Pages

வியாழன், மே 22, 2025

ஐரோப்பாவில் மதம்-சீனாவில் அபினி

 

– அ.பாக்கியம்  

மேற்கத்திய முதலாளித்துவம் எந்த இடத்திற்கெல்லாம் சென்றதோ அந்த  இடத்தில் உள்ள மக்களை சுரண்டுவதற்கு மதத்தை பயன்படுத்தியது. மக்கள் துன்பப்படுவதற்கும், மணிக்கணக்கில் உழைப்பதற்கும், நாங்கள் (முதலாளிகள்) காரணம் அல்ல, இறைவன் வகுத்த விதி என்று மக்களை மூட நம்பிக்கையில் மூழ்கடித்தார்கள்.

காரல் மார்க்ஸ் மதத்துடன் அபினியை அடையாளப்படுத்தி எழுதி இருப்பார். “மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகின் இதயம். ஆன்மா இல்லாத உலகின் ஆன்மாவாக இருப்பது போல அது மக்களின் அபின்” என்றார். முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், தொழிலாளி வர்க்கத்தை ஒடுக்கவும் பயன்படும் ஒரு கருவியாக மதத்தை, மார்க்ஸ் கருதினார்.

அதாவது முதலாளித்துவ சமூகத்தில் வாழ்க்கையின் கடுமையான நிலைமைகளிலிருந்து, தற்காலிகமாக தப்பிக்கவே மதம் உதவுகிறது. அதே நேரத்தில் மதம் ஆறுதலை அளிப்பதுடன், தவறான மகிழ்ச்சி உணர்வுகளையும் வழங்குகிறது என்று மார்க்ஸ் கருதினார். இந்த தவறான மகிழ்ச்சி உணர்வுகள் மக்கள் தங்கள் துன்பத்திற்கான மூல காரணங்களை கண்டுபிடிப்பதிலிருந்து திசை திருப்பப்படுகிறது என்பதை காரல் மார்க்ஸ் திட்டவட்டமாக நிரூபித்தார். போதைப்பொருளான அபினி, அதை உட்கொள்ளுபவரின் மூளையில் மாயத் தோற்றங்களை உருவாக்கி சிந்தனைகளை சிதைப்பது போல், மதம் ஒரு சிதைந்த உலக கண்ணோட்டத்தை அளிக்கிறது. பூமியில் உள்ள துயரங்களுக்கு எந்த தீர்வையும் வழங்காமல், மறுமை வாழ்க்கையின் மகிழ்ச்சிக்காக வாக்குறுதியை வழங்குகிறது.

மேற்கத்திய முதலாளித்துவம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வணிகத்தின் வழியாக நுழைந்து இங்கிருந்த மத மோதல்களை பயன்படுத்திக் கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கி இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சீனாவில் மதம் என்பது மாறுபட்ட முறையில் உருவாகி வளர்ந்தது. அங்கு உருவான வாழ்க்கை நெறிமுறைகளே பிற்காலத்தில் மதம் என்ற வரையறைக்குள் பேரரசுகள் கொண்டு வந்தனர். அங்கு உருவான சில மதங்களும், சீனாவிற்குள் சென்ற பௌத்தமும் கடவுள் என்ற கொள்கையை முன் வைக்கவில்லை. சீனத் தன்மைகளை உள்வாங்கிய பிறகு தான் பௌத்தமும் சீனாவில் செல்வாக்கு பெற முடிந்தது.  தாவோயிசமும், பௌத்தமும் பல நேரங்களில் அரசை எதிர்த்த கிளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது. எனவே பிரிட்டிஷார் மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் சீனாவிற்கு வணிகம் வழியாக உள்ளே நுழைந்தாலும் மதத்தை பயன்படுத்த முடியவில்லை.

அதே நேரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட வணிக தடைகளை எதிர்கொள்வதற்கு உடனடியாக படையெடுப்பையும் நடத்தவில்லை. காரணம் 19 ஆம் நூற்றாண்டு வரை சீனா ஒரு வலிமை வாய்ந்த நாடு என்ற எண்ணம் பிரிட்டிஷாரிடம் மட்டுமல்ல, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளிடம் வலுவாக இருந்தது. எனவே ஐரோப்பாவில் மதத்தை அபினிபோன்று பயன்படுத்தியவர்கள் சீனாவில் அபினியை பயன்படுத்தி அந்த நாட்டை சீர்குலைத்து தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

சமூகத்தையும், அந்நிய எதிர்ப்புணர்வையும், அரசு கட்டமைப்பையும் சீர்குலைத்த பிறகு தங்களது படைகளை கொண்டு சீனாவை வெற்றி கொண்டனர். சீன நாட்டை பிரிட்டிஷார் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், பிற்காலத்தில் ஜப்பான் என்று அனைவரும் கூறு போட்டனர். அபினி என்ற போதை வஸ்துகளை அறியாத சீனாவின் மீது அபினியை திணித்து சீனாவின் ஆணிவேரையே அசைத்து விட்டார்கள்.

முதல் அபினி போர் 

முதல் அபினி போர் 1839 ஆம் ஆண்டு முதல் 1842 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்தப் போரை ஆங்கிலோ-சீனப் போர் என்று அழைப்பார்கள்.  காரணம் சீனா மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு இடையில் மட்டுமே இந்த போர் நடந்தது. இரண்டாவது அபினி போர் பல நாடுகளின் கூட்டணியுடன் நடந்தது. முதல் அபினி போர் மூன்றாண்டுகள் கான்டன் துறைமுகத்தை மையப்படுத்தியும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நடைபெற்றது.

கான்டன் துறைமுகத்தில் மட்டும்தான் அந்நிய நாடுகள் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த வணிக முறைகளும் மிக மிகக் கடுமையான நிபந்தனைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. சீன மக்களும், சீன அரசும் அந்நியர்களின் வருகையை ஆதரிக்கவில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை என்ற நிலை இருந்தது. கட்டுப்பாடுகளின் விதிகளே இதை நமக்கு விளக்கும்.

  1. அந்நியர்களின் யுத்தக் கப்பல் துறைமுகத்திற்குள் வரக்கூடாது.
  2. கான்டன் துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்குகளுக்கு பீரங்கி, ஈட்டி முதலிய ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது.
  3. சீன வியாபாரிகள் அந்நியர்களிடம் கடன் வாங்க கூடாது.
  4. சரக்கு கிடங்குகளை அந்நியர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது.
  5. அந்நிய வியாபாரிகள் சீனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளக் கூடாது.
  6. எந்த ஒரு சீனனும் அந்நியர்களை டோலி என்ற மனிதர்களை தூக்கிச் செல்லும் வண்டியில் வைத்து தூக்கிச் செல்லக்கூடாது.
  7. கான்டன் துறைமுகப் பகுதியில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அன்னியர்கள் செல்ல வேண்டும்.
  8. அவ்வாறு செல்லுகிற பொழுது ஒரு சீனரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
  9. ஐரோப்பியர்கள் வியாபாரம் செய்யக்கூடிய நாட்களைத் தவிர மற்ற காலங்களில் கான்டன் துறைமுகத்தில் தங்கியிருக்கக் கூடாது. அவர்கள் மக்காவ்வுக்கு சென்று விட வேண்டும். இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் ஐரோப்பியர்களை கடுப்பாக்கியது.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தான் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து அபினி போதை வஸ்துகளை பெட்டி பெட்டியாக கடத்திக் கொண்டு இருந்தார்கள். சீன அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், மற்ற வகைகளிலும் இந்த வேலையை பிரிட்டிஷார் செய்தனர். பிரிட்டிஷாரின் நோக்கம் சீனா முழுவதும் வர்த்தகம் செய்ய வேண்டும், அபினி வர்த்தகத்தை சட்டபூர்வமாக்க வேண்டும். சுதந்திர வாணிபம் என்ற கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

இதே காலத்தில் பிரிட்டிஷ் வணிகர்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட அதிகாரிகள் சீன மன்னருக்கு ஆலோசனைகளை முன் வைத்தார்கள். அபினி வியாபாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும். அதற்கு வரி விதித்தால் வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். அன்றைய தினம் ஆட்சி செய்த அரசர் இந்த ஆலோசனைகளை நிராகரித்தது மட்டுமல்ல அபினி கடத்தலை தடுப்பதற்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அந்நியர்கள் வணிகம் செய்யும், அபினி கடத்தலின் மையமாக இருக்கக்கூடிய கான்டன் துறைமுகப் பகுதிக்கு லின் என்ற சிறப்பு தளபதியை மன்னர் அனுப்பி வைத்தார். அவர் கான்டன் பகுதிக்குச் சென்று அங்கு இருந்த பிரிட்டிஷார் உட்பட இதர அந்நிய நாட்டு வியாபாரிகளிடம் அபினி கடத்தினால் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் நிறுத்தவில்லை. கிடங்குகளில் வந்து இறங்கிய சுமார் 1420 டன் அபினி பெட்டிகளை பறிமுதல் செய்தார். அவற்றை மீண்டும் பயன்படுத்தாத வகையில் அங்கிருந்த கடற்கரையில் மிக பிரம்மாண்டமான குழியை வெட்டி அதில் போட்டு எரித்தார். பின்னர் அவற்றை கடலில் கலக்க விட்டார். இந்த செயல் அதிகளவில் அபினி கடத்திய பிரிட்டிஷாரை மிகப் பெரிய அளவிற்கு பாதித்தது. இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இதைப் பற்றி அந்நாட்டினுடைய தலைவர்கள் பேசினார்கள். சீனா தங்கள் நாட்டு வணிகர்களை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டினார்கள்.

பிரிட்டிஷார், உடனடியாக  படையெடுப்பை நடத்தாமல் பறிமுதல் செய்யப்பட்ட தங்களின்  சரக்குகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சீனாவில் இருக்கக்கூடிய அந்நிய நாட்டு வணிகப் பிரதிநிதிகளை சமமாக நடத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இந்தக் கோரிக்கை பிரிட்டிஷார் சீனாவுக்குள் நுழைந்ததிலிருந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். ஏற்கனவே 1793 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னன் சீனாவில் வணிக உரிமைகளுக்காக அனுமதி வழங்க வேண்டும் என்று 100 பேர் அடங்கிய பெரும் தூதுக்குழுவை அனுப்பி வைத்தார்.

  1. பீகிங் நகரத்தில் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் தங்க வேண்டும்.
  2. அவர்கள் சீன அதிகாரிகளுடன் சமமாக நடத்தப்பட வேண்டும்.
  3. கிறிஸ்துவ மதத்தை பிரச்சாரம் செய்யவும், கிறிஸ்துவ மத நிறுவனங்கள் சொத்துக்களை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
  4. வேறு சில துறைமுகங்களையும் வணிகத்திற்கு பயன்படுத்த திறந்து விட வேண்டும் என்று கடிதம் எழுதினார்கள்.

இவை எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே தற்போதைய சீன அரசின் நடவடிக்கைகள் பிரிட்டிஷாரின் கொள்ளையடிக்கும் காலனித்துவ ஆதிக்கத்தை தடுப்பதாக இருந்தது. எனவே 1840 ஆம் ஆண்டு ஹாங்காங் வழியாக பெரும் கடற்படைகளை அதாவது 6000 க்கும்  மேற்பட்ட பிரிட்டிஷ் ராயல் படை, 5000 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களையும் போருக்கு  அனுப்பி வைத்தார்கள். பிரிட்டிஷாரின் நவீன ஆயுதங்களும், கப்பற்படையும் சீனாவை சிதறடித்தது. மூன்றாண்டுகள் நடைபெற்ற யுத்தத்தில் பிரிட்டிஷ் படைகள் வெற்றி பெற்றன. சீனா முழுமைக்கும் அல்ல ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இந்த வெற்றியின் அடிப்படையில் சீன அரசுடன் நான்கிங் என்ற இடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இரண்டாவது அபினி போர் 

இந்த யுத்தம் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய கூட்டுப் படைகளுக்கும், சீனாவிற்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் ஆகும். 1856 முதல் 1860 ஆம் ஆண்டு வரையில் இந்த யுத்தம் நடைபெற்றது. பிரிட்டிஷ் படைகளும், பிரான்ஸ் நாட்டுப் படைகளும் பெரும் தாக்குதலை நடத்தி கான்டன் நகரத்தை முழுமையாக கைப்பற்றினார்கள். கான்டன் நகரத்து ஆளுநர் பிரிட்டிஷ் படையிடம் சரணடைந்தார். பின் இப்படை 1858 ஆம் ஆண்டு சீனாவின் வடக்கு பகுதிகளில் உள்ள கோட்டைகளையும் சில முக்கிய நகரங்களையும் கைப்பற்றியது.

முதல் அபினி யுத்தத்தில் நாட்டை பிடிப்பது நடக்கவில்லை. அதற்கு மாறாக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. கான்டன் துறைமுகம் உட்பட சில துறைமுகங்களை ஐரோப்பிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. 1858 இல் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் படைகளுடன் டீன்ட்சின் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பேரரசர் அங்கீகரிக்க மறுத்ததால் மீண்டும் கூட்டணிப் படைகள் தாக்குதலை நடத்தின. அதன் விளைவாக 1860 ஆம் ஆண்டு கூட்டணி படைகளுடன் பீகிங் நகரத்தில் பீகிங் ஒப்பந்தம்ஏற்பட்டதனால் இரண்டாம் அபினி போர் முடிவுக்கு வந்தது.

குட்ட குட்ட குனிந்தார்கள் 

முதல் அபினி போரில் தோல்வி அடைந்த சீனா நான்கிங் என்ற இடத்தில் பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முதன்முதலாக நடைபெற்ற ஏற்றத்தாழ்வான ஒப்பந்தம் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனா, தன்னுடைய எதிர்கால வாழ்வையே ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அடமானம் வைத்தது என்றால் மிகையாகாது.

தனது இறையாண்மை மற்றும் பொருளாதார சுய நிர்ணயத்தையும் அந்நியர்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் என்ற அளவிற்கு இடம் கொடுத்து விட்டது. எப்படி ஹாங்கு வணிக முறைகளில் சீனா கடுமையான நிபந்தனைகளை விதித்ததோ, 1793 ஆம் ஆண்டு மூன்றாம் ஜார்ஜ் மன்னர் அனுப்பிய தூதுக்குழுவை நிராகரித்ததோ அந்த நிலையில் இருந்து தலைகீழ் மாற்றம் இந்த ஒப்பந்தத்தில் இருந்தது.

சீன அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட அபினிக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல, பிரிட்டிஷார் நடத்திய போருக்கு ஆன செலவுகளுக்கும் சீனா பணம் கொடுக்க வேண்டும் என்ற சரத்தை திணித்தார்கள். அதன்படி 21.10 மில்லியன் டாலர் பணத்தை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும். இந்தத் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் வெள்ளி கட்டியாக ஒப்படைக்க வேண்டும் என்பது முதல் விதி. அத்துடன் மட்டுமல்ல ஹாங்காங் என்ற தீவை பிரிட்டிஷார் தங்களுடைய கப்பல் வந்து செல்வதற்கான இடமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹாங்காங் தீவு முழுவதும் பிரிட்டிஷருக்கு கொடுக்கப்பட்டது.

இதைத் தவிர ஷாங்காய் உட்பட மேலும் 4 துறைமுகங்கள் பிரிட்டிஷாருக்கு கொடுக்கப்பட்டது. மேற்கண்ட துறைமுகங்களில் வியாபாரம் செய்யவும், தங்களுடைய கிடங்குகளை, நிறுவனங்களை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை செயலில் இருந்த ஹாங்கு வியாபார முறைகள் ரத்து செய்யப்பட்டது. சுங்க வரிகள் குறைக்கப்பட்டது மட்டுமல்ல, பிரிட்டிஷ் வணிக பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் சீன அரசில் சமமாக நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

எனினும் அந்நியர்களுக்கு எதிரான வலுவான போராட்டங்கள் சீனாவில் பல இடங்களில் நடந்து கொண்டே இருந்தன. சீன அரசும் வேறு சில பகுதிகளில் அந்நியர்களை நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இதன் விளைவாக நடைபெற்ற இரண்டாவது அபினி போரின் முடிவில் அதாவது 1858 ஆம் ஆண்டு டீன்ட்சின் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் சீன அரசுடன் தங்கள் பகுதிகளுக்கான முறையில் தனித்தனியான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் இவை அனைத்துமே ஒரே விதமான சரத்துகளை கொண்டிருந்தன.

இந்த ஒப்பந்தத்தின் படி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பிரஜைகள் பீகிங் நகரத்தில் வசிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான பாதுகாப்பை சீன அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் போடப்பட்டது. கிறிஸ்துவ மதத்தை போதிக்கிறவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்களின் விவகாரங்களில் சீன அரசு தலையிடக்கூடாது என்று ஒப்பந்தத்தில் சேர்த்தனர். அந்நிய நாட்டினர் வியாபார நிமித்தமாக உள்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அனுமதி சீட்டுடன் தங்கலாம்.

அவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களை அந்நிய நாட்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர சீன சட்டங்களில் தண்டிக்க கூடாது. “முதல் அபினி யுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட நான்கிங் ஒப்பந்தத்திற்கு இதற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. முதல் ஒப்பந்தத்தில் அபினி வியாபாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் அபினியை வியாபாரம் செய்வது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது என்பது தான் மிக முக்கிய அம்சம்”. 

சீன மக்களை அபினிக்கு அடிமையாக்கி, காலப்போக்கில் சீனாவின் அதிகாரத்தைகைப்பற்றி, போதை வஸ்துவையும் சட்டபூர்வமாக்கிவிட்டார்கள் காலனித்துவவாதிகள்.

இரண்டாம் அபினி யுத்தம் நடைபெற்று முடியும் தருவாயில் 1860 ஆம் ஆண்டு பிரிட்டனும், பிரான்சும் சீனாவுடன் தனித்தனியான பீகிங் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் படி ஹாங்காங் தீவுக்கு எதிரே உள்ள இரண்டு முக்கிய தீவுகள் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 11 துறைமுகங்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இரு நாடுகளும் கொண்டு வரும் வணிகப் பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் மற்றொரு முக்கிய சரத்து சேர்க்கப்பட்டது. சீனர்கள் அந்நியர்களை விட மேலானவர்கள் என்ற நடைமுறையை இந்த ஒப்பந்தம் தகர்த்தது. இது நாள் வரை சீனர்கள் அந்நிய நிறுவனங்களில் வேலை பார்ப்பது கௌரவ குறைச்சலாக பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அதற்கான தடை நீக்கப்பட்டு அந்நியர்களின் நிறுவனங்களில், வணிக கப்பல்களில், கிடங்குகளில் சீனர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சீனர்களை வெளிநாடுகளுக்கு கூலி அடிமைகளாக அழைத்துச் செல்வதை சீன மன்னர்கள் தடுத்திருந்தார்கள். 1857 ஆம் ஆண்டு இது கடுமையாகவே அமல்படுத்தப்பட்டது. ஆனால் பீகிங் ஒப்பந்தத்தின் மூலம் இந்த தடைகள் நீக்கப்பட்டு சீன கூலிகளை சட்ட ரீதியாகவே ஏற்றுமதி செய்ய அனுமதித்தனர். 3 ஆயிரத்துக்கு அதிகமான சீனர்களை மேற்கத்திய தீவுகளுக்கு கூலிகள் ஆக அழைத்துச் சென்றனர். இத்துடன் விடவில்லை சீன அரசாங்கம் பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இக்காலத்தில் ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்ட ஈடு தொகை வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. 1861 ஆம் ஆண்டு மஞ்சூரியாவிற்கு வெளியே உள்ள பெரும் பகுதி அனைத்தும் ரஷ்யப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடுகிற இடத்திற்கு சீனா வந்து சேர்ந்தது. மேற்கண்ட முக்கிய ஒப்பந்தங்கள் தவிர பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் வெற்றி பெற்ற அந்நிய சக்திகள் ஆங்காங்கே தனித்தனியான ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தன. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 1876 ஆம் ஆண்டு சாங்டோம் மாகாணத்தில் உள்ள சே பூ  என்ற இடத்தில் நடைபெற்ற ஒப்பந்தம் ஆகும்.

சீனாவில் உள்ள யுன்னான் மாகாணத்திற்கும் பர்மாவிற்கும் வியாபாரம் நடைபெறுவதற்கான திட்டங்கள் உருவாக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவிலிருந்து மேலும் ஒரு பிரதிநிதி குழு யூன்னான் வருவதற்கும், பிரிட்டிஷர்கள் யுன்னானில் மேலும் 5 வருடம் தொடர்ந்து தங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டது.

மோதல்களில் சீனர்களால் படுகொலை செய்யப்பட்ட பிரிட்டிஷருக்கு நஷ்டஈடு தொகையாகவும், பிரிட்டிஷ் தூதுக்குழு வந்து போன செலவுகளுக்காகவும் சுமார் பத்து லட்சம் ரூபாய் சீன அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இதைவிட கீழான ஒரு நிகழ்வு சீனா பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்போது பிரிட்டிஷார் கையில் அதிகாரம் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை சீன அரசு எப்படி வரவேற்க வேண்டும் என்ற விதிகளை அவர்கள் உருவாக்கினார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் நான்கு துறைமுகங்கள் அந்நியர்களின் வணிகத்திற்கு தாரை வார்க்கப்பட்டது. சீனாவில் உள்நாட்டு கலகம் ஏற்படுகிறது என்ற காரணத்தைச் சொல்லி ரஷ்யா உட்பட பல நாடுகள் ஏராளமான படைகளை இறக்கி தங்கள் பகுதிகளை பலப்படுத்திக் கொண்டன.

மேற்கண்ட முக்கிய ஒப்பந்தங்கள் தவிர இன்னும் பல துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சீனாவில் வணிகம் செய்வது என்ற பெயரில் பல நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்தார்கள். சீனாவின் பல பகுதிகளில் யுத்த பிரபுக்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினார்கள். சீனா ஒரு குறிப்பிட்ட நாட்டின் காலனியாக மட்டும் இல்லை, பல நாடுகளின் காலனியாக துண்டு துண்டாக இருந்தது. சீன நாடு முழுவதும் காலனித்துவத்திற்கு உள்ளாக்கப்படவில்லை. கடற்கரை ஓரம் துறைமுகங்கள், நதிக்கரை பகுதிகள் போன்ற இடங்களில் அந்நியர்கள் ஆட்சி நடைபெற்றது.

மேற்கத்திய முதலாளித்துவ சக்திகள் தங்களுடைய சுரண்டலுக்காக எத்தகைய செயல்களை எல்லாம் செய்வார்கள் என்பதற்கு வரலாற்று நெடுகிலும் கரை புரண்டு ஓடக்கூடிய ரத்த ஆறுகளே சாட்சியங்களாக  உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சீனாவிற்குள் மேற்கத்திய முதலாளித்துவம் நுழைந்த முறைகள். மனிதத் தன்மையற்ற முறையில் சீன மக்களை சுரண்டியது, கொடுமைப்படுத்தியது, அவமானப்படுத்தியது என எத்தகைய இழிச்செயல்களையும் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். பாரம்பரிய சீனாவின் போராட்ட முறைகள் இவற்றை எதிர்த்து வெடிக்க ஆரம்பித்தது.

அ.பாக்கியம்

தொடர் 22 மே மாதம் 28 புதனன்று வெளியாகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....