Pages

திங்கள், அக்டோபர் 09, 2023

சே: சித்தாந்தமும் செல்வாக்கும்.

 அக்டோபர் 9: சே நினவு தினம்

சேகுவேரா , வீர மரணம் அடைந்து இன்றுடன் 56 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள புரட்சியாளர்களுக்கும் போர் வீரர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கிறார் போராளிகளுக்கு மட்டுமல்ல அரசியல்,அர்ப்பணிப்பு,சித்தாந்தம், செயல்பாடு போன்றவற்றால் 21 ஆம் நூற்றாண்டு இளைஞர்களையும் ஈர்க்க கூடியவராக சேகுவேரா இருக்கிறார். முடிவுகளை எடுத்து அறிவிப்பதை விட நான் முன்னே செல்கிறேன் என்னை பின் தொடருங்கள் என்ற முறையில் களப்போராட்டங்களை அமைத்து வாழ்ந்து காட்டியவர்.

மார்க்சியம் , ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் கூறுகளை ஒன்றிணைத்து அவரது அரசியல் சித்தாந்தம் இருந்தது. அவர் பல்கலைக்கழக பாடங்களால் மட்டும் அரசியல் சித்தாந்தத்தை அமைத்துக் கொண்டவர் அல்ல. லத்தீன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில் அவரது சித்தாந்தம் வடிவமைக்கப்பட்டது. தனது பயணத்தின் போது அவர் கண்ட காட்சிகள் வறுமை, சமத்துவமின்மை, அடக்குமுறைகள் போன்ற எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வரும் முதலாளித்துவ சமூகத்தை தூக்கி எறிந்து சோசலிச சமூகத்தை அமைப்பதன் மூலமாகத்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்பினார்.

சோவியத் சோசலிச பாணியில் அவர் முழுமையாக திருப்தி அடையவில்லை. தன்னலமற்ற தார்மீக மற்றும் புரட்சிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒரு புதிய சோசலிச மனிதனை உருவாக்குவது பற்றி சிந்தித்தார். புரட்சியாளர் அன்பின் சிறந்த உணர்வால் வழிநடத்தப்பட வேண்டும். இந்த குணம் இல்லாத ஒரு உண்மையான புரட்சியாளரை நினைத்துப் பார்க்க முடியாது. முன்னணி புரட்சியாளர்கள் மக்கள் மீதான தங்களது அன்பை இலட்சியப்படுத்த வேண்டும். புரட்சிக்கு வெளியே வாழ்க்கை இல்லை. புரட்சிகர தலைவர்கள் மனித நேயத்தின் ஒரு பெரிய அளவை, பெரிய அளவிலான நீதி மற்றும் உண்மை உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும் (கியூபாவில் சோசலிசமும் மனிதனும் 1965 சேகுவேரா)என்று வலியுறுத்தியதுடன் வாழ்ந்தும் காட்டினார்.

சேகுவேராவின் சோசலிஸ்ட் சித்தாந்தம் மற்றும் அவரது கெரில்லா ராணுவ நடவடிக்கை போன்றவற்றை கடைபிடிக்கக் கூடியவர்களை "குவேரிஸ்மோ" என்று அழைத்துக் கொள்கிறார்கள். சேகுவேராவின் புதிய சோசலிச மனிதன் என்ற தலைப்புகளில் விவாதங்களை முன்னெடுத்து லத்தின் அமெரிக்க நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 56 ஆண்டுகளுக்கு பிறகும் அவரது செல்வாக்கு நீடித்துக் கொண்டே இருக்கிறது. கேள்வி கேட்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்ற சேகுவேராவின் சிந்தனைகள் அவர் நடைமுறைப் படுத்திய திட்டங்கள் கியூபா உட்பட பல லத்தீன் நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

சிலி நாட்டில் சேகுவாராவின் சாதனைகளை பள்ளி பாட புத்தகங்களில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கியூப புரட்சியில போர் குற்றங்கள் என்ற பாடத்திட்டங்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வலதுசாரிகளை கம்யூனிஸ்டுகளும் இடதுசாரிகளும் தோற்கடித்தார்கள்.

நிகரகுவா நாட்டில் புரட்சியில் வெற்றி பெற்ற டேனியல் ஓர்டெகா தலைமையிலான சாண்டினிஸ்டா அமைப்பில் சேகுவாராவின்( குவேரிஸ்மோ")தாக்கம் இருந்தது. இதே போன்று குவதிமாலா, எல் சால்வடார் நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளுக்கும் சேகுவாராவின் தாக்கம் இருந்தது

பொலிவியா நாட்டின் தலைவராக இருந்த இவோ மொரெல்ஸ் பொலிவியாவில் சேகுவாரா சுட்டு புதைக்கப்பட்ட வாலே கிராண்ட் சென்று "சே வாழ்கிறார்" என்று அறிவித்தார். மேலும் சேகு வேராவின் உருவப்படத்தை உள்ளூர் கோகோ இலைகள் மூலம் ஜனாதிபதி அறையில் நிறுவினார்.

2006 ஆம் ஆண்டு வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் சேகுவேரா ஓர் எல்லையற்ற புரட்சியாளர் என்று சேகுவேராவின் டீ சர்ட் அணிந்த லட்சக்கணக்கான கூட்டங்களுக்கு மத்தியில் அறிவித்தார். அவரும் காஸ்ட்ரோவும் அர்ஜென்டினாவில் உள்ள சேகுவேராவின் இளம் வயது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

கொலம்பியாவில் நடைபெறுகிற கொரில்லா இயக்கத்திற்கு, மெக்சிகோவில் சப்கமாண்டர் மார்க்கோஸ் தலைமையிலான ஜபடிஸ்டாஸ் இயக்கத்தின் எழுச்சியிலும் குவேரிஸ்மோ தாக்கம் இருந்தது.

சேகுவேரா ஜனநாயக வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடுகள், மக்களால் உருவாக்கப்படக்கூடிய நீதிமன்றங்கள் புரட்சிக்கான பாதுகாப்பு குழுக்கள் போன்ற முறைகளை வெனிசுலாவிலும் பொலிவியாவிலும் கடைபிடித்தனர்.

சேகுவேரா எழுதிய மோட்டார் சைக்கிள் டைரி கல்லூரி மாணவர்களிடையே, இளம் அறிவிஜீவிகள் மத்தியில் மிகப்பெரும் விருப்ப நூலாக ஏன் வழிபாட்டு நூலாகவே மாறி உள்ளது.

சேகுவேராவின் கருத்துக்கள் புரட்சியாளர்களின் தலைமுறையை ஊக்குவிக்க உதவியது. புதிய சோசலிச மனிதன் என்ற அவரது கருத்துக்கள் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது.

அவரது எழுத்துக்களும் புரட்சிகர நடவடிக்கைகளும் இன்றளவும் மக்களை திரட்டுவதற்கு தொடர்ந்து பயன்பட்டு வருகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா சுரண்டுவதற்கு எதிராக அமெரிக்க நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள் இன்று மேலும் முன்னேறி உள்ளது. 12க்கும் மேற்பட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி தலைமை அமைந்து அமெரிக்க அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரண்டு உள்ளன.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியிலும், மக்கள் எழுச்சியிலும், சேகுவேராவின் தாக்கமும் செல்வாக்கும் இருந்தது. அவர் அடக்குமுறைகளை எதிர்ப்பதில் சின்னமாகவே விளங்குகிறார். இன்றைய இளைய தலைமுறையினருக்கு சேகுவேரா உந்து சக்தியின் வற்றாத ஜீவ நதியாக இருந்து கொண்டிருக்கிறார்.

நாடக பாணியிலான அரசியல் நர்தனமாடுகிற இக்காலத்தில், அவரது போர் முறைகளுக்காக மட்டுமல்ல, அவரது அர்ப்பணிப்பு, என்றென்றும் மக்களுடன் இணைந்து உழைப்பது, அடக்குமுறைகளுக்கு எதிராக சமரசம் அற்ற களம் காண்பது,எளியவர்கள் மீது அவர் காட்டும் அன்பு என எண்ணற்ற காரணங்களுக்காக இன்றும் சே தேவைப்படுகிறார்.
அ.பாக்கியம்.



https://www.internationalmagz.com/articles/che-guevra-continuing-influence-in-latin-america?utm_source=pocket_saves

https://www.cheguevara.org/impact.jsp?utm_source=pocket_saves

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...