Pages

செவ்வாய், செப்டம்பர் 26, 2023

போர்களின் பூமியில் முஹம்மது அலி

 

தொடர்: 24

அ.பாக்கியம்

அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது.

அரபு நாடுகளை தனது எண்ணெய்வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் சுரண்டலை எதிர்த்த நாடுகள் மீது அமெரிக்கா பொய் குற்றச்சாட்டுக்களை கூறி போர் தொடுத்தது. இந்தப் போரில் எண்ணற்ற அப்பாவி மக்கள் பலியானார்கள். இவர்கள் அமெரிக்க மற்றும் அரபு நாட்டைச் சேர்ந்த பொதுமக்களாக இருந்தன. இந்த நிலவியல், இயற்கை வளங்களை மேலாதிக்கம் செய்யும் யுத்தத்தில் முகமது அலி இடர்பாடுகளில் இருந்த மக்களை மீட்க கூடிய பணியை செய்தார். அவர் போரின் காரணங்களை ஆராயவில்லை; அதன் நியாயங்களுக்குள் செல்லவில்லை. போரில் அகப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான முறையில் தனிநபராகவும் சில அமைப்புகளின்  ஆதரவுடனும் களத்தில் இறங்கினார்.

1990ம் ஆண்டு ஈராக் மற்றும் அமெரிக்கா இடையிலான நெருக்கடிகள் முற்றியது. ஈராக் தனது எண்ணெய் வளத்தை பாதுகாக்க அமெரிக்காவை எதிர்த்தது. அமெரிக்காவின் செயல்களுக்கு ஆதரவாக இருந்த குவைத்தின் மீது படையெடுத்தது. இதையடுத்து அமெரிக்கா ஈராக்கை தாக்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியது. அமெரிக்கர்கள் பலர் ஈராக்கில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி எடுக்கவில்லை. யார் சென்றாலும் சதாம் உசேன் சிறை பிடித்து விடுவார் என்று அமெரிக்கா கருதியது. அந்த நேரத்தில் ஈராக்கில் சிக்கி கொண்ட 15 அமெரிக்கர்களை மீட்டுக் கொண்டு வர முகமது அலி தயாரானார். ஈராக் செல்ல ஆயத்தமானார். அவரது மீட்பு பணி தவறாக கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியும் இதை ஏற்கவில்லை. ஈராக்கின் பாக்தாத் நகரத்தில் அப்போதைய அமெரிக்க தூதராக அதிகாரியாக இருந்த ஜோசப் வில்சன், ‘‘ஈராக்கின் பிரச்சார விளையாட்டில் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஈராக் செல்லக் கூடியவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள்’’ என்று முகமது அலியின் பெயரை குறிப்பிடாமல்  ஈராக்  பயணத்தை குறித்து கருத்து தெரிவித்தார்.

ஆனாலும், அதையெல்லாம் புறக்கணித்து அலி நல்லெண்ண பயணமாக ஈராக் சென்றார். அமெரிக்காவின் மிகவும் பிரபலமான முஸ்லிம் ஈராக்கின் பாக்தாத் நகரத்திற்கு 1990 நவம்பர் 23ம் தேதி சென்றார். போர் நெருக்கடி ஆரம்பித்த 113 வது நாளில் அங்கு சென்று இறங்கினார். உலகச் சாம்பியன், உலகப் புகழ்பெற்ற கதாநாயகன் முகமது அலி இப்போது பாக்தாத்தில் இருக்கிறார் என்ற செய்தி ஈராக் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அலியின் உதவிக்காக அமெரிக்க தூதரகத்திலிருந்த வெனான்  நோரேட் என்ற அதிகாரியும் சென்றார். முகமது அலி ஒரு வாரம் பாக்தாத்தில் தங்கியிருந்தார். அவரை சதாம் உசேன் சந்திப்பதற்கான நேரம் நிச்சயிக்கப்படவில்லை. ஈராக்கியர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார்கள்; அவருடன் நின்று பேசுவதற்கு விரும்பினார்கள். முகமது அலி யாரையும் நிராகரிக்காமல் அவர்களுடன் பாசமாக பழகினார்.

பிணைக் கைதிகளை மீட்பதற்காக அலி இங்கு வந்துள்ளார் என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. போர் நெருங்கி வருகிறது என்பதை மட்டும் அறிந்திருந்தார்கள். முகமது அலி தெருக்களில் நடந்தார். குழந்தைகளை சந்தித்தார். பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது "ஒரு யுத்தம் வராது என்று நாங்கள் நம்புகிறோம்; அதற்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று தெரிவித்தார். எனக்கு கிடைத்த புகழின் சிறிய அதிகாரத்துடன் நான் ஈராக்கின் நியாயமான நிலைமைகளை எடுத்துக் கூறுவேன்"என்றும் தெரிவித்தார். அவர் பாக்தாத்தில் இருந்தபொழுது அவரிடம் பார்க்கின்சன் நோய்க்கான மருந்து தீர்ந்து விட்டது. அதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுது உதவியாளர் ஐரிஷ் மருத்துவமனையில் மருந்துகளை கண்டுபிடித்து வாங்கி கொடுத்தார்.

அடுத்த நாள் சதாம் உசேன் அவரை சந்திக்க உள்ளார் என்று முகமது அலிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அமெரிக்காவிற்கும் சென்றது. பத்திரிகைகளிலும் வெளியானது. அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் இது ஈராக்கியர்களுக்கு சாதகமான பிரச்சாரம் என்று விமர்சனம் செய்தது. மற்ற அமெரிக்கர்கள், நோபல் பரிசுக்காக அலி, இதுபோன்று செயல்படுகிறார் என்று வதந்திகளை பரப்பினார்கள். 1990ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி சதாம் உசேனும் முகமதுஅலியும் சந்தித்தார்கள்.

பிணைக் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்தியதை சதாம் உசேன்   விவரித்தார். ஈராக் பற்றிய நேர்மையான விஷயங்களை அமெரிக்காவிடம் வலியுறுத்துவேன் என்று சதாம்உசேனுக்கு முகமதுஅலி உறுதி அளித்தார். ‘‘உங்களை அமெரிக்காவிற்கு திரும்ப அனுமதித்தால்தானே நீங்கள் அவ்வாறு கூற முடியும் என்று சதாம் உசேன் கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே சதாம், ‘‘முகமது அலி மீட்க வந்த 15 அமெரிக்கர்கள் இல்லாமல் அவரை மட்டும் தனியாக அனுப்ப அனுமதிக்க மாட்டேன்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். அலி உட்பட அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அமெரிக்கர்கள் 15 பேரும் விடுவிக்கப்பட்டு முகமது அலி தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்தார்கள். முகமது அலியின் முயற்சிக்கு அவர்கள் கடமைப்பட்டு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் என்று தொடங்கி அவரை புகழ்ந்து தள்ளினர். 1990ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, முகமது அலியும் 15 பணயக் கைதிகளும் ஈராக்கில் இருந்த இதர அமெரிக்கர் களும் விமானம் மூலமாக ஜே.எஃப்.கே விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். 1991 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்கா, ஈராக் மீது குண்டு வீசத் தொடங்கியது. முகமது அலி அதிர்ச்சியை தெரிவித்தார். இது நேர்மையானது இல்லை என்று கண்டனம் தெரிவித்தார்.

முகமது அலி இதை விளம்பரத்திற்காகவும், தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவும் செய்கிறார் என்று அவர் மீது அவதூறு பரப்பப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு முகமது அலி கர்ஜித்தார். எனக்கு விளம்பரம் தேவை. எனது புத்தகத்திற்கும் எனது சண்டைக்கும் எனது திரைப்படத் திற்கும்தான் கண்டிப்பாக விளம்பரம் தேவை. ஆனால் மக்களுக்கு நன்மை செய்வதற்காக, மக்களுக்கு உதவுவதற்காக என்றைக்குமே விளம்பரத்தை விரும்பாதவன் நான் என்று கோபத்துடன் கூறினார். நேர்மையற்ற விமர்சனங்கள் என்று அவற்றை புறம் தள்ளினார்.

இதேபோன்று உயிருக்கு ஆபத்தான சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சிக்கி இருந்த அமெரிக்கர்களை மீட்கும் பணியை  அவர்1985ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்தார். மேற்கு பெய்ரூட்டில் அதிகாலை 2 மணி அளவில் முகமது அலியும் அவருடன் வந்தவர்களும் சம்மர்லேண்ட் ஓட்டலுக்கு சென்று காத்துக் கொண்டிருந்தனர். அந்த இடம் போரினால் சிதைந்த இடமாக இருந்தது. அந்த ஓட்டல்களின் கண்ணாடி ஜன்னல்கள் தோட்டாக்களால் சேதம் அடைந்திருந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முகமது அலியும் அவரது குழுவினரும் வெகுதொலைவு இரவு நேரத்திலேயே சென்றனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பிரமுகர் இப்ராஹிம் அல்-அமீன் முகமது அலி தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். லெபனானில் உள்ள எல்லா அமெரிக்கர்களையும் அவர்களின் கூட்டாளி களையும் வெளியேற்றுவது, எங்கள் நிலத்தில் எந்தஒரு காலனித்துவ நிறுவனத்திற்கும் இடமில்லை என்று எடுத்த கொள்கை முடிவை அல்-அமீன் முகமது அலியிடம் விளக்கினார். லெபனானில் உள்ள பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என முகமதுஅலி வலியுறுத்தினார்.

அவரிடம், இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூறு பாலஸ்தீனர்களை நீங்கள் விடுவிக்க செய்தால் நாங்கள் இவர்களை விடுவிக்கிறோம் என்று அல்-அமீன் உறுதி அளித்தார். இஸ்ரேல் சிறையில் இருப்பவர்களின் பட்டியலையும் முகமது அலியிடம் அல்-அமீன் கொடுத்தார். இவை அனைத்தும் உலகில் மிகவும் ஆபத்தான நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை  பூர்த்தி செய்திட பெய்ரூட்டில் தினமும் மதியம் வரை போர் நிறுத்தம் இருக்கும். அதன்பிறகு போர் துவங்கிவிடும். நடைபெற்றுக் கொண்டிருந்த போர்களுக்கிடையில் இந்த பேச்சுவார்த்தையில் முகமது அலி ஈடுபட்டார்.

முகமது அலி அமெரிக்கர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல… பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்தும் அடுத்த நகர்வுக்கு சென்றார்.  இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமித்து இருந்தது. ஏராளமான லெபனானியர்களையும் பாலஸ்தீனர்களையும் சிறை வைத்திருந்தது. ஜூன் 28, 1985ம் ஆண்டில் சிறை வைக்கப்பட்ட 700க்கும் மேற்பட்ட லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்களை விடுவிக்க செய்வதற்காக முகமது அலி இஸ்ரேல் சென்றார். அவர்களை விடுவிப்பதற்காக நாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கூறினார். ஒரு குத்துச் சண்டை சாம்பியன் என்ற முறையில்-தனிப்பட்ட முறையில் உங்களை வரவேற்கிறோம். ஆனால் குத்துச்சண்டை வீரருடன் கைதிகளை விடுவிப்பது பற்றிய பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று முகமது அலியிடம் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முகமது அலி இருந்தார் என்பதற் காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒருவர், அமெரிக்கா எதிர்க்கும் பாலஸ்தீனத்தை ஆதரித்தார். அமெரிக்கா ஆதரிக்கும்  இஸ்ரேலின் ஜியோனிசத்தை எதிர்த்தார். 1974 ம் ஆண்டு பெய்ரூட்டில் இருந்த பாலஸ்தீனிய அகதிகள் முகாமுக்கு அவர் விஜயம் செய்தபோது "என் பெயரிலும் அமெரிக்காவில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் பெயரிலும் பாலஸ்தீனியர்களின் தாயகத்தை விடுவிப்பதற்கும், ஜியோனிச படையெ டுப்பாளர்களை வெளியேற்றுவதற்கும் நடைபெறும் பாலஸ்தீன போராட் டத்தை நான் முழு மனதோடு ஆதரிக்கிறேன் என்று அறிவித்தார். முகமது அலிக்கு பல யூத நண்பர்கள், ஆதரவாளர்கள், கூட்டாளிகள் இருந்தனர். ஆனால் அது அவரை ஜியோனிசத்திற்கு எதிராக பேசுவதை தடுக்கவில்லை.

"முழு அதிகார அமைப்பு ஜியோனிஸ்ட் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் அமெரிக்காவை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் உலகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் உண்மையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக உள்ளார்கள். ஒரு முஸ்லிம் தவறு செய்யும் பொழுதெல்லாம் அவர்கள் இஸ்லாம் மதத்தின் மீது பழி சுமத்துகிறார்கள் என்று  ஜியோனிசம் பற்றி காத்திரமான முறையில் அலி, கருத்து தெரிவித்தார். முகமது அலியின் பாலஸ்தீன ஆதரவு பேச்சுக்களை அமெரிக்க ஊடகங்கள் மூடி மறைத்தன. முக்கியமான ஊடகங்கள், ஜியோனிசம் குறித்து அலி தவறாகம் பேசுகிறார் என்று கண்டனக் கணைகளை தொடுத்தனர். முகமது அலியின் போராட்ட வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இடையில் கூட்டுப் போராட்டம்,பரஸ்பர ஒற்றுமை ஆகியவற்றை இணைக்கும் பாலமாக இருந்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...