Pages

சனி, செப்டம்பர் 16, 2023

சீனா: முதலில் நட்பு போட்டி இரண்டாவது

 



சீன-அமெரிக்க உறவுகள் உயிர்பெற்ற காலத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றமும் ஒன்று. 1950 ஆம் ஆண்டு கொரிய யுத்தத்தின் பொழுது அமெரிக்கா, சீனாவின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீனா தன்னிறைவை அடைந்து முன்னேறிக் கொண்டிருந்த காலத்தில் 1971 ஜூன் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்கா, சீனாவுக்கு எதிரான பொருளாதார தடையை நீக்கியது. 1972 பிப்ரவரி 28  அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் மற்றும் ஹென்றி கிசிங்கர் ஷாங்காய் நகருக்கு விஜயம் செய்தனர்.

இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை உறவுகளை இயல்பாக் குவதற்கு உதவி செய்தது.  அடுத்த ஐந்தாண்டுகள் வரை அதிகாரப்பூர்வமற்ற உறவுகள் மேம்படுத்தப்பட்டது.  டேபிள் டென்னிஸ் ராஜதந்திரம் (ping-pong) என்ற முறையில் சீனா அமெரிக்க டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. சீனாவின் கொள்கை "முதலில் நட்பு போட்டி இரண்டாவது" என்ற அடிப்படையில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு உறவுகள் மேம்பட்டது. 1978 ம் ஆண்டுகளுக்குப் பிறகு டெங் ஜியோ பிங்  திறந்தவெளி கொள்கையை (open door policy) அறிமுகப்படுத்தினார்.

இந்த மாற்றங்களின் ஊடாக முகமது அலியை சீன ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சீன விளையாட்டு கூட்டமைப்பு சீனாவுக்கு வரும்படி அழைத்தது. அதன்பேரில் 1979 டிசம்பர் 19 முகமது அலி சீனப் பயணம் மேற்கொண்டார். மீண்டும் 1985 ம் ஆண்டு 10 நாட்கள் பயணமாகவும் 1993 ம் ஆண்டு மூன்றாவது முறையும் சீனாவுக்கு அவர் பயணம் செய்தார். முதல் பயணம் மிகக் குறுகிய காலமாக இருந்தாலும் முக்கியமான பயணமாக இருந்தது. இந்தப் பயணம் குத்துச்சண்டையை மீண்டும் சீனாவில் செயல்படுத்தவும் சீன அமெரிக்க உறவுகளை மேம்படுத்தவும் பயன்பட்டது.

சீனாவில் மேற்கொண்ட மூன்று பயணங்களின்போதும் சீனாவைப் பற்றிய தன் கருத்துக்களை முகமது அலி வெளிப்படுத்தினார். முகமது அலி எப்பொழுதுமே சொந்த ஆளுமையும், சுதந்திரமான எண்ணமும் கொண்டவர். அதற்கு ஏற்ற வகையில் அவரது கருத்துக்களும் வெளிப்படை தன்மையுடன்  வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். "சீன மக்கள் மிகவும் தன்னிறைவு பெற்றவர்கள். அவர்கள் மேற்கத்திய உலகத்திடம் உதவி கேட்காமலேயே தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள். நான் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்" என்று சீனாவின் கடந்த கால தன்னிறைவான வளர்ச்சியைக் குறிப்பிட்டு பேசினார். சைனா டெய்லி என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ‘‘நான் சீன மக்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சைனா யூத் நியூஸ் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் "இப்போது நீங்கள் உலகிற்கு திறந்த வெளி கொள்கையை அறிவித்துள்ளீர்கள். உங்கள் கலாச்சாரத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். ஏனென்றால் மற்றவர்கள் உங்கள் கலாச்சாரத் தின்மீது அவர்கள் கலாச்சாரத்தை திணிக்க முயற்சிப்பார்கள். அது மாபெரும் சண்டையாக மாறும்" என்று கூறி, சீன மக்களின் தனித்துவமான கலாச்சாரத்தை அங்கீகரித்து அதை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய கருத்தை தெரிவித்தார்.

முகமது அலி ஆரம்ப கட்டப் படிப்பிலும், ராணுவ தேர்விலும் உரிய முறையில் மதிப்பெண்பெற முடியவில்லை. ராணுவ தேர்வில் தோல்வியடைந் ததைப் பற்றி முகமது அலி கூறும்போது, ‘‘நான் பெரியவன்தான். ஆனால் புத்திசாலி இல்லை’ என்று குறிப்பிட்டார். ஆனால், மால்கம் எக்ஸ்,  முகமது அலியைப் பற்றி சொல்கிற பொழுது அவருடைய அறிவார்ந்த விஷயங்கள் தான் என்னை கவர்ந்தது என்று கூறியிருந்தார். சீனாவைப் பற்றி அலி தெரிவித்த கருத்துக்கள் மால்கம் எக்ஸ் கூறியதை உறுதிப்படுத்துகிறது.

அப்போதைய சீனத் தலைவர் டெங் ஜியோ பிங், முகமது அலியை வரவேற்று, ‘‘சீனாவைப் பற்றி உங்களுக்கு ஆழ்ந்த உணர்வுகள் உள்ளன. சீனாவை சுற்றி பாருங்கள்’ என்றார். முகமது அலி,   டெங் ஜியோ பிங்கிடம் சீனாவில் மீண்டும் குத்துச்சண்டையை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த பொழுது, "மக்கள் விரும்பும்வரை நாங்கள் அதை வளர்ப்போம்.  குத்துச்சண்டை என்பது சீன மற்றும் அமெரிக்க மக்களிடையே பரஸ்பரம் புரிதல் மற்றும் நட்பை மேம்படுத்துவதற்கு ஒரு பாலமாக இருக்கலாம்’ என்று டெங் கூறினார் . சீனாவின் நண்பராக இருக்க முகமது அலி தகுதியானவர் என்று சிலாகித்தார்.

குத்துச்சண்டை மேடையில் ஒரு மரணம் ஏற்பட்டதால், சீனாவில் குத்துச்சண்டை போட்டி 1959 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அது உழைக்கும் மக்களை சுரண்டும் முதலாளித்துவத்தின் சூதாட்டமாக இருப்பதோடு, மிருகத்தனமாகவும் இருப்பதாக காரணம் கூறப்பட்டது. அதன்பிறகு முகமது அலி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1986 ஆம் ஆண்டு குத்துச்சண்டையின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. முகமது அலி மற்றும் டெங் ஜியோபிங் சந்திப்பு சீனாவில் மீண்டும் குத்துச்சண்டையை உயிர்ப்பித்தது.

