Pages

வியாழன், மே 01, 2025

18.வம்சங்களின் வரலாற்றில் வர்க்க மோதல்கள்

 



லகின் வேறு எந்த நாட்டையும் விட சீனாவில் தான் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மிக நீண்ட காலம் நீடித்து இருந்தது. சோவ் (பொஆமு 1046) வம்ச ஆட்சி காலம் துவங்கி 18 ஆம் நூற்றாண்டு துவக்கம் வரை இந்த முறை நீடித்தது. மேற்கத்திய முதலாளித்துவம் ஊடுருவ ஆரம்பித்த பதினெட்டாம் நூற்றாண்டில் சீன சமூகம் படிப்படியாக மாறத் துவங்கியது. அந்த மாற்றங்கள் சீனாவில் அரை-நிலப்பிரபுத்துவ அரை-காலனித்துவ சமூகமாக உருவெடுத்தது. ஆக சீனாவில் 1911 குடியரசு புரட்சி நடக்கிற வரை நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறை கோலோச்சியது.

நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் விவசாயிகள் புரட்சி இயல்பாக நடைபெறுவதை நாம் அறிவோம். உலகின் பல நாடுகளில் தொழில்துறை சமூகம் துவங்குவதற்கு முன்பு விவசாயிகள் சுரண்டலுக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா, செக்கோஸ்லோவேகியா போன்ற நாடுகளில் பிரபலமான விவசாய கிளர்ச்சிகள் நடைபெற்று இருப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

இருந்தபோதிலும் சீனாவைப் போன்று வேறு எந்த நாட்டிலும் விவசாய கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவில் நடைபெற்ற விவசாய புரட்சிகள் ஒவ்வொன்றும் நீண்ட நாட்களாக அரசை எதிர்த்து நடந்தவைகள் ஆகும். இந்த கிளர்ச்சிகளின் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டது. 1920ஆம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு தோழர் மாசேதுங் தலைமையில் விவசாயிகளின் எழுச்சி உச்சத்தை தொட்டு புரட்சியின் வெற்றியில் முடிந்தது.

சீனாவில் நகரங்கள் சமூக வளர்ச்சி போக்கில் உருவெடுத்தது என்றாலும் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அளவு இந்த நகரங்கள் சுற்றுச்சுவர்களால் சூழப்பட்டு இருந்தது. இதற்குக் காரணம் சீனாவில் தொடர்ந்து நடைபெறக்கூடிய விவசாயிகளின் கிளர்ச்சிகள், தாக்குதலுக்கு அச்சப்பட்டு இந்த சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தது. நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கம் கிராமப்புறங்களில் பலவீனமாக இருந்தது. அதன் கட்டுப்பாடுகளை கிராமங்களில் முழுமையாக நிலைநிறுத்த முடியவில்லை. கிராமப்புறங்களில் பணப் பொருளாதாரம் நகர்ப்புறங்களைப் போன்று நடைமுறையில் இல்லை. நிலப்பிரபுக்கள் மத்தியில் மோதல்களும், போர் வீரர்களிடையே மோதல்களும் அதிகமாக காணப்பட்டது. எனவே, பிற்காலத்தில் மாசேதுங் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை சுற்றி வளைப்பது என்று கோட்பாட்டை வகுத்த பொழுது மேற்கண்ட காரணிகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உருவாக்கி இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பச்சைக் காடுகளும் சிவப்பு புருவங்களும்

சோவ் வம்ச ஆட்சி காலத்தில் பெரும்பாலான நிலங்கள் மன்னர்களிடமும், நில பிபுக்களிடமும் குவிந்து கிடந்தது. மக்கள் வறுமையில் வாடினார்கள். இதன் விளைவாக பல சிதறல்களாக விவசாய கிளர்ச்சிகள் நடைபெற்றது. இதுபோன்று தனித்தனியாக நடைபெற்ற விவசாயிகள் கிளர்ச்சிகளில், ஆட்சியாளர்களால் அதிருப்தி அடைந்திருந்த பொதுமக்களும் சில நிலப்பிரபுக்களும் இணைந்து கொண்டார்கள்.

சோவ் வம்சம் வீழ்ச்சிக்குப் பிறகு கின் வம்சம் ஆட்சி பீடம் ஏறியது. அதுவரை இல்லாத அளவு மிகப் பெரும் பேரரசாக கின் வம்சம் உருவானது. இந்த வம்சத்தின் முதல் பேரரசர் ஷின் உ வாங் டி என்பவர் விவசாயிகளின் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவினார். மக்களை உழைப்பு முகாமிற்குள் அடைத்தார். விவசாயிகளின் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினார். விவசாயிகள் எல்லைப்புறங்களை நோக்கி ஓடினார்கள். கட்டாய அடிமை முறைகளை உருவாக்கினார். அடக்கு முறையின் எல்லைகள் உச்சத்தை அடைந்த பொழுது விவசாயிகளுடைய கிளர்ச்சி அதற்கு எதிராக வெகுண்டு எழுந்தது. இந்த கிளர்ச்சிக்கு லியு பாங்க் (Liu Bang) என்ற விவசாயி தலைமை தாங்கினார். நாளடைவில் இந்தப் போராட்டம் பெரும் போராட்டமாக மாறி கின் வம்ச ஆட்சிக்கு முடிவு கட்டியது.

லியு பாங்க் என்ற விவசாயின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியின் காரணமாக கின் வம்சம் வீழ்த்தப்பட்ட இடத்தில் ஹான் வம்சம் ஆட்சியை கைப்பற்றியது. பொது ஆண்டுக்கு முன்பு(பொஆமு) 202 முதல் பொது ஆண்டு(பொஆ) 220 வரை சுமார் 420 ஆண்டுகள் ஹான் வம்சம் ஆட்சி செய்தது. மேற்கண்ட 420 ஆண்டுகளில் பொஆ 9 முதல் 23ஆம் ஆண்டு வரை இந்த வம்சத்தின் உறவினர் ஒருவர் ஆட்சி பீடம் ஏறி சுமார் 15 ஆண்டுகள் சின் வம்சம் என்ற பெயரால் ஆட்சியை நடத்தினார். இந்த இடைப்பட்ட15 ஆண்டுகளில் 2 முறை மிகப்பெரும் விவசாயிகளின் எழுச்சியை இந்த ஆட்சி எதிர்கொண்டது.

ஊழல், அதிகாரிகளின் அடக்குமுறை, வறட்சியால் ஏற்பட்ட பட்டினி சாவுகள், விவசாயிகளை கடுமையாக பாதித்தது. விவசாயிகள் உணவு கிடைக்காமல் காட்டுச் செடிகளை உண்ண ஆரம்பித்தனர். சில நேரங்களில் அதுவும் கிடைக்காத அவல நிலை உருவானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் லூலின்  மலைப்பகுதிகளுக்குச் சென்று அரசு படைகளை எதிர்த்து போராடுவதற்கு தங்களது சொந்த படைகளை உருவாக்கினார்கள். இந்தப் படைகளுக்கு பச்சை காடுகளின் பாதுகாவலர்கள் என்று பெயர் சூட்டினார்கள். இந்தப் படைகள் நிலப்பிரபுக்களின் பண்ணைகளையும், தோட்டங்களையும், உணவு கிடங்குகளையும் கைப்பற்றியது. கிடங்குகளில் இருந்த உணவை விவசாயிகளுக்கு விநியோகித்தார்கள். உள்ளூரில் இருந்த ராணுவத்தின் ஆயுதங்களை கைப்பற்றிக் கொண்டு போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தார்கள்.

ஆட்சியாளர்களும் கடுமையான அடக்குமுறைகளை ஏவினார்கள். பொஆ 21 ஆம் ஆண்டு ஜிங் மாகாணத்தின் ஆளுநர் லூலின் பகுதியில் இருந்த விவசாயிகளின் படைகளை தாக்குவதற்காக 20,000 போர் வீரர்களை அனுப்பி வைத்தார். இது பெரும் போராக மாறியது. கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளை தோற்கடித்து அவர்களின் உணவு கலன்களையும், ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். அரசு அனுப்பிய ராணுவம் பின்வாங்கியது.

இதே காலத்தில் நாட்டின் மற்றொரு பகுதியில் விவசாயிகள் சக்தி வாய்ந்த போராட்டங்களை நடத்தினார்கள். விவசாயிகள் தங்கள் புருவங்களில் சிவப்பு வண்ணம் பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இவர்களுக்கு சிவப்பு புருவ படைகள் என்ற பெயர் ஏற்பட்டது. (Red Eyebrows கிபி 17-27) மன்னர்கள் விவசாயிகளின் நிலங்களை பறித்துக் கொண்டதை எதிர்த்தும், மஞ்சள் நதியின் பெரும் வெள்ளத்தால் மரணம் அடைந்த விவசாயிகளை பாதுகாக்க தவறியதை எதிர்த்தும், இந்த கிளர்ச்சிகள் உருவானது. இந்தப் போராட்டத்தின் விளைவாக சின் வம்ச ஆட்சி தூக்கி வீசப்பட்டது.

