Pages

புதன், ஆகஸ்ட் 23, 2023

ஆளுமைகளின் அடிப்படை வேறுபாடுகள்

 

தொடர்: 19

அ.பாக்கியம்



மால்கம் எக்ஸ் 1946 முதல் 52 வரை சிறையில் இருந்தார். 1952 ம் ஆண்டு அவர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் எலிஜா முகமதுவின் சந்திப்பு அவரை இஸ்லாம் தேசத்தில் இணைய வைத்தது. அதன் பிறகு தன் இயற்பெயரான மால்கம் லிட்டில் என்ற அடிமை வம்சாவளி பெயரை மால்கம் எக்ஸ் என்று மாற்றிக் கொண்டார். அவரது அறியப்படாத ஆப்பிரிக்க மூதாதையர் குடும்பப் பெயரை அடையாளப் படுத்துவதற்காக எக்ஸ் என்ற குறியீட்டை இணைத்துக் கொண்டார். மால்கம் எக்ஸ் இஸ்லாமிய தேசத்தில் இணைந்த பிறகு அதன் செய்தி தொடர்பாளராக மாறி இஸ்லாம் தேசத்தின் முகமாகவே மாறிவிட்டார். அவருடைய களப்பணியும், எழுத்து வன்மையும், சொல்லாடலும் வெகுவிரைவில் இஸ்லாம் தேசத்தையும் அவரையும் புகழடையச் செய்தது. இஸ்லாம் தேசத்தின் பத்திரிகையை நிறுவினார். வானொலி தொலைக்காட்சிகளில் தோன்றி பிரச்சாரம் செய்தார். அகிம்சை, புரட்சி என்று எதுவும் இல்லை. வெள்ளை இன வெறியை எந்த வகையிலாவது அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மால்கம் எக்ஸின் வளர்ச்சி எலிஜாமுகமதுக்கு அச்சத்தை உருவாக்கியது. காவல் நிலையத்தில் கருப்பின மக்களை கொடுமைப் படுத்திய பொழுது மால்கம் எக்ஸ், இஸ்லாம் தேச உறுப்பினர்களை திரட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். இதை எலிஜாமுகமது விரும்பவில்லை. மேலும், மற்ற சிவில் உரிமைப் போராளிகளுடன் இணைந்து கருப்பின மக்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என்று மால்கம் எக்ஸ் முடிவு எடுத்தார். ஆனால், எலிஜா முகமது அவரை தடுத்தார்.  எலிஜா முகமது உருவாக்கி, அமல்படுத்திய தார்மீக நெறிமுறைகளை அவரே மீறியதைக் கண்டு மால்கம் எக்ஸ் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் எலிஜா முகமதுக்கு இருப்பதை மால்கம் எக்ஸால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எலிஜா முகமது மீது இஸ்லாம் தேசத்தின் 8 பெண்கள் புகார் அளித்ததை தொடர்ந்து மால்கம் எக்ஸ், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் மால்கம் எக்ஸ் பற்றிய செய்திகள் இஸ்லாமிய தேசத்தின் பத்திரிகைகளில் வராமல் தடுக்கப்பட்டது.

மால்கம் எக்ஸின் களப்பணிகளும் மக்கள் செல்வாக்கும் அவரது திறமைகளும் தன் தலைமைக்கு ஆபத்தாக முடியும் என்று எலிஜா முகமது நினைத்தார். அதனால் ஜான் எஃப் கென்னடியின் படுகொலையின் போது மால்கம் எக்ஸ் கூறிய கருத்துக்களுக்காக இஸ்லாம் தேசத்தில் இருந்து அவரை மூன்று மாதங்கள் இடைநீக்கம் செய்தனர். பின்னர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர் 1964 ம் ஆண்டு மெக்காவிற்கு புனித யாத்திரை சென்ற மால்கம் எக்ஸ் அங்கு பாரம்பரிய இஸ்லாத்திற்கு மாறினார்.  ஆப்ரோ அமெரிக்க அமைப்பை உருவாக்கி கருப்பின மக்களுக்கான மதசார்பற்ற அமைப்பாக அது செயல்படும் என்று அறிவித்தார். சிவில் உரிமை இயக்கத்துடன் இணைந்து கருப்பின மக்களுக்கான போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வந்தார். 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி ஒரு கூட்டத்தில் மால்கம் எக்ஸ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இஸ்லாம் தேசத்தின் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்..

மார்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் இருவரும் அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தில் இரு முக்கிய தலைவர்களாக இருந்தனர். இருவரும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான இன பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வந்து இன சுதந்திரத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்கள். இந்த இருவருக்கும் தங்கள் சித்தாந்தம் மற்றும் தந்திரோபாயங்களில் பெருமளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. சிவில் உரிமை இயக்கத்தில் முன்னணியில் இருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர், கருப்பர் வெள்ளையர்களை ஒன்றிணைத்தல், அகிம்சாவழி போராட்டங்களை முன்னெடுத்தார். மால்கம் எக்ஸ் கருப்பின மக்கள்  தாக்கப்படும் பொழுது அதே வடிவில் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று வாதிட்டார். ஒட்டு மொத்த வெள்ளையர்களுக்கு எதிராக மால்கம் எக்ஸின் செயல்பாடு இல்லை. கருப்பின மக்கள் ஒடுக்கப்படுகிறபோது, தாக்கப்படுகிறபோது அவர்கள் அகிம்சையை கடைப்பிடிப்பது பொருத்தமற்றது; அர்த்தமற்றது என்று அவர் கருதினார். கருப்பின தேசியவாதம், ஒன்றிணைதல் ஆகிய இரு நிலைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து வரலாற்றில் முன்னெப்பொழுதும் கண்டிராத கருப்பின மக்களின் ஒரு மாபெரும் விரிவான கூட்டமைப்பை உருவாக்க மால்கம் எக்ஸ் முயன்றார்.

மால்கம் எக்ஸை இஸ்லாம் தேசத்திலிருந்து வெளியேற்றிய பொழுது முகமது அலி அவருடன் இருக்கவில்லை. அவர் எலிஜா முகமதுக்கு ஆதரவாக நின்று மால்கம் எக்ஸை புறக்கணித்தார். இருவரும் ஒன்றாக சேர்ந்து பூர்வீகமான கானாவிற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டதை தவிர்த்து முகமது அலி மட்டும் தனியாக சென்றார். ஆனால் பிற்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுத்ததற்காக முகமது அலி மிகவும் மன வேதனை அடைந்தார். மால்கம் எக்ஸின் மரணம் முகமது அலியை உலுக்கி விட்டது. காலப்போக்கில் மால்கம் எக்ஸின் நியாயங்களை அலி, உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தார்.

எலிஜா முகமதுவின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் வாலஸ் டி முகமது தலைமைப் பொறுப்பை ஏற்றார். இஸ்லாம் தேசத்தின் அடிப்படை கோட்பாடுகளை மாற்றி சன்னி பிரிவுடன் இஸ்லாம் தேசம் நெருக்கமானது. மதத்தின் இனமற்ற பார்வை வெளிப்பட்டது. வெள்ளையர்களைப் பற்றி குரோதமாக பேசுவது நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முகமது அலி, எலிஜா முகமதுவின் கோட்பாட்டை மாற்றாமல் இருந்த பிரிவுக்கு செல்லாமல் அவரது மகன் வாலஸ் தலைமையேற்ற சன்னி பிரிவுடன் இணைந்தார். "வாலஸ் தனது படிப்பிலிருந்து தனது தந்தை உண்மையான இஸ்லாத்தை போதிக்கவில்லை என்று அறிந்து கொண்டார். வாலஸ் குர்ஆனின் உண்மையான அர்த்தத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். எனக்கு இது சரியாக தோன்றியது. அதனால் நான் வாலசை பின் தொடர்ந்தேன். நான் எலிஜா முகமதுவின் கோட்பாட்டை நம்புவதை மாற்றிக் கொண்டேன். இப்போது நான் நம்புவது உண்மையான இஸ்லாம்" என்று முகமது அலி கூறினார். முகமதுஅலி 1972ல் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டார். மால்கம் எக்ஸ் உத்வேகம் அடைந்தது போலவே இவரும் மெக்கா பயணத்தின் பொழுது உத்வேகம் அடைந்தார். பல வண்ண மக்களை ஒன்றாகக் கண்ட பொழுது அவரது இன சமத்துவ கருத்துக்கள் வலுப்பட்டது.

முகமது அலியின் குத்துச்சண்டை வாழ்க்கையில் மதமும், பெயர் மாற்றமும் முக்கிய பங்காற்றியது. அவரது வியட்நாம் போர் எதிர்ப்பு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருந்ததோ அதேபோன்று வேறொரு தளத்தில் மத நம்பிக்கை முக்கியத்துவம் உடையதாக இருந்தது. எனவேதான் அன்றைய காலகட்டத்தில் முகமது அலியை சுற்றி இருந்த மத நம்பிக்கை, சிவில் உரிமை இயக்கம், இஸ்லாம் தேசம், மால்கம் எக்ஸ் போன்றவர்களின் ஒற்றுமை வேற்றுமைகளை புரிந்து கொண்டு முகமது அலியை மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதற்காகத்தான் மேற்கண்ட பின்னணிகள் இங்கு மிக மிக சுருக்கமாக  சொல்லப்பட்டுள்ளது.

அ.பாக்கியம்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...