1985 ம் ஆண்டு முகமது அலி பத்து நாட்கள் பயணமாக சீனா சென்றார். அங்கு பெய்ஜிங் ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் 500 மாணவர்களுக்கு குத்துசண்டை பயிற்சி அளித்தார். குத்துச்சண்டை வன்முறை களமாக்க அவர் அனுமதிக்கவில்லை. நடுவர் மற்றும் உரிய மருத்துவ ஏற்பாடுகளுடன் பாதுகாப்பான முறையில் குத்துச்சண்டை நடத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் கலந்து கொண்ட சில மோசமான, ஆபத்தான முறையில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டிகளை மீண்டும் நீங்கள் வீடியோவில் பார்த்தீர்களா என்று கேட்ட பொழுது, ‘‘அந்த நரகத்திற்கு மீண்டும் நான் செல்ல விரும்பவில்லை’என்று விதிமுறைகளைக் கடந்த குத்துச்சண்டைப் போட்டியைப் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

1993ம் ஆண்டு மூன்றாவது முறையாக சீனாவிற்கு சென்ற பொழுது, பெய்ஜிங் நகரத்தில் முதல்முறையாக சர்வதேச குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது.  1987 ஆம் ஆண்டில் சீனா தனது முதல் தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. அதே ஆண்டு சீன குத்து சண்டை சங்கம், சர்வதேச அமெச்சூர் குத்துச்சண்டை சங்கத்தில் அதிகாரப்பூர்வமான உறுப்பினராக சேர்ந்தது. இதன் பிறகு  சீனா தொடர்ந்து சர்வதேச அளவில் குத்துச்சண்டை அரங்கில் தோன்றத் தொடங்கியது.

ஜு ஷிமிங் (Zou shiming) என்ற என்ற சீன குத்துச்சண்டை வீரர் லைட் வெயிட் பிரிவில் மூன்று தொடர்ச்சியான ஒலிம்பிக் பதக்கங்களை , அதாவது 2004, 2008ல் வெண்கல பதக்கமும் 2012 ஆம் ஆண்டு தங்கப் பதக்கமும் வென்றார். சீன குத்துச்சண்டை மற்றும் உலக குத்துச்சண்டை இரண்டுமே முகமது அலியால் பயனடைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. முகமது அலி குத்துச்சண்டையை பிரதிநிதித்துவப் படுத்துவராக இருந்தாலும், அவர் அமைதியின் தூதுவராகவும் சீனர்களுக்கு மனிதாபிமான மிக்கவரா கவும் இருந்தார். ஓய்வு பெற்ற பிறகு தன் நேரத்தை அமைதிப் பணிக்காக அர்ப்பணித்தார் என்று அவரைப் பற்றி சீன பத்திரிகைகள் எழுதின.

சீனாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்கிலும், வெளியுறவு கொள்கை களிலும் சர்வதேச உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் விளையாட்டு துறையில் வேகமாக முன்னேற்றத்தை கண்டது. விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்தோடு மட்டுமல்ல மன ஆரோக்கியம், சிந்தனை வளர்ச்சி, செயல் திறன் மேம்பாடு ஆகியவற்றோடு இணைந்த ஒன்று என்பதை சீனா தனது விளையாட்டுக் கொள்கையில் அமல் படுத்திக் கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முகமது அலியின் வருகையால், குத்துச்சண்டை மீண்டும் சீனாவில் நடத்தப்பட்டது மட்டுமல்ல… அந்த விளையாட்டு சர்வதேச உறவுகளுக்கும் உதவியாக இருந்தது.  சீன அரசு அறிவித்தது போல் "முதலில் நட்பு, போட்டி இரண்டாவது" என்ற கொள்கையி லும் முன்னேற்றம் ஏற்பட்டது.

 

செவ்வாய், செப்டம்பர் 12, 2023

மாஸ்கோ பயணமும் மன மாற்றமும்

 

தொடர்: 21



முகமது அலி, கானா நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, ஆப்பிரிக்காவைப் பற்றி, வெள்ளையர்கள் சித்தரித்த அனைத்தும் பொய் என்று எப்படி உணர்ந்து கொண்டாரோ அதே போல் மாஸ்கோ பயணத்திற்குப் பிறகு, சோவியத் யூனியனைப்பற்றி, அமெரிக்கா கூறிய அனைத்தும் கட்டுக்கதை என்பதை உணர்ந்தார். அதற்கு முன்னால் சோவியத் யூனியன் பற்றி அமெரிக்காவில் போதிக்கப்பட்ட கருத்துக்களை அவர் உள்வாங்கி இருந்தார். மாஸ்கோ போனால் மறுபடி திரும்பி வரமுடியாது என்று கூட பலரும் பயமுறுத்தினார்கள். ஆனாலும், முகமது அலி 1978 ஜூன் மாதம் சோவியத் யூனியன் தலைநகர் மாஸ்கோ மற்றும் தாஷ்கணட், சாமர்கண்ட் ஆகிய இடங்களுக்கு பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டார். சோவியத் நாட்டின் அழைப்பின் பெயரில் முகமது அலி இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது சோவியத் நாட்டின் ஜனாதிபதி, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பிரஷ்னேவை முகமது அலி சந்தித்துப் பேசினார். கிரெம்ளின்  மாளிகையில் 35 நிமிடம் நடந்த இந்த சந்திப்பு முகமது அலிக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு மரியாதை ஆகும். அதுவரை பிரஷ்னேவ் எந்த ஒரு விளையாட்டு வீரரையும், கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியது கிடையாது. கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட முறையிலான பிரஷ்நேவுடனான முகமது அலியின் சந்திப்பு என்பது சோவியத் யூனியன் உலக குத்துச்சண்டை வீரன் முகமது அலிக்கு அளித்த சிறப்பு கவுரவம் ஆகும்.

