சீன வரலாற்றில் 1848 முதல் 1949 வரை அவமானங்களின் நூற்றாண்டு என்று சீன மக்கள் அழைக்கிறார்கள். தற்போதைய
சீனத்தலைவர்கள் பலரும் பேசுகிற பொழுது மீண்டும் சீனா ஒரு அவமானங்களின்
நூற்றாண்டில் நுழைந்து விடக்கூடாது என்பது பற்றி அடிக்கடி எச்சரிக்கிறார்கள்.
மேற்கண்ட நூற்றாண்டில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், ஜாரிஸ்ட் ருஷியா
ஆகிய அந்நிய நாடுகளின் வேட்டைக்காடாக சீனா மாற்றப்பட்டு இருந்தது. அபினி
யுத்தம் முடிந்த பிறகு சீனாவிற்கு தோல்வி ஏற்பட்டதால் அந்நிய நாடுகளுடன் போடப்பட்ட
ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒருதலைப்பட்சமாக, சமமற்ற முறையில், சீன தேசத்தின் இறையாண்மையை பலி கொடுக்கும் ஒப்பந்தமாக இருந்தது.
மேற்கண்ட நாடுகள் சீனாவின்
பல்வேறு பகுதிகளை துண்டு துண்டாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து
ஒப்பந்தங்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்து கொண்டு சீன மக்களை சுரண்டினார்கள். அடிமைகளாக
நடத்தினார்கள். சீனாவிற்கு எதிராக அரசியல் துறைகளிலும், பொருளாதாரத் துறைகளிலும் ஆதிக்கத்தை செலுத்தினார்கள். இந்த ஆக்கிரமிப்பு
சீனாவில் இருவகை விளைவுகளை உருவாக்கியது. முதலாவதாக சீனாவின் இயற்கை பொருளாதாரத்தை
சீர்குலைத்தது. முதலாளித்துவத்தின் தோற்றத்தை ஏற்படுத்தியது
மட்டுமல்ல முதலாளித்துவ வளர்ச்சியையும் தீவிரப்படுத்தியது.
சீனாவில் இருந்த பத்தாம் பசலித்தனமான நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை ஒரு அரை நிலப்பிரபுத்துவ சமுதாயமாக மாற்றிக்கொண்டிருந்தது. சீனாவில் மூலப்பொருட்களை அபகரித்துக் கொள்வதன் மூலமாக, சரக்குகளை கொண்டு வந்து சீனாவில் குவிப்பது மூலமாக இயற்கை பொருளாதாரத்தை நிர்மூலமாக்கியது. சீன விவசாயிகளை சந்தையை சார்ந்து இருக்கும்படி செய்தது. இந்த விதத்தில் ஒரு சரக்கு சந்தை சீனாவில் நிர்மாணிக்கப்பட்டது. இயந்திரப் பொருட்களால் கைவினை தொழில் நசுக்கப்பட்டது. கடுமையான கடன் சுமை மற்றும் வரிகளாலும் விவசாயிகளும் கைவினை தொழிலாளர்களும் ஓட்டாண்டிகளாக மாறினார்கள். இவை தவிர சீன நாட்டின் கலாச்சார துறையில் பெரும் ஆக்கிரமிப்பை இந்த அந்நியர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
குட்டி ஜப்பானிடம் பேரரசின் தோல்வி
1893 ஆம் ஆண்டு
முதலாவது சீன ஜப்பான் போர் வெடித்தது. கொரிய தீப கற்பத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில் மோதல் துவங்கி, போராக மாறியது. இந்தப் போரில் ஜப்பான் கொரியாவை கைப்பற்றியது
மட்டுமல்லாமல் சீனாவையும் வெற்றி கொண்டது. சீன நாட்டின் பல்வேறு பகுதிகளை ஜப்பான் கைப்பற்றிக்
கொண்டது. சீனாவிற்கும் ஜப்பானுக்கு இடையில் ஷிமோனோக்கி என்ற
இடத்தில் 1895ல் ஒப்பந்தம் நடைபெற்றது. இந்த ஒப்பந்த
விதிகளின்படி
·
கொரியாவின்
இறையாண்மையை சீனா அங்கீகரிக்க வேண்டும்.
