– அ.பாக்கியம்

சீன வரலாற்றில் பாரம்பரியமான தன்மைகள் என்பது விவசாயிகளின் வர்க்க போராட்டங்கள் ஆகும். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கது தைப்பிங் விவசாயிகளின் புரட்சியாகும். சீன வரலாற்றில் அதிக நாட்கள், அதிக பிரதேசங்கள், அதிகமான நகரங்கள், அதிகமான உயிர் இழப்புகள் ஏற்பட்ட ஒரு புரட்சி தைப்பிங் விவசாயிகளின் புரட்சி ஆகும். இந்தப் புரட்சி சீன சமூகத்தில் அரை காலனித்துவ அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக மாறிக்கொண்டிருந்த சூழலில் நடைபெற்றது. இதற்கான பல சிறப்புக் கூறுகள் உள்ளன.
மாபெரும் கிளர்ச்சியின் மாறுபட்ட காரணங்கள்
1644 ஆம் ஆண்டு சீனாவின் மிகப்பெரிய பேரரசாக திகழ்ந்த மிங் வம்சத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மஞ்சூரியாவை சேர்ந்த மஞ்சுக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இவர்கள் தங்களது வம்சத்தை குயிங்(Qing) வம்சம் என்று அழைத்தனர். சீனாவில் மேற்கத்திய முதலாளித்துவம் ஊடுருவுவதற்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது அந்நியர் ஆட்சியாகும். இதுதான் சீன முடியாட்சியின் வம்ச வரலாற்றின் கடைசி பேரரசாகும். டாக்டர் சன் யாட் சன் தலைமையில் 1911 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு புரட்சி வரை இந்த ஆட்சி நீடித்தது. இந்த ஆட்சியின் இடைப்பட்ட காலத்தில் 1850 ஆம் ஆண்டு முதல் 1864ஆம் ஆண்டு வரை விவசாயிகளின் பெரும் எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சிக்கு தைப்பிங் புரட்சி என்று பெயர். காரல் மார்க்ஸ் 1853 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி டைம்ஸ் பத்திரிக்கையில்“உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரும் புரட்சி” என்று எழுதினார்.
சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த ஹூங் சியு சுவான் என்பவர் இந்த புரட்சிக்கு தலைமை தாங்கினார் . இவர்தலைமையில் விவசாயிகளின் எழுச்சியை நடத்தி சீனாவின் தென்பகுதியில் உள்ள க்வாங்சி மாகாணத்தில் இருக்கும் ஒரு பகுதியை கைப்பற்றி கொண்டார்கள். இந்தப் பகுதிக்கு தைப்பிங் தீன் குவோ என்று பெயரிட்டார்கள்.தைப்பிங் என்றால் அமைதி என்று அர்த்தம். மஞ்சுக்களின் அரசாங்கத்தின் மீது இருந்த அதிருப்தியால் விவசாயி கிளர்ச்சிநாடு முழுவதும் படுவேகமாக பரவியது. மூன்று வருடத்திற்குள் 17 மாகாணங்களை விவசாய கிளர்ச்சியின் தலைவர்கள் கைப்பற்றினார்கள்.
ஷாங்காய்,பெய்ஜிங் உட்பட சுமார் 600 நகரங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். நான்கிங் நகரம் புரட்சியாளர்களின் தலைநகரமாக மாறியது. மஞ்சு அரசாங்கத்தின் அதிகாரிகளும், ராணுவமும் அடித்து விரட்டப்பட்டது. மேற்கத்திய முதலாளித்துவசக்திகளின் ஆதரவுடன் மஞ்சு அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து பெரும் படைகளைத் திரட்டி 1864 ஆம் ஆண்டு புரட்சியாளர்களின் நான்கிங் நகரத்தை கைப்பற்றியது. புரட்சி நடைபெற்ற 14 ஆண்டுகளில் சுமார் 2 கோடி மக்களின் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தப் புரட்சியை முழுமையாக ஒடுக்குவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. சீன வரலாற்றில் அதுவரை இல்லாத மிகப்பெரிய புரட்சி மட்டுமல்ல, அதிக ஆண்டுகள் நடந்த புரட்சி மட்டுமல்ல, எதிர்கால சீனாவிற்கான பல புதிய வித்துக்களை உருவாக்கிய புரட்சியாகும். தைப்பிங் பிரதேசங்களில் அறிவிக்கப்பட்ட புரட்சிகரமான நடவடிக்கைகள் சீன மக்களை பெரும்பாலும் கவர்ந்தது.
கடந்த காலத்தில் விவசாயிகளின் எழுச்சிகள் நடைபெற்ற பொழுது, இயற்கை பேரிடர்களும், அதிகாரிகளின் ஊழல் செயல்பாடுகளும், பெரும் வெள்ளங்களும் அடிப்படை காரணமாக இருந்தன. ஆனால் தைப்பிங் போராட்டம் நடைபெற்ற பொழுது மேலும் இரு முக்கிய காரணிகள் இந்த எழுச்சிக்கு பின்புலமாக இருந்தது. 1751ல் இருந்த 18 கோடி மக்கள் தொகை 1851ல் 43 கோடியாக உயர்ந்தது. இந்த உயர்வுக்கு ஏற்ற வகையில் சாகுபடி நிலங்கள் பரப்பளவு அதிகரிக்கவில்லை. எனவே வேலையின்மை என்பது மிகப்பெரும் சவாலாக மாறியது. மற்றொரு முக்கியமான காரணம் மேற்கத்திய முதலாளித்து சக்திகள் சீனாவில் ஊடுருவி மஞ்சுக்களின் ஆட்சியை தங்களது பொம்மை ஆட்சியாக மாற்றிக் கொண்டார்கள். அபினியை இறக்குமதி செய்து சீனா முழுவதும் விற்பனை செய்தார்கள். சீன சமூகத்தையே அபினி போதையில் மூழ்கடித்தார்கள்.
சீன மக்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரிகளுக்கு பயப்படுகிறோம். ஆனால் எங்கள் அதிகாரிகளோ, கடல் கடந்து வந்திருக்கும் அந்நிய பேய்களுக்கு பயப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த கிளர்ச்சிக்கு பின்னால் ஒரு தேசபக்த உணர்வு மேலோங்கி இருந்தது என்பது கடந்த கால விவசாயகிளர்ச்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. 17 மாகாணங்களை கைப்பற்றிய தைப்பிங் கிளர்ச்சியாளர்களின் புரட்சிகரமான நடவடிக்கைகள் இந்த தேசபக்த உணர்வை வெளிப்படுத்தும்.
இதுவரை நடைபெற்ற விவசாயிகளின் கிளர்ச்சிகளில் இருந்ததை விட தைப்பிங் போராட்டத்தில் விவசாயிகளுடன் இதர பகுதி உழைப்பாளி மக்களையும் இணைத்துக் கொண்டது பரவலான முறையில் நடைபெற்றது. கரிஎரிப்பவர்கள், கிராம பள்ளி ஆசிரியர்கள், ஏழைவிவசாயிகள், மரம்வெட்டக்கூடிய தொழில் செய்பவர்கள், வணிகர்கள், பணக்கார விவசாயிகள், மஞ்சுக்களின் அரசை எதிர்த்த பல அறிஞர்கள்,சுரங்கத் தொழிலாளர்கள், இரு பெரும் பழங்குடி மக்கள் என பரந்துபட்ட உழைப்பாளி மக்களை தைப்பிங் புரட்சி தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதோடு, ஐரோப்பியர் வருகையின்போது, கடற்கரையில் தொழில் செய்து வந்தவர்களை விரட்டி அடிக்கப்பட்டார்கள் அந்த உழைப்பாளி மக்களும் இந்த தைப்பிங் புரட்சியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். எனவே இந்தப் புரட்சி ஒரு வர்க்க அடிப்படையை பிரதிபலித்த புரட்சி என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பிற்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தைப்பிங் புரட்சியை ஒரு முழுமையான விவசாய புரட்சி என்று மதிப்பீடு செய்துள்ளது.
இந்தப் புரட்சியின் வெற்றிகளுக்கு பின்னால் பெரும் பகுதி மக்களின் ஆதரவு இருந்தது. சுருக்கமாக சொன்னால் இது ஒரு மக்கள் போராக இருந்தது. இந்தப் புரட்சியின் வெற்றி மக்களின் படைப்பாற்றலையும், முன்முயற்சி எடுப்பதையும் கட்டவிழ்த்து விட்டது. புரட்சியாளர்கள் முன்வைத்த வேலை திட்டங்கள் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக அமைந்தது. இதுவரை சீனாவின் கிளர்ச்சியாளர்கள் முன்வைத்த நடவடிக்கைகளில் இருந்து இது ஒரு மாறுபட்ட முன்னெடுப்பாகும்.
அனைத்தும் அனைத்து மக்களுக்கு…
தனியார் உடைமைகள் ஒழிப்பதாக அறிவிக்கப்பட்டது. பொதுக்கருவூலம் ஆரம்பிக்கப்பட்டது. பொதுவான தானியக்கிடங்கை நிறுவினார்கள். மக்களின் விசேஷத் தேவைகளுக்கு இந்த தானியக்கிடங்குகளில் இருந்து இலவசமாக தானியங்கள் வழங்கப்பட்டன. நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நிலங்கள் குறிப்பிட்ட நிலப்பிரபுக்களிடம் குவிந்திருப்பதை தடுக்கும் வகையில் சமத்துவ விவசாய சட்டம் என்று அறிவித்தனர். சொர்க்கத்தின் கீழ் உள்ள அனைத்து நிலங்களையும் சொர்க்கத்தின் கீழ் உள்ள அனைத்து மக்களும் பயிரிட வேண்டும் என்று அறிவித்தனர். மக்கள் அனைவருக்கும் நிலங்கள் சமமாக பங்கிடப்பட வேண்டும் என்று அறிவித்தார்கள்.
சமத்துவ அடிப்படையிலான சட்டமாக இருந்தாலும் கற்பனாவாத அடிப்படையில் அமைந்ததால் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. விவசாயிகள் தங்கள் சொந்த வாழ்வாதாரத்திற்கு தேவையான பகுதியை மட்டுமே விளைச்சலில் இருந்து எடுத்துக் கொண்டனர். விவசாயிகள் மீதான வரிகள் பல மடங்கு குறைக்கப்பட்டது. அபினி, புகையிலை போன்ற போதை பொருட்கள்தடைசெய்யப்பட்டன. சீன நாட்டின் நாட்காட்டி முறையை சூரியன் மற்றும் சந்திர கூறுகளின் அடிப்படையில் வாரத்திற்கு ஏழு நாள் என்ற முறையில் மாற்றி அமைத்தார்கள். சீன எழுத்து முறைகளை மேம்படுத்தினார்கள். மருத்துவமனைகள், தபால் துறைகள், ரயில்வே போன்றவற்றில் கவனம் செலுத்தினார்கள். இவையெல்லாம் தங்களது வெற்றியின் மூலமாக அமல்படுத்த முயற்சி செய்தார்கள்.
தலையா? தலை முடியா?
தைப்பிங் புரட்சியாளர்களின் முக்கியமான அறிவிப்பு சீன மக்கள் தலையின் முன்பகுதியில் முடி வளர்த்துக் கொள்வதற்கு அனுமதித்தார்கள். இது அந்நியர்களால் சீனர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிரான மிகப்பெரிய முன்னெடுப்பாகும். சீனர்கள் பொதுவாக தலையில் கொண்டை போட்டுக் கொள்வார்கள். 1268 ஆம் ஆண்டு மங்கோலியர்கள் சீனாவை கைப்பற்றிய பொழுது சீனர்கள் தங்களது அடிமைகள் என்பதை காட்டும் பொருட்டு முன் மண்டை முடியை எடுத்துவிட்டு பின்பகுதியில் இரட்டை ஜடை பின்னிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டு சீன மிங் வம்சம் ஆட்சிக்கு வந்தவுடன் சீன முறைப்படி முடிவளர்க்க அனுமதித்தனர். மீண்டும் மஞ்சுக்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் சீன மக்கள் முன் மண்டையில் முடி வளர்ப்பதற்கு தடை செய்து பின்பகுதியில் ஒற்றை ஜடை பின்னி கொள்ள வேண்டும் என்று உத்தரவுபோட்டார்கள். இந்த உத்தரவை சீன மக்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர். இவ்வாறு செய்ய மறுக்கிறவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சீனர்கள் சுலபமாக இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
தங்களை அடிமைகள் என்பதற்கான வெளிப்படையான முத்திரை குத்தக் கூடிய செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று போர்க்களம் கண்டனர். மஞ்சுக்களின் அரசர்கள் சீனர்களுக்கு தலை வேண்டுமா தலை மயிர் வேண்டுமா என்று கேட்டனர். சீனர்களோ மிகவும் உறுதியுடன் எங்களுக்கு தலை மயிர்தான் வேண்டும் தலை போனால் போகட்டும் என்று எதிர்க்க ஆரம்பித்தனர். அரசாங்கம் இவற்றுக்கு எதிராக மிகப்பெரும் அடக்குமுறைகளை ஏவியது. பெரும்பாலான இடங்களுக்கு அரசு படைகள் சென்று தலைமுடி விவகாரத்தை அமல்படுத்தினார்கள்.
மக்கள் தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு அரசாங்கப் படையுடன் போராடினார்கள். சியாடிக் என்ற நகரத்தில் அரசாங்கப் படைகள் வந்து முற்றுகையிட்டு 80 நாட்கள் வரை தாக்குதலை தொடுத்தார்கள். சுமார் ஒன்றே முக்கால்(1 ¾) லட்சம் மக்கள் அடிமை உத்தரவுக்கு அடிபணிய முடியாது என்று தங்களுயிரைஈந்தனர். அரசு படைகளுக்கும் கடுமையான இழப்பு ஏற்பட்டது. மஞ்சு வம்சத்தினர் தங்களுடைய ஆதிக்க விதையை ரத்த சேற்றிலே தான் ஊன்றினார்கள் என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சான்றாகும். எனவேதைப்பிங் புரட்சியாளர்கள் இந்த முடி வளர்ப்பதற்கான அனுமதியை வழங்கி தேசபக்த போராட்டத்தின் வடிவமாக காட்சியளித்தார்கள்.
பெண்கள் மீதான பாத கட்டும், கழுத்துக் கயிறும்:
மற்றொரு மிக முக்கியமான அறிவிப்பு சீன பாரம்பரியத்தை, பழமை வாதத்தை முறித்துப்போடுவதாக இருந்தது. பெண்களின் விடுதலையை பறைசாற்றக்கூடிய முறையில் இவை அமலாக்கப்பட்டது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவு சீனாவில் பெண்கள் பாதக்கட்டு முறை அமல்படுத்தப்பட்டது. பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாதங்களை ஆறு அங்குலத்திற்கு மேல் வளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வழக்கத்தை உருவாக்கினார்கள். இதற்காக ஐந்துஅல்லதுஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கால்பாதத்தை மடித்து கட்டுவது, இறுக்கி கட்டுவது, சில நேரங்களில் எலும்புகளை சேதப்படுத்தக்கூடிய முறையில் கட்டுவது நடைமுறையில் இருந்தது.
ஆறு அங்குலம் பாதம் இருப்பவர்கள் தாமரைப் பாதங்கள் என்றும் அதற்கான காலணிகளும் உருவாக்கப்பட்டது. இந்தப் பாதங்கள் பெண் அழகின் அடையாளமாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் மாற்றப்பட்டது. இதனால் பெண்கள் மிகக் கடுமையான உடல் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். வாழ்நாள் முழுவதும் பெண்கள் குறைபாடு உடையவர்களாக மாற்றப்பட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில் அனைத்து சீனப் பெண்களிலும் சுமார் 50 சதவீத பெண்கள் பாதக்கட்டுகளை பயன்படுத்தினார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மேல்தட்டு மக்களிடம் 100% ஆக இருந்தது என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மீதான சுமத்தப்பட்ட உடல் ரீதியான மிகப்பெரிய அடக்கு முறையை தைப்பிங் ஆட்சியாளர்கள் ரத்து செய்து பாதக்கட்டு போடுவதற்கு தடை விதித்தார்கள். தைப்பிங் புரட்சி தோல்விக்கு பிறகு மீண்டும் இந்த கொடுமை அரங்கேறியது. 1912 ஆம் ஆண்டு சன் யாட்சன் தலைமையில் நடைபெற்ற புரட்சி காலத்தில் பாதக்கட்டு தடை செய்யப்பட்டாலும் முழுமையாக அமலாகவில்லை. 1921 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பிறகு பெரும் இயக்கம் நடைபெற்று இது முழுமையாக ஒழிக்கப்பட்டது.
