Pages

ஞாயிறு, மே 11, 2025

ஆசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ‘‘சீன பண்புகள்’’


(கடந்த மே 4ம் தேதி, சோசலிசம்:சீன பண்புகள் புத்தகத்தை சிந்தன் புக்ஸ் லீலாவதி அரங்கில் வெளியிட்டு நான் ஆற்றிய உரையின் சுருக்கம்.)

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் வணக்கம். 

சீனா தொடர்பான இன்றைய காலத்தின் தேவையை முன்வைத்து சிந்தன் புக்ஸ் இந்த புத்தகத்தை வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து சீனா குறித்த சில புத்தகங்களையும் கொண்டு வர இருப்பதும் வரவேற்கத்தக்கது. 

இந்தப் புத்தகத்தில் 280 பக்கம் உள்ளது. சீன ஜனாதிபதி, கட்சியின் பொதுச்செயலாளர் ஜி ஜின் பிங் உரைகள் 184 பக்கங்கள் உள்ளன. மீதமுள்ள 100 பக்கங்கள் பிரபல பேராசிரியர் ரோலண்ட் போயர் என்பவர் எழுதியபுத்தகத்தின் சுருக்கமான தொகுப்பாகும். இந்தப் புத்தகத்தை தோழர்கள் மாதவ், சுகுமார், சிவரஞ்சனி ஆகியோர் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். 

புத்தகத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்பாக சீனா தொடர்பான சில பொதுவான தகவல்களை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வெற்றி ரகசியத்தை சீன நாட்டின் தலைவர்களில் ஒருவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிசம் லெனிசம் மற்றும் மாவோ சிந்தனைகளை கடைப்பிடிப்பதும்,மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதும்,கட்சியில் அனுபவம் வாய்ந்த தேசபக்த அறிவிஜீவிகள் நிறைந்திருப்பதும் மட்டுமே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு காரணமல்ல. அதைவிட முக்கியமான அம்சம்என்னவென்றால் சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் எடுத்த முடிவுகளில் தவறு இருந்தால், அதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதோடு, திருத்திக் கொள்வதற்கு தயக்கமே காட்டுவதில்லை. அதன் விளைவாகத்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக  டெங் ஷியோ பிங் காலத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் இரு முறை என்று மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. எந்தவிதமான சமரசம் இன்றி அமல்படுத்தி வந்தார்கள். 2012 ஆம் ஆண்டு ஜி ஜின் பிங் பொறுப்புக்கு வந்த பிறகு இன்றைய உலக சூழலில் தலைமையின் தொடர்ச்சி தேவைப்படுகிறது என்பதை மக்கள் முன்னாலும் கட்சியின் அகில இந்திய காங்கிரசிலும் முன்வைத்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டு அமல்படுத்தினார்கள். பொறுப்பில் நீடிப்பதற்கு வேறு எந்த விதமான குறுக்கு வழியையும் கடைபிடிக்கவில்லை.உலகிலேயே தனது முடிவுகளிலும் அதன் அமலாக்கத்தில் இருக்கக்கூடிய தவறுகளை பகிரங்கமாக பட்டியல் போட்டு அறிவித்து அதை ஏற்றுக்கொண்டு நிவர்த்தி செய்து அதில் கிடைத்திருக்கக்கூடிய சாதக பாதக அம்சங்களைஉலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.கட்சியை நடத்துவதிலும், கட்சியை வளர்த்து மக்களின்வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டிருப்பதற்கும் கண் முன் உள்ள உதாரணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.

மார்க்சியம் லெனினியம் மற்றும் மாவோ சிந்தனைகள் என்று சீன நாட்டுக்கு தேவையான தலைவர்களின் சிந்தனை முறைகளையும் இணைத்தார்கள். மாவோவின் மறைவுக்கு பிறகு மிகப் பெரும் பங்காற்றிய தலைவர்களின் தனித்துவத்தையும் இணைத்துக் கொண்டே வருகிறார்கள். இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரியங்களில் ஒன்றாகவே இருக்கிறது. மார்க்சிய லெனினியசித்தாந்தங்களை சீனாவின் சூழலுக்கு ஏற்ப பொருத்திக் கொள்வதில் மேற்சொன்ன தலைவர்களின் சிந்தனைகள் முக்கிய பங்காற்றுகிறது.  சீன விடுதலைப் போராட்டத்தில் களத்தில் நின்று தலைமை தாங்கிய பெரும் தலைவர்களை சீன பாமர மக்களும் நன்கு அறிவார்கள். எனவே அவர்களின்பண்போடு, சோசலிசத்திற்கான பாதையை இணைத்தார்கள். இது சீனாவில் மட்டுமல்ல கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் இந்த பண்புகளை பார்க்கலாம். இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழகத்தில் கூட தோழர் சிங்காரவேலர் சிந்தனை சிற்பியாக மட்டுமல்ல அடித்தள மக்கள்,தொழிலாளர்கள், சட்டம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டவர். அவரை முன்னிறுத்தி இணைக்கப்படவில்லை. தோழர் சங்கரய்யா அவர்கள் பேசுகிற கூட்டத்தில் சிங்கார வேலரை இணைக்காமல் அவருடைய பேச்சை முடித்ததில்லை என்பதை தவிர குறிப்பிட்டு சொல்கிறபடி எதுவும் இல்லை. கடந்த 2015ம் ஆண்டு தென்சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு நடத்தப்பட்டபோது சிங்காரவேலர்,பி.ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், வி.பி.சிந்தன் ஆகிய நான்கு தலைவர்களின் அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆசிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளில் இதுபோன்ற அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன்.

இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில் இன்றைய ஜனாதிபதி ஜி ஜின் பிங், சீனா ஐந்தாயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட நாகரிகம் என்பதை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இவர் மட்டுமல்ல இதற்கு முந்தைய தலைவர்களும் அதை வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் பிற நாகரிகங்களில் இருந்து சீனா பல அம்சங்களில் மாறுபட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.தற்பொழுது நான் தமிழ் மார்க்ஸ் இணையதளத்தில் எழுதி வருகின்ற தொடரில் இதைப் பற்றி விரிவாக குறிப்பிட்டு உள்ளேன். 

சீன விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தை தனித்துவமான முறையில் அதாவது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற முறைகளில் இருந்து மாறுபட்டது என்பதை முன்வைத்து, அதன் மீது வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசேதுங் அறைகூவல் விடுத்தார். காரணம் வேறு எங்கும் இல்லாத அளவில் சீனாவில் விவசாயிகளின் எழுச்சியும், கிளர்ச்சியும் நடைபெற்றுள்ளது. இதனால் பெரும் பேரரசுகளின் மகுடங்கள் மாண்டு போனது மட்டுமல்ல, பல கோடி விவசாய பெருங்குடி மக்கள் மரணமடைந்த ஒரு வர்க்கப் போராட்டமாகவே இதை கருத வேண்டும் என்று கூறினார். கடைசியாக நடைபெற்ற தைப்பிங் விவசாயிகளின் எழுச்சியில் 2 கோடி பேர் மரணமடைந்தார்கள். 

இதை நான் குறிப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால், புரட்சி வெற்றி பெற்ற சோசலிச நாடுகளைப் பற்றி படிக்கக் கூடியவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயல்பாடுகளில் இருந்துதான் படிக்கத் தொடங்குகிறார்கள். இது இடதுசாரி கட்சி ஊழியர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு முந்தைய சமூக அமைப்புகள் அனைத்தும் பிற்போக்குத்தனமானது, தேவையற்றது என்ற கருத்தும்உள்ளது. இது ஒரு இயங்கியல் பார்வையாகாது. நானும் அப்படித்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். சீன வரலாற்றை அதன் நாகரீகத் தோற்றத்திலிருந்து வாசிக்கும் பொழுது ஏற்படக்கூடிய மாற்றங்களிலிருந்து பல விஷயங்களை அறிய முடிகிறது. இந்தப் பின்னணியோடு புரட்சி வெற்றி பெற்றதும், அதன் பிறகு இப்பொழுது நடக்கக்கூடிய மாற்றங்களையும் வெற்றியோ தோல்வியோ இரண்டையும் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்று பார்வை அவசியமாகிறது.

இந்த புத்தகத்தின் முதல் பகுதியில் (அதாவது 180பக்கங்களில்) இன்றைய சீன ஜனாதிபதியின் உரைகள்,நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசியவைகள்,விமர்சன சுயவிமர்சன பார்வையில் இதை அவர் முன் வைத்துள்ளார். புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் உள்ள பேராசிரியர் ரோலண்ட் போயரின் நூலில் 12 துணை தலைப்புகள் உள்ளன. 

முதல் பிரிவில் சீனாவின் சிறப்பு திறனாக மார்க்சிய தத்துவம் உள்ளது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். சீனா, சோசலிச நாடு என்றும், சோசலிச நாடு இல்லை, முதலாளித்துவ நாடு என்றும் பரவலான விவாதம் நடந்து கொண்டு வருகிற பொழுது சீனா, சோசலிச பாதையில் செல்லும் நாடு என்று பொருத்தமாக எழுதியுள்ளார். சிந்தனைக்கு பொருந்தும் தத்துவார்த்தஅமைப்பாக இயங்கியல் பொருள்முதல் வாதமும், ஒரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்வதற்கு வரலாற்று இயல் பொருள் முதல் வாதமும் உள்ளது. வரலாற்று இயல்பொருள்முதல் வாதத்தையும் மார்க்சியத்தையும் சீன சூழலுக்கு ஏற்ப எவ்வாறு அமல்படுத்துகிறோம் என்பது வலியுறுத்தப்படுகிறது. இந்த அமலாக்கத்தின் வெளிப்பாடாக சீன மார்க்சிய அனுபவத்தை உலகம் அறிந்திட செய்ய வேண்டும் என்று ஜி ஜின் பிங் வலியுறுத்துகிறார். 