"சாம்பியன்கள் என்ன சாதித்தார்கள்? எத்தனை பட்டம் பதக்கம் பெற்றார்கள் என எல்லா விஷயங்களையும் மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆனால் சாம்பியன்கள், மக்களாகிய தங்களை எப்படி உணர்ந்தார்கள் என்பதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என்று கவிஞர் மாயா ஏஞ்சலோ கூறியுள்ளார். முகமது அலியையும் மக்கள் அப்படித்தான் நினைவில் வைத்திருந்தார்கள். வியட்நாமுக்கு எதிராக போரிட என் மனசாட்சி சம்மதிக்காது என்று கூறி அமெரிக்க ராணுவத்தில் கட்டாய சேவைபுரிய முகமது அலி மறுத்ததால் உலகம் முழுவதும் அவருக்கு மரியாதை இருந்தது. அந்த மரியாதை சோவியத் யூனியனில் அதிகமாக இருந்தது.

குத்துச்சண்டை சாம்பியனான முகமது அலி, அமெரிக்காவில் கருப்பர்களுக்கான சமஉரிமைகளுக்காக போராடக்கூடிய வீரர் என்றே சோவியத் நாட்டின் பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டார்கள். ஜனாதிபதி பிரஷ்னேவ், முகமது அலி பற்றிய தனது வரவேற்பு குறிப்பில் ‘‘அமெரிக்காவில் நீக்ரோ மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக முகமது அலி எடுக்கும் நடவடிக்கை எனக்கு நன்றாக தெரியும்" என்று எழுதினார். நீங்கள் மக்களை நேசித்தால் மக்கள் உங்களை மறக்க மாட்டார்கள் என்ற கவிஞர் மாயா ஏஞ்சலோவின் வரிகளுக்கு முகமது அலி சாட்சியாக இருந்தார்.

சோவியத் யூனியனில் தொழில்முறை குத்துச்சண்டையை ஏற்றுக் கொள்வதில்லை. வணிக ரீதியிலான அந்த குத்துச்சண்டையை மிக மோசமான விளையாட்டாக சோவியத்யூனியன் கருதியது. காரணம் தொழில்முறை குத்துச்சண்டையில் ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமான முறையில் தாக்கிக் கொண்டு ரத்தக்களறியில் ஈடுபடுவதை காண்பதற்கு செல்வந்தர்கள் பணம் செலுத்துகிறார்கள்; விளையாட்டை வணிக சூதாட்டமாக மாற்றுகிறார்கள் என்று சோவியத் யூனியன் கருதியது.  

அவ்வாறு இருந்தும் முகமது அலியினுடைய சாதனைகளுக்காகவும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக, நிறவெறிக்கு எதிராக அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுக்காகவும் சோவியத் யூனியனில் அவருக்கு உயரிய மரியாதை கொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சோவியத் யூனியனில் குத்துச் சண்டை வீரர்களை பொதுவாக அமெச்சூர் வீரர்கள் என்று அழைத்தார்கள். அவர்கள் அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டார்கள். குத்துச்சண்டையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து கவனித்துக் கொண்டார்கள்.

சோவியத் ஜனாதிபதி பிரஷ்னேவை சந்தித்துப் பேசியதில் முகமது அலி மிகவும் பூரிப்படைந்தார். அந்த சந்திப்பு பற்றி முகமதுஅலி கூறுகையில், ‘‘பிரஷ்னேவ் என்னை தனது அலுவலகத்திலேயே சந்தித்து பெருமைபடுத் தியதோடு மட்டுமல்லாமல்,  எனக்கு அவருடைய ‘போர் நினைவு குறிப்புகள்’ புத்தகத்தை கையெழுத்திட்டு கொடுத்தார். மேலும், ஒரு கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். என் மனைவிக்கு அழகான ரஷ்ய பரிசு பெட்டியை கொடுத்தார். நான் அவரை கட்டிப்பிடித்து இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தேன். நான் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுத்து என்னை திக்குமுக்காட வைத்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நீக்ரோ… சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களுடன் சாப்பிட முடியாத நீக்ரோ… சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர் உணவகங்களில் தடுக்கப்பட்ட நீக்ரோவிற்கு இது ஒரு பெரிய மரியாதையாக கருதுகிறேன்" என்று புளகாங்கிதம் அடைந்தார்.

மேலும், செய்தியாளர்கள் கூட்டத்தில், ‘‘எனக்கு பிரஷ்நேவை தெரியும் என்று வேறு எந்த அமெரிக்க திரைப்பட நட்சத்திரமோ அல்லது விளையாட்டு வீரரோ பெருமை பேச முடியாது’’ என குதூகலித்தார்.  முகமது அலி தான் சென்ற இடமெல்லாம், ஏறிய குத்துச்சண்டை மேடைகளில் எல்லாம் ‘‘நான் தான் பெரியவன்’’ என்று பேசுவார். அந்த வார்த்தையை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தன்னம்பிக்கையின் அடித்தளமாக, அடிநாதமாக அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினார். ஆனால் பிரேஷ்நேவை சந்தித்தவுடன் அவர் கூறுகையில், ‘‘நான் பெரியவன் அல்ல’’ என்று கூறினார்.

சோவியத் ஜனாதிபதி ஒரு போர் வெறியர் என்று அமெரிக்க பத்திரிக்கைகள் சித்தரித்த சூழலில்,  ‘‘பிரேஷ்நேவ் அமைதி விரும்பி. சாந்த குணம் உள்ள  மனிதர். அவர் என்னிடம் சமாதானம், அமைதியைப் பற்றி மட்டுமே பேசினார். மனிதநேயம் பற்றி அவர் என்னிடம் விரிவாக பேசினார். சோவியத் யூனியனின் சிறப்புகள் பற்றியும், சமாதானம் மற்றும் அமைதிக்காக தன் நாடு ஆற்றி வரும் பணிகள் என்னிடம் எடுத்துரைத்தார். சோவியத் யூனியன் அணு ஆயுத தாக்குதல் நடத்த உள்ளது என்ற பிரச்சாரத்தை அமெரிக்கா செய்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நான் அதுபற்றி கேள்விப்படவில்லை. அப்படிப்பட்ட எந்த சிந்தனையும் சோவியத் தலைவரிடம் இல்லை என்று முகமது அலி கூறினார். அவர் சோவியத் யூனியனிலிருந்து திரும்பியபோது அவருக்கு கென்னடி விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் மத்தியில் பேசிய அலி, ‘‘சோவியத் மக்கள் நான் பார்த்ததிலேயே மிகவும் அமைதியான மக்கள்’’ என்று பெருமையாக கூறினார்.

நான் முதலில் ரஷ்யாவில் தரை இறங்கியபோது கொஞ்சம் பதட்டமாகவே இருந்தேன். ரோபோ மனப்பான்மை கொண்ட சோகமான மனிதர்கள், ஏஜெண்டுகள் தொல்லை  தரும் விதமாக நடந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் அங்கு கண்ட காட்சிகள் மிகவும் அதிசயமாக இருந்தது. 100 தேசிய இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழும் காட்சியைக் கண்டு நான் அசந்து போனேன்; மகிழ்ச்சி அடைந்தேன் என்று குறிப்பிட்டார்.

மேலும், நான் சோவியத் யூனியனில் தங்கி இருந்த காலத்தில் ஒரு துப்பாக்கியையோ அல்லது ஒரு போலீஸ்காரரையோ, பாலியல் தொழிலாளி யையோ பார்க்கவில்லை என்று பெருமை பொங்க முகமது அலி குறிப்பிட்டார். அங்கு நானும் என் மனைவியும் பாதுகாப்பாக இருந்தோம். அதிகாலையில் உடற்பயிற்சிக்காக மாஸ்கோ நகரத்  தெருக்களில் ஓடும் போது, அமெரிக்கா வில் உள்ளதைப் போல, யாரும் என் தலையில் தட்டி பணம் பறிப்பார்களோ என்ற பயம் இல்லை.  வழிப்பறி கொள்ளையர் இல்லாத ஒரு நகரமாக மாஸ்கோ இருந்தது என்றும் குறிப்பிட்டார். 

நான் என் சுற்றுப்பயணத்தின்போது, ரஷ்யர்களிடையே மத சுதந்திரம் இருப்பதை பார்த்தேன். யூதர்கள் ஜெப ஆலயங்களுக்கு செல்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எல்லா இடங்களிலும் மசூதிகள் உள்ளன. கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்துகிறார்கள் என்று  முகமது அலி பகிரங்கமாக தெரிவித்தார். சோவியத் யூனியனில் மத சுதந்திரம் இல்லை என்ற அமெரிக்காவின் பொய் பிரசாரத்தை பலரும் அறிந்து கொள்ள முகமது அலியின் ரஷ்ய பயணம் நேரடி சாட்சியாக அமைந்தது.

மாஸ்கோவில் மூன்று நாள் பயணத்திற்கு பிறகு முகமது அலி உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகருக்கு சென்றார். இந்த நகரம் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சார செயல்பாட்டுக்கான முக்கியமான தளம் என்ற முறையில் அங்கு சென்றார். சமர்கண்டில் மிகப் பழமையான கட்டிடங் களையும் ஆய்வகத்தையும் பார்வையிட்டார்.

முகமது அலியின் மாஸ்கோ பயணம் என்பது சோவியத் யூனியனை பற்றியும், அந்த மக்கள் பற்றியும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் சித்தரித்திருந்த தவறான கற்பிதங்களை தவிடுபொடியாக்கியது. சோவியத் யூனியனைப் பற்றிய முகமது அலியின் கருத்துக்கள், உலக மக்களுக்கு உண்மை நிலை என்னவென்று வெளிச்சம் போட்டு காட்டியது.

முகமது அலியை பொறுத்தவரை மாஸ்கோ பயணமும் பிரஷ்நேவ் சந்திப்போம் அவருக்கு மனதளவில் ஊட்டச்சத்தாக வேலை செய்தது. அவரின் குத்துச்சண்டை காலம் முடிவடையும் நேரத்தில், ஓய்வு பெறக்கூடிய காலத்தில் கடந்த காலத்தை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் சோவியத் பயணம் பெரும் புகழையும் வரவேற்பையும் முகமது அலிக்கு பெற்றுக் கொடுத்தது.

ஒரு குத்துச்சண்டை வீரனின் அரசியல் களம் இத்துடன் இருக்கவில்லை விரிவடைந்து கொண்டே சென்றது. ஆனால் அவை ஒரு லட்சிய வாதியின் நேர்கோட்டுப் பாதையில் செல்லவில்லை.

 

ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

சந்திரயான்-3 மூடநம்பிக்கைகளுக்குஎதிரான அறிவியலின்வெற்றி

 

அ.பாக்கியம்




 

இந்திய நாட்டின் விண்வெளி அறிவியல் வெற்றியின் சின்னமான சந்திரயான்-3 நிலவில் நிலைகொண்ட தேதியில் உத்தர பிரதேசத்தில் காவல்துறையினர் பஞ்சாங்கம் பார்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. சந்திரயான்   விண்கலம் நிலவில் இறங்கியதை இந்தியாவே கொண்டாடியது. எப்போதும் அதிகம் ஆட்டம் போடுகின்ற, மூடநம்பிக்கையின் முடைநாற்றம் வீசுகின்ற சனாதனிகள் இதை அடக்கித்தான் வாசிக்கிறார்கள். இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜவின் ஒன்றியஅரசு அமைந்த காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடம் மூடநம்பிக்கைகளை தக்க வைப்பதற்கும், வளர்ப்பதற்குமான முயற்சிகளில்தான் பாஜவும் ஒன்றிய அரசும் அதிகமாக ஈடுபட்டு வருகிறது.

மும்பையில் ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறை, சோதனைக் குழாய் குழந்தை பிறக்கிற முறை, குளோனிங் முறை புராணகாலத்திலே இருந்தது என்று புருடா விட்டார். இதன் தொடர்ச்சியாக பாஜவின் தலைவர்கள் குருஷேத்திரப் போரில் இன்டர்நெட் இருந்தது என்றும், விமானங்கள் பறந்தது என்றும், கட்டுக்கதைகளை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டார்கள். மக்கள் நோயால் பாதிக்கப்பட்ட பொழுது மாட்டு மூத்திரத்தை குடிக்க சொல்லியும், மாட்டுச்சாணத்தை பூசிக்கொள்ளவும் மடமடவென்று ஆலோசனைகளை வணங்கினார்கள். மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் ஜோசியம் பார்த்து விட்டு தான் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற அறிவுரை வழங்கினார்கள். இந்தியா முழுவதும் மூடநம்பிக்கைகளை முழு குத்தகைக்கு எடுத்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் சந்திரயான்-3 வெற்றி உள்ளூர அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். மறுபுறத்தில் இந்த வெற்றி  பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் சாரும் என்று மக்கள் பணத்தில் விளம்பரங்களை அள்ளி வீசி விஞ்ஞானிகளையும் சந்திரயானையும் பின்னுக்கு தள்ளி மோடியை முன் நிறுத்துவார்கள். தாங்கள் வந்த பிற்பாடு தான் இஸ்ரோவே உருவானது போல் வலைதள பொய்களை பொங்க விடுவார்கள்.

இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக இரவு பகலாக உழைத்து ரஷ்யா அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நான்காவதாக நிலவிற்கு விண்கலம் அனுப்பும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒரு நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் தொடர் முயற்சி நாட்டில் விண்வெளி தொழில்நுட்பம் வளர்வதற்கும் முன்னேறுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது.

1920 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் சீசிர் குமார் மித்ரா என்ற விஞ்ஞானி கதிர் இயக்க செயல்பாடுகள் மூலம் விண்வெளி ஆய்வுகளில் நாட்டம் கொண்டார். சர் சி வி ராமன் அவர்களும் அறிவியல் மேதை மேக்னா  போன்றவர்களும் விண்வெளி ஆய்வில் தங்களது பங்கை செலுத்தினார்கள். 1945 ஆம் ஆண்டு தான் ஒருங்கிணைந்த விண்வெளி ஆய்வுகளுக்கான முயற்சிகள் உருவாக்கப்பட்டது. இதே காலத்தில் அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய், மும்பையில் ஹோமி ஜஹாங்கீர் பாபா ஆகியவர்களின் முயற்சியால் விண்வெளி ஆய்வுக்கான அடித்தளங்கள் போடப்பட்டது. 1950 ஆம் ஆண்டு ஹோமி பாபா அவர்களால் அணு ஆற்றல் துறை உருவாக்கப்பட்டது. இந்த வளர்ச்சியை மேலும் துரிப்படுத்தியது. 1957ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வானாய்வு மையம் அமைக்கப்பட்டது. அமெரிக்க தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த வானாய்வு மையம் உருவாக்கப்பட்டது.

1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் முதன்முதலாக ஸ்புட்னிக் விண்கலத்தை செலுத்தி விண்வெளி ராஜ்யத்தை துவங்கி வைத்தது. இதன்பிறகு பல நாடுகளிலும் விண்வெளி ஆய்வை நடத்துவதற்காக ஆர்வமும் உந்து சக்தியும் ஏற்பட்டது. 1962 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி குழு(INCOSPAN) அமைக்கப்பட்டது. இந்த காலம் முழுவதும் நடைபெற்ற விண்வெளி ஆய்வு மைய கட்டமைப்பும் வளர்ச்சியும் ஜவஹர்லால் நேரு அவர்களுடைய அறிவியல் பார்வையின் மூலமாக முன்னெடுக்கப்பட்டது. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக விண்வெளி ஆய்வு மிக அவசியமானது என்பதை அவர் வலியுறுத்தி அதற்கான பணிகளில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாகதான் 1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு என்று சொல்லக்கூடிய இஸ்ரோ உருவானது.

உலகில் புவி சார்ந்த அரசியல் அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் ஒவ்வொரு நாடும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியது. இந்தியாவிற்கும் இந்த நிலைமை உருவான பொழுது 1960 முதல் 1970 ஆம் ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் இந்தியா தனது சொந்த தொழில்நுட்பங்களை வளர்த்துக் கொள்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெறவும் ஆரம்பித்தது. இதே காலத்தில் இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில் அமெரிக்கா விருப்பமில்லாமல் பல இடையூறுகளை செய்ய ஆரம்பித்தது. இந்தப் பின்னணியில் 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்கலமான ஆரியப்பட்டா சோவியத் சோசலிச ஐக்கிய குடியரசின் ஆதரவுடன் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்கா பல நாடுகளை அனுமதிக்கவில்லை. அமெரிக்காவின் ஏவு தளங்களில் இருந்து அனுப்புவதற்கு அதிகபட்சமான கட்டணங்களை வசூல் செய்தது. இந்தப் பின்னணியில்தான் சோவியத் யூனியன் உதவியுடன் இந்தியா ஆரியபட்டாவை அனுப்பியது. மக்கள் சீன குடியரசு விண்வெளி துறையில் வளர்ச்சி பெற்ற பிறகு மிகக் குறைந்த கட்டணத்தில் வளரும் நாடுகளின் விண்கலங்களை அனுப்பியது.

விண்ணுலகம் தன்னுலகம் என்று அமெரிக்கா ஆதிக்கம் செய்ய எடுத்த முயற்சிகள் தகர்ந்து வருவதற்கான சான்றுகளில் ஒன்று தான் இந்திய விஞ்ஞானிகளின் சந்திரயான்-3 வெற்றி.

1980 ஆம் ஆண்டு இஸ்ரோ தனது சொந்த முயற்சியால் ஏவு தளங்களையும் ஏவுகணைகளையும் உருவாக்கி எஸ் எல் வி 3 ஏவுகணைகள் மூலமாக முதல் செயற்கை கோளான ரோகினி செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 1979 முதல் 1983வரை நான்கு விண்கலங்களை அனுப்பியதில் இரண்டு வெற்றி பெற்றது.

2008 ஆம் ஆண்டு பி எஸ் எல் வி என்ற புதிய முறைகள் மூலமாக ஒரே முறையில் 10 துணை விண்கலங்களை அனுப்பி இந்தியா ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது  முதல் முயற்சியாக, 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி11 ராக்கெட் மூலம் ரூ.365 கோடியில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-1 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2009-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 11 அறிவியல் கருவிகளைத் தாங்கி சென்ற சந்திரயான்-1, நிலவில் தண்ணீா் இருப்பதை உறுதி செய்தது.

தொடர்ந்து இஸ்ரோவின் விண்வெளி ஆய்வுகள் முன்னேறிக்கொண்டே இருந்தது. ரூ.604 கோடி செலவில் உருவான சந்திரயான்-2 விண்கலம், எல்.வி.எம். ராக்கெட் மூலம் 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. செப்டம்பர் 6-ம்தேதி நிலவின் மீது அதை இறக்கும் முயற்சியின்போது, தோல்வியடைந்தது.

சந்திரயான்-2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக, தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ம் தேதி எல்.வி.எம். மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம், 18 நாட்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த 7-ந் தேதி லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டது. லேண்டா் சாதனத்தின் மென் தரையிறக்கம், ஆகஸ்ட் 23ம் தேதி (23-8-23) புதன்கிழமை மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த விண்கலம் மூலமாகவும் நிலவில் தரை இறங்கியுள்ள ரோவர் கருவி மூலமாகவும் நிலவில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், லித்தியம், ஹைட்ரஜன் போன்ற கனிமங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து பூமிக்கு தகவல் தெரிவிக்கப்படும். நிலவில் ஆய்வை துவங்கி ரோவர் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கி விட்டது.

இந்த விண்கலம் வெற்றி பெற்றதன் மூலமாக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவும் தனது முக்கிய பங்கை பெற ஆரம்பிக்கும்.

உலக விண்வெளி பொருளாதாரம் 550 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போது 10 முதல் 11 பில்லியன் டாலர்களாக உள்ளது. சந்திரயான் 3 வெற்றியின் மூலம், மேலும் வளம் பெறும்.

2023-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரம் ஏற்கனவே 546 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்று விண்வெளி அறக்கட்டளை தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 91% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2025-க்குள் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும். 2020ல் இது 9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதாவது விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் உலகளாவிய பங்கு தற்போது மிகவும் குறைவாக உள்ளது.

1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் நிலவிலும் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு அமெரிக்காவிற்கு அச்சம் ஏற்பட்டது. எனவே 1960 ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம் (outer space treaty) போடப்பட்டது. பிறகு 1967/1968 1972 1975 1979 ஆகிய ஆண்டுகளில் பல துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியமான சாராம்சம் விண்வெளி என்பது மனித குலத்தின் பொது சொத்து என்று ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என சோவியத் யூனியன் நிபந்தனை வைத்ததின் பெயரில் அந்த சரத்து சேர்க்கப்பட்டது. இதுவரை அப்படித்தான் இருந்தது. தற்போது அமெரிக்கா தனக்குத்தானே ஒரு சட்டத்தை இயற்றி விண்வெளியில் ஆய்வை மேற்கொள்ளலாம் என்று அறிவித்தது. நிலவில் தனியார் விண்கலங்களும் செல்லலாம் என்று தனியார் மயம் ஆக்கியது. நிலவில் இருக்கும் தாது பொருட்களை (குறிப்பாக  ஹீலியம்) கொள்ளை அடிப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசுகள் முயற்சி செய்கின்றன. நிலவு வணிக மயத்திற்கும் தனியார் மயத்திற்கும் ஆளாகிறது.

Deloitte அறிக்கையின்படி, 2013லிருந்து 1,791 நிறுவனங்களில் 272 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் தனியார் பங்கு மூலம் திரட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளி துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலைமை இந்தியாவில் தாராளமாக நடக்கும். ஏற்கனவே அதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு செய்திருக்கிறது. 

இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பை துவங்குகிற பொழுது அதனுடைய நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் நாட்டு நலன்களுக்கு பயன்படுத்துவதற்குமான முறையில் செயல்படுவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் நாட்டு நலனை புறக்கணித்து தனியார்களின் வணிக மயத்தை நோக்கி தள்ளி விடுவதும் மக்கள் வஞ்சிக்கப்படுவதும் நடக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. 

இந்திய விஞ்ஞானிகளின் சரித்திர சாதனையை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் அதே நேரத்தில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவியல் துறையை ஏதாவது ஒரு வடிவத்தில் மூட நம்பிக்கை அமைப்புக்குள் திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. விண்கலம் மாதிரி களையும் ஏவுகணை மாதிரிகளையும் உருவாக்கி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் செல்லக்கூடிய செயல்களை எல்லாம் ஊக்குவிக்க கூடிய பணிகளும் நடைபெறுகிறது. எனவேதான் ஒன்றிய அரசின் மூட நம்பிக்கையில் இந்திய மக்களை மூழ்கடிப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு எதிராக மிகப் பெரிய சவாலாகவும் வெற்றியாகவும் தான் சந்திரன்யான் விண்கலத்தில் பயணம் தொடங்கி இருக்கிறது. இது முற்போக்கு சக்திகளின் முன்னேற்றத்திற்கான பாதையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

அ.பாக்கியம்

எழுத்தாளர்

arubakkiyam@gmail.com.

எதிரொலி

வெளியீடு செப்டெம்பர் 23

 

 

 

 










 

 

பொது சிவில் சட்டம்: பாஜவின் பிளவு அரசியல்

 

அ.பாக்கியம்

பொது சிவில் சட்ட பிரச்சனையும் மணிப்பூர் கலவரமும் இந்திய சமுதாயத்தில் பெருமளவு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பொது சிவில் சட்டம் பற்றி பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும் தற்போது, பொது சிவில் சட்டத்தை அமலாக்க தீவிர முயற்சி மேற்கொள்வதற்கான காரணம் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல்தான் என்பதை அனைவரும் அறிவார்கள். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியும்,  வாக்கு சதவீதம் குறைந்து இருப்பதும் பாஜவிற்கு ஒரு அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. மறுபுறத்தில், வரலாறு காணாத விலை உயர்வும், வேலை இல்லா திண்டாட்டமும், விவசாயிகள் சந்திக்கும்  நெருக்கடிகளும் மோடி அரசின் மீதான அதிருப்தியை மக்களிடம் அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வாக்குவங்கி அரசியலுக்கு வாழ்க்கைப்பட்ட பாஜ, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பிளவு அரசியலை அதாவது பொது சிவில் சட்டம் என்ற பிரச்னையை தீவிரமாக கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே கையிலெடுத்த ராமர் கோவில் விவகாரம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்து விட்டதால், வாக்கு வங்கி அரசியலுக்காக பொது சிவில் சட்டம் பாஜவிற்கு தேவைப்படுகிறது. நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கொடூரத்தை எதிர்க் கட்சிகள் கிளப்பி வருகின்றன.

இந்தக் கூட்டத் தொடரில் 31க்கும் மேற்பட்ட சட்டவரைவுகள் முன்மொழி யப்பட்டிருந்தாலும், பொது சிவில் சட்டம் தொடர்பான முன்மொழிவு இல்லை. அதற்கு காரணம் இந்த பிரச்சனையை தேசம் தழுவிய விவாதமாக மாற்றி இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வை பரவலாக கொண்டு செல்வதற்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.  பாஜவின் இந்த பிளவு அரசியலுக்கான நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை என்றால் தடாலடியாக நாடாளு மன்றத்தில் முன்னறிவிப்பின்றி பொது சிவில் சட்டத்தை நிறைவேற்று வதற்கும் வாய்ப்பு உள்ளது. 2024 பொதுத்தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று (மத) வெறி பிடித்து அலைகிறது பாஜக.