·
சீனாவின்
தென்கிழக்கில் உள்ள பார்மோசா, பெஸ்க்கா ஸ்டோரீஸ் தீவையும் மஞ்சூரியாவில் உள்ள லியோடுங் தீபகற்பத்தையும் சீனா, ஜப்பானிடம் கொடுத்து விட
வேண்டும்.
·
யுத்தத்தில்
ஏற்பட்ட நஷ்ட ஈடாக சுமார் 20 கோடி ரூபாயை 5 சதவீத வட்டியுடன் ஏழு வருஷத்திற்குள்
ஜப்பானுக்கு செலுத்த வேண்டும்
·
ஜப்பான்
வணிகம் நடத்துவதற்கு நான்கு துறைமுகங்களை திறந்து விட வேண்டும் என்று
ஒப்பந்தமானது.
·
ஏற்கனவே
சீனாவில் ஒப்பந்தம் போடுகிற ஷரத்துகளில் முக்கியமான ஒரு ஷரத்து
சேர்க்கப்பட்டிருந்தது. பல நாடுகள் சீனாவை ஆக்கிரமித்து
உள்ளதால் எந்த ஒரு நாட்டுடனும் தான் (சீனா) ஒப்பந்தம் போட்டு அந்த நாட்டிற்கு
உரிமை அளித்தால் அந்த உரிமை ஆக்கிரமித்துள்ள மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்
என்பதாகும். வலிமை இழந்தால் எதையும் செய்வார்கள் என்ற அடிப்படையில் ஜப்பானின்
துறைமுகங்களில் மற்றவர்களும் வணிகம் செய்யலாம் மற்றவர்கள் துறைமுகத்தில் ஜப்பான் வணிகம் செய்யலாம் என்ற முறையில் இந்த ஒப்பந்தம் தானாகவே
அமலாகியது.
சின்னஞ்சிறிய நாடான ஜப்பானிடம்
சீனா தோல்வி அடைந்ததை பெரும் அவமானமாக சீன மக்கள் கருதினார்கள். அதே நேரத்தில்
சீனாவை ஜப்பான் வெற்றி கொண்டதை மற்ற நாடுகள் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டன.
காரணம் ஜப்பானும் சீனாவைப் போன்று பல நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக
இருந்தது. 1853 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை ஜப்பானுக்கு சென்று வணிக உரிமையை பெற்று
தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள். அதன் பிறகு மற்ற நாடுகளும் சீனாவில் எப்படி
நுழைந்தார்களோ அதே போன்று அங்கேயும் நுழைந்தார்கள்.
ஆனால் ஜப்பானில் வெகு விரைவான
மாற்றங்கள் ஏற்பட்டு 1867 ஆம் ஆண்டு மெய்ஜி மன்னன் அதிகாரத்திற்கு வந்தார். நாட்டை நவீன
தொழிற்சாலைகள், பொருள் உற்பத்திகள் என மாற்றத்தை ஏற்படுத்தி
உலக சந்தையில் இடம்பிடித்தது மட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர்களும் வெளியேறினார்கள். ஜப்பான் வரலாற்றில் இதற்கு மெய்ஜி சகாப்தம்
என்று பெயர். இந்த வளர்ச்சியும், சீனாவின் மீது ஏற்படுத்திய
வெற்றியும் தான் சீன மக்களை தலைகுனிய வைத்தது.