இரண்டாவது பிரிவில் டெங் ஷியோ பிங் சிந்தனையை விடுவித்தல் என்ற செயலை வலியுறுத்துகிறார். நாம் மார்க்சிய வாதிகள் எனும்போது மற்ற சித்தாந்தங்களைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதுஉண்டு. இந்த கேள்விக்கு டெங் ஷியோ பிங் சம்மட்டி அடி கொடுக்கிறார். ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் மற்றும் அரசியல் பாதையை பின்பற்றினால் சிந்தனை எப்படி விடுதலை அடையும் என்று கேள்விகள் எழும். சீன மார்க்சியத்தை பொறுத்தவரை இது அல்லது அது என்று இரண்டில் ஒன்றை முடிவு செய்வது அல்ல. சிந்தனையை விடுவித்தல் என்ற பாதையை முன் வைக்கிற பொழுது தன் மூளையை ஆக்கபூர்வமான ஈடுபாட்டுடன் இயங்க வைப்பது மூலமாகத்தான் சிந்தனையை விடுவிக்க முடியும். அதாவது சிந்தனையை சூழலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். சோசலிசத்திற்கான சிந்தனை சுதந்திரம். கட்டமைப்பிற்கு தேவையான புதுமைகளுக்கான சுதந்திரம். சிந்தனையை விடுவித்தல் என்பது புதுமையை உந்துதல் ஆகும். புதிய சிந்தனைகள் புதிய வழிமுறைகளின் உருவாக்கம். சோசலிச அமைப்புகளை சீர்திருத்தம் செய்வதற்கு, திறந்து விடுதல், உற்பத்தி சக்திகளை விடுவிப்பது, சந்தை நிறுவனங்களை வளர்ச்சி அடைய செய்வது என்ற உறுதியான திட்டங்களுடன் சிந்தனை விடுவித்தலை இணைத்துப் பார்க்க வேண்டும் என்று டெங் ஷியோ பிங் முன்வைக்கிறார். மார்க்சிய சூத்திரங்களுக்குள் அடங்கிக் கிடந்து சிந்தனைகளை சிறைபிடித்து விட்டுசெயல்பட்டால் சூழல்களை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது. 

மூன்றாவது பிரிவில், மார்க்சிய தத்துவத்தில் எதிர்மறைகளும் முரண்பாடுகளும் ஒரு கோட்பாடு ஆகும்.இதை எவ்வாறு சீன சமூகத்திற்கு பொருத்துகிறார்கள் என்பது தான் இந்த பிரிவின் செய்தி. எதிர்மறைகளும் முரண்பாடும் ஒன்று அல்ல சோசலிசத்தில் எதிர்மறைகள் மறைந்துவிடும் முரண்பாடு நீடிக்கும் என்பதை லெனின் எடுத்துரைக்கிறார். சீனாவில் வெவ்வேறு காலகட்டங்களில் முன்னுக்கு வந்த முரண்பாடுகளைப் பற்றி இந்தப் பகுதி விவரிக்கிறது. 

ஒருவேளை வளர்ச்சி அடைந்த சோசலிச சமூகத்தில் முரண்பாடு... (உற்பத்தி சக்தி-உற்பத்தி உறவு, உற்பத்திதேவை-தொழில்நுட்ப வளர்ச்சி....) இல்லையானால் சோசலிசத்தின் வளர்ச்சி சாத்தியமற்றதாக இருக்கும்.இதனால் தேக்க நிலை ஏற்படும். எனவே சோசலிசத்தில் உள்முரண்பாடுகளின் ஒழுங்கு ஒரு கட்டத்தில் மற்றொரு உயர்ந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். முரண்பாடுகளை சரியாக கையாண்டு தீர்வு காணும் இடைவிடாத செயல்முறைகளின் மூலம் சோசலிச சமூகம் மேலும் ஐக்கியப்பட்டு, மேலும் உறுதிப்பட்டு வளர்கிறது என்று மாவோ எழுதுகிறார். 

மாவோ புறக்காரணங்களின் பங்கையோ அகம்புறம்இயங்கியலையோ மறுக்கவில்லை. பண்பு மாற்றத்தின் அவசியத்தை உள்காரணிகளே தீர்மானிக்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். இதை வெளிக்காரணிகள் தீர்மானிக்கவில்லை என்பதையும் வலியுறுத்துகிறார். இது சீன சமூகத்தில் சோசலிசத்தை நிர்மாணிப்பதில் மார்க்சிய பார்வையின் அடிப்படையில் வரக்கூடிய முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிகாட்டியாகும். ஏற்படக்கூடிய தோல்விகளுக்கும்,நெருக்கடிகளுக்கும் மற்றவர்கள் மீது காரணங்களை சுமத்தி விட்டு உள்காரணிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது அழிவுக்கு வழிவகுக்கும். 

இதனால்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டெங் ஷியோ பிங் சீர்திருத்தத்தை ஆரம்பிக்கிற பொழுது அககாரணிகளை முதலில் நாம் கவனத்தில் கொண்டு தீர்க்க வேண்டும் என்று முதன்மைப்படுத்துகிறார். நமது செயல்பாட்டில் வெற்றி, தோல்விகள், போராட்டங்கள் அனைத்திற்கும் உள்காரணிகளை பரிசீலிப்பதுஅடிப்படையானது. புறக்காரணிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ளக்கூடிய செயல் அழிவு பாதை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்கள்.

நான்காவது பிரிவில் சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். சீர்திருத்தம் குறித்து மார்க்சிய அடிப்படையை விளக்குகிறார்கள். சீர்திருத்தத்திற்கு புரட்சியுடன் இருக்கும் உறவை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் இதற்கான விடை காணப்படுகிறது. அனைத்தும் புரட்சியினால் மாறிவிடும் என்ற கருத்தும், படிப்படியான சீர்திருத்தத்தினால் மட்டும்தான் புரட்சி ஏற்படும் என்ற கருத்தும் இருக்கிறது. சீர்திருத்தம் என்பது பாட்டாளி வர்க்க புரட்சிக்குப் பிறகு மிகவும் அவசியமானது. எந்த அளவிற்கு என்றால் சீர்திருத்தம் புரட்சிகர செயல் முறையில் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்று லெனின் அவர்களின் கருத்துக்களை இந்த பிரிவில் முன்வைத்து விளக்குகிறார்கள். சீர்திருத்தங்களின் வரலாறுகள் இந்த பிரிவில் கொண்டுவரப்படுகிறது. சீர்திருத்தம் ஆரம்பித்து பத்து ஆண்டுகளில் 1990களில் கடும் நெருக்கடிகளை சந்தித்தார்கள். இதற்கு "90-ன் நெருக்கடி" என்று பெயர். இதை பரிசீலனை செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, எழுந்த முரண்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு சீர்திருத்தத்தை கைவிடுவதில்லை ஆழப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததுடன் சுயசார்பு, இரட்டை சுழற்சி முறை போன்ற கொள்கைகளை உருவாக்கினார்கள். 

ஐந்தாவது பகுதியில் திட்டமிடலும், சந்தையும் பற்றிய அணுகுமுறை துல்லியமாக விளக்கப்பட்டுள்ளது. சந்தை என்பது எல்லா காலத்திலும் இருந்தது. முதலாளித்துவ சமூகத்தில் மட்டுமே சந்தை இருந்ததாக சொல்வது தவறு. சில சந்தைகள் இந்தப் பகுதியில் சுட்டிக் காட்டப்படுகிறது.சந்தை பொருளாதாரம் என்பதை முதலாளித்துவத்தால்மட்டும் வரையறுக்கப்பட்டது என்று சொல்ல முடியாது.அதேபோல் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிச அமைப்புக்கு மறு பெயர் அல்ல. சந்தை பொருளாதாரம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு என்ற மாயை நிலவுகிறது. சீனா சந்தைப் பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரம் இரண்டு வடிவங்களையும் கொண்டுள்ளது. சந்தை பொருளாதாரத்தின் நிறுவன வடிவம் உற்பத்தி சக்திகளையும், உறவுகளையும் ஒழுங்கமைக்கிறது. திட்டமிட்ட பொருளாதாரம் வளங்களை ஒதுக்குவதும்,சரக்குகளை விநியோகிப்பதிலும், மதிப்பு விதிகள்,விலைகளின் போட்டிகள் போன்றவற்றிலும் திட்டமிட்ட பொருளாதாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது பற்றிய ஆழமான விளக்கம் புத்தகத்தில் உள்ளது. 

ஆறாவது பகுதியில் நவீன மயம் குறித்த அணுகுமுறைகள் உள்ளது. விவசாயம், தொழில் துறை,தேசிய பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்ஆகியவற்றை நவீன மயமாக்குவது என்ற கொள்கை மாவோ காலத்தில் உருவாக்கப்பட்டாலும் டெங் ஷியோ பிங் காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கொள்கையாக மாற்றப்பட்டது. இந்த செயல்பாட்டின் மூலம் 2021 இல் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டது.சூழலியலில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. கோவிட்(கொரோனா தொற்று) போன்ற அபாயங்களை எதிர்கொண்டு முறியடித்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. 

ஏழாவது பகுதியில் சோஷலிச ஜனநாயகம் பேசப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லை. ஜனநாயகம் என்பதன் வடிவம் மட்டும்தான் உள்ளது. அதில் மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகம்,வாக்களிப்பதற்காக மட்டுமே என்று சுருக்கப்பட்டுள்ளது.சீனாவில் செயல்பாட்டு ஜனநாயகம் உள்ளது. இங்கு ஏழு வகையான ஜனநாயக செயல்முறைகள் கடைபிடிக்கப்படுவது விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் முறைகளும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. 

எட்டாவது பகுதியில் மனித உரிமை குறித்த மார்க்சிய அணுகுமுறை அடிப்படையானது. மேற்கத்திய இறையாண்மை என்பது மற்ற நாடுகளை காலனி படுத்திய இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டது. சீனாவோ காலனித்துவத்தை எதிர்க்கும் மரபுகளைக் கொண்ட இறையாண்மையை தன்னிடம் கொண்டுள்ளது. எனவே சீனாவின் அடிப்படை மனித உரிமை என்பது, சமூக பொருளாதார நல்வாழ்வு உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது. சித்தாந்த அடிப்படையில் இதுதான் சீனா கடைபிடித்து வருகிறது. 

ஒன்பதாவது பகுதியில் சிறுபான்மை தேசியஇனங்களின் கொள்கை விளக்கப்படுகிறது. சீனாவில் மாநிலங்கள் உட்பட மொத்தம் 160 தன்னாட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கி உள்ளது. 56 தேசிய இனங்கள் உள்ளன. தேசிய இனம் என்பது இனத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. பண்பாடு, பிரதேசம்,பொதுமை, மதம் அல்லது அடையாளம் போன்ற பல காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நான்கு விதமான கொள்கைகள் இந்த பிரிவில் விளக்கப்படுகிறது. கல்வியில் உள்ளூர் தேசிய இன மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தேசிய மொழிகளையும் கற்றுக் கொடுப்பது,சிறுபான்மை மக்களின் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பராமரிப்பது போன்றவைகள் இந்த கொள்கைகள் ஆகும். நவ ஏகாதிபத்திய சக்திகள் சீனாவிற்குள் தைவான், திபெத், ஜின்ஜியாங், ஹாங்காங் போன்ற பகுதிகளில் சீர்குலைவை செய்ய முயற்சிக்கிறார்கள். இதுதான் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்ஆகும். இவற்றை சீனா வெற்றி கொண்டு வருவதையும் குறிப்பிடுகிறார்கள்.