சட்ட ஆணையத்தை சரி கட்டியது:

2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொது சிவில் சட்டம் தொடர்பான அம்சங்களை குறித்து ஆய்வு செய்யுமாறு 21 வது சட்ட ஆணையத்திற்கு உத்திரவிட்டது. அந்த சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் இப்போது தேவையும் இல்லை விரும்பத்தக்கதும் அல்ல என்கிற முடிவோடு, இருக்கிற சட்டங்களில் சிறிது சிறிதாக மாற்றங்களை கொண்டு வரலாம் என்று பரிந்துரைத்தது. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் முடிந்தது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆவது சட்ட ஆணை யத்தை மோடி அரசு அமைத்தது. இதற்கான பதவி காலம் மூன்றாண்டு என அறிவிக்கப்பட்டது. 

இந்த சட்ட ஆணையம் காலாவதியாவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பாக ஒன்றிய அரசு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி என்பவரை ஆணையத்தின் தலைவராகவும், நீதிபதி.கே.டி.சங்கரன், பேராசிரியர்கள் ஆனந்த் பலிவால், டி. பி. வர்மா,  ராகா ஆரியா, கருணாநிதி ஆகிய ஐந்து உறுப்பினர்களை நியமித்தது. இந்த ஆணையமதான் தற்போது பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும், மத அமைப்புகளிடமும் கருத்து கேட்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

இதே காலகட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி 2022 ஆம் ஆண்டு பொது சிவில் சட்டம் உருவாக்குவ தற்கான நிபுணர்குழுவை அறிவித்தார். வரைவு அறிக்கை தயாரிக்க நீதிபதிகளையும் நியமித்தார். இதற்காக பொதுமக்களிடம் இருந்து கடிதங்களை பெற்றனர். இமாச்சலப் பிரதேச மாநில அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு ஒன்றை நியமித்து உள்ளது. குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் பொதுசிவில் சட்டத்திற்காக குழு ஒன்றை அமைக்க பரிந்துரைத்துள்ளார்.

அதே நேரத்தில் பாஜ மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா என்பவர் 2020 ஆம் ஆண்டு பொது சிவில் சட்டம் குறித்த தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றொரு பாஜ உறுப்பினர் ராகேஷ்சின்ஹா தனிநபர்சட்ட மசோதாவை முன்மொழிந் திருந்தார் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பொது சிவில் சட்டம் விவகாரத்தை 22வது சட்ட ஆணையம் பரிசீலிக்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

உள்துறை அமைச்சர் அமித்ஷா மதசார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது. பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்தார். ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் அரசியல் அமைப்பு சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது என்று பேசியிருக்கிறார். இந்தியாவில் எத்தனை கொடூரங்கள் நடந்தாலும் வாய் திறக்காமல் மௌன சாமியாராகவே வலம் வரும் பிரதமர் மோடி,  சமீபத்தில் திருவாய் மலர்ந்தார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு சட்டமும் மற்றொருவருக்கு வேறு சட்டமும் இருந்தால் அந்த குடும்பம் சரியாக செயல்பட முடியுமா? இப்படிப்பட்ட இரட்டை அமைப்புடன் ஒரு நாடு எப்படி இயங்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இவை அனைத்தும் 22 ஆம் ஆண்டில் இருந்து தீவிரப்படுத்தப்படுவதில் இருந்தே, பொது சிவில் சட்டத்தை தேர்தலுக்கான ஒரு கருவியாக பாஜ முன்னெடுக்கிறது என்பதை நன்கு உணர்த்துகிறது.

இந்தியாவில் பொதுவான சட்டங்கள் இல்லையா?

இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு தனிசட்டம் இருக்கிறது. அவர்கள் எத்தனை மனைவி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்; எத்தனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இதனால் இந்தியாவில் இந்துக்களுக்கு ஆபத்து. தேசஒற்றுமைக்கு ஆபத்து என்று பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பாஜ பிரச்சாரம் செய்கிறது. பாஜ செய்கின்ற பிரச்சாரத்தின் மூலம் இஸ்லாமியர்கள் ஒரு பக்கமாக அணி திரளுவார்கள். இதனால் இந்துக்கள் தானாகவே வேறுபக்கம் அணி திரளுவார்கள். அது பாஜ மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர துணை புரியும் என்று பாஜ எண்ணுகிறது. இந்த நோக்கத்தோடு பொது சிவில் சட்ட பிரச்சாரத்தை பிளவு அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒருசில விஷயங்களைத் தவிர பெரும்பாலும் எல்லோ ருக்கும் பொதுவான சட்டங்கள்தான் இருக்கின்றன. உரிமை இயல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சி சட்டம், ஒப்பந்தச் சட்டம், மாற்றுமுறை ஆவணச் சட்டம், பொருட்கள் விற்பனை சட்டம், சொத்து உரிமை மாற்று சட்டம்,  சிறப்பு திருமண சட்டம் 1954, வரதட்சணை தடுப்புச் சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் போன்றவைகள் மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்துவதாகவே உள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 125 கைவிடப்பட்ட மனைவியரின் ஜீவனாம்சத்திற்கு பயன்படுத்தப்படும் பொது சிவில் சட்டமாகவே இருக்கிறது. இந்த 125 ஆவது பிரிவின்படிதான் 1985ஆம் ஆண்டு ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

மேற்கண்டவை தவிர திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, வாரிசு உரிமை, தத்தெடுத்தல், பராமரிப்பு, கூட்டு குடும்ப பாகப்பிரிவினை, பழங்குடி மக்களிடம் இருக்கக்கூடிய வெவ்வேறு வகையான மாறுபட்ட பழக்கவழக்கங்கள் இவை அனைத்தும் எழுதப்படாத சட்ட திட்டங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அரசியல் சட்டத்தில் உள்ளடங்காத இந்து திருமண சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம் போன்ற சட்டங்களும் பொது சிவில் சட்டத்தில் அடங்காதவை. 

நேருவும் அம்பேத்கரும் பொது சிவில் சட்டமும்:

ஜவஹர்லால் நேருவும் டாக்டர் அம்பேத்கரும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சித்தார்கள். அதைத்தான் நாங்கள் இப்பொழுது செய்கிறோம் என்று பாஜக கூறுகிறது. அரசியல் சட்ட வழிகாட்டுதல் பிரிவு 44 இந்தியா முழுவதற்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இந்திய அரசு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. நேருவும் அம்பேத்கரும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு உயரிய நோக்கம் இருந்தது. அவர்கள் மதசார்பற்ற தன்மையுடனும்  நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் சமூகத்தில் முன்னேற்றத்தை கொண்டு வரவும் பொது சிவில் சட்டம் பற்றி சிந்தித்தார்கள். நேருவின் விருப்பத்தின்படி அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக முன்மொழிந்தார்.

பாலியல் சமத்துவமின்மை, சொத்து உறவுகளில் சமத்துவமற்ற நிலை, பிற்போக்குத்தனமான பழக்கவழக்கங்கள் இவை அனைத்தையும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒரு மதசார்பற்ற நாட்டின் சட்டங்கள் அனைத்தும் மதங்களிடமிருந்து பிரித்தே வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சட்ட முன் வரைவு முன்வைக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் வல்லபாய் பட்டேல் அவர்களும், இஸ்லாமிய தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். 

அரசியல் அமைப்பின் நிர்ணயசபை கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரதமர் ஜவஹர்லால் நேரு தற்போதைய தருணத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றுவதற்கான காலம் கனிந்திருப்பதாக நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார். முன்மொழிவு திரும்ப பெறப்பட்டது. வழிகாட்டுதல் நெறிமுறையில் பொது சிவில் சட்டம் இயற்றுவதற்கான கருத்தை சேர்த்தனர். சட்டங்கள் இயற்றுவதற்கு மதங்கள் குறுக்கிடும் போக்கை புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் அம்பேத்கர். இருந்தாலும் நேரு, பல்வேறு இந்து சட்டங்களை இணைத்து இந்து சட்டம் (Hindu Code Bill) என்பதை நிறைவேற்ற முயற்சி செய்தார். அப்போதைய பாரதிய ஜன சங்க கட்சியின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி மேற்படி சட்டம் இந்துக்கள் புனிதமாக கருதும் திருமணங்களை தகர்த்து விடும் என்று சொல்லி அதனை கடுமையாக எதிர்த்தார். ஒருவேளை எதிர்ப்புகளை மீறி இந்து சட்டம் ஒன்றை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றால்  தேவைப்படுகிறவர்கள் மட்டும் அதனை தெரிவு செய்து கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று பேசினார். 

அவ்வாறு தனிநபர்கள் தெரிவு செய்து கொள்ள அனுமதித்தால் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரம் கேலிக்கூத்தாக மாறிவிடும் என்று அம்பேத்கர் அவற்றை எதிர்த்தார். இந்து சமூகம் சூத்திரர்களையும் பெண்களையும் அடிமைப்படுத்தும் சமூக கட்டமைப்பை கைவிடாது என்று சொன்ன அவர், அவர்களை மீட்டு சமூகம் முன்னேறி செல்வதற்கு மேற்படி இந்து சட்டம் தேவை என்று வாதிட்டார். ஆனாலும் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த சீர்திருத்தங்களை காங்கிரசின் தலைமை ஆதரிக் காததால் 1951 ஆம் ஆண்டு  அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இருந்தாலும் நேரு அவர்கள் தொடர்ந்து சில முயற்சிகளை மேற்கொண் டார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் உட்பட பலபிற்போக்காளர்களின்  கடுமையான எதிர்ப்புகளையும் மீறி 1954 ஆம் ஆண்டு இந்து சட்டத்தை நேரு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு இந்து திருமண சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்சம் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றினார். 

இந்துத்துவா சட்டத்துக்குள் பொது சிவில் சட்டம்:

இன்றைய தினம் பாஜ கொண்டுவர நினைப்பது இந்து சனாதன சட்டத்துக்கு உட்பட்ட பொது சிவில் சட்டமாகும். இந்து மதத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை வர்ணாசிரம சாதிய முறைகளை அப்படியே வைத்துக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டம் இயற்ற முயற்சிக்கிறது. இவர்கள் பிற்போக்குத்தனத்தை, மூட பழக்க வழக்கத்தை, இந்தியாவில் கட்டமைத்துக்கொண்டு, மதம் சார்ந்த சட்டங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, மதச்சார்பற்ற வேடம் போட்டு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

1996 ஆம் ஆண்டு வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று பேசினார். இஸ்லாமிய திருமண சடங்குகளில் மணமுறிவு பற்றி பேசுவதை பாராட்டிய பொழுது அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த நரசிம்மராவ் இந்து மதத்தில் இருக்கக்கூடிய பல வடிவங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பாரதிய ஜனதா கட்சி எப்படி பார்க்கிறது என்று கேள்வி எழுப்பினார். பொது சிவில் சட்டம் என்பது பழங்குடி மக்களும், பலசிறுபான்மை மக்களும் இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவை இந்துத்துவா பொது சிவில் சட்டமாக மாறுகிறது என்பதால் மட்டுமே.

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல… சீக்கியர்களின் சிரோமணி குருத் வாரா பிரபந்த கமிட்டி, சிரோமணி அகாலிதளம் கட்சி பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் வாழும் சுமார் 250க்கும் மேற்பட்ட இன குழுக்கள் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் தீவிரமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் எண்ணற்ற குழுக்கள் எதிர்ப்புகளை தெரிவித் துள்ளன. 

பெரும்பான்மை சமூகத்தை சிறுபான்மை சமூகத்தோடு மோத விட்டு மணிப்பூரை பற்றி எரியச் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன ஒன்றிய மோடி மற்றும் மணிப்பூர் அரசுகள். ஊழல், விலை உயர்வு, வேலையின்மை, வறுமை என நாடு கடுமையான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க பெண்களும், சிறுபான்மையினரும், தலித்துகளும் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்த்தபாடில்லை. பாஜ ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒரே குறிக்கோளுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதனால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்று பயந்து போன பாஜ, பொது சிவில் சட்டம் என்ற பிளவு அரசியலை கையிலெடுத்து இந்துக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையில் சிண்டு முடிந்து, கலவரத் தீயை மூட்டி குளிர்காயப் பார்க்கிறது.

 

அ.பாக்கியம்

எழுத்தாளர்

arubakkiyam@gmail.com.

எதிரொலி

வெளியீடு ஆகஸ்ட் 23

 

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...