Pages

வெள்ளி, செப்டம்பர் 11, 2026

88 யி இனம் செம்படையின் நண்பன்

 

அ.பாக்கியம்

சீனாவின் நிலைமைகள் மாறிய பொழுது யி இன மக்கள் புரட்சிகரமான போராட்டங்களுக்கு உறுதுணையாக மாறினார்கள். 100 ஆண்டுகளுக்கு மேலாக சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களையும்,  அடிமை உடைமை யாளர்களுக்கு எதிரான போராட்டங்களையும் நடத்தினார்கள். சீன விவசாயிகளால் நடத்தப்பட்ட டைப்பிங் புரட்சி (1852-1864) ஏற்படுத்திய தாக்கத்தால் ‘யி’  இன மக்களும் பிற இன மக்களும் கிங் அரசாங்கத்திற்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்துவதற்கு வழி வகுத்தது.

1935 ஆம் ஆண்டு ஜப்பானிய படையெடுப்பாளர்களை எதிர்ப்பதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான செம்படை வடக்கு நோக்கி முன்னேறியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி ‘யி’  இன மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகத்தான் சென்றார்கள். செம்படையின் நீண்ட பயணம் ‘யி’  இன மக்கள் மீது நல்ல ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

வடமேற்கு குய்ஷோ மற்றும் வடகிழக்கு யுனான் வழியாகச் சென்ற வழியில், செம்படை உள்ளூர் கொடுங்கோலர்கள், தீய பிரபுக்கள் மற்றும் ஊழல் அதிகாரிகளை ஒடுக்கியதுடன், பட்டினியால் வாடிய ‘யி’  இன மக்களுக்கு உதவுவதற்காகத் தங்கள் தானிய களஞ்சியங்களைத் திறந்துவிட்டார்கள். செம்படை, பறிமுதல் செய்யப்பட்ட தானியங்கள், உப்பு, பன்றி இறைச்சி, ஆடைகள் மற்றும் அதுபோன்ற பிற பொருட்களை யி இன மக்களுக்கும் மற்ற இனக்குழு மக்களுக்கும் விநியோகித்தது. பதிலுக்கு அவர்களும் செம்படைக்கு மிகுந்த ஆர்வத்துடன் உதவினார்கள். பல இளம் ‘யி’ இன மக்கள் செம்படையில் சேர்ந்தனர்.

செம்படையின் அடுத்த பயணம் ஜின்ஷா ஆற்றைக் கடந்து யுவேசி மற்றும் மியானிங்கில் நிலை கொண்டனர். அங்கிருந்து இரு பகுதியாகப் பிரிந்து தாடு ஆற்றை நோக்கி முன்னேறினார்கள். இதற்கிடையில் ராணுவத்தின் ஆதரவுடன் மியானிங்கில் இருந்த ‘யி’ இன மக்களும் ஹான் இன மக்களும் இணைந்து மாவட்டத்தில் தொழிலாளர்-விவசாயி-வீரர்கள் உள்ளடக்கிய ஜனநாயக அரசாங் கத்தை நிறுவினார்கள்.

 

இந்த அரசின் சார்பில் புரட்சிகர படைகளை உருவாக்கினார்கள். இந்த மாவட்டத்தில் செம்படை குவோமிண்டாங் அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட “பிணைக்கைதிகள் முறையை” ஒழித்தனர். மேலும் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பல நூறு ‘யி’ இனத் தலைவர்களையும் அவர்களது உறவினர்களையும் விடுவித்தனர்.

செம்படை ஒழுக்கத்தைக் கடுமையாகக் கடைப்பிடித்தது. சிறுபான்மைக் குழுக்களுக்கான சீனப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கையை உறுதியாகச் செயல்படுத்தியது. சிறுபான்மைக் குழுக்களை விடுவிப்பதே தனது நோக்கம் என்று அறிவித்தது. மேலும், அனைத்து ஏழை ‘யி’ மற்றும் ‘ஹான்’ இனத்தவரும் உறவினர்களே என்று பிரகடனப்படுத்தியது. செம்படையுடன் ஒன்றிணைந்து, போர்ப்பிரபுக்களை வீழ்த்தி, தேசிய சமத்துவத்திற்காகப் போராடுமாறு அது ‘யி’ இன மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

செம்படையின் கொள்கைகளால் உத்வேகம் பெற்ற, மியானிங் மாவட்டத்தில் உள்ள ஒரு ‘யி’ குலத்தின் தலைவரான இளைய யுவேடன், செம்படைத் தளபதி லியு போசெங்குடன் கூட்டணி அமைத்தார். ‘யி’ க்கள் மற்றும் தலைவரின் உதவியுடன், செம்படைப் படைகள் எவ்விதத் தடங்கலுமின்றி யி மக்கள் வாழும் பகுதிகளைக் கடந்து சென்று, லுடிங் பாலத்தைக் கைப்பற்றி, டாடு ஆற்றையும் கடந்து வெற்றி பெற்றன.

புதிய அரசும் புதிய வாழ்க்கையும்

1949-ல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் மூலம், சீனாவில் யி இனத்தவர் மற்றும் பிற தேசிய இன மக்கள் அனுபவித்த அடிமைத்தனம் மற்றும் ஒடுக்குமுறையின் கசப்பான வரலாறு முடிவுக்கு வந்தது. 1952 ம் ஆண்டுகளுக்கு பிறகு சிச்சுவானின் லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணம், யுனானின் சூசியோங் யி தன்னாட்சி மாகாணம், ஹாங்ஹே ஹானி மற்றும் யி தன்னாட்சி மாகாணம் என்று யி மக்களுக்கான தன்னாட்சி மாகாணம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவப்பட்டன. யுனானின் ஈஷான், லூனான், நிங்லாங், வெய்ஷான், ஜியாங்செங், நான்ஜியான், சுண்டியான், சின்பிங் மற்றும் யுவான்ஜியாங் ஆகிய இடங்களிலும், குய்ஷோவின் வெய்னிங் மற்றும் குவாங்சியின் லாங்லின் ஆகிய இடங்களிலும் அதிகமாக யி இன மக்கள் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்கும் மற்ற இனச் சிறுபான்மையினருக்கும் மாவட்டங்கள் நிறுவப்பட்டன.

 

சமகால உலகில் நிலவி வந்த ஒரேயொரு அடிமைச் சமூகத்தின் உருமாற்றம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது புரட்சிக்கு பிந்தைய ஆண்டுகளில் யீ மக்களின் வரலாற்றில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. யி அடிமைகள் மற்றும் பிற ஏழை மக்களின் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் சீன மக்கள் குடியரசு சாமானிய மக்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்த உயர் சமூக அந்தஸ்துடைய யி மக்களுடன் கலந்தாலோசித்த பின்னர், 1956-ல் சிச்சுவானின் யி பகுதிகளிலும், யுனானின் நிங்லாங் தன்னாட்சி மாவட்டத்திலும் ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது.

இந்த ஜனநாயக சீர்திருத்தங்களின் அடிப்படை நோக்கம், அடிமைத்தனத்தை ஒழித்து, உழைக்கும் மக்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும் அரசியல் சமத்துவத்தையும் அனுபவிக்கச் செய்வது. கிராமப்புற உற்பத்தி சக்தியை விடுவிக்கவும், விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கவும், அடிமை உடைமையாளர் வர்க்கத்தின் நில உரிமையை ரத்து செய்து, உழைக்கும் மக்களின் நில உரிமையை அறிமுகப்படுத்துவது. இதன் மூலம் விவசாயத்தில்  சோசலிச உருமாற்றம் ஏற்படுவதற்கும், கூட்டுறவு இயக்கம் உருவாவதற்குமான அடித்தளத்தை உருவாக்கினார்கள்.

கலந்தாய்வுக் கொள்கை

அமைதியான கலந்தாய்வுக் கொள்கையின்படி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்குத் தீவிரமாக உதவிய உயர் சமூகத்தினருக்கு மக்கள் அரசாங்கம் பொருத்தமான அரசியல் அந்தஸ்தையும் அதற்கேற்ற பொருள்சார் சலுகைகளையும் வழங்கியது. இதன் மூலம், பல அடிமை உரிமையாளர்கள் சீர்திருத்தத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். அதே சமயம், சட்டவிரோதமாகவும், பிடிவாதமாகவும் இருந்த ஒரு சில அடிமை உடைமையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு, ஜனநாயக சீர்திருத்தங்கள் சுமுகமாக நடைபெற்றன.

1958 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், சிச்சுவான் மற்றும் யுன்னானில் உள்ள பெரிய மற்றும் சிறிய லியாங்ஷான் மலைகளில் அமைந்துள்ள யி இன மக்கள் வாழும் பகுதிகளில் ஜனநாயக சீர்திருத்தங்கள் நிறைவடைந்தன. இந்த சீர்திருத்தங்கள் அடிமைத்தனத்தை ஒழித்து, அடிமை உடைமையாளர்களின் அனைத்து சலுகைகளையும் நீக்கி, அவர்களிடமிருந்து நிலம், கால்நடைகள், விவசாயக் கருவிகள், வீடுகள் மற்றும் தானியங்களைப் பறிமுதல் செய்தனர்.

 

மேலும் அவற்றை அடிமைகளுக்கும் மற்ற ஏழை மக்களுக்கும் விநியோகித்தனர். லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணம் மற்றும் சிச்சாங் யி பகுதிகளில், 120,000 ஹெக்டேர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 280,000 கால்நடைகள், 34,000 விவசாயக் கருவிகள், 880,000 அறைகளைக் கொண்ட வீடுகள் மற்றும் 8,000 டன் தானியங்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டன அல்லது வாங்கப்பட்டன.

சட்டவிரோத அடிமை உரிமையாளர்களால் இழப்பீடாகச் செலுத்தப்பட்ட 4,700,000 யுவானுடன் சேர்த்து ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அவை பிரித்து வழங்கப்பட்டன. இந்தச் சீர்திருத்தங்கள் 6,90,000 அடிமைகளையும் பிற ஏழை மக்களையும் விடுவித்து, அவர்களைப் புதிய சமூகத்தின் எஜமானர்களாக மாற்றியது.

அரசின் உதவி

மக்கள் அரசாங்கம், அடிமைகளுக்கும் மற்ற ஏழை மக்களுக்கும் வீடுகளைக் கட்டிக் கொடுத்ததுடன், விவசாயக் கருவிகள், தானியங்கள், ஆடைகள், மரச்சாமான்கள் மற்றும் பணத்தையும் வழங்கி, அவர்கள் சொந்த வீடுகளைக் கட்டிக்கொள்ள உதவியது. லியாங்ஷான் மலைப்பகுதிகளில், அடிமைத்தனத்தின் கீழ் வேலை செய்யும் திறனை இழந்த 1,400 வயதான மற்றும் பலவீனமான அடிமைகளுக்காக அரசாங்கம் இல்லங்களை அமைத்தது கொடுத்தது.

முன்னாள் அடிமைகளில் பலர் திருமணம் செய்துகொண்டு தங்கள் சொந்தக் குடும்பங்களைத் தொடங்கினர். பிரிந்து கிடந்த அல்லது அடிமை உடைமையாளர்களால் பிரித்து வைக்கப்பட்டிருந்த பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்தன. விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் சோசலிசப் பாதையை மிகவும் உறுதியாகப் பின்பற்றினர். மேலும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்குப் பிறகு விரைவிலேயே விவசாய உற்பத்தியில் மேம்பட்ட கூட்டுறவு சங்கங்களை அமைத்தனர்.

ஜனநாயக சீர்திருத்தங்கள், விடுதலை பெற்ற அடிமைகளையும் ஏழை விவசாயிகளையும் தங்கள் நிலங்களை மறுவடிவமைக்கவும், விவசாய உற்பத்தியை சீராக விரிவுபடுத்தவும் தூண்டின. யுனானின் சூசியோங் யி தன்னாட்சிப் பிரதேசம், சணல், புகையிலை, பருத்தி, நிலக்கடலை மற்றும் பிற பணப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் பெரும் வெற்றி கண்டது. ஹாங்ஹே யி தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள நிங்லாங், வெய்ஷான் மற்றும் ஈஷான் ஆகிய தன்னாட்சி மாவட்டங்கள் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கின, அவை விவசாயத்தில் பெரும் பங்காற்றியுள்ளன.

விடுதலைக்கு முந்தைய காலங்களில் யுனானில் இருந்த கெஜியு ஈயச் சுரங்கத்தை தவிர வேறு எந்த தொழிலும் இல்லை. ஹான் பகுதியில் இருந்து லியாங்ஷான் மலைகளுக்கு அழைத்து வரப்பட்ட சில கொல்லர்கள், கொத்தனார், தச்சர்கள் தவிர வேறு எந்த திறன் தொழிலாளர்களும் இருக்கவில்லை.இப்போது லியாங்ஷான், சூசியோங் மற்றும் ஹாங்ஹே தன்னாட்சி மாகாணங்களில் உள்ள மக்கள், விவசாய இயந்திரங்கள், உர மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள், சிறிய நீர்மின் நிலையங்கள் மற்றும் செம்பு, இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்களைக் கட்டியுள்ளனர்.

போக்குவரத்து வசதிகள் இல்லாதது, லியாங்ஷான் மலைகள் தனிமைப்படுத்தப்பட்டதற்குக் காரணமான காரணிகளில் ஒன்றாகும். விடுதலைக்குப் பிறகே சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது. 1952-ல், சிச்சுவானையும் மேற்கு யுனானையும் இணைக்கும் நெடுஞ்சாலை புனரமைக்கப்பட்டு போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. அதே நேரத்தில், லியாங்ஷான் தன்னாட்சி மாகாணத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலைகளும் கட்டப்பட்டன. 1957-ல் யிக்சி நெடுஞ்சாலை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டு, வரலாற்றில் முதன்முறையாகப் பெரிய மற்றும் சிறிய லியாங்ஷான் மலைகளை இணைத்தது. 1961-க்குள், மாகாணத்திற்குள் அனைத்து திசைகளிலும் பரவியிருந்த ஒரு நெடுஞ்சாலை வலையமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

உள்கட்டமைப்பு வசதிகள்

1981-ஆம் ஆண்டின் இறுதியில், மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம், 1949-க்கு முன்பு இருந்த ஏழு கி.மீ.-லிருந்து 7,368 கி.மீ. ஆக அதிகரித்திருந்தது. 1949-க்கு முன்பு இப்பகுதி முழுவதும் 18 தள்ளுவண்டிகள் மட்டுமே இருந்த நிலையில், 1981-ல் வாகனங்களின் எண்ணிக்கை 11,000-ஐ எட்டியது, அவற்றில் 5,000 மோட்டார் வாகனங்கள் ஆகும். உள்ளூர் போக்குவரத்துத் துறை மொத்தம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தது. செங்டு-குன்மிங் இரயில் பாதையானது, லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணத்தில் உள்ள ஆறு மாவட்டங்களைக் கடந்து 337 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது, மேலும் இந்த வழித்தடத்தில் 45 நிலையங்கள் உள்ளன.

கடந்த காலத்தில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த யி மக்களுக்கு, தற்போது அனைத்து கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. 1950-களின் பிற்பகுதியில், தன்னாட்சி மாகாணம் நடுநிலைப் பள்ளிகள், தொழில்நுட்பப் பள்ளிகள், பழங்குடியின ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பள்ளிகளை அமைக்கத் தொடங்கியது. விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் மற்றும் ஏழை விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இப்போது கல்விக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சோசலிச உணர்வு கொண்ட யி அறிவுஜீவிகளின் ஒரு புதிய தலைமுறை உருவாகி பல துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றது. மேலும் மாகாணத்தில் உள்ள அனைத்து மட்டங்களிலான அரசாங்கங்களிலும் பல யி தலைவர்கள் முன்னணிப் பதவிகளை வகிக்கின்றனர்.

முற்காலத்தில், தொழில்முறை மருத்துவர்கள் இருக்கவில்லை. நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் இருந்த ஒரே வழி பிரார்த்தனை செய்வதுதான். இப்போது எல்லா மாவட்டங்களிலும் மருத்துவமனைகளும் மருத்துவ மையங்களும் உள்ளன. பெரியம்மை, டைபாய்டு, தொழுநோய், மலேரியா, காலரா போன்ற கடுமையான தொற்றுநோய்கள் ஒன்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன அல்லது பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளன. யி மக்களின் ஏராளமான பாரம்பரிய மருத்துவ அனுபவங்கள் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற யுனான் பாயாவோ (இரத்தப்போக்கு, காயங்கள், சிராய்ப்புகள் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் சிறப்புப் பயன் கொண்ட ஒரு வெள்ளை மருத்துவப் பொடி) யுனானில் உள்ள யி மக்களால் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்த ஒரு நாட்டுப்புற மருத்துவக் குறிப்பின்படி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யி மக்களின் வண்ணமயமான இலக்கியமும் கலையும் செழித்து வருகின்றன. யி மக்கள், பழைய யி மொழியில் எழுதப்பட்ட ஏராளமான வரலாற்று மற்றும் இலக்கியப் படைப்புகளையும், வாய்மொழியாகப் பரப்பப்பட்ட நாட்டுப்புற இலக்கியப் படைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். எண்ணற்றதும் பல்வேறு வகைகளைக் கொண்டதுமான வாய்மொழி நாட்டுப்புற இலக்கியப் படைப்புகளில் கவிதைகள், கதைகள், நீதிக்கதைகள், பழமொழிகள், புதிர்கள் போன்றவை அடங்கும். பழைய யி மொழியில் எழுதப்பட்டு, தத்துவம், வரலாறு மற்றும் மதம் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு கலைக்களஞ்சியப் படைப்புகளான ‘தென்மேற்கில் யி மக்களின் வரலாறு’ மற்றும் ‘லெபுதேயி’ ஆகியவை சீன மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. ‘அஷிமா’, ‘அக்ஸி மக்களின் பாடல்’ மற்றும் ‘மெய்கே’ ஆகிய காவியங்கள் யுனான் முழுவதும் பிரபலமாக உள்ளன.

விடுதலைக்குப் பிறகு, பல யி நாட்டுப்புறக் கதைகள், காவியங்கள் மற்றும் பாடல்கள் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ‘மகிழ்ச்சியான ஜின்ஷா நதி’ மற்றும் ‘தாஜியும் அவரது தந்தையும்’ போன்ற, யி மக்களின் தற்போதைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சில புதிய படைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. யி பாடல்களும் நடனங்களும் இனச்செறிவு மிக்கவை. ‘நட்சத்திரங்களும் நிலவும் ஒன்றாக இருக்கின்றன’ என்ற புதிய நாட்டுப்புறப் பாடல், சீனாவில் உள்ள தேசிய இனங்களின் மாபெரும் குடும்பத்தில் யி மக்கள் உணரும் மகிழ்ச்சியையும் அரவணைப்பையும் அழகான மெல்லிசைகள் மூலம் வெளிப்படுத்துகிறது. உற்சாகமான மற்றும் உயிரோட்டமான மெல்லிசைகளைக் கொண்ட மற்றொரு புதிய பாடலான ‘மகிழ்ச்சியான நுவோசு’, யி மக்களின் மகிழ்ச்சியான மற்றும் ஆற்றல்மிக்க வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

சீனாவில் இருக்கக்கூடிய சிறுபான்மை இன குழுக்களில் பல்வேறு குழுக்களின் தோற்றம், வரலாறு, அவர்களின் கடந்த கால வாழ்க்கை, புதிய சீன மக்கள் குடியரசில் அவர்களிடம் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவற்றை விரிவாக குறிப்பிடுவதற்கு காரணம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இனச் சிறுபான்மை மக்களை பொருளாதார ரீதியாக சலுகைகள் கொடுப்பது என்பதையெல்லாம் கடந்து, இனச் சிறுபான்மையினர் வாழ்வாதார மேம்பாடு மட்டுமல்ல, அவர்களின் அனைத்து வகையான கலாச்சாரம், பண்பாடு, தனித்தன்மை ஆகியவற்றை உயிரோட்டமான முறையில் பாதுகாப்பது என்பதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காகதான் விரிவான முறையில் இனச் சிறுபான்மை மக்களைப் பற்றிய விவரிப்பு கொடுக்கப்படுகிறது.

 

அ.பாக்கியம்

87 சாதிய கட்டமைப்பில் ஒரு இனம்

 


அ.பாக்கியம்

சீனாவின் தேசிய இனங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு இனம் யி(Yi) இனமாகும். இந்த இனத்தின் சமூக கட்டமைப்பு அடிமை முறைகளையும் படிநிலை சாதிய கட்டமைப்புகளையும் போன்றதொரு அமைப்பாக இருந்துள்ளது.

சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் யி இன மக்கள் சுமார் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் முக்கியமாக சிச்சுவான், யுன்னான் மற்றும் குய்ஜோ மாகாணங்களிலும், குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியிலும் பரவியுள்ளனர். சீனாவின் நிர்வாக அமைப்பின் அடிப்படையில் தன்னாட்சி பிரதேசங்களுக்குள் அதிக மக்கள் தொகையுடன் வாழும் இனக்குழுக்களுக்கு தனியான தன்னாட்சி மாகாணங்கள் அமைக்கப்படுவது ஒரு நிர்வாக முறையாக இருக்கிறது. “தன்னாட்சி மாகாணம்” என்பது சீனாவில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினர் அதிக அளவில் வாழும் பகுதிகளுக்கு வழங்கப்படும் ஒரு நிர்வாக அந்தஸ்தாகும். இது அந்த இனக்குழுவினரின் கலாச்சாரம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை அளிக்கிறது.

அந்த அடிப்படையில் சீனாவின் மிகப்பெரிய ஒற்றை யி சமூகத்தைக் கொண்டுள்ள லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான யி மக்கள் உள்ளனர். இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. யுனான் மாகாணத்தில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான யி மக்கள் உள்ளனர். இந்த மாகாணத்தில் சுமார் 5.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் யி இன மக்கள் 55% க்கும் அதிகமானவர்கள் (தோராயமாக 3 மில்லியன்) பெரும்பாலான யி இன மக்கள் மலைப்பகுதிகளில் சிதறி வாழ்கின்றனர்.

அவர்களில் கணிசமான மக்கள் மலைகளின் உயரமான இடங்களில் கடுங்குளிர்பிரதேசங்களில் வாழ்வதும், மற்றொருபகுதி மக்கள் சமவெளிகளிலோ அல்லது பள்ளத்தாக்குகளிலோ வாழும் நிலை உள்ளது. வேறுபட்ட வாழ்விடங்களில் இருப்பதால் அவர்களுக்கு இடையிலான கால நிலைகள் அதாவது மழை பொழிவும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இந்த வியக்கத்தக்க வேறுபாடுகள் பல்வேறு பகுதிகளில் உள்ள யி இன மக்கள் தங்கள் வாழ்வாதார முறைகளில் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டு இருப்பதற்கு முதன்மையான காரணமாக அமைகின்றது.

தோற்றக்கதைகள்

யி இன மக்களின் உருவாக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்த ஒரு செயல்முறையின் விளைவாகும். அவர்களின் மூதாதையர்கள் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ.1ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தற்போதைய யுன்னானின் டியான்சி ஏரி மற்றும் சிச்சுவானின் கியோங்டூ (இன்றைய சிச்சாங்) பகுதிகளில் மையமாக வாழ்ந்தனர். வடக்கிலிருந்து வந்த இவர்கள், தென்மேற்கு சீனாவில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த உள்ளூர் பழங்குடி மக்களுடன் (குறிப்பாக பூ (Pu) மக்கள்) இணைந்தனர் .

இந்த இரண்டு குழுக்களின் கலப்பின் விளைவாகத்தான் யி இனம் உருவானது. கிழக்கு ஹான் (25-220), வெய் (220-265) மற்றும் ஜின் (265-420) வம்சங்களின் போது, ​​இப்பகுதிகளில் வசித்த மக்கள் ‘யி’ என்று அழைக்கப்பட்டனர்; “ஆறு கிளைகள்” (Six Ancestors / Six Tribes) பிரிவு எனப்படும் முக்கிய நிகழ்வு, அவர்களின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இது சுமார் பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டில் (போரிடும் நாடுகள் காலத்தின் தொடக்கத்தில்) நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. யி இனத்தின் புராண மூதாதையரான “ஜோங்முயூ” (Zhongmuyou) என்பவரின் ஆறு மகன்கள், பின்னாளில் ஆறு முக்கிய கிளைகளின் மூதாதையர்கள் ஆனார்கள் . இந்த “ஆறு கிளைகள்” பிரிவைத் தொடர்ந்து, அவர்கள் தென்கிழக்கு நோக்கி விரிவடைந்து, படிப்படியாக தற்போது வாழும் பகுதிகளில் குடியேறினர் .

தனித்துவமான மொழி அடையாளம்

யி மொழி, சீன-திபெத்திய மொழிக்குடும்பத்தின் திபெத்திய-மியான்மீஸ் மொழிக் குழுவைச் சேர்ந்தது. மேலும், யி மக்கள் ஆறு வட்டார மொழிகளைப் பேசுகிறார்கள். யுனான், குய்ஷோ மற்றும் குவாங்சி ஆகிய பகுதிகளில் உள்ள பல யி மக்கள் ஹான் மொழியை அறிந்திருக்கிறார்கள். யி மக்கள், 13 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பழைய யி மொழி எனப்படும் ஒரு அசையெழுத்தைப் பயன்படுத்தினர். தற்போதுள்ள பழைய யி எழுத்தில் சுமார் 10,000 சொற்கள் இருப்பதாகவும், அவற்றில் 1,000 சொற்கள் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள் என்றும் மதிப்பிடப்படுகிறது. வரலாறு, இலக்கியம், மருத்துவம் சார்ந்த பல படைப்புகளும், ஆளும் குடும்பங்களின் வம்சாவளிகளும் பழைய யி எழுத்தில் எழுதப்பட்டு, பெரும்பாலான யி பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட பழைமையான யி எழுத்தில் செதுக்கப்பட்ட பல கல்வெட்டுகளும் தூண்களும் சிதைவின்றி அப்படியே உள்ளன. பழைய யி மொழி, சொல் வடிவத்திலும் உச்சரிப்பிலும் சீரற்றதாக இருந்ததால், விடுதலைக்குப் பிறகு புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் பயன்படுத்துவதற்காக அது சீர்திருத்தப்பட்டது.

பழமையான படிநிலை சமூகம்

1949- கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைவதற்கு முன்பு , லியாங்ஷான் மலைப் பகுதிகளில் இருந்த யி இன மக்கள், “நுவோஹுவோ,” “குனுவோ,” “அஜியா” மற்றும் “ஷியாக்ஸி” என நான்கு வெவ்வேறு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். எஜமானர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாக இருந்த து. “நுவோஹுவோ” பிரிவு இரத்த உறவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு நிரந்தரமாக இருந்தது. இவர்கள் மட்டுமே ஆட்சியாளர்களாக இருந்தனர். மற்ற படிநிலைகளில் இருந்தவர்களால் ஒருபோதும் ஆட்சியாளர்கள் பதவிக்கு வர முடியவில்லை.

“நுவோஹுவோ” என்றால் “கருப்பு யி” என்று பொருள். இது சமூகத்தின் மிக உயர்ந்த படிநிலையாக இருந்தது. அடிமைகளை உடைமையாக வைத்திருந்த வர்க்கமாக இருந்த து. இவர்கள் மொத்த யி இன மக்கள் தொகையில் 7 சதவீதம் மட்டுமே இருந்தனர் . கருப்பு யி க்கள் மற்ற மூன்று படிநிலைகளைச் சேர்ந்த மக்களைப் பல்வேறு அளவுகளில் கட்டுப்படுத்தினர். மேலும் 60 முதல் 70 சதவீத சாகுபடி நிலங்களையும், பெருமளவிலான பிற உற்பத்திச் சாதனங்களையும் சொந்தமாகக் கொண்டிருந்தனர். கருப்பு யி க்கள் பிறப்பால் பிரபுக்களாக இருந்தனர். தங்கள் இரத்தம் “உன்னதமானது” மற்றும் “தூய்மையானது” என்று கூறி, மற்ற மூன்று படிநிலைகளைச் சேர்ந்தவர்களுடனான திருமணங்களைத் தடை செய்தனர். அவர்கள் உடல் உழைப்பை வெறுத்தனர். மற்ற படிநிலை மக்களை சுரண்டிப் பிழைத்தனர். மேலும் அடிமைகளை பலவந்தமாக அடக்கி ஆண்டனர்.

“குனுவோ” என்றால் “வெள்ளை யி” என்று பொருள். இவர்கள் படிநிலையில் ஆளும் கருப்பு யி மக்களுக்கு அடுத்தநிலையில் இருந்தனர். மக்கள் தொகையில் 50 சதவீதத்தைக் கொண்டிருந்தனர். அடிமை முறையின் கீழ் குடிமக்களாக இவர்கள் இருந்ததால், அவர்கள் பொருளாதார ரீதியாக ஒப்பீட்டு சுதந்திரத்தை அனுபவித்தனர். தங்களை விடத் தாழ்ந்தவர்களாக இருந்த “அஜியா” மற்றும் “சியாக்ஸி” ஆகியோரை இந்த வெள்ளை யி கட்டுப்படுத்த முடிந்தது. குனுவோக்கள் கருப்பு யி அடிமை உரிமையாளர்களால் ஆளப்பட்ட பகுதிகளுக்குள் வாழ்ந்தனர்.

அவர்களுக்கு இடம்பெயரும் சுதந்திரம் இல்லை. மேலும் தங்கள் எஜமானர்களின் அனுமதியின்றி அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறவும் முடியாது. தங்கள் சொந்த சொத்துக்களை விற்கும்போது அவர்களுக்கு முழுமையான உரிமை இல்லை. மாறாக தங்கள் எஜமானர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் நிலத்தை விற்க விரும்பும்போது, ​​தங்கள் எஜமானர்களுக்கு சில கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருந்தது. சந்ததி இல்லாத இறந்த நபரின் சொத்து அவரது எஜமானருக்கே சென்றது.

கருப்பு யி அடிமை உரிமையாளர்கள் தங்கள் விருப்பப்படி குனுவோக்களைக் கொல்லவோ, விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. அதே நேரத்தில் அவர்கள் மீதான கட்டுப்பாட்டு அதிகாரத்தை அவர்களால் மாற்றவோ அல்லது பரிசாக மற்றவர்களுக்கு வழங்கவோ முடிந்தது. எனவே, குனுவோக்கள் அடிமைகள் அல்ல என்றாலும், அவர்களுக்குத் தங்களுக்கென ஒரு முழுமையான ஆளுமையும் இருக்கவில்லை.

மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்த “அஜியா” பிரிவை சேர்ந்தவர்கள், கறுப்பின யி உடைமையாளர்களிடம் அடிமையாக இருந்தது மட்டுமல்ல, குனுவோ பிரிவினரிடமும் பிணைக்கப்பட்டிருந்தனர். அந்த உரிமையாளர்கள் அவர்களைத் தாராளமாக விற்கவும், வாங்கவும், கொல்லவும் உரிமை பெற்றிருந் தனர்.

“சியாக்ஸி” என்ற பிரிவினர் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் மட்டுமே இருந்த, மிகக் கீழான வகுப்பினர் ஆவர். அவர்களுக்குச் சொத்து, தனிப்பட்ட உரிமைகள் அல்லது சுதந்திரம் எதுவும் இருக்கவில்லை. மேலும் அவர்கள் மனிதர்களாக அல்ல “பேசும் கருவிகளாக” மட்டுமே கருதப்பட்டனர். அவர்கள் தங்கள் எஜமானர்களின் வீடுகளில் இருண்ட மூலைகளில் வாழ்ந்தனர். இரவில் குளிரைத் தாங்க வீட்டு விலங்குகளுடன் சுருண்டு படுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எஜமானர்களின் மேற்பார்வையில், சியாக்ஸிகள் ஆண்டு முழுவதும் கடினமான வீட்டு வேலைகளையும், பண்ணை வேலைகளையும் செய்தனர்.

 

அவர்கள் கந்தல் ஆடைகளையும், கிழிந்த ஆட்டுத்தோல்களையும் அணிந்து, காட்டு வேர்களையும் மீதமுள்ள உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர். கிளர்ச்சி செய்தவர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க, அடிமை உரிமையாளர்கள் அவர்களை இரும்புச் சங்கிலிகளாலும், மர விலங்குகளாலும் பிணைத்து, எல்லாவிதமான சித்திரவதைகளையும் செய்தனர். வீட்டு விலங்குகளைப் போலவே, சியாக்ஸிகளையும் சுதந்திரமாக உடைமைகளாகக் கையாளலாம், கட்டளையிடலாம், அவமானப்படுத்தலாம், அடித்துத் துன்புறுத்தலாம், வாங்கலாம், விற்கலாம் அல்லது தெய்வங்களுக்குப் பலியாகக் கொல்லலாம் என்ற அவலநிலையில் இந்தபிரிவு மக்களின் வாழ்க்கை இருந்தது.

குனுவோ பிரிவினரும், அஜியாவும் தங்கள் எஜமானர்களான கருப்பு யி பிரிவினரின் நிலத்தைப் பயிரிட, தங்களுடைய சொந்த கால்நடைகளையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. குனுவோ ஒவ்வொரு ஆண்டும் ஐந்து, ஆறு அல்லது 10 நாட்களுக்கும் மேலாக இலவச வேலை செய்ய வேண்டியிருந்தது.இவர்கள் அதை செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் வைத்திருந்த அடிமைகளை இலவச வேலைக்கு அனுப்ப வேண்டும். அதுவும் செய்யவிலை என்றால் அவர்கள் அதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பணமாகக் கொடுக்க வேண்டும். அஜியா பிரிவினர் செய்த இலவச வேலை, அவர்களின் மொத்த வேலை நேரத்தில் சரிபாதி வரை எடுத்துக்கொண்டது. தங்கள் எஜமானர்களின் நிலத்தைப் பயிரிடுவதற்காக, அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த நிலத்தைப் புறக்கணிக்க வேண்டியிருந்தது. இலவச உழைப்பத்தவிர, குனுவோவும் அஜியாவும் தங்கள் கறுப்பின யி எஜமானர்களால் திணிக்கப்பட்ட கந்துவட்டி கடன்களையும் வாங்க வேண்டியிருந்தது.

சுமை சுமக்கும் மிருகங்களைப் போல உழைக்கக் கட்டளையிடப்பட்டதால், அடிமைகளுக்கு உற்பத்தியில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை. சுதந்திரத்தைப் பெறுவதற்காக, லியாங்ஷான் மலைப் பகுதிகளில் இருந்த அடிமைகள், மெதுவாக வேலை செய்வது, கருவிகளை அழிப்பது, விலங்குகளைத் துன்புறுத்துவது, தங்கள் எஜமானர்களின் சொத்துக்களை எரிப்பது, ஏன், தங்கள் எஜமானர்கள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொலைதூர மலைப் பகுதிகளில் இருந்த அடிமைகளுக்குத் தப்பி ஓடுவது கடினமாக இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தப்பிக்க முயன்றனர். அடிமை உரிமையாளர்களுக்கு எதிராக அடிமைகளால் அரங்கேற்றப்பட்ட தன்னிச்சையான மற்றும் அவ்வப்போதைய கிளர்ச்சிகள் ஒருபோதும் ஓயவில்லை. தனிப்பட்ட உரிமைகளுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கூட்டுப் போராட்டமும் வளர்ந்தது, மேலும் கூட்டு வெறுப்பு பெரும்பாலும் சிறிய ஆயுதக் கிளர்ச்சியாக மாறியது.

நிர்வாகமும் நில உடைமையும்

லியாங்ஷான் மலைகளில் வசித்த சுமார் 70 ஆயிரம் கருப்பு யி இனத்தவர் தங்கள் இனத்தவர்களை 100 குலங்களாக பிரித்தார்கள். ஒவ்வொரு குலத்தின் எல்லையும் மலைத்தொடர்கள் ஆறுகளால் வரையறுக்கப்பட்டு எந்த அத்துமீறிலும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கான குலங்களில் முறையான நிர்வாக அமைப்புகள் எதுவும் இல்லை என்றாலும் குலத்தில் இருந்த மூத்தவர்கள் வர்க்க சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் அடிமை உடைமையாளராக இருந்த கருப்பின யி பிரிவினருக்கு உதவியாக செயல்பட்டனர். கிளர்ச்சி செய்யும் அடிமைகளை அடக்குவது போன்ற குலங்களின் முக்கிய பிரச்சனைகளை அமுலாக்கினார்கள்.

கிளர்ச்சி செய்யும் இதர அடிமை பிரிவினரை கூட்டாக சேர்ந்து கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டார்கள். இந்தப் பகுதியில் வாழ்ந்த இனத்தவருக்கு எழுதப்பட்ட சட்டம் எதுவும் இல்லை வழக்காறு சட்டம் என்ற பெயரில் அடிமைகளை ஒட்டச்சுரண்டுவதும் திருமண உறவுகள் குலங்களை தாண்டி நடத்தக் கூடாது என்பதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்தப் பகுதிகளில், மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் நில உரிமையாளர்களாகவும், 60 முதல் 80 சதவீதம் பேர் ஏழை விவசாயிகளாகவும் பண்ணைத் தொழிலாளர்களாகவும் இருந்தனர். கொடூரமான நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு ஆளான ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான நிலத்தை விட, நில உரிமையாளர்கள் வைத்திருந்த நிலம் சராசரியாக 10 மடங்கு அல்லது பல டஜன் மடங்கு அதிகமாக இருந்தது. பொருளாகச் செலுத்தப்பட்ட நில வாடகை, அறுவடையின் 60 முதல் 70 சதவீதத்தை எட்டியது. மேலும், குத்தகைதாரர்கள் கடுமையான கட்டாய வரிகளையும் இதர கட்டணங்களையும் ஏற்க வேண்டியிருந்தது.

பல நூற்றாண்டுகளாக, லியாங்ஷான் மலைப் பகுதிகளில் யி இனத்தவரிடையே பண்டமாற்று முறையே வர்த்தக முறையாக இருந்தது. பரிமாற்றத்திற்கான பொருட்களில் முக்கியமாக கால்நடைகளும் தானியங்களும் அடங்கியிருந்தன. உப்பு, துணி, உலோகப் பொருட்கள், ஊசிகள், நூல்கள் மற்றும் பிற அன்றாடத் தேவைகள், யி மற்றும் ஹான் இனத்தவர் ஒன்றாக வாழ்ந்த இடங்களில் மட்டுமே கிடைத்தன. எப்போதாவது, யி இனத் தலைவர்களால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சில ஹான் வணிகர்கள், லியாங்ஷான் மலைப் பகுதிகளுக்குள் பொருட்களைக் கொண்டு சென்றனர்.

பிடிபட்டு அடிமைகளாக மாற்றப்படும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல், அவர்கள் சென்று, பெரும்பாலும் 100 சதவீதத்திற்கும் அதிகமான நிகர லாபத்தை ஈட்டினர். உற்பத்தி மற்றும் வாழ்வாதாரச் சாதனங்களின் கடுமையான பற்றாக்குறையால் அவதிப்பட்ட யி இனத்தவர், சிறிதளவு அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையான சுரண்டலைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு கோழியின் மதிப்பு ஒரு ஊசிக்கு மட்டுமேயாகவும், ஒரு ஆட்டுத்தோலின் மதிப்பு ஒரு கைப்பிடி உப்புக்கு மட்டுமேயாகவும் இருந்தது. பல அடிமைகள் ஆண்டு முழுவதும் உப்பு இல்லாமல் இருக்க வேண்டியிருந்தது. சிக்கலான வரலாற்று காரணங்களால், லியாங்ஷான் மலைகளில் யி இனத்தவரின் அடிமை முறை 1949 வரை நீடித்தது.

1949-ஆம் ஆண்டு விடுதலைக்கு முன்பு, யுனான், குய்ஷோ மற்றும் குவாங்சி மாகாணங்களில் இருந்த யி இன மக்கள், தாவோயிசம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கத்துடன் மூதாதையர் வழிபாட்டையும் இணைத்து, பலதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். லியாங்ஷான் மலைகளில் வசித்த யி இன மக்கள், தெய்வங்களையும் பேய்களையும் வழிபட்டதோடு, சிலை வழிபாட்டிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு அடிக்கடி பலிகளைச் செலுத்தினர். அவர்களின் மதச் செயல்பாடுகள் மந்திரவாதிகளால் வழிநடத்தப்பட்டன. ஆரம்பகால யி நாட்காட்டி, ஆண்டை 36 நாட்கள் கொண்ட 10 மாதங்களாகப் பிரித்தது. பத்தாவது மாதம் வருடாந்திர விழாக் காலமாக இருந்தது.

அ.பாக்கியம்

திங்கள், ஆகஸ்ட் 24, 2026

86 மிகப்பெரிய சிறுபான்மை இனக்குழு : சுவாங்

 



அ.பாக்கியம்

சீனாவில் இருக்கக்கூடிய 55 இன  சிறுபான்மை மக்களில் அதிக மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய இனமாக சுவாங் இனம் இருக்கிறது. இந்த இனம் சீன வரலாற்றில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.

1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி வெற்றி பிறகு 1958 ல் இந்த இன மக்களுக்காக குவாங்சி சுவாங் தன்னாட்சி மாகாணம் அமைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுவாங் இன மக்கள் 1.96 கோடியாக இருக்கிறார்கள். இது ஹுய் (1.14 கோடி), உய்குர் (1.18 கோடி), மியாவ் (1.11 கோடி) போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள இனசிறுபான்மை குழுக்களைவிட கணிசமாக அளவு அதிகமாகும்.

இன இணைப்பின் அடையாளம்

இந்த இன மக்கள் முதன்மையாக குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் (சுமார் 85% பேர்) அதிகம் வசிக்கின்றனர். மேலும், யுன்னான், குவாங்டாங், குயிசூ மற்றும் ஹுனான் மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர்.  குவாங்சி மாகாணத்தில் சுவாங் இன மக்கள் அதிகமாக வாழ்வதால் இதற்கு குவாங்சி சுவாங் தன்னாட்சிப் மாகாணம் என்று பெயரிடப்பட்டது. சுவாங் இன மக்கள் இந்த மாகாணத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 32.49 சதவிகிதம் உள்ளனர். மொத்த சுவாங் இனமக்களில் 85 சதவிகிதம் இங்கு தான் வாழ்கின்றனர்.  குவாங்ஷியில் ஜுவாங், ஹான், யாவோ, மியாவோ, டோங் உள்ளிட்ட 12 பூர்வீக இனங்களுடன், மொத்தம் 44 வேறு இனங்களும் வாழ்கின்றன.

இது பல வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒன்றாக வாழும் இடமாகும்.  குவாங்ஷியை ஒரு தனி இனத்திற்கான பகுதியாகப் பிரிக்காமல், அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு பகுதியாக இருப்பதே இதன் சிறப்பம்சமாகும். இந்த “இணைப்பு” என்ற கொள்கை, அனைத்து இன மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்திற்கு உகந்தது என்று கருதப்பட்டது.

சுவாங் இன மக்கள் தற்போது தன்னாட்சி பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ள இதே இடங்களில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதி முதன் முதலாக பொ.ஆ.மு. 221 இல் சின் பேரரசின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. சுவாங் என்ற பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்தது மட்டுமல்ல சின் பேரரசால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது.  இதற்கு முன்பு இவர்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். இந்த மக்கள் வாழ்ந்த பகுதியில் காடுகளை அழித்து எரித்து சாம்பலாக்கி அதன் பிறகு சாகுபடி செய்து வாழ்வதும், வேட்டையாடுவது உட்பட பழமையான பொருளாதார முறைகளையே கடைப்பிடித்து வந்தார்கள்.

இங்கு நிலவிய சமூக அமைப்பு முறை நிலபிரபுத்துவ அடிமை முறையாக இருந்தது. மக்கள் பரம்பர நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள், வீட்டு அடிமைகள் என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1911 ஆம் ஆண்டு சன்யாட்சன் தலைமையிலான குடியரசு புரட்சி நடைபெற்ற பிறகு இந்த முறைகள் ஒழிக்கப்பட்டது. டாங் வம்சம் துவங்கி கிங் வம்சம் வரையிலும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய ஆட்சியின் கீழ் சுவாங் இருந்தாலும் ,சுவாங் இன உள்ளூர் தலைவர்களின் ஆட்சியின் கீழ்தான் அந்த மக்கள் ஆளப்பட்டார்கள். அந்த உள்ளுர் ஆட்சியாளர்கள் மக்களை ஒடுக்கி சுரண்டினார்கள். இதனால் இந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான  கிளர்ச்சிகள் உருவாகிக் கொண்டே இருந்தது.

அந்நிய படையெடுப்பிற்கு எதிராக சுவாங்

1851-ல், சீன வரலாற்றிலேயே மிகப்பெரிய விவசாயிகளின் எழுச்சியான தைப்பிங் புரட்சி, இந்தப் பகுதியில் வெடித்தது. ஆயிரக்கணக்கான சுவாங் இனத்தவர் தைப்பிங் இராணுவத்தில் இணைந்து, அதன் வடக்கு நோக்கிய அணிவகுப்பில் முன்னனியில் செயல்பட்டது மட்டுமல் அதன் முதுகெலும்பாகம் விளங்கினார்கள். அவர்களில் பலர் அந்த இராணுவத்திற்கு தலைமையேற்றது மட்டுமல்ல தைப்பிங்கின் தேவராஜ்யத்திற்கும் முக்கியமான தலைவர்களாக மாறினார்கள்.

சீனாவின் தெற்கு எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த சுவாங் மக்கள், அந்நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். 1070-களில், அவர்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்தனர். 16-ஆம் நூற்றாண்டின் மத்தியில், படையெடுத்து வந்த ஜப்பானிய கடற்கொள்ளையர்களைத் தோற்கடித்தனர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சுப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறி சீனாவை ஆக்கிரமித்தன. குவாங்சியில் உள்ள சுவாங் மற்றும் ஹான் இன மக்கள் கருப்புக் கொடிப் படையை உருவாக்கி, 1873 இல் ஹனோய் அருகே பிரெஞ்சுப் படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தனர். அவர்கள் 1882 இல் மீண்டும் ஹனோயில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.

1885-ல் பிரெஞ்சுப் படையெடுப்பாளர்கள் சீனாவிற்குள் மீண்டும் ஊடுருவிய போது, உள்ளூர் சுவாங் மற்றும் ஹான் மக்கள், சீன-வியட்நாம் எல்லையில் உள்ள ஜென்னங்குவான் கணவாயில் சீன இராணுவம் ஒரு முக்கியமான வெற்றியைப் பெற சுவாங் இன மக்கள் உதவினர்.

டாக்டர் சன் யாட்-சென் தலைமையிலான சீனாவின் முதல் ஜனநாயகப் புரட்சியான 1911 ஆம் ஆண்டுப் புரட்சிக்கு சுவாங் மக்கள் பெரும் பங்களிப்புகளைச் செய்தனர். டாக்டர் சன்யாட்-சென் தனது புரட்சிகர நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உருவாக்கிய அமைப்பான டோங் மெங் ஹுய்யில் பல சுவாங் குடும்பத்தினர் முக்கிய உறுப்பினர்களாக ஆனார்கள்.

சுவாங் மக்கள் டாய் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சுவாங் மொழியைப் பேசுகிறார்கள். இந்த மொழிக்கு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு முக்கிய கிளைமொழிகள் உள்ளன. வேறுபட்ட மொழியியல் உறவுகள் இருந்தது.  இவர்களது மொழி, வடக்கு தாய் மொழிகளில் பூயி மொழியுடனும், தெற்கு கிளை வியட்நாமின் நுங் மற்றும் தேய் மொழிகளுடனும் நெருங்கிய தொடர்புடையது. இவர்களின் எழுத்து முறை பண்டைய சுவாங் எழுத்துக்கள். இவைசீன எழுத்துக்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவை. இது தெற்கு சாங் வம்சத்தின் போது தோன்றின. ஆனால் அவை ஒருபோதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டில், சீன அரசு லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தரப்படுத்தப்பட்ட சுவாங் எழுத்து முறையை உருவாக்க உதவியது, இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

பல்லின கடவுள் கொள்கை

சுவாங் மக்கள் மோ மதம் எனப்படும் ஒரு தனித்துவமான பூர்வீக நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். இது அவர்களின் ஆன்மீக மற்றும் அன்றாட வாழ்க்கையை ஆழமாக வடிவமைக்கிறது. அவர்களின் பாரம்பரிய மத நடைமுறைகள் பொதுவாக பல்லினக் கடவுட் கொள்கை (பாலித்தீசம்) என்று விவரிக்கப்படுகின்றன. இதில் மூதாதையர் வழிபாடு மற்றும் இயற்கை, ஆன்மாக்களை வணங்குதல் ஆகியவை அடங்கும். பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களின் கலவையாக உள்ளது. இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டுடன், பல ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களும் சுவாங் இன சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தாங் வம்சத்திலிருந்து (கி.பி. 618-907) தாவோயிசமும், பௌத்தமும் சுவாங் இனத்தவர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கத்தோலிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள் இப்பகுதிக்கு வந்தனர். இருப்பினும், அவர்களின் செல்வாக்கு பெரும்பாலும் நகர்ப்புறங்களில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மொத்த மதப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை சுமார் 5.5 லட்சமாகும்.

சுவாங் இன மக்களின் மதவழிபாட்டு முறைகள், இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டில் வேரூன்றிய பழங்கால நம்பிக்கைகள் தொடங்கி, வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பௌத்தம், தாவோயிசம், கிறித்தவம் போன்ற சமயங்களின் தாக்கங்களை உள்வாங்கி, தனித்துவமான கலாச்சார அடையாளத்தை உருவாக்கியுள்ளன.

சுவாங் மக்கள் பண்பாட்டு ரீதியாக வளமானவர்கள் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களின் மரபுகள், சிக்கலான ப்ரோகேட் (வாரணாசி பட்டு மற்றும் காஞ்சிபுரம் புடவைகள் போன்று) துணிகள் முதல் துடிப்பான பாடல் காட்சிகள் வரை, சீனாவின் பல்வேறுபட்ட பண்பாட்டு நிலப்பரப்பின் முக்கியமான கூறுகளாகும். சீனா எல்லையைத் தாண்டி, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள தாய் மொழி பேசும் மக்களுடன் (தாய், லாவோ, ஷான், நுங்) சுவாங் மக்கள் வரலாற்று மற்றும் மொழியியல் உறவைக் கொண்டுள்ளனர்.

சுவாங் இனக்குழு, ஒரு ஒருங்கிணைந்த மக்கள் குழுவாக, நவீன சீன அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. 1950 களுக்கு முன், இந்த மக்கள் பல்வேறு உள்ளூர் பெயர்களில் அழைக்கப்பட்டனர். ஒரு பொதுவான இன உணர்வு பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. பிற தென்கிழக்காசிய இனக்குழுக்களுடன் ஒப்பிடும்போது, சுவாங் மக்கள் நவீன சீனாவின் பிரதான ஹான் கலாச்சாரத்தில் அதிக அளவில் ஒருங்கிணைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

 

கல்வியும் பொருளாதாரமும்

ஒரு ஆய்வின் படி, சுவாங் மக்களின் சராசரி கல்வி ஆண்டுகள் 8.12 ஆகும். இது கொரியர் (10.25) மற்றும் மங்கோலியர் (9.17) போன்ற குழுக்களைவிட குறைவாகவும், திபெத்தியர் (5.33), யி (6.49), மற்றும் மியாவ் (7.17) போன்றவற்றை விட அதிகமாகவும் உள்ளது. சுவாங் மொழியைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், இருமொழிக் கல்வி (Zhuang-Mandarin Bilingual Education) முக்கிய வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. 1980களில் இருந்தே பல பள்ளிகளில் இருமொழிக் கல்வி அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுவாங் மொழி ஆசிரியர்கள் மற்றும் மொழிப் பணியாளர்களைப் பயிற்றுவிக்க சிறப்புப் பள்ளிகளும் நிறுவப்பட்டன. 1950 களில், சுமார் 3 மில்லியன் சுவாங் மக்கள் எழுத்தறிவு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றனர். தற்போது, குவாங்ஷியில் 269 இருமொழிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

பல இன மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் வழக்குரைஞர் அலுவலகங்கள், வழக்குகளை விசாரிக்கும் போது உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. மேலும், மாண்டரின் மற்றும் உள்ளூர் மொழிகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற ஊழியர்களை நியமிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நடைமுறையில் சில சவால்களும் உள்ளன. தரப்படுத்தப்பட்ட சுவாங் மொழி வூமிங் (Wuming) மாவட்டத்தின் பேச்சு வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இது வடக்கு மற்றும் தெற்கு சுவாங் வழக்குகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருப்பதால், பல மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இதைக் கற்க கடினமாக உள்ளது என்று கருதுகின்றனர். சில மாணவர்கள், தாங்கள் படித்த தரப்படுத்தப்பட்ட சுவாங்கை தங்கள் குடும்பத்தினரிடம் பேசும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மை இன மொழிகளைப் பாதுகாக்கும் அரசின் கொள்கைகள் இருந்தாலும், மாண்டரின் மொழி கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அவசியமாகக் கருதப்படுவதால், பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகள் மாண்டரின் மொழியிலேயே சிறந்து விளங்குவதில் அக்கறை காட்டுகின்றனர். இதனால், சுவாங் மொழியைக் கற்கும் ஆர்வம் சில சமயங்களில் குறைவதாகவும் கூறப்படுகிறது.

 

தரப்படுத்தப்பட்ட எழுத்து முறை சீன மக்கள் குடியரசால் உருவாக்கப்பட்டது. சுவாங் மொழிக்கு நீண்ட காலமாக ஒரு நிலையான எழுத்து முறை இல்லாத நிலையில், 1957 ஆம் ஆண்டு ரோமன் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய எழுத்து முறை உருவாக்கப்பட்டது. பின்னர், 1982 ஆம் ஆண்டில் இது 26 லத்தீன் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் சீர்திருத்தம் செய்யப்பட்டு, தற்போதைய தரப்படுத்தப்பட்ட சுவாங் எழுத்து முறையாக அறியப்படுகிறது.

குவாங்ஷி இப்போது நாட்டின் முக்கிய கரும்பு மற்றும் பட்டு புழு வளர்ப்பு உற்பத்தி மையமாக உள்ளது. இதன் கரும்பு உற்பத்தி நாட்டின் மொத்த உற்பத்தியில் 60% க்கும் அதிகமாகும். மேலும் பட்டு புழு வளர்ப்பு உற்பத்தி நாடு முழுவதும் முதலிடத்தில் உள்ளது. இது விவசாயிகளின் வருமானத்தை பெரிதும் அதிகரித்துள்ளது. குவாங்ஷியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2012 இல் 1.30 டிரில்லியன் யுவானிலிருந்து 2025 இல் 2.97 டிரில்லியன் யுவானாக உயர்ந்துள்ளது. இது பொருளாதார வலிமையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. இன விவகாரங்களில் சட்ட முறைமையை வலுப்படுத்துதல் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.  குவாங்ஷி இன விவகாரங்கள் தொடர்பான பல உள்ளூர் சட்டங்களையும், அரசு ஒழுங்குமுறைகளையும் உருவாக்கியுள்ளது. இது உள்ளூர் பண்புகளைக் கொண்ட இனப் பணிகளுக்கான முறையான அமைப்பை உருவாக்கியுள்ளது.

அனைத்து இனங்களையும் ஒன்றாக நவீன சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்வது; மேலும், வளர்ச்சியின் பாதையில் “எந்த ஒரு இனமும் பின்தங்கியிருக்கக் கூடாது” என்பதை உறுதி செய்வது என்பது தான் சீன சோஷலிசத்தின் பாதையாக மாறியுள்ளது.

அ.பாக்கியம்

 

 

85 மஞ்சு இனக்குழு: எட்டுப் பதாகைகைகளின் பேரரசு

 



அ.பாக்கியம்

சீன மக்கள் குடியரசில் இருக்கக்கூடிய 56 இனங்களில் மஞ்சு இனக்குழுவும் ஒன்றாகும். சீன அரசு அங்கீகரித்துள்ள இனச் சிறுபான்மை குழுவில் மஞ்சு இனக்குழுவும் அடங்கும். 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மஞ்சு இன மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சம் ஆகும். சீனாவில் இருக்கக்கூடிய அதிக மக்கள் தொகை கொண்ட இனச் சிறுபான்மை குழுக்களில் இதுவும் ஒன்றாகும். மஞ்சு இன மக்கள் தற்போது சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றார்கள். இவை தவிர லியோனிங், ஜிலின், ஹெய்லோங்ஜியாங் மற்றும் ஹீபெய் மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் வாழ்கின்றனர். பெய்ஜிங் நகரம் மற்றும் உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். குறிப்பாக, மஞ்சு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் லியோனிங் மாகாணத்திலும், ஐந்தில் ஒரு பகுதியினர் ஹீபெய் மாகாணத்திலும் வாழ்கின்றனர்.

பழங்குடியிலிருந்து பேரரசு நோக்கி

சீனாவின் 5000 ஆண்டு வரலாற்றில் கடைசி ஆயிரம் ஆண்டுகளில்  350 ஆண்டுகள் சீன வம்சம் அல்லாதவர்களின் ஆளுகைக்கு சீனா உட்பட்டிருந்தது. 1271 முதல் 1368 வரை சுமார் நூறு ஆண்டுகள் மங்கோலியர்களின் யுவான் வம்ச ஆட்சி நடைபெற்றது. மஞ்சு வம்சத்தினர் 1644 முதல் 1912 ஆம் ஆண்டு வரை மஞ்சு வம்ச ஆட்சி நடைபெற்றது. 1644 ஆம் ஆண்டில், மிங் வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்கள் பெய்ஜிங்கைக் கைப்பற்றி முழு சீனாவையும் ஆட்சி செய்யத் தொடங்கினர். சீனாவுக்கு அருகாமையில் இருந்த மஞ்சு இன அரசு சீனாவின் பெரும்பகுதியை கைப்பற்றி சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். ஒரு சீனர் அல்லாத இனச் சிறுபான்மையின ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். பெய்ஜிங் நகரின் வீதிகளில் மஞ்சு இனத்தவர் திடீரெனத் தோன்றியது எவ்வளவு எதிர்பாராததாக இருந்ததோ, அதைவிட வியக்கத்தக்கதாக அமைந்தது அவர்கள் தங்கள் அதிகாரத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்திய விதமாகும். இந்த வியப்பு அவர்களுக்கே கூட இருந்தது. 1644-ஆம் ஆண்டு துவங்கி, 1912-ஆம் ஆண்டு வரை மஞ்சு பேரரசர்கள் தொடர்ந்து ஆட்சி செய்வார்கள் என்று யாரால் துணிந்து கணித்திருக்க முடியும்? அவர்கள் அவ்வாறு ஆட்சி செய்தது வரலாற்றாசிரியர்களுக்குப் பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பியது. அவற்றில் மிக அடிப்படையான ஒன்று “சிறுபான்மையினர் ஆட்சி குறித்த கேள்வி” ஆகும். அதாவது, சீனர்களை விட எண்ணிக்கையில் சுமார் 350-க்கு 1 என்ற விகிதத்தில் மிகக் குறைவாக இருந்த மஞ்சு இனத்தவர், எவ்வாறு சீனாவைக் கைப்பற்றி, பின்னர் ஏறக்குறைய 250 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடிந்தது என்பது ஒரு நுட்பமான விவகாரமாகும்.

மஞ்சு என்ற சொல் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் உள்ளது. ஜூச்சென்கள் என்பவர்கள் துங்குஸ் (Tungusic) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, வேட்டையாடும்-திரளும் பழக்கத்தைக் கொண்ட ஒரு பழங்குடி இனக்குழு ஆவர். இவர்கள் வடகிழக்கு சீனப் பகுதியான மஞ்சூரியாவின் காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்ந்தனர். “ஜூச்சென்கள்” (Jurchens) தான் பின்னாளில் “மஞ்சு” (Manchu) என்று அழைக்கப்பட்ட இனக்குழுவின் மூதாதையர்கள் ஆவர்.  தொடக்ககால சீனப் பதிவுகளில் அவர்கள் டோங்ஹுய் அல்லது “கிழக்கத்திய காட்டுமிராண்டிகள்” என்று அழைக்கப்பட்டனர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டில், இவர்கள் கிதான் (Khitan) பழங்குடியினரால் நிறுவப்பட்ட லியாவோ (Liao) பேரரசின் கீழ் இருந்தனர். ஆனால், 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1115), வான்யன் அகுடா (Wanyan Aguda) என்ற தலைவரின் கீழ் இவர்கள் லியாவோவின் ஆதிக்கத்தை உதறித் தள்ளி, வட சீனாவின் பெரும்பகுதியை ஆண்ட “சின்” (Jin) என்ற பேரரசை (கி.பி.1115–1234).  நிறுவினர். பின்னர், இவர்கள் மங்கோலியர்களின் தாக்குதலால் கி.பி. 1234 இல் அழிக்கப்பட்டனர்.

மேலும் உயிர் பிழைத்த ஜூச்சென்கள் வடகிழக்கு மஞ்சூரியாவிற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இந்த ஜூச்சென்களின் வழித்தோன்றல்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர், ஆனால் விரைவிலேயே அவர்கள் ஜூச்சென் என்ற பெயரைக் கைவிட்டு மஞ்சு என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினர். 17ஆம் நூற்றாண்டில் நுர்ஹாசி (Nurhaci) என்ற தலைவர் பல நுழென் பழங்குடியினரை ஒன்றிணைத்து, 1636 இல் ‘மஞ்சு’ என்ற பெயரில் சிங் வம்சத்தை நிறுவினார். வரலாற்று ரீதியாக, “மஞ்சு” (Manchu) என்ற பெயர் பின்னர் 1635 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் மஞ்சூரியாவின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்தனர்.  தெற்கு நோக்கி நகர்ந்து,  1644 ம் ஆண்டு சீனா உள்நாட்டுக் கிளர்ச்சிகளால் பலவீனமடைந்திருந்த போது பெய்ஜிங்கைக் கைப்பற்றினர்கள்.

 

வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளம் ஆகியவை சீன மக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும்  1680-க்குள் மஞ்சுக்கள், சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையான கட்டுப்பாட்டை நிலைநாட்டினர். மஞ்சுக்கள் சுமார் 1800 வரை ஒரு சிறப்பான மற்றும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை நிர்வகித்து வந்தனர். சீனாவின் கடைசிப் பேரரசு ஆட்சியாளர்களான கிங் (மஞ்சு) வம்சத்தினர் (1644–1912) 1800-ஆம் ஆண்டிற்குள் பேரரசின் அளவை இரட்டிப்பாக்கினர், அதே நேரத்தில் அதன் மக்கள் தொகை ஏறக்குறைய மும்மடங்கானது.

எட்டுப்பதாகை சமூக-அரசியல் அடையாளம்

மஞ்சுக்கள், சீனாவைக் கைப்பற்றுவதற்கு உதவிய சில சீன மற்றும் மங்கோலியக் குழுக்களுடன் கூட்டணிகளை உருவாக்கினர். மஞ்சு ஆட்சி சீனாவின் அரசாங்கத்தையோ அதன் சமூக, கலாச்சார வாழ்க்கையையோ முற்றிலுமாகச் சீர்குலைக்கவில்லை. மாறாக, மஞ்சு ஆட்சியாளர்கள் தாங்கள் கைப்பறிறி பகுதிகளில் சீன வாழ்வின் அம்சங்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்தனர் மற்றும் மாற்றியமைத்துக் கொண்டனர். அவர்கள் தாங்கள் ஆட்சி செய்த பல்லினப் பேரரசுக்கு ஏற்ற ஒரு ஆட்சி முறையை உருவாக்கினர். அதில் சீனர்களே மிகப்பெரிய மக்கள்தொகையாக இருந்தனர். மஞ்சு ஆட்சியாளர்கள் தங்கள் அரசாங்க நடைமுறைகளில் பலவற்றை முந்தைய சீன மிங் பேரரசின் நடைமுறைகளை மாதிரியாகக் கொண்டு அமைத்தனர். உதாரணமாக, சீன அரசாங்க அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக, முந்தைய சீன பேரரசுகள் போலவே அவர்கள் ஒரு குடிமைப் பணித் தேர்வு முறையைப் பயன்படுத்தினர். மஞ்சு பேரரசர்கள் சீன மற்றும் மஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தனர். அதே சமயம், மஞ்சு ஆட்சியாளர்கள் பல மஞ்சு பழக்கவழக்கங்களை அரசவையிலும் பொதுமக்களிடையேயும் பேணி வளர்த்தனர்.

மஞ்சு பேரரசர்கள் பெரும்பான்மையான சீன மக்களை ஆட்சி செய்கிற பொழுது இருவிதமான தன்மைகளையும் கடைபிடித்தனர். சீன அரசியல் நெறிமுறைகளை மஞ்சு இனத்தவர் ஏற்றுக் கொள்வதையும் அவற்றை சீன அறிஞர்கள் அங்கீகரிப்பதையும் சார்ந்து இருந்தது மட்டுமல்ல, மஞ்சு இனத்தவர்களுக்கும் பெரும்பான்மை சீன ஹான் இனத்தவர்களுக்குமான வேறுபாடுகளை தக்க வைக்கும் பணிகளையும் தங்கள் ஆட்சி காலம் முழுவதும் கடைபிடித்தனர். அதாவது கலாச்சார தழுவல் என்பதில் சீன மயமாதல் ஒரு பக்கம் நடைபெறுகிற பொழுது தங்களின் தனித்துவத்தை காப்பாற்றக்கூடிய செயல்களையும் கடைப்பிடித்தனர்.

1601-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘எட்டு கொடிகள்’ அமைப்பு, மஞ்சு இன அடையாளத்தை தனித்துவமாக வெளிப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தது. இது ஒரு இராணுவ அமைப்பாக மட்டுமல்லாமல், மஞ்சு இனத்தின் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் அடையாளத்தின் மைய அச்சாகவும் செயல்பட்டது. “எட்டு கொடிகள்” என்பது வெறும் போர் வீரர்களின் கூட்டம் அல்ல. அது ஒரு முழுமையான தனி சமூக அமைப்பு (suborder of society) . ஒவ்வொரு குடும்பமும் ஒரு கொடியில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த உறுப்பினர் உரிமை மரபுவழியாக தொடரப்பட்டது. இந்த அமைப்பு மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தியது. இராணுவ பயிற்சி முதல், ஊதியம் மற்றும் உணவு விநியோகம், திருமணம், இறப்பு பதிவு, மற்றும் ஓய்வூதியம் வழங்குதல் வரை. இவ்வாறு, கொடி மக்கள் (banner people) என்ற பெயர் மஞ்சு இனத்தின் சமூக அடையாளமாக மாறியது. எட்டு கொடிகள், ஒரு இராணுவ கட்டமைப்பைத் தாண்டி, மஞ்சு இனத்தின் “இன இறையாண்மை” (ethnic sovereignty) மற்றும் தனித்துவமான சமூக-அரசியல் அடையாளத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய கருவியாக அமைந்தது. ஒரு சிறுபான்மை இனமாக இருந்தும், மிகப்பெரிய ஹான் சீன மக்கள்தொகையை 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆள்வதற்கு இந்த அடையாளப் பாதுகாப்பே முக்கிய காரணமாக கருதப்படுகிறது

வரலாற்று ரீதியாக, ஆண்களின் தலைமுடி பாணியில் மஞ்சு மற்றும் ஹான் இனத்தினரிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது. மஞ்சு ஆண்கள் தங்கள் நெற்றிப் பகுதியை மொட்டையடித்து, பின்புறத்தில் உள்ள முடியை நீண்டு, பின்னல் போட்டு வைத்தனர். இது அவர்களின் பாரம்பரியப் பழக்கமாகும். ஹான் சீனர்கள், கன்பூசியஸ் போதனைகளின்படி, முடியை வெட்டாமல், அதை முடிச்சு அல்லது கொண்டை போட்டு வளர்த்தனர். 1644-ல் சிங் வம்சம் ஆட்சிக்கு வந்த பிறகு, மஞ்சு ஆட்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தின் அடையாளமாக ஹான் ஆண்கள் அனைவரும் இந்த ‘கியூ’ சிகையை வளர்க்க வேண்டும் என்ற கட்டாய ஆணையைப் பிறப்பித்தனர். இதற்கு இணங்க மறுத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1912-ல் சிங் வம்சம் வீழ்ச்சியடைந்த பின்னரே இந்தக் கட்டாய சிகை முறை ஒழிக்கப்பட்டது.

ஒரு படகில் மிதக்கும் பொருளாதாரம்

மஞ்ச வம்ச (1644-1912) காலத்துப் பொருளாதாரம், ஒரு படகில் மிதக்கும் வெள்ளப்பெருக்கு போன்றது—சில காலகட்டங்களில் கரைபுரண்டு ஓடியது. வேறு சிலவற்றில், எதிர்பாராத புயல்களையும் சுழிப்புகளையும் சந்தித்தது. இது “கிளாசிக்கல்” வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலின் தொடக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. 18-ஆம் நூற்றாண்டில் உச்சத்தை அடைந்த இந்தப் பொருளாதாரம், பின்னர் உள் நெருக்கடிகள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களால் சீர்குலைந்து, முடிவில் நவீன தொழில்துறை வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது.

ஆரம்பகால மஞ்ச வம்சம், குறிப்பாக காங்ஷி, யோங்ழெங் மற்றும் கியான்லாங் பேரரசர்களின் கீழ், குறிப்பிடத்தக்க பொருளாதார விரிவாக்கத்தைக் கண்டது. இந்தச் சகாப்தம் பெரும்பாலும் “காங்-கியான் பொற்காலம்” என்று குறிப்பிடப்படுகிறது. அரசாங்கம் புதிய நிலங்களைச் சாகுபடி செய்ய ஊக்குவித்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சோளம் போன்ற பயிர்கள், வறண்ட நிலங்களில் பயிரிடப்பட்டு, உணவு உற்பத்தியை வெடிக்கச் செய்தன. நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வரிச்சீர்திருத்தங்கள் விவசாய உற்பத்தியை மேலும் அதிகரித்தன. மேம்பட்ட உணவு விநியோகத்தால், சீனாவின் மக்கள்தொகை 1650-ஆம் ஆண்டில் சுமார் 100-150 மில்லியனில் இருந்து 1800-ஆம் ஆண்டிற்குள் 300 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த மக்கள்தொகை அதிகரிப்பே விரிவாக்கத்திற்கு உந்துதலாகவும், விளைவாகவும் இருந்தது.

வெள்ளி பொருளாதாரத்தின் உயிர்நாடியாக மாறியது. அதன் விநியோகத்தில் ஏற்பட்ட கூர்மையான அதிகரிப்பு, தொலைதூர வர்த்தகத்தையும், பிராந்திய வணிகர் குழுக்களான ஷான்சி (சான்சி) மற்றும் ஹுய் (ஆன்ஹுய்) வணிகர்கள் போன்றவர்களின் எழுச்சியையும் தூண்டியது. பணம் சம்பாதிப்பதற்கான இந்த உத்வேகமே, நாடு முழுவதும் பொருட்களும் அதற்கான கருத்துக்களும் பரவ உதவியது.

உலக வரலாற்றில், இந்தக் காலகட்டத்தில் சீனாவின் பொருளாதார செல்வாக்கு மகத்தானதாக இருந்தது. 1750-ஆம் ஆண்டில், சீனாவின் உற்பத்தித் துறை உலகின் மொத்த உற்பத்தியில் 32.8% ஆக இருந்தது. இது முழு ஐரோப்பாவின் மொத்த உற்பத்தியையும் விட அதிகமாகும்.

 

இந்தப் பொற்காலம் நீடிக்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டு, பொருளாதார நெருக்கடிகளால் உந்தப்பட்டு, அடிக்கடி ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தது. வெள்ளி விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை, ஜியாகிங் (Jiaqing) மற்றும் டாவோகுவாங் (Daoguang) ஆட்சிக் காலங்களில் தொடர் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுத்தது. இது உணவுப் பொருட்களின் விலையில் கூர்மையான உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.

அந்நிய நாடுகளுடன் செய்யப்பட்ட அடிமைத்தனமான ஒப்பந்தமும் அபினி யுத்தமும் சீன பொருளாதாரத்தை அழிவின் விளிம்புக்கு தள்ளின. வெள்ளிகள் குவிந்திருந்த ஒரு நாட்டில் போதைப் பொருட்களுக்காக வெள்ளிகளை வெளியேற்றினார்கள். அரசாங்க வருவாய் முடங்கியது. அபினி யுத்தத்தில் தோல்வியடைந்த பிறகு மஞ்சு அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பாக துறைமுகங்களையும், வணிகங்களையும் மேற்கத்திய நாடுகளுக்கு திறந்து விட்டது. இதனால் கடும் பாதிப்புகளை சந்தித்தது.

ஒருபுறம் பொருளாதார நெருக்கடியும் மறுபுறத்தில் மேற்கத்திய நாடுகளின் ஊடுருவல் காரணமாக நவீன பொருளாதார அஸ்திவாரங்களும் உருவாக்கப்பட்டது. தைப்பிங் கிளர்ச்சி (Taiping Rebellion, 1850-64) மஞ்ச ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, மைய அரசு உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிக நிதி மற்றும் இராணுவ அதிகாரத்தை வழங்கியது. உள்ளூர் அரசாங்கங்கள் தங்கள் சொந்த இராணுவத்திற்கு நிதியளிக்க லிஜின் (likin) என்ற புதிய உள்நாட்டு வர்த்தக வரியை அறிமுகப்படுத்தின. இது நவீன தொழில்களில் முதலீடு செய்ய பிராந்தியங்களுக்கு ஒரு வழியை உருவாக்கியது. இந்த உள்ளூர் முதலீடு, கப்பல் கட்டுதல், சுரங்கம், மற்றும் ஆயுத உற்பத்தி போன்ற தொழில்களில், “தானாகவே நடக்கும்” தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது. இது அரசால் நடத்தப்படும் “யாங்-வு (ஸ்வான்-வு)” இயக்கத்துடன் இணைந்து, சீன தொழில்மயமாக்கலின் முதல் படிகளைக் குறித்தது. தந்தி இணைப்புகள் மற்றும் இரயில் பாதைகள் கட்டப்பட்டன. 1900-ஆம் ஆண்டிற்குள், முக்கிய நகரங்களில் மின்சார விளக்குகள் மற்றும் தொலைபேசிகள் போன்ற நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. யாங்சே மற்றும் மேற்கு நதிகள் கப்பல் போக்குவரத்திற்கு மேற்கத்திய நாடுகளுக்கு திறக்கப்பட்டன.

 

மஞ்ச வம்சத்தின் பொருளாதாரம் என்பது உள் செழிப்பு, பின்னர் உள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு எதிரான போராட்டம், இறுதியில் நவீனமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலின் அழுத்தங்களுக்குத் தன்னை மாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளின் கதையாகும்.

மொழியும் பண்பாட்டு அடையாளமும்

மொழியை பொருத்தவரையில், மஞ்சு மக்கள் மஞ்சு மொழியை பேசுகின்றனர். இது துங்கஸ் (Tungus) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. எழுத்துமுறை: 1599 ஆம் ஆண்டு, நுர்ஹாசி மங்கோலிய எழுத்துமுறையைத் தழுவி மஞ்சு மொழிக்கு ஏற்றார். பின்னர் 1632 இல் தஹாய் (Dahai) இதில் புள்ளி மற்றும் வட்டக் குறிகளைச் சேர்த்து நவீன எழுத்துமுறையை உருவாக்கினார். இது மேலிருந்து கீழாகவும், வலமிருந்து இடமாகவும் எழுதப்படும். இருப்பினும், சிங் வம்ச ஆட்சிக் காலத்தில் ஹான் சீனக் கலாச்சாரத்தின் தாக்கத்தால், இன்று பெரும்பாலான மஞ்சு மக்கள் சீன மொழியையே பேசுகின்றனர் .

இவர்களின் பண்பாட்டு அடையாளம் ஹான் சீனர், மங்கோலியர், திபெத்தியர் போன்ற ஏனைய இனக்குழுக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. இவர்கள் மரபுவழி ஷாமனிசம் (Shamanism) நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். பாரம்பரியமாக ‘ஷாமனிசம்’ (Shamanism) எனும் இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டைப் பின்பற்றினர். தேவாலயங்களிலும், கிராமங்களிலும் ஷாமன்கள் மதச் சடங்குகளை நடத்தினர். பின்னர் பௌத்தம், தாவோயிசம் ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தின. மஞ்சு சமூகம் தாய்வழிக் குலச் சமூகத்தின் (Matrilineal Clan Society) பண்புகளைத் தக்கவைத்திருந்தது. இதனால், பெண்களின் குடும்ப மற்றும் சமூக நிலை மிகவும் உயர்வாக இருந்தது. சீனாவில் பெண்கள் அடிமைத்தனத்தின் உச்சமாக பாதம் கட்டும் முறை இருந்தது. ஆனால் மஞ்சு பெண்கள் பாதம் கட்டும் வழக்கத்தை (foot-binding) பின்பற்றவில்லை. வேட்டை, போர் போன்ற சமூகப் பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்களுடன் சேர்ந்து பங்கேற்றனர். சமீபத்திய மரபணு ஆய்வுகள், மஞ்சு மக்கள் தங்கள் பாரம்பரிய தாயகமான வடகிழக்கு சீனாவில் மரபணு ரீதியாக ஒருமித்த தன்மையுடன் காணப்படுவதாகக் கூறுகின்றன.

கிங் வம்சம் ஒருபுறத்தில் உள்நாட்டு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த பொழுது மேற்கத்திய நாடுகள் மிகக் கொடூரமான முறையில் ஒரு தலைபட்சமான ஒப்பந்தங்களில் கையளித்திட வைத்து சீன மக்களை சுரண்டினார்கள். இதன் விளைவாக தேசபக்த இயக்கமும் அந்நிய சக்திகளுக்கு எதிரான எழுச்சியும் ஏற்பட்டது. 1850 முதல் 1864 வரை நடைபெற்ற தாய் பிங்க் விவசாயிகள் கிளர்ச்சி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1853 முதல் 1868 வரை நடைபெற்ற நியான் கிளர்ச்சி, 1796 முதல் 1804 வரை நடைபெற்ற வெள்ளை தாமரை கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகள் கிங் வம்சத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற பாக்சர் கிளர்ச்சி கிங் அரசாங்கத்துக்கு எதிராக இல்லை என்றாலும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தேசியவாத கிளர்ச்சியாக ஆரம்பித்து ஆட்சியாளருக்கு எதிராக மாறியது. இந்தக் கிளர்சிகள் அனைத்தும் ஒரு பொதுவான அம்சத்தை பிரதிபலித்தது.

கிங் வம்சத்தின் பலவீனமான ஆட்சியும் சமூக பொருளாதார நெருக்கடிகளும் இந்த கிளர்ச்சிகளில் பிரதிபலித்தன. இதன் விளைவாக 1911 ஆம் ஆண்டு டாக்டர் டன் யாட் சன் தலைமையில் ஜனநாயக புரட்சி ஏற்பட்டு ஜனநாயக குடியரசு உருவாகியது. 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் புதிய ஜனநாயக புரட்சியின் மூலமாக மக்கள் சீன குடியரசு உருவாக்கப்பட்டது. மக்கள் சீன குடியரசில் இனச் சிறுபான்மை மக்களுக்கான தனித்துவமான கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. இதன் விளைவாக மஞ்சு இனம் சீன மக்கள் குடியரசில் இனச் சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டது.

மற்ற இனங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் சீனாவின் 250 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு இனம் சீன கலாச்சாரத்தில் கலந்து விட்டது. தங்களின் தாய் மொழியை கடந்து பெரும்பாலான மஞ்சு இன மக்கள் சீன மொழியை பேசுகிறார்கள். இருப்பினும் ஒரு தனி இனச் சிறுபான்மையாக அங்கீகரிப்பதற்கான பல்வேறு விதமான தனித்த அடையாளங்கள் நீடிக்கின்றது.இவர்களின் பாரம்பரிய மொழி, எழுத்து, உடை, ஷாமன் மதம், பதாகை அமைப்பு போன்றவை இவர்களை தனித்துவமாகக் காட்டுகின்றன. இன்று, பெரும்பாலான மஞ்சு மக்கள் சீனப் பிரதான கலாச்சாரத்தில் ஒன்றிணைந்தாலும், தங்கள் வரலாற்று அடையாளத்தைத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள்.

சீன மக்கள் குடியரசில் மஞ்சு இன மக்கள்

சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட பிறகு மஞ்சு இன மக்களின் உரிமைகளை இன பிராந்திய தன்னாட்சி சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் பாதுகாக்கிறார்கள். மஞ்சு இன மக்கள் உட்பட சிறுபான்மையினரின் அரசியல் பொருளாதார கலாச்சார துறைகளில் சம உரிமைகளும் தன்னாட்சி உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது மஞ்சு இன மக்களின் பொதுவான செழுமைக்கு வழி வகுக்கிறது. 14வது ஐந்தாண்டு திட்டத்தில் மஞ்சு இன கிராமங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு 94 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மஞ்சு மொழி அழியும் நிலையில் இருப்பதால், அரசாங்கமும் கல்வி நிறுவனங்களும் பின்வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஹெய்லோங்ஜியாங் பல்கலைக்கழகத்தின் மஞ்சு ஆய்வு நிறுவனம் போன்றவை, நீண்ட காலமாக மஞ்சு மொழி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆய்வாளர்கள், மஞ்சு மொழி இன்னும் பேசப்படும் சான்ஜியாசி கிராமம் போன்ற இடங்களுக்குச் சென்று, 20 முதியவர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு, முதல் நிலை மொழித் தரவுகளைப் பாதுகாக்கின்றனர்.

“சீன-துங்குசிக் மொழி தரவுத் தளக் கட்டுமானம் மற்றும் ஆராய்ச்சி” என்ற தேசிய சமூக அறிவியல் முக்கியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்முக தரவுத் தளத்தை உருவாக்கி, மஞ்சு, ஹெஜென் போன்ற அழியும் நிலையிலுள்ள மொழிகளை முறையாகப் பாதுகாக்கிறது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் மஞ்சு-சீன இரு மொழி இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்பை Transformer மாதிரியின் அடிப்படையில் உருவாக்கி வருகின்றனர். இது மஞ்சு காப்பக ஆவணங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் மொழித் தகவல் செயலாக்கத்தில் உள்ள தொழில்நுட்ப சவால்களைத் தீர்க்க உதவும்.

மஞ்சு பாரம்பரிய கலைகளான காகித வெட்டு, எம்பிராய்டரி போன்றவை தேசிய மட்ட பண்பாட்டு அல்லாத பொருள் பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டு, பாரம்பரியக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு, படைப்பு கலைப் பொருட்கள் மூலம் அவை உயிர்ப்புடன் வைக்கப்படுகின்றன. மேலும், கிராமங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் தனித்துவமான கலாச்சார நினைவுகள் பாதுகாக்கப்படுகின்றன.

மஞ்சு இன மக்களின் கல்வியறிவு நிலை, சீனாவின் மற்ற இனக்குழுக்களுடன் ஒப்பிடுகையில், வரலாற்று ரீதியாகவும் தற்போதும் சிறப்பாக உள்ளது. கிங் வம்சத்தில் மஞ்சு இன மக்கள் ஆட்சியாளர் இனமாக இருந்த காரணத்தால், மஞ்சு மக்களுக்கு கல்வி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு வாய்ப்புகள் இருந்தன. இந்த கல்வி மரபு தனியார் பள்ளிகள் மூலம் வலுப்படுத்தப்பட்டது. அவை கன்பூசியன் கிளாசிக்ஸ் மற்றும் மஞ்சு மொழி, வில்வித்தை போன்றவற்றில் கல்வி கற்பித்தன.

1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி மஞ்சு இனத்தில், ஒவ்வொரு 10,000 பேரில் 1,652.2 பேர் பல்கலைக்கழக கல்வி பெற்றிருந்தனர். இது தேசிய சராசரியான 139.0 மற்றும் ஹான் சீனர்களின் 143.1 ஐ விட மிக அதிகம். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுத்தறிவு இல்லாதவர்களின் விகிதம் 1.41% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 22.21% மற்றும் ஹான் சீனர்களின் 21.53% ஐ விட மிகக் குறைவு. மஞ்சு இனத்தில் பல்கலைக்கழக கல்வி பெற்றவர்களின் விகிதம் 7.58% ஆகவும், உயர்நிலைப் பள்ளி கல்வி பெற்றவர்கள் 20.35% ஆகவும் இருந்தனர். இவை ஹான் மற்றும் பிற இனக்குழுக்களை விட அதிகம். அவர்களின் கல்வியறிவு இல்லாத விகிதம் மற்ற இனக்குழுக்களை விட குறைவாக இருந்தது.

மஞ்சு கலாச்சாரம் சீன நாகரிகத்தின் முக்கிய பகுதி என்பதை உணர்ந்து, அதன் பாதுகாப்பிற்கு வரலாற்று மற்றும் தற்போதைய முக்கியத்துவம் உண்டு என்பதாகும். முன்னாள் பிரதமர் சௌ என் லாய் குறிப்பிட்டது போல், மஞ்சு இனம் வரலாற்றில் நாட்டின் ஒற்றுமைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. எனவே, புதிய சீனாவில் அனைத்து இனங்களும் செழுமையை நோக்கி நகர வேண்டும்.

அ.பாக்கியம்

92 நெடும்பயணத்தில் பின்பற்றப்பட்ட இனக்கொள்கை-

  அ.பாக்கியம் Bytamilmarxorg PublishedSeptember 30, 2026 செம்படையின் நெடும் பயணத்தின் போது மியோ மற்றும் யாவோ மக்கள் வாழ்ந்த பகுதிகளை...