மிக அடிப்படையானது சீன தேசிய இனங்கள் பின்தங்கிய நிலைமையை மாற்றுவது. அந்தப் பகுதியில் மேம்பாட்டு திட்டங்களை அமலாக்கி வளர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது முக்கிய அம்சமாகும். இதனால் அவர்கள் சீனாவின் பொது சமூகத்தோடு இணைந்திருக்கிறார்கள். தேசிய இனங்களை நிர்வகிக்கிற பொழுது அதிக தன்னாட்சி, அதிக ஒற்றுமை, அதிக பொருளாதார முன்னுரிமை கொள்கைகள் போன்றவைகள் மக்களின் வாழ்நிலைகளை மேம்படுத்துகிறது. எனவே, அவர்கள் சீன சமூகத்தின் முழுமையின் ஒரு பகுதியாக தங்களை காண்கிறார்கள். 

அடுத்த மூன்று மூன்று பகுதிகளில் சட்டத்தின் ஆட்சி,கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, மார்க்ஸ், எங்கல்ஸ்சித்தாந்தங்களை சீன நிலைமைக்கு ஏற்ற வகையில் இன்றைய ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

சீனாவைப் பற்றிய மேற்கத்திய ஊடகங்களால் தவறான முறையில் அறிவியல் பூர்வமாக முலாம் பூசப்பட்ட பொய்களையும், பிரச்சாரங்களையும் இந்த புத்தகம் உடைத்தெரிகிறது. அதே நேரத்தில் சீன சமூகத்தை உள்நுழைந்து புரிந்து கொள்வதற்கான பேராயுதமாக இருக்கிறது. 

புத்தகம் மிக முக்கியமான கருத்துக்களை காலத்துக்கு ஏற்ற சூழலில் முன் வைப்பதால் இதன் வடிவமைப்பு உட்பட தயாரிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

அ.பாக்கியம்.

 

சனி, மே 10, 2025

என் வாகனம் பாலஸ்தீனியர்களுக்கே போப் பிரான்சிஸ் கடைசி விருப்பம்

 

எனது வாகனம் காயம் அடைந்த பாலஸ்தீன மக்களுக்கான நடமாடும் மருத்துவமனையாக மாற வேண்டும் என்று மறைந்த போப் பிரான்சிஸ்   தனது கடைசி விருப்பத்தை எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இது தற்போது வெளியாகி உள்ளது. போப் பிரான்சிஸ்   மாற்றங்களோடு பயணித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது

என்னதான் மதம் சார்ந்து இருந்தாலும் அதற்கு நடைபெறக்கூடிய தேர்தல் என்பது மேலானதாகத்தான் தோன்றுகிறது. மசோதாக்கலையே கை தூக்கி கதையை முடித்து விடக் கூடிய காலங்கள் இது.  ரகசிய வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ள இடங்களில் கூட சிறிய அமைப்புகள்கூட கைதூக்கி கலாச்சாரத்தில் இருக்கிற சசில காலத்தில் போப் தேர்தல் கூடுதலாகவே கட்டுப்பாடுகளுடன் நடப்பதாகத் தான் தெரிகிறது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய போப் தேர்வு 7-ம் தேதி துவங்கி 9-ம்தேதி இரண்டு நாட்களில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதுதான் மிகக் குறைந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. காரணம் நான்கு சுற்று தேர்தல் இரண்டு நாட்கள் முடிந்துள்ளது. 1503 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்தான் இதுவரை மிகக் குறைந்த காலத்தில் அதாவது 10 மணி நேரத்தில் போப்பை தேர்ந்தெடுத்த தேர்தல் ஆகும்

 மறைந்த பிரான்சிஸ் இரண்டு நாட்கள் 5 சுற்றுகள், போப் பெனெடிக் நான்கு சுற்றுகள் இரண்டு நாட்கள், புகழ் பெற்ற ஜான் பால் 2  எட்டு சுற்றுகள் மூன்று நாட்கள் என்று தேர்தல் நடைபெற்று தேர்ந்தெக்கப்பட்டனர்.

தற்பொழுது அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினால் பிரான்சிஸ் ராபர்ட் பிரிவோஸ்ட் 267 வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போப் 14ஆம் லியோ என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

போப் பதினான்காம் லியோவை தேர்ந்தெடுத்த 133 கார்டினல்களில் 108 பேர் போப் பிரான்சிஸ் அவர்களால் கார்டினால் ஆக்கப்பட்டவர்கள். இந்த முறை 70 நாடுகளை பிரதிநிதித்துவபடுத்தக்கூடிய கார்டினால்கள் பங்கேற்றார்கள். 2013 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போப்பாக தேர்ந்தெடுத்த பொழுது 48 நாடுகளைச் சேர்ந்த கார்டினல்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது இந்த கார்டினல்கள் பெரும்பாலும் ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள்.

போப் பிரான்சிஸ் இதில் மாற்றத்தை கொண்டு வர விரும்பினார். ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து கார்டினால்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினார்.

வாடிகனிலிருந்து வெகு தொலைவில் இருக்கக்கூடிய நாடுகளும், கத்தோலிக்கர்களின் சிறிய அளவு பிரதிநிதித்துவம் கொண்ட பகுதிகளில் இருந்தும் கார்டினல்களை கொண்டு வர வேண்டும் என்று அடிப்படையில் ஹெய்டி, மலேசியா, மியான்மர், பராகுவே, சிங்கப்பூர் உள்ளிட்ட 15 நாடுகள் இந்த ஆண்டு முதல் முறையாக போப்பை தேர்ந்தெடுப்பதில் பங்கு பெற்றன. ஓரளவு கார்டினல்கள் எண்ணிக்கையை  ஐரோப்பா அமெரிக்காவைக் கடந்து விரிவு படுத்திய செயலை போப் பிரான்சிஸ் செய்து முடித்தார்.

மத அமைப்புக்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய நிலைமைகளிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சில சீர்திருத்தங்களை செய்கிற பொழுது அது வரவேற்கக் கூடியதாக இருக்கிறது. அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் சீர்திருத்தங்கள் மாற்றங்களுக்கு உதவி செய்கிறது.

போப் பிரான்சிஸ் LBGBTQ+ சமூகத்தை சேர்ந்த விசுவாசிகளையும் வரவேற்றது திருச்சபைக்குள் சலசலப்பு ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல காலநிலை மாற்றம் குறித்த அவரின் எச்சரிக்கை ஏழை மக்களை கவனத்தில் கொண்டு விடுக்கப்பட்டது. திருச்சபைக்குள் பெரும் நிதி சீர்திருத்தத்தை தொடங்கி வைத்தார். பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் திருச்சபையின் பாதிரியார்களை, கார்டினல்கள் உட்பட நடவடிக்கைகளை எடுத்தார். அதுபோன்ற தவறுகளை மறைத்தவர்களையும் அவர்களின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் மேற்கொண்டார். இவையெல்லாம் திருச்சபைக்கு புதியதாக இருந்தது.

பொதுவாக பாலஸ்தீனம் குறித்து திருச்சபை அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. போப் பிரான்சிஸ் தான் பயன்படுத்திய அதிகாரப்பூர்வமான போப் மொபைல் என்று அழைக்கக்கூடிய வாகனத்தை காயமடைந்த, பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கான நடமாடும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று தனது இறுதி ஆசையாக எழுதி வைத்துவிட்டு இறந்தார்.

இவரின் இந்த நடவடிக்கையில் மூலமாக பொதுமக்களிடையே மட்டுமல்ல ஊடகத்திலும் மிகவும் செல்வாக்கு உடையவராக மாறினார் அதே நேரத்தில் திருச்சபையின் பழமை வாத குரல்களால் விமர்சிக்கப்பட்டார்.

பத்திரிகைகளின் தரவுகளின் படி கார்டினல்களில் பெரும்பாலும் ஐரோப்பாவை மையமாகக் கொண்டவர்களும், ஆப்பிரிக்க கார்டினல்கள் பழமைவாதிகளாக இருக்கிறார்கள். தற்போது போப் பிரான்சிஸ் ஏற்படுத்திய பல சீர்திருத்தங்களை கைவிடவும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

வாடிகனின் கோட்பாட்டு அலுவலகத்திற்கு தலைமை தாங்கிய ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார்டினல் மவுரோ பியா சென்சா, போப் பிரான்சிஸ் மூலம் அப்பதிவியிலிருந்து மாற்றப்பட்டார். அவர் இந்த சீர்திருத்தங்களுக்கு எதிராக இருந்தார். போப் பிரான்சிஸ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஆதரித்த ஊடகங்களும், தேவாலயங்களுக்கு எதிரான அனைத்து முன்னாள் எதிரிகளும் நாத்திகர்கள் என்று குற்றம் சாட்டினார்.

தற்போதைய தேர்வில் ஆசிய பிரான்சிஸ் என்று அழைக்கப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 67 வயதான கார்டினல் லூயிஸ் அந்தோனியோ டேகல் ஏழைகள் மற்றும் LBGBTQ  மக்களின் பராமரிப்பு, விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொண்ட கத்தோலிக்கர்களுக்கான ஆதரவு போன்ற அம்சங்களில் முற்போக்கானவராக இருந்தார். இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

70 வயதான மிதவாத கொள்கைகளைக் கொண்ட இத்தாலியின் பியாட்ரோ பரோளின் , அங்கேரி நாட்டைச் சேர்ந்த பழமை வாதியான பீட்டர் எரடோ, எருசலேமின் பியர்  பட்டீஸ்டா ஐயோ போட்டியில் இருந்தனர். பழமைக்கும் சீர்திருத்தத்திற்கும் இடைப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தின் வெளிப்பாடாக போப் 14ஆம் லியோ இருக்கலாம்.

போப் தேர்ந்தெடுப்பதில் வெளி சக்திகளின் செல்வாக்கு இருக்கிறது அதற்கான ஆவணம் சுற்றில் இருக்கிறது என்றும் சி என் என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இவை பழமைவாத கத்தோலிக்க பாதிரியார்களால் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன

போப் தேர்தல் மத சீர்திருத்தங்களுக்கான விவாதத்தின் ஒரு புள்ளியாகவும் மாறி இருக்கிறது.

அ.பாக்கியம்

 

வியாழன், மே 08, 2025

தைப்பிங் விவசாயிகளின் புரட்சி∶ மாற்றத்தின் விதை

 

– அ.பாக்கியம்

சீன வரலாற்றில் பாரம்பரியமான தன்மைகள் என்பது விவசாயிகளின் வர்க்க போராட்டங்கள் ஆகும். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கது தைப்பிங் விவசாயிகளின் புரட்சியாகும். சீன வரலாற்றில் அதிக நாட்கள், அதிக பிரதேசங்கள், அதிகமான நகரங்கள், அதிகமான உயிர் இழப்புகள் ஏற்பட்ட ஒரு புரட்சி தைப்பிங் விவசாயிகளின் புரட்சி ஆகும். இந்தப் புரட்சி சீன சமூகத்தில் அரை காலனித்துவ அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக  மாறிக்கொண்டிருந்த சூழலில் நடைபெற்றது. இதற்கான பல சிறப்புக் கூறுகள் உள்ளன.

