசகராக, தந்தைக்கு சமமானவராக ஏற்றுக் கொண்டார்.

இஸ்லாம் தேசம் என்பது 1930 ஆம் ஆண்டு வாலஸ் டி ஃபார்ட்  என்ற சவுதி அரேபியாவை சேர்ந்தவரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. அவர் ஒரு மசூதி,  இஸ்லாமிய பல்கலைக்கழகத்தையும் இஸ்லாமியர்களுக்கான ஒரு படையையும் நிறுவினார். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மூன்று நூற்றாண்டு களாக அடிமைகளாக இருந்தனர் என்றார். இவர்களை விடுதலை செய்து ஏற்கனவே இருந்தது போல் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் நாகரீகத்துடன் வைப்பது தனது நோக்கம் என்று வாலஸ் டி ஃபார்ட்   அறிவித்தார். அவரது அமைப்பில் இணைந்தவர்கள் இஸ்லாத்தில் நம்பிக்கை வைத்து, அல்லாவை தங்கள் கடவுளாக வணங்கி, குர்ஆன் படித்து முகமதுவை தங்களது தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டனர். கருப்புதேசியவாத ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இனப்போருக்கு தயாராக வேண்டும் என்றும், கிறிஸ்துவம் அடிமை உரிமையாளர்களுக்கான மதம் என்றும் வாலஸ் டி ஃபார்ட்   நம்பினார்.  எனவே இஸ்லாம் தேசத்தில் இணைந்தவர்களை பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தினார். 1934 இல் வாலஸ் டி ஃபார்ட்  திடீரென காணாமல் போனார். காடுகளில் அவர் மாயமானதாக கூறப்பட்டது.

இதன் பிறகு இந்த அமைப்பிற்கு எலிஜா முகமது தலைமை ஏற்றார். இவர் தீவிரப் போக்கை கடைபிடித்தார். அமெரிக்க கருப்பர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று பிரசங்கம் செய்தார். வெள்ளையர்களுக்கு எதிரான இறையியலை ஆதரித்தார். இஸ்லாம் தேசத்து உறுப்பினர்கள் கடுமையான தார்மீக நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கருப்பர்-வெள்ளையர் ஒருங்கிணைப்பு என்பது பாசாங்குத்தனமானது. சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகியவற்றின் 400 ஆண்டுகால வெளிப்படையான எதிரிகள் வெள்ளையர்கள். அவர்களை திடீரென்று நண்பர்கள் என்று சொன்னால் அதை எவ்வாறு நம்புவது? கருப்பின மக்களை ஏமாற்றவே இதுபோல் கூறப்படுகிறது என்று எலிஜா முகமது எழுதினார். அமெரிக்கா எங்களுக்கு தேவையான பிரதேசத்தை வழங்க ஒப்புக் கொள்ளும் வரை, அமெரிக்கா நடத்துகின்ற மனித உயிர்களின் பறிக்கக்கூடிய போர்களில் இஸ்லாம் தேசத்தவர்கள் பங்கேற்க கூடாது என்று கட்டளையிட்டார்.

 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெள்ளையர்களை விட உயர்வானவர்கள். வெள்ளையர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினார்கள். இதற்கு முன்பே கருப்பினத்தவர்கள் தோன்றி விட்டார்கள் என்று எலிஜா முகமது பிரச்சாரம் செய்தார்.

இஸ்லாம் தேசத்தின் தலைவர்கள் கருப்பின மேலாதிக்கத்தை போதித்தனர். அதற்கேற்ற முறையில் நடவடிக்கைகளில் இறங்கினர். முகமது அலி இந்த அமைப்பில் சேர்ந்தவுடன் அதன் கூட்டங்களில் இஸ்லாம் தேசத்தின் குறிப்பாக எலிஜா முகமதுவின் கருத்துக்களை பிரதிபலித்தார். ஆரம்பத்தில் நிறவெறியை மட்டும் பேசிய முகமது அலி அமைப்பில் சேர்ந்தவுடன் கருப்பினத்தவர்களின் தோற்றம் அவர்களின் மேன்மையைப் பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவரின் அணுகு முறையில் இன சமத்துவத்துக்கான தன்மைகள் நிறைந்து இருந்தது. இஸ்லாம் தேசத்தின் இந்த இனவாத மேலாதிக்க சிந்தனை விஞ்ஞானத்திற்கு, வரலாற்றுக்கு, மானுடவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கையாக இருந்தது. இருப்பினும் நிறவெறி தாக்குதல்களை எதிர்கொள்கிற பொழுது அதற்கான எதிர்வினை யாற்றுகிற பொழுதும் கடந்த காலத்தை நிகழ்கால நிலையிலிருந்து அணுகும் தன்மை மேலோங்கி விடுகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

16 தேசபக்த மதங்களும் தேச விரோத செயல்களும்

  மத அமைப்புகளின் நம்பிக்கைகள் தேச எல்லைகளைக் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு தேசத்தின் எல்லைக்குள் தான் செயல்முறைகள் அமைந்திருக்கும். எனவே மதத...