Pages

செவ்வாய், அக்டோபர் 24, 2023

அமைதிக்கான பணிகள் விடுதலைக்கான ஆதரவு

 

தொடர் 27



முகமதுஅலி சமாதானத்தை விரும்பினார். யுத்தத்தால் யார் பாதிக்கப்பட்டாலும், பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டாலும் அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 1973ல் வியட்நாம் நாட்டிற்கு சென்றார். வியட்நாமில் யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம் திறக்கப்பட்டு, அதற்கு வூ சி காங் என்ற இயக்குனரும் நியமிக்கப் பட்டிருந்தார்.  அவரை முகமது அலி சந்தித்தார். அப்போது வூ சி காங்,  ‘‘வியட்நாம் மக்கள் உங்களை ஒரு குத்துச்சண்டை சாம்பியனாக மட்டுமல்ல… அமைதிக்கான போராளியாகவும் அறிந்திருக்கி றார்கள். அதன் அடிப்படையில் நான் உங்களை வரவேற்கிறேன்’’ என்று கூறினார்.

ஈராக் - அமெரிக்க யுத்தம் நடக்கக்கூடாது என்று அலி விரும்பினார். நெருக்கடியான சூழலில் ஈராக்கில் இருந்தும், லெபனானில் இருந்தும், பிணைக் கைதிகளை மீட்டு வந்தார். அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்ட இஸ்ரேலில் இருந்த லெபனான், பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க முயற்சி எடுத்தார். ஈரான் நாட்டில் சிறைப்பட்டிருந்த பத்திரிக்கையாளர்களை மீட்டு வர  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க பிரமுகர்களை கையெழுத்திட வைத்து வேண்டுகோளை அனுப்பி வைத்தார்.

1980-88 காலங்களில் ஈராக் - ஈரான் போரில் சிறையில் அடைக்கப்பட்ட 25ஆயிரத்துக்கும் அதிகமான போராளி கைதிகளை இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் அவர்களை விடுதலை செய்வதற்குமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகளுக்கும் விஜயம் செய்தார்; பேச்சு வார்த்தை நடத்தினார். இது அவரது சொந்த நல்லெண்ண தூதுவர் முயற்சியாக இருந்தது. அமைதிக்கான குழந்தைகள் அமைப்பை நடத்தி 50க்கு மேற்பட்ட குழந்தைகளை உலக தலைவர்களை சந்தித்து அமைதிக்காக பாடுபடுமாறு வேண்டுகோள் விடுக்க உதவிசெய்தார். இது போன்ற எண்ணற்ற முயற்சிகளை அவர் தனக்கு இருந்த பார்க்கின்சன்ஸ் நோயையும் பொருட்படுத்தாமல் செய்து கொண்டிருந்தார்.

உதவி செய்யக் கூடியவர், சமாதானத்திற்காக போராடக் கூடியவர் என்பதுடன் விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவாளராகவும் இருந்தார். பாலஸ்தீனர்களுடைய போராட்டத்தை அடக்குவதில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு உதவியும் செய்கிறது. ஐநா சபையில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறாமல் தனது வீட்டோபவரை பயன்படுத்தி தடுக்கிறது. இந்த சூழலில் முகமது அலி லெபனானிலிருந்த பாலஸ்தீன அகதிகள் முகாம்களுக்கு நேரடியாக விஜயம் செய்கிறார். பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்தார். 1988ல் பாலஸ்தீனத்தில் முதல் இன்டிபடாவின் (INTIFADA)  எழுச்சியின்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற பேரணியில் முகமது அலி பங்கேற்றது பெரும் எழுச்சியை உருவாக்கியது.

அமெரிக்காவில் உள்ள பூர்வீக குடிமக்கள் ( செவ்விந்தியர்கள்) தங்களது உரிமைகளுக்காக அமெரிக்கன் இந்தியன் இயக்கம் என்ற பழங்குடி மக்கள் இயக்கத்தை உருவாக்கியிருந்தனர். நகர்ப்புறத்தில் குடியேறிய பழங்குடி வம்சாவழி மக்களின் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடினர். கருப்பின மக்களை எப்படி ஒதுக்கினார்களோ அதே போன்று செவ்விந்தியர்களையும் வெள்ளை நிறவெறி கொடும் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதை எதிர்த்து ‘தி லாங்கஸ்ட் வாக்’ என்ற போராட்ட அணிவகுப்பை நடத்தினார்கள். இந்த அணிவகுப்பில் முகமது அலியும், அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகரான மார்லன் பிராண்டோவும் கலந்து கொண்டனர். முகமது அலி, வியட்நாம் யுத்தத்தை எதிர்த்து அமெரிக்காவில் நடந்த போராட்டங்களிலும், சிவில் உரிமை போராட்டங்களிலும், கருப்பின மக்களுக்கான அடக்குமுறைகளை எதிர்த்த நடவடிக்கைகளிலும் நேரடியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

உதவிகள் செய்வது, சமாதான செயல்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களப்போராளி என்ற தளங்களில் முகமது அலி தன்னுடைய பணிகள் மூலமாக முத்திரை பதித்துள்ளார்.

முகமது அலிக்கு குத்துச்சண்டை பதக்கங்களை கடந்து, உலகம் தழுவிய அளவில் ஏராளமான விருதுகளை வழங்கி இருக்கிறார்கள். பங்களாதேஷ் உட்பட பல நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் அவரின் பெயரால் சாலைகள், மிகப்பெரிய நிறுவனங்களுக்கான பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதிகளின் விருது, ஐநா சபையின் தூதுவர் பட்டங்களையும் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். இப்படி நூற்றுக்கணக்கான விருதுகளை குறிப்பிட்டாலும் ஒரே ஒரு விருதை மட்டும் இந்த நேரத்தில் குறிப்பிடுவது அவசியமானது.

அமெரிக்காவில் இயங்கி வரக்கூடிய அரபு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பின் சார்பில் முகமது அலிக்கு உலக பெரும் கவிஞன் கலீல் ஜிப்ரான் பெயரால் ‘‘ஸ்பிரிட் ஆஃப் ஹியூமானிட்டி’’ (Sprit of Humanity) என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். தனது போர் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காகவும், வியட்நாம் போருக்கு எதிராக போராடியதற்காகவும், பாலஸ்தீன மனித உரிமைகள் பிரச்சாரத்தின் ஆலோசனை குழுவில் பணியாற்றியதற்காகவும், அமெரிக்காவால் சீர்குலைக்கப்பட்டு மரணப்படுக் கையில் பசியால் வாடிய ஈராக் மக்களுக்கு நிதி திரட்டி கொடுத்ததற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்டு, ஆப்பிரிக்க மக்களின் விடிவெள்ளி யாக பார்க்கப்பட்டு, அமெரிக்காவின் கருப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தார் முகமது அலி. அவர் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடைசி வரை செயல்பட்டுக் கொண்டிருந்தார்.  சிலரது மரணங்கள் மட்டும்தான் உலகப் பேரிழப்பாக மாறிவிடுகிறது. அலியின் மரணமும் அப்படித்தான். அரிசோனாவின் ஸ்காட்ஸ்டெல் மருத்துவமனையில் சுவாச நோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவந்த முகமது அலி, 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி அன்று  இறந்தார். அப்போது அவருக்கு வயது 74. அவரது விருப்பத்தின் அடிப்படையிலேயே மரணத்திற்குப் பிறகு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. ஜூன் 9ஆம் தேதி அவரது சொந்த மாநிலமான கெண்டகியில் உள்ள எக்ஸ்பொசிஷன் சென்டர் மைதானத்தில் முகமது அலியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 10ஆம் தேதி முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லியின் தெருக்களில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு கேவ் ஹில் என்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

நிறவெறிக்கு எதிராக குத்துச்சண்டை வளையத்தின் உள்ளேயும், வெளியேயும் களமாடிய கருப்பின போராளிக்கு உலகத் தலைவர்கள்,  விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினர். 

இறக்கும் போது எவரும் எதையும் எடுத்துச் செல்வதில்லை. தங்கள் உடலைக்கூட நெருப்புக்கோ, மண்ணுக்கோக தாரைவார்த்து செல்கிறார்கள். ஆனால், போராளிகள் இறக்கும்போது தங்கள் லட்சியங்களை விட்டுச் செல்கிறார்கள். முகமது அலியும் அப்படித்தான். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 2020ம் ஆண்டு மே 25ம் தேதி டெரிக் சாவின் என்கிற வெள்ளை போலீஸ் அதிகாரியால், கழுத்தில் கால்முட்டியால் அழுத்தப்பட்டு மூச்சுவிட முடியாமல் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாயிட் மரணம், அமெரிக்க நிறவெறியின் கொடூரத்தை இன்னமும் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...