Pages

ஞாயிறு, செப்டம்பர் 10, 2023

பொது சிவில் சட்டம்: பாஜவின் பிளவு அரசியல்

 

அ.பாக்கியம்

பொது சிவில் சட்ட பிரச்சனையும் மணிப்பூர் கலவரமும் இந்திய சமுதாயத்தில் பெருமளவு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பொது சிவில் சட்டம் பற்றி பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும் தற்போது, பொது சிவில் சட்டத்தை அமலாக்க தீவிர முயற்சி மேற்கொள்வதற்கான காரணம் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல்தான் என்பதை அனைவரும் அறிவார்கள். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியும்,  வாக்கு சதவீதம் குறைந்து இருப்பதும் பாஜவிற்கு ஒரு அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. மறுபுறத்தில், வரலாறு காணாத விலை உயர்வும், வேலை இல்லா திண்டாட்டமும், விவசாயிகள் சந்திக்கும்  நெருக்கடிகளும் மோடி அரசின் மீதான அதிருப்தியை மக்களிடம் அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வாக்குவங்கி அரசியலுக்கு வாழ்க்கைப்பட்ட பாஜ, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பிளவு அரசியலை அதாவது பொது சிவில் சட்டம் என்ற பிரச்னையை தீவிரமாக கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே கையிலெடுத்த ராமர் கோவில் விவகாரம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்து விட்டதால், வாக்கு வங்கி அரசியலுக்காக பொது சிவில் சட்டம் பாஜவிற்கு தேவைப்படுகிறது. நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கொடூரத்தை எதிர்க் கட்சிகள் கிளப்பி வருகின்றன.

இந்தக் கூட்டத் தொடரில் 31க்கும் மேற்பட்ட சட்டவரைவுகள் முன்மொழி யப்பட்டிருந்தாலும், பொது சிவில் சட்டம் தொடர்பான முன்மொழிவு இல்லை. அதற்கு காரணம் இந்த பிரச்சனையை தேசம் தழுவிய விவாதமாக மாற்றி இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வை பரவலாக கொண்டு செல்வதற்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.  பாஜவின் இந்த பிளவு அரசியலுக்கான நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை என்றால் தடாலடியாக நாடாளு மன்றத்தில் முன்னறிவிப்பின்றி பொது சிவில் சட்டத்தை நிறைவேற்று வதற்கும் வாய்ப்பு உள்ளது. 2024 பொதுத்தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று (மத) வெறி பிடித்து அலைகிறது பாஜக.

சட்ட ஆணையத்தை சரி கட்டியது:

2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொது சிவில் சட்டம் தொடர்பான அம்சங்களை குறித்து ஆய்வு செய்யுமாறு 21 வது சட்ட ஆணையத்திற்கு உத்திரவிட்டது. அந்த சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் இப்போது தேவையும் இல்லை விரும்பத்தக்கதும் அல்ல என்கிற முடிவோடு, இருக்கிற சட்டங்களில் சிறிது சிறிதாக மாற்றங்களை கொண்டு வரலாம் என்று பரிந்துரைத்தது. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் முடிந்தது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆவது சட்ட ஆணை யத்தை மோடி அரசு அமைத்தது. இதற்கான பதவி காலம் மூன்றாண்டு என அறிவிக்கப்பட்டது

இந்த சட்ட ஆணையம் காலாவதியாவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பாக ஒன்றிய அரசு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி என்பவரை ஆணையத்தின் தலைவராகவும், நீதிபதி.கே.டி.சங்கரன், பேராசிரியர்கள் ஆனந்த் பலிவால், டி. பி. வர்மா,  ராகா ஆரியா, கருணாநிதி ஆகிய ஐந்து உறுப்பினர்களை நியமித்தது. இந்த ஆணையமதான் தற்போது பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும், மத அமைப்புகளிடமும் கருத்து கேட்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது

இதே காலகட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி 2022 ஆம் ஆண்டு பொது சிவில் சட்டம் உருவாக்குவ தற்கான நிபுணர்குழுவை அறிவித்தார். வரைவு அறிக்கை தயாரிக்க நீதிபதிகளையும் நியமித்தார். இதற்காக பொதுமக்களிடம் இருந்து கடிதங்களை பெற்றனர். இமாச்சலப் பிரதேச மாநில அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு ஒன்றை நியமித்து உள்ளது. குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் பொதுசிவில் சட்டத்திற்காக குழு ஒன்றை அமைக்க பரிந்துரைத்துள்ளார்.

அதே நேரத்தில் பாஜ மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா என்பவர் 2020 ஆம் ஆண்டு பொது சிவில் சட்டம் குறித்த தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றொரு பாஜ உறுப்பினர் ராகேஷ்சின்ஹா தனிநபர்சட்ட மசோதாவை முன்மொழிந் திருந்தார் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பொது சிவில் சட்டம் விவகாரத்தை 22வது சட்ட ஆணையம் பரிசீலிக்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

உள்துறை அமைச்சர் அமித்ஷா மதசார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது. பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்தார். ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் அரசியல் அமைப்பு சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது என்று பேசியிருக்கிறார். இந்தியாவில் எத்தனை கொடூரங்கள் நடந்தாலும் வாய் திறக்காமல் மௌன சாமியாராகவே வலம் வரும் பிரதமர் மோடி,  சமீபத்தில் திருவாய் மலர்ந்தார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு சட்டமும் மற்றொருவருக்கு வேறு சட்டமும் இருந்தால் அந்த குடும்பம் சரியாக செயல்பட முடியுமா? இப்படிப்பட்ட இரட்டை அமைப்புடன் ஒரு நாடு எப்படி இயங்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இவை அனைத்தும் 22 ஆம் ஆண்டில் இருந்து தீவிரப்படுத்தப்படுவதில் இருந்தே, பொது சிவில் சட்டத்தை தேர்தலுக்கான ஒரு கருவியாக பாஜ முன்னெடுக்கிறது என்பதை நன்கு உணர்த்துகிறது.

இந்தியாவில் பொதுவான சட்டங்கள் இல்லையா?

இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு தனிசட்டம் இருக்கிறது. அவர்கள் எத்தனை மனைவி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்; எத்தனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இதனால் இந்தியாவில் இந்துக்களுக்கு ஆபத்து. தேசஒற்றுமைக்கு ஆபத்து என்று பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பாஜ பிரச்சாரம் செய்கிறது. பாஜ செய்கின்ற பிரச்சாரத்தின் மூலம் இஸ்லாமியர்கள் ஒரு பக்கமாக அணி திரளுவார்கள். இதனால் இந்துக்கள் தானாகவே வேறுபக்கம் அணி திரளுவார்கள். அது பாஜ மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர துணை புரியும் என்று பாஜ எண்ணுகிறது. இந்த நோக்கத்தோடு பொது சிவில் சட்ட பிரச்சாரத்தை பிளவு அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒருசில விஷயங்களைத் தவிர பெரும்பாலும் எல்லோ ருக்கும் பொதுவான சட்டங்கள்தான் இருக்கின்றன. உரிமை இயல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சி சட்டம், ஒப்பந்தச் சட்டம், மாற்றுமுறை ஆவணச் சட்டம், பொருட்கள் விற்பனை சட்டம், சொத்து உரிமை மாற்று சட்டம்சிறப்பு திருமண சட்டம் 1954, வரதட்சணை தடுப்புச் சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் போன்றவைகள் மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்துவதாகவே உள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 125 கைவிடப்பட்ட மனைவியரின் ஜீவனாம்சத்திற்கு பயன்படுத்தப்படும் பொது சிவில் சட்டமாகவே இருக்கிறது. இந்த 125 ஆவது பிரிவின்படிதான் 1985ஆம் ஆண்டு ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

மேற்கண்டவை தவிர திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, வாரிசு உரிமை, தத்தெடுத்தல், பராமரிப்பு, கூட்டு குடும்ப பாகப்பிரிவினை, பழங்குடி மக்களிடம் இருக்கக்கூடிய வெவ்வேறு வகையான மாறுபட்ட பழக்கவழக்கங்கள் இவை அனைத்தும் எழுதப்படாத சட்ட திட்டங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அரசியல் சட்டத்தில் உள்ளடங்காத இந்து திருமண சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம் போன்ற சட்டங்களும் பொது சிவில் சட்டத்தில் அடங்காதவை

நேருவும் அம்பேத்கரும் பொது சிவில் சட்டமும்:

ஜவஹர்லால் நேருவும் டாக்டர் அம்பேத்கரும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சித்தார்கள். அதைத்தான் நாங்கள் இப்பொழுது செய்கிறோம் என்று பாஜக கூறுகிறது. அரசியல் சட்ட வழிகாட்டுதல் பிரிவு 44 இந்தியா முழுவதற்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இந்திய அரசு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. நேருவும் அம்பேத்கரும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு உயரிய நோக்கம் இருந்தது. அவர்கள் மதசார்பற்ற தன்மையுடனும்  நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் சமூகத்தில் முன்னேற்றத்தை கொண்டு வரவும் பொது சிவில் சட்டம் பற்றி சிந்தித்தார்கள். நேருவின் விருப்பத்தின்படி அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக முன்மொழிந்தார்.

பாலியல் சமத்துவமின்மை, சொத்து உறவுகளில் சமத்துவமற்ற நிலை, பிற்போக்குத்தனமான பழக்கவழக்கங்கள் இவை அனைத்தையும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒரு மதசார்பற்ற நாட்டின் சட்டங்கள் அனைத்தும் மதங்களிடமிருந்து பிரித்தே வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சட்ட முன் வரைவு முன்வைக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் வல்லபாய் பட்டேல் அவர்களும், இஸ்லாமிய தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர்

அரசியல் அமைப்பின் நிர்ணயசபை கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரதமர் ஜவஹர்லால் நேரு தற்போதைய தருணத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றுவதற்கான காலம் கனிந்திருப்பதாக நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார். முன்மொழிவு திரும்ப பெறப்பட்டது. வழிகாட்டுதல் நெறிமுறையில் பொது சிவில் சட்டம் இயற்றுவதற்கான கருத்தை சேர்த்தனர். சட்டங்கள் இயற்றுவதற்கு மதங்கள் குறுக்கிடும் போக்கை புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் அம்பேத்கர். இருந்தாலும் நேரு, பல்வேறு இந்து சட்டங்களை இணைத்து இந்து சட்டம் (Hindu Code Bill) என்பதை நிறைவேற்ற முயற்சி செய்தார். அப்போதைய பாரதிய ஜன சங்க கட்சியின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜி மேற்படி சட்டம் இந்துக்கள் புனிதமாக கருதும் திருமணங்களை தகர்த்து விடும் என்று சொல்லி அதனை கடுமையாக எதிர்த்தார். ஒருவேளை எதிர்ப்புகளை மீறி இந்து சட்டம் ஒன்றை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றால்  தேவைப்படுகிறவர்கள் மட்டும் அதனை தெரிவு செய்து கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று பேசினார்

அவ்வாறு தனிநபர்கள் தெரிவு செய்து கொள்ள அனுமதித்தால் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரம் கேலிக்கூத்தாக மாறிவிடும் என்று அம்பேத்கர் அவற்றை எதிர்த்தார். இந்து சமூகம் சூத்திரர்களையும் பெண்களையும் அடிமைப்படுத்தும் சமூக கட்டமைப்பை கைவிடாது என்று சொன்ன அவர், அவர்களை மீட்டு சமூகம் முன்னேறி செல்வதற்கு மேற்படி இந்து சட்டம் தேவை என்று வாதிட்டார். ஆனாலும் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த சீர்திருத்தங்களை காங்கிரசின் தலைமை ஆதரிக் காததால் 1951 ஆம் ஆண்டு  அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இருந்தாலும் நேரு அவர்கள் தொடர்ந்து சில முயற்சிகளை மேற்கொண் டார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் உட்பட பலபிற்போக்காளர்களின்  கடுமையான எதிர்ப்புகளையும் மீறி 1954 ஆம் ஆண்டு இந்து சட்டத்தை நேரு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு இந்து திருமண சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்சம் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றினார்

இந்துத்துவா சட்டத்துக்குள் பொது சிவில் சட்டம்:

இன்றைய தினம் பாஜ கொண்டுவர நினைப்பது இந்து சனாதன சட்டத்துக்கு உட்பட்ட பொது சிவில் சட்டமாகும். இந்து மதத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை வர்ணாசிரம சாதிய முறைகளை அப்படியே வைத்துக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டம் இயற்ற முயற்சிக்கிறது. இவர்கள் பிற்போக்குத்தனத்தை, மூட பழக்க வழக்கத்தை, இந்தியாவில் கட்டமைத்துக்கொண்டு, மதம் சார்ந்த சட்டங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, மதச்சார்பற்ற வேடம் போட்டு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

1996 ஆம் ஆண்டு வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று பேசினார். இஸ்லாமிய திருமண சடங்குகளில் மணமுறிவு பற்றி பேசுவதை பாராட்டிய பொழுது அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த நரசிம்மராவ் இந்து மதத்தில் இருக்கக்கூடிய பல வடிவங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பாரதிய ஜனதா கட்சி எப்படி பார்க்கிறது என்று கேள்வி எழுப்பினார். பொது சிவில் சட்டம் என்பது பழங்குடி மக்களும், பலசிறுபான்மை மக்களும் இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவை இந்துத்துவா பொது சிவில் சட்டமாக மாறுகிறது என்பதால் மட்டுமே.

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல… சீக்கியர்களின் சிரோமணி குருத் வாரா பிரபந்த கமிட்டி, சிரோமணி அகாலிதளம் கட்சி பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் வாழும் சுமார் 250க்கும் மேற்பட்ட இன குழுக்கள் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் தீவிரமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் எண்ணற்ற குழுக்கள் எதிர்ப்புகளை தெரிவித் துள்ளன

பெரும்பான்மை சமூகத்தை சிறுபான்மை சமூகத்தோடு மோத விட்டு மணிப்பூரை பற்றி எரியச் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன ஒன்றிய மோடி மற்றும் மணிப்பூர் அரசுகள். ஊழல், விலை உயர்வு, வேலையின்மை, வறுமை என நாடு கடுமையான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க பெண்களும், சிறுபான்மையினரும், தலித்துகளும் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்த்தபாடில்லை. பாஜ ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒரே குறிக்கோளுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதனால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்று பயந்து போன பாஜ, பொது சிவில் சட்டம் என்ற பிளவு அரசியலை கையிலெடுத்து இந்துக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையில் சிண்டு முடிந்து, கலவரத் தீயை மூட்டி குளிர்காயப் பார்க்கிறது.

 

அ.பாக்கியம்

எழுத்தாளர்

arubakkiyam@gmail.com.

எதிரொலி

வெளியீடு ஆகஸ்ட் 23

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...