ஜப்பானின் வெற்றியை காரணமாக
வைத்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் சீனாவில் மேலும்
பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். சீனாவில் அந்நியர்களுக்கு எதிரான
உணர்வுகள் மேலோங்கி இருந்தது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் சீனர்களால் படுகொலை செய்யப்பட்டால் உடனே அதை காரணம் காட்டி ஒரு துறைமுகத்தையோ அல்லது
வணிகவளாகத்தையோ எழுதி வாங்கக்கூடிய முறைகளில்தான் ஜெர்மனி மற்றும் இதர நாடுகள்
செயல்பட்டன. இவை மிக சாதாரணமாக நடந்து கொண்டிருப்பதை சீன மக்களால் தாங்கமுடியாமல் எதிர்க்க ஆரம்பித்தனர். 1898 ஆம் ஆண்டுகளில் அந்நிய
சக்திகளின் ஊடுருவல் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியது. சீனா ஒரு அரை காலனித்துவ நாடாக இருப்பதிலிருந்து முழுமையான காலனி நாடாக மாறிவிடுமோ என்ற
கேள்வியை சீன மக்கள் எதிர்கொண்டார்கள்.
சதிகள் செய்வதற்கு சளைக்கவில்லை
இந்தியாவிற்கும் சீனாவிற்கும்
இடையில் இருக்கக்கூடிய காஷ்கர் பிரதேசத்தை
தனிமைப்படுத்தி ஒரு தனி நாடாக மாற்றி விட முயற்சி செய்தார்கள். இந்தப் பகுதி
சீனாவின் மேற்கு திசையில் உள்ளது. கிர்கிஸ்தான், தஜிகீஸ்தான் உடனான எல்லையில்
அமைந்திருப்பது மட்டுமல்ல உலகின் மிகப் பழமையான பகுதிகளில் ஒன்று. பட்டுச் சாலையின் முக்கிய இணைப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்தப்
பகுதியை தனி நாடாக்குவதன் மூலம் இந்தியா, சீனா மற்றும்
மத்திய கிழக்கு நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள
முடிவெடுத்தார்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தோல்வி அடைந்தார்கள்.
1878 ஆம்
ஆண்டுகளில் உய்குர் பிரதேசத்தில் யாகூப் பெக்கின்
தலைமையில் தேசிய இன போராட்டங்கள் நடைபெற்றன. இந்த
போராட்டத்தை அன்றைய சீனப் பேரரசுக்கு எதிராக துருக்கி ஓட்டோமான் அரசும், பிரிட்டிஷ் நாடும் இணைந்து தூண்டி விட்டன. சீனாவின் யுன்னான் பகுதிகளில்
இஸ்லாமியர்கள் கிளர்ச்சி நடத்துவதற்கு
அன்றைய பர்மாவில் தளம் அமைத்துக் கொடுத்து பிரிட்டன்
உதவி செய்தது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மக்களை சுரண்டுவது
மட்டுமல்ல... சீனாவின் நீண்ட கால பூகோள அமைப்பை துண்டு துண்டாக்கி தனி நாடுகளை
உருவாக்க கூடிய வேலைகளையும் இவர்கள் தங்களின் சதி கொள்கையின் மூலமாக செய்து
கொண்டிருந்தார்கள்.
சொந்த மக்களுக்கு எதிராக சுய
வலிமைப்படுத்தல்
அந்நிய அரசுக்கு
எதிராகவும், ஆட்சியில் இருக்கும் நிலப்பிரபுத்துவ மஞ்சு பேரரசுக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்
மஞ்சு பேரரசு ஒரு வலுவான ராணுவத்தை அமைத்தது. இதன் முக்கிய
நோக்கம் நாட்டில் தங்கள் அரசுக்கு எதிராகவும் அந்நியர்களின் செயல்பாட்டுக்கு
எதிராகவும் நடைபெறக்கூடிய விவசாய கிளர்ச்சிகளையும் இதர கிளர்ச்சிகளையும் அடக்க
வேண்டும் என்பதுதான். இக்காலத்தில் நியான் கிளர்ச்சியாளர்கள் மூன்று மாநிலங்களில்
கிளர்ச்சி செய்து கொண்டிருந்தனர். தைப்பிங் கிளர்ச்சியை அடக்கியது போன்று அந்நிய சக்திகளின் ஆதரவுடன் இந்த
கிளர்ச்சிகளையும் அடக்கினார்கள். சீனாவை மேற்கத்திய நாடுகள் வெற்றி கொள்வதற்கு
அவர்களின் நவீன ஆயுதங்கள் தான் அடிப்படை காரணம் என்று முடிவு எடுத்து நவீன
ஆயுதங்களை உற்பத்தி செய்து பீரங்கிகள், நீராவி கப்பல்கள், வெடி மருந்துகள் போன்றவற்றையும்
ராணுவத்தில் கொண்டுவர ஆரம்பித்தனர். 1893 ஆம் ஆண்டு ஜப்பானிய
யுத்தம் துவங்கும் வரை இந்த சுய வலிமைப்படுத்தல் நடைபெற்றது.
மஞ்சு பேரரசின் திட்டத்தின்
படி சுய வலிமைப்படுத்தல் வெற்றி பெறவில்லை. நவீன மயமாக்கல் துரிதமாக நடைபெறவில்லை. நிர்வாக
அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. சிந்தனை மாற்றங்கள் சிறிய முறையில்
நடைபெறவில்லை. எனவே பலமான ராணுவம் என்பது ஜப்பானுடன் நடந்த யுத்தத்தில் பலவீனமான
ராணுவமாக மாறியது. இவ்வாறு மாற்றம் செய்வதற்கு மஞ்சு பேரரசுக்கு நிதி ஆதாரங்கள்
கிடைக்கவில்லை. இக்காலத்தில் சீனாவிற்கு முதலாளித்துவத்தின் முக்கிய அம்சமாக
பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக மூலதனத்தை ஏற்றுமதி செய்யக்கூடிய நிகழ்வுகள்
நடந்து கொண்டு இருந்தது. அதாவது தொழில் முதலாளித்துவம் நிதி
முதலாளித்துமாக மாற்றப்பட்டது. வங்கி கடன்கள் மூலமாக கணிசமான அளவு மூலதன வருகை
இருந்தது. 1895க்கும் முன்பு வெளிநாட்டு சக்திகளுக்கு
சீனாவின் கடன் மிக மிகக் குறைவு. 1895
ஆம் ஆண்டுகளை தொடர்ந்து வந்த ஐந்து ஆண்டுகளில் சீன அரசாங்கம் ஜப்பானுக்கு கொடுக்க
வேண்டிய போர் இழப்பீட்டுத் தொகை 50 மில்லியன் பவுண்டுகளுக்கு
மேல் ரஷ்யா, ஜெர்மன், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இருந்து கடனாக பெற்று கொடுத்தார்கள். வெளிநாடுகளால் நிர்வகிக்கப்படும் சுங்க வரிகளின் வருவாய் சீன
அரசாங்கத்திற்கு வரவில்லை. எனவே தன்னை பலப்படுத்திக்
கொள்வதற்கு போதுமான நிதி இல்லாத பொழுது மக்கள் மீது வரிகளை சுமத்தினார்கள்.
அதற்கான எதிர்வினையாக மக்கள் மஞ்சு பேரரசையும் அந்நியர்களையும் எதிர்த்து களம்
கண்டார்கள்.
இரு வேறு சீர்திருத்த
முயற்சிகள்
ஜப்பானிடம் தோல்வி அடைந்த
பிறகு மஞ்சு பேரரசில் இரு வேறு விதமான குழுக்கள் உருவாகி மோதல் ஆரம்பித்தது.
இக்காலத்தில் சீர்திருத்த இயக்கம் முக்கிய அரசியல் நிகழ்வாக முன்னுக்கு வந்தது.
நிலப்பிரபுத்துவ மஞ்சு அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளும், சீனாவிற்கும்
அந்நிய சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகளும் முன்பைவிட அதிகமாக கூர்மை
அடைந்தது. தைப்பிங் என்ற பிரம்மாண்டமான விவசாய கிளர்ச்சியை
மஞ்சு பேரரசு அந்நிய சக்திகளின் ஆதரவுடன் அடக்கி விட்டாலும் சீன மக்களிடம்
எதிர்ப்பின் தரம் குறையவில்லை. கனன்று கொண்டிருந்தது.
அடுத்தடுத்த காலங்களில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. 1870 ஆம் ஆண்டுகளில் அந்நியர்களுக்கு எதிராகவும் மஞ்சு ஆட்சியாளர்களுக்கு
எதிராகவும் பல ரகசிய சங்கங்கள் உருவானது. இவன் தொடர்ச்சியாக கியாங்சு, கியாங்சி, சிக்கி யாக் ஆகிய இடங்களில் உருவான
விவசாயிகளின் கிளர்ச்சிகள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.
இதே காலத்தில் சீனாவில்
புதிதாக உருவாகியிருந்த முதலாளித்துவ சக்திகளுடன் இணைந்து ஆட்சியில் இருந்த
நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சேர்ந்த
அறிவுஜீவிகள் சீர்திருத்தங்களுக்கான முன் முயற்சிகளை எடுத்தனர். இந்த
சீர்திருத்தம் மேலிருந்து துவங்கியது. நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் தற்போதைய அரசியல் பொருளாதாரம்
கொள்கைகளில் மாற்றங்களை முன்வைப்பதற்கு, மேற்கத்திய
நாடுகளில் இருந்து புதிய அம்சங்களை கற்றுக் கொள்வதற்கும்,
பழைய முறையிலான கன்பியூசியஸ் கற்றல் முறையை நீக்குவதற்கும் தீர்மானித்தார்கள்.
இந்த சீர்திருத்த முயற்சி தங்களின் வர்க்க நலனை பாதுகாப்பதற்காக அவர்கள்
முன்னெடுத்தனர். சீன மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும்
எதிரான மோதல் தீவிரமான காலத்தில் அந்நிய சக்திகளுக்கு எதிராக சீன மக்களின்
தாக்குதல்கள் அதிகமான பின்னணியில் இவற்றை தடுக்கக்கூடிய முறையில் இந்த சமரச
முயற்சிகள் உதவும் என்று இதில் ஈடுபட்டார்கள்.
இதே காலத்தில் இளைஞர் சக்தி
வெளிக்கிளம்ப ஆரம்பித்தது. மக்களின் நலன் காக்க சீர்திருத்தங்கள் வேண்டும் என்று
குரல் எழுப்பினார்கள். 1895 ஆம் ஆண்டு சுமார் 1300 அறிஞர்கள் கையொப்பமிட்டு சீர்திருத்தங்களை முன்வைத்து பேரரசிடம் மனுவை
அளித்தார்கள். இந்த மனுவில்
·
ஜப்பானுடன்
ஏற்பட்ட ஷிமோனோக்கி
ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்,
·
அதற்குப்
பொறுப்பான ராணுவ அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும்,
·
ராணுவம்
சீரமைக்கப்பட வேண்டும்,
·
நாணயம்
வங்கி மற்றும் அஞ்சல் துறைகள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று
வலியுறுத்தினார்கள்.
·
மேலும்
வணிகத்திற்கு சலுகை அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு துணைப் பள்ளிகள் நூலகங்கள்
போன்றவற்றை உருவாக்கி தேசியப் பெருமைக்கு சமீபத்தில் ஏற்பட்ட அவமானங்களை
போக்கக்கூடிய முறையில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
மேற்கண்ட சீர்திருத்த கருத்துக்களை 1896 முதல் 1898 வரையில் சுமார் 25 முக்கியமான பத்திரிகைகளில்
வெளியிட்டார்கள்.
சீர்திருத்த இயக்கம் நாடு
முழுவதும் வேகமாக பரவி வந்தது. சீனாவின் சிந்தனையாளர்கள் சீர்திருத்தத்திற்கு தேவையான
சித்தாந்தங்களையும், வழிமுறைகளையும் வடிவமைத்து கொடுத்தனர். அவர்களில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் காங் யூ வெய்
என்பவர் ஆவார். இவர் ஒரு அதிகாரத்தில் இருந்த நில உரிமையாளர் குடும்பத்தில் பிறந்தவர்.
கன்பியூசிய வழியில் கல்வி கற்றவர். 1891 ஆம் ஆண்டு கேன்டன் நகரில் கன்பியூசிய முறையில் ஒரு
பள்ளியை துவக்கினார். கன்பூசிய சிந்தனைகளை சீர்திருத்த முறையில் போதிக்க
ஆரம்பித்தார்.
இவரின் எழுத்துக்கள் நவீன
சீனாவின் அறிவுசார் பரிணாம வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரைப் பற்றி
மாசேதுங் தனது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். எதிர்கால கம்யூனிச சமுதாயம்
பற்றிய ஒரு கற்பனவாத சித்தாந்தத்தை இவர் வழங்கினார் என்று மாவோ குறிப்பிடுகிறார். வேறு சில கம்யூனிஸ்டுகள் இவர் கன்பியூசியம் மற்றும்
பேரரசின் சீர்திருத்த செயல்களை சார்ந்து இருந்தார் என்பதாக விமர்சிக்கிறார்கள்.
சீர்திருத்தவாதிகள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
பழமைவாதிகளை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு இருந்தனர்.
நூறு நாள் சீர்திருத்தம்
சீனாவில் அந்நிய சக்திகளால்
ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மூலமாக தோன்றிய முதலாளித்துவ வர்க்கமும், வணிகர்களும், வங்கியாளர்களும் சீர்திருத்த இயக்கத்தை ஆதரித்தார்கள். கிராமப்புற அறிஞர்கள் அறிவு ஜீவிகளாக மாறத் தொடங்கினர். மக்களும்
போராட்டக் களத்தில் இருந்தனர். எனவே 1898 ஆம் ஆண்டு ஜூன்
மாதம் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வரை நூறு நாட்கள் சீர்திருத்தம் நடத்துவது என்று ஆணைகள்
வெளியிடப்பட்டது. நிர்வாகம், கல்வி,
பொருளாதாரம் போன்றவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பயனற்ற அலுவலகங்கள் மூடப்பட்டது. தேவையற்ற பதவிகள் நீக்கப்பட்டன. மஞ்சுக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட மானியங்கள் ரத்து
செய்யப்பட்டன. மஞ்சு பேரரசின் அனைத்து அதிகாரிகளும் பேரரசிடம் நேரடியாக பரிந்துரை
தெரிவிக்க அனுமதிக்கப்பட்டார்கள். பயன்பாட்டில் இல்லாதபோன கோயில்கள், பள்ளிகளாக
மாற்றப்பட்டன. பீகிங் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
பள்ளிகளில் அறிவியல் மற்றும் அரசியல் பாடங்களாக கற்பிக்கப்பட்டன. ஆய்வு சங்கங்கள்
அனுமதிக்கப்பட்டது. செய்தித்தாள்கள் செயல்படுவதற்கும்
பட்ஜெட்டை தயாரிப்பதற்கும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இவற்றையெல்லாம்
அமல்படுத்துவதற்கும்,
மஞ்சு அரசுக்கு எதிரான உணர்வுகள் மக்களிடம் வெடிக்காமல் இருக்கவும்
பேரரசர் குவாங்சுவிடம் பேரரசி சூ சி அதிகாரத்தை ஒப்படைத்தார்.
அதிகாரத்தை ஒப்படைத்த பேரரசி சூ சி மீண்டும் அதிகாரத்தை
கைப்பற்றக் கூடிய தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பேரரசர் குவாங்சு தன்னை கொலை செய்ய
திட்டமிட்டார் என்றும், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து
ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார் என்றும் வதந்தியை பரப்பி
அவரை சிறை பிடித்தது மட்டுமல்ல பல சீர்திருத்த அறிஞர்களையும் பேரரசி சூ சி தூக்கிலிட்டார். அத்துடன் நிற்கவில்லை,
சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் புதிதாக
உருவாக்கப்பட்ட பீகிங் பல்கலைக்கழகத்தை தவிர
மற்ற அனைத்தையும் ரத்து செய்தார். 100 நாள்
சீர்திருத்தத்தின் இந்த தோல்வி மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தியது. சீர்திருத்தத்
திட்டம் விவசாயத்தை முற்றிலுமாக குறைத்து இருந்தாலும் எதிர்காலத்தில் அடிப்படை
முக்கியத்துவம் வாய்ந்த மேல் தட்டு வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தியது.
சீர்திருத்தவாதிகள் ஒரு பக்கம்
அந்நியர்களை எதிர்த்தார்கள். மறுபுறம் மேற்கத்திய மயமாக்கல் அமலாக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இவை இரண்டுக்குமான முரண்பாடுகள் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. ஒரு
பெரிய சக்தி வாய்ந்த மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும் அந்த
இயக்கத்தின் தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்ததால் பேரரசியுடன் மோதலை தவிர்த்து இருக்கலாம் என்று
பலரும் பிற்காலத்தில் கருத்து தெரிவித்தார்கள்.
மிகக் குறுகிய காலமாக
இருந்தாலும் 100 நாட்கள் என்ற சீர்திருத்த முயற்சி நாட்டில் ஒரு ஆழமான அடையாளத்தை
விட்டுச் சென்றது. காரணம் படித்த மக்களிடத்தில் அரசியல் மாற்றம் மற்றும் புதிய
முயற்சிகள் போன்ற அம்சங்களை விட்டுவிட்டு சென்றது. எனவே பலரும் நவீன பள்ளிகளை
நிறுவுவது, உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படுவது
என்று இறங்கினர். அமைதியான மாற்றம் தோல்விக்கு வழிவகுக்கும் என்பதை
சீர்திருத்தவாதிகள் உணர்ந்தனர் புரட்சியை நோக்கி திரும்பினர்.
குத்துச்சண்டை வீரர்களின கிளர்ச்சி
நூறு நாள் சீர்திருத்த
தோல்விக்கு பிறகு மக்கள் போராட்ட வழிக்கு திரும்பினார்கள். வட சீனாவில் மஞ்சள் நதியில்
வெள்ளமும் அடுத்து வறட்சியும் ஏற்பட்டது.
வரிகளை பல மடங்கு உயர்த்தினார்கள். இவற்றுக்கு எல்லாம் அந்நிய சக்திகள் தான் காரணம் என்று குத்துச்சண்டை
கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டினார்கள். 1899 ஆம் ஆண்டு
முதல் 1901ஆம் ஆண்டு வரை சீனாவில் குத்துச்சண்டை கிளர்ச்சி
தீவிரமாக பரவியது. இந்த கிளர்ச்சியில்
ஈடுபட்டவர்கள் குத்துச்சண்டை தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டதால் இந்த பெயரில்
அழைக்கப்பட்டார்கள். அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், சீன கலாச்சாரத்துக்குள் ஆதிக்கம்
செலுத்தும் கிறிஸ்துவ பிரச்சாரங்கள் எதிர்ப்பு ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டார்கள். கிறிஸ்துவ மெஷினரிகளுக்கு
சலுகைகள் தொடர்ந்து நீடிக்கப்படுவதை எதிர்த்தார்கள். 1899 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கம் ஷான்டாங் மற்றும் வடசீனாவின் சமவெளி பகுதிகளில் பரவியது. ரயில் பாதைகள் உட்பட வெளிநாட்டு
சொத்துக்களை அழிப்பதும் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வேலைகளையும்
செய்தார்கள்.
1900 ஆம் ஆண்டு
குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்கள் பெய்ஜிங் நகரத்தில் ஒன்று
கூடினார்கள். இது கிளர்ச்சியின் உச்சகட்டத்தை எட்டிய செயலாகும். பெய்ஜிங் நகரில்
உள்ள அந்நிய நாட்டு ராஜதந்திரிகள்,
கிறிஸ்துவ மிஷனரிகள், அந்நிய வீரர்கள் போன்ற பலரும்
குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்களுக்கு பயந்து ஒரு இடத்தில் தஞ்சம்
அடைந்தனர். அந்த இடத்தை குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்கள்
முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகை 55 நாட்கள் நீடித்தது.
அமெரிக்கா, ஆஸ்ட்ரோ-அங்கேரியா, பிரிட்டிஷ், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய எட்டு நாடுகளின் கூட்டணி படை
முற்றுகையிலிருந்து ராஜதந்திரிகளை பாதுகாக்க சீனாவிற்குள் நுழைந்தது. ஜூன் மாதம் 17ஆம் தேதி தியான்ஜினில் உள்ள டாகு கோட்டையை தாக்கினார்கள். சீனப் பேரரசி முதலில் பாக்ஸர்களை ஆதரித்தார்.
அவரது உத்தரவை ராணுவம் முழுமையாக ஆதரிக்கவில்லை. இதனால் மஞ்சு அரசின் ஜெனரல்
ரோங்கலு வெளிநாட்டு பிரஜைகளை பாதுகாக்க செயல்பட்டார். தெற்கு மாகாணங்களின்
அதிகாரிகள் வெளிநாட்டிற்கு எதிராக போராடும் உத்தரவை புறக்கணித்தனர்.
எட்டு நாடுகளின் கூட்டணிகள்
முதலில் குத்துச்சண்டை வீரர்களின் கிளர்ச்சியை வெற்றிகொள்ள முடியவில்லை. மீண்டும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதமேந்திய துருப்புகளை
சீனாவிற்கு கொண்டு வந்தார்கள். முதலில் தியான்ஜெனில் சீன ராணுவத்தை தோற்கடித்து
ஆகஸ்ட் 14 அன்று பெய்ஜிங்கை வந்தடைந்தனர்.
வெளிநாட்டின் பிரதிநிதிகள் 55 நாட்களுக்குப் பிறகு
விடுவிக்கப்பட்டார்கள். அந்நிய படைகள் பெய்ஜிங் தலைநகரம், அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் கொள்ளை அடித்து சூறையாடினார்கள்.
கிளர்ச்சியாளர்களை பழிவாங்க யாரையெல்லாம் சந்தேகப்படுகிறார்களோ அவர்களையெல்லாம்
தூக்கிலிட்டனர். இதேபோன்று 1901 செப்டம்பர் ஏழாம் தேதி
குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்களின் கிளர்ச்சியை ஆதரித்த அரசாங்க அதிகாரிகளை
தூக்கிலிட்டனர். வெளிநாட்டு துருப்புகளை பெய்ஜிங் நகரில் நிறுத்துவதற்கும், 1901 செப்டம்பர் 7ஆம் தேதி
மஞ்சு பேரரசுக்கும் எட்டு நாடுகளின் கூட்டணிக்கும் பாக்ஸர் ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்களுக்கு
ஆதரவளித்த 10 உயர் அதிகாரிகளையும், வெளிநாட்டினரை
படுகொலை செய்தற்காக குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட பிற அதிகாரிகளையும் தூக்கிலிட
உத்தரவிடப்பட்டது. சீனா போர் இழப்பீடாக எட்டு நாடுகளுக்கு 450 மில்லியன் நல்ல வெள்ளி அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த இழப்பீடுகள் 39 ஆண்டுகளுக்குள் செலுத்தப்பட வேண்டும். இந்த இழப்பீடுகளை எப்படி கட்ட
வேண்டும் என்பதையும் அந்நிய சக்திகள் உத்தரவிட்டன. ஏற்கனவே
உள்ள வரி 3.18 சதவீதத்திலிருந்து 5% ஆக
அதிகரிக்க வேண்டும். இதற்கு முன் எந்த பொருட்களுக்கு எல்லாம்
வரி இல்லையோ அதன் மீது வரிகள் விதிக்கப்பட வேண்டும். சீன அரசாங்கத்தின் ஆண்டு
வருவாயை விட அபராத தொகை அதிகமாக இருந்தது.
இதன் விளைவாக சீன மக்களும்
அறிவு ஜீவிகளும் மேற்கத்திய கல்வியால் பயன்பெற்ற பலரும் அரசுக்கு எதிராக
அன்னியருக்கு எதிராக புதிய களம் அமைத்தனர். சீன வரலாற்றில் புரட்சிகளுக்கும்
கிளர்ச்சிகளுக்கும் முடிவே இல்லை என்ற தொடர்கள் மீண்டும் அரங்கேறியது.
அ.பாக்கியம்