Pages

சனி, செப்டம்பர் 16, 2023

சீனா: முதலில் நட்பு போட்டி இரண்டாவது

 



சீன-அமெரிக்க உறவுகள் உயிர்பெற்ற காலத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றமும் ஒன்று. 1950 ஆம் ஆண்டு கொரிய யுத்தத்தின் பொழுது அமெரிக்கா, சீனாவின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீனா தன்னிறைவை அடைந்து முன்னேறிக் கொண்டிருந்த காலத்தில் 1971 ஜூன் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்கா, சீனாவுக்கு எதிரான பொருளாதார தடையை நீக்கியது. 1972 பிப்ரவரி 28  அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் மற்றும் ஹென்றி கிசிங்கர் ஷாங்காய் நகருக்கு விஜயம் செய்தனர்.

இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை உறவுகளை இயல்பாக் குவதற்கு உதவி செய்தது.  அடுத்த ஐந்தாண்டுகள் வரை அதிகாரப்பூர்வமற்ற உறவுகள் மேம்படுத்தப்பட்டது.  டேபிள் டென்னிஸ் ராஜதந்திரம் (ping-pong) என்ற முறையில் சீனா அமெரிக்க டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. சீனாவின் கொள்கை "முதலில் நட்பு போட்டி இரண்டாவது" என்ற அடிப்படையில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு உறவுகள் மேம்பட்டது. 1978 ம் ஆண்டுகளுக்குப் பிறகு டெங் ஜியோ பிங்  திறந்தவெளி கொள்கையை (open door policy) அறிமுகப்படுத்தினார்.

இந்த மாற்றங்களின் ஊடாக முகமது அலியை சீன ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சீன விளையாட்டு கூட்டமைப்பு சீனாவுக்கு வரும்படி அழைத்தது. அதன்பேரில் 1979 டிசம்பர் 19 முகமது அலி சீனப் பயணம் மேற்கொண்டார். மீண்டும் 1985 ம் ஆண்டு 10 நாட்கள் பயணமாகவும் 1993 ம் ஆண்டு மூன்றாவது முறையும் சீனாவுக்கு அவர் பயணம் செய்தார். முதல் பயணம் மிகக் குறுகிய காலமாக இருந்தாலும் முக்கியமான பயணமாக இருந்தது. இந்தப் பயணம் குத்துச்சண்டையை மீண்டும் சீனாவில் செயல்படுத்தவும் சீன அமெரிக்க உறவுகளை மேம்படுத்தவும் பயன்பட்டது.

சீனாவில் மேற்கொண்ட மூன்று பயணங்களின்போதும் சீனாவைப் பற்றிய தன் கருத்துக்களை முகமது அலி வெளிப்படுத்தினார். முகமது அலி எப்பொழுதுமே சொந்த ஆளுமையும், சுதந்திரமான எண்ணமும் கொண்டவர். அதற்கு ஏற்ற வகையில் அவரது கருத்துக்களும் வெளிப்படை தன்மையுடன்  வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். "சீன மக்கள் மிகவும் தன்னிறைவு பெற்றவர்கள். அவர்கள் மேற்கத்திய உலகத்திடம் உதவி கேட்காமலேயே தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள். நான் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்" என்று சீனாவின் கடந்த கால தன்னிறைவான வளர்ச்சியைக் குறிப்பிட்டு பேசினார். சைனா டெய்லி என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ‘‘நான் சீன மக்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சைனா யூத் நியூஸ் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் "இப்போது நீங்கள் உலகிற்கு திறந்த வெளி கொள்கையை அறிவித்துள்ளீர்கள். உங்கள் கலாச்சாரத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். ஏனென்றால் மற்றவர்கள் உங்கள் கலாச்சாரத் தின்மீது அவர்கள் கலாச்சாரத்தை திணிக்க முயற்சிப்பார்கள். அது மாபெரும் சண்டையாக மாறும்" என்று கூறி, சீன மக்களின் தனித்துவமான கலாச்சாரத்தை அங்கீகரித்து அதை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய கருத்தை தெரிவித்தார்.

முகமது அலி ஆரம்ப கட்டப் படிப்பிலும், ராணுவ தேர்விலும் உரிய முறையில் மதிப்பெண்பெற முடியவில்லை. ராணுவ தேர்வில் தோல்வியடைந் ததைப் பற்றி முகமது அலி கூறும்போது, ‘‘நான் பெரியவன்தான். ஆனால் புத்திசாலி இல்லை என்று குறிப்பிட்டார். ஆனால், மால்கம் எக்ஸ்,  முகமது அலியைப் பற்றி சொல்கிற பொழுது அவருடைய அறிவார்ந்த விஷயங்கள் தான் என்னை கவர்ந்தது என்று கூறியிருந்தார். சீனாவைப் பற்றி அலி தெரிவித்த கருத்துக்கள் மால்கம் எக்ஸ் கூறியதை உறுதிப்படுத்துகிறது.

அப்போதைய சீனத் தலைவர் டெங் ஜியோ பிங், முகமது அலியை வரவேற்று, ‘‘சீனாவைப் பற்றி உங்களுக்கு ஆழ்ந்த உணர்வுகள் உள்ளன. சீனாவை சுற்றி பாருங்கள் என்றார். முகமது அலி,   டெங் ஜியோ பிங்கிடம் சீனாவில் மீண்டும் குத்துச்சண்டையை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த பொழுது, "மக்கள் விரும்பும்வரை நாங்கள் அதை வளர்ப்போம்.  குத்துச்சண்டை என்பது சீன மற்றும் அமெரிக்க மக்களிடையே பரஸ்பரம் புரிதல் மற்றும் நட்பை மேம்படுத்துவதற்கு ஒரு பாலமாக இருக்கலாம் என்று டெங் கூறினார் . சீனாவின் நண்பராக இருக்க முகமது அலி தகுதியானவர் என்று சிலாகித்தார்.

குத்துச்சண்டை மேடையில் ஒரு மரணம் ஏற்பட்டதால், சீனாவில் குத்துச்சண்டை போட்டி 1959 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அது உழைக்கும் மக்களை சுரண்டும் முதலாளித்துவத்தின் சூதாட்டமாக இருப்பதோடு, மிருகத்தனமாகவும் இருப்பதாக காரணம் கூறப்பட்டது. அதன்பிறகு முகமது அலி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1986 ஆம் ஆண்டு குத்துச்சண்டையின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. முகமது அலி மற்றும் டெங் ஜியோபிங் சந்திப்பு சீனாவில் மீண்டும் குத்துச்சண்டையை உயிர்ப்பித்தது.

1985 ம் ஆண்டு முகமது அலி பத்து நாட்கள் பயணமாக சீனா சென்றார். அங்கு பெய்ஜிங் ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் 500 மாணவர்களுக்கு குத்துசண்டை பயிற்சி அளித்தார். குத்துச்சண்டை வன்முறை களமாக்க அவர் அனுமதிக்கவில்லை. நடுவர் மற்றும் உரிய மருத்துவ ஏற்பாடுகளுடன் பாதுகாப்பான முறையில் குத்துச்சண்டை நடத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் கலந்து கொண்ட சில மோசமான, ஆபத்தான முறையில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டிகளை மீண்டும் நீங்கள் வீடியோவில் பார்த்தீர்களா என்று கேட்ட பொழுது, ‘‘அந்த நரகத்திற்கு மீண்டும் நான் செல்ல விரும்பவில்லைஎன்று விதிமுறைகளைக் கடந்த குத்துச்சண்டைப் போட்டியைப் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

1993ம் ஆண்டு மூன்றாவது முறையாக சீனாவிற்கு சென்ற பொழுது, பெய்ஜிங் நகரத்தில் முதல்முறையாக சர்வதேச குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது.  1987 ஆம் ஆண்டில் சீனா தனது முதல் தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. அதே ஆண்டு சீன குத்து சண்டை சங்கம், சர்வதேச அமெச்சூர் குத்துச்சண்டை சங்கத்தில் அதிகாரப்பூர்வமான உறுப்பினராக சேர்ந்தது. இதன் பிறகு  சீனா தொடர்ந்து சர்வதேச அளவில் குத்துச்சண்டை அரங்கில் தோன்றத் தொடங்கியது.

ஜு ஷிமிங் (Zou shiming) என்ற என்ற சீன குத்துச்சண்டை வீரர் லைட் வெயிட் பிரிவில் மூன்று தொடர்ச்சியான ஒலிம்பிக் பதக்கங்களை , அதாவது 2004, 2008ல் வெண்கல பதக்கமும் 2012 ஆம் ஆண்டு தங்கப் பதக்கமும் வென்றார். சீன குத்துச்சண்டை மற்றும் உலக குத்துச்சண்டை இரண்டுமே முகமது அலியால் பயனடைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. முகமது அலி குத்துச்சண்டையை பிரதிநிதித்துவப் படுத்துவராக இருந்தாலும், அவர் அமைதியின் தூதுவராகவும் சீனர்களுக்கு மனிதாபிமான மிக்கவரா கவும் இருந்தார். ஓய்வு பெற்ற பிறகு தன் நேரத்தை அமைதிப் பணிக்காக அர்ப்பணித்தார் என்று அவரைப் பற்றி சீன பத்திரிகைகள் எழுதின.

சீனாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்கிலும், வெளியுறவு கொள்கை களிலும் சர்வதேச உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் விளையாட்டு துறையில் வேகமாக முன்னேற்றத்தை கண்டது. விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்தோடு மட்டுமல்ல மன ஆரோக்கியம், சிந்தனை வளர்ச்சி, செயல் திறன் மேம்பாடு ஆகியவற்றோடு இணைந்த ஒன்று என்பதை சீனா தனது விளையாட்டுக் கொள்கையில் அமல் படுத்திக் கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முகமது அலியின் வருகையால், குத்துச்சண்டை மீண்டும் சீனாவில் நடத்தப்பட்டது மட்டுமல்ல அந்த விளையாட்டு சர்வதேச உறவுகளுக்கும் உதவியாக இருந்தது.  சீன அரசு அறிவித்தது போல் "முதலில் நட்பு, போட்டி இரண்டாவது" என்ற கொள்கையி லும் முன்னேற்றம் ஏற்பட்டது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...