மாபெரும் கிளர்ச்சியின் மாறுபட்ட காரணங்கள்

1644 ஆம் ஆண்டு சீனாவின் மிகப்பெரிய பேரரசாக திகழ்ந்த மிங் வம்சத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மஞ்சூரியாவை சேர்ந்த மஞ்சுக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இவர்கள் தங்களது வம்சத்தை குயிங்(Qing) வம்சம் என்று அழைத்தனர். சீனாவில் மேற்கத்திய முதலாளித்துவம் ஊடுருவுவதற்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது அந்நியர் ஆட்சியாகும். இதுதான் சீன முடியாட்சியின் வம்ச வரலாற்றின் கடைசி பேரரசாகும். டாக்டர் சன் யாட் சன் தலைமையில் 1911 ஆம் ஆண்டு  நடைபெற்ற குடியரசு புரட்சி வரை இந்த ஆட்சி நீடித்தது. இந்த ஆட்சியின் இடைப்பட்ட காலத்தில் 1850 ஆம் ஆண்டு முதல் 1864ஆம் ஆண்டு வரை விவசாயிகளின் பெரும் எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சிக்கு தைப்பிங் புரட்சி என்று பெயர். காரல் மார்க்ஸ் 1853 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி டைம்ஸ் பத்திரிக்கையில்“உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரும் புரட்சி” என்று எழுதினார்.

சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த ஹூங் சியு சுவான் என்பவர் இந்த புரட்சிக்கு தலைமை தாங்கினார் . இவர்தலைமையில் விவசாயிகளின் எழுச்சியை நடத்தி சீனாவின் தென்பகுதியில் உள்ள க்வாங்சி மாகாணத்தில் இருக்கும் ஒரு பகுதியை கைப்பற்றி கொண்டார்கள். இந்தப் பகுதிக்கு தைப்பிங் தீன் குவோ என்று பெயரிட்டார்கள்.தைப்பிங் என்றால் அமைதி என்று அர்த்தம். மஞ்சுக்களின் அரசாங்கத்தின் மீது இருந்த அதிருப்தியால் விவசாயி கிளர்ச்சிநாடு முழுவதும் படுவேகமாக பரவியது. மூன்று வருடத்திற்குள் 17 மாகாணங்களை விவசாய கிளர்ச்சியின் தலைவர்கள் கைப்பற்றினார்கள்.

ஷாங்காய்,பெய்ஜிங் உட்பட சுமார் 600 நகரங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். நான்கிங் நகரம் புரட்சியாளர்களின் தலைநகரமாக மாறியது. மஞ்சு அரசாங்கத்தின் அதிகாரிகளும், ராணுவமும் அடித்து விரட்டப்பட்டது. மேற்கத்திய முதலாளித்துவசக்திகளின் ஆதரவுடன் மஞ்சு அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து பெரும் படைகளைத் திரட்டி 1864 ஆம் ஆண்டு புரட்சியாளர்களின் நான்கிங் நகரத்தை கைப்பற்றியது. புரட்சி நடைபெற்ற 14 ஆண்டுகளில் சுமார் 2 கோடி மக்களின் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தப் புரட்சியை முழுமையாக ஒடுக்குவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. சீன வரலாற்றில் அதுவரை இல்லாத மிகப்பெரிய புரட்சி மட்டுமல்ல, அதிக ஆண்டுகள் நடந்த புரட்சி மட்டுமல்ல, எதிர்கால சீனாவிற்கான பல புதிய வித்துக்களை உருவாக்கிய புரட்சியாகும். தைப்பிங் பிரதேசங்களில் அறிவிக்கப்பட்ட புரட்சிகரமான நடவடிக்கைகள் சீன மக்களை பெரும்பாலும் கவர்ந்தது.

கடந்த காலத்தில் விவசாயிகளின் எழுச்சிகள் நடைபெற்ற பொழுது, இயற்கை பேரிடர்களும், அதிகாரிகளின் ஊழல் செயல்பாடுகளும், பெரும் வெள்ளங்களும் அடிப்படை காரணமாக இருந்தன. ஆனால் தைப்பிங் போராட்டம் நடைபெற்ற பொழுது மேலும் இரு முக்கிய காரணிகள் இந்த எழுச்சிக்கு பின்புலமாக இருந்தது. 1751ல் இருந்த 18 கோடி மக்கள் தொகை 1851ல் 43 கோடியாக உயர்ந்தது. இந்த உயர்வுக்கு ஏற்ற வகையில் சாகுபடி நிலங்கள் பரப்பளவு அதிகரிக்கவில்லை. எனவே வேலையின்மை என்பது மிகப்பெரும் சவாலாக மாறியது. மற்றொரு முக்கியமான காரணம் மேற்கத்திய முதலாளித்து சக்திகள் சீனாவில் ஊடுருவி மஞ்சுக்களின் ஆட்சியை தங்களது பொம்மை ஆட்சியாக மாற்றிக் கொண்டார்கள். அபினியை இறக்குமதி செய்து சீனா முழுவதும் விற்பனை செய்தார்கள். சீன சமூகத்தையே அபினி போதையில் மூழ்கடித்தார்கள்.

சீன மக்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரிகளுக்கு பயப்படுகிறோம். ஆனால் எங்கள் அதிகாரிகளோ, கடல் கடந்து வந்திருக்கும் அந்நிய பேய்களுக்கு பயப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த கிளர்ச்சிக்கு பின்னால் ஒரு தேசபக்த உணர்வு மேலோங்கி இருந்தது என்பது கடந்த கால விவசாயகிளர்ச்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. 17 மாகாணங்களை கைப்பற்றிய தைப்பிங் கிளர்ச்சியாளர்களின் புரட்சிகரமான நடவடிக்கைகள் இந்த தேசபக்த உணர்வை வெளிப்படுத்தும்.

இதுவரை நடைபெற்ற விவசாயிகளின் கிளர்ச்சிகளில் இருந்ததை விட தைப்பிங் போராட்டத்தில் விவசாயிகளுடன் இதர பகுதி உழைப்பாளி மக்களையும் இணைத்துக் கொண்டது பரவலான முறையில் நடைபெற்றது. கரிஎரிப்பவர்கள், கிராம பள்ளி ஆசிரியர்கள், ஏழைவிவசாயிகள், மரம்வெட்டக்கூடிய தொழில் செய்பவர்கள், வணிகர்கள், பணக்கார விவசாயிகள், மஞ்சுக்களின் அரசை எதிர்த்த பல அறிஞர்கள்,சுரங்கத் தொழிலாளர்கள், இரு பெரும் பழங்குடி மக்கள் என பரந்துபட்ட உழைப்பாளி மக்களை தைப்பிங் புரட்சி தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதோடு, ஐரோப்பியர் வருகையின்போது, கடற்கரையில் தொழில் செய்து வந்தவர்களை விரட்டி அடிக்கப்பட்டார்கள் அந்த உழைப்பாளி மக்களும் இந்த தைப்பிங் புரட்சியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். எனவே இந்தப் புரட்சி ஒரு வர்க்க அடிப்படையை பிரதிபலித்த புரட்சி என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பிற்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தைப்பிங் புரட்சியை ஒரு முழுமையான விவசாய புரட்சி என்று மதிப்பீடு செய்துள்ளது.

இந்தப் புரட்சியின் வெற்றிகளுக்கு பின்னால் பெரும் பகுதி மக்களின் ஆதரவு இருந்தது. சுருக்கமாக சொன்னால் இது ஒரு மக்கள் போராக இருந்தது. இந்தப் புரட்சியின் வெற்றி மக்களின் படைப்பாற்றலையும், முன்முயற்சி எடுப்பதையும் கட்டவிழ்த்து விட்டது. புரட்சியாளர்கள் முன்வைத்த வேலை திட்டங்கள் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக அமைந்தது. இதுவரை சீனாவின் கிளர்ச்சியாளர்கள் முன்வைத்த நடவடிக்கைகளில் இருந்து இது ஒரு மாறுபட்ட முன்னெடுப்பாகும்.

அனைத்தும் அனைத்து மக்களுக்கு…

தனியார் உடைமைகள் ஒழிப்பதாக அறிவிக்கப்பட்டது. பொதுக்கருவூலம் ஆரம்பிக்கப்பட்டது. பொதுவான தானியக்கிடங்கை நிறுவினார்கள். மக்களின் விசேஷத் தேவைகளுக்கு இந்த தானியக்கிடங்குகளில் இருந்து இலவசமாக தானியங்கள் வழங்கப்பட்டன. நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நிலங்கள் குறிப்பிட்ட நிலப்பிரபுக்களிடம் குவிந்திருப்பதை தடுக்கும் வகையில் சமத்துவ விவசாய சட்டம் என்று அறிவித்தனர். சொர்க்கத்தின் கீழ் உள்ள அனைத்து நிலங்களையும் சொர்க்கத்தின் கீழ் உள்ள அனைத்து மக்களும் பயிரிட வேண்டும் என்று அறிவித்தனர். மக்கள் அனைவருக்கும் நிலங்கள் சமமாக பங்கிடப்பட வேண்டும் என்று அறிவித்தார்கள்.

சமத்துவ அடிப்படையிலான சட்டமாக இருந்தாலும் கற்பனாவாத அடிப்படையில் அமைந்ததால் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. விவசாயிகள் தங்கள் சொந்த வாழ்வாதாரத்திற்கு தேவையான பகுதியை மட்டுமே விளைச்சலில் இருந்து எடுத்துக் கொண்டனர். விவசாயிகள் மீதான வரிகள் பல மடங்கு குறைக்கப்பட்டது. அபினி, புகையிலை போன்ற போதை பொருட்கள்தடைசெய்யப்பட்டன. சீன நாட்டின் நாட்காட்டி முறையை சூரியன் மற்றும் சந்திர கூறுகளின் அடிப்படையில் வாரத்திற்கு ஏழு நாள் என்ற முறையில் மாற்றி அமைத்தார்கள். சீன எழுத்து முறைகளை மேம்படுத்தினார்கள். மருத்துவமனைகள், தபால் துறைகள், ரயில்வே போன்றவற்றில் கவனம் செலுத்தினார்கள். இவையெல்லாம் தங்களது வெற்றியின் மூலமாக அமல்படுத்த முயற்சி செய்தார்கள்.

தலையா? தலை முடியா?

