அமெரிக்காவில்
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் சித்தாந்த மோதல்
தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். டொனால்ட் ட்ரம்ப் வலுவான
சித்தாந்த நிலைபாடுகளை கொண்டிருக்காவிட்டாலும் அவரது குழு சீனாவுக்கு எதிராக
சித்தாந்தத்தை வலுவாகப் பயன்படுத்துவோம் என்று அறிவித்திருக்கிறது. இதற்கு
அர்த்தம் என்ன? ஜோபைடன் ஆட்சியில்
இருக்கிற பொழுது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எல்ஜிபிடிக்யூ
பிரச்சனை, பெண்களின் உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றை
பயன்படுத்தினார். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவில் உள்நாட்டு கிளர்ச்சிகளை உருவாக்குவதற்கு எடுத்துக் கொண்டிருக்க கூடிய கருவி
மதசுதந்திரம் என்ற கருவியாகும். இதற்காக நிதி ஒதுக்கி
மதரீதியான மோதல்களை உருவாக்குவது என்பதுதான் இந்த மத சுதந்திரத்திற்கு பின்னால்
இருக்கக்கூடிய சித்தாந்தம் ஆகும்.
அமெரிக்கா
மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் சீனாவில் மதங்கள்
குறித்து முரண்பாடான பல பிரச்சாரங்களை
ஊடகங்களில் தொடர்ந்து செய்து வருகிறார்கள். சீன சமூகத்தில் மதங்களில் எழுச்சி
ஏற்பட்டு அதிகமாக மத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற பிரச்சாரம் ஒரு பக்கமும், மறுபுறத்தில் மதங்களை செயல்பட விடாமல் அடக்குகிறார்கள், மதவாதிகளை துன்புறுத்துகிறார்கள்,
சிறைப்படுத்துகிறார்கள் என்ற பிரச்சாரத்தையும் ஏக காலத்தில் செய்து
கொண்டிருக்கிறார்கள். இது ஒரு அரசியல் சார்ந்த பிரச்சாரம் என்பதை அனைவரும்
அறிவார்கள். 1999 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா, சீனாவில் மத சுதந்திரம் பற்றிய அறிக்கைகளை சீனாவுக்கு எதிராக தொடர்ந்து
வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. 2020
ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர அமைப்பு என்ற பெயரில் அமெரிக்க நிர்வாகம் பல
நாடுகளில் தலையிடுவதற்கும், மதம் தொடர்பான அறிக்கைகளை
வெளியிடுகிறது. அதில் ஒன்று சீனாவை குறிவைத்து
தாக்குவதாகும். இதற்காக தனிஅறிக்கை தயாரித்து பிரச்சாரம் செய்கிறது. சீனாவில் சமீப காலங்களில் என்ன நடக்கிறது என்பதை இன்று உலகம் அறிய ஆரம்பித்து விட்டதனால் அமெரிக்காவின் பிரச்சாரத்திற்கு பழைய காலத்தில்
கிடைத்த மவுசு தற்போது கிடைக்கவில்லை. அதேபோன்று சீனாவிலும் வளர்ச்சிக்கு ஏற்ற
மாற்றங்களை செய்வதிலும் முன்னேறி உள்ளனர்.
சீனாவில்
மதம் தொடர்பான கொள்கை முடிவுகளில் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களும்,
மேம்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1977 ஆம் ஆண்டு
சீர்திருத்தம் ஆரம்பித்த பிறகு அதுவரை கடைபிடிக்கப்பட்ட மத நம்பிக்கை சுதந்திரக்
கொள்கையில் இருந்த தவறுகளை சரி செய்து மாற்றிக் கொண்டனர். 1982 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான தீர்மானம் ஆகும். 1997 ஆம் ஆண்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் மதக் கொள்கைகள் அமலான
விதம் பற்றி வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டு சீன அரசாங்கம் மதம் தொடர்பாக நடைமுறையில் ஏற்படக்கூடிய பல்வேறு
விதமான பிரச்சனைகளை அணுகுவதற்கு சட்ட திருத்தங்களையும் விதிகளையும்
திருத்தி அமைத்தது. முதல் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட
மாற்றங்களை துல்லியமாக ஆய்வு செய்து 2018ஆம் ஆண்டு சீன
அரசாங்கம் (State council of
information office) மீண்டும் ஒரு வெள்ளை அறிக்கையை
சமர்ப்பித்திருக்கிறார்கள். இன்றைய ஜனாதிபதி ஜி ஜின் பிங் பொறுப்பேற்ற பிறகு
மதத்தை ஒடுக்குகிறார்கள் என்ற பிரச்சாரத்தை உச்சபட்சமாக அமெரிக்காவும், ஏகாதிபத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சீனாவின் வெள்ளை அறிக்கையே அமெரிக்க வெள்ளை
மாளிகையின் பொய்களை தவிடுபொடியாக்கியது. வெள்ளை மாளிகையின் முகத்தில் கருப்பு மை
பூசியது.
ஒரு
நாத்திக கட்சி ஆட்சிசெய்யும் நாட்டில் மத
விசுவாசிகளின் எண்ணிக்கை 1997 இல் 10
கோடி என்பது 2018 ஆம் ஆண்டு 20 கோடியாக
அதிகரித்து உள்ளது. இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்கு உகந்ததா என்ற
கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சீனாவின் வெள்ளை அறிக்கையை விளக்கிப் பேசிய சீன
அதிகாரி ஒருவர் இதுபற்றி எல்லாம் தெளிவாக கூறினார். ‘‘மறைந்த பிரதமர் சௌவ் என் லாய் 1950 ஆம் ஆண்டு ஒரு மதிப்பீட்டை செய்தார். அதன்படி சீனாவில் பல கோடிக்கணக்கானோர் மதத்தை பின்பற்றுபவர்களாக
இருக்கின்றனர். அவர்கள் கோயிலுக்கு செல்வதற்கு பதிலாக தங்கள் இதயங்களில் கடவுள் நம்பிக்கை
கொண்டவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட அனைவரையும்
கருத்தில் கொண்டு சுமார் 10 கோடி மத விசுவாசிகள் சீனாவில்
இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தோராயமான எண்ணிக்கைதான் 1997ஆம்
ஆண்டு முதல் வெள்ளை அறிக்கை உருவாகும் வரை ஒரு வரையறையாக இருந்தது. அப்போது
சீனாவின் மக்கள் தொகை 60 கோடி. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு
துல்லியமான முறையில் கணக்கெடுப்புகளை நடத்தி தற்போது சீனாவில் 20 கோடி மதவிசுவாசிகள் இருக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது
சீனாவில் மக்கள் தொகை 130 கோடி ஆகும். இந்த மக்கள் தொகை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, மத
நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை சீனாவில், 10 கோடியில் இருந்து 20 கோடியாக அதிகரிப்பது
இயல்பானதுதான்’’ என்றார்.
1998 ஆம் ஆண்டில், மத விவகாரங்களுக்கான தலைமை
அதிகாரிகளின் தேசிய மாநாட்டின் அறிக்கை, "சோசலிசத்தின்
ஆரம்ப கட்டத்தில், மதம் தொடர்ந்து இருக்கும் என்பது மட்டுமல்லாமல்,
அது ஓரளவிற்கும் சில அம்சங்களிலும் வளரக்கூடும்" என்று கூறியது. மறுபுறத்தில் சீனாவில் மத விசுவாசிகள் சட்டபூர்மாக வளர்வதற்கு தடை இல்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவில்
இருக்கக்கூடிய மசூதிகளை விட 12 மடங்கு அதிகமான மசூதிகள்
சீனாவில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மறுபுறத்தில் சீனாவில்
130 கோடி(2018 ல்) மக்கள் தொகையில் 20 கோடி என்பது மிகச் சிறிய சதவீதமாகும். சமீபத்திய ஆய்வுகள் முதியவர்களும்
இளைஞர்களும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கணிசமாக குறைந்து இருக்கிறது என்று
தரவுகளை வெளிப்படுத்துகிறது. 2012 ஆம் ஆண்டில் சீன
முதியவர்களில் 53 சதவீதம் பேர், வருடத்திற்கு சில முறையாவது
மத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 2018 ஆம் ஆண்டு இது 45 சதவீதமாக குறைந்தது. 2021 ஆம் ஆண்டில் இது 35 சதவீதமாக குறைந்து இருக்கிறது என்று சீன பொது சமூக ஆய்வு (CGSS) தெரிவிக்கிறது. இளைஞர்கள் மத்தியில் இது மிகமிக குறைவாக உள்ளது என்று
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கட்சி உறுப்பினர்களும் மத நம்பிக்கை
சுதந்திரமும்
சீன
கம்யூனிஸ்ட் கட்சி மத நம்பிக்கை சுதந்திரக் கொள்கையை அறிவித்து
செயல்படுத்துவதினால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மத சுதந்திரத்தை முழுமையாக
நம்பலாம் என்று அர்த்தம் அல்ல. மத நம்பிக்கை சுதந்திர கொள்கை என்பது நாட்டில்
இருக்கக்கூடிய குடிமக்களுக்கான உரிமைகள் ஆகும். இது கட்சி உறுப்பினர்களுக்கு
பொருந்தாது. சீனாவில் உள்ள சராசரி குடிமகனை போல் அல்லாமல் கட்சி உறுப்பினர் ஒரு
மார்க்சிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஒரு இயக்கவியல் பொருள் முதல்வாதியாக,
நாத்திகவாதியாக இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மத
நம்பிக்கையாளராக இருக்க முடியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர் சேர்க்கை
பற்றி கூறுகிற பொழுது, பக்தி உள்ள மத நம்பிக்கையாளர்களையோ
அல்லது வலுவான மத உணர்வுகளை கொண்டவர்களையோ அவசர அவசரமாக கட்சியில் சேர்த்துக்
கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அதே
நேரத்தில் இன சிறுபான்மையினர்கள், அடிமட்டத்தில் வாழக்கூடிய கட்சி உறுப்பினர்கள்
ஏற்கனவே மத நம்பிக்கையில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். மேலும் அவர்கள்
அந்தப் பாரம்பரிய திருமணம் அல்லது இறுதிச் சடங்குகள் அல்லது மத முக்கியத்துவம்
வாய்ந்த வெகுமக்கள் விழாக்களில் பங்கேற்க மறுத்தால்
அவர்கள் தங்களை துண்டித்துக் கொண்டு தனிமைப்படக்கூடிய நிலைமை உருவாகிறது. எனவே
சிறுபான்மையினர் இடையே வாழும் கட்சி உறுப்பினர்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை
தடை செய்யும் விதிகளை பயன்படுத்துகிற பொழுது, அவர்கள்
பொதுமக்களிடமிருந்து துண்டித்துக் கொள்ளாத வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
காரணம் இன சிறுபான்மையர் மத்தியில் மதவிழாக்கள் இனத்துடன் பின்னிப்பிணைந்துள்ளதை
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மதப் பிரச்சினைகளை குறித்து செய்தித்தாள்கள்
மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிடும்போது தற்போதைய கொள்கையை மீறாமலும்
நம்பிக்கை கொண்ட மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமலும் இருக்க விவேகமான
அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்
சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களை தரம் வாய்ந்தவர்களாக மாற்றியதன்
மூலமாகத்தான் இதை எல்லாம் வெற்றிகரமாக அமலாக்க முடிந்தது. ஒரு குறிப்பிட்ட பணிக்கு
தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து ஊழியர்களும் மார்க்சிய மத கோட்பாட்டை
முறையாக படிக்கவும், மதப் பிரச்சினையில்
கட்சியின் அடிப்படை கண்ணோட்டத்தையும், கொள்கையையும்
முழுமையாக புரிந்து கொள்ளவும், மத நம்பிக்கை கொண்ட மக்களுடன்
நெருங்கிய உறவுகளை பேணவும், மத விவகாரங்களுக்கான அரசாங்க
அமைப்புகளை நாம் வலுப்படுத்த வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களுடைய செயல்பாட்டை
வலியுறுத்துகிறது.
கட்சியின்
மத கொள்கை மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையின் அறிவியல் தத்துவார்த்த
அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கையாகும். இந்தக் கொள்கை ஒரு தீர்க்கமான
உத்தி என்பதை அனைத்து கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கட்சி
வலியுறுத்தி உள்ளது. மதத்தை ஒரு அந்நிய சித்தாந்தம் என்று எளிய முறையில்
கையாளக்கூடாது. மேலும் அதன் நேர்மறையான, அர்த்தமுள்ள
உள்ளடக்கங்களுடன் நிஜ வாழ்க்கையில் ஆக்கபூர் வமான பங்கு
வகிக்க முடியும் என்பதை உணர வேண்டும். மதம் ஒரு புற நிலை சமூக நிகழ்வு
ஆகும். புறநிலை சட்டத்தின்படி உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசாங்கமும்
சீனாவில் மத நம்பிக்கையாளர்களும், மத அமைப்புகளும், வழிபாட்டு முறைகளும் எந்த மோதலும் இன்றி மக்களின் வாழ்க்கையில் இயல்பான
ஒன்றாக நடைபெறுவதற்கு வழி வகுத்துள்ளது. அதே நேரத்தில் பொது வாழ்க்கையிலும்,
மூடநம்பிக்கைகளைப் பெருக்கக் கூடிய வகையிலும் இருப்பதை தடை
செய்துள்ளது. அரசியல் ஆயுதமாக மதத்தை பயன்படுத்தக் கூடாது என்பதிலும் தெளிவாக
இருக்கிறது. சோஷலிச சமூகத்தை நிர்மாணிப்பதில் மதத்தை எவ்வாறு அணுகுவது என்பதை
திறம்பட சீன கட்சியும் அரசும் வெற்றிகரமாக
கடைபிடித்து வருகிறது.
சீன
கம்யூனிஸ்ட் கட்சி மத வட்டாரங்களுடன் நல்ல உறவுகளை பேணுகிறது. அவர்களுடன்
ஒருங்கிணைந்த தேசபக்த ஐக்கிய முன்னணி உருவாக்கி அதன் மூலம் மேலும் உறவுகளை
பலப்படுத்துகிறது. 1991 முதல் மாநில
அளவிலான கட்சித் தலைவர்கள் ஆண்டுதோறும் தேசிய மத குழுக்களின் தலைவர்களுடன் இணைந்து
கருத்தரங்குகளை நடத்தி அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும்
உள்வாங்கிக் கொள்கிறார்கள். இவை தவிர பரஸ்பர புரிதல் நட்புறவை மேம்படுத்தும்
வகையில் கட்சி மற்ற அரசாங்கத் தலைவர்கள் நாடு முழுவதும் மதப் பிரமுகர்களுடன்
உறவுகளை பேணுவதற்கான அமைப்புகளை நிறுவியுள்ளார்கள்.
சீனாவில்
மத விவகாரங்கள் தொடர்பான பணிகள் குறித்து நடைபெற்ற மாநாட்டில் இன்றைய ஜனாதிபதி ஜி
ஜின் பிங் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். "சீனாவில் உள்ள மதங்கள்
அதிக அளவில் சீன நோக்கு நிலையை கொண்டுள்ளன, மத குழுக்கள் தாய் நாடு, சீன தேசம், சீன கலாச்சாரம், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன
பண்புகளுடன் கூடிய சோசலிசம் ஆகியவற்றின் மீதான தங்கள் அங்கீகாரத்தை தொடர்ந்து
மேம்படுத்தி வருகிறார்கள்" என்றார். "மேலும்
சீனாவை அனைத்து வகையிலும் ஒரு சிறந்த நவீன சோசலிச நாடாக வளர்த்தெடுக்கவும், தேசிய மறுமலர்ச்சிக்கான சீன கனவை நினைவாக்கவும், மத நம்பிக்கையாளர்களை பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற, சிறப்பாக அணி திரட்டவும் வழி காட்டவும் முயற்சிகள் தேவை" என்று குறிப்பிட்டார்.
சீனாவில்
மதங்களின் தோற்றம் என்பது உலகின் இதர நாகரிகங்களிலிருந்து தோன்றிய விதத்தில்
மாறுபட்டதாக இருந்தது. அந்நிய சக்திகளின் தலையிடுதல் நீண்ட காலம் இல்லாமல்
மதக்கட்டமைப்பு உருவானது. மதம் என்பதை விட வாழ்க்கைக்கான நெறிமுறைகள் என்ற
அடிப்படையிலேயே கன்பியூஸியம் தாவோயிசம், மென்சியம், போன்ற பாரம்பரிய மதங்கள் செயல்பட்டன. பௌத்தம் உட்பட பிற்காலத்தில்
உள்நுழைந்த மதங்களும் சீன மயமாக்க அடிப்படையிலேயே மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இதனால்தான் புரட்சிக்கு பிறகு சீனாவில் மதங்களின் மறுபிறப்பு என்ற புதிய
கண்ணோட்டம் உருவாகியது. சீனாவில் உலகின் இதரப் பகுதிகளில் நடந்தது போல் பெரும் மத
மோதல்கள் எதுவும் தற்போது வரை நடைபெறவில்லை. புரட்சிக்குப் பிந்திய சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு மார்க்சியத்தின் மதம் தொடர்பான கோட்பாடுகளை சீன நிலைமைக்கு ஏற்ற
வகையில் தகவமைத்து வெற்றி நடை போட்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக