Pages

சனி, ஆகஸ்ட் 05, 2023

வா! அமெரிக்காவே! வா!

தொடர்:14

குத்துச்சண்டை வீரர்கள் பலரும், அமெரிக்காவின் நிறவெறியர்களும், நிறவெறி பத்திரிகைகளும் முகமது அலியின் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நியூயார்க் டைம் பத்திரிக்கை உட்பட பல பிரபலமான பத்திரிகைகள் பெயர் மாற்றத்தை குறிப்பிடாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து கேசியஸ் கிளே என்றே எழுதினார்கள். இதனால் முகமதுஅலி கொடுங்கோபம் கொண்டார். கருப்பின அடிமைகள், அடிமை உடைமையாளர்களின் பெயர்களையே தாங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறவெறியர்களின் செயல்பாடு இருந்தது.

1964 பிப்ரவரி 25 லிஸ்டனை வீழ்த்திய பிறகு மீண்டும் 1965 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி லிஸ்டனுடன் நடைபெற்ற போட்டியில் முகமது அலி வெற்றி பெற்றார். லிஸ்டனை வீழ்த்திய பிறகு 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகமது அலி தடை செய்யப்படும் காலம் வரை ஃப்ளாயிட் பேட்டர்சன், ஜார்ஜ் ஸ்வாலோ, ஹென்றி கூப்பர், பிரையன் லண்டன், காரல் மில்டன் பர்கர், கிலீவ் லேண்ட் வில்லியம்ஸ், எர்னி டெரல், ஜோரா போலி ஆகியோர்களுடன் 9 போட்டிகளில் மோதினார். 9 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினார். இவற்றில் ஃப்ளாயிட் பேட்டர்சன் மற்றும் எர்னி டெரல் ஆகியோரிடம் இனவெறி தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஃப்ளாயிட் பேட்டர்சன்னுடனான மோதலின் போது மத ரீதியிலான சாயம் பூசப்பட்டது.

ஃப்ளாயிட் பேட்டர்சன், சன்னி லிஸ்டனிடம் தோல்வி அடைந்ததை மிகுந்த அவமானமாக கருதினார். லிஸ்டனிடம் தோற்ற பிறகு அவர் தொடர்ந்து 5 போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். ஆனாலும் முகமது அலியுடன் போட்டியிட்டு அவரை தோற்கடித்தால்தான் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும் என்று நம்பினார். "ஒரு கருப்பு முஸ்லிமிடமிருந்து பட்டத்தை வெல்லும் புனிதப் போர் என்று பேட்டர்சன் அறிவித்தார். நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் கேசியஸ் கிளேவுடன் மோதுவதை தேசபக்த கடமையாக கருதுகிறேன். நான் அமெரிக்காவின் கிரீடத்தை ஒரு முஸ்லிமிடமிருந்து மீட்டுக் கொண்டு வருவேன் என்று சபதம் எடுத்து அமெரிக்க கொடியை தனது உடலில் இறுக்கமாக கட்டிக்கொண்டு களத்திற்கு வந்தார்.

உலக ஹெவி வெயிட் சாம்பியனாக ஒரு கருப்பின முஸ்லிம் உருவம் விளையாட்டையும் நாட்டையும் இழிவுபடுத்துகிறது என்று மிகக் கீழ்த்தரமான முறையில் முகமது அலியை குறிப்பிட்டார். தனது பெயர் மாற்றத்தை பேட்டர்சன் ஏற்றுக்கொள்ளாமல் பழைய பெயரையே மீண்டும் மீண்டும் திட்டமிட்டு உச்சரித்ததால் முகமது அலி கடும் சினம் கொண்டார். 1965 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி போட்டி நடைபெற்றது. முகமது அலி 12வது சுற்றில் பேட்டர்சனை வீழ்த்தினார். முதலிலேயே பேட்டர்சனை முகமது அலி வீழ்த்தியிருக்க முடியும். ஆனால், அவரின் மேல் இருந்த கோபத்தால்தான் போட்டியை நீட்டித்துச் சென்றார். அதன் மூலம் பேட்டர்சனை அதிகளவு காயப்படுத்தினார் என்று விமர்சகர்கள் முகமது அலி மீது குற்றம்சாட்டினார்கள். ஆனால், அதை முகமது அலி மறுத்தார்.

          போட்டி வளையத்துக்குள் முகமது அலியின் பஞ்ச்களால் பந்தாடப்பட்ட ஃப்ளாயிட் பேட்டர்சன் சர்வநாடியும் ஒடுங்கி கீழே விழந்து கிடந்தார். அப்போது முகமது அலி…

‘‘வா அமெரிக்காவே வா

வா வெள்ளை அமெரிக்காவே வா ’’

என்று பேட்டர்சனை பார்த்து கர்ஜித்தார். அவர் தன்னை அமெரிக்க வெள்ளை நிறத்தின் பிரதிநிதியாக, கத்தோலிக்க மதத்தின் புனிதராக பிரகடனம் செய்த காரணத்தினால் முகமது அலி சினம் கொண்டு பேட்டர்சனைப் பார்த்து சீறினார்.

1967 பிப்ரவரி 6ஆம் தேதி எர்னி டெரல் என்ற உலக ஹெவி வெயிட் சாம்பியனுடன் முகமது அலி மோதினார்.போட்டி நடப்பதற்கு முன்பு எர்னி டெரலும், முகமது அலியை பழைய பெயரிலேயே அழைத்தார். கிடார் இசைக்கருவி வாசிப்பவரான எர்னி டெரல்,ஹெவி வெயிட்’ என்ற இசைக்குழுவையும் நடத்தி வந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக நியூயார்க் நகரில் உள்ள ஏபிசி ஸ்டுடியோவில் நடைபெற்ற நேர்காணலின்போது எர்னி டெரலும்-முகமது அலியும் மோதிக் கொள்ளும் நிலைக்குச் சென்றனர். காரணம் டெரல், முகமது அலியை அவரது பழைய பெயரான கேசியஸ் கிளே என்று மீண்டும் மீண்டும் அழைத்தார்

முகமது அலி கோபமடைந்து அவ்வாறு அழைக்கக்கூடாது என்று கத்தினார். டெரல் கேட்கவில்லை. அப்போது அவர் அலி, என் பெயர் முகமது அலி என்றும் அப்படி நீ என்னை இப்போது அழைக்காவிட்டால் குத்துச்சண்டை வளையத்தின் மையத்தில் அழைக்கச் செய்வேன் என்று ஆக்ரோஷமாக கூறினார். ஆனாலும் டெரலின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் கேசியஸ் கிளே என்று அழைத்து கிண்டலடித்தார். பிப்ரவரி 4ம் தேதி ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் டெரல் தனது இசைக் குழு மூலமாக ஒரு பாடலை பாடிய பொழுது கேசியஸ் கிளே என்று குறிப்பிட்டு பாடினார். பாடலின் ஒரு வரியில் உன் பெயரை மாற்றியது அவமானம் அல்லவா? உன் அம்சங்களை நான் மாற்றுவேன் என்று பாடி முகமது அலியை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றார்.

குத்துச்சண்டை களத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதிலும் அவரவர் உடல் பலம் இருந்தாலும் மத ரீதியிலான தாக்குதலும் இனவெறியின் தாக்கமும் எந்த அளவு இருந்தது என்பதை இந்த காட்சிகள் நமக்கு தெளிவுப்படுத்தும். போட்டி துவங்கியது. அனைத்து சுற்றுகளிலும் முகமது அலி முன்னிலையில் இருந்தார். இரண்டு சுற்றுகள் மட்டும் தான் டெரலால் ஈடு கொடுக்க முடிந்தது. எர்னி டெரலை நாக்அவுட் மூலம் முகமது அலி வீழ்த்தி இருக்கலாம். ஆனால் அவரை மேலும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக சுற்றுக்களை நீட்டித்துச் சென்றதாக இப்போதும் அலி மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தினர். இதையும் மறுத்த அலி, டெரல் நன்றாக சண்டை செய்ததால் சுற்றுக்கள் நீண்டது என்று விளக்கம் அளித்தார்.  டெரலின் திறமையை மெச்சிய அலிக்கு அவரின் அகங்காரத்தால் ஏற்பட்ட கோபம் அடங்கவில்லை. மேடையில் தன் சரமாரியான குத்துக்களால் டெரலை நிலைகுலையச் செய்து வீழ்த்திய  முகமது அலி அவரைப் பார்த்து

என் பெயர் என்ன?

என் பெயர் கிளேயா?

முட்டாள் என் பெயர் என்ன?

என்று மீண்டும் மீண்டும் கேட்டு, தன் பெயர் முகமது அலி என்று உச்சரிக்கும் அளவிற்கு கர்ஜனை செய்தார். பெயர் மாற்றத்தை அங்கீகரிக்காததை எதிர்த்து வெகுண்டு வினையாற்றினார்.

குத்துச்சண்டை மேடையை தான் பட்டம் வெல்வதற்காக மட்டுமல்ல… கருப்பின மக்களின் சம உரிமையை நிலைநாட்டும் மேடையாகவும் முகமது அலி மாற்றினார். வளையத்திற்குள் அவர் இதே எண்ணத்துடன் சுற்றி சுழன்று வந்து எதிரியை நையப்புடைத்தார். நிறவெறி நெருப்பில் நீந்தி கருப்பின மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு வழிவகுத்தார். முகமது அலியின் வெற்றி கருப்பின மக்கள் பயமின்றி சம உரிமை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியது. முகமது அலியின் போட்டியை கண்ணுற்ற பெரும்பாலான கருப்பின அமெரிக்கர்கள் பயத்தை எளிமையாக வெற்றி கொண்டனர். முகமது அலி அவர் வழியில் கருப்பின மக்களை தைரியப்படுத்தினார் என்று செய்தி தொகுப்பாளர் பிரையன் காம்பெல் உட்பட பலர் எழுதினார்கள். இந்தப் போட்டிக்குப் பிறகு முகமது அலியை பழைய பெயரில் அழைப்பது குறைந்து விட்டது. போட்டிக்கு முன்னும் போட்டியின் மேடையிலும் நடந்த மோதல் பெயர் மாற்றத்தை அங்கீகரிக்க செய்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...