தைப்பிங் புரட்சியாளர்களின் முக்கியமான அறிவிப்பு சீன மக்கள் தலையின் முன்பகுதியில் முடி வளர்த்துக் கொள்வதற்கு அனுமதித்தார்கள். இது அந்நியர்களால் சீனர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிரான மிகப்பெரிய முன்னெடுப்பாகும். சீனர்கள் பொதுவாக தலையில் கொண்டை போட்டுக் கொள்வார்கள். 1268 ஆம் ஆண்டு மங்கோலியர்கள் சீனாவை கைப்பற்றிய பொழுது சீனர்கள் தங்களது அடிமைகள் என்பதை காட்டும் பொருட்டு முன் மண்டை முடியை எடுத்துவிட்டு பின்பகுதியில் இரட்டை ஜடை பின்னிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். 

மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டு சீன மிங் வம்சம் ஆட்சிக்கு வந்தவுடன் சீன முறைப்படி முடிவளர்க்க அனுமதித்தனர். மீண்டும் மஞ்சுக்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் சீன மக்கள் முன் மண்டையில் முடி வளர்ப்பதற்கு தடை செய்து பின்பகுதியில் ஒற்றை ஜடை பின்னி கொள்ள வேண்டும் என்று உத்தரவுபோட்டார்கள். இந்த உத்தரவை சீன மக்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர். இவ்வாறு செய்ய மறுக்கிறவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சீனர்கள் சுலபமாக இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தங்களை அடிமைகள் என்பதற்கான வெளிப்படையான முத்திரை குத்தக் கூடிய செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று போர்க்களம் கண்டனர். மஞ்சுக்களின் அரசர்கள் சீனர்களுக்கு தலை வேண்டுமா தலை மயிர் வேண்டுமா என்று கேட்டனர். சீனர்களோ மிகவும் உறுதியுடன் எங்களுக்கு தலை மயிர்தான் வேண்டும் தலை போனால் போகட்டும் என்று எதிர்க்க ஆரம்பித்தனர். அரசாங்கம் இவற்றுக்கு எதிராக மிகப்பெரும் அடக்குமுறைகளை ஏவியது. பெரும்பாலான இடங்களுக்கு அரசு படைகள் சென்று தலைமுடி விவகாரத்தை அமல்படுத்தினார்கள்.

மக்கள் தங்கள் கையில் கிடைத்த  ஆயுதங்களைக் கொண்டு அரசாங்கப் படையுடன் போராடினார்கள். சியாடிக் என்ற நகரத்தில் அரசாங்கப் படைகள் வந்து முற்றுகையிட்டு 80 நாட்கள் வரை தாக்குதலை தொடுத்தார்கள். சுமார் ஒன்றே முக்கால்(1 ¾) லட்சம் மக்கள் அடிமை உத்தரவுக்கு அடிபணிய முடியாது என்று தங்களுயிரைஈந்தனர். அரசு படைகளுக்கும் கடுமையான இழப்பு ஏற்பட்டது. மஞ்சு வம்சத்தினர் தங்களுடைய ஆதிக்க விதையை ரத்த சேற்றிலே தான் ஊன்றினார்கள் என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சான்றாகும். எனவேதைப்பிங் புரட்சியாளர்கள் இந்த முடி வளர்ப்பதற்கான அனுமதியை வழங்கி தேசபக்த போராட்டத்தின் வடிவமாக காட்சியளித்தார்கள்.

பெண்கள் மீதான பாத கட்டும், கழுத்துக் கயிறும்:

மற்றொரு மிக முக்கியமான அறிவிப்பு சீன பாரம்பரியத்தை, பழமை வாதத்தை முறித்துப்போடுவதாக இருந்தது. பெண்களின் விடுதலையை பறைசாற்றக்கூடிய முறையில் இவை அமலாக்கப்பட்டது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவு சீனாவில் பெண்கள் பாதக்கட்டு முறை அமல்படுத்தப்பட்டது. பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாதங்களை ஆறு அங்குலத்திற்கு மேல் வளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வழக்கத்தை உருவாக்கினார்கள். இதற்காக ஐந்துஅல்லதுஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கால்பாதத்தை மடித்து கட்டுவது, இறுக்கி கட்டுவது, சில நேரங்களில் எலும்புகளை சேதப்படுத்தக்கூடிய முறையில் கட்டுவது நடைமுறையில் இருந்தது.

ஆறு அங்குலம் பாதம் இருப்பவர்கள் தாமரைப் பாதங்கள் என்றும் அதற்கான காலணிகளும் உருவாக்கப்பட்டது. இந்தப் பாதங்கள் பெண் அழகின் அடையாளமாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் மாற்றப்பட்டது. இதனால் பெண்கள் மிகக் கடுமையான உடல் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். வாழ்நாள் முழுவதும் பெண்கள் குறைபாடு உடையவர்களாக மாற்றப்பட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில் அனைத்து சீனப் பெண்களிலும் சுமார் 50 சதவீத பெண்கள் பாதக்கட்டுகளை பயன்படுத்தினார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மேல்தட்டு மக்களிடம் 100% ஆக இருந்தது என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மீதான சுமத்தப்பட்ட உடல் ரீதியான மிகப்பெரிய அடக்கு முறையை தைப்பிங் ஆட்சியாளர்கள் ரத்து செய்து பாதக்கட்டு போடுவதற்கு தடை விதித்தார்கள். தைப்பிங் புரட்சி தோல்விக்கு பிறகு மீண்டும் இந்த கொடுமை அரங்கேறியது. 1912 ஆம் ஆண்டு சன் யாட்சன் தலைமையில் நடைபெற்ற புரட்சி காலத்தில் பாதக்கட்டு தடை செய்யப்பட்டாலும் முழுமையாக அமலாகவில்லை. 1921 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பிறகு பெரும் இயக்கம் நடைபெற்று இது முழுமையாக ஒழிக்கப்பட்டது.

தைப்பிங் புரட்சியாளர் காலத்தில் பெண்களின் கழுத்து கயிறுகள் அறுத்து எறியப்பட்டது. சீன மக்கள் தங்கள் கழுத்தில் மூன்று கயிறுகளை அணிந்து இருப்பார்கள். பெண்கள் மட்டும் நான்கு கயிறுகளை அணிந்திருப்பார்கள். ஆண்களுக்கு அரசியல் அதிகாரம், குல அதிகாரம், மத அதிகாரம் என்று மூன்று அடையாளங்களை குறிக்கக்கூடிய முறையில் இந்த கயிறு அணியப்பட்டிருந்தது. பெண்கள் இவற்றின் கூடவே கணவரின் அதிகாரம் என்பதையும் இணைத்து நான்கு கயிறுகளை கட்டி இருந்தனர். தைப்பிங் புரட்சியாளர்கள் ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்கக்கூடிய முறையில் கயிறுகளை அறுத்தறிய வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். ஆண் பெண் சமம் என்று அறிவித்தார்கள். பெண்கள் அரசு தேர்வில் கலந்து கொள்வதும், ராணுவ பதவிகளை பெறுவதும் அனுமதிக்கப்பட்டது. பல பெண்கள் ராணுவ தளபதிகளாக மாறினார்கள். திருமணங்களில் ஒருதார மண முறை கட்டாயமாக்கப்பட்டது. தைப்பிங் புரட்சியாளர்கள் மூட பழக்கத்திற்கு எதிராகவும், தேசிய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய முறையிலும் தங்களது திட்டங்களை ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலைநாட்டினார்கள்.

நீடித்த நெருக்கடிகளும் வீழ்ச்சியும் 

பல்வேறு காரணங்களால் கிளர்ச்சியாளர்கள் தங்களது புரட்சிகர தன்மையை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கிளர்ச்சிக்கு சீனாவில் உருவாகி வந்த குட்டி முதலாளித்து வர்க்கத்தினர் தலைமை தாங்கினார்கள். புரட்சிக்கு தலைமை தாங்கியவர் கடவுளின் கட்சி என்ற பெயரை முன்வைத்து மதத்தன்மைகளோடு இணைக்க முயற்சித்தார். இவர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியவர். கிருஸ்துவ மதத்தை சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய விவசாயிகளின் லட்சியங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்தார், ஒருங்கிணைத்தார். தலைமைக்கு இருந்த இந்த போக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது.

தலைமை தாங்கியவர் கிறிஸ்துவத்தின் பிராட்டஸ்டண்ட் பிரிவின் ஆதரவாளராக இருந்ததினால் விக்கிரகங்களை அகற்றக் கூடிய வேலைகளில் ஈடுபட்டனர். கன்பியூஸியம், பௌத்தம், தாவோயிச மதங்களின் சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். கன்பியூஸியம் சீனாவின் நிலப்பிரபுத்துவ அமைப்பின் சித்தாந்தம் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்திருந்தாலும் நடைபெற்ற புரட்சி நிலப்பிரபுத்துவத்திற்குஎதிரான புரட்சி என்ற முறையிலும் கன்பியூசிய சிலைகளைஅகற்றப்பட்டது எதிர் நடவடிக்கைகளுக்கு உதவி செய்தது.

ஆரம்பத்தில் மேற்கத்திய பத்திரிகைகளும், மேற்கத்திய அரசு வட்டாரங்களும் கூட புரட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். புரட்சியாளர்களைக் கொண்டு அந்தப் பகுதியில் தங்களது அபின் வியாபாரத்தை, மற்ற வர்த்தக பலன்களை பெற முடியும் என்று ஆதரித்தார்கள். ஆனால் தைப்பிங் புரட்சியாளர்கள் வெளிநாட்டினரை அனுமதிக்காமல் இருந்தது மட்டுமல்ல, மஞ்சு அரசாங்கத்திடம் பெற்றிருந்த அனைத்து சலுகைகளையும் ரத்து செய்தனர். இதன் மூலம் தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்புநிலைப்பாட்டை முழுமையாக அமல்படுத்தினர். மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் மஞ்சு அரசுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்களை அடக்கியது.

ஏகாதிபத்தியத்தின் ஓடும் நாய்

1939 டிசம்பர் மாதம் சீனப் புரட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி என்ற தலைப்பில் மாசேதுங் ஒரு கட்டுரை எழுதினார். விவசாயிகளின் எழுச்சிகளும் போர்களும் சீன வரலாற்றின் தனித்துவமான அம்சமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார். எனவே சீன எழுத்தாளர்கள் சீன வரலாற்றின் பண்புகளை ஐரோப்பிய வரலாற்றிலிருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியம் உள்ளதையும் சுட்டிக் காட்டினார். விவசாயிகளின் எழுச்சிகளும் போர்களும் விவசாயிகளுக்கும் நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும் இடையிலான வர்க்க போராட்டங்கள் ஆகும். சீனாவின் முன்னேற்றத்தின் மாறும் கூறுகளாக இந்த வர்க்க போராட்டங்கள் அமைந்தன.

