Pages

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2023

உலகை உலுக்கிய ஒரு செயல்

 

தொடர்: 15

அ.பாக்கியம்



அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிர வைத்தது; யுத்த எதிர்ப்பாளர்களிடம் எழுச்சியூட்டியது. அமெரிக்காவில் சிவில்உரிமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கருப்பர்களையும் யுத்தஎதிர்ப்பில் ஈடுபட்டிருந்த வெள்ளையர்களையும் ஒரு தளத்தில் இணைத்த செயலாக முகமது அலியின் செயல் அமைந்திருந்தது.

அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவர்கள் கட்டாய ராணுவசேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. முகமது அலியின் பெயரும் 18 வயது முடிந்த பிறகு கட்டாய ராணுவபணிக்காக 1962ல் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்க ஆயுதப்படைக்கான தகுதி தேர்வு நடந்த பொழுது அதில் முகமது அலி தோல்வி அடைந்தார். அவரது எழுத்துத்திறன் டிஸ்லெக்ஸியா காரணமாக தரமற்றதாக இருந்தது. அவர் தேர்வில் தோல்வி அடைந்ததை பற்றி அவரிடம் கேட்ட பொழுது, ‘‘நான் குத்துச்சண்டை யில்தான் பெரியவன் என்று கூறினேனே ஒழிய புத்திசாலி என்று கூறவில்லையே’’ என பதிலளித்தார்.  1965 ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா, வியட்நாம் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு அதிக வீரர்களை தேடி அலைந்தது. ராணுவசட்டத்தின் விதிகளை தளர்த்தி அதிக நபர்களை சேர்க்க அமெரிக்க அரசாங்கம் முடிவெடுத்து அதன்படி செயல்பட்டது. விதிகள் தளர்த்தப் பட்டதால் முகமதுஅலியும் ராணுவத்தில் சேரவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அவருக்கும்  ராணுவத்தில் சேருவதற்கான அழைப்பு அனுப்ப பட்டது.

1967 ஏப்ரல் 28 அமெரிக்காவின் ஹோஸ்டனில் உள்ள ஆயுதப்படை பிரிவில் சேர்வதற்கு அவர் அழைக்கப்பட்டார். முகமது அலியும் அங்கு சென்றிருந்தார். அதிகாரிகள் அவரது பெயரைக் கூறி அழைத்தனர். ஆனால், முகமது அலி செல்லவில்லை. முதல் இரண்டு முறை அழைத்தும் முகமது அலி செல்லாததால் ஆத்திரமடைந்த  ராணுவ அதிகாரி, முகமது அலி வரவில்லை என்றால் அவருக்கு  ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று ஒலிபெருக்கியில் ஓலமிட்டார். ஆனாலும் முகமது அலி அசைந்து கொடுக்கவில்லை.

தனது முடிவில் உறுதியாக இருந்து விட்டார். உடனே முகமது அலி கைது செய்யப்பட்டார். அன்று மாலையே நியூயார்க் நகரில் உள்ள அரசின் தடகள ஆணையம் குத்துச்சண்டைப் போட்டியில் அவர் பங்கேற்பதற்கான உரிமத்தை  தற்காலிகமாக ரத்து செய்தது. அவரது பட்டத்தை பறித்தது. இதர குத்துச்சண்டை அமைப்புகளும் இதேபோன்று செய்தன. முகமது அலி குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க  தடை விதிக்கப்பட்டது.

கட்டாய ராணுவ பணியில் சேர மறுத்த முகமது அலியின் செயல் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. ஒலிம்பிக் போட்டியில் பட்டம் வென்ற பெருமைக்கு சொந்தக்காரர்; மத மாற்றம் பெயர் மாற்றத்தால் அமெரிக்கா முழுவதும் அறியப்பட்டவர். எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது 1960ல் தொடங்கிய அவரது தொழில் முறை குத்துச்சண்டையில் 1967 மார்ச் 22 வரை நடைபெற்ற 29 போட்டிகளிலும் வெற்றி வாகைசூடி புகழின் உச்சம் தொட்டவர். குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலமாக லட்சக்கணக்கான டாலர்களை வருமானமாக ஈட்டிக் கொண்டிருந்தவர். புகழ்பெற்ற பின்னணியில் அமெரிக்க யுத்தவெறிக்கு எதிராக முகமது அலி எடுத்த முடிவு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது அரசியல் வாழ்க்கை நிறவெறி, யுத்த வெறிக்கு எதிராக கொள்கை ரீதியாகவும், தன்னலமற்றதாகவும் இருந்தது என்பதற்கு இந்த முடிவு சாட்சியமாக அமைந்தது.

ஏராளமான ராணுவ வீரர்கள் குழுமிஇருக்க முகமதுஅலி  பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். "எனக்கு வியட்நாமியர்களுடன் எந்த விரோதமும் இல்லை. என்னை நீக்ரோ என்று எந்த வியட்நாமியனும் அழைக்கவில்லை. ஆகவே, அவர்களுடன் சண்டையிட நான் செல்ல மாட்டேன்’’ என்று முழங்கினார். இதைக் கேட்ட ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். முகமது அலி அறிவித்த நேரம்  வியட்நாமிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் யுத்த எதிர்ப்பு போராட்டம் வேகம் பிடித்திருந்தகாலம்.

யுத்த எதிர்ப்பு சமாதான செயல்பாட்டாளர் டேனியல் பெரிக் முகமது அலியின் இந்த முடிவு வெள்ளையர்கள் மத்தியில் உருவான போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது என்று கூறினார். போர் எதிர்ப்பு இயக்கம் முகமது அலியின் இந்த வார்த்தைகளுக்கு பின்னால் அணி திரண்டது. மற்றொரு புறம் அரசின் அடிவருடிகள், முகமது அலி அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கையெழுத்து போட்டு ராணுவத்தில் சேரவேண்டும். அரசின் முடிவை அமலாக்க வேண்டும். வியட்நாம் போரில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்கள். அரசும், அரசு நிறுவனங்களும் முகமது அலியை படுமோசமான, தேச விரோதியாக சித்தரித்தனர். அவர்களை அலட்சியப்படுத்திய முகமதுஅலி, மண்டியிட மறுத்து விட்டார்.

1967 ஜூன் 19 கீழமை நீதிமன்றம் முகமது அலி குற்றவாளி என்று அறிவித்தது. படையில் சேர மறுத்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. அவரது சாம்பியன் பட்டம் பறிக்கப் பட்டது. முகமது அலி மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவின் மீது 21 நிமிடம் விவாதம் நடந்த பிறகு நீதிபதி, முகமது அலி குற்றவாளி என்று அறிவித்து, கீழமை நீதிமன்றம் அறிவித்த தண்டனையை உறுதி செய்தார். இதையடுத்து, முகமது அலி அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு செய்தார்.

முகமதுஅலி மன்னிப்புக் கேட்டு ராணுவத்தில் சேருவார் என்று அமெரிக்க பத்திரிகைகளும் அரசாங்க கைக்கூலிகளும் வதந்திகளை பரப்பினார்கள். ஒரு மனிதனின் முடிவால் மக்களிடம் ஏற்பட்டிருக்கக் கூடிய நன்மதிப்பை சீர்குலைக்க இது போன்ற நடவடிக்கைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஈடுபடுவது இயல்புதான். ஆனால் முகமது அலி தெளிவாக இருந்தார். பத்திரிகையாளர்களை அழைத்து, "நான் சொல்வதைக் கேளுங்கள். வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. ஆனால், நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன்" என்று கூறி வதந்திகளுக்கு வாய்ப்பூட்டு போட்டார்.

மேலும் அவர் "வியட்நாமியர்களோ, சீனர்களோ அல்லது ஜப்பானியர்களோ எனது எதிரிகள் அல்ல. எனது எதிரிகள் வெள்ளை நிற வெறியாளர்கள். எனக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்கும் பொழுது நீங்கள்(அமெரிக்க அரசு) என்னை எதிர்ப்பீர்கள்; நான் நியாயம் கேட்கும் பொழுது என்னை எதிர்ப்பீர்கள்; நான் சமத்துவத்தை விரும்பும் பொழுது என்னை எதிர்ப்பீர்கள்; என் மத நம்பிக்கைகளுக்காக எனக்காக நிற்க மாட்டீர்கள்.. எனது நாட்டில் என்னுடன் நிற்காத நீங்கள், நான் எங்காவது சென்று சண்டையிட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறீர்கள்" என்று அமெரிக்க அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்.

இதே காலகட்டத்தில் கருப்பின மக்களின் சம உரிமைகளுக்காக மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தார். முகமது அலியின் இந்த நடவடிக்கையால் அவர் வியட்நாமிற்கு எதிரான போரையும் எதிர்க்கத் துவங்கியிருந்தார். அவர் முகமது அலியை மேற்கோள் காட்டி பேச ஆரம்பித்தார். "முகமது அலி சொல்வது போல் நாம் எல்லோரும் கருப்பு, பழுப்பு நிறத்தவர்கள் மற்றும் ஏழைகளாக இருக்கிறோம். ஒடுக்குமுறை அமைப்புகளால் வஞ்சிக்கப் பட்டவர்களாக இருக்கிறோம்" என்று முகமது அலியின் கூற்றை எடுத்துரைத்தார்.

முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ் வில்லியில் நடைபெற்ற கருப்பின மக்களின் சம உரிமை போராட்டத்தின் போது மார்ட்டின் லூதர் கிங்கும் முகமது அலியும் ஒன்றாக கலந்து கொண்டனர். அந்தப் பெரும் கூட்டத்தில் முகமது அலி பேசுகிற பொழுது "சுதந்திரம் நீதி சமத்துவம் ஆகியவற்றுக்காக நடக்கும் போராட்டத்தில் உங்களுடன் நானும் இருக்கிறேன். எனது சொந்த மக்கள், என்னோடு வளர்ந்தவர்கள், என்னோடு படித்தவர்கள், எனது உறவினர்கள், சுதந்திரம், நீதி, குடியிருப்பு சம உரிமை கேட்பதற்காக அவர்கள் தாக்கப்படுவதையும் தெருக்களில் விரட்டி அடிக்கப்படுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது" என்று முகமது அலி எழுச்சி உரையாற்றினார். கருப்பின மக்களோ தங்களுக்கான வீரன் கிடைத்து விட்டான் என்று பொங்கிப் பரவசம் அடைந்தனர்.

அந்தக் கூட்டத்திற்கு அடுத்த நாள் தனது சொந்த ஊரில் பத்திரிகையாளர்களை சந்தித்த முகமது அலி, ‘‘எனது சொந்த ஊரில் கருப்பின மக்களை நீக்ரோ என்று அழைப்பார்கள். சாதாரண மனித உரிமைகூட மறுக்கப்படும். நாய் போல் எங்களை நடத்துவார்கள். ஆனால் நான் அமெரிக்க சீருடை அணிந்து, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் பழுப்புநிற வியட்நாமியரை துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் ஏன் கொல்ல வேண்டும்" என்று ஆவேசமாகக் கூறினார். ‘‘வெள்ளை நிற வெறி எஜமானவர்கள், வெள்ளை நிறமல்லாத மற்ற எளிய நாட்டை அடிமையாக்கி இருள் படர்ந்த ஆதிக்கம் உருவாக, நான் பத்தாயிரம் மைல்கள் கடந்து செல்ல மாட்டேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார். . முகமது அலியின் இந்த பத்திரிகை சந்திப்பு, செய்திகள் அமெரிக்க முழுவதும் தலைப்புச் செய்திகளாக மாறின. அமெரிக்க நிறவெறி ஏகாதிபத்தியத்திற்கு பெரும் குடைச்சலாக மாறியது. மேலும் கருப்பின மக்களும் வெள்ளையர்களும் யுத்தத்திற்கு எதிராக அணிதிரள ஆரம்பித்தனர்.

அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முகமது அலி மேலும் ஒரு விஷயத்தை தெரிவித்தார். ‘‘இப்படி ஒருநிலை எடுப்பதால் எனக்கு கோடிக்கணக்கான டாலர் இழப்பு ஏற்படும் என்று பலரும் போதிக்கிறார்கள். நான் மீண்டும் அவர்களுக்கு சொல்லிக் கொள்வேன். இங்குதான் என் மக்களின் உண்மையான எதிரிகள் இருக்கின்றனர். சுதந்திரம்,நீதி சமத்துவம்கேட்டு போராடும் எம்மக்களை அடிமைப்படுத்த என்னை ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சதிக்கு ஆட்பட்டு என் மதத்தையும் என்னையும் இழிவுபடுத்திக் கொள்ள மாட்டேன்" என்று கூறினார். முகமது அலியின் அமெரிக்க யுத்த வெறிக்கு எதிரான பேச்சுக்கள் அனைத்தும் அமெரிக்க சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...