மஞ்சள் தலைப்பாகையும் மாண்டு போன கிரீடங்களும்

சின் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஹான் வம்சம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த வம்சத்தில் 26 மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்தனர். இந்த வம்சம் சீன சமூகத்தில் பெரும் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் உருவாக்கியது.

 (இந்த ஆட்சியின் செயல்பாடுகள் பற்றி 3.தெய்வீக சக்கரவர்த்திகளும்சபிக்கப்பட்ட மக்களும் தொடர் 3ல் விரிவாக எழுதியிருக்கிறேன்)

ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில் அதாவது பொஆ184 ஆம் ஆண்டு மக்களிடம் அதிருப்தி மேலோங்கியது. பிளேக் நோய், பெரியம்மை,  ட்டம்மை போன்ற தொற்று நோய்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தனர். அரசின் நிர்வாகக் குளறுபடியால் தானிய களஞ்சியம் திவால் ஆகிவிட்டது. விவசாய விளைச்சல் பாதிக்கப்பட்டு வறட்சி தாண்டவம் ஆடியது. வழக்கம்போல் சீனாவின் துயரம் என்று அழைக்கப்பட்ட மஞ்சள் நதியின் பெருவெள்ளம் விவசாயிகளின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் அடித்துச் சென்றது. இதற்கு மேல் உயிர் வாழ்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலைமை உருவானது. மரணமா அல்லது எதிர்த்து போரிடுவதா என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.

ஹான் வம்ச ஆட்சி எதிர்த்து நடைபெற்ற இந்தக் கிளர்ச்சியில் விவசாயிகள் மஞ்சள் தலைப்பாகை அணிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டதால் மஞ்சள் தலைப்பாகை கிளர்ச்சி (yellow turban rebellion) என்று பெயர் ஏற்பட்டது. இந்தப் பெயரிலேயே பெரும் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இதிலிருந்து பல துணை அமைப்புகளும் ரகசிய சங்கங்களும் பிற்காலத்தில் உருவாகின. இந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராடிய பொழுது ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அரசின் தானியக் கிடங்குகளையும், அலுவலங்களையும் சூறையாடினார்கள். அரசு படைகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர். எனினும் கிளர்ச்சி ஓய்ந்த பாடில்லை.

அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இந்த மோதல்கள் 21 ஆண்டுகள் நீடித்தது என்றால் போராட்டத்தின் தன்மையை புரிந்து கொள்ள முடியும். 420 ஆண்டுகள் சீன சமூகத்தில் பெரும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்திய பேரரசு நிலைகுலைந்தது. பிரதேச அளவில் ராணுவ தளபதிகளும் நிலப்பிரபுக்களும் தனித்தனியான ராஜ்ஜியங்களை அமைத்துக் கொண்டார்கள். இந்தக் காலத்தில் தான் சீன வரலாற்றில் புகழ்பெற்ற 3 ராஜ்ஜியங்களின் ஆட்சி ஏற்பட்டது. மஞ்சள் தலைப்பாகை கிளர்ச்சியாளர்களுக்கு தாவோயிச சிந்தனைகளும் அமைப்புகளும் பெரும் உதவி செய்தன.

ஹான் வம்ச வீழ்ச்சிக்குப் பிறகு பல சிற்றரசர்களாக இருந்த சீன ஆட்சி முறை மீண்டும் டாங் வம்சத்தால் ஒன்றிணைக்கப்பட்டது. பொஆ 618 முதல் 907 வரை டாங்க் வம்ச ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சியில் நான்குக்கு மேற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஆட்சியை உலுக்கியது. இவற்றில் அன் லூசன் தலைமையிலான கிளர்ச்சி 9 ஆண்டுகள் நீடித்தது. இவை பல நேரங்களில் உள்நாட்டு போராகவும் உருவெடுத்தது. இந்த கிளர்ச்சிகளில் விவசாயிகள் பெரும்பகுதி கலந்து கொண்டாலும், அவர்களுடன் உள்ளூர் நில உரிமையாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நீடித்த கிளர்ச்சி, ஆட்சியை ஆட்டம் காண செய்தது. அடுத்து பொஆ 874 முதல் 884 வரை நடைபெற்ற விவசாயிகளின் கிளர்ச்சியால் டாங் வம்சம் ஆட்சியை இழந்தது. அதனைத் தொடர்ந்து சாங் (song 960-1279) வம்சம் ஆட்சிக்கு வந்தது.  சீனாவின் மிகப்பெரும் மாநிலமாக திகழ்ந்த சிச்சுவான் பகுதியில் விவசாயிகளின் கிளர்ச்சி ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து சவாலாகவே அமைந்தது.

உயர்ந்தது சிறப்பு தலைப்பாகை

சீன மண்ணில்  முதல் அந்நியர்கள் படையெடுப்பு மங்கோலியர்களால் நிகழ்த்தப்பட்டது. செங்கிஸ்கான் வழி வந்தவர்கள் 1271 ஆம் ஆண்டு முதல் 1368 ஆம் ஆண்டு வரை சீனாவை ஆட்சி செய்தனர். தங்களின் ஆட்சி முறைக்கு யுவான் வம்சம் என்று பெயரிட்டனர். ஆட்சியாளர்கள் அன்னியர்களாக இருந்தாலும் அவர்களது அடக்குமுறை பழைய படியே தொடர்ந்தது. விவசாயிகள் கசக்கி பிழியப்பட்டார்கள். 1340 ஆம் ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளும், மஞ்சள் நதியின் வெள்ளமும் மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கியது. மறுபுறத்தில் யுவான் வம்சம் அதன் சாம்ராஜ்யத்தை பாதுகாக்க பெரும் ராணுவ செலவுகள் தேவைப்பட்டது. இதற்காக மக்களிடம் பல மடங்கு கட்டாய வரி வசூல் செய்யப்பட்டது.

விவசாயத்தின் வீழ்ச்சி, தொற்று நோய்களின் பரவல், கடுமையான குளிர் போன்றவற்றால் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் மாண்டு போயினர். மற்றொரு தொற்று நோயும் ஹூபே மாநிலத்தில் 1358 ஆம் ஆண்டில் இரண்டு லட்சம் பேரை பலி கொண்டது. இந்த நெருக்கடிகளை யுவான் அரசு எதிர்கொள்ள தவறியது. அந்நிய ஆட்சியாளர்கள் மக்களை கண்டு கொள்ளவில்லை என்ற தேசிய உணர்வும் போராட்டத்தை தீவிர படுத்தியது. மக்கள் தங்களது அதிருப்தியின் வெளிப்பாடாக கிளர்ச்சியில் இறங்கினார்கள். 1351 முதல் 1368 வரை 18 ஆண்டுகள் தொடர்ந்து யுவான் வம்சத்திற்கு எதிராக விவசாயிகளின் பேரலைகள் எழுந்தன. விவசாயிகள் சிவப்பு தலைப்பாகை அணிந்து போராட்டத்தை நடத்தியதால் சிவப்பு தலைப்பாகை இயக்கங்கள் உருவாகியது. இது குறுகிய காலத்தில் நாடு முழுவதும் பரவியது.

1368 ஆம் ஆண்டு யுவான் வம்சம் வீழ்ச்சிக்கு பிறகு மிங் (1368-1644) ஆட்சிக்கு வந்தது. இந்த வம்சத்தில் பேரரசுகள் மிகப்பெரும் அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டது. பேரரசில் ஷங்ஷி, ஹெனான் மாநிலங்களில் இயற்கை பேரழிவுகளும் தொடர் மழை, வெள்ள பாதிப்பு, வறட்சி போன்றவை மக்களை இம்சித்தது. மக்களின் நிலைமையோ நர மாமிசம் சாப்பிடக்கூடிய அளவுக்கு மோசம் அடைந்தது. வேலையின்மை கடுமையாக உயர்ந்தது. 1448-49 ஆண்டுகளில் குத்தகைதாரர்கள் தங்கள் நில உரிமையாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியை தீவிரப்படுத்தினார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணமோ, விளைச்சலோ கொடுக்க முடியாது என்று போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டம் நாடு முழுவதும் பரவியது. 1644 ஆண்டில் விவசாயிகள் கிளர்ச்சி செய்து பெய்ஜிங் நகரத்தை கைப்பற்றினார்கள். ஒவ்வொரு மாற்றத்தின் மகுடங்களாக விவசாய கிளர்ச்சியே முடி சூட்டிக் கொண்டது. ஆனால் நிலப்பிரபுத்துவத்தை  முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

வெகுண்டு எழுந்த வெள்ளை தாமரை

சீனாவின் மிகப்பெரிய பேரரசான மிங் வம்சம் தூக்கி எறியப்பட்டு 1644  குயிங் (மஞ்சுக்கள் என்ற அன்னிய இனம்) வம்சம் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. இதுவே சீனாவின் கடைசி வம்ச ஆட்சியாகும். 1796 முதல் 1804 வரை பெரும் விவசாயிகள் கிளர்ச்சி நடைபெற்றது. வழக்கம்போல் பொருளாதார நெருக்கடிகளும், ஆட்சியாளர்கள் அடக்கு முறையும் மக்களை வாட்டியது. ஆட்சியாளர்கள் அந்நியர்கள் என்ற உணர்வும் போராட்டக்காரர்களிடம்  மேலோங்கியது. இந்தப் போராட்டத்திற்கு வெள்ளை தாமரை விவசாயிகள் எழுச்சி என்று பெயர் சூட்டப்பட்டது. வெள்ளை தாமரை இயக்கம் நீண்ட காலமாக போராட்டங்களை வழிநடத்தியது. வடக்கு சீனாவில் செல்வாக்கு பெற்ற ஒரு அமைப்பாக இது வளர்ந்திருந்தது. ஆரம்பத்தில் ரகசிய சங்கமாக செயல்பட்ட இந்த அமைப்பு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கி வெகுஜன அமைப்பாக மாறியது.  மங்கோலிய ஆட்சி முறைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களிலும் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தடுத்த நடைபெற்ற விவசாயிகள் கிளர்ச்சியில் வெள்ளை தாமரை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தலைமை தாங்குகிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். வேறு பெயர்களில் இயக்கத்தை ஆரம்பித்தார்கள். 1861 முதல் 1863 வரை னான் மாநிலத்தில் நடைபெற்ற விவசாய எழுச்சிகளில் வெள்ளை தாமரை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு பதாகை சங்கம் என்ற பெயரில் பங்கு பெற்று போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தினார்கள்.

கிளர்ச்சியின் தனித்தன்மையும் பொது தன்மையும்

சீனாவில் மேற்கத்திய முதலாளித்துவம் ஊடுருவலுக்கு முன்பாக சீன நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்த அனைத்து முரண்பாடுகளிலும் விவசாயிகளுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளே பிரதான முரண்பாடாக இருந்தது. இது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது. ஆளும் வர்க்கத்தால் அடக்குமுறை செய்கிற பொழுது அதனால் ஏற்படுகிற அதிருப்தியின் வெளிப்பாடாக விவசாயிகளின் எழுச்சி தன்னிச்சையான தன்மையுடன் அமைந்திருந்தது. அதே நேரத்தில் வரலாற்று நெடுகிலும் நடைபெற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெரும் எழுச்சிகளில் பொதுத்தன்மைகளும் காணப்பட்டன.

கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்ற விருப்பங்களை வெளிப்படுத்தினார்கள். விவசாயிகளிடம் அடிக்கடி காணப்பட்ட முழக்கங்களில் விவசாயிகளின் கிளர்ச்சிகள் ஓங்கட்டும், பணக்காரர்களை தாக்கி ஏழைகளுக்கு உதவுவோம் என்ற முழக்கங்கள் மேலோங்கியது.

மற்றொரு முக்கியமான பொதுத்தன்மை, இந்த கிளர்ச்சிகளில் கணிசமான கருத்துக்கள் மததன்மையுடன் தொடர்புடையதாக இருந்தது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மத்திய காலத்தில் மக்களின் அதிருப்திகள் மாற்று மதங்களை உருவாக்குவதற்கான வடிவங்களில் வெளிப்பட்டது. இங்கேயும் அவ்வாறு சில தன்மைகள் காணப்பட்டது. அனைத்து கிளர்ச்சிகளும் சொர்க்கத்தின் ஆணைக்கு இணங்க நிறைவேற்றப்படுவதாக நம்பினார்கள். கன்பூசிய சிந்தனை இந்த கருத்துக்களுக்கு அடிப்படையாக இருந்தது. ஆனால் விவசாய கிளர்ச்சியாளர்கள் பௌத்தம் தாவோயிச சித்தாந்தம் போன்றவற்றை எடுத்துக் கொண்டார்கள். அந்த சித்தாந்தம் கிளர்ச்சியாளர்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது.

மற்றொரு பொதுத்தன்மை, கிளர்ச்சிகளில் விவசாயிகள் மையப் பகுதியாக இருந்தார்கள். அதே நேரத்தில் இதர பகுதி உழைப்பாளி மக்களை ஒன்றிணைத்து கிளர்ச்சிகளை நடத்தியது அனைத்து கிளர்ச்சிகளிலும் வெளிப்பட்டது. குறிப்பாக கைவினைஞர்கள், படகு ஓட்டுபவர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், வறுமையில் வாடிய அறிஞர்கள், பௌத்த துறவிகள், ஆளும் வர்க்கத்தின் அதிருப்தி அடைந்த பகுதியினர் என பலதரப்பட்ட மக்களையும் இந்த விவசாய கிளர்ச்சியாளர்கள் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் மாற்றங்களுக்கு விதைகளை உருவாக்கியதாக அடுத்த விவசாயிகளின் தைப்பிங் கிளர்ச்சி அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....