பாட்டாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற சரியான தலைமை இல்லாததால் கடந்த கால விவசாய போர்களால் விவசாயிகளை நிலப்பிரபுத்துவசுரண்டல்நுகத்தடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை. தைப்பிங் கிளர்ச்சியை பற்றி மாசேதுங் குறிப்பிடுகிற பொழுது சீனாவில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்கான உருவாக்கம் ஏற்பட்ட காலத்தில் எட்டு முக்கிய நிகழ்வுகளில் தைப்பிங் போர் ஒன்றாகும் என்று கூறினார். மாவோவின் வார்த்தைகளில் இது ஏகாதிபத்தியத்தின் ஓடும் நாயான சிங் ஆட்சிக்கு எதிரான போர் என்றார்.

விவசாயிகளின் வர்க்க போராட்டங்களை பற்றி மாசேதுங் அவர்கள் முன்வைத்த நிர்ணயிப்புகளை 1950 முதல் 1961 வரை 11 ஆண்டுகள் சீனாவில் அறிஞர்கள் விவாதத்தில் ஈடுபட தூண்டியது. 1952 ஆம் ஆண்டில் சீன வரலாற்றுச் சங்கம் தைப்பிங் பற்றிய 8 தொகுதிகளை ஷாங்காயிலிருந்து வெளியிட்டது. இதே காலத்தில் சீன பத்திரிகைகள் 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டன. இது அறிவுசார் உலகத்தில் மிக முக்கிய மாற்றம் ஆகும். ஆனால் வெளி உலகம் இதை அரிதாகவே கவனித்தது. சீனாவின் வரலாற்றுப் பாரம்பரியத்தில் விவசாயிகளின் போர்கள் முக்கிய பகுதியாக இருந்தது. நிலப்பிரபுக்கள்இந்தபோராட்டங்களை திரித்து மறைத்தனர். இருப்பினும் சுதந்திர சீனாவில் அறிவார்ந்த விவாதம் புரட்சிகர பாரம்பரியத்தை கண்டுபிடித்து வெளியிட்டது. சீனாவில் கடந்த கால சமூக பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியான செயல்முறைகளுக்கு விவசாயிகள் இயக்கங்கள் என்ஜின்களாக செயல்பட்டதை காண முடிந்தது. இதனால்தான் காரல் மார்க்ஸ் உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய புரட்சி என்று வர்ணித்தார்.

அ.பாக்கியம்

20 ஆவது தொடர் மே 14 புதனன்று வெளியாகும் 

ஞாயிறு, மே 04, 2025

போப் தேர்தலும் புகைக்கூண்டும்

 



உலகம் முழுவதும் உள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவராக வாடிகன் நாட்டில் உள்ள போப் செயல்படுகிறார். ஏப்ரல் 21 அன்று போப் பிரான்சிஸ் இறந்ததை அடுத்து, அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் துவங்கி விட்டது. வருகிற மே 7ஆம் தேதி இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

135 கார்டினல்கள் வாக்களித்து புதிய போப்பை தேர்ந்தெடுக்க உள்ளனர். இது தேர்தலுக்கான மாநாடு என்று அழைக்கப்படுகிறது. புதிய போப் மூன்றில் இரண்டு பங்கு (90 வாக்குகள்) பெரும்பான்மை பெற வேண்டும். ஒரு போப்பை தேர்ந்தெடுக்க எவ்வளவு நாட்கள் ஆகும். சில தேர்தல்கள் ஒரு சில நாட்களில் முடிந்து விடும். சில தேர்தல் பல மாதங்கள் கூட நீடிக்கும் இதற்கு கால வரம்பு இல்லை.

முதல் நாள் நடைபெறும் வாக்கெடுப்பில் யாரும் வெற்றி பெறவில்லை என்றால், அடுத்த இரண்டு நாட்களில் காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும், பிற்பகலில் இரண்டு வாக்கெடுப்புகளும் நடத்தப்படும். இந்த மூன்று நாட்களில் முடிவுகள் வரவில்லை என்றால் ஒரு நாள் இடைவெளி விடப்படும். அந்த நாட்களில் கார்டினால்களில் இடையே கலந்துரையாடல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. பெரும்பான்மை கிடைக்கும் வரை இந்த செயல்முறை காலவரையின்றி தொடரும்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் ஐந்து முறை வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு 27 மணி நேரத்தில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு நான்கு முறை வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு புதிய போப் 24 மணி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிக நீண்ட நாட்கள் நடந்த தேர்தல் 1268 ஆம் ஆண்டு நடந்தது. போப் ஆறாம் கிளமெண்ட் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கு மூன்று ஆண்டுகள் தேர்தல் நடைபெற்றது. அதாவது 1006 நாட்கள் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகுதான் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்பொழுது கார்டினால்கள் வெளி உலகத்தில் தொடர்போடு இருந்தார்கள். வெளி உலகத்தின் அரசியல், மதம், குடும்பம் என பல்வேறு தலையிடுதல் போப்பின் தேர்தலில் இருந்து கொண்டே இருந்தது.

இந்த நீண்ட நாட்கள் நடைபெற்ற தேர்தல் 1271 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போப் பத்தாம் கிரிகோரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு சில கட்டுப்பாடுகள் தேர்தல் முறைகளில் கொண்டு வரப்பட்டது. 1268-71 என மூன்று வருட கால நடைப்பெற்ற தேர்தல்கள் சரி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பத்தாம் கிரிகோரி தேர்தல்கள் ரகசியமாக நடைபெறுவதற்காக சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். கார்டினால்கள் கான்கிளவே என்ற முறையில் தனிமையில் அடைத்து வைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். இது எந்த ஒரு அரசியல் அல்லது தனிப்பட்ட தலையிடும் இல்லாமல் கார்டினால்கள் கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் கவனம் செலுத்த முடியும் என்பதற்கான கொண்டு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

வெளியில் இருந்து செல்வாக்கு செலுத்துவதற்கு  காடினல்கள் கூடியிருக்கும் சிஸ்டைன்  தேவாலயத்திற்கு கொண்டுவரப்படும் உணவில் துண்டு சீட்டுகள் மறைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன. இதற்கு உணவு பைகள், கோழிகள், கட்டிலரிகள் போன்ற உணவு வகைகள் துண்டு சீட்டுகளை கொண்டு வருவதற்கு வசதியாக இருந்தது. எனவே போப் தேர்தல் நடைபெறும் இக்காலத்தில் இந்த உணவுகள் தடை செய்யப்பட்டு கன்னியாஸ்திரிகள் கார்டினர்களுக்கு வேகவைத்த காய்கறிகள் மற்றும் திரவ உணவுகளை உள்ளே தயாரித்துக் கொடுத்தனர். இப்போது தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்பட்டு அதாவது கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் வெளி தலையீடு இல்லை என்று சொல்ல முடியாது.

புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெளி உலகத்திற்கு அறிவிப்பதற்கு தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புகைக்கூண்டு மூலம் புகைகள் வெளியேற்றப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பிற்கு பிறகும் அந்த வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும். பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் வாக்குச் சீட்டுகளில் பொட்டாசியம், பெர்க்ளோரேட், ஆந்திராசீன், சல்பர் ஆகியவை சேர்க்கப்பட்டு கரும்புகை உருவாகும். போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் பொட்டாசியம், குளோரைடு, லாக்டோஸ், குளோரோஃபார்ம் பிசின் ஆகியவற்றின் வேறுபட்ட செய்முறைகளை வாக்குச்சீட்டு காகிதங்களில் சேர்த்து எரிக்கப்பட்டு வெள்ளைப்புகை உருவாகும்.

 

மே 7ஆம் தேதி நடைபெறுகிற தேர்தலுக்காக தற்போது முடிவுகளை அறிவிக்கக்கூடிய புகைக்கூண்டு மே 2ம் தேதி முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்கு பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான கத்தோலிக்கர்கள் வாடிகனில் கூடுவார்கள். 2013 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது முடிவுகளை தெரிந்து கொள்ள ஒரு லட்சம் மக்கள் கூடி இருந்தார்கள்

கத்தோலிக்க திருச்சபையில் தற்பொழுது 252 கார்டினல்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்களில் 135 பேர் மட்டுமே மாநாட்டில் வாக்களிக்க தகுதி உடையவர்கள். (தற்போது  ஒருவர் இதில் கலந்து கொள்ளவில்லை) 80 வயதுக்கு மேற்பட்ட கார்டினால்கள் இந்த தேர்தலில் பங்கு பெறுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்தக் கட்டுப்பாடு 1970 ஆம் ஆண்டு போப் ஆறாம் பால் நடைமுறைக்கு கொண்டு வந்தது. அவர் ஒரு புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் போது அதிகபட்சமாக 120 கார்டினால்கள் இருந்தால் போதும் என்று பரிந்துரைத்தார். தற்போது 135 கார்டினால்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த சில நூற்றாண்டுகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு போப்பும் ஒரு கார்டினாலாக இருந்திருந்தாலும் அது ஒரு கட்டாயம் இல்லை. உண்மையில் ஞானஸ்நானம் பெற்ற எந்த கத்தோலிக்க ஆணும் (பெண்கள் இல்லை)  போப்பாக தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் கார்டினாளாக இல்லாத ஒருவரை தேர்ந்தெடுப்பது மிக அரிதான விஷயமாகும். கார்டினலாக இல்லாத ஒருவர் 1378 ல் ஆறாம் அர்பன் தேர்வு செய்யப்பட்டார்.

பழமையான பொருத்தமற்ற முறையில் மாற்றத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது. அது எங்கும் எதிலும் நடக்கும்.

அ.பாக்கியம்

வியாழன், மே 01, 2025

18.வம்சங்களின் வரலாற்றில் வர்க்க மோதல்கள்

 



உலகின் வேறு எந்த நாட்டையும் விட சீனாவில் தான் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மிக நீண்ட காலம் நீடித்து இருந்தது. சோவ் (பொஆமு 1046) வம்ச ஆட்சி காலம் துவங்கி 18 ஆம் நூற்றாண்டு துவக்கம் வரை இந்த முறை நீடித்தது. மேற்கத்திய முதலாளித்துவம் ஊடுருவ ஆரம்பித்த பதினெட்டாம் நூற்றாண்டில் சீன சமூகம் படிப்படியாக மாறத் துவங்கியது. அந்த மாற்றங்கள் சீனாவில் அரை-நிலப்பிரபுத்துவ அரை-காலனித்துவ சமூகமாக உருவெடுத்தது. ஆக சீனாவில் 1911 குடியரசு புரட்சி நடக்கிற வரை நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறை கோலோச்சியது.

நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் விவசாயிகள் புரட்சி இயல்பாக நடைபெறுவதை நாம் அறிவோம். உலகின் பல நாடுகளில் தொழில்துறை சமூகம் துவங்குவதற்கு முன்பு விவசாயிகள் சுரண்டலுக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா, செக்கோஸ்லோவேகியா போன்ற நாடுகளில் பிரபலமான விவசாய கிளர்ச்சிகள் நடைபெற்று இருப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

இருந்தபோதிலும் சீனாவைப் போன்று வேறு எந்த நாட்டிலும் விவசாய கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவில் நடைபெற்ற விவசாய புரட்சிகள் ஒவ்வொன்றும் நீண்ட நாட்களாக அரசை எதிர்த்து நடந்தவைகள் ஆகும். இந்த கிளர்ச்சிகளின் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டது. 1920ஆம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு தோழர் மாசேதுங் தலைமையில் விவசாயிகளின் எழுச்சி உச்சத்தை தொட்டு புரட்சியின் வெற்றியில் முடிந்தது.

சீனாவில் நகரங்கள் சமூக வளர்ச்சி போக்கில் உருவெடுத்தது என்றாலும் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அளவு இந்த நகரங்கள் சுற்றுச்சுவர்களால் சூழப்பட்டு இருந்தது. இதற்குக் காரணம் சீனாவில் தொடர்ந்து நடைபெறக்கூடிய விவசாயிகளின் கிளர்ச்சிகள், தாக்குதலுக்கு அச்சப்பட்டு இந்த சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தது. நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கம் கிராமப்புறங்களில் பலவீனமாக இருந்தது. அதன் கட்டுப்பாடுகளை கிராமங்களில் முழுமையாக நிலைநிறுத்த முடியவில்லை. கிராமப்புறங்களில் பணப் பொருளாதாரம் நகர்ப்புறங்களைப் போன்று நடைமுறையில் இல்லை. நிலப்பிரபுக்கள் மத்தியில் மோதல்களும், போர் வீரர்களிடையே மோதல்களும் அதிகமாக காணப்பட்டது. எனவே, பிற்காலத்தில் மாசேதுங் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை சுற்றி வளைப்பது என்று கோட்பாட்டை வகுத்த பொழுது மேற்கண்ட காரணிகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உருவாக்கி இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பச்சைக் காடுகளும் சிவப்பு புருவங்களும்

சோவ் வம்ச ஆட்சி காலத்தில் பெரும்பாலான நிலங்கள் மன்னர்களிடமும், நில பிரபுக்களிடமும் குவிந்து கிடந்தது. மக்கள் வறுமையில் வாடினார்கள். இதன் விளைவாக பல சிதறல்களாக விவசாய கிளர்ச்சிகள் நடைபெற்றது. இதுபோன்று தனித்தனியாக நடைபெற்ற விவசாயிகள் கிளர்ச்சிகளில், ஆட்சியாளர்களால் அதிருப்தி அடைந்திருந்த பொதுமக்களும் சில நிலப்பிரபுக்களும் இணைந்து கொண்டார்கள்.

சோவ் வம்சம் வீழ்ச்சிக்குப் பிறகு கின் வம்சம் ஆட்சி பீடம் ஏறியது. அதுவரை இல்லாத அளவு மிகப் பெரும் பேரரசாக கின் வம்சம் உருவானது. இந்த வம்சத்தின் முதல் பேரரசர் ஷின் உ வாங் டி என்பவர் விவசாயிகளின் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவினார். மக்களை உழைப்பு முகாமிற்குள் அடைத்தார். விவசாயிகளின் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினார். விவசாயிகள் எல்லைப்புறங்களை நோக்கி ஓடினார்கள். கட்டாய அடிமை முறைகளை உருவாக்கினார். அடக்கு முறையின் எல்லைகள் உச்சத்தை அடைந்த பொழுது விவசாயிகளுடைய கிளர்ச்சி அதற்கு எதிராக வெகுண்டு எழுந்தது. இந்த கிளர்ச்சிக்கு லியு பாங்க் (Liu Bang) என்ற விவசாயி தலைமை தாங்கினார். நாளடைவில் இந்தப் போராட்டம் பெரும் போராட்டமாக மாறி கின் வம்ச ஆட்சிக்கு முடிவு கட்டியது.

லியு பாங்க் என்ற விவசாயின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியின் காரணமாக கின் வம்சம் வீழ்த்தப்பட்ட இடத்தில் ஹான் வம்சம் ஆட்சியை கைப்பற்றியது. பொது ஆண்டுக்கு முன்பு(பொஆமு) 202 முதல் பொது ஆண்டு(பொஆ) 220 வரை சுமார் 420 ஆண்டுகள் ஹான் வம்சம் ஆட்சி செய்தது. மேற்கண்ட 420 ஆண்டுகளில் பொஆ 9 முதல் 23ஆம் ஆண்டு வரை இந்த வம்சத்தின் உறவினர் ஒருவர் ஆட்சி பீடம் ஏறி சுமார் 15 ஆண்டுகள் சின் வம்சம் என்ற பெயரால் ஆட்சியை நடத்தினார். இந்த இடைப்பட்ட15 ஆண்டுகளில் 2 முறை மிகப்பெரும் விவசாயிகளின் எழுச்சியை இந்த ஆட்சி எதிர்கொண்டது.

ஊழல், அதிகாரிகளின் அடக்குமுறை, வறட்சியால் ஏற்பட்ட பட்டினி சாவுகள், விவசாயிகளை கடுமையாக பாதித்தது. விவசாயிகள் உணவு கிடைக்காமல் காட்டுச் செடிகளை உண்ண ஆரம்பித்தனர். சில நேரங்களில் அதுவும் கிடைக்காத அவல நிலை உருவானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் லூலின்  மலைப்பகுதிகளுக்குச் சென்று அரசு படைகளை எதிர்த்து போராடுவதற்கு தங்களது சொந்த படைகளை உருவாக்கினார்கள். இந்தப் படைகளுக்கு பச்சை காடுகளின் பாதுகாவலர்கள் என்று பெயர் சூட்டினார்கள். இந்தப் படைகள் நிலப்பிரபுக்களின் பண்ணைகளையும், தோட்டங்களையும், உணவு கிடங்குகளையும் கைப்பற்றியது. கிடங்குகளில் இருந்த உணவை விவசாயிகளுக்கு விநியோகித்தார்கள். உள்ளூரில் இருந்த ராணுவத்தின் ஆயுதங்களை கைப்பற்றிக் கொண்டு போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தார்கள்.

ஆட்சியாளர்களும் கடுமையான அடக்குமுறைகளை ஏவினார்கள். பொஆ 21 ஆம் ஆண்டு ஜிங் மாகாணத்தின் ஆளுநர் லூலின் பகுதியில் இருந்த விவசாயிகளின் படைகளை தாக்குவதற்காக 20,000 போர் வீரர்களை அனுப்பி வைத்தார். இது பெரும் போராக மாறியது. கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளை தோற்கடித்து அவர்களின் உணவு கலன்களையும், ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். அரசு அனுப்பிய ராணுவம் பின்வாங்கியது.

இதே காலத்தில் நாட்டின் மற்றொரு பகுதியில் விவசாயிகள் சக்தி வாய்ந்த போராட்டங்களை நடத்தினார்கள். விவசாயிகள் தங்கள் புருவங்களில் சிவப்பு வண்ணம் பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இவர்களுக்கு சிவப்பு புருவ படைகள் என்ற பெயர் ஏற்பட்டது. (Red Eyebrows கிபி 17-27) மன்னர்கள் விவசாயிகளின் நிலங்களை பறித்துக் கொண்டதை எதிர்த்தும், மஞ்சள் நதியின் பெரும் வெள்ளத்தால் மரணம் அடைந்த விவசாயிகளை பாதுகாக்க தவறியதை எதிர்த்தும், இந்த கிளர்ச்சிகள் உருவானது. இந்தப் போராட்டத்தின் விளைவாக சின் வம்ச ஆட்சி தூக்கி வீசப்பட்டது.

மஞ்சள் தலைப்பாகையும் மாண்டு போன கிரீடங்களும்

சின் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஹான் வம்சம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த வம்சத்தில் 26 மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்தனர். இந்த வம்சம் சீன சமூகத்தில் பெரும் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் உருவாக்கியது.

 (இந்த ஆட்சியின் செயல்பாடுகள் பற்றி 3.தெய்வீக சக்கரவர்த்திகளும்சபிக்கப்பட்ட மக்களும் தொடர் 3ல் விரிவாக எழுதியிருக்கிறேன்)

ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில் அதாவது பொஆ184 ஆம் ஆண்டு மக்களிடம் அதிருப்தி மேலோங்கியது. பிளேக் நோய், பெரியம்மை,  தட்டம்மை போன்ற தொற்று நோய்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தனர். அரசின் நிர்வாகக் குளறுபடியால் தானிய களஞ்சியம் திவால் ஆகிவிட்டது. விவசாய விளைச்சல் பாதிக்கப்பட்டு வறட்சி தாண்டவம் ஆடியது. வழக்கம்போல் சீனாவின் துயரம் என்று அழைக்கப்பட்ட மஞ்சள் நதியின் பெருவெள்ளம் விவசாயிகளின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் அடித்துச் சென்றது. இதற்கு மேல் உயிர் வாழ்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலைமை உருவானது. மரணமா அல்லது எதிர்த்து போரிடுவதா என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.

ஹான் வம்ச ஆட்சி எதிர்த்து நடைபெற்ற இந்தக் கிளர்ச்சியில் விவசாயிகள் மஞ்சள் தலைப்பாகை அணிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டதால் மஞ்சள் தலைப்பாகை கிளர்ச்சி (yellow turban rebellion) என்று பெயர் ஏற்பட்டது. இந்தப் பெயரிலேயே பெரும் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இதிலிருந்து பல துணை அமைப்புகளும் ரகசிய சங்கங்களும் பிற்காலத்தில் உருவாகின. இந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராடிய பொழுது ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அரசின் தானியக் கிடங்குகளையும், அலுவலங்களையும் சூறையாடினார்கள். அரசு படைகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர். எனினும் கிளர்ச்சி ஓய்ந்த பாடில்லை.

அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இந்த மோதல்கள் 21 ஆண்டுகள் நீடித்தது என்றால் போராட்டத்தின் தன்மையை புரிந்து கொள்ள முடியும். 420 ஆண்டுகள் சீன சமூகத்தில் பெரும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்திய பேரரசு நிலைகுலைந்தது. பிரதேச அளவில் ராணுவ தளபதிகளும் நிலப்பிரபுக்களும் தனித்தனியான ராஜ்ஜியங்களை அமைத்துக் கொண்டார்கள். இந்தக் காலத்தில் தான் சீன வரலாற்றில் புகழ்பெற்ற 3 ராஜ்ஜியங்களின் ஆட்சி ஏற்பட்டது. மஞ்சள் தலைப்பாகை கிளர்ச்சியாளர்களுக்கு தாவோயிச சிந்தனைகளும் அமைப்புகளும் பெரும் உதவி செய்தன.