தைப்பிங் புரட்சியாளர் காலத்தில் பெண்களின் கழுத்து கயிறுகள் அறுத்து எறியப்பட்டது. சீன மக்கள் தங்கள் கழுத்தில் மூன்று கயிறுகளை அணிந்து இருப்பார்கள். பெண்கள் மட்டும் நான்கு கயிறுகளை அணிந்திருப்பார்கள். ஆண்களுக்கு அரசியல் அதிகாரம், குல அதிகாரம், மத அதிகாரம் என்று மூன்று அடையாளங்களை குறிக்கக்கூடிய முறையில் இந்த கயிறு அணியப்பட்டிருந்தது. பெண்கள் இவற்றின் கூடவே கணவரின் அதிகாரம் என்பதையும் இணைத்து நான்கு கயிறுகளை கட்டி இருந்தனர். தைப்பிங் புரட்சியாளர்கள் ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்கக்கூடிய முறையில் கயிறுகளை அறுத்தறிய வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். ஆண் பெண் சமம் என்று அறிவித்தார்கள். பெண்கள் அரசு தேர்வில் கலந்து கொள்வதும், ராணுவ பதவிகளை பெறுவதும் அனுமதிக்கப்பட்டது. பல பெண்கள் ராணுவ தளபதிகளாக மாறினார்கள். திருமணங்களில் ஒருதார மண முறை கட்டாயமாக்கப்பட்டது. தைப்பிங் புரட்சியாளர்கள் மூட பழக்கத்திற்கு எதிராகவும், தேசிய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய முறையிலும் தங்களது திட்டங்களை ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலைநாட்டினார்கள்.
நீடித்த நெருக்கடிகளும் வீழ்ச்சியும்
பல்வேறு காரணங்களால் கிளர்ச்சியாளர்கள் தங்களது புரட்சிகர தன்மையை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கிளர்ச்சிக்கு சீனாவில் உருவாகி வந்த குட்டி முதலாளித்து வர்க்கத்தினர் தலைமை தாங்கினார்கள். புரட்சிக்கு தலைமை தாங்கியவர் கடவுளின் கட்சி என்ற பெயரை முன்வைத்து மதத்தன்மைகளோடு இணைக்க முயற்சித்தார். இவர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியவர். கிருஸ்துவ மதத்தை சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய விவசாயிகளின் லட்சியங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்தார், ஒருங்கிணைத்தார். தலைமைக்கு இருந்த இந்த போக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது.
தலைமை தாங்கியவர் கிறிஸ்துவத்தின் பிராட்டஸ்டண்ட் பிரிவின் ஆதரவாளராக இருந்ததினால் விக்கிரகங்களை அகற்றக் கூடிய வேலைகளில் ஈடுபட்டனர். கன்பியூஸியம், பௌத்தம், தாவோயிச மதங்களின் சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். கன்பியூஸியம் சீனாவின் நிலப்பிரபுத்துவ அமைப்பின் சித்தாந்தம் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்திருந்தாலும் நடைபெற்ற புரட்சி நிலப்பிரபுத்துவத்திற்குஎதிரான புரட்சி என்ற முறையிலும் கன்பியூசிய சிலைகளைஅகற்றப்பட்டது எதிர் நடவடிக்கைகளுக்கு உதவி செய்தது.
ஆரம்பத்தில் மேற்கத்திய பத்திரிகைகளும், மேற்கத்திய அரசு வட்டாரங்களும் கூட புரட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். புரட்சியாளர்களைக் கொண்டு அந்தப் பகுதியில் தங்களது அபின் வியாபாரத்தை, மற்ற வர்த்தக பலன்களை பெற முடியும் என்று ஆதரித்தார்கள். ஆனால் தைப்பிங் புரட்சியாளர்கள் வெளிநாட்டினரை அனுமதிக்காமல் இருந்தது மட்டுமல்ல, மஞ்சு அரசாங்கத்திடம் பெற்றிருந்த அனைத்து சலுகைகளையும் ரத்து செய்தனர். இதன் மூலம் தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்புநிலைப்பாட்டை முழுமையாக அமல்படுத்தினர். மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் மஞ்சு அரசுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்களை அடக்கியது.
ஏகாதிபத்தியத்தின் ஓடும் நாய்
1939 டிசம்பர் மாதம் சீனப் புரட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி என்ற தலைப்பில் மாசேதுங் ஒரு கட்டுரை எழுதினார். விவசாயிகளின் எழுச்சிகளும் போர்களும் சீன வரலாற்றின் தனித்துவமான அம்சமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார். எனவே சீன எழுத்தாளர்கள் சீன வரலாற்றின் பண்புகளை ஐரோப்பிய வரலாற்றிலிருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியம் உள்ளதையும் சுட்டிக் காட்டினார். விவசாயிகளின் எழுச்சிகளும் போர்களும் விவசாயிகளுக்கும் நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும் இடையிலான வர்க்க போராட்டங்கள் ஆகும். சீனாவின் முன்னேற்றத்தின் மாறும் கூறுகளாக இந்த வர்க்க போராட்டங்கள் அமைந்தன.
பாட்டாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற சரியான தலைமை இல்லாததால் கடந்த கால விவசாய போர்களால் விவசாயிகளை நிலப்பிரபுத்துவசுரண்டல்நுகத்தடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை. தைப்பிங் கிளர்ச்சியை பற்றி மாசேதுங் குறிப்பிடுகிற பொழுது சீனாவில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்கான உருவாக்கம் ஏற்பட்ட காலத்தில் எட்டு முக்கிய நிகழ்வுகளில் தைப்பிங் போர் ஒன்றாகும் என்று கூறினார். மாவோவின் வார்த்தைகளில் இது ஏகாதிபத்தியத்தின் ஓடும் நாயான சிங் ஆட்சிக்கு எதிரான போர் என்றார்.
விவசாயிகளின் வர்க்க போராட்டங்களை பற்றி மாசேதுங் அவர்கள் முன்வைத்த நிர்ணயிப்புகளை 1950 முதல் 1961 வரை 11 ஆண்டுகள் சீனாவில் அறிஞர்கள் விவாதத்தில் ஈடுபட தூண்டியது. 1952 ஆம் ஆண்டில் சீன வரலாற்றுச் சங்கம் தைப்பிங் பற்றிய 8 தொகுதிகளை ஷாங்காயிலிருந்து வெளியிட்டது. இதே காலத்தில் சீன பத்திரிகைகள் 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டன. இது அறிவுசார் உலகத்தில் மிக முக்கிய மாற்றம் ஆகும். ஆனால் வெளி உலகம் இதை அரிதாகவே கவனித்தது. சீனாவின் வரலாற்றுப் பாரம்பரியத்தில் விவசாயிகளின் போர்கள் முக்கிய பகுதியாக இருந்தது. நிலப்பிரபுக்கள்இந்தபோராட்டங்களை திரித்து மறைத்தனர். இருப்பினும் சுதந்திர சீனாவில் அறிவார்ந்த விவாதம் புரட்சிகர பாரம்பரியத்தை கண்டுபிடித்து வெளியிட்டது. சீனாவில் கடந்த கால சமூக பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியான செயல்முறைகளுக்கு விவசாயிகள் இயக்கங்கள் என்ஜின்களாக செயல்பட்டதை காண முடிந்தது. இதனால்தான் காரல் மார்க்ஸ் உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய புரட்சி என்று வர்ணித்தார்.
அ.பாக்கியம்
20 ஆவது தொடர் மே 14 புதனன்று வெளியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக