(கடந்த மே 4ம் தேதி, சோசலிசம்:சீன பண்புகள் புத்தகத்தை சிந்தன் புக்ஸ் லீலாவதி அரங்கில் வெளியிட்டு நான் ஆற்றிய உரையின் சுருக்கம்.)
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் வணக்கம்.
சீனா தொடர்பான இன்றைய காலத்தின் தேவையை முன்வைத்து சிந்தன் புக்ஸ் இந்த புத்தகத்தை வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து சீனா குறித்த சில புத்தகங்களையும் கொண்டு வர இருப்பதும் வரவேற்கத்தக்கது.
இந்தப் புத்தகத்தில் 280 பக்கம் உள்ளது. சீன ஜனாதிபதி, கட்சியின் பொதுச்செயலாளர் ஜி ஜின் பிங் உரைகள் 184 பக்கங்கள் உள்ளன. மீதமுள்ள 100 பக்கங்கள் பிரபல பேராசிரியர் ரோலண்ட் போயர் என்பவர் எழுதியபுத்தகத்தின் சுருக்கமான தொகுப்பாகும். இந்தப் புத்தகத்தை தோழர்கள் மாதவ், சுகுமார், சிவரஞ்சனி ஆகியோர் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர்.
புத்தகத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்பாக சீனா தொடர்பான சில பொதுவான தகவல்களை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வெற்றி ரகசியத்தை சீன நாட்டின் தலைவர்களில் ஒருவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிசம் லெனிசம் மற்றும் மாவோ சிந்தனைகளை கடைப்பிடிப்பதும்,மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதும்,கட்சியில் அனுபவம் வாய்ந்த தேசபக்த அறிவிஜீவிகள் நிறைந்திருப்பதும் மட்டுமே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு காரணமல்ல. அதைவிட முக்கியமான அம்சம்என்னவென்றால் சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் எடுத்த முடிவுகளில் தவறு இருந்தால், அதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதோடு, திருத்திக் கொள்வதற்கு தயக்கமே காட்டுவதில்லை. அதன் விளைவாகத்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக டெங் ஷியோ பிங் காலத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் இரு முறை என்று மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. எந்தவிதமான சமரசம் இன்றி அமல்படுத்தி வந்தார்கள். 2012 ஆம் ஆண்டு ஜி ஜின் பிங் பொறுப்புக்கு வந்த பிறகு இன்றைய உலக சூழலில் தலைமையின் தொடர்ச்சி தேவைப்படுகிறது என்பதை மக்கள் முன்னாலும் கட்சியின் அகில இந்திய காங்கிரசிலும் முன்வைத்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டு அமல்படுத்தினார்கள். பொறுப்பில் நீடிப்பதற்கு வேறு எந்த விதமான குறுக்கு வழியையும் கடைபிடிக்கவில்லை.உலகிலேயே தனது முடிவுகளிலும் அதன் அமலாக்கத்தில் இருக்கக்கூடிய தவறுகளை பகிரங்கமாக பட்டியல் போட்டு அறிவித்து அதை ஏற்றுக்கொண்டு நிவர்த்தி செய்து அதில் கிடைத்திருக்கக்கூடிய சாதக பாதக அம்சங்களைஉலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.கட்சியை நடத்துவதிலும், கட்சியை வளர்த்து மக்களின்வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டிருப்பதற்கும் கண் முன் உள்ள உதாரணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.
மார்க்சியம் லெனினியம் மற்றும் மாவோ சிந்தனைகள் என்று சீன நாட்டுக்கு தேவையான தலைவர்களின் சிந்தனை முறைகளையும் இணைத்தார்கள். மாவோவின் மறைவுக்கு பிறகு மிகப் பெரும் பங்காற்றிய தலைவர்களின் தனித்துவத்தையும் இணைத்துக் கொண்டே வருகிறார்கள். இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரியங்களில் ஒன்றாகவே இருக்கிறது. மார்க்சிய லெனினியசித்தாந்தங்களை சீனாவின் சூழலுக்கு ஏற்ப பொருத்திக் கொள்வதில் மேற்சொன்ன தலைவர்களின் சிந்தனைகள் முக்கிய பங்காற்றுகிறது. சீன விடுதலைப் போராட்டத்தில் களத்தில் நின்று தலைமை தாங்கிய பெரும் தலைவர்களை சீன பாமர மக்களும் நன்கு அறிவார்கள். எனவே அவர்களின்பண்போடு, சோசலிசத்திற்கான பாதையை இணைத்தார்கள். இது சீனாவில் மட்டுமல்ல கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் இந்த பண்புகளை பார்க்கலாம். இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழகத்தில் கூட தோழர் சிங்காரவேலர் சிந்தனை சிற்பியாக மட்டுமல்ல அடித்தள மக்கள்,தொழிலாளர்கள், சட்டம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டவர். அவரை முன்னிறுத்தி இணைக்கப்படவில்லை. தோழர் சங்கரய்யா அவர்கள் பேசுகிற கூட்டத்தில் சிங்கார வேலரை இணைக்காமல் அவருடைய பேச்சை முடித்ததில்லை என்பதை தவிர குறிப்பிட்டு சொல்கிறபடி எதுவும் இல்லை. கடந்த 2015ம் ஆண்டு தென்சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு நடத்தப்பட்டபோது சிங்காரவேலர்,பி.ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், வி.பி.சிந்தன் ஆகிய நான்கு தலைவர்களின் அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆசிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளில் இதுபோன்ற அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன்.
இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில் இன்றைய ஜனாதிபதி ஜி ஜின் பிங், சீனா ஐந்தாயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட நாகரிகம் என்பதை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இவர் மட்டுமல்ல இதற்கு முந்தைய தலைவர்களும் அதை வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் பிற நாகரிகங்களில் இருந்து சீனா பல அம்சங்களில் மாறுபட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.தற்பொழுது நான் தமிழ் மார்க்ஸ் இணையதளத்தில் எழுதி வருகின்ற தொடரில் இதைப் பற்றி விரிவாக குறிப்பிட்டு உள்ளேன்.
சீன விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தை தனித்துவமான முறையில் அதாவது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற முறைகளில் இருந்து மாறுபட்டது என்பதை முன்வைத்து, அதன் மீது வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசேதுங் அறைகூவல் விடுத்தார். காரணம் வேறு எங்கும் இல்லாத அளவில் சீனாவில் விவசாயிகளின் எழுச்சியும், கிளர்ச்சியும் நடைபெற்றுள்ளது. இதனால் பெரும் பேரரசுகளின் மகுடங்கள் மாண்டு போனது மட்டுமல்ல, பல கோடி விவசாய பெருங்குடி மக்கள் மரணமடைந்த ஒரு வர்க்கப் போராட்டமாகவே இதை கருத வேண்டும் என்று கூறினார். கடைசியாக நடைபெற்ற தைப்பிங் விவசாயிகளின் எழுச்சியில் 2 கோடி பேர் மரணமடைந்தார்கள்.
இதை நான் குறிப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால், புரட்சி வெற்றி பெற்ற சோசலிச நாடுகளைப் பற்றி படிக்கக் கூடியவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயல்பாடுகளில் இருந்துதான் படிக்கத் தொடங்குகிறார்கள். இது இடதுசாரி கட்சி ஊழியர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு முந்தைய சமூக அமைப்புகள் அனைத்தும் பிற்போக்குத்தனமானது, தேவையற்றது என்ற கருத்தும்உள்ளது. இது ஒரு இயங்கியல் பார்வையாகாது. நானும் அப்படித்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். சீன வரலாற்றை அதன் நாகரீகத் தோற்றத்திலிருந்து வாசிக்கும் பொழுது ஏற்படக்கூடிய மாற்றங்களிலிருந்து பல விஷயங்களை அறிய முடிகிறது. இந்தப் பின்னணியோடு புரட்சி வெற்றி பெற்றதும், அதன் பிறகு இப்பொழுது நடக்கக்கூடிய மாற்றங்களையும் வெற்றியோ தோல்வியோ இரண்டையும் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்று பார்வை அவசியமாகிறது.
இந்த புத்தகத்தின் முதல் பகுதியில் (அதாவது 180பக்கங்களில்) இன்றைய சீன ஜனாதிபதியின் உரைகள்,நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசியவைகள்,விமர்சன சுயவிமர்சன பார்வையில் இதை அவர் முன் வைத்துள்ளார். புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் உள்ள பேராசிரியர் ரோலண்ட் போயரின் நூலில் 12 துணை தலைப்புகள் உள்ளன.
முதல் பிரிவில் சீனாவின் சிறப்பு திறனாக மார்க்சிய தத்துவம் உள்ளது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். சீனா, சோசலிச நாடு என்றும், சோசலிச நாடு இல்லை, முதலாளித்துவ நாடு என்றும் பரவலான விவாதம் நடந்து கொண்டு வருகிற பொழுது சீனா, சோசலிச பாதையில் செல்லும் நாடு என்று பொருத்தமாக எழுதியுள்ளார். சிந்தனைக்கு பொருந்தும் தத்துவார்த்தஅமைப்பாக இயங்கியல் பொருள்முதல் வாதமும், ஒரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்வதற்கு வரலாற்று இயல் பொருள் முதல் வாதமும் உள்ளது. வரலாற்று இயல்பொருள்முதல் வாதத்தையும் மார்க்சியத்தையும் சீன சூழலுக்கு ஏற்ப எவ்வாறு அமல்படுத்துகிறோம் என்பது வலியுறுத்தப்படுகிறது. இந்த அமலாக்கத்தின் வெளிப்பாடாக சீன மார்க்சிய அனுபவத்தை உலகம் அறிந்திட செய்ய வேண்டும் என்று ஜி ஜின் பிங் வலியுறுத்துகிறார்.
இரண்டாவது பிரிவில் டெங் ஷியோ பிங் சிந்தனையை விடுவித்தல் என்ற செயலை வலியுறுத்துகிறார். நாம் மார்க்சிய வாதிகள் எனும்போது மற்ற சித்தாந்தங்களைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதுஉண்டு. இந்த கேள்விக்கு டெங் ஷியோ பிங் சம்மட்டி அடி கொடுக்கிறார். ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் மற்றும் அரசியல் பாதையை பின்பற்றினால் சிந்தனை எப்படி விடுதலை அடையும் என்று கேள்விகள் எழும். சீன மார்க்சியத்தை பொறுத்தவரை இது அல்லது அது என்று இரண்டில் ஒன்றை முடிவு செய்வது அல்ல. சிந்தனையை விடுவித்தல் என்ற பாதையை முன் வைக்கிற பொழுது தன் மூளையை ஆக்கபூர்வமான ஈடுபாட்டுடன் இயங்க வைப்பது மூலமாகத்தான் சிந்தனையை விடுவிக்க முடியும். அதாவது சிந்தனையை சூழலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். சோசலிசத்திற்கான சிந்தனை சுதந்திரம். கட்டமைப்பிற்கு தேவையான புதுமைகளுக்கான சுதந்திரம். சிந்தனையை விடுவித்தல் என்பது புதுமையை உந்துதல் ஆகும். புதிய சிந்தனைகள் புதிய வழிமுறைகளின் உருவாக்கம். சோசலிச அமைப்புகளை சீர்திருத்தம் செய்வதற்கு, திறந்து விடுதல், உற்பத்தி சக்திகளை விடுவிப்பது, சந்தை நிறுவனங்களை வளர்ச்சி அடைய செய்வது என்ற உறுதியான திட்டங்களுடன் சிந்தனை விடுவித்தலை இணைத்துப் பார்க்க வேண்டும் என்று டெங் ஷியோ பிங் முன்வைக்கிறார். மார்க்சிய சூத்திரங்களுக்குள் அடங்கிக் கிடந்து சிந்தனைகளை சிறைபிடித்து விட்டுசெயல்பட்டால் சூழல்களை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது.
மூன்றாவது பிரிவில், மார்க்சிய தத்துவத்தில் எதிர்மறைகளும் முரண்பாடுகளும் ஒரு கோட்பாடு ஆகும்.இதை எவ்வாறு சீன சமூகத்திற்கு பொருத்துகிறார்கள் என்பது தான் இந்த பிரிவின் செய்தி. எதிர்மறைகளும் முரண்பாடும் ஒன்று அல்ல சோசலிசத்தில் எதிர்மறைகள் மறைந்துவிடும் முரண்பாடு நீடிக்கும் என்பதை லெனின் எடுத்துரைக்கிறார். சீனாவில் வெவ்வேறு காலகட்டங்களில் முன்னுக்கு வந்த முரண்பாடுகளைப் பற்றி இந்தப் பகுதி விவரிக்கிறது.
ஒருவேளை வளர்ச்சி அடைந்த சோசலிச சமூகத்தில் முரண்பாடு... (உற்பத்தி சக்தி-உற்பத்தி உறவு, உற்பத்திதேவை-தொழில்நுட்ப வளர்ச்சி....) இல்லையானால் சோசலிசத்தின் வளர்ச்சி சாத்தியமற்றதாக இருக்கும்.இதனால் தேக்க நிலை ஏற்படும். எனவே சோசலிசத்தில் உள்முரண்பாடுகளின் ஒழுங்கு ஒரு கட்டத்தில் மற்றொரு உயர்ந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். முரண்பாடுகளை சரியாக கையாண்டு தீர்வு காணும் இடைவிடாத செயல்முறைகளின் மூலம் சோசலிச சமூகம் மேலும் ஐக்கியப்பட்டு, மேலும் உறுதிப்பட்டு வளர்கிறது என்று மாவோ எழுதுகிறார்.
மாவோ புறக்காரணங்களின் பங்கையோ அகம்புறம்இயங்கியலையோ மறுக்கவில்லை. பண்பு மாற்றத்தின் அவசியத்தை உள்காரணிகளே தீர்மானிக்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். இதை வெளிக்காரணிகள் தீர்மானிக்கவில்லை என்பதையும் வலியுறுத்துகிறார். இது சீன சமூகத்தில் சோசலிசத்தை நிர்மாணிப்பதில் மார்க்சிய பார்வையின் அடிப்படையில் வரக்கூடிய முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிகாட்டியாகும். ஏற்படக்கூடிய தோல்விகளுக்கும்,நெருக்கடிகளுக்கும் மற்றவர்கள் மீது காரணங்களை சுமத்தி விட்டு உள்காரணிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது அழிவுக்கு வழிவகுக்கும்.
இதனால்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டெங் ஷியோ பிங் சீர்திருத்தத்தை ஆரம்பிக்கிற பொழுது அககாரணிகளை முதலில் நாம் கவனத்தில் கொண்டு தீர்க்க வேண்டும் என்று முதன்மைப்படுத்துகிறார். நமது செயல்பாட்டில் வெற்றி, தோல்விகள், போராட்டங்கள் அனைத்திற்கும் உள்காரணிகளை பரிசீலிப்பதுஅடிப்படையானது. புறக்காரணிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ளக்கூடிய செயல் அழிவு பாதை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்கள்.
நான்காவது பிரிவில் சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். சீர்திருத்தம் குறித்து மார்க்சிய அடிப்படையை விளக்குகிறார்கள். சீர்திருத்தத்திற்கு புரட்சியுடன் இருக்கும் உறவை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் இதற்கான விடை காணப்படுகிறது. அனைத்தும் புரட்சியினால் மாறிவிடும் என்ற கருத்தும், படிப்படியான சீர்திருத்தத்தினால் மட்டும்தான் புரட்சி ஏற்படும் என்ற கருத்தும் இருக்கிறது. சீர்திருத்தம் என்பது பாட்டாளி வர்க்க புரட்சிக்குப் பிறகு மிகவும் அவசியமானது. எந்த அளவிற்கு என்றால் சீர்திருத்தம் புரட்சிகர செயல் முறையில் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்று லெனின் அவர்களின் கருத்துக்களை இந்த பிரிவில் முன்வைத்து விளக்குகிறார்கள். சீர்திருத்தங்களின் வரலாறுகள் இந்த பிரிவில் கொண்டுவரப்படுகிறது. சீர்திருத்தம் ஆரம்பித்து பத்து ஆண்டுகளில் 1990களில் கடும் நெருக்கடிகளை சந்தித்தார்கள். இதற்கு "90-ன் நெருக்கடி" என்று பெயர். இதை பரிசீலனை செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, எழுந்த முரண்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு சீர்திருத்தத்தை கைவிடுவதில்லை ஆழப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததுடன் சுயசார்பு, இரட்டை சுழற்சி முறை போன்ற கொள்கைகளை உருவாக்கினார்கள்.
ஐந்தாவது பகுதியில் திட்டமிடலும், சந்தையும் பற்றிய அணுகுமுறை துல்லியமாக விளக்கப்பட்டுள்ளது. சந்தை என்பது எல்லா காலத்திலும் இருந்தது. முதலாளித்துவ சமூகத்தில் மட்டுமே சந்தை இருந்ததாக சொல்வது தவறு. சில சந்தைகள் இந்தப் பகுதியில் சுட்டிக் காட்டப்படுகிறது.சந்தை பொருளாதாரம் என்பதை முதலாளித்துவத்தால்மட்டும் வரையறுக்கப்பட்டது என்று சொல்ல முடியாது.அதேபோல் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிச அமைப்புக்கு மறு பெயர் அல்ல. சந்தை பொருளாதாரம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு என்ற மாயை நிலவுகிறது. சீனா சந்தைப் பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரம் இரண்டு வடிவங்களையும் கொண்டுள்ளது. சந்தை பொருளாதாரத்தின் நிறுவன வடிவம் உற்பத்தி சக்திகளையும், உறவுகளையும் ஒழுங்கமைக்கிறது. திட்டமிட்ட பொருளாதாரம் வளங்களை ஒதுக்குவதும்,சரக்குகளை விநியோகிப்பதிலும், மதிப்பு விதிகள்,விலைகளின் போட்டிகள் போன்றவற்றிலும் திட்டமிட்ட பொருளாதாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது பற்றிய ஆழமான விளக்கம் புத்தகத்தில் உள்ளது.
ஆறாவது பகுதியில் நவீன மயம் குறித்த அணுகுமுறைகள் உள்ளது. விவசாயம், தொழில் துறை,தேசிய பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்ஆகியவற்றை நவீன மயமாக்குவது என்ற கொள்கை மாவோ காலத்தில் உருவாக்கப்பட்டாலும் டெங் ஷியோ பிங் காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கொள்கையாக மாற்றப்பட்டது. இந்த செயல்பாட்டின் மூலம் 2021 இல் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டது.சூழலியலில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. கோவிட்(கொரோனா தொற்று) போன்ற அபாயங்களை எதிர்கொண்டு முறியடித்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
ஏழாவது பகுதியில் சோஷலிச ஜனநாயகம் பேசப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லை. ஜனநாயகம் என்பதன் வடிவம் மட்டும்தான் உள்ளது. அதில் மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகம்,வாக்களிப்பதற்காக மட்டுமே என்று சுருக்கப்பட்டுள்ளது.சீனாவில் செயல்பாட்டு ஜனநாயகம் உள்ளது. இங்கு ஏழு வகையான ஜனநாயக செயல்முறைகள் கடைபிடிக்கப்படுவது விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் முறைகளும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
எட்டாவது பகுதியில் மனித உரிமை குறித்த மார்க்சிய அணுகுமுறை அடிப்படையானது. மேற்கத்திய இறையாண்மை என்பது மற்ற நாடுகளை காலனி படுத்திய இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டது. சீனாவோ காலனித்துவத்தை எதிர்க்கும் மரபுகளைக் கொண்ட இறையாண்மையை தன்னிடம் கொண்டுள்ளது. எனவே சீனாவின் அடிப்படை மனித உரிமை என்பது, சமூக பொருளாதார நல்வாழ்வு உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது. சித்தாந்த அடிப்படையில் இதுதான் சீனா கடைபிடித்து வருகிறது.
ஒன்பதாவது பகுதியில் சிறுபான்மை தேசியஇனங்களின் கொள்கை விளக்கப்படுகிறது. சீனாவில் மாநிலங்கள் உட்பட மொத்தம் 160 தன்னாட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கி உள்ளது. 56 தேசிய இனங்கள் உள்ளன. தேசிய இனம் என்பது இனத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. பண்பாடு, பிரதேசம்,பொதுமை, மதம் அல்லது அடையாளம் போன்ற பல காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நான்கு விதமான கொள்கைகள் இந்த பிரிவில் விளக்கப்படுகிறது. கல்வியில் உள்ளூர் தேசிய இன மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தேசிய மொழிகளையும் கற்றுக் கொடுப்பது,சிறுபான்மை மக்களின் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பராமரிப்பது போன்றவைகள் இந்த கொள்கைகள் ஆகும். நவ ஏகாதிபத்திய சக்திகள் சீனாவிற்குள் தைவான், திபெத், ஜின்ஜியாங், ஹாங்காங் போன்ற பகுதிகளில் சீர்குலைவை செய்ய முயற்சிக்கிறார்கள். இதுதான் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்ஆகும். இவற்றை சீனா வெற்றி கொண்டு வருவதையும் குறிப்பிடுகிறார்கள்.
மிக அடிப்படையானது சீன தேசிய இனங்கள் பின்தங்கிய நிலைமையை மாற்றுவது. அந்தப் பகுதியில் மேம்பாட்டு திட்டங்களை அமலாக்கி வளர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது முக்கிய அம்சமாகும். இதனால் அவர்கள் சீனாவின் பொது சமூகத்தோடு இணைந்திருக்கிறார்கள். தேசிய இனங்களை நிர்வகிக்கிற பொழுது அதிக தன்னாட்சி, அதிக ஒற்றுமை, அதிக பொருளாதார முன்னுரிமை கொள்கைகள் போன்றவைகள் மக்களின் வாழ்நிலைகளை மேம்படுத்துகிறது. எனவே, அவர்கள் சீன சமூகத்தின் முழுமையின் ஒரு பகுதியாக தங்களை காண்கிறார்கள்.
அடுத்த மூன்று மூன்று பகுதிகளில் சட்டத்தின் ஆட்சி,கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, மார்க்ஸ், எங்கல்ஸ்சித்தாந்தங்களை சீன நிலைமைக்கு ஏற்ற வகையில் இன்றைய ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
சீனாவைப் பற்றிய மேற்கத்திய ஊடகங்களால் தவறான முறையில் அறிவியல் பூர்வமாக முலாம் பூசப்பட்ட பொய்களையும், பிரச்சாரங்களையும் இந்த புத்தகம் உடைத்தெரிகிறது. அதே நேரத்தில் சீன சமூகத்தை உள்நுழைந்து புரிந்து கொள்வதற்கான பேராயுதமாக இருக்கிறது.
புத்தகம் மிக முக்கியமான கருத்துக்களை காலத்துக்கு ஏற்ற சூழலில் முன் வைப்பதால் இதன் வடிவமைப்பு உட்பட தயாரிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
அ.பாக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக