Pages

ஞாயிறு, அக்டோபர் 08, 2023

இந்தியாவில் அலி பேசிய அரசியல்


 

தொடர்: 25

முகமது அலி 1980ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லி, சென்னையில் நடைபெற்ற கண்காட்சி போட்டிகளில் பங்கேற்றார். பம்பாய் (மும்பை) மற்றும் ஆக்ராவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பயணத்தின்போது அவர் பத்திரிகை யாளர்களையும் சந்தித்தார். மேலும், குத்துசண்டை வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். அப்போது பிரதமராக இருந்த  இந்திரா காந்தியுடனான முகமது அலியின் சந்திப்பு, கருத்துப் பரிமாற்றம் மற்றும் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டதாக இருந்தது. முகமது அலி பங்கேற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு இந்திய பத்திரிகைகள் ‘‘மகத்தானவர்களில் மகத்தானவர்’’ என்று ஒரு பொதுவான தலைப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தலைப்பே முகமது அலிக்கு மகுடம் சூட்டியது போல் இருந்தது.

இரட்டிப்பு மகிழ்ச்சி

முகமது அலி, தலைமுறைக்கான குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல, வியட்நாமுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறி அமெரிக்காவை அதிர வைத்ததினால் அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் என்று அவர் வருகை தந்தபோது இந்திய பத்திரிகைகள் பாராட்டுப் பத்திரம் வாசித்தன. பம்பாயில்  நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘நான் பம்பாயில் இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். நான் விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ‘‘முகமது அலி சாலையின்’’ வழியாக வந்தேன். ஏற்கனவே ஒரு சாலைக்கு நீங்கள் எனது பெயரை சூட்டி பெருமை படுத்தியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.  இங்கு மேலும் ஒரு சிறப்பான வரவேற்பு அளித்து எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்து விட்டீர்கள்’’ என்றார்.

டெல்லியில் ஜனவரி 22ம் தேதி, தேசிய ஹெவி வெயிட் சாம்பியன் கவுர் சிங்குடன் நடந்த கண்காட்சி போட்டியில் முகமது அலி பங்கேற்றார். 50 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு களித்த அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் சில மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்துள்ளன.

எம்ஜிஆர், கருணாநிதியுடன் சந்திப்பு

சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த கண்காட்சிப் போட்டியிலும் முகமது அலி பங்கேற்றார். இந்தப் போட்டியை 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தார்கள். அன்றைய முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன், சென்னை விமான நிலையத்தில்  முகமது அலியை வரவேற்றார். அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்து தன்னை வரவேற்றதைக் குறிப்பிட்டு முகமது அலி மகிழ்ச்சி தெரிவித்தார்.

நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதல் காட்சிப் போட்டியில் முகமது அலி அவருடன் வந்திருந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஜிம்மி எல்லிசுடன் மோதினார். அடுத்ததாக அன்றைய தினம் தமிழ்நாட்டின் குத்துச்சண்டை சாம்பியனாக இருந்த ராக்கி பிராஸ் என்பவரிடம் மோதினார். ராக்கி பிராஸ் எட்டாம் வகுப்பு கூட முடிக்காதவர். அவர், முகமது அலியுடன் காட்சிப் போட்டியில் பங்கேற்றதால், தெற்கு ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத் தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எம்ஜிஆர் பேசும்போது, எனக்கு மிகவும் பிடித்த குத்துச்சண்டை வீரர் முகமதுஅலி என்று குறிப்பிட்டு பாராட்டினார்.

இந்த காட்சிப் போட்டி முடிந்த பிறகு கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசா அறக்கட்டளைக்கு முகமது அலி நன்கொடை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும் முகமது அலி சந்தித்தார்.

மனோதிடம் முக்கியம்

இந்திய குத்துச்சண்டை வீரர்களுடனான சந்திப்பின்போது, அவர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முகமது அலி பதிலளித்தார். "களத்தில் விளையாடும்போது, சக்தி வாய்ந்த நேரான குத்துக்களை வீச வேண்டும். அப்போதுதான் அதிக புள்ளிகளைப் பெற முடியும்’’ என்று கூறிய அவர், குத்துச்சண்டை வளையத்தில் எதை செய்யக்கூடாது என்பதையும் விளக்கினார். புதிதாக வரும் வீரர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன என்று கேட்ட பொழுது "வீரர்கள் உடற்பயிற்சி கூடங்களில் மட்டும் உருவாக முடியாது. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு இருக்க வேண்டும்; ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்; அதீதமான விருப்பம் இருக்க வேண்டும். அதேபோல் அவர்களுக்கு திறமையும் முக்கியம்; மனோதிடமும் முக்கியம். இவற்றில் மனோதிடம் முதன்மையானது’’ என்று பதிலளித்தார்.

டீஸன்ட்சி பாக்ஸர்

முகமது அலியை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று இந்திய குத்துச்சண்டை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில்: முகமது அலி, ஃபவுல் பஞ்ச் எனப்படும் விதிமுறைகள் மீறிய குத்துக்களையோ, எதிராளிகளை ஏமாற்றி குத்துவது, களைப்பானது போல் நடித்து ‘மவுத் கார்டை’ (mouthguard - பற்கள் மற்றும் தாடைகள் பாதுகாப்புக்காக வாய்க்குள் பொருத்தப்படும் ரப்பர் தட்டை) கீழே துப்புவது போன்ற விரும்பத்தகாத செயல்களை, குத்துச்சண்டை வளையத்தில் எப்பொழுதுமே செய்யாத, விளையாட்டில் ஒழுக்கமும் நேர்மையையும் கடைபிடித்த "டீஸன்ட்சி பாக்ஸர்" (decency boxer) என்ற பெயர் முகமது அலிக்கு இருந்ததால் அவரை நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

எடக்கு மடக்கு கேள்வி புத்திசாலித்தனமான பதில்

இந்திய சுற்றுப்பயணத்திற்காக முகமது அலி, முதலில் மும்பையில் வந்திறங்கியபோது நடந்த  பத்திரிகையாளர் சந்திப்பில், ‘‘ஒரு மூத்த பத்திரி கையாளர் அலியிடம் கேட்டார். ‘‘எப்போதும் தாமதமாக பறக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று. அந்தக் கேள்வியை நாசூக்காக கையாண்ட  முகமது அலி, ‘‘இந்த சுற்றுப்பயணத் தின்போது, பத்திரிக்கையாளரின் முதல் கேள்வி இந்தியாவைப் பற்றி எதிர்மறையாக இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை’’ என புத்திசாலித்தனமாக பதில் அளித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரின் வாயை அடைத்தார்.  ‘‘குத்துச்சண்டை போன்ற உடல் பாதிப்பு அதிகம் இருக்கிற விளையாட்டுப் போட்டியில் ஒரு முஸ்லிமாக உங்களது ஆன்மீக  நிலைக்கும், அமைதிக்கான பணியை மேற்கொள்கிற போதும், நீங்கள் எவ்வாறு சமரசம் செய்து கொள்கிறீர்கள்’’ என்று கேட்ட பொழுது ‘‘இரண்டிலும் நான் எந்த முரண்பாட்டையும் காணவில்லை’’ என்று பதிலளித்தார்.

4 மனைவிகள் நரகம்தான்

ஆண்கள் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பது குறித்த கேள்விக்கு முகமது அளித்த பதில்: நான்கு என்பது வெறுமனே நரகம். 3 என்பது நரகத்தைப் போலவே மோசமானது. இரண்டு என்பது அதிக பிரச்சனை உள்ளது. ஒன்று மட்டுமே மகிழ்ச்சி என்று தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இந்த பதிலை கட்டம் கட்டி வெளியிட்டிருந்தது. முகமது அலியின் இந்த பதில், இஸ்லாம் பற்றிய காலத்துக்கு பொருந்தாத பிரச்சாரத்தை முறியடிப்பதாக இருந்தது.

அதிர்ந்தார் இந்திரா

பிரதமர் இந்திரா காந்தியுடனான முகமது அலியின் சந்திப்பு ஜனவரி 25ம் தேதி காலை நிகழ்ந்தது. சந்திப்பு அறைக்கு  பிரதமர் இந்திரா காந்தி வந்தவுடன் மேற்கத்திய கலாச்சாரப்படி முகமது அலி அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.  இதை சற்றும் எதிர்பாரததால், முதலில் அதிர்ச்சி அடைந்த பிரதமர் இந்திரா காந்தி பிறகு நிதானமாகி முகமது அலியுடன் சகஜமாக உரையாடலை தொடர்ந்தார். எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் இந்தியாவின் மீது அதிக ஆர்வம் உள்ளது. இந்திய ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் என்று இந்திரா காந்தியிடம் முகமது அலி கூறினா்.  பாரம்பரியமும், வசீகரமும் நிறைந்த எங்கள் நாட்டுக்கு நீங்கள் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திரா காந்தி கூறினார்.

நான் இப்போது குத்துச்சண்டை விளையாடுவதை விட்டுவிட்டு, உலகில், அன்பையும் நட்பையும் மேம்படுத்துவதற்காக எனது பெரும்பகுதி நேரத்தை செலவிடுகிறேன் என்று கூறிய அலியிடம், இந்தியாவில் நாங்களும் அதைத்தான் செய்கிறோம் என்று இந்திரா காந்தி பதிலளித்தார்.

தோல்விக்குப் பிறகு வெற்றி பெறுவதில் நான்தான் பெரிய நிபுணன் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களைப் பார்த்தவுடன் அது தவறு என்று புரிந்து கொண்டேன். அமெரிக்க அதிபர் கார்ட்டர், சோவியத் அதிபர் பிரஷ்நேவ், சீன அதிபர் டெங் ஜியோ பிங் போன்ற தலைவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் உங்களின் மறுபிரவேசம் (இந்தியாவில் அவசரகால பிரகடனத்திற்கு பிறகு 1977-இல் இந்திரா காந்தி தோல்வியடைந்து ஜனதா கட்சி அரசாங்கம் அமைந்தது. அந்த ஆட்சி கவிழ்ந்த உடன் 1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய பிரதமராக பதவி ஏற்றார்)  மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. குத்துச்சண்டையில் என்னுடைய மறுபிரவேசத்தை விட உங்கள் துறையில் நீங்கள் சாதித்து இருப்பது முக்கியமானது. நீங்கள்தான் தி கிரேட்டஸ்ட் என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

முகமது அலியின் ரஷ்ய, சீன பயணங்களை போலவே இந்திய பயணமும் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. இந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை உருவாக்கியது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...