ஹான் வம்ச வீழ்ச்சிக்குப் பிறகு பல சிற்றரசர்களாக இருந்த சீன ஆட்சி முறை மீண்டும் டாங் வம்சத்தால் ஒன்றிணைக்கப்பட்டது. பொஆ 618 முதல் 907 வரை டாங்க் வம்ச ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சியில் நான்குக்கு மேற்பட்ட விவசாயிகளின் எழுச்சி ஆட்சியை உலுக்கியது. இவற்றில் அன் லூசன் தலைமையிலான கிளர்ச்சி 9 ஆண்டுகள் நீடித்தது. இவை பல நேரங்களில் உள்நாட்டு போராகவும் உருவெடுத்தது. இந்த கிளர்ச்சிகளில் விவசாயிகள் பெரும்பகுதி கலந்து கொண்டாலும், அவர்களுடன் உள்ளூர் நில உரிமையாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நீடித்த கிளர்ச்சி, ஆட்சியை ஆட்டம் காண செய்தது. அடுத்து பொஆ 874 முதல் 884 வரை நடைபெற்ற விவசாயிகளின் கிளர்ச்சியால் டாங் வம்சம் ஆட்சியை இழந்தது. அதனைத் தொடர்ந்து சாங் (song 960-1279) வம்சம் ஆட்சிக்கு வந்தது.  சீனாவின் மிகப்பெரும் மாநிலமாக திகழ்ந்த சிச்சுவான் பகுதியில் விவசாயிகளின் கிளர்ச்சி ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து சவாலாகவே அமைந்தது.

உயர்ந்தது சிறப்பு தலைப்பாகை

சீன மண்ணில்  முதல் அந்நியர்கள் படையெடுப்பு மங்கோலியர்களால் நிகழ்த்தப்பட்டது. செங்கிஸ்கான் வழி வந்தவர்கள் 1271 ஆம் ஆண்டு முதல் 1368 ஆம் ஆண்டு வரை சீனாவை ஆட்சி செய்தனர். தங்களின் ஆட்சி முறைக்கு யுவான் வம்சம் என்று பெயரிட்டனர். ஆட்சியாளர்கள் அன்னியர்களாக இருந்தாலும் அவர்களது அடக்குமுறை பழைய படியே தொடர்ந்தது. விவசாயிகள் கசக்கி பிழியப்பட்டார்கள். 1340 ஆம் ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளும், மஞ்சள் நதியின் வெள்ளமும் மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கியது. மறுபுறத்தில் யுவான் வம்சம் அதன் சாம்ராஜ்யத்தை பாதுகாக்க பெரும் ராணுவ செலவுகள் தேவைப்பட்டது. இதற்காக மக்களிடம் பல மடங்கு கட்டாய வரி வசூல் செய்யப்பட்டது.

விவசாயத்தின் வீழ்ச்சி, தொற்று நோய்களின் பரவல், கடுமையான குளிர் போன்றவற்றால் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் மாண்டு போயினர். மற்றொரு தொற்று நோயும் ஹூபே மாநிலத்தில் 1358 ஆம் ஆண்டில் இரண்டு லட்சம் பேரை பலி கொண்டது. இந்த நெருக்கடிகளை யுவான் அரசு எதிர்கொள்ள தவறியது. அந்நிய ஆட்சியாளர்கள் மக்களை கண்டு கொள்ளவில்லை என்ற தேசிய உணர்வும் போராட்டத்தை தீவிர படுத்தியது. மக்கள் தங்களது அதிருப்தியின் வெளிப்பாடாக கிளர்ச்சியில் இறங்கினார்கள். 1351 முதல் 1368 வரை 18 ஆண்டுகள் தொடர்ந்து யுவான் வம்சத்திற்கு எதிராக விவசாயிகளின் பேரலைகள் எழுந்தன. விவசாயிகள் சிவப்பு தலைப்பாகை அணிந்து போராட்டத்தை நடத்தியதால் சிவப்பு தலைப்பாகை இயக்கங்கள் உருவாகியது. இது குறுகிய காலத்தில் நாடு முழுவதும் பரவியது.

1368 ஆம் ஆண்டு யுவான் வம்சம் வீழ்ச்சிக்கு பிறகு மிங் (1368-1644) ஆட்சிக்கு வந்தது. இந்த வம்சத்தில் பேரரசுகள் மிகப்பெரும் அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டது. பேரரசில் ஷங்ஷி, ஹெனான் மாநிலங்களில் இயற்கை பேரழிவுகளும் தொடர் மழை, வெள்ள பாதிப்பு, வறட்சி போன்றவை மக்களை இம்சித்தது. மக்களின் நிலைமையோ நர மாமிசம் சாப்பிடக்கூடிய அளவுக்கு மோசம் அடைந்தது. வேலையின்மை கடுமையாக உயர்ந்தது. 1448-49 ஆண்டுகளில் குத்தகைதாரர்கள் தங்கள் நில உரிமையாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியை தீவிரப்படுத்தினார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணமோ, விளைச்சலோ கொடுக்க முடியாது என்று போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டம் நாடு முழுவதும் பரவியது. 1644 ஆண்டில் விவசாயிகள் கிளர்ச்சி செய்து பெய்ஜிங் நகரத்தை கைப்பற்றினார்கள். ஒவ்வொரு மாற்றத்தின் மகுடங்களாக விவசாய கிளர்ச்சியே முடி சூட்டிக் கொண்டது. ஆனால் நிலப்பிரபுத்துவத்தை  முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

வெகுண்டு எழுந்த வெள்ளை தாமரை

சீனாவின் மிகப்பெரிய பேரரசான மிங் வம்சம் தூக்கி எறியப்பட்டு 1644  குயிங் (மஞ்சுக்கள் என்ற அன்னிய இனம்) வம்சம் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. இதுவே சீனாவின் கடைசி வம்ச ஆட்சியாகும். 1796 முதல் 1804 வரை பெரும் விவசாயிகள் கிளர்ச்சி நடைபெற்றது. வழக்கம்போல் பொருளாதார நெருக்கடிகளும், ஆட்சியாளர்கள் அடக்கு முறையும் மக்களை வாட்டியது. ஆட்சியாளர்கள் அந்நியர்கள் என்ற உணர்வும் போராட்டக்காரர்களிடம்  மேலோங்கியது. இந்தப் போராட்டத்திற்கு வெள்ளை தாமரை விவசாயிகள் எழுச்சி என்று பெயர் சூட்டப்பட்டது. வெள்ளை தாமரை இயக்கம் நீண்ட காலமாக போராட்டங்களை வழிநடத்தியது. வடக்கு சீனாவில் செல்வாக்கு பெற்ற ஒரு அமைப்பாக இது வளர்ந்திருந்தது. ஆரம்பத்தில் ரகசிய சங்கமாக செயல்பட்ட இந்த அமைப்பு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கி வெகுஜன அமைப்பாக மாறியது.  மங்கோலிய ஆட்சி முறைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களிலும் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தடுத்த நடைபெற்ற விவசாயிகள் கிளர்ச்சியில் வெள்ளை தாமரை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தலைமை தாங்குகிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். வேறு பெயர்களில் இயக்கத்தை ஆரம்பித்தார்கள். 1861 முதல் 1863 வரை ஹனான் மாநிலத்தில் நடைபெற்ற விவசாய எழுச்சிகளில் வெள்ளை தாமரை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பு பதாகை சங்கம் என்ற பெயரில் பங்கு பெற்று போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தினார்கள்.

கிளர்ச்சியின் தனித்தன்மையும் பொது தன்மையும்

சீனாவில் மேற்கத்திய முதலாளித்துவம் ஊடுருவலுக்கு முன்பாக சீன நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்த அனைத்து முரண்பாடுகளிலும் விவசாயிகளுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளே பிரதான முரண்பாடாக இருந்தது. இது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது. ஆளும் வர்க்கத்தால் அடக்குமுறை செய்கிற பொழுது அதனால் ஏற்படுகிற அதிருப்தியின் வெளிப்பாடாக விவசாயிகளின் எழுச்சி தன்னிச்சையான தன்மையுடன் அமைந்திருந்தது. அதே நேரத்தில் வரலாற்று நெடுகிலும் நடைபெற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெரும் எழுச்சிகளில் பொதுத்தன்மைகளும் காணப்பட்டன.

கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்ற விருப்பங்களை வெளிப்படுத்தினார்கள். விவசாயிகளிடம் அடிக்கடி காணப்பட்ட முழக்கங்களில் விவசாயிகளின் கிளர்ச்சிகள் ஓங்கட்டும், பணக்காரர்களை தாக்கி ஏழைகளுக்கு உதவுவோம் என்ற முழக்கங்கள் மேலோங்கியது.

மற்றொரு முக்கியமான பொதுத்தன்மை, இந்த கிளர்ச்சிகளில் கணிசமான கருத்துக்கள் மததன்மையுடன் தொடர்புடையதாக இருந்தது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மத்திய காலத்தில் மக்களின் அதிருப்திகள் மாற்று மதங்களை உருவாக்குவதற்கான வடிவங்களில் வெளிப்பட்டது. இங்கேயும் அவ்வாறு சில தன்மைகள் காணப்பட்டது. அனைத்து கிளர்ச்சிகளும் சொர்க்கத்தின் ஆணைக்கு இணங்க நிறைவேற்றப்படுவதாக நம்பினார்கள். கன்பூசிய சிந்தனை இந்த கருத்துக்களுக்கு அடிப்படையாக இருந்தது. ஆனால் விவசாய கிளர்ச்சியாளர்கள் பௌத்தம் தாவோயிச சித்தாந்தம் போன்றவற்றை எடுத்துக் கொண்டார்கள். அந்த சித்தாந்தம் கிளர்ச்சியாளர்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது.

மற்றொரு பொதுத்தன்மை, கிளர்ச்சிகளில் விவசாயிகள் மையப் பகுதியாக இருந்தார்கள். அதே நேரத்தில் இதர பகுதி உழைப்பாளி மக்களை ஒன்றிணைத்து கிளர்ச்சிகளை நடத்தியது அனைத்து கிளர்ச்சிகளிலும் வெளிப்பட்டது. குறிப்பாக கைவினைஞர்கள், படகு ஓட்டுபவர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், வறுமையில் வாடிய அறிஞர்கள், பௌத்த துறவிகள், ஆளும் வர்க்கத்தின் அதிருப்தி அடைந்த பகுதியினர் என பலதரப்பட்ட மக்களையும் இந்த விவசாய கிளர்ச்சியாளர்கள் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் மாற்றங்களுக்கு விதைகளை உருவாக்கியதாக அடுத்த விவசாயிகளின் தைப்பிங் கிளர்ச்சி அமைந்தது.

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...