Pages

புதன், ஆகஸ்ட் 02, 2023

ஏன் சீனாவில் சேரிகள் இல்லை?

 

உலக அரங்கில் சீனா-6

பகுதி-2

அ.பாக்கியம்


ஹுக்கூ(Hukou) அமைப்பும் சோசலிச கொள்கையும்:

இதர நாடுகளில் இருந்து சீனாவின் நகர்மயமாக்கல் வேறுபட்டதாக இருந்தது. தொழில்துறை மற்றும் சேவை தொடர்பான வேலைகளுக்கு கிராமப்புறத்தில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வது ஊக்குவிக்கப்பட்டது. இது வேலை தேடுவோரின் படையெடுப்பாக மட்டும் இல்லை. மாறாக கிராமப்புறத்தில் இருந்து வருகிற பொழுது கிராமத்தில் இருக்கிற அவர்களின் நிலங்களை, வீடுகளை மீண்டும் அணுகுவதற்கான திட்டத்துடன்தான் இந்த இடப்பெயர்வு நடந்தது. 1950 ஆம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பெரும் நிலச் சீர்திருத்த முறைகளை அமல்படுத்தியது. தனியார்களிடமிருந்த நிலங்கள் ஒழிக்கப்பட்டு, கூட்டு உரிமையாக மாற்றப்பட்டது. இதை கிராம கம்யூன்கள் என்றும் அழைப்பார்கள். 1978ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தகாலம் துவங்கியது. உற்பத்தியையும் உற்பத்தி சக்திகளையும் அதிகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக குடும்ப பொறுப்பு அமைப்பு (Household Responsibility System) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. விவசாயத்திற்காக மட்டும் நிலங்கள் தனிப்பட்ட குடும்ப அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டது. இது விவசாய உற்பத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய  அதே நேரத்தில் நிலத்தின்மீதான கூட்டு உரிமையும் பாதுகாக்கப்பட்டது. தனியார் உரிமை அனுமதிக்கப்படவில்லை

உலகின் எந்த நாடுகளை விடவும் அதிகமான வீட்டு உரிமையாளர்கள் உடைய நாடு சீனாவாகும். சுமார் 90% வீட்டு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் குறைவான வாடகையில் இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் சொந்த கிராமங்களில் வீடு இருக்கிறது என்பதையும் இணைத்துத்தான் இந்த 90 சதவீதம் என்பதை அறிந்து கொள்கிற பொழுது எவ்வளவு பெரிய சாதனை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கொள்கையின் மற்றொரு முக்கியமான அம்சம் பொருளாதார நெருக்கடிகள், வேலையின்மை போன்ற பிரச்சனைகள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் நகர்ப்புறங்களில் ஏற்படுகிற பொழுது, தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி அவர்களுக்கு சொந்தமான வீடுகளில் வசித்துக் கொண்டு விவசாய உற்பத்தியில் ஈடுபடுவதற்குமான அல்லது உள்ளூர் வேலைகளில் ஈடுபடுவதற்கான உத்தரவாதமான அமைப்பாக இந்த குடும்ப பொறுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

சீனாவில் ஏற்பட்ட சில பொருளாதார நெருக்கடிகளை அவர்களால் தாங்கிக் கொண்டு முன்னேற முடிந்தது என்றால் இது போன்ற கட்டமைப்பு தான் முக்கிய பங்கு வைத்து இருக்கிறது என்பதை பொருளாதார ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. உதாரணமாக 2008ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார மந்தம்  ஏற்பட்டபொழுது சீனாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் குறிப்பாக உற்பத்திதுறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 30 மில்லியன் அதாவது 3 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். இதேபோன்று கோவிட் 19 தொற்று நோய் காலத்தின் போது சேவைதுறை மற்றும் உற்பத்திதுறை வேலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இக்காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு சென்றனர். நிலங்களில் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் சீனாவின் நகரமயமாக்களில் இருக்கிறது. சீனாவில் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருபவர்களை நிர்வகிப்பதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. சீனா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் தேசியரீதியிலான இதுபோன்ற திட்டமிடல்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது. ஆகவே மக்கள் பங்கேற்க கூடிய முறையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 1950 ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியிலேயே உருவாக்கப்பட்டது. இடப்பெயர்வை ஒழுங்குபடுத்துவதற்காக ஹுக்கூ (hokou) என்ற அமைப்பு அதாவது "குடும்ப பதிவுமுறை" அமைக்கப்பட்டது. இதன்படி தங்கள் சொந்த ஊரில் இருப்பவர்களுக்கு மானியத்துடன் கூடிய வீடுகள், கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம், வேலையில்லா கால உதவித்தொகை, காப்பீடு, போன்றவைகள் வழங்கப்பட்டது. நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து வேலைக்கு செல்வதால்   குடும்ப பதிவுமுறை திட்டம் சலுகைகள் ஒரு பகுதி மட்டும் நகர்புறத்தில் வழங்கப்பட்டது. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு நீண்ட நாட்கள் வெளியூரில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சுமார் 7 மில்லியன் குழந்தைகள் அவ்வாறு கிராமங்களில் இருக்கிறார்கள். கடந்த காலத்திலிருந்து இவை படிப்படியாக குறைந்து வருகிறது

வீடற்றவர்களின் பிரச்சனை

2000 வது ஆண்டுகளுக்கு முன்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடியிருப்பு நிலையும், அவர்கள் உரிமைகள், வீடு இல்லாதவர்களின் பிரச்சனைகளும் பெரும் பிரச்சனையாக மாறியது. நகர்ப்புறங்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு நிவாரண தங்குமிடங்களை மாநில அரசு உருவாக்கியது. குடும்ப பதிவுமுறையில் பதிவுசெய்யாமல் வந்தவர்களையும், வீடு இல்லாதவர்களையும் மாநிலஅரசு உணவுடன் கூடிய தற்காலிக தங்குமிடங்களை அளிக்கும் திட்டங்களை நிறைவேற்றியது. அவர்களின் சொந்த ஊர்களில் வீடுகளை ஒதுக்கிக் கொடுக்கும் பொறுப்பை உள்ளூர் அரசாங்கத்திடம் ஒப்படைத்து வீடுகள் ஒதுக்கப்பட்டது. ஷாங்காய் போன்ற பெரும் நகரங்களில் வீடு இல்லாத மக்களை, உள்ளூர் காவல்துறை, நகர்ப்புற நிர்வாக அதிகாரிகள், பொது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்து அருகில் உள்ள நிவாரண நிலையங்களுக்கும், தற்காலிக தங்குமிடங்களுக்கும் அனுப்பி உதவுவதை அமல்படுத்தியது. இதற்கான அனைத்து செலவுகளும் ஷாங்காய் நகர நிதி வரவு செலவு திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிவாரண மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்குவதுடன் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவசிகிச்சை அளிப்பதற்கான வசதிகளையும், அவர்களின் உறவினர்களுடனும், உள்ளூர் அரசாங்கத்துடனும்  தொடர்பு கொண்டு அவர்களின் இருப்பிடங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து அனுப்புகிறார்கள்.

உறவினர்கள் இல்லாத வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் அல்லது வேலை செய்யும் திறன் இல்லாத மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் இருக்கிறார்கள். இந்த மக்களுக்கு உள்ளூர் நகர மக்கள் அரசாங்கம் முழு பொறுப்பு எடுத்து கவனிக்க வேண்டும். உள்ளூரில் உள்ள கட்சிக் கிளைகள்  இவர்களை அலுவலகங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேசிய ஆதரவை வழங்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை அமல்படுத்தக்கூடிய முறையில் சமூக உதவிக்கான இடைக்கால நடவடிக்கைகள் என்ற கொள்கை உருவாக்கப்பட்டு (Interim Measures for Social Assistance) அமல்படுத்தப்பட்டது. நகரத்திற்கு பயணங்கள் மூலமாகவந்து சிக்கிக்கொண்டவர்களையும், வீடு இல்லாதவர்களையும் நகரத்தை விட்டு கட்டாயமாக வெளியேற்றக் கூடிய வேலைகளை செய்வது இல்லைமாறாக அவர்களுக்கு முறையான உதவிகளும் தங்குமிடமும், அடுத்து வாழ்வதற்கான ஆதரவு நிலைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய நிர்வாக முறைகளை வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறார்கள்.

நவீன கால சவால்களை எதிர்கொள்வது எப்படி?

நிவாரண மையங்களை உருவாக்குவதும், தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கைதான். ஆனாலும் இது நிரந்தரமான தீர்வு அல்ல என்பதை சீன அரசாங்கம் முடிவு செய்து தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. சீனாவில் 92 கோடி நகர மக்கள் இருக்கிறார்கள். ஷாங்காய் போன்ற பெரும் நகரங்களில் 2.5 கோடி மக்கள் தொகை இருக்கிறது. ஷாங்காய்நகர் மட்டும் இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் சமத்துவமின்மை ஏற்படுவதை நிவர்த்தி செய்ய வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சி  20 வது காங்கிரசில் சீன சமூகம் எதிர்கொள்ளும் முக்கியமான முரண்பாடாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளது சமச்சீரற்ற நிலை. அதாவது கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், தொழில் வளர்ச்சி ஏற்பட்ட பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி ஏற்படடாத பின்தங்கிய பகுதிகளுக்கும் உள்ள இடைவெளிகள், ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளிகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கான மிகப்பெரும் கடமை உள்ளது என்று முடிவெடுத்தது

இதற்காக நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை மேலும் வளர்ச்சியடைய கூடியதாக மாற்றுவதற்கு அரசு பலகட்டமைப்பு சீர்திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பத்தாண்டு காலம் எடுத்த தீவிர வறுமைஒழிப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதால் கிராமத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதனால் நகரங்களுக்கு புலம்பெயரும்  தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. கிராமப்புறத்தில் தொழில் துவங்கிட, கல்வியை மேம்படுத்திட, சுகாதார பாதுகாப்பு வழங்கிட, உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு, வருமான பரிமாற்றத்தை பங்கீடுசெய்யும் திட்டங்களில் பெருமளவு முதலீடு செய்ததால் கிராமப்புறங்களில் வாழ்க்கை சூழலையும் வேலைவாய்ப்பு சூழ்நிலையும் மக்கள் கிராமப்புறத்தில் தங்கி வேலை செய்ய தொடங்கினார். தற்போது நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் அவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டு 24 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். 2019 ஆம் ஆண்டு 85 லட்சம் புலம்பெயர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளார்கள். வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக எடுத்த முயற்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இது ஏற்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் முக்கிய நகரங்கள் குடும்பபதிவு முறைகளை தளர்த்தி உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பபதிவுமுறை இல்லாமலேயே குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அனுமதித்தது. 2019 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 30 லட்சம் மக்கள் தொகைக்கு கீழே உள்ள நகரங்கள் குடும்ப பதிவு முறையை  ரத்து செய்யலாம் என்ற முடிவின்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் குடும்ப பதிவு  முறைகளை தளர்த்த வேண்டும் என்ற முடிவின்படி தளர்த்தி உள்ளனர். 14வது ஐந்தாண்டு திட்டத்தின்படியும், 2035ஆம் ஆண்டுக்குள் வரி சீர்திருத்தத்தின் மூலம் வருமானத்தை மறுப்பங்கீடு செய்வதிலும், பணக்காரர் ஏழை என்ற இடைவெளியை குறைப்பதற்கும், மில்லியன் கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் முழுமையான பயனை அடைவதற்குமான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இரட்டை சுழற்சி முறை அதாவது உள்ளூர் வாங்கும் சக்திகளை அதிகப்படுத்துவதின் ஒரு பகுதியாக புலம் பெயர்ந்தோர் செலவின சக்தியை அதிகரிக்க அரசாங்கம் 5.3 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. வீட்டு வசதி, கல்வி, சுகாதார பாதுகாப்பு, ஆகிய மூன்று பெரும் சவால்களை வெற்றி கொள்ளும் முயற்சிகள் நடைபெறும் அதே வேளையில் குடிமக்கள் அனைவருக்கும் பொதுசெழிப்பு என்ற உயரிய நோக்கத்தை அடைவது மூலம் நவீன சோஷலிச சமுதாயத்தை கட்டி எழுப்பும் பணி நடைபெறுகிறது

முற்றும்.

அ.பாக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...