சீன தேசம் சுயசார்பின் சின்னம்.
தமிழ் இலக்கியங்கள் கூறும் ஐந்து வகை நிலங்களின் சங்கமம்.
பட்டுத் துணிகளின் விரிப்புகளில் பசுமைத் தேயிலையின் போர்வைகளை போர்த்திய அழகிய தேசம். அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் அரசன். கிழக்குலகத்தின் அறிவுக்
களஞ்சியம். நெடிய நாகரிக வரலாறும்
பேரரசுகளின் ஒருங்கிணைந்த வம்ச வரலாறுகளும் நிறைந்த தேசம். பழமையும் பாரம்பரியமும் நிறைந்த இந்த அழகிய
தேசத்தில் மேற்கத்திய முதலாளித்துவத்தின் ஊடுருவல் பல மாற்றங்களை உருவாக்கியது.
அடுத்தடுத்து வந்த மேற்கத்திய
உலகம்
மேற்கத்திய உலகில் உருவான
எந்திர தொழிலின் வளர்ச்சியும், வணிகத்தின் பெருக்கமும் உலகம் முழுவதும் சந்தைகளை தேடி பயணப்பட்டது. இதன்
விளைவாக ஐரோப்பிய நாடுகள் புதிய புதிய காலனி நாடுகளை
தங்களுக்கு அடிமையாக்கினார்கள். இந்தியாவிற்கு கிழக்கு இந்திய கம்பெனி மூலமாக
வணிகம் செய்ய வந்தவர்கள் எளிதான முறையில் இருந்த வேறுபாடுகளை பயன்படுத்தி
அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு அடிமையாக்கினார்கள். சீனத்தின் வரலாறும் அதன் பாரம்பரியமும் அவ்வளவு எளிதாக அந்நியர்களை உள்வாங்கவில்லை. வரலாற்று
ரீதியிலான ஒவ்வாமை நீடித்தது. ஆனால் முதலாளித்து வர்க்கம் லாபவெறி கொண்டு
பேய்த்தனமாக அலைந்தது.
மஞ்சு அரசாங்கத்தின் தவறான
கொள்கைகளால் மக்கள் அதிருப்தியில் வாழ்ந்தார்கள். ஆள்வோர்கள் மஞ்சூரியாவை
சேர்ந்தவர்கள் என்பதால் சீனத்து மக்கள் அந்நிய எதிர்ப்பு
போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்துடன் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடியும் அமைதியின்மையை உருவாக்கியது. இக்காலத்தில் சீனாவின் கடல்
மார்க்கமாக ஐரோப்பியர்கள் உள்ளே நுழைந்தார்கள். 1514-இல் போர்த்துகீசியர்கள், 1575-இல் ஸ்பெயின் நாட்டவரும் 1604 - இல் ஹாலந்து
நாட்டை சேர்ந்தவர்களும், 1637 - இல் ஆங்கிலேயர்களும், 1660 -
இல் பிரெஞ்சுக்காரர்களும் 1784 - இல் அமெரிக்கர்களும் ஒருவர்
பின் ஒருவராக வக்கணை நிறைந்த
வார்த்தைகளுடன் வணிக மூட்டைகளை சுமந்து கொண்டு சீனாவிற்குள் வந்தனர். இப்படி வந்தவர்கள்
போதாது என்று இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், தென் அமெரிக்காவை சேர்ந்த பலரும் சீனாவிற்கு
வாணிபப்படை எடுத்தனர். ஏற்கனவே 1567 முதல்
சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் தரை மார்க்கமாக வணிக தொடர்புகள் உண்டு.
ஹாங்கு
வணிக முறைகள்
மேற்கத்திய முதலாளித்துவ
ஊடுருவல் முதலாவதாக 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி 1842 ஆம்
ஆண்டு வரை அதாவது முதல் அபினி யுத்தம் நடைபெறும்வரை இருந்தது. இக்காலத்தில் வணிக
முதலாளித்துவம் செய்யக் கூடியவர்கள் உள் நுழைந்தார்கள். 1842
முதல் 19ஆம் நூற்றாண்டு இறுதிவரை சுதந்திர வாணிகம் கொள்கை
உடையவர்கள் வந்தனர் அல்லது தொழில்துறை முதலாளித்துவம் சீனாவிற்குள் வந்தது.
மூன்றாவதாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ஐரோப்பிய
நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின்
தொழில்துறையை சேர்ந்தவர்களும், நிதித்துறை சேர்ந்த
முதலாளிகளும் சீனாவில் முதலீடு செய்ய தொடங்கினார்கள்.
சீனாவில் காண்டன்
துறைமுகம்தான் முதன் முதலில் ஐரோப்பியர்களின் வணிகத்திற்காக திறக்கப்பட்டது. அதிலும்
அவர்கள் நேரடியாக மக்களிடம் வியாபாரத்தில் ஈடுபட முடியாது. இந்த காண்டன் துறைமுகப்
பகுதியில் சீனர்கள் கிடங்குகளை வைத்திருந்தார்கள். இந்தக் கிடங்குகளுக்கு
ஹாங்கு என்று பெயர். ஐரோப்பியர்கள் சரக்குகளை இந்த கிடங்குகள் வைத்திருக்கக் கூடிய
சீனர்களிடம் விற்பனைசெய்ய வேண்டும். இவர்கள் மற்ற
இடங்களுக்கு சரக்குகளை அனுப்பி விற்பனை செய்வார்கள். இவர்களுக்கு ஹாங்கு என்று
பெயர். இவர்கள் தங்களுக்கென சங்கத்தை அமைத்துக் கொண்டனர். ஐரோப்பியர்கள்
எந்த காரணத்தை கொண்டும் நேரடியாக வியாபாரம் செய்ய முடியாது.
நகரத்துக்குள் நுழைந்து ஜனங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.
ஐரோப்பியர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த ஹாங்கு பொறுப்பேற்க வேண்டும்
என்று விதி உருவாக்கப்பட்டது.
பரந்த சீன
பிரதேசத்தையும் அங்கு இருக்கக்கூடிய சந்தைகளையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதிய
ஐரோப்பிய முதலாளித்துவத்துக்கு இந்த கட்டுப்பாட்டுக்கு
உட்பட்ட வணிகம் ஒத்து வரவில்லை. பிரிட்டிஷார் சீன அரசாங்கத்தோடு நேரடியான
ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கள் வியாபாரத்தை நாடு முழுவதும் விஸ்தரிக்க முயன்றனர்.
காரணம் கொள்ளை கொள்ளையாக லாபத்தை ஈட்ட முடியும் என்பதுதான். பிரிட்டிஷ் மற்றும்
அமெரிக்க நாட்டு முதலாளிகள் காண்டன் துறைமுகத்தை கடந்து சில
நதிகளையும் வேறு போக்குவரத்துகளையும் பயன்படுத்தி சீனாவுக்குள் வணிகத்தை விரிவு
படுத்தினார்கள். மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு
வந்தது. சீனாவிற்கு முதன் முதலாக வந்த போர்த்துக்கீசியர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட
நிபந்தனைகளை மீறி ஆயுதங்களுடன் சீன கிராமத்திற்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன், அங்கு உள்ள பெண்களையும் தூக்கி வந்தனர். இந்த செயல் கடும் கோபத்தை
ஏற்படுத்தி சீன மக்கள் சுமார் 800 போர்த்துக்கீசியர்களை கொலை
செய்தது மட்டுமல்ல, அவர்களுடைய 36 வணிகக்
கப்பல்களை எரித்து சாம்பலாக்கினார்கள்.
இருந்தாலும் ஐரோப்பியர்கள்
சீனாவை விடுவதாக இல்லை. சீன மக்களுக்கு ஐரோப்பாவில் இருந்து எதுவும்
தேவைப்படவில்லை. எனவே அவர்கள் ஐரோப்பியர்களின் வணிகத்தை நம்பவில்லை. அது மட்டுமல்ல
அவர்களின் கிறிஸ்துவ மத வழிபாட்டு முறைகளையும் விரும்பவில்லை. சீன மக்கள்
மரபுவழியற்ற வழிபாட்டு முறைகளை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். எனவே எதிர்ப்புகள் கடுமையாக இருந்தது. ஆனாலும் ஐரோப்பியர்களுக்கு
சீனா தேவைப்பட்டது. காரணம் ஐரோப்பாவின் தொழிற் வளர்ச்சிக்கு
சந்தைகளும் காலனிகளும் தேவைப்பட்டன. இந்தியாவில் செய்து
முடித்ததை ஏன் சீனாவில் செய்யக்கூடாது? தங்களது உற்பத்தி பொருட்களை ஏன் திணிக்க
கூடாது? அதற்காக சீனாவின் அதிகாரத்தை ஏன் கைப்பற்ற கூடாது
என்றும் முடிவெடுத்து வேறு வழிகளைத் தேடினார்கள். சீனாவை சந்தையாக மாற்றுவது
மட்டுமல்ல அன்றைய காலகட்டத்தில் சீனப்பட்டும், தேயிலையும்
ஐரோப்பியர்களுக்கு தேவைப்பட்டது, அதை குறைந்த விலைக்கு
வாங்கி ஐரோப்பாவில் அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள்.
இதன் காரணமாக சீனாவின்
ஆட்சியாளர்களுக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கர்கள் அதிக அழுத்தத்தை கொடுத்தனர்.
முதலில் தாங்கள் சீனாவில் இருந்து அதிக கொள்முதல் செய்வது பிறகு இறக்குமதியை
அதிகப்படுத்தி சமன் படுத்துவது அதன் பிறகு முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துவது
என்ற கொள்கைகளை உருவாக்கினர். சீன மக்களோ, மேற்கத்திய தயாரிப்பில் ஆர்வம்
காட்டவில்லை. எனவே சந்தையில் பொருட்களை குவிப்பது சாத்தியமற்றதாக
இருந்தது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகள் எதையும் செய்யத் துணியும்
என்று காரல் மார்க்ஸ் மூலதனத்தில் குறிப்பிட்டிருப்பார். அதன்படியே மேற்கத்திய
முதலாளிகள் செயல்பட்டார்கள். தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி
துணிகளை சீனாவில் குவித்தனர். ஆனால் விற்பனை நடக்காமல்
பணத்தை இழந்தனர். எனவே சீனாவிற்குள் செல்வதற்கான வேறொரு
முயற்சியை மேற்கொண்டனர். முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள லாபம் அவசியம். அதற்கு மக்களை மரணக் குழியில் தள்ளுவதற்கும்
தயங்கியது இல்லை. சீனாவிற்கு புகுந்திட புதிய வழிகளை
கண்டுபிடித்தார்கள் அபினி என்ற போதை கடலுக்குள், சீனாவை
மூழ்கடிக்க முயற்சி எடுத்தார்கள்.
இழிவான
செயலின் மறுபெயர் முதலாளித்துவம்
அனைத்து கொடூரமான
அசிங்கங்களையும் தங்க முலாம் பூசி தன்னை ஒரு நாகரீக மனிதனாக காட்டிக் கொள்வதில்
முதலாளித்துவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. எனவே அபினி என்ற
போதைப் பொருளை சீனாவிற்குள் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வணிகர்கள் இறக்குமதி
செய்தனர். அதுவரை சீனாவில் அபின் என்ற போதைப் பொருள் அறியப்படாத ஒன்றாகவே
இருந்தது. அதை அறிந்தவுடன் அவற்றை மருத்துவ பயன்பாட்டை தவிர வேறு எதற்கும்
பயன்படுத்தக் கூடாது என்று சீன அரசாங்கம் தடை விதித்தது. பிரிட்டிஷார் அதையும்
மீறி சீனாவிற்குள் அபின் போதைப் பொருட்களை
இறக்குமதி செய்தார்கள் என்பதைவிட கடத்திச் சென்றார்கள் என்பதுதான் நடந்தேறியது.
அபினி செடியின் முக்கிய
சாகுபடி மையங்களாக இருந்தது இந்தியா மற்றும் ஆசியா மைனர் பகுதி ஆகும். 1767 ஆம் ஆண்டுக்கு
முன்பு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பிரிட்டிஷ் ஏற்றுமதி
செய்யப்பட்ட அபினியின் அளவு குறைவாகத்தான் இருந்தது. சீன
சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக 1773 ஆம் ஆண்டு
சீனாவிற்கு அபினியை கடத்திச் செல்வது என்ற கொள்கையை
பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் இந்தியாவில் அபினி வர்த்தகத்தை செய்வதற்கான ஏகபோக உரிமையை கிழக்கிந்திய நிறுவனத்திடம் வழங்கினார்கள். 1797 ஆம் ஆண்டில்
இந்தியாவில் அபினி உற்பத்தி செய்யும் முழு உரிமையும் இந்த
நிறுவனம் பெற்றது. இந்தியாவில் உள்ள விவசாயிகளை பாரம்பரிய பயிர்களை எல்லாம் தடை
செய்ய சொல்லிவிட்டு அபினியின் பாப்பி
செடிகளை பயிரிடும்படி கட்டாயப்படுத்தினார்கள்.
இது மட்டுமல்ல சீன நாட்டு
மக்களை போதைக்கு அடிமையாக்குவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் போதைப் பொருட்களை
தயாரிப்பதற்கு ஒரு பெரும் தொழிற்சாலையை இந்த நிறுவனம் கல்கத்தாவில் ஆரம்பித்தது. பிரிட்டிஷ் இந்திய அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்
கிழக்கிந்திய கம்பெனி அபினியை ஏல முறைகள் மூலம் வெளிப்படையாக
விற்பனை செய்ய முடிந்தது. அதை பிரிட்டிஷ் வணிகர்கள்
வாங்கி சீனாவிற்கு கடத்தினார்கள். அபினி
கடத்தல் அமோகமாக நடைபெற்றது. பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகள் சீனாவில் இருந்து
வாங்கிய பொருட்களுக்காக டாலர்களை செலவு செய்தது தற்போது குறைந்தது. அபினி கடத்தலால் 300 மடங்கிற்கு மேல் லாபம் கிடைத்தது. அபினி கடத்தல்களால்
அவர்கள் வரி கட்ட வேண்டியது
இல்லை. சீனாவில் இருந்த அபினி வாங்கும் வியாபாரிகள் பணத்தை முன்கூட்டியே கொடுத்து
விடுவதும் இந்த பெரும் லாபத்திற்கு காரணமாக அமைந்தது.
அபினி கடத்தும்
வியாபாரிகளில் மேன்மைதங்கிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற
உறுப்பினர்களும் இருந்தார்கள். அதிக கடத்தல் செய்து சாதனை படைத்தவர்களுக்கு
பிரிட்டிஷ் அரசாங்கம் ‘நைட்’ அதாவது மாவீரர் பட்டத்தை வழங்கியது. அபினியை கடத்திய ஜேம்ஸ் மேத்சன் என்ற கடத்தல்காரன் ஸ்காட்லாந்தின் மேற்கு
கடற்கரையில் ஒரு தீவையே விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு சீன மக்களை போதை கடலில்
மூழ்கடித்தான். அந்த மாபெரும் கடத்தல் வியாபாரிக்கு
விக்டோரியா மகாராணி நைட் என்ற மாவீரன் பட்டத்தை வழங்கினார். அவர்கள் மட்டுமா? இன்றைய இந்திய முதலாளிகளின் முன்னோர்களும் அபின் கடத்தலில் அள்ளி குவித்தவர்கள் தான். சீனாவிற்கு அபினை
கடத்துவதற்கு இந்திய வணிகர்களை பயன்படுத்தினார்கள். பார்சி,
மார்வாரி, குஜராத்தி மற்றும் பிற வணிக சமூகங்களில் இருந்த
பலர் தரகு வேலைகளை செய்தார்கள். அபினி ஊக
வணிகத்தில் ஜே.என். டாட்டா, ஜி.டி.பிர்லா ஹர்துத்ராய்
சமாரியா, கோவாஸ் ஜி ஜஹாங்கீர் போன்ற பெரும் புள்ளிகளும்
அடங்குவார்கள்.
பிரிட்டிஷார் மஞ்சு வம்ச
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சீனாவின் பல்வேறு பகுதிகளில் அபினி சரக்குகளை வைத்துக் கொள்வதற்கான கிடங்குகளை கட்டிக் கொண்டார்கள். 1820 ஆம் ஆண்டு முதல் 1835 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷார்
பல்வேறு வழிகளில் கட்டுப்பாடற்ற முறைகளில் அபினியை கடத்திக்
கொண்டிருந்தார்கள். இதன் விளைவாக சீன நகரங்களில் உள்ள 40 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண்களிடமும் இந்த போதைப் பழக்கம் தீவிரமாக
பரவியது. இந்த பழக்கம் வியாபாரிகள், சேவைத்துறை மற்றும்
ராணுவத்தையும் கடுமையாக பாதித்தது. 1835ஆம் ஆண்டில் முழு
ராணுவத்திலும் 95 சதவீதம் பேர் அபினி போதைப் பழக்கத்திற்கு
அடிமையாய் இருந்தனர் என்றால் இதன் தீவிரத்தை புரிந்து கொள்ள
முடியும். பிரிட்டிஷாரின் இலக்கு சீனாவை கைப்பற்றுவதற்கு
யாரை குறி வைத்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இதனால் சீனாவின்
வாழ்க்கைத் தரம் சரிந்தது. பொது சேவைகள் அனைத்தும்
சீர்குலைந்தன. 1837 ஆம் ஆண்டில்
ஒட்டுமொத்தமான சீன இறக்குமதியில் அபினியின் இறக்குமதி
மட்டும் 57 சதவீதமாக இருந்தது. சீனாவின் வெள்ளி இருப்பு
காலியாகிப் போனது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின்
புதிய சட்டம் இதை மேலும் தீவிர படுத்தியது. 1734 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டில் வளர்ந்து வரும் தொழில்துறை முதலாளிகள்
சீனாவிற்கு அபினி வியாபாரத்தை நடத்துவதற்கு கிழக்கிந்திய
கம்பெனிக்கு மட்டும் ஏகபோக உரிமை கொடுத்திருப்பதை தடை செய்ய
வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பிரிட்டிஷ் அரசும் தடை செய்தது. இதன் மூலமாக அனைத்து முதலாளிகளும்
சீனாவை போதை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வேட்டைக்காடாக மாற்றினார்கள். 2000 ஆண்டுகளுக்கு மேலாக நாகரீகத்தின் வளர்ச்சி,
அறிவியல் கண்டுபிடிப்புகள், தத்துவம்,
என பல துறைகளில் சீனா ஏற்படுத்தியிருந்த வளர்ச்சிக்கு பாதகம் ஏற்பட்டது. இந்த
சூழலை பயன்படுத்தி அமெரிக்காவும், பிரிட்டனும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக சவால்
விட்டனர்.
மேற்கத்திய முதலாளித்துவ
ஊடுருவல் சீன சமூகத்தில் அதுவரை இல்லாத சில அடிப்படையான மாற்றங்களை உருவாக்கியது. முழுமையான
நிலப்பிரபுத்துவ சீனாவாக இருந்தது, அரை-நிலப்பிரபுத்துவ அரை-காலனித்துவ
சீன சமூகமாக மாறியது.
சீனத்து
மக்களின் சீற்றம்
சீனாவில் பிரிட்டிஷார் உள்ளே
நுழைந்த பிறகு தங்களது அபினி கடத்தலை நாடு முழுவதும் பரவலாக
கொண்டு சென்று மக்களை போதைக்கு அடிமையாக்கி விட்டார்கள். ஏகாதிபத்தியவாதிகள் சீன
மக்களை ஏமாற்றுவதற்கு தங்களது பிரச்சார கருவிகளை கச்சிதமாக பயன்படுத்துவார்கள். சீனர்களை அடிக்கடி படம்
எடுத்து பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். எப்படி தெரியுமா?
அபினி போதையில் சீரழியும் சீனனின் படத்தையும், சூதாட்டக் கூடங்களிலும், அபினி போதை விற்பனை
செய்கிற கடைகளிலும், சீனர்கள் குவிந்து சண்டை போட்டுக்
கொள்ளக்கூடிய காட்சிகளை படமெடுத்து போடுவார்கள். அது மட்டுமல்ல பாடப்புத்தகங்களிலும், குழந்தைகளின் சித்திர புத்தகங்களிலும் சீனர்கள் போதைக்கு அடிமையானவர்கள், நாகரீகமற்றவர்கள் என்று படத்தை வெளியிட்டு பிரச்சாரம் செய்வார்கள்.
பிரிட்டிஷாரும், அமெரிக்காவும் நாங்கள் நாகரிகமானவர்கள்
உங்களுக்கு நல்வாழ்வை தருவதற்காக வந்திருக்கிறோம் என்று பிரச்சாரம் செய்வார்கள். அதாவது
அபினியை கடத்தி வந்து அந்த போதைப் பொருளை நாடு முழுவதும் பரவச் செய்து, கொள்ளை
லாபம் ஈட்டிய இந்த மகானு‘பாவர்கள்’ தங்களை யோக்கியர்கள் போல் காட்டிக்
கொள்வதற்காக, சீனர்களை மோசமானவர்களை, நாகரிகமற்றவர்களாக பத்திரிகைகளில்
சித்தரித்தனர். இப்படி செய்து ஒட்டுமொத்த
சீனாவையும் கைப்பற்றலாம் என்று நினைத்தார்கள். இது காலனித்துவ அரசுகளின் மமதையை வெளிப்படுத்தக்கூடிய
செயலன்றி வேறில்லை. ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்றும், அங்கு
வசிப்பவர்கள் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் என்றும் கற்பிதம் செய்தார்கள். இந்தியாவில் இருப்பவர்கள் ஆட்சி செய்யத் தெரியாத அறிவிலிகள் என்று
கற்பிதம் செய்தனர். இதையே சீனாவிலும் செய்தனர். சீன மக்களின் தேசபக்த உணர்வை
இவர்கள் அசிங்கப்படுத்தினார்கள். அவமானத்துக்கு உள்ளாக்கினார்கள். இதனால் சீன
மக்கள் வெகுண்டெழுந்தனர்.
மேற்கத்திய ஆக்கிரமிப்புக்கு
எதிராக சீன மக்கள் அமைதியாக இருக்கவில்லை அவர்களை எதிர்த்து போராடினார்கள். காண்டன்
துறைமுகத்துக்கு அருகில் இருந்த விவசாயிகள் பெரும்படை திரட்டி பிரிட்டிஷ் யுத்த
கப்பல் மீது கெரில்லா தாக்குதலை தொடங்கினார்கள். நீர் மூழ்கி வீரர்களை இந்த
தாக்குதலுக்கு பயன்படுத்தினார்கள். காண்டன் துறைமுக
பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள சன்யுவான்லி கிராமத்தில் அந்நிய படையெடுப்புகளின்
ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடினார்கள்.
1841 மே மாதம் 30ஆம் தேதி பிங்
யிங் துவானில் பிரிட்டிஷார் தங்கி இருந்த கோட்டையை ஆயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் தாக்கினார்கள். நாலா பக்கத்தில் இருந்தும் தாக்குதல் நடைபெற்றது.
பெரும் உயிரிழப்புகளுடன் பிரிட்டிஷார் இந்த தாக்குதலை தோற்கடித்தனர் பெண்களும்
குழந்தைகளும் இதில் தீவிரமாக பங்கேற்றனர். சன்யுவான்லி நவீன காலத்தில் சீன மக்கள் வெளிநாட்டு
ஆக்கிரமிப்புக்கு எதிராக நடத்திய முதல் தன்னிச்சையான போர் என்று வரலாற்று
ஆசிரியர்கள் விவரித்தார்கள். தங்கள் நாட்டின் அரசை மக்கள்
நம்பி இருக்கவில்லை. எதிர்ப்பதற்கு
பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துணிச்சல்
காட்டினார்கள். இதன் தொடர்ச்சியாக முதல் அபினி யுத்தம்
துவங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக