Pages

திங்கள், செப்டம்பர் 04, 2023

பரவசப்படுத்திய கானா விஜயம்

 தொடர்: 20


ஆரம்ப காலத்தில் இனவெறி, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் முகமதுஅலி ஒரு தெளிவான வெளிப்படையான நிலைபாட்டை எடுத்தார். இதனால் அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பதைக் கடந்து அதிகமான அளவிற்கு மக்களிடையே அறிமுகமானார். இனவெறிக்கு எதிரான நிலைப்பாடு அவரை சக்திவாய்ந்த மனிதராகவும், கருப்பின மக்களின் நம்பிக்கையின் அடையாளமாகவும் மாற்றியது. ஆரம்ப காலத்தில் மட்டுமல்ல… அதற்கு பிறகும் அநீதிக்கு எதிரான நிலைபாட்டை அவர் தொடர்ந்து எடுத்தார்.

குத்துச் சண்டையில் இருந்து ஓய்வு பெறும் தருவாயில், உலகின் பல பிரச்சனைகளில் அவர் தலையிட்டார். இதனால் அமெரிக்க அரசால் முகமது அலியை புறக்கணிக்க முடியவில்லை. அவரை பல நேரங்களில் தன் அரசியல் கொள்கைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் செய்தது. அமெரிக்க அரசின் சில நடவடிக்கைகளில் அவர் உடன்பட்டும் முரண்பட்டும் செயலாற்றி இருக்கிறார். 

1964  மே மாதம் 16ஆம் தேதி ஆப்பிரிக்க நாடான கானாவிற்கு முகமது அலி பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்க கண்டத்தில் கானா ( பழைய கோல்ட் கோஸ்ட்) என்ற நாடு பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அங்கு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக சக்திமிக்க பலபோராட்டங்கள் நடைபெற்றன.  அந்தப் போராட்டங்களின் தளபதியாக டாக்டர் குவாமே நக்ருமா என்பவர் இருந்தார். இவரின் தலைமையில் நாடு விடுதலை அடைந்தது. இவர் 1957 முதல் 66ம் ஆண்டு வரை சுதந்திர கானாவின் பிரதமராக மற்றும் ஜனாதிபதியாக பதவி வகித்தார். 

சோசலிச சிந்தனையுடன் பல திட்டங்களை அமலாக்கினார். ஒன்றுபட்ட பான் ஆப்பிரிக்கா (Pan Africa) என்ற கருத்தை ஊக்குவித்த முதல் ஆப்பிரிக்க தலைவர் இவர். உலகம் முழுவதும் விடுதலை வேட்கை கொண்டு போராட்டங்களில் ஈடுபட்ட கருப்பினத்தவரிடையே  அதிகம் ஈர்க்கப் பட்டவராக குவாமே நக்ருமா இருந்தார். அந்தகாலத்தின் ஆப்பிரிக்கா முழுவதும் காலனியாதிக்க எதிர்ப்பின் அடையாளமாக குவாமே நக்ருமா இருந்தார். முகமதுஅலி, கானா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள ஆசைப்பட்டதுடன், குவாமே நக்ருமாவை தனது நாயகனாகவும் வர்ணித்தார். அவரை காண்பதற்காக மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். முகமது அலி மட்டுமல்ல… அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்த மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் ஜூனியர் உட்பட அனைவரையும் ஈர்த்த தலைவராக குவாமே நக்ருமா இருந்தார். எனவே அவர்களும் கானாவிற்கு சென்றனர். 

1964 மே 16ம் தேதி கானாவின் தலைநகர் அக்ரா விமான நிலையத்தில் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர், விளையாட்டுத் துறை இயக்குனர், கானா குத்துச்சண்டை ஆணையத்தின் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் முகமது அலியை வரவேற்றனர். கானாவில் முகமது அலி காலடி வைத்த நாளிலிருந்து அவர் சுற்றுப்பயணம் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள்கூட்டம் அலைமோதியது. முகமது அலி இந்த பயணத்தை காலனித்துவ  எதிர்ப்பு இயக்கத்தின் உத்வேகமாக மாற்றினார். குத்துச் சண்டையில் அமெரிக்காவின் மியாமி பகுதியில் சன்னி லிஸ்டனை வீழ்த்திய 22 வயது நிரம்பிய முகமது அலி கானாவின் கதாநாயகனாகவே மாறினார். 

முதலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முகமது அலி பேசும்போது ‘‘நான் ஆப்பிரிக்காவை பார்க்க விரும்புகிறேன். என் சகோதர சகோதரிகளே சந்திக்க விரும்புகிறேன். வெள்ளை அடிமை வியாபாரிகள் ஆப்பிரிக்காவிலிருந்து எங்களது மூதாதையர்களை பிடித்து அமெரிக்காவில் அடிமைகளாக விற்றார்கள். தற்போது நாங்கள் சொந்த வீட்டுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். 

முகமது அலி அக்ராவின் தெருக்களில் உள்ள கடைகள், அடுக்கு மாடி கட்டிடங்கள், இரவு விடுதிகள், உணவகங்கள், தெருக்களில் விளையாடும் குழந்தைகள் எல்லாவற்றையும் பார்த்தார்.  நகரம் உயிர்ப்புடன் செயல்படு வதை உணர்ந்தார். கருப்பர்களும் வெள்ளையர்களும் இணக்கமாக பழகியதை கண்டார். போக்குவரத்து உட்பட அந்தக் காலகட்டத்தின் எல்லா நவீன அம்சங்களும் நகரில் நிறைந்திருந்தது. 

இந்தக் காட்சிகள் அனைத்தும் ஆப்பிரிக்காவை பற்றி அதுவரை வெள்ளைஇனவெறியர்கள் கட்டமைத்த கருத்துக்களுக்கு நேர்மாறாக இருந்தது. ஆப்பிரிக்காவைப் பற்றி அவர்களின் கருத்துக்கள் பொய் என்று முகமது அலி உணர்ந்து கொண்டார். 

கருப்பின அமெரிக்கர்கள் தங்கள் தாயகமான ஆப்பிரிக்காவிற்கு மீண்டும் செல்ல ஆசைப்படக்கூடாது, துணியக்கூடாது என்று வெள்ளை இனவெறியர்கள் ஆப்பிரிக்காவின் நிஜஉருவத்தை சிதைத்து வைத்திருந்ததை அலி அறிந்தும் புரிந்தும் கொண்டார். ஆப்பிரிக்கா காட்டு விலங்குகள், காட்டுமிராண்டி மனிதர்கள், வெள்ளை வேட்டைக்காரர்கள் வசிக்கும் ஒரு பரந்த காடு. ஆப்பிரிக்கா என்றால் சதுப்பு நிலம், புதர் நிலங்கள் அடர்ந்த பகுதி, வெயில் சுட்டெரிக்கும் நாடு, பொந்துகளிலும், மண் குடிசைகளிலும்தான் மனிதர்கள்  வாழ்கிறார்கள்,  முன்னும் பின்னும் இலைகளை மறைத்து பெண்கள் அரை நிர்வாணமாக திரிவார்கள் என்றே வெள்ளைஇனவெறியர்கள் கட்டுக்கதை புனைந்திருந்தார்கள், கற்பிதம் செய்திருந்தார்கள். 

பல அமெரிக்கர்களைப் போலவே முகமதுஅலியும் இந்தக் கட்டுக்கதை களை கேட்டு அதை உண்மை என்றும் நம்பி வளர்ந்திருந்தார்.  முகமது அலி அக்ரா நகரத்திற்கு சென்ற பொழுது இந்தக் கட்டுக்கதைகள் அனைத்தும் தவிடுபொடியானது. வெள்ளைஇனவெறியர்களின் கீழ்த்தரமான புத்தி புரிந்தது. நிறங்கள் வேறாக இருந்தாலும்,  வாழ்நிலையும் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் வேறாக இருந்தாலும் அவர்கள் மனித மாண்புகளை உயர்த்தி பிடிப்பவர்களாக இருந்ததை முகமது அலியால் உணர முடிந்தது. 

அங்கு அவர் உரையாற்றும்போது, "நான் ஒரு ஆப்பிரிக்கன். என் பெயர் முகமதுஅலி. என் இயற்பெயரில் (கேசியஸ் கிளே) வெள்ளை அடிமை உடைமையாளரின் அடையாளம் இருந்தது. என்  புதிய பெயரில் கண்ணியம் இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் அதிகமான கருப்பர்கள் இன்னும் தங்கள் எஜமானர்களின் பெயர்களை அவமானகரமான முறையில் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று ஆவேசமாக குறிப்பிட்டார். 

நீக்ரோக்களுக்கு அமெரிக்காவில் நீதிகிடைக்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் ஆப்பிரிக்காவிற்கு இடம் பெயர வேண்டும் என்று மால்கம் எக்ஸ் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அதை, உரையாற்றிய இடங்களில் எல்லாம் முகமது அலி மேற்கோள் காட்டினார். 

மேலும், வெள்ளை காலனித்து பெயர்களை கை விடுவதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்களின் அழகான உள்ளூர் பாரம்பரியத்தை தழுவ வேண்டும். நான் பார்த்த இடங்களில் பழைய கானாவில் (கோல்டு கோஸ்ட்) குடியேறியவர்களுடனான உறவுகளின் காரணமாக பல கானா வாசிகளுக்கு ஆங்கிலம், போர்த்துக்கீசிய, டச்சு அடிமை உடைமையாளர்களின் குடும்பப் பெயர்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் ஏசு,மோசஸ், தேவதூதர்கள் என கடவுள்கள்கூட  வெள்ளையாக இருக்கிறது. இங்கு என் உண்மையான மக்களுடன் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தன்னுடைய உரைகளில் குறிப்பிட்டார்.

அதன்பிறகு அவர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த கானாவின் ஜனாதிபதி குவாமே நக்ருமாவை 1964 மே 19ஆம் தேதி  சந்தித்தார். இந்த சந்திப்பு பற்றி கானாவின் பத்திரிகைகள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதின. ‘‘முகமதுஅலி தனது ஹீரோவை சந்திக்கிறார். உலகின் குத்துச்சண்டை ராஜா தான் அதிகம் நேசித்த நாயகனை சந்திக்கிறார்’’ என்றெல்லாம் குறிப்பிட்டன. மேலும், முகமது அலியை, ‘‘குத்துச்சண்டை வளைய கவிஞர்’’ (Boxing Ring Poet) என்று வர்ணித்தன. இந்த சந்திப்பின் போது கானாவின் ஜனாதிபதி குவாமே நக்ருமா தனது புகழ்பெற்ற புத்தகமான ஆப்பிரிக்கா ஒன்றுபட வேண்டும், (Africa must unite), மனசாட்சி (Consciencism) ஆகிய புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார். 

அதுவரை முகமது அலியை எந்த ஒரு நாட்டின் தலைவரும் அழைத்து கட்டித் தழுவியது இல்லை. முதல்முறையாக கானாவின் ஜனாதிபதியும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளருமான குவாமே நக்ருமா, முகமது அலியை கட்டித்தழுவி அவர், உலக இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு ஆதாரம் என்று புகழ்ந்தார். இருவரும் வெள்ளை மேலாதிக்கத்தின் கொடுமைகளை ஒழிக்கப் போராடுவதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கின்றனர் என்று  பத்திரிகைகள் எழுதின.  குவாமே நக்ருமா, முகமது அலிக்கு தான் கொடுத்த புத்தகத்தில், "இது ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சான்றாகும். சிவில் உரிமைகள் இயக்கத்திற்கு பிந்தைய காலனித்துவ அரசியலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் சான்றாகும். ஆப்பிரிக்காவில் வீசும் இந்த மாற்றத்தின் காற்று, சாதாரண காற்றல்ல.  பொங்கி எழுந்த சூறாவளி ஆகும். இந்த சூறாவளிக்கு எதிராக வெள்ளையர்களின் பழைய ஒழுங்கை நிலை நிறுத்த முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார். 

அந்த புத்தகங்களை தன் வாழ்நாள் முழுவதும் முகமது அலி அடிக்கடி புரட்டி பார்த்துக் கொண்டே இருந்தார். அந்த இரண்டு புத்தகங்களையும் மிகவும் பொக்கிஷமாக கருதுகிறேன் என்றும் முகமது அலி குறிப்பிட்டிருக்கிறார்.

முகமது அலியின் கானா பயணம் அவருடைய வாழ்க்கையில் சில விஷயங்களை உணர்த்தியது. அவர் அமெரிக்காவில் இருந்ததை விட ஆப்பிரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளில் பிரபலமாக இருப்பதை அறிந்தார். பெரும்பாலான அமெரிக்கர்கள் அவரது முஸ்லிம் பெயரை அங்கீகரிக்க மறுத்தார்கள். ஆனால் கானாவிலும் நைஜீரியா மற்றும் எகிப்தில் உள்ள மக்கள் அவரது பெயரை அங்கீகரித்து மரியாதை செய்தார்கள். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் அவரை முகமது அலி- சாம்பியன் என்ற பெயராலேயே அழைத்தார்கள். முகமது அலி இந்த பயணத்தை பற்றி குறிப்பிடும் பொழுது  " நான் வாழும் வரை இந்த பயணத்தை நினைவில் வைத்திருப்பேன். காரணம், கேசியஸ் கிளே, முகமது அலி ஆனதை நான் பார்த்தேன்" என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

முகமது அலியின் ஆப்பிரிக்க பயணம் அவருடைய எண்ணத்திலும் கடந்த கால கற்பிதங்களில் உருவாக்கப்பட்டவைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. 15 நாட்கள் கானாவில் இருந்த அவர், உலகில் மிகவும் அடையாளம் காணப்பட்ட நபராக, அதிகமாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட நபர்களில் ஒருவராக மாறினார். உலகளாவிய மாற்றங்களிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனித்துவ நீக்கம் பற்றிய சிந்தனைகளிலும் அவரது பயணம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் அரசியல் சக்தியில் முகமது அலியும் ஒருவராக குறிப்பிடப்பட்டார். 

இதுகுறித்து முகமது அலி குறிப்பிடும் போது, ‘‘இந்தப் பயணம் என்னைப் பற்றியும் என் நாடு பற்றியும் உலகம் பற்றியும் பார்வைகள் மாறிவிட்டதை உணர முடிந்தது’’ என்றார்.

அ.பாக்கியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...