Pages

வியாழன், ஏப்ரல் 17, 2025

16 தேசபக்த மதங்களும் தேச விரோத செயல்களும்

 



மத அமைப்புகளின் நம்பிக்கைகள் தேச எல்லைகளைக் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு தேசத்தின் எல்லைக்குள் தான் செயல்முறைகள் அமைந்திருக்கும். எனவே மதத்தை அரசியலுக்கு உட்படுத்தி தேசத்தின் பொது நன்மைக்கு எதிராக நிறுத்துவதையும். செயல்படுவதையும் சீன அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. சீனாவில் மதங்களை வழிநடத்துவதற்கு தேசபக்த மத அமைப்புகளை சீன மக்கள் குடியரசு அமைத்துள்ளது. 1955ஆம் ஆண்டுகளிலேயே இது போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன. இந்த தேசபக்த சங்கங்கள் மத நடவடிக்கைகளை இயல்பாக்குவதற்கான உத்திரவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் சீன பௌத்த சங்கம், சீன தாவோயிஸ்ட் சங்கம், சீன இஸ்லாமிய சங்கம், சீன கத்தோலிக்க தேசபக்த சங்கம், சீன கத்தோலிக்க மத விவகாரங்கள் குழு, சீன கத்தோலிக்க பிஷப் மாநாடு, சீன புராட்டஸ்டன்ட் மூன்று சுய தேசபக்த இயக்கம், சீன கிறிஸ்தவ கவுன்சில் என 8 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்படுகிறது. இவை தவிர மதத் தன்மையைக் கொண்ட பல சமூக குழுக்கள் உள்ளூர் அமைப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் நடத்துவதற்கான செலவுகளை மத அமைப்புகள் எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்ற கேள்வியும் அது எப்படி ஒழுங்கு படுத்தப்படுகிறது என்ற நடைமுறையும் முக்கியமானது. குறிப்பிட்ட அளவு அடிப்படையான விஷயங்களுக்கான செலவுகள் அரசின் உதவி மூலம் நடக்கிறது. அதற்கு மேலான செலவுகளை சமாளிப்பதற்கு ஒவ்வொரு மத அமைப்பும் சுய மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இயல்பாகவே மத அமைப்புக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சொத்துக்கள் இருக்கிறது. இந்த சொத்துக்களில் இருந்து வரக்கூடிய வாடகையை முறையாக நிர்வகித்து செலவு செய்திட வேண்டும். மத விசுவாசிகளிடம் சிறிய அளவு நன்கொடைகளை பெற்றுக் கொள்ளலாம். கட்டாய நன்கொடை வாங்குவது தடை செய்யப்பட்டது.  மத நிறுவனங்கள் உள்ளூரில் வசிப்பவர்களிடம் பெரும் தொகை நன்கொடையாக பெறுகிறபொழுது உரிய அரசுத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

மேற்கண்ட வழிபாட்டுத் தலங்களின் வருவாய் மற்றும் செலவினம் தொடர்பாக மேலும்  திட்டவட்டமான முறையில் செயல்படுவதற்காக 2018 ஆம் ஆண்டு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. மத நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பதற்கும், இலக்கியங்களை வெளியிடவும், மத குருமார்களை பயிற்றுவிக்கவும் நன்கொடைகளை சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. புதிய திருத்தத்தின்படி நன்கொடையின் அளவு அதிகபட்சமாக ஒரு லட்சம் யுவான் என்று தீர்மானிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் 2005 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் சீனாவில் மத நிலமைகளிலும் அதன் சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாறி வருகின்ற சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய விஷயங்களை கையாளுவதற்கு பழைய சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே காலத்தின் தேவை கருதி 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் இன்னும் திட்டவட்டமான முறையில் செயல்படுத்தப்பட்டது. ஆன்லைன் மத விவகாரங்கள் தற்போது புதிய வடிவம் எடுத்து இருந்தது. அவற்றை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தப்பட்டது. மதக் கல்வி மற்றும் மத விழாக்கள் என்ற பெயரால் வரைமுறையற்ற நேரங்களில் நடப்பதை கட்டுப்படுத்தக்கூடிய விதிகளும் கொண்டுவரப்பட்டன. சீன மக்கள் குடியரசில் மத விவகாரங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு சார்பில் மத விவகாரங்களுக்கான ஐக்கிய முன்னணி பணியகம் என்ற துறை இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

அதே நேரத்தில் சி பிராந்தியங்களில் சில நபர்கள் அல்லது அமைப்புகள் இன ஒற்றுமைக்கும், சமூகத்தின் நிலைத்த தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்ககூடிய முறையிலும், மதத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். திருத்தப்பட்ட விதிமுறைகள் இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. சட்டரீதியான மத நடவடிக்கைகளை பாதுகாக்கவும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தடுக்கவும் இந்த திருத்தத்தின் மூலம் முன்னுரிமை கடமையாக மாற்றப்பட்டது.

கடவுள் சந்தைமயமாவதை கட்டுப்படுத்தல்

பல்வேறு விதமான மாற்றங்கள் சீன சமூகத்தில் முன்னோக்கி நடந்து கொண்டிருந்த பொழுது மதங்களையும் கடவுள் வழிபாட்டையும் வணிகமயமாக்கக்கூடிய செயல்களும் அதிகமாகின. பௌத்தமும் தாவோயிசமும் பந்தளவில் வணிக மயமாக்கலுக்கு பயன்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அளவு கடவுள் சிலைகளையும் கோயில்களையும் கட்டுவதற்கு பலர் முதலீடு செய்தனர். இதன் மூலம் பணத்தின் மீது குறி வைத்தார்கள். இந்த மத வணிகத்தின் மூலம் கிடைத்த பணத்தை மூலதனச் சந்தைக்கு ஒப்பந்தம் செய்து பங்கு சந்தையில் பட்டியலிட்டினர். மேலும் பௌத்த மற்றும் தாவோயிச கோயில்கள் இல்லாத இடங்களில் மத சேவைகள் என்ற பெயரால் புதிய புதிய நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்து, உண்டியல்களை வைத்து பணத்தை சம்பாதித்தனர். சில பௌத்த துறவிகளும், தாவோயிஸ்ட் குருமார்களும் வணிகமய செல்வாக்கு, புகழ் மற்றும் செல்வத்தை நோக்கி ஓடினார்கள். சாத்தியமான வழிகளில் எல்லாம் இவர்கள், பணம் சம்பாதிக்க முயற்சித்தார்கள்.

சீனத்தின் ஒட்டுமொத்தமான சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத வணிகமயமாக்கப்பட்ட மத நடவடிக்கைகளை புதிய சட்ட விதிகள் மூலம் அரசு எதிர்கொண்டது. அரசின் 11 துறைகளை ஒருங்கிணைத்து மதத்தின் வணிகமய செயல்களுக்கு எதிராக தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்தது. அது மட்டுமல்ல சட்டபூர்வமான வழக்குகளை தொடுத்து தீர்வுகண்டனர். சட்ட விரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்த புத்தர் சிலைகள் தரமற்ற முறையில் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கட்டப்பட்டது. மத வழிபாட்டு தலங்களை கடந்து சட்ட விரோதமான முறையில் பணம் வசூலிப்பதற்காக நிறுவப்பட்ட இடங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பௌத்த கோயில்களையும், தாவோயிச கோயில்களையும் இணையத்தில் வெளியிட்டு, வணிகமய போலியான கோயில்கள் தடுக்கப்பட்டன.

மதம் வணிகமயமாக்கப்படுவது எவ்வாறு மதத்திற்கும், மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதை சீன மக்கள் குடியரசு மக்களிடம் பிரச்சாரத்தை எடுத்துச் சென்றது. சட்டங்கள் மட்டும் அனைத்தையும் தீர்த்து விடாது. மக்களிடம் அரசியல் விஞ்ஞான ரீதியில் கருத்துக்களை எடுத்துச் செல்வதும் தீர்வுக்கான வழியாகும். போலியான துறவிகளும், போலியான கோயில்களை உருவாக்கி பணம் சம்பாதித்து அதன் மூலம் சில விசுவாசிகளை ஈர்க்கிறார்கள். இவர்களின் நடைமுறை பௌத்தம் மற்றும் தாவோயிசத்தின் அடிப்படை நலன்களை சேதப்படுத்துகிறது. புகழையும், செல்வத்தையும் தேடுவது மதத்தின் அடிப்படை நெறிகளுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள். இந்த வணிகமயத்தின் மூலமாக மதங்களின் நல்ல நடவடிக்கைகள், அதன் வளர்ச்சிகளும் டைபடுகின்றன. சீன மக்கள் குடியரசு மதத்தின் வணிக மையத்திற்கு எதிராக மிகப்பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூக அமைதியை பாதுகாக்கிறது.

சர்வதேச தன்மை உள்ள மதங்களும் சீன அரசும்

சீனாவில் உள்ள தேசிய மதங்களில் பௌத்தம், இஸ்லாம், கத்தோலிக்கம், புராட்டஸ்டன்ட் ஆகிய மதங்கள் உலக மதங்களாகவும் இருக்கிறது. இவை அனைத்தும் அந்தந்த நாட்டின் சமூகங்களில் விரிவான செல்வாக்கை செலுத்துகின்றன. ஐரோப்பா, வடஅமெரிக்கா, லத்தீன்அமெரிக்கா போன்ற இடங்களில் கத்தோலிக்கமும், புராட்டஸ்ட்டன்டும் பரவலாக உள்ளது. ஜப்பான், தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தம் வலுவாக உள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த மதங்களில் சில மதங்கள் சில நாடுகளில் அரச மதங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நட்பு ரீதியாக சர்வதேச மத தொடர்புகளை தீவிரமாக வளர்ப்பது சீன மக்கள் குடியரசின் கொள்கையாக உள்ளது. அதே நேரத்தில் சில நாடுகளில் உள்ள பிற்போக்குத்தனமான மத குழுக்களை சீன நிலப்பகுதிக்குள் ஊடுருவ செய்து கேடு விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த தேச விரோத வெளிநாட்டு மத சக்திகளை சீனா உறுதியாக தடுத்து வருகிறது.

சீனாவில் உள்ள மதவாதிகள் வெளிநாட்டில் உள்ள மத விசுவாசிகளுடன் பரஸ்பர வருகைகள் மற்றும் நட்பு ரீதியான தொடர்புகளில் ஈடுபடலாம். இதன் மூலம் மதத்துறையில் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை வளர்க்க முடியும். ஆனால் இந்த தொடர்புகளில் சீனத்தின் மதவாதிகள் சுயாதீனமான, சுயராஜ்ய திருச்சபையின் கொள்கைகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். சீனாவில் உள்ள மத அமைப்புகள் வெளிநாட்டு சர்ச் அமைப்புகள் மூலம் நிதி திரட்டுவது கூடாது. மத நோக்கங்களுக்காக வெளிநாட்டில் இருந்து எந்த மானியத்தையும் பெறக் கூடாது. பெரும் தொகைகளை நன்கொடை வாங்க வேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

சீன மத நிறுவனங்கள் 80க்கும் மேற்பட்ட சர்வதேச மத அமைப்புகளுடன் உறவுகளை பராமரித்து வருகிறது. பௌத்தம் மற்றும் தாவோயிசத்தை பின்பற்றுபவர்கள், சர்வதேச மன்றங்களை நடத்தி வருகின்றனர். சீன இஸ்லாமிய சங்கம் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் துருக்கி, மலேசிய நாடுகளில் இஸ்லாமிய கலாச்சார கண்காட்சி, கலைக்கண்காட்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியது. சீனாவில் இருக்கக்கூடிய புராட்டஸ்டன்ட் மதமும் அமெரிக்காவில் இருக்கக்கூடிய புராட்டஸ்டன்ட் மதமும் இணைந்து சீன அமெரிக்க புராட்டஸ்டன்ட் சர்ச் தலைவர்கள் மன்றத்தை நடத்தி உள்ளது. சீன ஜெர்மனி நாடுகளுக்கு இடையே மதங்கள் ஒன்றிணைந்து பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன.

வாடிகன் மதபீடமும் சீனாவில் கத்தோலிக்க  மதமும்

2018 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசுகிற பொழுது பல வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சீனாவில் இருக்கக்கூடிய கத்தோலிக்க மதத்திற்கு வாடிகன் பிஷப்புகளை நியமிப்பது தொடர்பான பிரச்சனையை தொடர்ந்து பலமுறை எழுப்பினார்கள். சீனாவின் அதிகாரி இதற்கான பதிலை தெரிவிக்கிற பொழுது மத உறவுகள் தொடர்பாக வாடிகனுடன் நல்லுறவுகள் பேணப்படுகிறது. தொடர்ந்து பல விஷயங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுகிறது. ஆனால் சீனாவில் இருக்கக்கூடிய கத்தோலிக்க தேவாலயங்களுக்கு பிஷப்புகளை நியமிப்பதற்காக சீன சட்டங்கள் இடம் கொடுக்கவில்லை. "இது தொடர்பாக சீனாவின் அரசியல் அமைப்பு தெளிவான நிபந்தனைகளை கொண்டுள்ளது. சீனாவின் மத அமைப்புகள் மற்றும் விவகாரங்களில் எந்த ஒரு வெளிநாட்டு ஆதிக்கத்திற்கும் உட்பட்டவை அல்ல. இதன் பொருள் எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் சீனாவின் மத விவகாரங்களில் எந்த வகையிலும் தலையிடக்கூடாது. சீன மத வட்டாரங்கள் மத விவகாரங்களின் சுதந்திரம் மற்றும் சுயமேலாண்மை கொள்கையை கடைபிடிக்கின்றன. சீனாவில் கத்தோலிக்கர்களின் மத நடவடிக்கைகளில் மத நம்பிக்கை சுதந்திரம் எந்த விதத்திலும் தடைபடுவது இல்லை’’ என்று பதில் அளித்தார்.

அதே நேரத்தில் வாடிகனுடன் இணக்கத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவு காணப்படும் என்றும் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிற்கும் வாடிகனுடன் பிஷப்புகளை நியமிப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுவரை சீனாவில் கத்தோலிக்க மத பிஷப்புகளை அந்த நாட்டின் தேசபக்த மத நிறுவனம் நியமித்து வந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் கூட்டாக நியமிப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்த சரத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சீனாவில் அங்கீகரிக்கப்பட்ட கத்தோலிக்க மதம் சீன தேசபக்த அமைப்புடன் இணைந்துள்ளது. இவை தவிர வாடிகன் போன்ற தொடர்புகளால் மறைமுகமான கத்தோலிக்க அமைப்புகள் செயல்படுவதை வெளிகொண்டுவந்து  அவற்றை சீன சுயாதிபத்திய மதங்களுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஒப்பந்தம் உதவி செய்யும் என்று சீன அரசு கருதுகிறது. இது தற்காலிக ஒப்பந்தம் என்பதை இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் தொடர்பாக சீனாவுடன் நல்லுறவும் நம்பிக்கையும் மேம்பட்டு உள்ளது என்று வாடிகன் திருச்சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஆனால், இன்றும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், சீனாவுக்குள் தலையீடு செய்வதற்காக, வாடிகனின் செல்வாக்கை பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

சீனாவில் அறிவியலுக்கு எதிராக மூடப்பழக்கங்களை வளர்க்கக்கூடிய முறையில், செயல்படும் அமைப்புளும், அந்நிய சக்திகளுடன் சேர்ந்து தேச நலன்களுக்கு விரோதமாக செயல்படும் அமைப்புகளும் தடை செய்யப்படுகிறது. 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 தீய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அமைப்பு பாலூன் காங் அமைப்பாகும். இது சீனாவில் அறிவியலுக்கு புறம்பான சிகிச்சை முறைகளையும், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய முறையிலும் செயல்பட்டு வந்தது. மேலும் பௌத்தத்தின் பல அம்சங்களை எடுத்துக் கொண்டு தனிநபர் பிம்பத்தை உருவாக்கக்கூடிய செயலில் இறங்கியது. பௌத்த மத அமைப்பு இதற்கு எதிராக பிரச்சாரம் செய்தது. ஒருபுறம், மதவெறியை உருவாக்கி மோதலுக்காக சூழலை உருவாக்கியது. மற்றொரு புறத்தில் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இந்த அமைப்பு அங்கு இருக்கும் அரசுகளின் ஆதரவுடன் பயிற்சியாளர்களை, ஆதரவாளர்களை உருவாக்கி சீன அரசுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டது. தொடர்ந்து சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....